
இலுப்பைக்குடி தான்தோன்றீஸ்வரர் கோவில்
இரண்டு நாய் வாகனங்களுடன் காட்சி தரும் அபூர்வ பைரவர்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள தலம் இலுப்பைக்குடி. இறைவன் திருநாமம் தான்தோன்றீஸ்வரர். இறைவியின் திருநாமம் சவுந்தர்ய நாயகி.
இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் பைரவருக்கு, 'ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்' என்று பெயர். அவரது இடது கையில் கபாலத்துக்கு பதிலாக அட்சய பாத்திரம் இருக்கிறது. ஸ்வர்ணம் (தங்கம்) தந்தருளியவர் என்பதால் கபாலத்தை, அட்சய பாத்திரமாக வைத்திருப்பதாக சொல்கிறார்கள். இவரிடம் வேண்டிக் கொள்ள வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
இவர் இரண்டு நாய் வாகனங்களுடன் காட்சி தருவது, நாம் வேறு எந்த தலத்திலும் காணமுடியாத சிறப்பு அம்சமாகும். வலப்புறம் உள்ள நாய் அமர்ந்த நிலையில், சுவாமியின் பாதத்தைப் பார்க்கிறது. இடதுபுறம் உள்ள நாய் நின்று கொண்டிருக்கிறது. பைரவர் சன்னதியின் கீழே யந்திர பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தேய்பிறை அஷ்டமியில் இவருக்கு விசேஷ யாகம் நடக்கிறது. அப்போது 16 கலசம் வைத்து பூஜித்து, அந்த புனித நீரால் சிவன், அம்பாள், பைரவருக்கு அபிஷேகமும், கோமாதா பூஜையும் நடக்கிறது.
தீராத நோய் மற்றும் கிரக தோஷம் நீங்க இங்குள்ள சொர்ண ஆகர்ஷண பைரவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள். சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு வடை மாலை அணிவித்து, விசேஷ பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள். தீராத நோய் மற்றும் கிரக தோஷம் நீங்கியவர்கள் பைரவர் சன்னதியில் தேங்காயில் நெய் தீபம் ஏற்றியும், வடை மாலை அணிவித்தும் நேர்த்திக்கடன் செய்கின்றனர்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்ப உற்சவம்
சென்னை மாநகரில் , பிரசித்தி பெற்ற கோவில்களில் தேவாரத் தலமான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலும் ஒன்றாகும். இறைவனின் திருநாமம் கபாலீஸ்வரர். இறைவியின் திருநாமம் கற்பகாம்பாள். கற்பகம் என்றாலே வேண்டும் வரங்களை தருபவள் என்று பொருள்.
இத்தலத்தில் முருகப் பெருமான், வள்ளி - தெய்வானை சமேத சிங்கார வேலர் என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார். இக்கோவிலில் நடக்கும் பல திருவிழாக்கள் மிகவும் விசேஷமானவை, தனித்துவமானவை. அப்படி நடத்தப்படும் விழாக்களில் தைப்பூச தெப்ப உற்சவமும் ஒன்று. தைப்பூச நாளில் இக்கோவில் சிவன், அம்பாள், முருகன் ஆகிய மூவருக்கும் விழா எடுக்கப்படுவது தனிச்சிறப்பு.
இக்கோவிலில், தைப்பூச தெப்ப உற்சவம் மூன்று நாட்கள் நடைபெறும் முதல் நாள் கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரரும், அடுத்த இரண்டு நாட்கள் வள்ளி தெய்வயானை சமேத சிங்காரவேலரும், மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய தெப்பத்தில் திருக்குளத்தில் பவனி வருவார்கள்.
கபாலீஸ்வரரின் திருக்கரத்தை பற்றிய நிலையில் அன்னை கற்பகாம்பாள் மணப்பெண் போன்ற கோலத்தில் பல்லக்கில் எழுந்தருளி, தெப்பத்தில் உலா வந்த காட்சி கண் கொள்ளா காட்சியாக அமைந்திருந்தது. அதேபோன்று, சிங்காரவேலர், ஒரு காலை தரையில் ஊன்றியும், ஒரு காலை மயில் மேல் வைத்தபடியும், வள்ளி - தெய்வானையுடன் கம்பீரமாக, அழகிய கோலத்தில் காட்சி தந்தது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

கும்பகோணம் சக்கரபாணி கோவில்
மூன்று கண்கள், எட்டு கைகள் உடைய சக்கரபாணி பெருமாள்
கும்பகோணம் நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில், 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சக்கரபாணி கோவிலிலும் ஒன்று. மூலவர் ஸ்ரீ சக்கரபாணி பெருமாள். தாயார் விஜயவல்லி. பெருமாள் சக்கர வடிவமான தாமரைப்பூவில், அறுகோண எந்திரத்தில் மூன்று கண்களுடனும், எட்டு ஆயுதங்களை எட்டுத் திருக்கரங்களில் ஏந்தியும் காட்சி தருகிறார். மூன்று கண்களுடன் சக்கரபாணி இருப்பதால் சிவபெருமானை போல இவருக்கும், பூ துளசி, குங்குமம் போன்றவற்றுடன் வில்வ இலைகளாலான அர்ச்சனையும் செய்யப்படுகிறது. சக்கரபாணி சுவாமிக்கென்று தனிக்கோவில் இருப்பது, இத்தலத்தில் மட்டும்தான் என்பது தனிச்சிறப்பாகும்.
தல வரலாறு
ஜலந்தராசுரன் எனும் அரக்கனை வதம் செய்ய திருமால் ஏவிய 'சக்ராயுதம்', ஜலந்தாசுரனையும் மற்ற அசுரர்களையும் வதம் செய்த பிறகு, காவிரி நதிக்கரையோரம் இருக்கும் புண்ணிய ஸ்தலமான கும்பகோணத்தில் தவம் புரிந்து கொண்டிருந்த பிரம்ம தேவரின் கைகளில் வந்து விழுந்தது. சக்தி வாய்ந்த இந்த சக்ராயுதத்தை கும்பகோணத்தில் ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்தார் பிரம்ம தேவன். இந்த சக்ராயுதத்தால் இருந்து வெளிப்பட்ட ஒளி, சூரியனின் ஒளிப்பிரவாகத்தை மிஞ்சும் வகையில் இருந்ததால் பொறாமை கொண்ட சூரிய பகவான் தனது ஒளி அளவை கூட்டிய போது, ஒட்டு மொத்த சூரிய ஒளியையும் தன்னுள் உள்வாங்கிக்கொண்டது இந்த சக்ராயுதம். தனது கர்வம் நீங்க பெற்ற சூரிய பகவான், வைகாசி மாதத்தில் மூன்று கண்கள், எட்டு கைகளுடன் அக்னிப்பிழம்பாக தோன்றிய ஸ்ரீ சக்கரபாணியின் காட்சி கிடைக்க பெற்று, இழந்த தனது ஒளியை மீண்டும் பெற்றார் சூரிய பகவான். தனது நன்றியை வெளிப்படுத்த சூரிய பகவான் கட்டிய கோவில் தான் இந்த சக்கரபாணி கோவில். சூரியன் பூசித்ததால் இத்தலம் பாஸ்கர சேத்திரம் என்றழைக்கப்படுகிது.
பிரார்த்தனை
கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் 'மகாமகம்' திருவிழாவில் கலந்து கொண்டவர்கள், அதில் பங்கேற்ற புண்ணியத்தை இந்த கோவிலின் இறைவனான சக்கரபாணிக்கே சமர்ப்பித்து வேண்டிக் கொள்வதால் நமக்கு மிகுந்த நன்மைகளை ஸ்ரீ சக்கரபாணி உண்டாக்குவார் என்பது ஐதீகம். சூரிய பகவான் வழிபட்டு நன்மையடைந்ததால், ஜாதகத்தில் சூரியனின் நிலை பாதகமாக இருப்பவர்கள் வழிபடுவதற்கான பரிகார தலமாக இருக்கிறது. உடலில் வலது கண் சூரியனின் ஆதிக்கம் நிறைந்ததாகும் வலது கண்ணில் பிரச்சனை உள்ளவர்கள், கண் பார்வை கோளாறுகள் உள்ளவர்களும் இந்த ஆலய இறைவனான ஸ்ரீசக்கரபாணியை வழிபடுவதால் மேற்கூறிய பிரச்சனைகள் நீங்கும்.
ஜாதகத்தில் ஏழரை சனி, அஷ்டம சனி, ராகு – கேது கிரகங்களின் பாதகமான நிலை போன்றவற்றால் கஷ்டங்களை அனுபவிப்பவர்கள், இங்கு வந்து வழிபட்டு நன்மைகளை பெறலாம். சுதர்சன ஹோம பூஜையை, இக்கோவிலில் செய்பவர்களுக்கு எதிரிகள் தொல்லை, துஷ்ட சக்திகள் பாதிப்பு ஆகியவை நீங்கி சுபிட்சங்கள் ஏற்படும்.

