
மதுரை முக்தீஸ்வரர் கோவில்
கல்வியிலும், இசைக்கலையிலும் சிறந்து விளங்க அருள்புரியும் வீணாதர தட்சிணாமூர்த்தி
மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது முக்தீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் மரகதவல்லி தாயார். சிவனின் 64 திருவிளையாடல்களில், இரண்டாவது திருவிளையாடல் நடந்த இடம் தான், முக்தீஸ்வரர் கோவில்.
மதுரையின் பஞ்சபூதத் தலங்களாக ஐந்து சிவாலயங்கள் உள்ளன. நீர்த் தலமாக செல்லூர் திருவாப்புடையார் கோவில், ஆகாயத் தலமாக சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோவில், நில தலமாக இம்மையிலும் நன்மை தருவார் கோவில், நெருப்புத்தலமாக தெற்கு மாசிவீதி திருவாலவாயர் கோவில் ஆகியவை உள்ளன. வாயுத் தலமாக தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில் விளங்குகின்றது.
இக்கோவிலில் இரண்டு தட்சிணாமூர்த்திகள் எழுந்தருளி இருக்கிறார்கள். இறைவன் கருவறையின் சுற்றுச்சுவரில் ஒருவரும், இறைவன் சன்னதியின் முன் உள்ள தூணில் மற்றொருவரும் காட்சி அளிக்கிறார்கள். இவற்றில் தூணில் எழுந்தருளி உள்ள தட்சிணாமூர்த்தி மிகவும் விசேஷமானவர். இவர் கைகளில் வீணையை ஏந்தியபடி காட்சியருள்வதால் வீணை தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். பொதுவாகவே தட்சிணாமூர்த்தியை 'ஞானத்தின் கடவுள்' என்று போற்றுவோம். அவரை வணங்கி வழிபட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்களாம். இந்த தட்சிணாமூர்த்தி வீணை ஏந்தி இருப்பதால் இவரை வேண்டிக்கொண்டால் கல்வியிலும், இசைக்கலையிலும் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம்.
கர்மவினைகளால் துன்புறுபவர்கள் இந்த முக்தீஸ்வரர் ஆலயத்துக்கு வந்து வேண்டிக்கொண்டால், உடனே நிவாரணம் பெறுவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கோயில்பதாகை சுந்தரராஜ பெருமாள் கோவில்
தவம் செய்யும் நிலையில் அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் கருடாழ்வார்
சென்னை ஆவடியில் இருந்து, செங்குன்றம் செல்லும் வழியில் மூன்று கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கோயில்பதாகை சுந்தரராஜ பெருமாள் கோவில். தாயார் திருநாமம் சுந்தரவல்லி. இக்கோவில், 800 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
பொதுவாக பெருமாள் கோவில்களில், பெருமாள் எதிரில் கருடாழ்வார் நின்ற கோலத்தில் அஞ்சலி முத்திரையுடன் அல்லது கைகட்டி சேவகம் செய்யும் நிலையில் காட்சி அளிப்பார். ஆனால் இக்கோவிலில் கருடாழ்வார், தவம் செய்யும் நிலையில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். கருடாழ்வாரின் இந்த தோற்றத்தை, நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
ஆடி அமாவாசை கழித்து வரும் பஞ்சமி, கருட பஞ்சமி என அழைக்கப்படும். அன்று பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் கருடாழ்வாருக்காக, கருட பஞ்சமி என்ற விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த விரதம் குழந்தைகளுக்காகவும், உடன் பிறந்தவர்களுக்காகவும் கடைபிடிக்கப்படுகிறது.

தட்டான்குட்டை பச்சைத் தண்ணீர் மாரியம்மன் கோவில்
தண்ணீரில் விளக்கு எரியும் அதிசயம்
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே மூன்று கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தட்டான்குட்டை என்ற ஊரில் அமைந்துள்ளது பச்சைத் தண்ணீர் மாரியம்மன் கோவில்.
