
கோனேரிராஜபுரம் பூமீஸ்வரர் கோவில்
வெள்ளை ஆடை அணிந்த சனிபகவான்
திருவிடைமருதூரில் இருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத்தலம் கோனேரிராஜபுரம். இறைவன் திருநாமம் உமா மஹேஸ்வரர், பூமீஸ்வரர். இறைவியின் திருநாமம் தேகசௌந்தரி.
இக்கோவிலில் சனிபகவான் மேற்கு பார்த்த நிலையில் உள்ளார். நளனும் அவனது மனைவி தமயந்தியும் திருநள்ளாறு செல்லும் முன் இத்தலத்தில் வழிபாடு செய்து அனுக்கிரகம் பெற்றுள்ளனர். எனவே மற்ற தலங்களில் கருப்பு ஆடை அணிந்திருக்கும் சனி, இங்கு மட்டும் வெள்ளை ஆடை அணிந்து அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவருக்கு வெள்ளை எள்ளால் ஆன எண்ணையில் தீபம் போட வேண்டும். சனி தோஷத்தில் பாதிக்கபட்டவர்கள் இவரை வழிபடுவது சிறப்பு.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு
மனிதரைப் போல ரோமம், மச்சம், ரேகை, நகம் ஆகிய அம்சங்கள் உடைய நடராஜர்
https://www.alayathuligal.com/blog/y4hp9sx9mja22exzhw7rmkdrdc4wk3

உத்திரமேரூர் சுந்தரவரதராஜப் பெருமாள் கோவில்
ஒரே கோவிலில் ஒன்பது பெருமாள்கள் அருளும் தலம்
செங்கல்பட்டிலிருந்து 26 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஊர் உத்திரமேரூர். இந்த ஊரில் சுந்தரவரதராஜப் பெருமாள் ஆலயத்தில் 9 பெருமாள்களை தரிசிக்கலாம். ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் எங்கு வசிக்கிறார்களோ. அங்கே நவமூர்த்திகள் அமைக்கப்பட வேண்டும் என்கிறது மரீசி சம்ஹிதை எனும் ஞான நூல். அந்த வகையில் ஒன்பது பெருமாள்களுடன் அமைந்த கோயில் இது ஆகவே, நவநாராயணர் கோயில் என்றும் பக்தர்கள் போற்றுகிறார்கள்.
இந்தக் கோயிலில் மூன்று தளங்கள் இருக்கின்றன. அதாவது ஒன்றின் மீது ஒன்றாக மூன்று கருவறைகள் அமைந்துள்ளன. தரைத் தளம் மற்றும் முதல் தளத்தில் அமைந்துள்ள இரண்டு பிரதானக் கருவறைகளைச் சுற்றி மூன்று பிரதான திசைகளிலும் திசைக்கொன்றாக மூன்று கருவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்பு இக்கோவிலின் தனிச் சிறப்பாகும். இந்தக் கோவிலின் மூன்று நிலைகளில் உள்ள மூலமூர்த்திகள் அத்தி மரத்தால் உருவானவை என்பது குறிப்பிடதக்கது.
கீழ்த்தளத்திலுள்ள முதன்மைக் கருவறையில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் ஸ்ரீ சுந்தரவரதராஜப் பெருமாள் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். நான்கு கரங்களுடன், நின்ற கோலத்தில் காடசி தரும் பெருமாள், மேல் வலது கையில் சக்கரம் மற்றும் மேல் இடது கையில் சங்கு ஏந்தியும், கீழ் கைகள் அபய ஹஸ்த முத்திரையும் கடிஹஸ்த முத்திரை காட்டியபடியும், காட்சி தருகிறார். இந்த பெருமாளின் தரிசனம் பாண்டவர்களில் ஒருவனான பீமனுக்குக் கிடைத்ததாம். அதே தனத்தில் பிராகாரத்தில் தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு நோக்கி முறையே அச்சுத வரதர், அதிருத்த வரதர், கல்யாண வரதர் அருன்கிறார்கள். ஆக கீழ்த் தளத்தில் 4 பெருமான்கள் அருள்பாலிக்கிறார்கள்.
முதல் தளத்தில் நடுநாயகமாக கிழக்கு நோக்கி வைகுண்ட நாதர் அருள்கிறார். இந்த பெருமாளின் தரிசனம் பாண்டவர்களில் ஒருவனான தர்மனுக்குக் கிடைத்ததாம்.பிராகாரச் சுற்றில் தெற்கு நோக்கி கண்ணன், மேற்கு நோக்கி நாசிம்மர், வடக்கு நோக்கிப் பூவராகர் என இங்கும் 4 பெருமாள்கள் சேவை சாதிக்கிறார்கள். மேல்தளத்தில் அனந்தசயனப் பெருமாள் அருள்பாலிக்கிறார்.
பாண்டவ சகோதரர்கள் இழந்த ஆட்சியை மீட்டுத் தந்த தலம்
இந்தக் கோயில் மகாபாரதத்துடன் தொடர்புடையது. பாண்டவ சகோதரர்கள் தங்கள் அஞ்ஞாத வாசக்காலத்தில் வழிபட்ட தலம் சுந்தர வரத பெருமாள் கோயில். இந்த கோவிலை வழிபட்டபிறகே பிறகே அவர்கள் இழந்த ஆட்சி, அதிகாரம், வலிமைகளை திரும்பப் பெற்றதாக கூறப்படுகிறது.
இந்தக் கோயிலுக்குச் சென்று தவநாராயணரையும் தரிசித்து வழிபட்டால், தோஷங்கள் யாவும் நீங்கும். சந்தோஷம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தாருகாபுரம் மத்தியஸ்வரர் கோவில்
நவக்கிரக தோஷம் அகற்றும் தட்சிணாமூர்த்தி
தென்காசி அருகே உள்ள வாசுதேவ நல்லூரில் இருந்து தலைவன் கோட்டை செல்லும் சாலையில் 2 கி.மீ. தொலைவில் உள்ள தாருகாபுரம் எனும் ஊரில் அமைந்துள்ளது மத்தியஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் மத்தியஸ்வரர். இறைவியின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி.
இக்கோவிலிலுள்ள தட்சிணாமூர்த்தி, தனது காலடியில் ஒன்பது நவக்கிரகங்களையும் அடக்கி அதன் மேல் அமர்ந்து அருள்பாலிக்கிறார். எனவே இங்கு நவக்கிரகங்களுக்கு என்று தனி சன்னிதி இல்லை. நவக்கிரக பீடத்தில் அமர்ந்து இருக்கும் தட்சிணாமூர்த்தியை வணங்கினாலே அனைத்து கிரகங்களையும் வணங்கியதற்கு சமமாகும்.
சத்ரு சம்ஹார பைரவர்
இக்கோவிலில் உள்ள பைரவர் சிறப்பு அம்சம் மிக்கவர். இவர் தலையில் சூரிய சின்னம் உள்ளது. இவரை 'சத்ரு சம்ஹார பைரவர்' என்று அழைக்கிறார்கள். தேய்பிறை அஷ்டமியில் இவரை வணங்கினால் தீராத பிரச்சினைகளும் தீர்ந்து விடும். இந்த பைரவரை தரிசிக்க நாளுக்குநாள் கூட்டம் அதிகரித்து வந்ததன் காரணமாக, ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசிக்கும் வகையில், ஆள் உயர கண்ணாடி ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் வழியாகவும் பைரவரை தரிசிக்க முடியும்.

பொன்மலை விஜயராகவப் பெருமாள் கோவில்
தம்பதியர் குறை தீர்க்கும் பெருமாள்
திருச்சிராப்பள்ளி நகரில், பொன்மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது விஜயராகவப் பெருமாள் திருக்கோவில். கருவறையில் ராமபிரான், 'விஜயராகவப் பெருமாள் என்ற திருநாமத்தில் சேவை சாதிக்கிறார். பெருமாளின் இடது கரத்தில் வில்லும், வலது கரத்தில் அம்பும் உள்ளன. ராமபிரானின் வலதுபுறம் சீதா பிராட்டியாரும், இடதுபுறம் லட்சுமணனும், ராமரின் காலடி அருகே கரம் குவித்த நிலையில் ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கின்றனர்.
இங்கு பெருமாள் சீதா தேவியுடன் குடும்ப சகிதமாய் சேவை சாதிக்கிறார். அதனால், இவரை வணங்கும் பக்தர்களுக்கு, குடும்ப பிரச்சினைகள் யாவும் விரைந்து தீர்ந்துவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும், தம்பதிகளின் பிணக்குகள் நீங்கி மன ஒற்றுமை நிலவவும், தாமதமாகும் திருமணங்கள் தடையின்றி நடந்தேறவும், கிரகக் கோளாறுகள் நீங்கி மன மகிழ்வுடன் வாழவும் இத்தல இறைவன் அருள்புரிகிறார்.