பெரியபாளையம் பவானி அம்மன் கோவில்
மாங்கல்ய பலம் அருளும் பவானி அம்மன்
சென்னையில் இருந்து செங்குன்றம், ஊத்துக்கோட்டை வழியாக திருப்பதி செல்லும் நெடுஞ்சாலையில், சென்னையிலிருந்து இருந்து சுமார் 45 கி. மீ. தொலைவில் பெரியபாளையம் உள்ளது. பெரியபாளையம் என்றால் பெரிய படை வீடு என்று பொருள். பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் அம்மன் சக்தி வாய்ந்தவராக திகழ்கிறார்.மூலஸ்தானத்தில், பவானி அம்மன், மேலிரண்டு கைகளில் சங்கு, சக்கரங்கள் தரித்தும், கீழிரண்டு கைகளில் வாள் மற்றும் அமிர்த கலசத்துடனும் காட்சியளிக்கிறார். இக்கோவிலில் குங்குமம் மற்றும் தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது மனித உடலில் பல நோய்களை குணப்படுத்தக்கூடியது.
பவானி அம்மனை கிருஷ்ண பரமாத்மாவின் தங்கையாக பாவிக்கிறார்கள். துவாபர யுகத்தில், குழந்தை வடிவிலிருந்த அம்மன், தன்னை கொல்ல முயன்ற கம்சனின் (அசுரக்குல அரசன்) கோரப்பிடியிலிருந்து தப்பிக்கும் போது, அவனுக்கு தனது தமையனான கிருஷ்ண பரமாத்மாவால் ஏற்படப் போகும் துர்மரணம் பற்றி முன் கூட்டியே எச்சரித்தப் பிறகு, ஸ்ரீபவானி என்ற பெயரில், இத்தலத்தில் குடியேற முடிவு செய்தார்.
ஆலய வரலாறு
முற்காலத்தில் ஆந்திரப்பகுதியில் இருந்த வளையல் வியாபாரிகள் பலரும் இங்கு வந்து வியாபாரம் செய்து வந்தனர். ஒரு முறை வளையல் வியாபாரி ஒருவர் தன்னுடைய வியாபாரத்தை முடித்துக் கொண்டு ஆந்திராவுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
இரவு வெகு நேரம் ஆகிவிட்டதால், பெரியபாளையத்தில் ஒரு வேப்பமரத்தடியில் அவர் ஓய்வெடுத்தார். அதிகாலையில் எழுந்து பார்த்தபோது, அவருடைய வளையல் மூட்டையைக் காணவில்லை. சுற்றும் முற்றும் தேடியபோது ஒரு புற்றுக்குள் வளையல் மூட்டை கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் பயத்துடன் ஊருக்குத் திரும்பினார். அன்று இரவு வளையல் வியாபாரியின் கனவில் தோன்றிய அம்மன், 'நான் ரேணுகாதேவி. பெரியபாளையத்தில் பவானி அம்மனாக அமர்ந்திருக்கிறேன். அங்குள்ள புற்றில் நான் சுயம்புவாக இருக்கிறேன். எனக்கு கோவில் அமைத்து வழிபட்டு வா' என்று கூறி மறைந்தார்.
மறுநாள் பெரியபாளையம் வந்த வளையல் வியாபாரி, கடப்பாரையால் புற்றை உடைத்தார். அப்போது சுயம்பு அம்மனின் மீது கடப்பாரை பட்டு ரத்தம் பீறிட்டது. இதனைக் கண்டு பயந்த வளையல் வியாபாரி, தன்னிடம் இருந்த மஞ்சளை எடுத்து ரத்தம் வந்த இடத்தில் வைத்து தேய்த்தார். உடனே ரத்தம் நின்று போனது. இதையடுத்து புற்றை முழுமையாக நீக்கி விட்டு, அம்மனுக்கு அலங்காரம் செய்து தினமும் வழிபட்டு வந்தார். பிற்காலத்தில் அம்மனுக்கு கோவில் அமைக்கப்பட்டது. சுயம்புவாக உள்ள அம்மனுக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டிருக்கும். கவசத்தை நீக்கும் போது, சுயம்பு அம்மனின் மீது கடப்பாரை பட்ட தழும்பு இருப்பதைக் காண முடியும்.
பிரார்த்தனை
வார இறுதி நாட்கள், ஆடி மற்றும் ஆவணி மாதங்களில், பக்தர்கள் ஆயிரக்கணக்கில் அம்மனை தரிசிக்க வருகிறார்கள். உடல் நலம் பெறவும், நீண்ட ஆயுளை ஆரோக்கியத்துடன் அடையவும், பெரிய பாளையத்து அம்மனை நினைத்தப்படி வருபவர்கள் அதிகம். இத்தல அன்னையிடம் மாங்கல்ய பலம் வேண்டி வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகமானது. பெண்கள், கணவன் நோய்வாய்பட்டிருந்தால், தங்கள் மாங்கல்யம் நிலைத்து நிற்க அம்மனை வேண்டி கொள்கிறார்கள். பக்தர்கள் மொட்டை அடித்தும், அங்கப்பிரதட்சணம் செய்தும், வேப்பிலையை ஆடையாக அணிந்தும், பொங்கல் படைத்தும் மற்றும் கரகம் எடுத்தும் என பல வழிகளில் அம்மனுக்கு தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்துகிறார்கள்.

கும்பகோணம் நாகேஸ்வரர் கோவில்
காய்ச்சல் நீங்க மிளகு ரசம் சாதமும், பருப்புத் துவையலும் நைவேத்தியமாக படைக்கப்படும் ஜுரஹர விநாயகர்
கும்பகோணம் நகரின் மத்தியில் அமைந்துள்ள தேவாரத்தலம் நாகேஸ்வரர் கோவில். இக்கோவில் குடந்தைக் கீழ்க்கோட்டம் என்று அழைக்கப்படுகிறது. இங்கே ஜுரஹர விநாயகர் எழுந்தருளியிருக்கிறார்.
உஷ்ண சம்பந்தமான நோய்கள் நீங்குவதற்கு, இங்கே வந்து ஜுரஹர விநாயகருக்கு அபிஷேகம் செய்து, மிளகு ரசம் சாதமும், பருப்புத் துவையலும் நைவேத்தியம் செய்து வழிபடுகிறார்கள். வெப்ப நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வந்து பரிகாரம் செய்யும் போது மட்டுமே மிளகு ரசம் சாதம், துவையல் நைவேத்தியம். மற்ற நாள்களில் சாதாரண நைவேத்தியமே படைக்கப்படுகிறது. இந்தப் பிரார்த்தனையை ஞாயிற்றுக்கிழமையில் செய்வது சிறப்பு. அந்நாளில் வர இயலாதவர்கள், வேறு ஏதேனும் ஒரு நாள் வந்து ஜுரஹர விநாயகருக்கு அர்ச்சனை செய்து, காய்ச்சல் நீங்க வேண்டிக்கொண்டு, வணங்கிச் சென்றாலும் நல்லது.

குருவித்துறை சித்திரரதவல்லப பெருமாள் கோவில்
சந்தன மரச்சிலையால் ஆன பெருமாள்
மதுரையிலிருந்து 35 கி.மீ தொலைவில், சோழவந்தான் அருகில், அமைந்துள்ளது குருவித்துறை. மூலவர் - சித்திர ரத வல்லப பெருமாள். தாயார் - செண்பக வல்லி.
குரு பகவான் (வியாழன்) தன் மகன் கசனுக்காக வைகை நதிக்கரையில் துறை அமைத்து பெருமாளை நோக்கி தவம் மேற்கொண்ட இடம் என்பதால், இந்த இடம் குருவி(ன்) துறை எனப்படுகிறது. குரு பகவானுக்கு உகந்த திருத்தலமாகத் திகழ்கின்றது.
அத்தி வரதர் எப்படி மரத்தால் செய்யப்பட்ட சிறப்பு பெற்றுள்ளாரோ, அதே போல் இங்குள்ள சித்திர ரத வல்லப பெருமாள் சந்தன மரசிலையால் ஆன மூர்த்தியாக திகழ்கின்றார். குருபகவானின் பிரார்த்தனையால், ஒவ்வொரு ஆண்டும் பெருமாள் சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்தன்று, சித்திரத் தேரில் எழுந்தருளுகிறார். இதன் காரணமாக சித்தரரத வல்லப பெருமாள் என அழைக்கப்படுகின்றார்.
குரு பகவானுக்கு அருளிய பெருமாள்
இக்கோவிலில், ஒரே சன்னிதியில் குரு பகவானும், சக்கரத்தாழ்வாரும் சுயம்பு மூர்த்திகளாகக் காட்சி தருகின்றனர். அசுர குருவான சுக்ராச்சாரியார், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் 'மிருத சஞ்சீவினி' மந்திரம் கற்றிருந்தார். இதனால், தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் யுத்தம் நடக்கும்போது, அவர் எளிதாக அசுரர்களை உயிர்ப்பித்தார். அந்த மந்திரத்தை கற்க விரும்பிய தேவர்கள், தங்கள் படையிலிருந்து ஒருவரை சுக்ராச்சாரியாரிடம் அனுப்ப முடிவு செய்தனர்.
தேவகுரு பிரகஸ்பதியின் (வியாழன்) மகன் கசன், அந்த மந்திரத்தை கற்று வருவதாகச் சொன்னான். அதன்படி சுக்ராச்சாரியாரிடம் சென்றவன், அவரது மகள் தேவயானியிடம் அன்பு செலுத்துவது போல நடித்தான். அவரிடம் மந்திரத்தைக் கற்று வந்தான். கசன், தேவகுலத்தைச் சேர்ந்தவன் என்பதை அறிந்த அசுரர்கள், அவனை எரித்து சாம்பலாக்கி, சுக்ராச்சாரியார் பருகிய பானத்தில் கலந்து கொடுத்துவிட்டனர்.
கசனைக் காணாத தேவயானி, தந்தையிடம் அவனைக் கண்டுபிடித்துத் தரும்படி வேண்டினாள். சுக்ராச்சாரியார் அவனை உயிர்ப்பித்தார். மகனைக் காணாத குரு பகவான், அவனை அசுரலோகத்தில் இருந் து மீட்டு வர அருளும்படி, இங்கு பெருமாளை வேண்டி தவமிருந்தார். குருவின் தவத்தால் மகிழ்ந்த பெருமாள்,சக்கரத்தாழ்வாரை அனுப்பி, குருவின் மகன் கசனை மீட்டுத் தந்து குருவுக்கு அருளினார்.
பிரார்த்தனை
குரு பகவானே இங்கு வந்து தவம் செய்த தலம் என்பதால், குரு தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டு பரிகாரம் செய்தால் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.