பல நூற்றாண்டுகள் பழமையான இக்கோவிலில் பல நூற்றாண்டுகள் பழமையான இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி திருவிழாவின் போது தண்ணீரில் விளக்கு எரியும் அதிசயம் நிகழ்கின்றது. இந்த அதிசயம் 300 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகின்றது. பங்குனி திருவிழாவின் போது, தண்ணீரில் விளக்கை எரிய வைக்க, அதிகாலையில் பூசாரிகள் கோவில் கிணற்றில் புனித நீராடி, குடத்தில் தண்ணீரை எடுத்து வருவார்கள். அப்போது, அவர்கள் அம்மன் முன்பு சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்த விளக்கில் இருந்த எண்ணெய் முழுவதையும் வடித்துவிட்டு கிணற்றில் இருந்து கொண்டு வந்த தண்ணீரை அந்த விளக்கில் ஊற்றுவார்கள். பின்னர், அந்த விளக்கில் தீபம் ஏற்றியபோது, விளக்கு, எண்ணெயில் எரிவது போல் தண்ணீரிலும் சுடர்விட்டு எரியும்.
இந்த அதிசயக் காட்சியை திருவிழாவிற்கு வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கண்டு, பக்தி பரவசம் அடைவார்கள். தண்ணீரில் அதிகாலையில் பற்ற வைக்கப்பட்ட விளக்கு, சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் எரிந்து பின்னர் அணைந்தவிடும். அதன்பின்னர் எண்ணெயை கொண்டு விளக்கில் மீண்டும் தீபம் ஏற்றப்படும். தண்ணீரில் விளக்கு எரியும் இந்த அதிசயம், திருவிழா நடக்கும் நாள் அன்று மட்டுமே நடைபெறும். மற்ற நாட்களில் வழக்கம்போல் எண்ணெயை கொண்டுதான் விளக்கு எரிய வைக்கப்படும்.
முன்னோர் காலத்தில் ஒருமுறை கோவில் விளக்கில் எண்ணெய் தீர்ந்து போனதாகவும், அப்போது கோவில் பூசாரி ஊர் தர்மகர்த்தாவிடம் அம்மனுக்கு விளக்கு வைக்க, எண்ணெய் வாங்க பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த தர்மகர்த்தா, ஒரு வித விரக்தியுடன் பணம் இல்லை என்றும், சக்தியுள்ள மாரியம்மன் தானே, தண்ணீரை ஊற்றி பற்றவை விளக்கு எரியும் என்றும் கூறியுள்ளார். அதேபோல் கோவில் பூசாரிகள் தண்ணீர் ஊற்றி விளக்கை பற்ற வைத்தனர். அப்போது அம்மன் முன்பு பற்ற வைக்கப்பட்ட விளக்கு சுடர் விட்டு எரிந்துள்ளது. அப்போது தண்ணீரில் விளக்கு எரிந்த அதிசயத்தை பார்த்த கோயில் பூசாரிகளும், பொதுமக்களும் வியப்பில் ஆழ்ந்தனர். இதனால் அன்று முதல் இங்குள்ள மாரியம்மன் ‘பச்சைத் தண்ணீர் மாரியம்மன்’ என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார்.

நாகப்பட்டினம் காயாரோகணேசுவரர் கோவில்
நாகை நீலாயதாக்ஷி அம்மனுக்கு நடத்தப்படும் தனித்துவமான ஆடிப்பூரத் திருவிழா
நாகப்பட்டினம் மாவட்டத்தின் தலைநகரான நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள தேவார தலம் காயாரோகணேசுவரர் கோவில் ஆகும். இறைவியின் திருநாமம் நீலாய தாட்சி. அம்பிகையை, பெண்ணின் ஐந்து பருவ நிலைகளில் சித்தரித்து வணங்கப்படும் ஐந்து அக்ஷித் தலங்களுள், இத்தலமும் ஒன்றாகும். இத்தலத்தில், நீலாயதாக்ஷி பூப்படைந்த கன்னியாக இருந்து அருள் பாலிக்கிறார். அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் ஒன்றான இத்தலம், நேத்திர (அம்பிகையின் கண் விழுந்த) பீடம் ஆகும்.