நன்னிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்
அம்பிகை மெட்டி அணிந்திருக்கும் அபூர்வக் கோலம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி வட்டத்திலுள்ள நன்னிமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோவில். இத்தலம் திருச்சியிலிருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ளது. இறைவன் திருநாமம் சுந்தரேஸ்வரர். இறைவியின் திருநாமம் மீனாட்சி.
இக்கோவில் மகாமண்டபத்தின் இடதுபுறம், இறைவி மீனாட்சியின் சந்நதி உள்ளது. அம்பிகை முன்கை அபய முத்திரை காட்ட, மறு கையில் மலர் ஏந்தி நின்ற கோலத்தில், தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். அம்பிகையின் கால்கட்டை விரல்களில் மெட்டி அணிந்திருப்பது ஓர் அபூர்வமான காட்சி ஆகும். திருமணத்துக்காகக் காத்திருக்கும் இளம் வயதினர், அம்பிகையின் மெட்டி தரிசனம் கண்டால் வெகுவிரைவில் அந்த பாக்கியம் அருளப் பெறுகிறார்கள்.

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில்
சிங்காரவேலர் மயில் வாகனத்திலும், வள்ளி-தெய்வயானை யானை மேலும் எழுந்தருளியிருக்கும் அபூர்வக் கோலம்
சென்னையில், மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீசுவரர் கோவில், தேவாரப் பாடல் பெற்ற 32 தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானின் திருநாமம் சிங்காரவேலர். இவரை அருணகிரிநாதர் தம் திருப்புகழில் போற்றிப் பாடியுள்ளார்.
பொதுவாக கோவில்களில், முருகப்பெருமான் தனியாகவோ அல்லது வள்ளி தெய்வயானை சமேதராகவோ, மயில் மேல் எழுந்தருளியிருப்பார். ஆனால் இக்கோவிலில் சிங்காரவேலர்,தனியே மயில் வாகனத்திலும், வள்ளி தெய்வயானை தனித்தனியே யானை மேலும் எழுந்தருளியிருப்பது தனிச சிறப்பாகும்.
முருகப்பெருமான் சண்முகநாதராக அருள்பாலிக்கும் தலங்களில் எல்லாம் கிழக்கு நோக்கித்தான் காட்சி அளிப்பார்.ஆனால் மயிலாப்பூர் தலத்தில், சிங்காரவேலர் மேற்கு நோக்கி இருப்பது மேலும் ஓரு சிறப்பாகும்.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்
1.இரண்டு கொடிமரங்கள் அமைந்த தேவாரத்தலம்
https://www.alayathuligal.com/blog/8anclgmaxr8w2a5pf5edegy49bbare
2. மயிலாப்பூர் கற்பகாம்பாள்
https://www.alayathuligal.com/blog/m8l7sr9dl79d9zh4zr7m6lpapkg6ln

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்
கண்ணாடியில் தெரியும் முருகப்பெருமானின் பிம்பத்திற்கு அபிஷேகம்
திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவின் ஆறாம் நாளன்று வள்ளி, தெய்வானை இல்லாமல் முருகப்பெருமான் (உற்சவர் ஜெயந்திநாதர்) தனித்து கடற்கரைக்கு எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்வார். அதன்பின் வெற்றி வீரனாக வள்ளி, தெய்வயானை சகிதமாக ஜெயந்திநாதர் கோவில் யாக சாலைக்குத் திரும்புவார்.
அப்போது ஜெயந்திநாதரின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படும். அர்ச்சகர் கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வார். இதை சாயாபிஷேகம் என்பர். 'சாயா' என்றால் 'நிழல்' எனப்பொருள். போரில் வெற்றி பெற்ற முருகனை குளிர்விக்கும் விதமாக அபிஷேகம் நடக்கும். இதை முருகப்பெருமானே கண்ணாடியில் கண்டு மகிழ்வதாக ஐதீகம். இந்நிகழ்ச்சிக்குப்பின் முருகன் சன்னதிக்கு திரும்புவார். அத்துடன் சூரசமஹாரம் நிகழ்ச்சி முடிவடையும்.
சென்ற ஆண்டு கந்தசஷ்டி ஆறாம் நாளன்று வெளியான பதிவு
கடத்தப்பட்ட தன் விக்ரகத்தை கடலில் கண்டெடுக்க உதவிய கந்தப் பெருமான்
https://www.alayathuligal.com/blog/4j4mmh5t7prma3y4ahpf9a68zyh9ex.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்
தீபாவளிக்கு இந்திரன், தன் மருமகன் முருகப்பெருமானுக்கு புத்தாடை வழங்கும் தலம்
அறுபடை வீடுகள் எனப்படும் முருகப்பெருமானின் சிறப்புக்குரிய கோயில்கள் தமிழகத்தில் பழனி, திருச்செந்தூர், திருத்தணி, சுவாமிமலை, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை என ஆறு ஊர்களில் அமைந்திருக்கின்றன. இவ்வாறு கோயில்களில் ஐந்து கோயில்கள் மலை மீது அமைந்திருக்க திருச்செந்தூர் மட்டும் கடற்கரையை ஒட்டி அமையப் பெற்ற சிறப்பை கொண்டிருக்கிறது. முருகப்பெருமானுடன் அவரது தளபதி வீரபாகு மற்றும் படைவீரர்கள் தங்கியிருந்த படைவீடுதான் திருச்செந்தூர் ஆகும்
வால்மீகி ராமாயணத்தில் இத்தலம் கபாடபுரம் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதிலிருந்து இக்கோவிலின் பழமையை நாம் அறியலாம். இங்கிருக்கும் முருகப்பெருமான் செந்திலாண்டவர் என அழைக்கப்படுகிறார். இங்கு சூரபத்மனை போரில் ஜெயித்ததால் முருகன் 'செயந்தியாண்டவர்' என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் 'செந்திலாண்டவர்' என மருவியது. அது போல் இக்கோவில் இருக்கும் ஊரும் 'திருசெயந்தியூர்' என்பதிலிருந்து 'திருச்செந்தூர்' என்று மாறியது.
திருச்செந்தூர் கோவிலில் அனைத்து சுவாமிகளுக்கும் தீபாவளியன்று புத்தாடை அணிவிக்கப்படுகிறது. அன்று அதிகாலையில் இக்கோவிலில் உள்ள அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் சந்தன காப்பு செய்யப்படுகிறது. பின் புத்தாடைகளை வெள்ளி பல்லக்கில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்று, அணிவிக்கின்றனர். இதை, தெய்வானையை, முருகன் மணம் முடிக்க காரணமாக இருந்த தலம் என்பதால், தெய்வயானையின் தந்தையான இந்திரன் இத்தலத்தில் மருமகன் முருகப்பெருமானுக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் தீபாவளிக்கு புத்தாடை எடுத்து தருவதாக ஐதீகம்.
கந்தசஷ்டி விழா
கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார், தேவர்கள், அசுரர்களை எதிர்க்கும் வல்லமை பெறவும், அவரது அருள் வேண்டியும் ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருளச்செய்து, நோன்பு இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள்செய்தார். இதனை நினைவுறுத்தும் விதமாகவே ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நடந்தது. எனவே, இதனை நினைவுறுத்தும் விதமாகவே ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி விழா இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. திருச்செந்தூரில் கந்தசஷ்டி முதல் ஆறுநாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த 5 நாட்கள், சுவாமி திருக்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை என இவ்விழா 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்
ஊமைக் குழந்தையை பேச வைத்த செந்திலாண்டவன்
குமரகுருபரர் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெருந் தமிழ்ப் புலவர். இவர் சைவ நெறியைப் போற்றிய தருமபுரம் ஆதீனத்துடன் தொடர்புடையவர் ஆவார். இவரது நூல்கள் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் பிரபந்தங்கள் என்னும் பெயரில் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
இவர் தமிழ்நாட்டுத் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருவைகுண்டம் என்னும் ஊரில் சைவ வெள்ளாளர் குலத்திலே சண்முக சிகாமணிக் கவிராயருக்கும், சிவகாம சுந்தரிக்கும் மகனாகப் பிறந்தார். இளம்வயதில் வாய் பேச முடியாத நிலையில் இருந்தார். குழந்தையைப் பேச வைக்க வேண்டும் என ஆசைப்பட்ட பெற்றோர்கள் குமரகுருபரருக்கு ஐந்து வயது நிரம்பியதும் அவரைத் திருச்செந்தூர் அழைத்து வந்தனர். பின்னர் அவர்கள் 48 நாட்கள் விரதம் மேற்கொண்டனர். விரதத்தை முடித்தபின்பும் அவர்கள் வேண்டியது கிடைக்கவில்லை.
எனவே, குமரகுருபரரின் பெற்றோர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர். 'இனி உயிரோடு இருந்து எந்தப் பலனுமில்லை. மூவரும் திருச்செந்தூர் கடலில் விழுந்து உயிரைப் போக்கிக் கொள்ள வேண்டும்' என எண்ணி கடற்கரை அருகே வந்தார்கள்.
திருச்செந்தூர் முருகன் கோவில் அருகிலுள்ள கடலருகே வந்து உயிரைவிட முயன்றனர். அந்த நேரத்தில் ஒரு அர்ச்சகர் வடிவத்தில் முருகப்பெருமான அவர்கள் முன்பு தோன்றினார். 'கடலில் விழுந்து உயிரைவிட முடிவு செய்துவிட்டீர்களே! அது ஏன்?' என்று கேட்டார் அர்ச்சகர்.
'அய்யா எங்களுக்கு குழந்தை பிறந்து 5 வருடங்கள் ஆகிவிட்டது. இந்தக் குழந்தை இன்னும் வாய் திறந்து பேச முடியாமல் இருக்கிறது. நாங்கள் பல விரதங்கள் இருந்து பார்த்துவிட்டோம். ஆனால் முருகப்பெருமான் எங்கள்மீது இரக்கம் காட்டி குழந்தையை இன்னும் பேச வைக்கவில்லை. நாங்கள் உயிரினும் மேலாக நேசிக்கும் இந்தக் குழந்தை பேசும் சக்தி இழந்ததை எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவேதான் நாங்கள் உயிரைவிட முயன்றோம்' என்றனர்.
அர்ச்சகர் வடிவிலிருந்த முருகப்பெருமான், 'என் கையில் உள்ளது எது?' என குமரகுருபரரிடம் கேட்டார். அர்ச்சகர் கேள்விக்கு உடனே பதில் சொன்னார். குழந்தையான குமரகுருபரர். 'இது... பூ...' என்று சொல்லிக்கொண்டே 'பூமேவு செங்கமல' எனத் தொடங்கி முருகன்மீது பக்திகொண்டு பாடல்களைப் பாட ஆரம்பித்தார். கந்தர்கலி வெண்பாவைக் குழந்தையான குமரகுருபரர் பாடினார்.
மதுரை மீனாட்சி அம்மன் பரிசாக அளித்த முத்துமாலை
இவர் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் வேண்டுகோளுக்கு இணங்க மதுரை மீனாட்சி அம்மனைப் போற்றி மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்னும் நூலை இயற்றினார். ஒரு சமயம், இந்த நூலில் உள்ள 'வருகைப்பருவம்' என்னும் பகுதியை கோவில் மேடையில் அமர்ந்தவாறு பாடிய போது மதுரை மீனாட்சி அம்மனே சிறு பெண் வடிவத்தில் வந்து குமரகுருபரருக்கு முத்து மாலை பரிசளித்ததாக வரலாறு உள்ளது. மேலும் மீனாட்சி அம்மனைப் போற்றி மதுரைக் கலம்பகம், மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், நீதி நெறி விளக்கம் போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார். பின்னர் திருவாரூர் சென்று அங்குள்ள தியாகராச பெருமானைப் போற்றித் 'திருவாரூர் நான்மணி மாலை' என்னும் நூலை இயற்றினார்.
சென்ற ஆண்டு கந்தசஷ்டி விழா நான்காம் நாளன்று வெளியான பதிவு
ஆதி சங்கரரின் காச நோயை குணப்படுத்திய திருச்செந்தூர் முருகன்
https://www.alayathuligal.com/blog/nlxf623gs25b7ycgh6tf5j8n8mjcdl