பழனிமலை தண்டாயுதபாணி கோவில்
பழனிமலை தண்டாயுதபாணி தெய்வத்தின் சிறப்பு அம்சங்கள்
பழனிமலை தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தெளிவாக இருக்கும். இது போகரின் கை வண்ணம்.
இந்த சிலையை செய்ய போகர் எடுத்துக்கொண்ட நாட்கள் – ஒன்பது வருடம்.
அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் (இதுவரை ஒரு போதும் வெளியே உணர்ந்திராத) பரவி நிற்கும்.
அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்கு பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்சியே எடுத்தார். இதற்காக 4000 மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று தெரிவு செய்து கொண்டு வந்தார். 81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்படி தயார் பண்ணினர். இது பொது நல எண்ணத்துடன் செய்யப்பட்டதால் காலமும், இயற்கையும் தன் சீற்றத்தை குறைத்துக் கொண்டு சித்தர்களுக்கு உதவி செய்ததாக தகவல் உண்டு.
அகத்தியர் உத்தரவால், ஒரு அசுரன், இரு மலைகளை காவடி போல் சுமந்து பொதிகை நோக்கி கொண்டு செல்ல, முருகர் அவனை தடுத்து நிறுத்தி, போரில் தோற்கடித்து, இரண்டு குன்றையும் இப்போது இருக்கும் இடத்தில் வைக்க செய்தார் என்று ஒரு புராண தகவல் உண்டு.
போகர், இகபரத்தில் இருக்கும் போது தன் மனைவிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற, முருகனை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார். இதனால், மலை நாட்டில் உள்ளவர்களுக்கு பழனி முருகன் குல தெய்வம் ஆனார்.
தண்டாயுதபாணி விக்கிரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கப்படுகிறது. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை. பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகப்படுத்தப்படுகிறது. இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றப்படுகிறது. அதாவது முடி முதல், அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனமும், பன்னீரும் மட்டும்தான். இதில் சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கபடுகிற ஒரு பிரசாதம். அது கிடைப்பது மிக புண்ணியம்.
ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யபடுகிறது. இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும்.
அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.
இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சார்த்தபடுகிறது. விக்கிரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும். முன்னொரு காலத்தில் சந்தன காப்பை முகத்திலும் சார்த்திக் கொண்டிருந்தனர். பின்னாளில் இந்த முறை மாற்றப்பட்டது.
தண்டாயுதபாணி விக்கிரகம் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்கிறார்கள்.
கல்லில் சிலை செய்து பிரதிஷ்டை செய்து கட்டிய எத்தனையோ கோயில்கள் சிதிலமடைந்து போயும், நவபாஷணத்தில் சிலை செய்த இந்த கோயில் மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணம் சித்தர்களின் மகிமைதான் என்பது பலரின் எண்ணம்.
பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது. ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல். இந்த இரண்டையுமே போகர் பூஜை செய்ததாக ஒரு தகவல் உண்டு.

அன்னியூர் அக்னிபுரீஸ்வரர் கோவில்
திருமணத்தடை, வாஸ்து குறைபாடு, கட்டிடம் கட்ட தடை ஆகியவற்றை நீக்கும் தேவாரத்தலம்
கும்பகோணம் – நாச்சியார்கோவில் – பூந்தோட்டம் சாலை வழியில் உள்ள திருவீழிமிழலை என்னும் தலத்திலிருந்து, வடக்கே 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் அன்னியூர். இத்தலத்து இறைவனின் திருநாமம் அக்னிபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் கௌரி பார்வதி.
வன்னி என்றால் அக்னி என்று பொருள். அக்னி தேவன் வழிபட்ட தலமாதலால் இத்தலம் 'அன்னியூர்' ஆனது. இறைவன் 'அக்னிபுரீஸ்வரர்' ஆனார். தீர்த்தம் அக்னி தீர்த்தம் ஆனது. பார்வதி தேவி காத்யாயன முனிவரின் மகளாகப்பிறந்து இறைவனை அடைய இத்தலத்தில் தவமிருந்தாள். இறைவன் இவளுக்கு காட்சி தந்து இத்தலத்தின் அருகிலுள்ள திருவீழிமிழலையில் திருமணம் செய்து கொண்டார். எனவே இது திருமணத்தடை நீக்கும் தலமாகும்.
திருமணத்தில் தடை உள்ளவர்கள் இங்குள்ள இறைவனுக்கு அர்ச்சனை செய்து திருவீழிமிழலை சென்று வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. வீடு, வியாபாரத்தலங்களில் வாஸ்து குறைபாடு உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு. இத்தலத்தை வாஸ்து பரிகார கோயில் என இப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள்.
கட்டிடம் கட்டுவதில் தாமதம் ஏற்பட்டால் ஏழு செங்கல் கொண்டு வந்து இங்கு வைத்து வழிபட்டு தொடங்கினால், தடையின்றி கட்டிடம் கட்டலாம் என்பது ஐதீகம்.
உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய், ரத்த கொதிப்பு (உயர் ரத்த அழுத்தம்) உள்ளவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சிவனுக்கு கோதுமையால் செய்த பொருட்களை நைவேத்தியம் செய்து வழிபட்டால் விரைவில் குணமாகும்.