ஆடித் திங்களில் வரும் பூரம் நன்னாளில் தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த உலகை படைத்தும், காத்தும் வரும் உமாதேவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்துவதும் ஆடிப்பூரம் அன்றுதான்.
எல்லா கோவில்களிலும் ஆடிப்பூரத்தன்று அம்பிகைக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்துவது போல், நாகை நீலாயதாக்ஷி அம்மனுக்கு வளைகாப்பு நடத்தப்படுவதில்லை. அதற்கு காரணம் இந்த தலத்தில் தான் அம்பிகை கன்னிப் பருவம் எய்தினாள். அதனால் இந்தக் கோவிலில் ஆடிப்பூர நிகழ்ச்சிகள் சற்று தனித்துவமான முறையில் நடைபெறுகின்றது. இக்கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். பத்தாம் நாளான ஆடிப்பூரத்தன்று திருவிழா நிறைவு பெறும்.
ஆடிப்பூரத்தன்று காலையில் முளை கட்டின பச்சைப் பயிறுக்கு, சூர்ணோற்சவம் செய்து, அதை மூலவர் நீலாயதாக்ஷி அம்பிகையின் புடவைத் தலைப்பில் முடிச்சிட்டு அம்பிகையின் இடுப்பில் கட்டி விடுவார்கள். பின்னர் நீலாயதாக்ஷி அம்மனுக்கு வெள்ளை புடவை சார்த்தி வீதி புறப்பாடு நடைபெறும். இந்த முளைக்கட்டிய பச்சைப் பயிறு பிரசாதம், குழந்தைப் பேறின்மை, கர்ப்பப்பை பிரச்சனை, வயதாகியும் பூப்படையாமல் இருத்தல் போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்தாகும் என்பது ஐதீகம்.
ஆடிப்பூரத்தன்று மாலையில் நீலாயதாக்ஷி அம்மனுக்கு ஆடிப்பூரம் கழித்தல் என்னும் சடங்கு நடத்தப்படும். இச்சடங்கு பெண்கள் பருவம் அடைந்த போது செய்யப்படும் சடங்கு முறைகளை ஒத்ததாக இருக்கும்.
ஆடிப்பூரத்தன்று இரவு நீலாயதக்ஷி அம்மன் சிறப்பான ஆடை அலங்காரத்துடன், பின்னால் அழகிய ஜடை தரித்து ஜெகஜோதியாய் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பீங்கான் ரதத்தில் வீதி உலா வருவார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
ஆண்டாள் கையில் இருக்கும் கல்யாண கிளியின் சிறப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் என்றால் நம் நினைவுக்கு வருவது ஆண்டாள் கோவில். அந்தக் கோவிலில் எழுந்தருளி இருக்கும் ஆண்டாளின் சிறப்பு அடையாளங்களாக அவரது சாய்ந்த கொண்டையும், அவரது தோளில் வீற்றிருக்கும் கிளியும் விளங்குகின்றன.