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்
திருச்செந்தூர் - சிறந்த குரு பரிகாரத் தலம்
ஆறுமுகப்பெருமானின் ஆறுபடைவீடுகளில், இரண்டாம் படைவீடான திருச்செந்தூர், குரு பகவானுக்குரிய தலங்களில் பிரதான தலமாகவும், குரு பகவான் தொடர்பான பரிகாரத் தலமாகவும் விளங்குகின்றது.
முருகப் பெருமான் போரிடச் செல்லும் முன், அசுரர்களைப் பற்றிய வரலாற்றை, குரு பகவான் முருகனிடம் விளக்கிய தலமாக திருச்செந்தூர் விளங்குகின்றது. குருவின் விளக்கத்தால் முருகப் பெருமான், அசுரர்களிடம் போரிட்டு சூரபத்மன், சிங்கமுகாசுரன், தாரகாசுரன் ஆகியோரை சம்ஹாரம் செய்து அவர்களை தம் பக்தர்களாக ஆட்கொண்டார். சூரபத்மனுடன் நடந்த போரில் வெற்றி பெற காரணமாக இருந்த குருபகவானுக்கு மரியாதை செலுத்தும் விதமாக திருச்செந்தூர் கோவிலில் முருகர் ஞான குருவாக வீற்றிருக்கிறார். அவருக்கு செய்யும் வழிபாடு முறைகள் அனைத்தும் குரு பகவானுக்கும் செய்ய வேண்டும் என்று அருள் புரிந்தார். இதன் காரணமாக திருச்செந்தூர் முருகனை வணங்கினால், குரு பகவானால் ஏற்படக் கூடிய சிக்கலிலிருந்து தப்பிக்கக் கூடிய பரிகாரத் தலமாக விளங்குகின்றது.
திருச்செந்தூர் பிரகாரத்தில் உள்ள மேதா தட்சிணாமூர்த்தியும் விசேஷமானவர். இவரின் வலது கையில் சிவபெருமானுக்குரிய ஆயுதமான மழுவும், இடக்கையில் மானும் உள்ளது. இவருக்குப் பின்புறமுள்ள கல்லால மரத்தில் நான்கு வேதங்களும், கிளி வடிவில் உள்ளது. மேதா தட்சிணாமூர்த்தி கூர்மம், அஷ்ட யானைகள், அஷ்ட நாகங்கள், மேதா மலை என 4 நான்கு ஆசனங்களின் மீது அமர்ந்திருக்கின்றார். தட்சிணாமூர்த்தியின் இத்தகைய அமைப்பை வேறெங்கும் காண முடியாது.
ஒருவருடைய ஜாதகத்தில் குருவின் கோட்சார நிலை வலுவிழந்து காணப்படும் பொழுது திருமணத்தில் தடை மற்றும் வாழ்க்கையில் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். இதனை நிவர்த்தி செய்வதற்கு திருச்செந்தூரில் இருக்கும் குருபகவானை வழிபட்டு செல்வதால் நல்ல பலன் காணலாம். குரு பகவானால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள குருவிற்குரிய பரிகாரங்கள் இத்தலத்தில் மேற்கொள்ளப்படுகிறது. அதனால் தான் திருச்செந்தூர் முருகனுக்குரிய ஸ்தலமாக மட்டுமல்லாமல், குரு ஸ்தலமாகவும் பார்க்கப்படுகிறது. குரு தோஷம் உள்ளவர்கள், குரு பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் அவசியம் ஒருமுறையாவது சென்று வரவேண்டிய தலம் திருச்செந்தூர் ஆகும். குருதிசை, குருபுத்தி நடப்பில் உள்ளவர்கள் மற்றும் குரு தோஷத்தால் பாதிக்கப்பட்டு, முன்னேற இயலாத நிலையில் இருப்பவர்கள் இங்கு வந்து தரிசனம் செய்யலாம்.
சென்ற ஆண்டு கந்தசஷ்டி விழா மூன்றாம் நாளன்று வெளியான பதிவு
இஸ்லாமிய பக்தரின் கடனை அடைத்த செந்திலாண்டவன்
https://www.alayathuligal.com/blog/xrm49wlwbzfd52blj8fa27wcgyw8cs