பழனிமலை தண்டாயுதபாணி கோவில்
பழனி மலைக்கு அன்னக்காவடி எடுத்த சென்னைக் கவிஞர்
45 நாட்கள் சாதத்தை சூடாக வைத்திருந்த முருகனின் அருட் கருணை
பழனிமலை தெய்வம் தண்டாயுதபாணிக்கு பிரார்த்தனை செய்து கொண்டு, தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் பக்தர்கள் காவடி எடுப்பது வழக்கம். முருகப் பெருமானுக்கு தைப்பூசத் திருநாளில், மற்ற விசேஷ நாட்களைவிட, பல லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு காவடி எடுத்து வருவார்கள். காவடி எடுத்தலில் பால்காவடி, பன்னீர்க்காவடி, பஞ்சாமிர்தக் காவடி, சர்க்கரைக் காவடி, சந்தனக் காவடி, புஷ்பக்காவடி, சேவல் காவடி, சர்ப்பக் காவடி எனப் பல வகை உண்டு. தனக்கு காவடி எடுக்க விரும்பிய பக்தனுக்கு, முருகன் செய்த அருள் லீலைகளை இப்பதிவில் பார்க்கலாம்.
சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர், சென்னை ராயபுரம் அங்காளம்மன் கோயிலின் அருகில், துரைசாமிக் கவிராயர் என்பவர் வாழ்ந்தார். பரம்பரையாக கவிபாடும் ஆற்றலும், பக்தியும் கொண்ட குடும்பம் அவருடையது. தினமும் பழனியாண்டவர் மீது பாடல் பாடி வழிபட்ட பிறகு துறவி, ஏழைகள் என அனைவருக்கும் உணவளித்து விட்டு, அதன் பிறகே உண்பது வழக்கம். இவ்வாறு அவர் வாழ்ந்து வரும் நாளில், அவரது வருமானம் குறைந்தது. ஒரு கட்டத்தில், கடன் தருவார் யாருமின்றி வருந்தினார். என்றாலும், தன் மனைவியின் திருமாங்கல்யத்தை விற்று அதனைக் கொண்டு அன்னதானத்தை விடாமல் செய்துவந்தார். அப்படியிருக்கையில் ஒரு சமயம் அவரைக் கடுமையான நோய் தாக்கியது. ஒவ்வொரு நாளும் அவர் உடல் வலியினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். தினமும் பழனி முருகனை நினைந்து அரற்றிவிட்டுப் பின்பு உறங்கி விடுவார். ஒரு நாள் இரவில் அழகிய இளைஞன் ஒருவன் அவர் முன் தோன்றினான். தனது கையிலிருந்த ஒரு தைலத்தைப் பஞ்சில் தோய்த்து, அவரது உடலில் தடவினான். கவிராயர் பேச இயலாது கை குவித்தபோது, ”அன்பரே! கவலையற்க! நாளை குணமாகிவிடும்” என்று கூறி மறைந்தான். கவிராயர் திடுக்கிட்டு எழுந்தார். பழனிப் பரம்பொருளை எண்ணிக் கைகுவித்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார். பழனிமலை முருகன் அருளால் கவிராயரது நோயின் கடுமை குறைந்து, இரண்டொரு நாளில் நன்கு குணம் பெற்றார்.
மகிழ்ச்சி அடைந்த துரைசாமிக் கவிராயர், பழனி முருகனுக்கு 'அன்னக்காவடி' எடுத்து வருவதாகப் பிரார்த்தனை செய்து கொண்டார். ரயில் வசதிகூட சரியாக இல்லாத அந்தக் காலத்தில் இத்தகைய பிரார்த்தனையை எப்படிச் செலுத்துவது? மிகக் கடினமாயிற்றே! எனினும், அன்னக்காவடி செலுத்துவதில் உறுதியுடன் இருந்து, அதற்கு அருள முருகன் திருவருளை வேண்டித் துதித்தார். துரைசாமிக் கவிராயரது இந்த எண்ணத்தை நிறைவேற்ற பழனிக் குமரன் திருவுளம் கொண்டான். அதையொட்டி, கவிராயர் வீட்டருகில் வசித்த குயவர் ஒருவரது கனவில் தோன்றினான். 'துரைசாமிக் கவிராயர் பழனிக்கு அன்னக்காவடி எடுக்க விரும்புகிறார். அவருக்குச் சோறு வடிக்க பானை செய்து கொடு!' என்று உத்தரவிட்டு மறைந்தான். அதேபோல், அரிசி வியாபாரம் செய்யும் கந்தன் செட்டியார் கனவில் தோன்றி, கவிராயருக்கு அரிசி கொடுக்குமாறு கூறினான். 'பானையும் அரிசியும் வரும்; பெற்றுக்கொள்' என்று கவிராயர் கனவிலும் அருளினான் முருகன். அவ்வாறே பானையும் அரிசியும் வந்து சேர்ந்தன. சோறு வடித்து, அதை இரு பானைகளிலும் (குடுவை) நிரப்பி, அன்னக் காவடியாகக் கட்டினார் கவிராயர். பழனி முருகனைப் பிரார்த்தனை செய்துகொண்டு, அன்னக்காவடியுடன் புறப்பட்டார்.
அவர் பழனி சென்றடைய 45 நாட்களாயிற்று.'துரைசாமிக் கவிராயர் அன்னக்காவடி சமர்ப்பிக்க வருகிறார். அவரை மேளதாளம், கோயில் மரியாதைகளுடன் நன்கு வரவேற்க ஆவன செய்க!' என்று கோயில் குருக்கள் மற்றும் அதிகாரிகள் கனவில் பழனியாண்டவர் கட்டளையிட்டார். அவர்களும் கவிராயரது வருகையை எதிர்பார்த்த வண்ணம் காத்திருந்தனர். பழனிமலை அடிவாரத்தை அடைந்தார் கவிராயர். முரசு முழங்கியது; நாதஸ்வரம், தவில் ஆகியன ஒலித்தன. மாலை மரியாதைகளுடன் துரைசாமிக் கவிராயரை வரவேற்றனர் கோயில் அதிகாரிகள். அன்னக் காவடியைச் சுமந்துகொண்டு படியேறி பழனி தண்டாயுதபாணியின் சந்நிதியை அடைந்தார் கவிராயர்.
'பழனிப் பரமனே! அன்னக்காவடி செலுத்த எளியேன் விண்ணப்பித்தபோது, அதற்கு வேண்டிய அனைத்தையும் தந்து உதவிய உமது பேரருளை எப்படிப் புகழ்வது! எமது பிரார்த்தனையை நிறைவேற்றுவதில் உமக்கு இத்தனை இன்பமா? உன் கருணைக்கு என்னால் என்ன கைம்மாறு செய்ய இயலும்!' என்று கூறி, அன்னக் கலயத்தைத் திறந்தார். ஆஹா! ஆஹா! என்ன அதிசயம்! ஒன்றரை மாதத்துக்கு முன்பு சமைத்துக் கட்டிய சோற்றில் இருந்து ஆவி மேலெழுந்தது. அப்போதுதான் சமைத்த அன்னம் போல் சூடாக இருந்தது. பழனி முருகனின் திருவிளையாடலை எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடித்தார் கவிராயர்.
அப்போது துரைசாமிக் கவிராயர் பக்திப் பரவசம் பொங்க பின்வரும் பாடலைப் பாடினார்.
#பல்லவி
மகிமை பொய்யா? மலைக் குழந்தை வடிவேல் முருகையா (மகிமை)
#அனுபல்லவி
உன் மகிமை என் அளவினில் செல்லாதா? என் மனத்துயரை நின் அருள் வெல்லாதா? (மகிமை)
#சரணம்
சமைத்துக் காவடி தன்னில் காட்டிய சாதம்- நின் சன்னிதி வைத்துத் துதி செய்ய
அமைத்து நாள் சென்றும் அப்போது சமையலான அன்னமாய்க் காட்டும் அதிசயம்..! (மகிமை)
இந்த நிகழ்வை கண்ட அனைவரது உள்ளமும், உடலும் சிலிர்த்தது.

திருவாதவூர் திருமறைநாதர் கோவில்
சனி பகவானின் முடக்கு வாதத்தை நீக்கிய தலம்
மதுரையிலிருந்து வடக்கே 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தலம் திருவாதவூர். இறைவன் திருநாமம் திருமறைநாதர் . இறைவியின் திருநாமம் வேதநாயகி.
சிவபெருமான் சனி பகவானின் வாத நோயைத் தீர்த்த தலம் என்பதால், இந்தத் தலம் 'வாதவூர்' என்று பெயர் பெற்றது. இத்தல ஈசனை வழிபட்டால் கை, கால் முடம், பக்கவாதம் உள்ளிட்ட அனைத்து வகையான வாத நோய்களும் தீரும் என்று கூறப்படுகிறது. சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் அவதரித்த தலம் இது.
சனி பகவானுக்கு, மாண்டவ்ய முனிவரின் சாபத்தால் முடக்கு வாதம் ஏற்பட்டது. அவர் இந்த ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் திருமறை நாதரை வழிபட்டதன் பயனாக நோய் தீர்ந்தது என்று தல புராணம் கூறுகிறது. தான் பெற்ற சாப நீக்கத்தை, பக்தர்களுக்கு அருளும் முகமாக இந்த ஆலயத்தில், சனி பகவான் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார். அவர் ஒரு காலை மடக்கி வைத்து, மற்றொரு காலைத் தொங்கவிட்டபடி, காகத்தின் மீது அமர்ந்து அருள்பாலிக்கிறார்.
வாத நோயை நீக்கும் அபிஷேக நல்லெண்ணெய்
கை, கால்களை அசைக்க முடியாமல், எழுந்து நடக்க முடியாமல் உள்ளவர்கள், இந்த ஆலயத்திற்கு வந்து, திருமறைநாதரை மனமுருக வேண்டிக் கொள்ள வேண்டும். மேலும் மூலவருக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, அந்த எண்ணெயை வீட்டிற்கு எடுத்துச் சென்று, கை, கால்களில் தேய்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு முப்பது நாட்கள் அல்லது நாற்பத்து எட்டு நாட்கள் தொடர்ச்சியாக தேய்த்து வந்தால், வாத நோய் குணமாவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
தங்கள் வாத நோய் தீர வேண்டும் என்பதற்காக பல வெளி மாநிலங்களில் இருந்தும் கூட பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகிறார்கள்.

மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோயில்
குடிசையில் வீற்றிருந்து சகல வளங்களையும் அள்ளித்தரும் அம்மன்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வடக்கே, அரை கிலோ மீட்டர் தொலைவில், மிகவும் தொன்மை வாய்ந்த முண்டகக்கண்ணி அம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு நாளும் ஏராளமான பக்தர்கள் வழிபடும் மகிமை வாய்ந்த புண்ணிய திருத்தலம் இதுவாகும். அனைத்து செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கோயில், திருவிழாக் கோலம் பூண்டு விடும்.
சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு இப்போது முண்டகக்கண்ணி அம்மன் ஆலயம் இருக்கும் இடத்தில் ஒரு குளம் இருந்துள்ளது. அந்த குளக்கரையில் பல நூறு ஆண்டு வயதுடைய மிகப் பெரிய ஆலமரம் இருந்தது. ஒரு நாள் அந்த ஆலமரத்தடியில் அப்பகுதி மக்கள் அமர்ந்து இருந்தபோது, அம்மன் தன்னை சுயம்புவாக வெளிப்படுத்தி காட்சி தந்தாள் என்கிறது இத்தலத்தின் வரலாறு. மேலும் தாமரை மொட்டு வடிவத்திலேயே, தன்னை அம்மன் சுயம்புவாக வெளிப்படுத்திக் கொண்டதாக இக்கோவில் புராணம் கூறுகிறது. முண்டகம் என்றால் தாமரை என்றும் பொருள் உண்டு. அம்மன் விரிந்த பெரிய விழிகளைக் கொண்டவள் என்ற பொருளில் 'முண்டகக் கண்ணியம்மன்' என்கின்றனர். அம்பிகை, தாமரை போன்ற கண்ணுடையாள் என்றும் கொண்டாடுகின்றனர்.
முண்டகக்கண்ணி அம்மன். வேறு எந்த தலத்திலும் இல்லாதபடி,எளிமைக்கு இலக்கணமாக ஓலைக் குடிசையில் எழுந்தருளியிருக்கிறாள். இக்கோவிலுக்கு ராஜகோபுரம் இருந்தாலும், அன்னை வீற்றிருக்கும் கருவறையை அலங்கரிப்பதோ எளிமையான தென்னங்கீற்றால் வேயப்பட்ட கொட்டகைதான். தங்களுக்கு கேட்ட வரம் கொடுத்து அருள் பாலிக்கும் அன்னைக்கு, கருவறை கட்டிடம் கட்ட அவளின் பக்தர்கள் முயன்றபோது, அதில் பல்வேறு தடைகள் ஏற்பட்டதாகவும், தனக்கு தென்னங்கீற்றால் அமைந்த கூரை மட்டுமே விருப்பம் என பக்தர்களின் கனவில் அம்பாள் சொன்னதாகவும் கூறப்படுகிறது. மேலும் தல வரலாறும் தனது மக்களை வெம்மையில் இருந்து காக்கவே, அன்னை இவ்வாறு குடிகொண்டிருப்பதாக தெரிவிக்கிறது. சுயம்புவாக அம்மன் தலையில் நாக கிரீடம் அணிந்து கொண்டு நடுவில் சூல வடிவம் கொண்டு இரண்டு கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகின்றாள். இடதுபுறமாக உற்சவர் சிம்ம வாகனத்தில் கம்பீரமாக காட்சி தருகின்றாள். முண்டகக்கண்ணி அம்மனை கருவறை என்பதும் குளிர்ச்சியாகவே வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கில் அடிக்கடி நீர் ஊற்றி ஈரமாகவே வைத்துள்ளனர். வெள்ளி கவசம் சாத்திய பெரிய சந்திரபிரபை கீழ் சுயம்பு அம்மன் ஆனந்தமாய் விற்றிருக்கிறாள்.
கருவறையின் பின்புறம் தல மரமான, ஆலம் விழுதுகள் இல்லாத, அபூர்வ மரமான கல்லால மரமும், புற்றுடன் மூன்றடி உயர கல் நாகமும் அமைந்துள்ளன. பின்புறம் உள்ள புற்றில் வாழும் நாகம், நாள்தோறும் இரவில் அன்னையை வணங்கி வழிபட்டு செல்கிறாள் என்பது ஐதீகம். இதனால் இத்தலத்தை ராகு கேது பரிகார தலம் என்று சொல்வார்கள் .
பிரார்த்தனைகள்
இக்கோவிலில் அம்பாளுக்கு பூஜித்த வேப்பிலை, மஞ்சள், எலுமிச்சை மற்றும் தீர்த்தமே பிரதான பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது. அம்மை நோய், தீராப்பிணி, திருமணத்தடை, கல்வி, மகப்பேறு, வீடு வாகன வசதிகள் என வேண்டுவோர் வேண்டியதை வேண்டியவாறுக் கொடுக்கும் கற்பகத்தரு முண்டகக்கண்ணி அம்மன். ராகு – கேது தோஷம் உள்ளவர்கள் இந்த அம்மனை வழிபட, அவற்றிலிருந்து முழுமையாக விடுபடலாம். நாகதோஷம் இருப்பவர்கள், முண்டகக்கண்ணி அம்மனை வழிபட்டு, நாககன்னி சிலையை பிரதிஷ்டை செய்வதாக வேண்டிக்கொள்கிறார்கள். அதன்பிறகு, 48 நாள்களுக்கு நீரிலேயே நாககன்னியை வைத்திருந்து, பின் அதனை ஆலயத்தின் முகப்பில் இருக்கும் மரத்தடியில் பிரதிஷ்டை செய்து, அதற்கு அபிஷேகமும் செய்து வழிபடுகிறார்கள். கண் தொடர்பான நோய்கள் தீர முண்டகக்கண்ணியை வழிபட விரைவில் தீரும்.

பெருங்குடி அகத்தீஸ்வரர் கோவில்
மங்களாம்பிகை லோக தட்சிணாமூர்த்தி
திருச்சியிலிருந்து வயலூர் செல்லும் வழியில் சோமரசன் பேட்டைக்கு அடுத்து வலது பக்கமாகப் பிரிந்து செல்லும் சாலையில் அமைந்துள்ளது பெருங்குடி கிராமம். இத்தலத்து இறைவனின் திருநாமம் அகத்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் சிவகாமசுந்தரி.
இக்கோவிலின் வெளிச்சுற்று சுவரில் தெற்கு நோக்கி தட்சிணாமூர்த்தி எழுந்தருளியிருக்கிறார். இந்த தட்சிணாமூர்த்தியின் கோலமானது மிகவும் சிறப்புடையது. அவர் மங்களாம்பிகை லோகத்தில் எந்த கோலத்தில் எழுந்தருளி இருக்கிறாரோ அதே கோலத்தில் இங்கு நமக்கு அருள்பாலிக்கிறார். அவர் காலின் கீழ் உள்ள பூதகனின் தலைப்பாகம், வேறு எந்த சிவாலயத்திலும் இல்லாதவாறு கிழக்கு திசை நோக்கி இருக்கின்றது. மேலும் அவருக்கு கீழே உள்ள நந்தியம்பெருமான் கிழக்கு நோக்கி அமர்ந்த நிலையில் தன் தலையை மட்டும் மேற்கு திசை நோக்கி திருப்பி இருப்பதும், ஒரு அபூர்வமான தோற்றமாகும்.

திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோயில்
ஆதிசேஷன் தனிச்சன்னதியில் எழுந்தருளியிருக்கும் ஒரே திவ்யதேசம்
சென்னைக்கு மேற்கே 29 கி.மீ. தொலைவில், திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திவ்ய தேசம் திருநின்றவூர். மூலவர் ஸ்ரீ பக்தவத்சல பெருமாள். தாயார் 'என்னை பெற்ற தாயார்'. பக்தவத்சலப் பெருமாள் 11 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் பஞ்சாயுதம் ஏந்தி ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கிறார்.
ஒருசமயம் திருமாலிடம் கோபித்துக் கொண்டு வைகுண்டத்தை விட்டு ‘திரு’ ஆகிய மகாலட்சுமி இத்தலத்தில் வந்து நின்றதால் 'திருநின்றவூர்' என்று ஆனது. மகாலட்சுமியை சமாதானம் செய்ய சமுத்திரராஜன் வந்திருந்தார். மகாலட்சுமி அதற்கு சமாதானம் ஆகவில்லை. உடனே சமுத்திரராஜன் வைகுண்டம் சென்று, திருமாலிடம் 'தாங்களே திருநின்றவூர் சென்று தேவியை இங்கு அழைத்து வர வேண்டும்'என்று கூறினார். சமுத்திரராஜன் இத்தலம் வந்து மகாலட்சுமியைப் பார்த்து, 'பாற்கடலில் நீ பிறந்ததால் நான் உனக்கு தந்தையாக இருந்தாலும் இப்போது நீ என்னைப் பெற்ற தாயார், அதனால் உடனே நீ வைகுண்டம் செல்வாயாக' என்று கூறினார், பெருமாளும் வந்து மகாலட்சுமியை சமாதானம் செய்கிறார். மகாலட்சுமி வைகுண்டம் செல்கிறார். பக்தனின் வேண்டுகோளுக்கு இணங்க பெருமாள் இத்தலம் வந்ததால், பெருமாளுக்கு பக்தவத்சலன் என்ற பெயர் வழங்கலாயிற்று. சமுத்திரராஜனும் மகாலட்சுமியை என்னைப் பெற்ற தாயே என்றதால் அப்பெயரே நிலைத்துவிட்டது. சமுத்திரராஜனின் வேண்டுகோளுக்கு இணங்க பெருமாளும் தாயாரும் இத்தலத்தில் திருமண கோலத்தில் அருள்பாலிக்கிறார்கள்.
குபேரன் ஒரு சமயம் தன் நிதியை இழந்து வாடியபோது இத்தல தாயாரை வழிபட்டு மீண்டும் அனைத்தையும் பெற்றான்.
பொதுவாக பெருமாள் சயனித்திருக்கும் கோலத்தில் இருக்கும் போது, அவருடன் நாம் ஆதிசேஷனை தரிசித்து இருப்போம். ஆனால் இத்தலத்தில் ஆதிசேஷன் தனிச் சன்னதியில் எழுந்தருளி இருப்பது, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத விசேட அமைப்பாகும்.
ஆதிசேஷன் சந்நிதியில் புதன்கிழமைதோறும் நெய்விளக்கு ஏற்றி பால் பாயாசம் படைத்து அவருக்கு அர்ச்சனை செய்து வந்தால் ராகு-கேது மற்றும் சர்ப்ப தோஷம் விலகும் என்பது நம்பிக்கை. மாங்கல்ய பலனும் கிட்டும். திருமணத் தடையுள்ளவர்கள் இத்தலம் வந்து வழிபட்டால் அத்தடை நீங்கும்.
ஆதிசேஷன் சந்நிதியில் புதன்கிழமைதோறும் நெய்விளக்கு ஏற்றி பால் பாயாசம் படைத்து அவருக்கு அர்ச்சனை செய்து வந்தால் ராகு-கேது மற்றும் சர்ப்ப தோஷம் விலகும் என்பது நம்பிக்கை. மாங்கல்ய பலனும் கிட்டும். திருமணத் தடையுள்ளவர்கள் இத்தலம் வந்து வழிபட்டால் அத்தடை நீங்கும்.
காணாமல் போன பொருளைக் கண்டு பிடிப்பதற்கும் - ஆட்களை தேடி பிடிப்பதற்கும், அநியாயமாக சொத்தை பிடுங்கி கொண்டவர்களிடமிருந்து இழந்த சொத்தை முறைப்படி மீட்பதற்கும், இழந்த பதவியை மீண்டும் பெறுவதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும், வேலை கிடைப்பதற்கும், வியாபாரத்தில் இழந்த நஷ்டத்தை மீண்டும் லாபமாக மாற்றுவதற்கும், பெரியவர்கள் செய்யாமல் போன பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கும் திருநின்றவூர் வந்து ஸ்ரீ பக்தவச்சலப் பெருமாளை மனமார பிரார்த்தனை செய்தால் நல்ல பலனை உடனே அடையலாம்.