மதுரை ஸ்ரீமீனாட்சிக்கு வலத்தோளில் கிளி இருக்கும். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு இடத்தோளில் கிளி இருக்கும். ஆண்டாளின் இடது கையில் உள்ள கிளி கல்யாண கிளி என்று அழைக்கப்படுகின்றது.இந்தக் கிளி தினமும் புதிதாகச் செய்யப்படுகிறது. கிளி மூக்கு – மாதுளம் பூ, மரவல்லி இலை – கிளியின் உடல்;, இறக்கைகள் – நந்தியாவட்டை இலையும் பனை ஓலையும்;, கிளியின் வால் பகுதிக்கு வெள்ளை அரளி மற்றும் செவ்வரளி மொட்டுகள்;, கிளியின் கண்களுக்கு காக்காய்ப் பொன் என்று சொல்லப்படும் பொருளைப் பயன்படுத்துவார்கள். இவற்றை பயன்படுத்தி கிளியை உருவாக்குகின்றனர். கிளியின் கழுத்துக்கு ஆபரணமாக பனை ஓலையும், பச்சிலைகளும் சாத்தப்படுகின்றன. கிளி அமர்ந்திருக்கும் பூச்செண்டானது நந்தியாவட்டைப் பூ, செவ்வரளிப்பூ ஆகியவற்றால் ஆனது. கிளியை தினசரி மாலை 6.30. மணிக்கு நடைபெறும் சாயரட்சை பூஜையின் போது தாயார் ஆண்டாளின் இடது தோளில் சார்த்துவது வழக்கம். அந்தக் கிளி, இரவு அர்த்தசாமப் பூஜை வரை ஆண்டாளின் தோளில் வீற்றிருக்கும். அதற்குப் பிறகு ஆண்டாளுக்குச் சார்த்தப்பட்ட மாலை முதலானவற்றைக் களையும் 'படி களைதல்' எனும் நிகழ்வின்போது, கிளியும் அகற்றப்படும்.
ஆண்டாள் சுகப்பிரம்மம் என்ற ரிஷியை கிளி ரூபத்தில் ரங்கநாதரிடம் அனுப்பியதாகவும், தூது சென்று வந்த கிளியிடம், என்ன வரம் வேண்டும்? என்று ஆண்டாள் கேட்க, சுகப்பிரம்மம், இதே கிளி ரூபத்தில் உங்கள் கையில் தினமும் இருக்க அருள் புரிய வேண்டும்! என்று வேண்டிக் கொண்டார் என்றும், அதனால் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றிருப்பதாகவும் புராணம் கூறுகிறது. ஆண்டாள், பெருமாளிடம் காதல் கொண்டு, காதல் தூது சென்றதால், அந்தக் கிளிக்கு ‘கல்யாணக் கிளி’ என்றும் பெயர் உண்டு .பக்தர்கள் தங்களின் கோரிக்கைகளை கூறும் பொழுது அதைக் கேட்கும் கிளியும் அடிக்கடி ஞாபகப்படுத்தி ஆண்டாளிடம் பிரார்த்தனையை நினைவு படுத்துமாம். பக்தர்கள் ஒரு கோரிக்கை வைத்தால், அதனை கல்யாணக் கிளி செய்து முடிக்குமாம்.

மயிலாடுதுறை மயூரநாதர் கோவில்
அக்னி கிரீடம் தரித்த சனி பகவானின் அபூர்வ தோற்றம்
மயிலாடுதுறை மாவட்டத்தின் தலைநகரான மயிலாடுதுறையின் மையப்பகுதியில் அமைந்துள்ள தேவாரத் தலம் மயூரநாதர் கோவில். இறைவியின் திருநாமம் அபயாம்பிகை. அம்பிகை மயில் வடிவில் சிவபெருமானை வழிபட்ட தலம் இது.