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்
முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து வணங்கிய பஞ்சலிங்கம்
ஆறுமுகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், முருகப்பெருமான் நின்ற திருக்கோலத்தில் கையில் தாமரை மலர் ஏந்தி சிவ பூஜை செய்யும் திருக்கோலத்தில் காட்சித் தருகிறார். இத்தலத்தில் முருகப்பெருமான், சூரபத்மனுடன் போரிட்டு அவனை சம்ஹாரம் செய்து ஆட்கொண்டு தேவர்களை காத்து நின்றார்.
அசுரர் படைகளை சம்ஹாரம் செய்த பாவம் நீங்க, முருகப்பெருமான் கடற்கரையில் ஐந்து லிங்கங்களை பிரதிஷ்டை செய்து சிவ பூஜை செய்தருளினார். முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து வணங்கிய அந்த ஐந்து லிங்கங்களும் இன்றும் பஞ்சலிங்கம் என்ற பெயரில் இங்குள்ள மூலவர் கருவறைக்கு பின்னர் தனி அறையில் காட்சியளிக்கிறது. சன்னதியை அடைய கருவறைக்கு அருகில் உள்ள நுழைவாயிலின் வழியாக செல்ல வேண்டும். இந்த லிங்கங்கள் உள்ள இடத்தைப் பாம்பறை என்கின்றனர். இங்குள்ள மேடையில் ஐந்து லிங்கங்கள் வரிசையாக உள்ளன. இந்த லிங்கங்களுக்கு, ஆவுடையார் என்னும் சக்தி பாகம் இல்லை. உருத்திர பாகமான மேல் பகுதி மட்டுமே உள்ளது. இந்த பஞ்சலிங்கங்களுக்கு நேராக மேலே துளை இருக்கிறது. நாள் தோறும் நள்ளிரவில் தேவர்கள் இவ்வழியாக வந்து இந்தப் பஞ்சலிங்கங்களைப் பூசிப்பதாக கூறுகின்றனர். இந்த லிங்கங்களை நாள்தோறும் தேவர்களும், முருகனும் பூசிப்பதால், இவற்றிற்கு மானிடர் பூசையில்லை. குடமுழுக்கின்போது மட்டும் இந்த பஞ்சலிங்கங்களுக்கென யாகசாலை அமைத்து, வேள்வி புரிந்து வேள்விக் கலச நீரால் அபிஷேகம் செய்கின்றனர்.
.இந்த பஞ்சலிங்கங்களை நாம் தரிசித்து வணங்கினால் நம் முன்வினை பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சென்ற ஆண்டு கந்தசஷ்டி விழா இரண்டாம் நாளன்று வெளியான பதிவு
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் திருச்செந்தூர் இராஜகோபுரம்
https://www.alayathuligal.com/blog/ddkah4agj82ztwy3nemsacm73aea84

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்
திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா
முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று திருச்செந்தூர் தலத்தில் வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. சூரசம்ஹாரம் திருச்செந்தூரில் நிகழ்ந்ததால், கந்த சஷ்டி திருவிழா இத்தலத்தில் 12 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
பல முருகத் தலங்களில் கந்தசஷ்டி விழா ஆறு நாட்களே நடைபெறும்.சில தலங்களில் முருகப்பெருமான் திருக்கல்யாண வைபவத்துடன் சேர்த்து ஏழு நாட்கள் நடைபெறும். ஆனால், திருச்செந்தூரில் கந்தசஷ்டி முதல் ஆறு நாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம், ஏழாம் நாள் முருகப்பெருமான்-தெய்வயானை திருக்கல்யாணம், அடுத்த ஐந்து நாட்கள் திருக்கல்யாணக் கோலத்தில் முருகப்பெருமானின் ஊஞ்சல் சேவை என இவ்விழா பன்னிரெண்டு நாட்கள் நடைபெறும்.
சுந்தசஷ்டி கொண்டாடுவதற்கான காரணங்கள்
சூரபத்மன் வரதம் தவிர்த்து சுந்தசஷ்டி விழா கொண்டாடப்படுவதற்கு வேறு இரண்டு காரணங்கள் இருப்பதாக மகாபாரதம்,சுக்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.ஒருசமயம் முனிவர்கள் சிலர் உலக நன்மைக்காக ஒரு புத்திரன் வேண்டுமென்பதற்காக யாகம் ஒன்று நடத்தினர். ஐப்பசி மாத அமாவாசையன்று யாகத்தை துவக்கி ஆறு நாட்கள் நடத்தினர் யாககுண்டத்தில் எழுந்த தீயில் இருந்து, ஒவ்வொரு நாளும் ஒரு வித்து வீதமாக ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன. அந்த வித்துக்களை ஆறாம் நாளில் ஒன்றாக்கிட முருகப்பெருமான் அவதரித்தார். இவ்வாறு முருகன் அவதரித்த நாளே கந்தசஷ்டி என மகாபாரதம் கூறுகிறது.
கந்தப்புராணத்தில், கச்சியப்ப சிவாச்சாரியார், தேவர்கள் அசுரர்களை எதிர்க்கும் வல்லமை பெறவும், அவரது அருள் வேண்டியும், ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுக்கருளச் செய்து, நோன்பு இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள்செய்தார். இதனை நினைவுறுத்தும் விதமாகவே ஐப்பதி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது என்கிறார்.
சென்ற ஆண்டு கந்தசஷ்டி விழா முதல் நாளன்று வெளியான பதிவு
திருசெந்தூர் முருகன் கோவில் பன்னீர் இலை விபூதியின் சிறப்பு
https://www.alayathuligal.com/blog/f2mfw7jgfymnjwlsgtysg9y23rg436

வில்வவனேஸ்வரர் கோயில்
திருஞானசம்பந்தர் பதிகம் பாடி ஓடம் செலுத்திய தேவாரத் தலம்
கும்பகோணத்தில் இருந்து தெற்கே 20 கி.மீ. தூரத்தில் உள்ள தேவாரத் தலம், திருக்கொள்ளம்புதூர் . கும்பகோணத்திலிருந்து கொரடாச்சேரி செல்லும் வழியில் செல்லூரில் இறங்கி சுமார் ஒரு கி.மீ.. சென்றால் இத்தலத்தை அடையலாம். இறைவன் திருநாமம் வில்வாரண்யேஸ்வரர். இறைவி சௌந்தரநாயகி. இத்தலத்தில் திருஞானசம்பந்தர் அடியவரோடு ஓடம் ஏறி அதனைப் பதிகம் பாடிச் செலுத்தி மறுகரை அடைந்தார். இங்கு ஆற்றின் எதிர்க்கரையில் திருஞானசம்பந்தருக்கு திருக்கோயில் அமைந்துள்ளது.
பல சிவத்தலங்களை தரிசித்து பாடி வந்த திருஞானசம்பந்தர், இத்தலம் வரும் போது வழியில் உள்ள வெட்டாறில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் ஓடம் ஓட்டுபவர்களால் ஓடம் செலுத்த முடியாமல் ஆற்றின் கரையிலேயே ஓடத்தை விட்டு சென்றனர். ஆனால் சிவனை தரிசிக்காமல் செல்ல கூடாது என்பதில் தீவிரமாக இருந்தார் சம்பந்தர். எனவே ஆற்றின் கரையில் இருந்த ஓடம் ஒன்றை அவிழ்க்க செய்து அதன் மீது தன் அடியவர்களுடன் ஏறினார். தமது நாவையே ஓடக்கோலாக கொண்டு, "கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர் நட்டமாடிய நம்பனை யுள்கச் செல்வுந்துக சிந்தை யார்தொழ நல்கு மாறரு ணம்பனே' எனும் திருப்பதிகம் பாடினார். இறைவனின் திருவருளால் ஓடம் ஆற்றின் மறுகரையை அடைந்தது. திருஞான சம்பந்தர் கோயிலை அடைந்து மீதி பதிகங்ளை பாடி இறைவனை வழிபட்டு, அங்கேயே தங்கினார் என்பது வரலாறு.
ஐப்பசி அமாவாசைக்கு மறுநாள் நடக்கும் ஓடத்திருவிழா
ந்த ஓடத்திருவிழா ஆண்டு தோறும் ஐப்பசி அமாவாசைக்கு மறுநாள் சிறப்பாக நடக்கிறது. இந்த ஆற்றை மக்கள் வழக்கில் ஓடம்போக்கி ஆறு என்று வழங்குகின்றன ர்.ஐந்து நிலை கோபுர வாயில் வழியே நுழைந்ததும் காணும் மண்டபத்திலுள்ள வலப்பக்க கற்தூணில் சம்பந்தர் ஓடம் ஏறிச் செலுத்தும் சிற்பம் உள்ளதைக் காணலாம்.
சித்த சுவாதீனம் உள்ளவர்கள் இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபாடு செய்வது சிறப்பு. துலா மாதத்தில் அமாவாசை உதித்த முதல் பாதத்தில் நீராடி வழிபட்டால் வேண்டும் சித்திகளையும், வலிமையையும் பெறுவர்.