கணபதி அக்ரஹாரம் மகா கணபதி கோவில்
மயிலை வாகனமாகக் கொண்ட கணபதி
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறிலிருந்து 9 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது கணபதி அக்ரஹாரம். ஒரு சமயம் இந்நாட்டில் ஏற்பட்ட கடும் பஞ்சம் நீங்க, கௌதம மகரிஷியால் பூஜிக்கப்பட்டு பஞ்சம் நீங்கிய காரணத்தால் இவ்விடத்தை 'அண்ணகோஷஸ்தலம்' என்று புராணங்கள் குறிப்பிட்டு இருக்கின்றன. இங்குள்ள மகா கணபதி ஆலயத்தில், தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை அளித்துக் காத்தருள்கிறார் மகா கணபதி. இந்த கிராமத்தில் பல குடும்பங்களுக்கு குல தெய்வமாகவும் விளங்குகிறார்.
பொதுவாக, முருகனின் வாகனமாகத்தான் மயில் கருதப்படுகிறது. ஆனால், இக்கோயிலில் உள்ள கணபதிக்கும் மயில்தான் வாகனமாய்த் திகழ்கிறது. எனவே, இந்தக் கணபதியை மயூரிவாகனன் என்றும் அழைக்கிறார்கள்.
ஒரு சமயம், அகத்திய முனிவர் தவத்திற்கு இடையூறாக இருந்த காவேரியின் 'சல சல' என்று நீர்கட்டத்தின் ஆரவார சப்தம், அவரை கோபம் அடைய செய்தது. அவருடைய தவவலிமையால் காவேரியை தனது கமண்டலத்தில் அடக்கிவிட, சோழ தேசமானது வளம் குன்றி, பஞ்சம் ஏற்பட்டு தேவ பூஜைகள் நின்று விட, தேவர்கள் எல்லாம் விநாயகப் பெருமானிடம் முறையிட விநாயகப்பெருமானும் காக்கை உருவம் ஏற்று கமண்டலத்தை தனது அலகால் தட்டிவிட காவேரியும் பெருக்கு எடுத்து சென்று எல்லா இடங்களிலும் பாய்ந்து மீண்டும் சோழ வளநாடு வளம் பெற்றது. அகத்திய மாமுனி தட்டி விட்ட காக்கையை பின்தொடர, அக்காக்கையே இவ்விடத் தில் விநாயகப்பெருமானாய் அவருக்கும், காவேரி தாய்க்கும் காட்சியளித்ததாக வரலாறு கூறுகிறது.
வினோதமான விநாயக சதுர்த்தி பூஜை
இவ்வூரில் விநாயக சதுர்த்தியை கொண்டாடுவது சற்று வினோதமான வழக்கமாக உள்ளது. விநாயகர் சதுர்த்தியன்று இந்த ஊர் மக்கள், களிமண்ணில் பிள்ளையார் செய்து வீட்டில் வைத்து பூஜிப்பது கிடையாது. தங்கள் வீட்டில் செய்த கொழுக்கட்டை போன்ற நிவேதனப் பொருள்களை எடுத்துக் கொண்டு அனைவருமே மகா கணபதி ஆலயத்திற்கு வருகின்றனர். கோவிலில் தான் விநாயகர் சதுர்த்தி பூஜை, நிவேதனம் எல்லாம் செய்கின்றார்கள்.

காங்கயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோவில்
பக்தர்களை நோக்கி அடியெடுத்து வைக்கும் அபூர்வக் கோலத்தில் காட்சி தரும் முருகப்பெருமான்
ஈரோடு மாவட்டம், நஞ்சை ஊத்துக்குளி அருகில் உள்ள தலம் காங்கயம்பாளையம். இத்தலத்தில் காவேரி ஆற்றின் காவிரியின் நடுவில், நட்டாற்றீஸ்வரர் கோயில் அமைந்திருக்கிறது. பாவம் நீக்கும் புண்ணியம்பதியாம் ராமேஸ்வரத்துக்கு இணையான சிறப்பு இந்தத் தலத்துக்கும் உண்டு என்கிறார்கள் பக்தர்கள். நீர் சூழ்ந்த ராமேஸ்வரம் தீவைப் போன்றே, இங்கும் சிவபெருமான் காவேரி ஆறு சூழ்ந்த பகுதியில் கோயில் கொண்டிருக்கிறார்.
ஒரு சமயம், கயிலையில் நிகழ்ந்த சிவபெருமான் - பார்வதி திருக்கல்யாணத்தைத் தரிசிப்பதற்காக எல்லோரும் கயிலையில் குவிந்துவிட, உலகின் வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது. அதைச் சமன் செய்ய சிவபெருமான் அகத்தியரை தென்புலம் அனுப்பினார். அத்துடன், வேறு சில அரும் பணிகளையும் அவரிடம் ஒப்படைத்தார். அப்பணிகள் ஐந்து என்றும், அவற்றில் இரண்டாவது, நட்டாற்றீஸ்வரர் திருத்தலத்தை உருவாக்குவது என்றும் தெரிவிக்கின்றன புராணங்கள்.
தென்புலம் வந்த அகத்தியருக்கு அசுரஹத்தி தோஷம் பிடித்தது. தோஷம் நீங்க, காவிரியின் உற்பத்தி ஸ்தானம் முதல் கடலில் கலக்கும் முகத்துவாரம் வரையுள்ள, காவிரி நதி நீர் ஓடும் பாதையின் மையப்புள்ளியில் மணல் லிங்கம் அமைத்து,சிவ பூஜை செய்தால் தன்னுடைய பாவங்கள் நீங்கும் என எண்ணினார். காவிரி நதி நீர் பாதையின் நடுவில் பூஜை செய்ய இடம் தேர்ந்தெடுக்க காவிரி ஆற்றங்கரையோரம் அகத்தியர் சென்ற போது முருகப்பெருமான் முன் வந்து அகத்தியரை அழைத்து வந்து நடு இடத்தைத் சுட்டிக் காட்டினார். இந்த நிகழ்ச்சியை குறிப்பிடும் வகையில்தான், இக்கோவிலில் முருகப்பெருமான், தெற்கு நோக்கிய பிரமச்சாரியாக வலது காலை முன்வைத்தும் இடக்காலை பின் வைத்தும் நடப்பது போன்ற பாவனையில் பக்தர்களை நோக்கி அடியெடுத்து வைக்கும் அருட்கோலத்தில் காட்சி தருகிறார். முருகப்பெருமானின் இந்தக் கோலம் , வேறெங்கும் காண்பதற்கரிய தரிசனம் ஆகும்.
கிளி ஏந்திய முருகப்பெருமான்
மேலும் முருகப் பெருமான் தனது இடக்கரத்தில் கிளி ஒன்றை வைத்திருக்கிறார். பொதுவாக நாம் ஒருவரைச் சந்திக்கும்போது மங்கலப் பொருட்களை கொண்டு செல்வது வழக்கம். அந்த வகையில்தான் முருகப் பெருமான் அகத்தியரை சந்திக்கும் போது தன்னுடன் கிளியை எடுத்துக் கொண்டு சென்றார் என்று குறிப்பிடுகிறார்கள்.

