
காளிகாம்பாள் கோவில்
வாழ்வில் உயர்வு தரும் காளிகாம்பாள் குங்குமப்பிரசாதம்
சென்னை பாரிமுனை பகுதியில் தம்புச் செட்டித் தெருவில் அமைந்துள்ளது காளிகாம்பாள் கோவில். 3000 ஆண்டு பழமையான இக்கோவில் முதலில் கடற்கரைக்கருகில் இருந்ததாகவும் பின்னர் 1639-ம் ஆண்டு தற்போதுள்ள இடத்தில் கட்டப்பட்டதாகவும் கோவில் வரலாறு சொல்கின்றது. இந்த கோவில் கடற்கரையில் இருந்த போது காளிகாம்பாள் மிகவும் உக்கிரமானவளாக இருந்ததாகவும், தம்பு செட்டி தெருவுக்கு மாறிய பிறகு சாந்தம் ஆகி விட்டதாகவும் கூறப்படுகிறது. மச்ச புராணம், வாமன புராணம், கூர்ம புராணம், லிங்க புராணம், பவிஷ்ய புராணம் ஆகிய புராணங்களில் இந்த கோவில் பற்றி குறிப்புகள் உள்ளது. புராணங்களில் இத்தலம் சொர்ணபுரி, பரதபுரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
காளி அம்மன் எப்போதும் உக்கிரமாகக் காட்சியளிப்பவள். ஆனால் இக்கோயிலில் குடிகொண்டுள்ள அன்னை காளிகாம்பாள வடிவம் எழில் கொஞ்சும் திருமேனியுடன், ஆணவத்தை அடக்கும் அங்குசம். ஜென்ம பாப வலைதனில் இருந்து மீட்கும் பாசம், சுகபோகத்தினை நல்கும் நீலோத்பல மலர் மற்றும் வரத முத்திரை, சோமன், சூரியன், அக்னி என்ற மூன்று கண்கள், நவரத்ன மணிமகுடம், வலது காலைத் தொங்க விட்டுக் கொண்டு அமர்ந்த கோலத்துடன் காணப்படுகிறாள். காளிகாம்பாள் மகாலட்சுமியையும், சரஸ்வதியையும் தன் இரு கரங்களாக பெற்றிருப்பதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்னை காளிகாம்பாளை வழிபட்டால் காஞ்சீபுரம் காமாட்சி அம்மனையும், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.
சிதம்பரத்தில் வழிபட்டால், திருவண்ணாமலையை நினைத்தால், காளையார் கோவிலில் காலடி எடுத்து வைத்தால், திருவாரூரில் பிறந்தால் மோட்சம் கிடைக்கும் என்பார்கள். அது போல காளிகாம்பாள் கோவிலில் குங்குமப்பிரசாதம் பெற்றாலே வாழ்வில் உயர்வும், மோட்சமும் கிடைக்கும்
குழந்தை பாக்கியம் தரும் மஞ்சள் அபிஷேகம்
திருமணமாகி குழந்தை இல்லாதவர்கள் காளிகாம்பாளுக்கு மஞ்சளால் அபிஷேகம் செய்து, அந்த மஞ்சளை பயன்படுத்தி வந்தால் விரைவில் பலன் கிடைக்கும். செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் ராகு காலத்தில் எலுமிச்சை பழம் தீபம் ஏற்றி வழிபடுவது கூடுதல் நன்மை தரும். காளிகாம்பாளை முறைப்படி தியானித்து வழிபடுபவர்கள் நிச்சயம் செல்வந்தர்கள் ஆகி விடுவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வீர சிவாஜி தரிசித்த காளிகாம்பாள்
3 அக்டோபர் 1677 அன்று மராத்தியப் பேரரசர் சிவாஜி காளிகாம்பாள் கோயிலுக்கு வ்ந்து அம்மனை தரிசனம் செய்ததாக, இக்கோவில் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.
மகாகவி பாரதி சுதேசமித்ரன் பத்திரிக்கையில் பணியாற்றிய போது இந்த காளியை வந்து மனமுருகி வழிபட்டு நிறைய காளியை போற்றும் கவிகளை இயற்றினார். அவர் பாடிய 'யாதுமாகி நின்றாய் காளி, எங்கும் நீ நிறைந்தாய் காளி!' என்ற பாடலில் வருவது அம்மன் காளிகாம்பாள்தான்.
400 ஆண்டு சரித்திரச் சிறப்பு வாய்ந்த வெண்கலக் கிண்ணித் தேர்
இத்தலத்தில் பூந்தேர், வெண்கலக் கிண்ணித் தேர், வெள்ளித் தேர் என்று மூன்று வகையான தேர்கள் உள்ளன. இந்தியாவிலேயே இக்கோவில் வெண்கலக் கிண்ணித் தேர்தான் மிகப் பெரியது. இந்த வெண்கலக் கிண்ணித் தேரோட்டம் 400 ஆண்டுகளுக்கு மேலாக இக்கோவிலில் நடைப் பெற்று வருகிறது. பல ஆங்கிலேய கலெக்டர்கள் இத்தேரின் வடம் பிடித்திருக்கின்றனர்.இத்தேர் ஓடும்போது வெண்கலத் தட்டுக்கள் எழுப்பும் ஒலி ஆங்கிலேயர்களை மயக்கியது. நமமூர் மக்கள் பரவசமடைந்தனர்.

உழக்கரிசி பிள்ளையார் கோவில்
ஆங்கிலேயர் பிள்ளையாருக்கு கொடுத்த உழக்கரிசி மானியம்
திருநெல்வேலியில் இருந்து சுமார் 42 கி. மீ தொலைவில் உள்ள அம்பலவாணபுரம் என்ற ஊரில் உழக்கரிசி பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. கருவறையில் விநாயகப் பெருமான் அமர்ந்த கோலத்தில் நான்கு கரங்களுடன் கருணை ததும்பும் திருமுகத்துடன் அழகாக காட்சி அளிக்கிறார்.
முற்காலத்தில் சிவபெருமான் பார்வதி திருமணத்தின் போது தாழ்ந்த தென் பகுதியை சமன் செய்ய அகத்திய முனிவர் பொதிகை மலை பகுதிக்கு வந்தார். அப்போது இந்த பகுதியில் பல தெய்வங்களை பிரதிஷ்டை செய்து வணங்கினார்.
அப்போது அகத்தியர் பிரதிஷ்டை செய்து வணங்கிய பிள்ளையார்தான் இந்த உழக்கரிசி பிள்ளையார். ஆனால், காலப் போக்கில் இந்தப் பிள்ளையார் இருந்த இடத்தினை யாரும் கவனிக்காமல் விட்டு விட்டனர். இதனால் அவர் இருக்கும் இடம் தெரியாமல் போய் விட்டார்.
18 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியின் போது இந்த பகுதியில் ஒரு ஆங்கிலேய துரை வேட்டையாட வந்தார். அவர் இந்த வழியாக வரும் போது வெள்ளைக்கார துரையின் குதிரை கால் பட்டு மீண்டும் வெளிப்பட்டார் உழக்கரிசி பிள்ளையார். அப்போது குதிரையில் குளம்படி பட்டு பிள்ளையார் மீது ரத்தம் பீரிட்டது. இதை கண்ட வெள்ளைகாரர் அரண்டு போய் விட்டார். அந்த பிள்ளையாரின் ஆற்றலை உணர்ந்த அவர் உடனே அங்கிருந்த மக்களிடம் இந்த பிள்ளையாரை நீங்கள் முறைப்படி வைத்து வணங்குங்கள். நான் அதற்கு உதவி புரிகிறேன் என்று கூறினார். மக்கள் அந்த பிள்ளையாரை மீண்டும் பிரதிஷ்டை செய்து வணங்க ஆரம்பித்தனர்.
அந்த வெள்ளைக்கார துரை இந்த பிள்ளையாருக்கு மானியமாக தினமும் உழக்கு அரிசி கொடுக்க உத்தரவு பிறப்பித்தார். ஆகவே இந்த பிள்ளையாருக்கு'உழக்கரிசி பிள்ளையார்' என்று பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இவரை வணங்கும் பக்தர்களுக்கு கருணைக் கடலாய் அருள்புரிவாராம் . ஆகவே இவருக்கு கருணை பிள்ளையார் என்ற பெயரும் வந்தது.