தலத்தின் தனிச்சிறப்பு
முக்தி தரும் தலங்கள்
வைணவ மார்க்கத்தில் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் திருவடியை அடைய 108 திருப்பதிகள் உள்ளன. அது போலவே சைவ மார்க்கத்தில் சிவபெருமானின் திருவடியை அடைய சில சிவாலயங்கள் உள்ளன. நாம் பூமியில் பிறந்து, இல்லற வாழ்வில் ஈடுபட்டு பின்பு, முக்தி என்னும் இறைவனின் திருவடியை அடைய வேண்டும் என்பது இந்து சமயச் சான்றோர்களின் வாக்காகும். அவ்வாறு நாம் பிறப்பு என்னும் பற்றறுத்து, முக்தி என்னும் வீடுபேறு நிலையை அடைவதற்கான தலங்களை இங்கே பார்க்கலாம்.
பிறக்க முக்தி-திருவாரூர்
திருவாரூர் நகரில் ஒருவர் பிறந்துவிட்டாலே முக்தியடைந்து விடலாம் என்ற சிறப்பு கொண்ட தலமாக உள்ளது. இந்தத் திருவாரூர் மண்ணில் ஒரு ஜீவன் பிறந்தாலே நிச்சயமாக அந்த ஜீவனுக்கு முக்தி கிடைக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை ஒவ்வொரு இந்துவுக்கும் உண்டு.
வாழ்ந்தால் முக்தி-காஞ்சிபுரம்
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது போல், திரும்பும் திசையெல்லாம் கோவில்களாகவே காட்சியளிப்பதால், கோவில்கள் நகரம் என்று காஞ்சிபுரம் அழைக்கப்படுகிறது. நகரங்களில் சிறந்தது காஞ்சிபுரம் என்று மகாகவி காளிதாசர் பாடியிருக்கிறார். இன்னும் எவ்வளவோ சிறப்புகள் காஞ்சி மாநகருக்கு உள்ளன. இவ்வாறு பல சிறப்புகள் வாய்ந்த காஞ்சியில் வாழ்ந்தாலே ஒரு ஜீவனுக்கு நிச்சயம் முக்தி கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.
தரிசிக்க முக்தி- சிதம்பரம்
பஞ்ச பூத திருத்தலங்களில் ஆகாய தலமாகவும், பஞ்ச சபைகளில் பொன் சபையாகவும் விளங்குவது சிதம்பரம். தில்லை நடராஜர் கோயில். உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பாலயம் என்று திருமந்திரம் அருளிய திருமூலதேவர் சொன்னதைப் போல் மனித உடம்பும், கோயிலும் ஒன்றே என்பதை காட்சிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது இக்கோயில். நம்முடைய உடம்பானது, அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து வகையான கோசங்களைக் கொண்டது. அதை உணர்த்தும் விதத்தில் இக்கோயிலும் ஐந்து திருச்சுற்றுக்களை கொண்டுள்ளது. நவீன விஞ்ஞானத்தின் அத்தனை ஆச்சரியங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள இக்கோயிலுக்கு வந்து தரிசித்த உடனேயே முக்தி கிடைக்கும் என்பது இந்துக்களின் அதீத நம்பிக்கையாகும்.
நினைக்க முக்தி- திருவண்ணாமலை
படைப்பு கடவுளான பிரம்மாவுக்கும், காக்கும் கடவுளான ஸ்ரீமகாவிஷ்ணுவுக்கும் இடையில் யார் பெரியவர் என்ற போட்டி எழுந்த போது, சிவபெருமான், தானே ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதி என்பதை அனைவருக்கும் உணர்த்தவேண்டி நெருப்பு பிளம்பாக தோன்றி காட்சி கொடுத்த தலம் திருவண்ணாமலை ஆகும். பஞ்சபூத தலங்களில் தேயு என்னும் நெருப்பு தலமாக விளங்குகிறது. சிவபெருமான் அருணாச்சலேஸ்வரராக மலை உருவில் காட்சியளிக்கும் இங்கு ஏராளமான சித்தர்கள் இன்றைக்கும் அரூபமாக மலையை வலம் வருவதாக நம்பிக்கை. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இத்தல இறைவனை தரிசிக்க நாம் இங்கு நேரில் வரவேண்டிய அவசியமில்லை. அண்ணாமலைக்கு அரோகரா என்று இருக்கும் இடத்தில் இருந்து பக்திப் பெருக்கோடு வேண்டிக் கொண்டாலே நமக்கு முக்தி கிடைக்கும் என்வது இந்துக்களின் நம்பிக்கையாகும்.
தீர்த்தமாட முக்தி- திருமறைக்காடு
வேதங்களால் அடைக்கப்பட்ட திருக்கதவினை திருநாவுக்கரசர் பதிகம் பாடி திறக்கவும், திருஞானசம்பந்தர் பதிகம் பாடி அடைக்கப்படவும் பெருமை பெற்ற தலமாகும். இவ்வூரின் இன்றைய பெயர் வேதாரண்யம் என்பதாகும். இங்குள்ள தீர்த்தம் வேத தீர்த்தம் ஆகும். நான்கு வேதங்களும் ஆரண்யங்களாக இங்கு வந்து இத்தல தீர்த்தத்தில் நீராடி தவம் செய்து காரணத்தால் இத்தல இறைவனுக்கு வேதாரண்யேஸ்வரர் என்றும் தீர்த்தத்திற்கு வேத தீர்த்தம் என்றும் பெயர் ஏற்பட்டது. ஆகவே, இங்கு வந்து இத்தீர்த்தத்தில் நீராடினாலே நமக்கு முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.
சொன்னால் முக்தி- திருவாலவாய்
மதுரை நகரின் மற்றொரு பெயர் திருவாலவாய் ஆகும். சுமார் ஐயாயிரம் ஆண்டுகளாக மாறாமல் இருக்கும் ஒரே நகரம் இதுதான். மதுரை மாநகரின் மையத்தில் அமைந்துள்ளது அன்னை மீனாட்சியம்மன் உடனுறை சொக்கநாதர் ஆலயம். அன்னை மீனாட்சியம்மனை இங்குள்ள மக்கள் மட்டுமல்லாமல், சுற்றுவட்டார மக்கள் அனைவரும் தங்களின் அன்னையாகவே கருதி வழிபட்டு வருகின்றனர். , இங்கு வந்து இக்கோயிலில் உள்ள தல மரத்தை 108 முறை வலம் வந்து, திருவாலவாய சுவாமியை மனதில் நினைத்து மனமுருகி வேண்டினால் மரண பயம் நீங்கி முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.
கேட்க முக்தி- அவினாசி
தேவரப் பாடல் பெற்ற கொங்கு நாட்டு சிவாலயங்களில் முக்கியமான தலம் அவினாசி அவினாசிலிங்கேஸ்வரர் ஆலயம். அவிநாசி என்பதற்கு என்றும் அழியாத என்று பொருள். இத்தல இறைவனை மனமுருகி வேண்டிக் கேட்டால் நாம் கேட்கும் வரத்தை தருவார் என்பது ஐதீகம். சமயக்குரவர்களில் ஒருவரான சுந்தரர் இக்கோயிலுக்கு வந்து இத்தல இறைவனை மனமுருகி வேண்டி கேட்க, அதனால் மனம் உருகிய இறைவன், முதலை விழுங்கிய சிறுவனை மீட்டுக் கொடுத்த தலம் ஆகும். எமன் வாயில் சென்றவனைக் கூட இத்தல இறைவன் மீட்டுத் தருவார் என்பதால், நாம் கேட்கும் வரத்தை அளிக்கும் முக்தி தலம் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
இறக்க முக்தி – வாரணாசி
சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட வரலாற்றுப் பெருமையைத் தன்னகத்தே கொண்டது, காசி என்னும் வாரணாசி நகரம். இந்நகரத்தை சிவபெருமானே உருவாக்கினார் என்பது இந்துக்களின் அதீத நம்பிக்கையாகும். வருணா-ஆசி என்னும் இரண்டு நதிகள் சங்கமமாகும் இடம் என்பதால் வாரணாசி என்ற பெயர் ஏற்பட்டது. காசி என்றால் ஒளி என்று அர்த்தம். நாம் வாழும் போது மட்டுமில்லாமல் நாம் இறந்த பின்னும் பிறவா நிலை என்னும் முக்தியை அளிக்கும் நகரமாக அமைந்துள்ளது. காசியில் இறந்தால் சொர்க்கம் செல்வார்கள் என்பது ஐதீகம். அதனால் இங்கு இறக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் மரணம் நேரும்போது சிவபெருமானே அவற்றின் காதுகளில் ராமநாமத்தை ஓதி முக்தி அளிக்கிறார் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.