திலதர்ப்பணபுரி (திலதைப்பதி) முக்தீஸ்வரர் கோவில்
இப்பிறவியில் செய்த பாவங்களைப் போக்கும் பீஷ்மாஷ்டமி தர்ப்பணம்
மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ள தேவாரத்தலம் திலதர்ப்பணபுரி . இத்தலம் தற்போது திலதைப்பதி என்று அழைக்கப்படுகிறது. திலம் என்றால் எள், புரி என்றால் தலம். எள் தர்ப்பணம் செய்ய சிறந்த தலம் என்பது பொருள். இந்தியாவில் பித்ரு தலங்கள் 7 உள்ளன. அவை காசி, ராமேஸ்வரம், கயா, திரிவேணி சங்கமம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி ஆகும். ராமேஸ்வரத்தில் செய்யப்படும் பித்ருக்கள் சம்பந்தமான அனைத்து பூஜைகளும் திலதர்ப்பணபுரியிலும் செய்யப்படுகின்றன. இறைவன் திருநாமம் முக்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் சொர்ணவல்லி.
சாதி, மத பேதமின்றி அனைத்து மக்களுக்கும் செய்யப்படும் காருண்ய தர்ப்பணம் இங்கு மிக விசேஷம். சொர்ணவல்லித் தாயார், பிரம்மா, மகாலட்சுமி, ஸ்ரீராமர், நட்சோதி மன்னன் போன்றவர்களே இத்திருக்கோவில் வந்து பித்ரு தர்ப்பணம் செய்துள்ளனர் என்றால், இக்கோவிலின் மகிமையும், பித்ரு தர்ப்பணத்தின் மகிமையும் நமக்கு விளங்கும். இக்கோவிலில் பித்ரு தர்ப்பணம் செய்ய அமாவாசை, திதி, நட்சத்திரம் ஆகியவை பார்க்கத் தேவையில்லை. இத்தலத்தில் எந்த நாளில் வேண்டுமானாலும் சிரார்த்தம், தர்ப்பணம் செய்யலாம்.
பீஷ்மாஷ்டமி தர்ப்பணம்
தை மாதம் ரதசப்தமிக்கு மறுநாள் வரும் அஷ்டமி தினம், பீஷ்மாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. மஹாபாரதத்தில் கங்கையின் மைந்தரான பீஷ்மரை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவர் இல்லாமல் மஹாபாரத காவியமே கிடையாது. கிருஷ்ணபரமாத்மா எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவரோ, அதே அளவுக்கு பீஷ்மரும் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவர். உலக நன்மைக்காகவும், தன்னுடைய தந்தைக்காகவும் செய்த தியாகத்திற்கு பிரதிபலனாக, பீஷ்மர் தான் விரும்பாமல் தன்னுடைய உயிர் உடலை விட்டு பிரியாது என்னும் வரத்தை பெற்றார். இதனால் பாண்டவர்கள்,கௌரவர்கள் என இரு தரப்புக்கும் பிரியமான பிதாமகர் என்று மரியாதையுடன் அழைக்கப்பட்டார்.
மஹாபாரதப் போரில் , பீஷ்மர் அர்ச்சுனனின் அம்புகளால் வீழ்த்தப்பட்டு அம்புப்படுக்கையில் கிடந்தாலும், தான் பெற்ற வரத்தின் காரணமாக, மோட்ச காலமான உத்தராயண காலத்தில் உயிர் துறக்க விரும்பி தன் மரணத்தை தள்ளிப் போட்டு வந்தார். பீஷ்மர் மரணப் படுக்கையில் இருந்தபோது,மஹாவிஷ்ணுவை வேண்டிக் கொண்டார். அவருக்கு கிருஷ்ணபரமாத்மா தன்னுடைய விஸ்வரூபத்தை காட்டி அருளினார். அந்த சமயத்தில் பீஷ்மர் அருளியதே விஷ்ணு சகஸ்ரநாமம் ஆகும். அப்போது மோட்சம் அளிக்கும் உத்தராயண காலம் ஆரம்பமாகிவிட்டதால், பீஷ்மர், தன்னுடைய உயிர் பிரியவேண்டும் என்று வேண்டிக்கொண்டார். ஆனால், உயிர் பிரியவில்லை. உத்தராயண காலம் தொடங்கியும் தன்னுடைய உயிர் பிரியாததைக் கண்டு மனம் வருந்தி வியாசரிடம் விளக்கம் கேட்டார் பீஷ்மர். அதற்கு வியாசர், பீஷ்மர் செய்த பாவச்செயலை, அதாவது திரௌபதியை கௌரவர்கள் மானபங்கப் படுத்தியபோது தடுக்காததை, அவரிடம் எடுத்துரைத்தார். தன்னுடைய மாபெரும் தவறை உணர்ந்து கொண்ட பீஷ்மர், தன்னுடைய உடலை எரிக்கும் சக்தியை, சூரிய தேவனிடம் இருந்து பெற்றுத் தருமாறு வியாசரிடம் கேட்டுக்கொண்டார். உடனே வியாசரும், சூரிய சக்திக்கு நிகரான எருக்க இலைகளைக் கொண்டு பீஷ்மரை அலங்கரித்தார். இதையடுத்து நிம்மதியடைந்த பீஷ்மர் தியான நிலைக்கு சென்று மோட்சம் பெற்றார்.
பீஷ்மர் உயிர் பிரிந்து மோட்சம் பெற்றாலும், அவர் பிரம்மச்சாரி என்பதால், அவருக்கு தர்ப்பணம் செய்ய வாரிசுகள் இல்லை. ஆனால், பீஷ்மர் ஒழுக்க நெறி தவறாமல் பிரம்மச்சாரிய விரதத்தைக் கடைபிடித்து வந்ததால், அவருக்கு சிரார்த்தம் செய்யவேண்டிய அவசியம் இல்லை என்று வியாசர் கூறினார். வியாசர் அப்படி சொன்னாலும், பீஷ்மரின் ஆத்மாவுக்காக இந்த நாடே தர்ப்பணம் செய்யும். அதனால் புண்ணியமும் கிடைக்கும் என்று ஆசி வழங்கினார் வியாசர். பீஷ்மர், ரதசப்தமி முடிந்த மறுநாளான அஷ்டமி திதியன்று தன்னுடைய உயிரைப் போக்கிக்கொண்டார். அந்த அஷ்டமியே பீஷ்மாஷ்டமி என்று கூறப்படுகிறது.
பீஷ்மாஷ்டமி தினத்தில், பீஷ்மருக்காகவும், நம்முடைய முன்னோர்களுக்காகவும் தர்ப்பணம் செய்தால், நாம் இப்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி, நம்முடைய வாழ்வில் நிச்சயம் சுபிட்சம் ஏற்படும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்
திருப்பதி ரத சப்தமி உற்சவம்
தை மாதத்தில், அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை சப்தமியையே ரத சப்தமி என்று அழைக்கிறார்கள். ரத சப்தமி நாள் சூரிய ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது. அன்றைய தினம் சூரியன் பயணிக்கும் தேரை இழுத்துச்செல்லும் 7 குதிரைகளும் ஒரு சேர வடக்கு நோக்கி திரும்பி பயணத்தை தொடங்குகின்றன என விளக்குகிறது புராணம்.
திருமலை திருப்பதியில் புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழா மிகவும் விசேஷமானது. இந்தத் திருவிழாவின்போது, தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் மலையப்பசாமி ஒரு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருவார். ஆனால் தை மாதம் ரத சப்தமியன்று ஒரே நாளில் ஏழு வாகனங்களில் மலையப்ப சுவாமி தனித்தும்,ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடனும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார். ரதசப்தமி அன்று நடைபெறும் வாகன சேவைகள்
சூரிய பிரபை வாகனம் - அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 8 மணி வரை.
சிறிய சேஷ வாகனம் - காலை 9 மணியில் இருந்து 10 மணி வரை
கருட வாகனம் - பகல் 11 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை
அனுமந்த வாகனம் - மதியம் 1 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை
கல்ப விருட்ச வாகனம் - மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணி வரை
சர்வ பூபால வாகனம் - மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை
சந்திரபிரபை வாகனம் - இரவு 8 மணியில் இருந்து இரவு 9 மணி வரை
சூரிய பகவானை வழிபடும் விரதங்களில் முக்கியமானது ‘ரதசப்தமி’. ரத சப்தமி நாளில் சூரிய பகவானின் பெயரில் தானம் செய்யவது நல்லது. ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் ஏழு வகையான பாவங்களைச் செய்கிறான் என்று கூறப்படுகிறது. இவை வேண்டுமென்றே, தற்செயலாக, வாய் வார்த்தையாலும், உடல் செயலாலும், மனதாலும், முற்பிறவியிலும் செய்த பாவங்கள். ரத சப்தமி அன்று சூரிய பகவானை வழிபடுவதால் இந்த பாவங்களில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்
1. பக்தனுக்காக கரும்பு தின்ற திருமலை வெங்கடேசப் பெருமாள் https://www.alayathuligal.com/blog/558mb2xzflf6tm53dbbpmw9z5yk2kr-psams
2. திருப்பதி பெருமாளுக்கு முகவாயில் பச்சைக் கற்பூரம் சாற்றும் வழக்கம் ஏற்பட காரணமாக இருந்த கடப்பாரை
https://www.alayathuligal.com/blog/8r2h5k9nc4zyxc85agwjcf5fww5jhw
3. திருவேங்கடவனின் மாமனார்
https://www.alayathuligal.com/blog/558mb2xzflf6tm53dbbpmw9z5yk2kr