கருங்குளம் வெங்கடாசலபதி கோவில்
சந்தனக்கட்டை வடிவில் பெருமாள்
திருநெல்வேலியிலிருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் வழியில் சுமார் 18 கி. மீ தொலைவில் உள்ள கருங்குளத்தில் இருக்கும் வகுளகிரி என்ற சிறிய மலைக் குன்றின் மீது அமையப் பெற்றுள்ளது கருங்குளம் வெங்கடாசலபதி கோவில். மேலே ஏறிச் செல்ல படிக்கட்டுகளும், சாலை வசதியும் ஏற்படுத்தப் பட்டுள்ளது.
திருப்பதியிலிருந்து பெருமாள் இங்கு வந்தமையால் இந்த கோவில் 'தென் திருப்பதி' என்று சிறப்பிக்கப்படுகிறது. திருப்பதிக்குப் போக முடியாத பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகளை இந்த வகுளகிரி பெருமாள் கோவிலில் நிறைவேற்றலாம்.
பெருமாளை மூன்று அடி உயரமுள்ள சந்தனக்கட்டை வடிவில் வைத்து அபிஷேக ஆராதனை செய்து பூஜித்து வருகிறார்கள். இதற்கு இரண்டு பக்கமும் சங்கு, சக்கரம் இருக்கிறது. இங்கு மூலவர் பெருமாள் சந்தன கட்டைகளாக இருந்தாலும், பால், சந்தனம் போன்ற திரவியங்களால் அபிஷேகம் செய்தும் இதுவரை எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட வில்லை என்பது அதிசயமாக கருதப்படுகிறது.
சந்தனக்கட்டை வடிவில் பெருமாள் எழுந்தருளிய வரலாறு
முற்காலத்தில் சுபகண்டன் என்னும் அரசன் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு சிறந்த விஷ்ணு பக்தன். அவனுக்கு ஒரு முறை கண்ட மாலை என்னும் கொடிய நோய் பீடித்தது. தனது அந்த கொடிய நோய் நீங்க அவன் பெருமாளை பல கோவில்கள்தோறும் சென்று வழிபட்டு வந்தான். அப்படி அவன் ஒரு முறை திருப்பதி சென்று வெங்கடாசலபதி பெருமாளை வணங்கி தன் நோய் தீர மனமுருக வேண்டி நின்றான். அவனது பக்திக்கு இறங்கிய திருப்பதி பெருமாள், அன்று இரவு சுபகண்டனின் கனவில் தோன்றி, எனக்குச் சந்தனக் கட்டைகளால் தேர் ஒன்றைச் செய்வாயாக அப்படி செய்யும் போது அவற்றில், இரண்டு சந்தனக் கட்டைகள் மிச்சமாக இருக்கும். அந்த சந்தன கட்டைகளை தெற்கே இருக்கும் தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள வகுளகிரி மலையில் பிரதிஷ்டை செய்து வழிபட்டால் உன் நோய் நீங்கப் பெறுவாய் என கூறி அருள் புரிகிறார்.
கனவில் இருந்து திடுக்கிட்டு எழுந்த மன்னன் சுபகண்டன், மறுநாளே திருப்பதி வெங்கடாசலபதி பெருமாளுக்கு சந்தன மரக் கட்டைகளைக் கொண்டு தேர் செய்யத் தொடங்கினான். அவன் தேரை செய்து முடிக்கும் தருவாயில் அவனது கனவில் பெருமாள் கூறியவாறே, இரண்டு சந்தன கட்டைகள் மிச்சமாகின்றன. அந்த சந்தன கட்டைகளை எடுத்துக் கொண்டு, தென் பாண்டி நாட்டை அடைந்த சுபகண்டன், அங்கே தாமிரபரணி ஆற்றின் கரையில் இருந்த வகுளகிரி பகுதியை கண்டறிந்து கனவில் பெருமாள் கூறியபடியே தான் கொண்டு வந்திருந்த சந்தன கட்டைகளை முறைப்படி பிரதிஷ்டை செய்து தாமிரபரணியில் மூழ்கி பெருமாளை வழிபட அவனது நோய் நீங்கப் பெற்றதாக இக் கோவில் வரலாறு கூறப்படுகிறது.
இங்கு மலை மீது உள்ள கோவிலின் கருவறையில் சுபகண்டனால் கொண்டு வரப்பட்ட இரண்டு சந்தன கட்டைகளில் தான் பெருமாள் எழுந்தருளி காட்சியளிக்கிறார். சந்தன கட்டைகளுக்கு வஸ்திரம் அணிவித்து, திருநாமம் சாத்தி பெருமாள் அலங்காரம் செய்யப்படுகிறது.