மங்கள சனீஸ்வரர் கோவில் (என்ற) சங்கர நாராயணர் கோவில்
சனீஸ்வர வாசல்
திருவாரூரில் இருந்து கங்களாஞ்சேரி வழியாக நாகூர் செல்லும் வழியில் சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் காரையூர். இறைவன் திருநாமம் சங்கர நாராயணர். இறைவி நாராயணி அம்பாள். மந்தன், சாயாபுத்திரன், நீலன், காரி என்ற பெயர்களைக் கொண்ட சனிபகவான் இந்த ஸ்தலத்தில் தங்கியதால் காரையூர் என்ற காரணப்பெயருடன் மக்களது சொல்வழக்கில் அழைக்கப்படுகிறது.
கும்பகோணத்திற்கு வரும்போது காவிரி, அரசலாறு, வெட்டாறு என இரண்டாகப் பிரிந்து பாய்கிறது. இதில் வெட்டாறு, திருவாரூர் மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் கங்கனாஞ்சேரி என்ற ஊரில் வடக்கிலிருந்து தெற்காக வளைந்தோடுகிறது. விருத்தம் என்ற சொல்லுக்கு வட்டம், வளைப்பது என்று பொருள். இத்தலத்தில் சூரியமைந்தனாகிய சனிபகவானது அபூர்வமான கானகப்பகுதியை, வளைத்தபடி வருவதால் 'விருத்த கங்கா' என்று பெயர் பெறுகிறது.
ஒருமுறை, நளமகாராஜனைப் பிடிப்பதற்காக திருநள்ளாறு நோக்கிப் புறப்பட்டார் சனி பகவான். திருநள்ளாறை அடைய வெகு தூரம் இருக்கும் நிலையில், இருள்கவியத் தொடங்கி விட்டது. எனவே, சனி பகவானின் காக வாகனத்துக்குப் பார்வை மங்க ஆரம்பித்தது. வழியில் எங்கேனும் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது, பூமியில் சிவாலயம் ஒன்று தென்படவே, அந்த இடத்திலேயே தரையிறங்கினார் சனிபகவான்.
இரவில் அங்கு தங்கியிருந்தவர் காலையில் எழுந்தபோது, கோயிலின் எதிரில் விருத்தகங்கா பாய்வதைக் கண்டார். தனது வாகனத்துடன் அதில் நீராடி, அந்தத் தலத்தில் கோயில் கொண்டிருந்த சங்கரநாராயணரையும் நாராயணி அம்பாளையும் வழிபட்டு மகிழ்ந்தார். இங்ஙனம், சனி பகவான் தங்கி வழி பட்டதால், 'சனீஸ்வர வாசல்' என்ற திருப் பெயர் கிடைத்தது. சிவபெருமான் என்ற மங்களனை, சனிபகவான் இத்தலத்தில் வழிபட்டதால் அவருக்கு மங்கள சனீஸ்வரன் என்ற பெயர் ஏற்பட்டது.
விதியையும் மாற்றும் சனீஸ்வரர்
நவக்கிரகங்களோடு நிற்கும்போது மேற்கு முகம் பார்த்தவராக அருள்தரும் சனி, இத்தலத்தில் கிழக்குமுகமாக நின்று, நதியில் நீராடி வருவோருக்கு மங்களகரமான பார்வையைத் தருகிறார் என்கிறது தலவரலாறு. தொழில், வியாபார முயற்சிகளில் தடைகள் இருப்பின் ஞாயிறு மற்றும் அமாவாசை தினங்களில் வந்து விருத்த கங்காவில் நீராடி நீலக்கரை வேஷ்டி தானம் செய்து சனீஸ்வரனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனையை நீலமலரால் செய்து எள் சோறு, வெண்பொங்கல் படைத்திட நன்மைகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது.
மாங்கல்ய தோஷ நிவர்த்தி தலம்
சனிக்கிழமை அல்லது ஜென்ம நட்சத்திர திருநாளில் காலையில் இந்த திருத்தலத்துக்கு வந்து, நல்லெண்ணெய் தேய்த்து 'விருத்தகங்கா’ நதியில் நீராடி, நீல வண்ண கரை இடப்பட்ட வஸ்திரத்தை வேதம் அறிந்தவருக்கு தானம் செய்வதுடன், நீல மலரால் சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்து, எள் அன்னம் படைத்து, சனி கவசம் மற்றும் ஷோடச நாம துதி படித்து வழிபடுவதால், மாங்கல்ய தோஷங்கள் விலகும்.
சனி தோஷம் நீக்கும் தலம்
பொதுவாக, மனிதர்களின் ஆயுள்காலத்தில் மங்கு சனி, பொங்கு சனி, மரணச் சனி என மூன்று முறை சனிபகவான் வந்து செல்வார். அவர் அமர்கின்ற இடத்தின்படி ஆயுள் நீட்டிப்பைத் தருவார் என ஞானநூல்கள் தெரிவிக் கின்றன. ஒருவேளை, சனியின் பாதிப்பால் ஆயுள் பலத்தில் பங்கம் இருந்தால், இந்தத் தலத் துக்கு வந்து, சனி பகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, வன்னி இலைகளால் அர்ச்சனை செய்து, எள் முடிப்பு தீபம் ஏற்றி, சனிக் கவசமும், ஷோடச நாமாவளியும் படித்து வணங்குதல் வேண்டும். இதனால் ஆயுள் பலம் நீடிக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
Comments (0)Newest First

காஞ்சிபுரம் கனக துர்கா கோவில்
பழ அபிஷேகம் செய்தால் நற்பலன்கள் தரும் கனக துர்கா
காஞ்சிபுரத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் ஏனத்தூர் சாலையில் கோனேரி குப்பம் என்ற இடத்தில் கனக துர்கா கோவில் அமைந்துள்ளது.
இக்கோவில் கருவறையில், கனக துர்கா அமர்ந்த கோலத்தில் தனது இடது காலை மகிஷாசுரனின் தலை மீதும் வலது காலைத் தரையில் ஊன்றியும் காட்சித் தருகின்றாள். கனக துர்கையின் வலதுபுறம் சிங்கமும் இடது புறம் பூத கணமும் இருக்கிறார்கள். தன் கைகளில் சங்கு, சக்கரம்,திரிசூலம்,வில், பாசம், அம்பு,வாள், கேடயம் ஏந்தி இருக்கின்றாள்.
கனக துர்கா அம்மனை வழிபடும்போது, பழங்களால் அபிஷேகம் செய்தால் சிறந்த பலன் கிடைக்கும். வாழைப்பழ அபிஷேகம் செய்தால் சாகுபடி செய்த பயிர்கள் நல்ல மகசூல் தரும். பலாப்பழ அபிஷேகம் செய்தால்... நினைத்தது நடக்கும். மாம்பழ அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டும். மாதுளம்பழ அபிஷேகம் செய்தால் கோபம் தீரும். எலுமிச்சம்பழம் அபிஷேகம் செய்தால் பகைவர் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை. நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் துன்பம் நீங்கி இன்பமுடன் வாழ கனக துர்கா அம்மன் அருள் புரிவாள் என்பது ஐதீகம்..

