திருஞானசம்பந்தர் பதிகம் பாடி ஓடம் செலுத்திய தேவாரத் தலம்
கும்பகோணத்தில் இருந்து தெற்கே 20 கி.மீ. தூரத்தில் உள்ள தேவாரத் தலம், திருக்கொள்ளம்புதூர் . கும்பகோணத்திலிருந்து கொரடாச்சேரி செல்லும் வழியில் செல்லூரில் இறங்கி சுமார் ஒரு கி.மீ.. சென்றால் இத்தலத்தை அடையலாம். இறைவன் திருநாமம் வில்வாரண்யேஸ்வரர். இறைவி சௌந்தரநாயகி. இத்தலத்தில் திருஞானசம்பந்தர் அடியவரோடு ஓடம் ஏறி அதனைப் பதிகம் பாடிச் செலுத்தி மறுகரை அடைந்தார். இங்கு ஆற்றின் எதிர்க்கரையில் திருஞானசம்பந்தருக்கு திருக்கோயில் அமைந்துள்ளது.
பல சிவத்தலங்களை தரிசித்து பாடி வந்த திருஞானசம்பந்தர், இத்தலம் வரும் போது வழியில் உள்ள வெட்டாறில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் ஓடம் ஓட்டுபவர்களால் ஓடம் செலுத்த முடியாமல் ஆற்றின் கரையிலேயே ஓடத்தை விட்டு சென்றனர். ஆனால் சிவனை தரிசிக்காமல் செல்ல கூடாது என்பதில் தீவிரமாக இருந்தார் சம்பந்தர். எனவே ஆற்றின் கரையில் இருந்த ஓடம் ஒன்றை அவிழ்க்க செய்து அதன் மீது தன் அடியவர்களுடன் ஏறினார். தமது நாவையே ஓடக்கோலாக கொண்டு, "கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர் நட்டமாடிய நம்பனை யுள்கச் செல்வுந்துக சிந்தை யார்தொழ நல்கு மாறரு ணம்பனே' எனும் திருப்பதிகம் பாடினார். இறைவனின் திருவருளால் ஓடம் ஆற்றின் மறுகரையை அடைந்தது. திருஞான சம்பந்தர் கோயிலை அடைந்து மீதி பதிகங்ளை பாடி இறைவனை வழிபட்டு, அங்கேயே தங்கினார் என்பது வரலாறு.
ஐப்பசி அமாவாசைக்கு மறுநாள் நடக்கும் ஓடத்திருவிழா
இந்த ஓடத்திருவிழா ஆண்டு தோறும் ஐப்பசி அமாவாசைக்கு மறுநாள் சிறப்பாக நடக்கிறது. இந்த ஆற்றை மக்கள் வழக்கில் ஓடம்போக்கி ஆறு என்று வழங்குகின்றன ர்.ஐந்து நிலை கோபுர வாயில் வழியே நுழைந்ததும் காணும் மண்டபத்திலுள்ள வலப்பக்க கற்தூணில் சம்பந்தர் ஓடம் ஏறிச் செலுத்தும் சிற்பம் உள்ளதைக் காணலாம்.
சித்த சுவாதீனம் உள்ளவர்கள் இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபாடு செய்வது சிறப்பு. துலா மாதத்தில் அமாவாசை உதித்த முதல் பாதத்தில் நீராடி வழிபட்டால் வேண்டும் சித்திகளையும், வலிமையையும் பெறுவர்.