வேதபுரீசுவரர் கோவில்
சர்ப்ப தோஷத்தை நீக்கும் பரிகாரத் தலம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ள தேவாரத் தலமான வேதபுரீஸ்வரர் கோவில், சர்ப்ப தோஷத்தை நீக்கும் பரிகார தலமாக விளங்குகிறது.
திருஞான சம்பந்தர் இத்தலத்திற்கு வந்த போது சேயாற்றை சுற்றியுள்ள சமணர்கள் ஒரு வேள்வி செய்து அதிலிருந்து கொடிய பாம்பை சம்பந்தர் மீது ஏவினர். சம்பந்தர் சிவனை குறித்து வேண்டினார். உடனே சிவன் பாம்பாட்டியாக வந்து அப்பாம்பினை பிடித்து மறைந்தார். இதனால் இத்தலத்தில் நாகலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
அபூர்வமான பதினொரு தலை நாகலிங்கம்
இக்கோவிலின் உட்பிரகாரத்தில் ஒரு உயரமான பீடத்தில் நாகலிங்கம் சன்னதி அமைந்துள்ளது. பதினொரு தலையுள்ள இதை சனிக்கிழமை இராகு காலத்தில் வழிபட்டால் தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. பீடத்தில் கீழே பூமாதேவி, அதற்கு மேல் மீன், அதன்மேல் ஆமை, அதற்கு மேல் பதினொரு யானைகள், அதன்மேல் பதினொரு நாகங்கள் தாங்க அதன் மேல் பதினொரு தலை நாகம் படம் விரித்துள்ளது. நாகத்தின் உடல் சுருள்களால் அமைந்த பீடம் மீது சிவலிங்கம் உள்ளது.
இந்த பதினொரு தலையுள்ள நாகநாத லிங்கத்தை சனிக்கிழமை தோறும் காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் இராகு காலத்தில் வழிபாடு செய்தால் சர்ப்ப தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. இந்த நாகலிங்கத்தை அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கும். ஆமை தோஷமும் நிவர்த்தி ஆகிறது.
ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பன்றும் தலமரமான பனைமரத்துக்கும், நாகலிங்கத்துக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் கோவில்
தட்சிணாமூர்த்தி சேலை அணிந்த கோலத்தில் காட்சி தரும் தேவாரத் தலம்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் இருந்து 8 கீ.மீ. தொலைவில் உள்ளது, தேவாரத் தலமான, ஓமாம்புலியூர் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் கோவில். ஓமாம்புலியூரின் பழைய பெயர் பிரணவபுரம். சிவபெருமான் அம்பாளுக்கு குருவாக இருந்து ஓம் என்னும் பிரணவத்தைப் போதித்ததால் 'ஓம்'. புலிக்கு முக்தி கொடுத்ததால் 'புலியூர்'. இந்த இரண்டும் சேர்ந்து ஓமாம்புலியூர் என்ற பெயர் ஏற்பட்டது.
சிவாலயங்களில் பொதுவாகப் பிராகாரத்தில்தான் தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி அமர்ந்து இருப்பார். ஆனால், இக்கோவிலில் சுவாமி சன்னதிக்கும் அம்மன் சன்னதிக்கும் மத்தியில் மகாமண்டபத்தில் அமைந்துள்ள தனிக் கருவறையில், சிவபெருமான் தட்சிணாமூர்த்தியாக அமர்ந்து அம்பாளுக்கு குரு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார் . இப்படிப்பட்ட அமைப்பு வேறு எந்தத் தலத்திலும் கிடையாது. குருத் தலங்களில் இத்தலம் தலைசிறந்தாகக் கருதப்படுவதிற்கு இதுவே காரணமாகும். குருவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இங்கு மற்ற நவக்கிரகங்கள் கிடையாது.
அம்மனுக்கு உபதேசம் செய்த காரணத்தினால் தட்சிணாமூர்த்தி சேலை அணிந்திருப்பதும் மற்றும் இரண்டு தட்சிணாமூர்த்திகள் அருள்பாலிப்பதும் இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.
முருகப் பெருமான் பிரணவ உபதேசம் கற்ற தலம்
தந்தைக்கு முருகப் பெருமான் பிரணவ உபதேசம் செய்த இடம் சுவாமி மலை. அந்த உபதேசத்தை அவர் கற்ற இடம்தான் ஓமாம்புலியூர் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் கோவில். ஒரு சமயம், இங்கே எழுந்தருளியிருக்கும் புஷ்பலதாம்பிகைக்கு சிவபெருமான் குருவாக இருந்து ஓம் என்னும் பிரணவத்தை உபதேசம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த முருகப் பெருமானை, 'அம்பாளுக்கு உபதேசம் நடப்பதால், உள்ளே போக வேண்டாம்’ என்று நந்திதேவர் தடுத்தார். அதை மீறி, முருகப் பெருமான் வண்டாக உருமாறி அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட நீர் வெளியேறும் கோமுகம் வழியாக உள்ளே சென்று, அம்பாளின் தலையில் இருந்த பூவில் அமர்ந்து கொண்டார். சிவபெருமான் அம்பாளுக்கு செய்த உபதேசத்தை அவரும் படித்தார்.
பிற்பாடு, சுவாமிமலையில் தனக்கே உபதேசம் செய்த முருகப் பெருமானிடம், 'இதை நீ எங்கு படித்தாய்?' என்று சிவபெருமான் கேட்டபோது, 'பிரணவபுரத்தில் அம்மைக்கு நீங்கள் உபதேசம் செய்தபோது உங்களுக்கே தெரியாமல் படித்தேன்' என்றார் முருகப்பெருமான்.
காசியின் மீசம்
அப்பர், திருஞான சம்பந்தரால் பாடல்பெற்ற பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் சுயம்புவாக தோன்றியவர். பெரும்பாலும் சிவலிங்கத்தின் ஆவுடையானது பத்ம பீடமாகத்தான் (வட்ட வடிவில்) இருக்கும். ஆனால், இங்கே சதுர வடிவில் உள்ளது. காசியிலும் சதுர வடிவம் தான் என்பதால், இத்திருத்தலத்தை 'காசியின் மீசம்' என்கிறார்கள்.
ரேவதி நட்சத்திர பரிகாரத் தலம்
பக்தர்களின் தடைகளை நீக்கி சுகவாழ்வு தரும் இத்திருத்தலம் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பரிகாரத் தலமாகவும், குருதோஷங்கள் போக்கும் தலமாகவும் விளங்குகிறது. தங்கள் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க பெற்றோர்கள் அதிக அளவில் இங்கு வந்து தட்சிணாமூர்த்தியை வழிபடுகிறார்கள்.

வைத்தியநாதசுவாமி கோவில்
நான்கு வேதங்களும் நான்கு நந்திகளாக அமர்ந்துள்ள தேவாரத் தலம்
திருவையாற்றில் இருந்து வடமேற்கே 13 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருமழபாடி. இறைவன் திருநாமம் வைத்தியநாதசுவாமி.
இந்த ஊருக்கு மழபாடி என்ற பெயர் வந்ததற்கு காரணம், சோழர் காலத்தில் அவர்களுக்கு உதவியாக சேரர் பிரிவான மழவர் படை பாசறை இங்கு அமைத்திருந்ததால் வந்ததென்றும், மேலும் மார்க்கண்டேய முனிவருக்காக இங்குள்ள சிவபெருமான் மழு ஏந்தி நடனம் ஆடியதால் மழுவாடி என்று பெயர் பெற்று பின்னர் மழபாடி என்று பெயர் திரிந்ததாகவும் கூறுகின்றனர்.
இங்குள்ள பிரம்மனுக்கு எதிரில் நான்கு வேதங்களும் நான்கு நந்திகளாக அமர்ந்துள்ளன. இப்படி வேதங்கள் நந்திகளாக காட்சி தரும் கோலத்தை நாம் வேறு எந்தத் தலத்திலும் காண முடியாது.