பொதுவாக சிவாலயங்களில் நவக்கிரகங்கள் வேதப் பிரதிஷ்டை முறையில் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் ஒரு சில தலங்களில் மட்டும் தான் அவை வேத ஆகம விதிப்படி அமைக்கப்பட்டிருக்கும். நவக்கிரகங்கள் வேதாகம விதிப்படி அமைக்கப்பட்டிருக்கும் போது, சூரிய பகவான் நடுவில் எழுந்தருளி இருப்பார். பாவக்கிரகங்களான சனி ,செவ்வாய், ராகு, கேது ஆகிய நால்வரும் வெளிச்சுற்றில் நான்கு மூலைகளில் எழுந்தருளிப்பார்கள். சுபகிரகங்களான சந்திரன்,புதன், குரு, சுக்கிரன் ஆகிய நால்வரும் சூரிய பகவானுக்கும் பாவக்கிரகங்களுக்கும் நடுவில் எழுந்தருளி இருப்பார்கள். நவகிரகங்களில் சனி பகவான் தான் வழக்கமாக அணியும் ராஜ கிரீடத்திற்கு பதிலாக, 'ஜுவாலா கேசம்' (அக்னி கிரீடம்) அணிந்திருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். பொதுவாக மாரியம்மன் போன்ற உக்கிரக நிலையில் உள்ள தெய்வங்கள் தான் அக்னி கிரீடம் அணிந்து இருப்பார்கள். இப்படி அக்னி கிரீடம் தரித்த சனி பகவானை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில்
நித்திய சுமங்கலி என்னும் சிறப்பு பெயர் கொண்ட மாரியம்மன்
பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்க அருளும் அம்மன்
ராசிபுரத்திலிருந்து நாமக்கல் செல்லும் சாலையில் அமைந்துள்ளது நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில். கொல்லிமலை, அலவாய் மலை, நைனாமலை, போத மலை என்னும் நான்கு மலைகளுக்கு மத்தியில் அமைந்த கோவில் இது. அம்மனுக்கு இத்தகைய சிறப்பு பெயர் கொண்ட தலம் வேறு எங்கும் கிடையாது. கருவறையில் நித்திய சுமங்கலி மாரியம்மன் சதுர வடிவ ஆவுடையாரில் அமர்ந்திருக்கின்றாள். நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு முன்பு, முதலில் இத்தலத்தில் சுயம்புவாக தோன்றிய மாரியம்மன் லிங்க வடிவில் காட்சி தருகிறாள். அம்மனுக்கு எதிரே யாளி வாகனம் இருக்கிறது.
பொதுவாக மாரியம்மன் கோயில்களில் விழாக்காலங்களில் மட்டும் அம்பிகைக்கு எதிரே கம்பம் நடப்படும். இந்த கம்பத்தை அம்பிகையின், கணவனாக கருதி பூஜை செய்வர். ஆனால், இத்தலத்தில் அனைத்து நாட்களிலும் அம்பிகை எதிரே கம்பம் இருக்கிறது. அம்பிகை, தனது கணவனாக கருதப்படும் கம்பத்தை நேரே பார்த்துக் கொண்டிருப்பதால் இவளிடம் வேண்டிக்கொள்ள, பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பர் என்பது ஐதீகம். எனவே இந்த அம்மனை, 'நித்ய சுமங்கலி மாரியம்மன்' என்று அழைக்கிறார்கள்.
குழந்தைவரம் வேண்டுவோர் இங்கு ஒரு வித்தியாசமான பிரார்த்தனை செய்கின்றனர். ஐப்பசி விழாவின்போது அம்மனுக்கு எதிரேயுள்ள பழைய கம்பத்தை எடுத்துவிட்டு, புதிய கம்பம் நடுகின்றனர். பழைய கம்பத்தை இங்கிருந்து சற்று தூரத்திலுள்ள தீர்த்தக் கிணற்றிற்கு கொண்டு செல்கின்றனர். அப்போது கம்பத்திற்கு தயிர் சாத நைவேத்யம் படைத்து பூஜை நடக்கிறது. குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் கம்பத்தை வணங்கி, எலுமிச்சை தீபமேற்றி, தயிர் சாத பிரசாதம் வாங்கி சாப்பிடுகின்றனர். இதனால் குழந்தை பாக்கியம் கிடைப்பதாக நம்புகிறார்கள். மேலும் ஒவ்வொரு மாதத்திலும் மகம் நட்சத்திரத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. அம்மனுக்கு எதிரே ஊஞ்சல் மண்டபம் உள்ளது. இங்குள்ள ஊஞ்சலில் அம்பிகையின் பாதம் பொறிக்கப்பட்டிருக்கிறது. புத்திரத்தடை உள்ள பெண்கள் இந்த ஊஞ்சலை ஆட்டி, அம்பிகையிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இதனால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் கோவில்
அமாவாசை தோறும் பெருமாள் சவுரி முடி அணிந்து கொண்டு, தன் நடையழகை காட்டும் திவ்ய தேசம்
நன்னிலம்-காரைக்கால் செல்லும் சாலையில் அமைந்துள்ள திவ்ய தேசம் திருக்கண்ணபுரம். பெருமாள் திருநாமம் நீலமேகப்பெருமாள். தாயாரின் திருநாமம் கண்ணபுர நாயகி. உற்சவரின் திருநாமம் சவுரிராஜப்பெருமாள். இந்த கோவிலில், உற்சவர் சௌரிராஜப் பெருமாள் தலையில் முடியுடன் காட்சி தருகிறார். சவுரி என்றால் முடி அல்லது அழகு என்று பொருள்.