கைலாசநாதர் கோவில்
நந்திமீது அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி
மதுரையில் இருந்து 33 கி.மீ. தூரத்திலும் உசிலம்பட்டியில் இருந்து 15 கி.மீ. தூரத்திலும் உள்ள தலம் திடியன்மலை. இறைவன் திருநாமம் கைலாசநாதர் . இறைவி பெரிய நாயகி.
இத்தலம்1000 வருடத்திற்கு மேல் பழைமையானது. இந்தக் கோவில் 'தென்திருவண்ணாமலை' என்று அழைக்கப்படுகிறது. திருவண்ணாமலை போய் கிரிவலம் வர முடியாதவர்கள், இங்கு கிரிவலம் வந்தால் திருவண்ணாமலையில் செய்த புண்ணியம் கிடைக்குமாம்.
காயத்ரி மந்திரத்துக்கு மூல வடிவம் கொடுத்த ஞானகுரு தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கும் தலங்களில் முக்கியமான தலமாக இத்தலம் திகழ்கிறது.
பொதுவாக தட்சிணாமூர்த்தி, சனகாதி முனிவர்களுடன் காட்சி கொடுப்பார். ஆனால், இந்தத் தலத்தில் 14 சித்தர்களுடன் நந்திவாகனத்தில் வீராசனத்துடன் (யோகம்) தரிசனம் தருவது மிகவும் விஷேசம். மற்றொரு இவருடைய விக்கிரகம் சிறப்பு காசியிலிருந்து கொண்டு வரப்பட்டது.
தட்சிணாமூர்த்தி லோக குருவாக அமர்ந்து சித்தர்களுக்கு உபதேசிக்கும் தலமாதலால் இது குருபரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. இங்குள்ள தட்சிணாமூர்த்திக்கு 14 வாரங்கள் விளக்கு ஏற்றி வழிபட தோஷங்கள் விலகித் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நினைத்த காரியங்கள் நிறைவேறவும், செல்வம் சேரவும் , நேரம் சரியில்லை என்று புலம்புபவர்களும் , எதிர்காலம் குறித்து அச்சம் கொண்டவர்களும் ,கிரஹ தோஷங்கள் உள்ளவர்களும் வணங்க வேண்டிய தெய்வம் திடியன்மலை தக்ஷிணாமூர்த்தி.
Comments (0)Newest First

வியாக்ரபுரீஸ்வரர் கோவில்
சிவலிங்கத்தில் தெரியும் வேங்கை வடிவம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல் வட்டத்தில் அமைந்துள்ளது திருவேங்கைவாசல். திருவேங்கைபதி என்றும் இவ்வூர் அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் மூலவராக வியாக்ரபுரீசுவரர் உள்ளார். வியாக்ரம் என்றால் புலி என்று பொருளாகும். மூலவர் திருவேங்கைநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். அம்பிகையின் பெயர் அருள்மிகு பிரகதாம்பாள். தமிழில் பெரியநாயகி.
மூலவர் வேங்கைவன நாதர் சிறிய சிவலிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். அர்ச்சகர் காட்டும் தீபராதனை ஒளியில் கூர்ந்து பார்த்தால் அதில் இறைவனின் வேங்கை வடிவத்தைக் கண்டு பிரமிப்படையலாம். சிவலிங்கத்தின் மேல் பகுதியில் வட்டமான இரண்டு வேங்கைக் கண்களையும், ஆக்ரோஷமாய்த் திறந்துள்ள வேங்கையின் வாய்ப்பகுதியையும் கண்டு ஆனந்தித்து அருள் பெறலாம்.
தல வரலாறு
ஒரு சமயம் தெய்வப் பசுவான காமதேனு, தேவேந்திரனின் சாபத்தினால், பூமியில் வந்து சாதாரணமான பசுவாகப் பிறப்பெடுத்தது. அதை மாமுனிவர் வசிட்டர் அன்போடு பேணிப் பாதுகாத்து வந்தார்.
ஒரு நாள் மாமுனி வசிட்டரை வணங்கிய பசு தன்னடைய சாப விமோசனத்துக்கு ஏதேனும் வழியுண்டா என்று கூறி அருளுமாறு வேண்டி நின்றது. மாமுனி வசிட்டர் வகுளாரண்யம் என்ற பெயரில் மகிழ மரங்கள் அடர்ந்த காடு ஒன்றில் கபிலர் என்னும் முனிவர் தவம் இயற்றுகிறார், நீ அவரைச் சென்றடைந்தால் உன் சாபம் நீங்கும்,
அவ்வாறே பசுவும் வகுளாரண்யத்தை அடைந்து கபில முனிவரிடம் சென்று வணங்கித் தன்னுடைய வரலாற்றைச் சொன்னது. பசுவின் கதையைக் கேட்டு மனமிரங்கிய கபில முனிவர் அந்த மகிழவனத்தில் ஒரு சிவாலயம் இருப்பதாகவும் அதில் வகுளவனேசுவரர் என்கிற திருநாமத்தோடு மகாதேவர் அருள்பாலித்துக் கொண்டிருப்பதாகவும் சொல்லி தினமும் நீ கங்கை நீரால் வகுளவனேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வந்தால் உன் சாபம் அகலும் என்று வழி காட்டினார்.
அவ்வாறே தினமும் கங்கை நீரைக் தன்னுடைய காதுகளில் ஏந்திக்கொண்டு மகிழவனக் கடவுளுக்குப் புனித நீராட்டிக் கொணடிருந்தது பசு. இந்நிலையில் அது ஒரு கன்றையும் ஈன்று பாலூட்டிக் கொண்டிருந்தது. வழக்கமான இறைவன் பணியில் காதுகளில் கங்கை நீரோடு ஒருநாள் அது மகிழ வனத்துக்கு வரும் வழியில் ஒரு வேங்கைப்புலி வழிமறித்தது. உடனே அதைத் தனக்கு இரையாக்கிக் கொள்ளவும் முயன்றது வேங்கை. வேங்கையிடம் மன்றாடியது பசு. என்னை விட்டு விடு, நான் சிவனுக்கு அபிஷேகம் செய்வதற்காக கங்கை நீர் சுமந்து வந்து கொண்டிருக்கிறேன். என்னை இப்போது விட்டுவிடு. அபிஷேகம் முடித்துவிட்டு என்னுடைய இளங்கன்றுக்கும் பாலூட்டிப் பசியாற்றிவிட்டுத் தவறாமல் உனக்கு இரையாக வந்து விடுகிறேன் என்று வேண்டிக் கேட்டுக் கொண்டது.
சிவபிரானுக்கு அபிஷேகப் பிரியர் என்கிற திருநாமம் உண்டு. தனக்கு தினமும் கங்கை நீரால் திருமுழுக்காட்டி வரும் பசுவின் பக்தியில் மனம் பறிகொடுத்த சிவபெருமான் - வகுளவனேசுவரர். அதை மேலும் சோதித்து முக்தியளிப்பதற்காகவே வேங்கை வடிவெடுத்து வந்திருந்தார். வழிமறித்தார். பசுவின் விருப்பத்தை ஏற்று உடனே அதற்கு வழிவிட்டது வேங்கை. சொன்ன சொல் தவறாமல் இறைவனுக்கு அபிஷேகம் செய்துவிட்டுத் தன்னுடைய இளங்கன்றுக்கும் பாலூட்டிவிட்டு வேங்கையின் முன்னால் இரையாக நின்றது பசு. பசுவின் வாக்கு தவறாத பண்பால் மகிழ்ச்சியடைந்த சிவபெருமான் ரிஷப ஆரூடராகத் தம் தேவியோடு காட்சியளித்து அந்தக் காமதேனுப் பசுவுக்கு நற்கதி அருளினார்.
வேங்கையாக உருமாறி சிவபெருமான் பசுவை வழிமறித்த இடம் திருவேங்கை வாசல் என வழங்கப் படுகிறது, பசு(கோ) தன்னுடைய காதுகளில் (கர்ணம்) கங்கை நீரைக் கொண்டு வந்து ஈசனுக்கு திருமுழுக்காட்டிய தலம் திரு-கோ-கர்ணம் என்று வழங்கப்படுகிறது.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்
சன்னதிகள் எதிர் எதிரே அமைந்திருக்கும் வித்தியாசமான வடிவமைப்பு
https://www.alayathuligal.com/blog/9mhr7kt2lf8z7mfs6y9gk4fb7ffnjc
தவக்கோலத்தில் காட்சி தரும் முருகப் பெருமான்
https://www.alayathuligal.com/blog/s2ymrhrk486l63psxj8et4h3g9f699