கேடிலியப்பர் கோவில்
தேவாதி தேவர்கள் இன்னிசைக்க நடராஜர் வலது காலைத் தூக்கி ஆடும் அபூர்வக் காட்சி
பொதுவாக சிவாலயங்களில் நடராஜர் தன் இடது காலைத் தூக்கி ஆடும் தாண்டவக் கோலத்தைதான் நாம் தரிசிப்போம். ஆனால், நடராஜர் தன் வலது காலைத் காலைத் தூக்கி ஆடும் அபூர்வக் காட்சியை நாம் மதுரை மற்றும் கீவளூரில் மட்டுமே தரிசிக்க முடியும்.
தேவாரத் தலமான கீவளூர் கேடிலியப்பர் கோவில், நாகப்பட்டிணம்-திருவாரூர் சாலையில் 12 கீ.மீ. தொலைவில் உள்ளது.
நடராஜரின் அபூர்வத் தாண்டவக் கோலத்தின் பின்னணி நிகழ்ச்சி
ஒரு சமயம், பரமேசுவரன்-பார்வதி திருமணத்தைக் காண தேவர்கள், முனிவர்கள் முதலானோர் கைலாயத்தில் கூடினர். அதனால் உலகத்தின் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது.இதனை சரி செய்ய அகத்திய முனிவரை சிவபெருமான் தென் திசைக்கு அனுப்பினார். அகத்திய முனிவர் தென் திசை வந்து பஞ்சாட்சர மந்திரத்தை ஒதி வழிபட்டதும் உலகம் சமன் நிலையடைந்தது. தன் பணியை முடித்த அகத்திய முனிவருக்கு இறைவனின் திருமணக் கோலத்தைக் காண ஆசை ஏற்பட்டது. அதற்கு சிவபெருமான் அகத்திய முனிவர் விரும்பும் தலத்தில் தன் திருமணக் கோலத்தைக் காணலாம் என அருளினார். அதனபடி திருமறைக்காடு தலத்தில் அகத்திய முனிவர் சிவ பூஜை செய்து வேண்டியபோது தனது திருமணக் கோலத்தை சிவபெருமான் அவருக்கு காட்டி அருளினார். அதைக் கண்டு மனமகிழ்ந்த அகத்திய முனிவர், அடுத்து இறைவனின் வலது பாத தரிசனம் கிடைக்க வேண்டினார். அதற்கு சிவபெருமான், அகத்திய முனிவரை பத்ரிகாரண்யத் தலத்தில் (கீவளூரின் புராணக் காலப் பெயர்) தன்னை பூஜை செய்து வழிபடும்படியும், அங்கு அவருக்கு தன் விக்ஷேச வலது பாத தரிசனத்தைத் தருவதாகவும் அருளினார்.
அகத்திய முனிவர் கீவளூர் தலத்துக்கு வந்து சிவபெருமானை வழிபடலானார். சிவபெருமான்,ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று அகத்திய முனிவருக்கு கால் மாறி ஆடி, தன் வலது பாத தரிசனத்தைக் காட்டி அருளினார். அப்போது நடராஜப் பெருமானும், சிவகாமி அம்மையும் தாணடவமாட அதற்கு விநாயகரும், முருகப்பெருமானும் பாட்டுப் பாட, பிரம்மா தாளம் போட, சரஸ்வதி வீணை வாசிக்க, விஷ்ணு மத்தளம் வாசிக்க, மகாலஷ்மி கர தாளம் போட, இந்திரன் புல்லாங்குழல் வாசிக்க, வியாக்ரபாத முனிவர், பதஞ்சலி முனிவர் உடனிருக்க அகத்திய முனிவருக்குக் காட்சி தந்தார்.
ஆனித் திருமஞ்சனம்
இத்தல நடராஜப் பெருமானுக்கு ஆண்டுக்கு ஒரு முறை ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று காலைத் திருமஞ்சனமும், மாலை சுவாமி-அம்பாள் திருக்கல்யாணமும் நடைபெறும். இந்த ஆண்டு 3.7.2022 ஞாயிற்றுக்கிழமையன்று ஆனித் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.

திருவாரூர் தியாகராஜர் கோவில்
ரௌத்திர துர்க்கை
ரௌத்திர துர்க்கை திருவாரூர் ஆலயத்தின் தெற்கு பிரகாரத்தில் தனி சன்னதியில் எட்டுக் கரங்களுடன் எருமைத் தலையின் மேல் நின்ற கோலத்தில் வடக்கு முகமாக அருள்பாலிக்கின்றாள். இத்துர்க்கையின் வலது புறத்தில் கிளி அமைந்திருப்பது தனிச் சிறப்பு. இத்துர்க்கைக்கு எரிசின கொற்றவை என்ற பெயரும் உண்டு.
ரௌத்திர துர்க்கை அம்மன், ராகு கால நேரத்தில் தன்னை அர்ச்சனை செய்யும் திருமண வயதை எட்டிய குமரிப்பெண்களுக்கும், ஆண்களுக்கும் அவர்களுடைய திருமணத்தடையை நிவர்த்தி செய்து திருமண பாக்கியத்தை அருளுகின்றாள். ரௌத்திர துர்க்கை சன்னதியில் ராகு காலத்தில் அர்ச்சனை செய்பவர்களுக்கு நினைத்த காரியங்கள் முடித்து அம்பிகை அருள்பாலிக்கின்றாள். பிரதி வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் இராகுகால பூஜை செய்வது விசேஷம். பதவி உயர்வு வேண்டுவோரும், பணி மாற்றம் வேண்டுவோரும் இத்துர்க்கையை வழிபடுகின்றனர்.
முதன் முதலில் துர்க்கைக்கென்று தனித் துதிப்பாடல் இயற்றப்பட்டது இந்த துர்க்கைக்குத்தான். தேவாரம் பாடிய மூவருக்கும் முன் வாழ்ந்த ஸ்ரீலஸ்ரீஞானசம்பந்த முனிவர் இயற்றிய
மாயவன் தனக்கு முன்னம் மணிமுடியளித்து ஆருர் தூயனை வணங்கி
ஆங்கு துர்க்கையை விதியினால் தாபித்து ஆய்மலர் தூவி அன்பால்
அர்ச்சனை புரியின் மன்ன! நீ உளந்தனில் இன்று நினைந்தது முடியும்
என்றான்.
கோமகன் அசன் ஆருரில் கொற்றவை தனை ஸ்தாபித்து நமநீர்
உலகமெல்லாம் நன்னலார் வணங்கி ஓம்பி, ஏமுறுங்காதை இதை
இசைப்பவர் இனிது கேட்போர் தாம் மற்றவர் போல் வையந்தனில்
அரசாள்வர் மாதோ.
என்ற பாடல்களிலிருந்து, இந்த துர்க்கையை செவ்வரளி மலர் கொண்டு வழிபடுபவர்களுக்கு அவர்கள் வேண்டிய கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் என்று அறியலாம்.