தாயமங்கலம் முத்துமாரியம்மன கோவில்
தாலி பாக்கியம் தந்தருளும் தாயமங்கலம் முத்துமாரியம்மன்
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே இருக்கிறது தாயமங்கலம் முத்துமாரியம்மன கோயில். இந்தப் பகுதியிலிருக்கும் 22 கிராம மக்களுக்கும், தாயாகவும், மாங்கல்ய பாக்கியம் தந்து மங்கல வரம் அருளும் நாயகியாகவும் திகழ்கின்றாள் முத்துமாரியம்மன. இந்த ஊர் 'தாய்மங்கலம்' என்றே அழைக்கப்பட்டு, காலப்போக்கில் தாயமங்கலம் என மருவியது. இங்குள்ள தெய்வம் கன்னித்தெய்வமாக இருப்பதால், திருமண வரம் வேண்டுபவர்கள், தாலிப்பொட்டினை அம்மன் காலடியில் சமர்ப்பித்து, வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்தக் கோயிலில் அம்பாள் நின்ற கோலத்தில், நான்கு கரங்களுடன் கேட்கும் வரங்களை வழங்கும் கற்பக விருட்சமாகத் திகழ்கின்றார்.
தல வரலாறு
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன், முத்து செட்டியார் என்ற ஒரு வியாபாரி சிவகங்கையில் வசித்து இருந்தார். அவர் மதுரை மீனாட்சியம்மன் மீது மாறாத பக்திகொண்டவர். அவருக்கு நெடுநாள்களாகவே குழந்தை இல்லை. ஒவ்வொரு முறையும் மதுரைக்கு வியாபார நிமித்தமாக செல்லும் அவர், தவறாமல் மீனாட்சியம்மையையும், சொக்கநாதரையும் வழிபட்டு, குழந்தை வரம் வேண்டுவார்.
அப்படி ஒருமுறை, அவர் மதுரையிலிருந்து தனது ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அவர் வந்த வழியில், சிறுமியான ஒரு பெண்குழந்தை பாதை தெரியாமல் அழுதுகொண்டிருந்தது. இதைப் பார்த்த அவருக்கோ மனம் மிகவும் வேதனைப்பட்டது. சிறுமியிடம் ''உன்னுடைய பெயர் என்னம்மா? ஏன் எவரும் இல்லாத இந்தக் காட்டு வழியில் அழுது கொண்டிருக்கிறாய்'' என விசாரித்தார். தனது பெயர் முத்துமாரி என்றும், தனது தாய் தந்தையிடமிருந்து பிரிந்துவிட்டேன் என்றும் எங்கு போவதென வழிதெரியவில்லை என்றும் கூறி தேம்பினாள். ''கவலைப்படாதே அம்மா! உன்னை நான் பத்திரமாகப் பார்த்துக்கொள்கின்றேன்,' எனக்கூறி அந்தச் சிறுமியை தன்னுடன் அழைத்துப்போனார். மதுரை மீனாட்சியே இந்தக் குழந்தையை தனக்குத் தந்ததாக எண்ணினார்.
அவர்கள் சென்ற வழியில் ஆறு ஒன்று குறுக்கிட்டது. பயணக்களைப்பாக இருந்ததால், சிறுமியை கரையில் உட்கார வைத்துவிட்டு ஆற்றில் இறங்கி குளிக்கப் போனார். ஆனால், குளித்து முடித்துவிட்டு கரைக்கு வந்து பார்த்தால், குழந்தையைக் காணவில்லை. இதனால் ரொம்பவே மனம் வெறுத்துப்போன அந்த வணிகர் தன் மனைவியிடம் நடந்ததையெல்லாம் கூறி வருந்தினார். இரவு உணவைகூட சாப்பிடாமல், படுக்கப்போனவர் அப்படியே கண்ணயர்ந்து விட்டார். அவரது கனவில், 'சிறுமியாக வந்தது நான்தான் என்றும் ஊருக்கு அருகாமையிலிருக்கும் கள்ளிக்காட்டில், நான் உறைய இருக்கிறேன் என்றும் கோயில் கட்டி வழிபடுபவர்களுக்கு, வேண்டும் வரங்களை அருளுவேன் என்றும் கூறி மறைந்தாள் முத்துமாரி. படுக்கையில் இருந்து எழுந்த வியாபாரி, தன் மனைவியிடம் எல்லாவற்றையும் கூறினார். மறுநாள் பொழுது விடிந்ததும் முதல் வேலையாக ஆற்று மணலில் அம்மன் சிலையை அமைத்து வழிபடத்தொடங்கினார். இவரைத் தொடர்ந்து ஊர் மக்களும் வழிபட்டனர். நாளடைவில் அந்தப்பகுதி மக்களின் கண்கண்ட தெய்வமானாள் முத்து மாரியம்மன்.
அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், செவ்வாய் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயிலுக்கு வந்து வணங்கி இங்கிருந்து தீர்த்தம் பெற்றுச்சென்றால் நோய் குணமாகும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இதுதவிர திருமண வரம், குழந்தைபாக்கியம் வேண்டியும் ஏராளமான பக்தர்கள் வருவதையும், பிரார்த்தனை நிறைவேறி நேர்த்திக்கடன் செலுத்துபவர்களையும் இங்கு காணலாம்.

இலுப்பைக்குடி தான்தோன்றீஸ்வரர் கோவில்
தலையில் கிரீடம் அணிந்து காட்சி தரும் அபூர்வ தட்சிணாமூர்த்தி
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள தலம் இலுப்பைக்குடி. இறைவன் திருநாமம் தான்தோன்றீஸ்வரர். இறைவியின் திருநாமம் சவுந்தர்ய நாயகி.
சித்தர்களில் ஒருவரான கொங்கணர், மூலிகைகளை பயன்படுத்தி இரும்பைத் தங்கமாக மாற்றினார். தங்கத்தை ஐநூறு மாற்றுக்களாக தயாரித்த அவர் மேலும் அதிக மாற்று தங்கம் தயாரிக்க வேண்டும் என விரும்பி அதற்கு அருள்தருமாறு சிவபெருமானை வழிபட்டார். அவருக்கு காட்சி தந்த சிவன் இலுப்பை மரங்கள் நிறைந்த இப்பகுதியில் பைரவரை வணங்கி, தங்கத்தை ஆயிரம் மாற்றாக உயர்த்தி தயாரிக்க அருள் செய்தார். அதன்படி கொங்கணர் பைரவரை வழிபட்டு, ஆயிரம் மாற்று தங்கம் தயாரித்தார். அந்த தங்கம் ஜோதி ரூபமாக மின்னியது. அதை அவர் எடுக்க முயன்றபோது, அந்த ஜோதி பூமிக்குள் புதைந்து சிவலிங்கமாக காட்சியளித்தது. பிரகாசமான ஜோதியில் இருந்து தோன்றியதால் சுவாமிக்கு சுயம்பிரகாசேஸ்வரர் என்றும் தான்தோன்றீஸ்வரர் என்றும் பெயர்கள் ஏற்பட்டன. இலுப்பை வனத்தின் மத்தியில் சிவன் காட்சி தந்த தலமென்பதால் இலுப்பைக்குடி என்று இவ்வூர் அழைக்கப்படுகிறது.
இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தி தலையில் கிரீடம் அணிந்து காட்சி கொடுப்பது, வேறு எந்த தலத்திலும் நாம் காணமுடியாத அரிய காட்சியாகும்.
நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட குட்டி விநாயகர்
சுவாமி சன்னதி முன்மண்டபத்தில் உள்ள தூணில் ஒரு அங்குல அளவே உள்ள குட்டி விநாயகர் சிற்பம் இருக்கிறது. இந்த சிலையில் கண் இமை, விரல் நகங்களும் துல்லியமாகத் தெரியும்படி நேர்த்தியாக சிற்ப வேலைப்பாடு செய்யப்பட்டிருப்பது தனிச் சிறப்பாகும்.

திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில்
புதன் கிரகத்திற்கான பரிகாரத் தலம்
சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில், சுமார் 15 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத் தலம் திருவெண்காடு. இறைவன் திருநாமம் சுவேதாரண்யேசுவரர். இறைவியின் திருநாமம் பிரம்ம வித்யாம்பிகை.இத்தலம் புதனுக்குரிய பரிகாரத் தலமாக விளங்குகின்றது இக்கோவிலில் புதன் பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
புத பகவான்தான், கல்வி, அறிவு, பன்மொழித்திறமை ஆகியவற்றிற்கு அதிபதி. ஜாதகத்தில், புதன் நீசமடைந்திருந்தாலும், அல்லது மறைவிடங்களில் இருந்தாலும், கல்வி மற்றும் கலைகளில் குறைபாடு ஏற்படும். அக்குறைபாடு உடைய குழந்தைகளை திருவெண்காட்டில் உள்ள புதபகவானை தரிசித்து, பிரார்த்தனை செய்தால், அக்குறைபாடுகள் நீங்கும் என்பது நம்பிக்கை. படிப்பில் மனம் ஈடுபடாத மாணவ மாணவிகள் இத்திருத்தல புதனைத் தரிசனம் செய்வது பரிகாரமாகக் கூறப்படுகின்றது.
உடலில் நரம்பு தொடர்பான நோய் உடையவர்கள் புதனை வழிபட்டால் தீர்வு நிச்சசயம். புதபகவானுக்கு புதன்கிழமை உகந்த நாள். பச்சை வண்ணம் உகந்த நிறம். பாசிப்பயறு உகந்த தாண்யம். நவரத்தினங்களில் பச்சைக்கல் உகந்தது. திருவெண்காடு வந்து செல்ல முடியாதவர்கள், வீட்டில் இருந்தவாறு, புதன்கிழமையன்று, உபவாசம் இருந்து புதபகவானை வழிபட்டால் வெற்றி நிச்சயம். புத பகவானின் ஸ்தான பலன் சரியாக அமையப் பெறாத ஜாதகர்கள், இந்தத் திருத்தலத்திற்கு வந்து, இறைவனையும், இறைவியையும், புத பகவானையும் தரிசித்து வழிபாடுகள் செய்ய வேண்டும். புத பகவானுக்கு அபிஷேகங்கள் செய்து, பச்சை நிற வஸ்திரம் சாற்றி, பாசிப்பருப்பு சேர்த்த வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து, பிரசாதத்தை விநியோகிக்க வேண்டும்.. இவ்வாறு செய்வதால் புத தோஷம் நீங்கப் பெறும். புத பகவான் அருளால், கல்வி அறிவு, பேச்சுத்திறமை, இசை, ஜோதிடம், கணிதம், சிற்பம், மருத்துவம், மொழிகளில் புலமை ஆகியவை கிட்டும்.
திருவெண்காடு புதன் பகவானின் சன்னதியில் 17 தீபங்களை ஏற்றி, மற்றும் அந்த கோவிலை 18 முறை சுற்றி வந்து வழிபட்டால், நம் வாழ்வில் வரும் துன்பங்களை வராமல் தடுக்கலாம். மேலும் திருவெண்காட்டில் இருக்கும் புதன் பகவானை வழிபட்டால் ராஜயோகம் கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆகும்.