மாயூரநாதர் கோவில்
காவிரி துலா ஸ்நானம்
ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு சிறப்பென்றால் ஐப்பசி மாதத்தினை துலா விஷூ புண்ணிய காலமாக சொல்கிறார்கள். இந்த துலா விஷூ புண்ணிய காலத்தில் தேவர்களின் இரவும் பகலும் சரிசமமாக இருப்பதால், இந்த நாட்களில் காவிரி ஆற்றில் ஸ்நானம் செய்வது மிக புனிதமாகக் கருதப்படுகிறது.
புண்ணிய நதிகளானன கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகள், மக்கள் நீராடியதால் அவர்களின் பாவக்கறை தங்கள் மீது படிந்துள்ளதால் தங்களைப் புனிதப்படுத்த வேண்டுமென சிவபெருமானிடம் வேண்டினர். சிவபெருமான, மாயூரத்தில் ஓடும் காவிரியில் துலா மாதத்தில் (ஐப்பசி மாதம்) ஓவ்வொரு நாளும். ஒவ்வொரு நதியாக நீராடி தங்கள் பாவச்சுமைகளை நீக்கிப் புனிதம் பெறுலாம் என்று அருளினார். அதன்படி ஐப்பசி மாதத்தில் கங்கை உள்ளிட்ட நதிகள் மயிலாடுதுறையில் உள்ள காவிரியில் நீராடித் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டு புனிதம் அடைந்தன. அவர்களுடன் தேவர்கள், முனிவர்கள், சரஸ்வதி, வக்ஷ்மி, கெளரி, சப்தமாதர்கள் போனறோரும் மாயூரத்தில் உள்ள காவிரியில் நீராட வருகின்றனர். அதனால் இந்த மாதத்தில் மட்டும் அனைத்து நதிகளும் இங்கு வருவதால் நாம் காவிரியில் ஸ்நானம் செய்வதால் அனைத்து நதிகளிலும் ஸ்நானம் செய்த பலன் கிட்டும். ஆகவே ஐப்பசி மாதத்தில் மயிலாடுதுறையில் காவிரியில் நீராடுவது மிகவும் சிறப்புடைதாகும்.
இந்த துலா ஸ்நானம் என்பது மயிலாடுதுறையில் காவிரி நதியில் துலாகட்டம் என்ற படித்துறையில் ஒவ்வொரு வருடமும் மயூரநாதஸ்வாமி எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும். வள்ளலார் கோயில். திருஇந்தளூர் பரிமளரெங்கநாதஸ்வாமி ஆகிய தெய்வங்களும் எழுந்தருளுகிறார்கள் . தமிழ் ஐப்பசி மாதத்தின் முதல் நாள் துலா ஸ்நானம் ஆரம்பமாகிறது. கடை முழுக்கு, ஐப்பசி மாதக் கடைசி நாள் முடிகிறது.
முடவன் முழுக்கு
ஓர் அங்கஹீனன் (முடவன்) மயிலாடுதுறையை நோக்கி இங்குள்ள காவிரியில் துலா ஸ்நானம் செய்ய வந்தான். அதற்குள் ஐப்பசி மாதம் முடிந்துவிட்டது. அந்த முடவன் சிவபெருமானிடம் வேண்டினான். அவனுடைய குறையைப் போக்க, 'கார்த்திகை 1ஆம் தேதி அன்றும் இதே பலன் உனக்கு கிட்டும். ஸ்நானம் செய்' என அருளினார். இந்த நாளே முடவன் முழுக்கு என பெயர் பெற்றது.
காவிரி துலா ஸ்நான பலன்
இத்துடன் மொத்தம் 14 உலகங்களிலுமுள்ள அறுபத்தி ஆறாயிரம் கோடி புண்ணிய தீர்த்தங்கள் ஸ்ரீ கிருஷணனின் ஆணைக்கிணங்க, இந்த துலா மாதத்தில் காவிரியில் நீராட இந்த மாதம் முழுவதிலும் இங்கே இருக்கிறார்கள் என்று அக்னி புராணம் கூறுகிறது. மிக முக்கியமாக, மக மாதத்தில் ப்ரயாகையிலும் (அலஹாபாத்), அர்த்தோதய புண்ணியகாலத்தில் சேதுவிலும் நீராடினால் கிடைக்கும் பலனைவிட இந்த துலா மாதத்தில் காவிரியில் ஸ்நானம் செய்வதால் மனிதன் செய்யும் பெறும் தவறுகளும் நீங்கப்பெறுகின்றன.
காவிரி துலா ஸ்நான காணொளிக் காட்சி
https://www.youtube.com/watch?v=Xov1u2MCxks

தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில்
திருமலை நாயக்கருக்கு பிரசன்னமாக காட்சியளித்த திருமலை வெங்கடாஜலபதி
மதுரை தல்லாகுளம் பகுதியில் அமைந்துள்ளது பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில். இத்தலத்து வேங்கடாஜலபதி, மன்னர் திருமலை நாயக்கருக்கு பிரசன்னமாக காட்சியளித்ததால் பிரசன்ன வெங்கடாஜலபதி என்று அழைக்கப்படுகிறார்.
மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் வெங்கடாஜலபதியின் தீவிர பக்தராக இருந்தார். அவர் வெங்கடாஜலபதி கோயிலில் தினசரி பூஜைகள் நடத்தப்படும் போது, தமது மகாலில் இருந்தே அவரை பூஜித்து விட்டு பின்பு உணவு உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதற்காக, திருப்பதியில் பூஜை செய்யும் போது தாமும் தரிசனம் செய்ய வசதியாக கோயிவில் இருந்து அவரது மகால் அனமந்திருக்கும் பகுதி வரையில் வழி நெடுக மணிகட்டி மண்டபங்களை அமைத்தார்.
கோயிலில் பூஜை தொடங்கிய உடன் அவரது பணியாளர்கள் முதம் மணியை அடிக்க, தொடர்ந்து ஒவ்வொரு மணியாக அடிக்கப்படும். இறுதியில் மகால் அருகேயுள்ள மணி ஒலிக்க, பின் இங்கிருந்தே வெங்கடாஜபதியை தரிசனம செய்து விட்டு, உணவினை உண்பார். இந்நிலையில் ஓர் நாள் மணி ஒலிக்காது போக,கோபமடைந்த மன்னர் என்ன பிரச்சனை என அறிவதற்காக தனது குதிரையில் மணிகட்டி மண்டபம் நோக்கிச் சென்றார். முன்பு மாதுளை தோட்டமாக இருந்த பகுதி அருகே அவர் வந்த போது அவரது குதிரை அவ்விடத்தை விட்டு நகராமல் அங்கேயே மிரட்சி உடன் கணைத்தபடி நின்றது. அப்போது கீழே இறங்கிய மன்னர் அங்கே சுயம்புவாக வீற்றிருந்த ஆஞ்சநேயர் சிலையினைக் கண்டு மனம் வியந்தார். அப்போது அவரது மனதில் பிரசன்னமாக காட்சியளித்த ஸ்ரீவெங்கடாஜபதி தினமும் தன்னை தரிசனம் செய்ய அத்தலத்திலேயே கோயில் ஒன்றினைக் கட்டும்படி அறிவுறுத்தினார். அதன் பின்பே திருமலை நாயக்கர் மன்னர், இவ்விடத்தில் இக்கோயிலை கட்டியதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.
400 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இத்தலம் திருமலை நாயக்கர் மகாலுக்கு நேரே அங்கிருத்தே இறைவனை தொழும்படியாக கட்டப்பட்டுள்ளது. இந்தலத்தில் ஸ்ரீ வெங்கரஜல்பதியின் கருவறைக்கு வலப்பக்கத்தில் நின்ற நிலையில் உக்கிரமாக ஆஞ்சநேயர் அருள் பாவிக்கிறார், அவரின் உக்கிரத்தை குறைக்கும் விதமாக ஏதிரே ஒரே கல்லில் சங்கு மற்றும் சக்கரங்கள் மட்டும் செதுக்கப்பட்ட நிலையில் சக்கரத்தாழ்வார் காட்சி தருகிறார்.