கதலிவனேஸ்வரர் கோவில்
அதிசய வாழை மரங்கள் சூழ்ந்த வனத்தில் அருள் புரியும் இறைவன்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு அருகேயுள்ள திருக்களம்பூர்
என்னும் சிற்றூரில் அமைந்துள்ளது கதலிவனேஸ்வரர் கோவில்.
‘கதலி’ என்றால் வாழை என்று பொருள். வாழை மரங்கள் சூழ்ந்த வனத்தில் குடிகொண்ட இறைவன் என்பதால் இவருக்கு 'ஸ்ரீகதலிவனேஸ்வரர்' (கதலி வன ஈஸ்வரர்) என்ற திருநாமம் ஏற்பட்டது. இவர், தீராத நோய்களையும் தீர்த்துவைப்பவர் என்பதால், ஸ்ரீவைத்தியநாத சுவாமி என்றும் அழைக்கப்படுகிறார்.
இங்கு வீற்றிருக்கும் மூலவர், சுயம்புலிங்கம். அவரைச் சுற்றிலும் பிராகாரத்தில் உள்ள வாழை மரங்களும் சுயம்புதான். இந்த வாழை மரங்களுக்கு யாரும் தண்ணீர் பாய்ச்சுவது இல்லை. இந்த வாழைமரங்கள் மழை நீரை மட்டுமே உறிஞ்சி வளருகின்றன. இம்மரங்களின் அடியில் பாறைகள் இருந்தாலும் செழிப்பாக வளர்ந்து வருகின்றன. இங்கு தோன்றும் வாழைக் கன்றுகளை வெளியே வேறு எங்கு கொண்டு போய் வைத்தாலும் வளராது. அதேபோல், வெளியிடங்களிலிருந்து வாழைக் கன்றுகளைக் கொண்டுவந்து இந்த கோயிலுக்குள் வைத்தாலும் வளராது. மேலும் இந்த வாழைமரத்தின் காய், பூ, தண்டு, பழம் எதையும் மனிதர்கள் சாப்பிடக் கூடாது. வாழைப்பழம் பழுத்த பின்னர், அதைப் பஞ்சாமிர்தம் செய்து சுவாமிக்கு அபிஷேகம் செய்த பின்னரே சாப்பிடலாம். இதனால் உடலில் உள்ள வியாதிகள் குணமாகும் என்பது நம்பிக்கை.
வாழை மரத்திலிருந்து வெளிப்படும் சிவப்பு நிறத் திரவம்
இங்குள்ள வாழைகளில் இன்னோர் அதிசயம் என்னவென்றால், இவற்றின் பழங்கள் பார்க்க மலைப்பழம் போல இருக்கும். ஆனால், உரித்தால் ரஸ்தாளிப் பழம் போல இருக்கும். அதேபோல, மரத்தை வெட்டினால் ரத்தம் போல சிவப்பு நிறத் திரவம் வெளிவரும். ஆனால், இவை செவ்வாழைகளும் அல்ல. இந்தப் பழங்களிலிருந்து செய்யப்படும் அபிஷேக பஞ்சாமிர்தத்தை, ஒரு கையளவு சாப்பிட்டோமென்றால், ஒரு நாள் முழுவதும் பசியே எடுக்காது.
திருக்களம்பூர் என்று இத்தலத்தின் பெயர் ஏற்பட்ட வரலாறு
மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர் ஒருவர், சோழர்கள்மீது படையெடுத்துச் சென்றபோது, வழியில் வாழைத் தோப்புக்கு நடுவே பயணித்தார். வெகுவேகமாகச் சென்ற அவரது குதிரையின் கால் குளம்பு சிவலிங்கத்தின் மேல் பட்டதால், லிங்கம் மூன்று பிளவுகள் ஆகி, அதிலிருந்து குருதி கொட்டத் தொடங்கியது. தெய்வக் குற்றத்தால் மன்னரின் பார்வை பறிபோனது. பரிதவித்த மன்னன், இறைவனிடம் மண்டியிட்டு, 'இறைவா நான் அறியாமல் செய்த பிழையை மன்னித்துப் பொறுத்தருள வேண்டும். பறிபோன பார்வை மீண்டும் கிடைக்கவேண்டும்' என்று வேண்டினார். அதற்கு இரங்கிய இறைவன்,'எனக்கு இங்கே ஓர் ஆலயம் எழுப்பு. உனக்குப் பார்வை மீண்டும் கிடைக்கும்' என்று அருளினார். மன்னனும் ஆலயம் எழுப்புவதாக உறுதி கூற, அவரின் பார்வை திரும்பியது. இதையொட்டி கதலிவனநாதருக்கு, ஸ்ரீவைத்தியநாதசுவாமி என்ற பெயரும் உண்டு.
இன்றும் மூலவரின் மேல் குதிரையின் குளம்படிபட்ட வடுக்களைக் காணலாம். அதனால்தான் இவ்வூர் 'திருக்குளம்பூர்' என்று அழைக்கப்பெற்று, பின்னாளில் திருக்களம்பூர் என்று மருவியது. பாண்டிய மன்னர்கள் எங்கே கோயில் கட்டினாலும், ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் இல்லாமல் கட்டுவது இல்லை. இங்கேயும், பிராகாரத்தில் ஸ்ரீமீனாட்சியும் ஸ்ரீசொக்கநாதரும் தனிக்கோயிலில் அருள் பாலிக்கிறார்கள்.
திருமண பாக்கியம், பிரிந்த தம்பதியர் ஒன்று சேர அருளும் தலம்
திருமணம் ஆகாத ஆண்களோ அல்லது பெண்களோ, வியாழக் கிழமைகளில் இந்தக் கோயிலுக்கு வந்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் பாயசம் நிவேதனம் செய்து வழிபட்டுவிட்டு, அந்தப் பாயசத்தைப் பள்ளிக் குழந்தைகளுக்குக் கொடுத்தால், விரைவில் திருமணம் நடக்கும். அதேபோல் கருத்து வேற்றுமையால் பிரிந்துபோன தம்பதி, மீண்டும் வாழ்க்கைத் துணைவருடன் இணையவேண்டி, இந்த ஆலயத்தை 108 முறை வலம் வந்து, நம்பிக்கையுடன் இறைவனைப் பிரார்த்தித்து, குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினால், மிக விரைவில் அவர்கள் ஒன்று சேர்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பிணிகளால் அவதிப்படுவோர், வைத்தியநாத சுவாமிக்கு நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், விபூதி, பால் ஆகிய பொருள்களை அபிஷேகம் செய்து, பின்னர் அந்தப் பிரசாதங்களைச் சாப்பிட, நோய் கள் தீரும். குழந்தை வரம் வேண்டுவோர் தம்பதி சமேதராக இங்கு வந்து வாழைக்காய்களைப் பலியாகச் சமர்ப்பித்து வழிபட் டால், விரைவில் குழந்தை பாக்கி யம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

உலகளந்த பெருமாள் கோவில்
பெருமாள் மூன்றடி மண் தானம் கேட்ட திவ்ய தேசம்
பெருமாள் விண்ணையும் மண்ணையும் அளந்து மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அழித்த தலம் தான் திருக்கோவிலூர் திவ்ய தேசம். இத்தலத்து பெருமாளின் திருநாமம் உலகளந்த பெருமாள். இவருக்கு உலகளந்த திருவிக்கிரமன் என்ற திருநாமமும் உண்டு. கருவறையில் பெருமாள் ஒரு காலில் நின்ற நிலையில் ஒரு காலை மட்டும் நீட்டி தூக்கியபடி நிற்கின்றார். நெடிய திருமேனியுடைய இப்பெருமாள் மரத்தால் ஆனவர். இவர் பிற கோயில்களில் இருந்து மாறுபட்டு வலக்கையில் சங்கும் இடக்கையில் சக்கரமும் ஏந்தி காட்சி தருகிறார். பெருமாளின் காலடியில் தாயார், மிருகண்டு, மகாபலி ஆகியோர் காட்சி தருகிறார்கள்.
மகாபலி என்னும் அரசன் தான தர்மத்தில் சிறந்தவனாக இருந்தாலும் தன்னை விடப் புகழ் பெற்றவர்கள் யாரும் இருந்துவிடக் கூடாது என்பதற்காக அசுர குல குருவான சுக்கிராச்சாரியார் தலைமையில் மாபெரும் யாகம் நடத்தினான்.அவனது ஆணவத்தை அடக்கும் பொருட்டு விஷ்ணு வாமன அவதாரம் எடுத்து யாகம் நடக்கும் இடத்திற்கு வந்து மூன்றடி மண் தானமாக கேட்கிறார். வந்திருப்பது பெருமாள் என்பதை உணர்ந்து சுக்கிராச்சாரியார் மூன்றடி மண் தானம் தர விடாது தடுக்கிறார்.ஆனாலும் குருவின் பேச்சை மீறி தானம் தர மகாபலி ஒப்புக் கொள்கிறான்.அப்போது மகாவிஷ்ணு விசுவரூபம் எடுத்து தன் பாதத்தின் ஒரு அடியை பூமியிலும், ஒரு அடியை ஆகாயத்திலும் வைத்துவிட்டு மூன்றாவது அடியை எங்கு வைப்பது என்று கேட்கிறார். வந்திருப்பது மகாவிஷ்ணு என்றுணர்ந்த மகா பலி தன் தலையை தாழ்த்தி தன் தலையை தவிர வேறு இடம் என்னிடம் இல்லை என்கிறான். விஷ்ணுவும் விடாது மகாபலியின் தலைமீது தன் பாதத்தை அழுத்தி மூன்றாவது அடியை தாரை வார்த்து தா என்று சொல்ல மகாபலி கெண்டியை எடுத்து தானமாக தர முயல சுக்கராச்சாரியார் வண்டு உருவம் எடுத்து கெண்டியை அடைத்து தண்ணீர் வர விடாமல் தடுக்க விஷ்ணு தர்ப்பை புல்லால் குத்திவிடுகிறார். இதனால் குருடாகி சுக்கிராச்சாரியார் வெளியேறிப் போய் விடுகிறார்.மகாபலி கெண்டியை எடுத்து மூன்றாவது அடியை தானம் செய்து மண்ணில் புதையுண்டு போனான். அவனது ஆணவத்தை இவ்வாறு அடக்கிய பின்பு மகாபலியை விஷ்ணு தன்னோடு சேர்த்து கொண்டார் என்று தலவரலாறு கூறுகிறது.
பொதுவாக சிவாலயங்களின் சுற்றுப்பிரகாரத்தில் தான், துர்க்கையைக் காண முடியும். ஆனால், 108 திருப்பதிகளில் இங்கு மட்டும் தான் பெருமாள் சன்னதி அருகிலேயே துர்க்கை அருள்பாலிக்கிறாள். இவர்கள் இருவரையும் ஒரே இடத்தில் நின்று தரிசனம் செய்யலாம்.

சுப்பிரமணிய சுவாமி கோவில்
நான்கு உற்சவர்கள் கொண்ட முருகப்பெருமானின் படை வீடு
பொதுவாக ஒரு கோவிலில் ஒரு உற்சவர் அல்லது சில இடங்களில் இரண்டு உற்சவர்கள் திருமேனி அமையப்பெற்றிருக்கும். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நான்கு உற்சவர்கள் எழுந்தருளியிருப்பது சிறப்பம்சம் ஆகும். இந்த நான்கு உற்சவர்களுக்கும் தனிச் சன்னதிகள் இருக்கின்றன.
திருச்செந்தூர் கோவிலில் எழுந்தருளியிருக்கும் நான்கு உற்சவர்கள்
ஸ்ரீ ஆறுமுகநயினார் (சண்முகப்பெருமான்)
ஸ்ரீ ஜெயந்திநாதர்
ஸ்ரீ அலைவாயுகந்த பெருமான்
ஸ்ரீ குமரவிடங்க பெருமான்
இதில் ஆறுமுகநயினார் வருடத்திற்கு இரண்டு முறை ஆவணி மற்றும் மாசி திருவிழாக்களில் திருவீதி உலா எழுந்தருளுவார். கந்த சஷ்டி சூரசம்ஹார விழா மற்றும் தினசரி தங்க தேர் உலா ஆகியவற்றில் ஜெயந்திநாதர் எழுந்தருளுவார். ஆவணி மற்றும் மாசி திருவிழாக்களிலும், பங்குனி உத்திரம் - ஐப்பசி திருக்கல்யாணத்திலும் குமரவிடங்க பெருமான் எழுந்தருளுவார். குமரவிடங்க பெருமானுக்கு மாப்பிள்ளை சுவாமி என்ற பெயரும் உண்டு. வைகாசி விசாகம் அன்று மயில் வாகனத்தில் அலைவாயுகந்த பெருமான் எழுந்தருளுவார்.

நாகநாதர் கோவில்
கோவில் குளத்தில் இருந்து கேட்கும் இசைக்கருவிகளின் ஒலி
புதுக்கோட்டையில் இருந்து 12 கிமீ தொலைவில் அமைந்துள்ள பேரையூர் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான நாகநாதர் ஆலயம் உள்ளது. இக்கோயிலின் மதில் சுவர், குளக்கரை மண்டபம் ஆகிய இடங்களில் ஏராளமான நாகர் சிலைகள் இருக்கின்றன.இக்கோவில் குளத்தில், சித்திரை மாதத்தில் இசைக்கருவிகளின் ஒலி கேட்கிறது. அது நாகர்கள் இசைப்பதாக கருதப்படுகிறது.
இக்கோவில் வளாகத்தில் உள்ள மரங்கள் பாம்பு போல் வளைந்து, நெளிந்து காணப்படுவது ஆச்சரியமான விசயமாகும்.
இக்கோவிலில் சிவன் சந்நிதிக்கும் அம்பாள் சந்நிதிக்கும் நடுவில் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சன்னதி உள்ளது.இது போன்ற அமைப்பு வேறு எந்த சிவாலயத்திலும் காண முடியாது.
நாக தோஷம், ராகு கேது தோஷம் போக்கும் பரிகாரத் தலம்
நாக தோஷம், ராகு கேது தோஷம் நீங்க இத்தலம் ஒரு சிறந்த பரிகாரத் தலமாகும். திருமணத்தடை நீங்கவும், மழலைச் செல்வம் வேண்டியும் ஏராளமான பக்தர்கள் இத்தலத்துக்கு வந்து வழிபடுகின்றனர்.

வான்முட்டி பெருமாள் கோயில்
மூன்று பெருமாள்களை தரிசித்த பலன் தரும் கோழிகுத்தி வான்முட்டி பெருமாள்
கும்கோணத்திலிருந்து 37 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோழிகுத்தி என்னுமிடத்தில் வான்முட்டி பெருமாள் ஆலயம் உள்ளது. இத்தலத்து பெருமாள் பெயருக்கேற்றார் போல 16 அடி உயரத்தில், 6 அடி அகலத்தில் மிக பிரமாண்டமான தோற்றத்தில் அருள்பாலிக்கின்றார். வேருடன்கூடிய ஒரு அத்தி மரத்தில் சீனிவாச பெருமாள் விசுவரூப தரிசனம் தருவது காணக் கிடைத்தற்கரிய ஒரு காட்சி.
கோழிகுத்தி வான்முட்டி பெருமாளை தரிசித்தால், திருப்பதி சீனிவாசப்பெருமாளையும், சோளிங்கர் யோக நரசிம்மரையும், காஞ்சிபுரம் அத்தி வரதராஜரையும் ஒன்றாக தரிசித்த பலன் கிடைக்கும்.
இந்த திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயரை சப்தஸ்வர ஆஞ்சநேயர் என்று அழைக்கின்றனர். இந்த அனுமன் சிலையின் உடலை தட்டினால், ஏழுவித சப்தங்கள் கேட்கின்றது. ஆஞ்சநேயரின் உடலின் பல்வேறு இடங்களில் தட்ட, ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு சப்தம் கேட்கின்றது.

அருணாசலேசுவரர் கோவில்
யானைதிறைக் கொண்ட விநாயகர்
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில் மொத்தம் 5 பிரகாரங்கள் கொண்டது. ஒவ்வொரு பிரகாரத்திலும் ஆங்காங்கே விநாயகர் வீற்றிருக்கிறார். கோபுரத்து இளையனார் சன்னதிக்கு அருகில் சிறுகுகை போன்ற சன்னதியில் நின்ற கோலத்தில் யானைதிறைக் கொண்ட விநாயகர் அருள்பாலித்து வருகிறார். இவருக்கு இந்தப் பெயர் வந்ததின் பின்னணியில் ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி உள்ளது.
ஒருசமயம் ஆந்திராவைச் சேர்ந்த அரசர் ஒருவர் திருவண்ணாமலையை முற்றுகையிட்டு போரிட்டு கைப்பற்றினார். அன்று இரவு அவர் திருவண்ணாமலையில் தனது படை வீரர்களுடன் தங்கியிருந்தார்.
அப்போது அவருக்கு ஒரு கனவு வந்தது. யானை ஒன்று தன்னையும், தனது படைவீரர்களையும் அடித்து விரட்டுவது போல கனவு கண்டார். அதிர்ச்சியுடன் விழித்த அவர் இதுபற்றி விசாரித்தார். அப்போது திருவண்ணாமலை தலத்தில் உள்ள தலவிநாயகர்தான் அவர் கனவில் வந்தது எனத் தெரிய வந்தது. உடனே அந்த அரசர் தனது யானை படை அனைத்தையும் அந்த விநாயகருக்கு காணிக்கை செலுத்தி மன்னிப்பு கேட்டு சென்றார். இதனால் அந்த தலவிநாயகருக்கு யானைதிறைக் கொண்ட விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது.

விஜயராகவ பெருமாள் கோவில்
வறுத்த பயறு முளைக்க வைக்கும் மரகதவல்லித் தாயாா்
காஞ்சிபுரத்திலிருந்து 13 கி.மீ. தூரத்திலும் உள்ளது திருப்புட்குழி என்னும் திவ்ய தேசம். பெருமாள் திருநாமம் விஜயராகவ பெருமாள்.
திருப்புட்குழி தலத்தின் தாயாா் 'மரகதவல்லி' எனும் திருநாமத்துடன் தனிக்கோவிலில் எழுந்தருளியுள்ளாா். 'குழந்தைப் பேறு' இல்லாத அன்பா்களுக்கு மழலை பாக்கியம் அளிப்பதில் மிகச் சிறந்த வரப்ரசாதியாக விளங்குகின்றாா் இந்த அன்னை.
திருப்புட்குழி தலத்தில் உள்ள 'ஜடாயு தீா்த்தத்தில்' குழந்தைப் பேறு வேண்டும் பெண்கள் நீராடி இரவில் வறுத்த பயறினைத் தங்கள் மடியில் கட்டிக்கொண்டு படுக்க, மறுநாள் விடிந்தவுடன் அப்பயறு முளைத்திருக்குமாயின் அவா்களுக்கு மழலைப் பேறு ஏற்படுவது உறுதி என்ற நம்பிக்கை உள்ளது. இதனாலேயே மரகதவல்லித் தாயாருக்கு 'வறுத்தபயறு முளைக்க வைக்கும் தாயாா்' என்ற திருநாமமும் வழங்கப்படுகின்றது.

விசுவநாத சுவாமி கோவில்
சிவபெருமானுக்கு ருத்ராட்ச மணி கவசம் சாத்தப்படும் தலம்
கும்பகோணத்திற்கு அருகே, சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேப்பெருமாநல்லூரில் வேதாந்த நாயகி சமேத விசுவநாத சுவாமி அருள்புரிகிறார். இவரை வணங்குவோருக்கு மறுபிறவி இல்லை என்று சொல்லப் படுகிறது.
இத்தலத்து இறைவனின் சிவலிங்கத் திருமேனிக்கு, இருபத்தியிரண்டாயிரம் ருத்ராட்ச மணிகளைக் கொண்டு ஆவுடை, பாணம், நாக படம் அமைத்து கவசமிடப்படுகிறது. ருத்ராட்ச கவசத்தை பிரதோஷம், சிவராத்திரி, மாத சிவராத்திரி மற்றும் சிவனுக்குரிய சிறப்பு நாட்களில் அணிவிக்கிறார்கள். இதுபோன்ற ருத்ராட்ச கவசம் அணிந்த மேனி உள்ள இறைவனை வேறு எங்கும் தரிசிக்க முடியாது.
இங்குள்ள நவகிரகங்கள் அனைத்தும் நடுவில் உள்ள சூரியனை நோக்கியே உள்ளன.

நின்ற நாராயணன் கோவில்
ஸ்ரீகிருஷ்ண பகவானின் பேரன் திருமணம் நடந்த திவ்யதேசம்
திருத்தங்கல் திவ்ய தேசம், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இத்தலத்தில் நின்ற நாராயணன் பெருமாள் கோவில் 'தங்காலமலை மீது அமைந்துள்ளது. மலைக்கோயிலான இதில் இரண்டு நிலைகள் உள்ளன. மூலவரான 'நின்ற நாராயணப்பெருமாள்' மேல் நிலையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இவரது திருமேனி சுதையால் ஆனது. இவருக்கு தெய்வீக வாசுதேவன், திருத்தங்காலப்பன் என்ற திருநாமங்கள் உண்டு. இரண்டாவது நிலையில் செங்கமலத்தாயார் தனி சன்னதியில் அருளுகிறாள். இவளுக்கு கமல மகாலட்சுமி, அன்னநாயகி, ஆனந்தநாயகி, அமிர்தநாயகி என்ற திருநாமங்கள் உண்டு.
மகாபலி சக்கரவர்த்தியின் மகன் வாணாசுரனுக்கு உஷை என்ற மகள் இருந்தாள். ஒருமுறை தன் கனவில் அழகிய ராஜகுமாரனைக் கண்டாள். தனது தோழி சித்ரலேகையிடம் அவனைப் பற்றி கூறி ஓவியமாக வரையக் கூறினாள். ஓவியம் வரைந்த பிறகு தான், அந்த வாலிபன் பகவான் கிருஷ்ணரின் பேரனான அநிருத்தன் என்பது தெரிய வந்தது. அவனையே திருமணம் செய்ய வேண்டுமென அடம்பிடித்தாள். சித்ரலேகை துவாரகாபுரி சென்று அங்கு உறங்கிகொண்டிருந்த அநிருத்தனை கட்டிலுடன் தூக்கிக் கொண்டு வாணாசுரனின் மாளிகைக்கு வந்தாள். விழித்து பார்த்த அநிருத்தன், தன் அருகே அழகி ஒருத்தி இருப்பதை கண்டான். நடந்தவற்றை அறிந்து, உஷையை காந்தர்வ மணம் புரிந்து கொண்டான். இதையறிந்த வாணாசுரன் அவர்களைக் கொல்ல முயன்றான். அப்போது அசரீரி தோன்றி,"வாணா! இத்தம்பதிகளை கொன்றால் நீயும் அழிந்து போவாய்," என ஒலித்தது. இதைக்கேட்ட வாணாசுரன் அநிருத்தனை சிறை வைத்தான். இதையறிந்த கிருஷ்ணர், வாணாசுரனுடன் போரிட்டு அவனை வென்றார். பின்பு முறைப்படி துவாரகையில் திருமணம் நடத்த முடிவு செய்தார். ஆனால் திருத்தங்கலில் தவமிருந்த புரூர சக்கரவர்த்தியின் விருப்பப்படி இத்தலத்தில் இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்து, நின்ற நாராயணப்பெருமாளாக அருள்பாலித்து வருகிறார்.

காசி விசுவநாத சுவாமி கோவில்
பஞ்ச முக பைரவர்
திருச்சி மாவட்டம் முசிறி வட்டத்தில் உள்ள தாத்தையங்கார்பேட்டை என்னும் தலத்தில் அமைந்துள்ளது காசி விசுவநாத சுவாமி கோவில்.
பொதுவாக சிவன் கோவில்களின் காவலராகக் கருதப்படும் பைரவர் நாய் வாகனத்துடன்தான் எழுந்தருளியிருப்பார். ஆனால் அவர் இத்தலத்தில் பஞ்ச முகங்களுடன், சம்ஹார மூர்த்தியாக சிம்ம வாகனத்தில் அருள் பாலிக்கிறார், அவருடைய இத்தகைய கோலத்தை நாம் வேறு எந்ந தலத்திலும் காண முடியாது.
திருமணத்தடை உள்ளவர்கள், தொழிலில் பாதிப்பு ஏற்பட்டவர்கள், ராகு திசை தோஷம் உடையவர்கள், எதிரிகளால் அல்லல் படுபவர்கள் போன்றவர்களுக்கு இவர் பரிகார தெய்வமாகத் திகழ்கிறார். மாதத்தின் வளர்பிறை, தேய்பிறை அஷ்டமி தினங்களில் பக்தர்கள் பூசணிக்காய், தேங்காய், மிளகு தீபமேற்றி வழிபட்டு தங்களது பரிகார பிரார்த்தனைகளை மேற்கொள்கின்றனர்.

தெய்வநாயகேசுவரர் கோயில்
யோக தெட்சிணாமூர்த்தியாக காட்சி தரும் தேவாரத் தலம்
காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 27 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம், திருஇலம்பையங்கோட்டூர்.
தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 13வது தலம். சுவாமியின் திருநாமம் தெய்வநாயகேசுவரர் , அரம்பேஸ்வரர்.
தேவகன்னியர்களான அரம்பையர்கள் வந்து வழிபட்டதால் அரம்பேஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறார். அதனால் இத்தலம் 'அரம்பையங்கோட்டூர்' என்று வழங்கப்பட்டு, காலப்போக்கில் 'இலம்பையங்கோட்டூர்' என்று மருவியது.
அரம்பையர்களான (தேவலோக கன்னிகள்) ரம்பை, ஊர்வசி, மேனகை ஆகிய மூவரும் இத்தலத்திற்கு வந்து, தங்களது அழகு என்றும் குறையாது இருக்க அருளும்படி சிவனை வேண்டி தவம் இருந்தனர். அவர்களுக்கு சிவன் யோக தெட்சிணாமூர்த்தியாக காட்சி தந்து என்றும் இளமையாக இருக்கும்படியாக அருளினார்.
இங்குள்ள தட்சிணாமூர்த்தி சின்முத்திரையை அடியார்களுக்கு காண்பிப்பது போல் இல்லாமல், தமது இதயத்தில் வைத்திருப்பதுபோல் காட்சி தருவது சிறப்பு. கல்லால மரத்தின் அடியில் இடக்கரத்தில் ருத்ராட்ச மாலை, திரிசூலம் கொண்டு, வலது பாதம் மேல் நோக்கியும் இடது பாதம் முயலகன் மீதும் இருக்கும் நிலையில் யோக தட்சிணாமூர்த்தியாகக் காட்சி தருகின்றார்.

தியாகராஜர் கோவில்
ஐங்கலக் காசு விநாயகர்
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மொத்தம் 84 விநாயகர்கள எழுந்தருளியிர்க்கிறார்கள். அவர்களில் ஒருவரான ஐங்கலக் காசு விநாயகர், தியாகராஜப் பெருமான் சன்னதிக்கும், வன்மீகநாதர் சன்னதிக்கும் நடுவில் தனிச் சன்னதி கொண்டு எழுந்தருளியிருக்கிறார். இவர் அழகிய சோழ மன்னன் தந்த காணிக்கையால் உருவாக்கப்பட்டவர். ஒரு கலம் தங்கம், ஒரு கலம் வெள்ளி, ஒரு கலம் செம்பு, ஒரு கலம் வெண்கலம், ஒரு கலம் பித்தளை ஆகிய ஐந்து மூலப்பொருட்களால் உருவாக்கப்பட்டவர்தான் ஐங்கலக் காசு விநாயகர்.