108 திவ்ய தேசங்களுள் சிறப்புடையதாக மேலை வீடு திருவரங்கம்,வடக்கு வீடு - திருவேங்கடம் எனவும் தெற்கு வீடு -திருமாலிருஞ் சோலை(அழகர் கோயில்) எனவும் அமைந்த வரிசையுள் கீழை வீடாக திருக்கண்ணபுரம் போற்றப்படுகின்றது. சில பெருமாள் கோவில்களுக்கு தனிச் சிறப்பு வாய்ந்த சொல்வடைகள் உள்ளன. ஸ்ரீரங்கம் - நடை அழகு, ஸ்ரீவில்லிப்புத்தூர் - கோபுரம் அழகு, மன்னார்குடி - மதிலழகு,திருப்பதி - குடை அழகு என்ற வரிசையில் திருக்கண்ணபுரம் நடை அழகு என்பது தனிச்சிறப்பாகும்.
ராவண வதம் முடிந்தபின், ராமபிரான் அயோத்தி திரும்ப தயாரானார். ராவணனின் சகோதரனான விபீஷ்ணன், ராமபிரானைப் பிரிய மனமில்லாது மிகவும் வருந்தினான். விபீஷ்ணனை தம்பியாக ஏற்றுக்கொண்ட ராமபிரான், அவனுக்கு இத்தலத்தில் ஒரு அமாவாசை நாளில் பெருமாளாக நடந்து, தன் நடை அழகைக் காட்டி அருள் செய்தார். இதை உணர்த்துவது போல் இக்கோவிலில் விபீஷணனுக்கென்றே தனியாக ஒரு சந்நிதி உள்ளது. வீபிஷணர் பெருமாளிடம், 'நீ கிடந்த அழகை திருவரங்கத்திலே கண்டேன். நின் நடையழகையும் காண வேண்டும்' என்று வேண்ட, 'கண்ணபுரத்தில் காட்டுவோம் வா' என்று வீபிஷணணுக்கு இத்தலத்தில் ஒரு அமாவாசை நாளில் பெருமாளாக நடந்து, தன் நடை அழகைக் காட்டி அருள் செய்தார்.
இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் விதத்தில் ஒவ்வொரு அமாவாசை அன்றும் இக்கோவிலில், உச்சிகால பூஜையில் பெருமாள், சவுரி முடியுடன் கைத்தல சேவையில் விபீஷணனுக்கு நடந்து காட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. அப்போது சௌரிராஜப் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, சவுரிமுடி அணிவித்து புறப்பாடு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. அமாவாசையன்று சௌரிராஜப் பெருமாள் உலா செல்லும்போது மட்டுமே,அவருடைய திருமுடி தரிசனத்தை நாம் காண முடியும்.

பரமந்தூர் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில்
நவபாஷாணத்தால் செய்யப்பட்ட பெருமாள்
பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய மூவரது திருமேனிகளும் இணைந்திருக்கும் அபூர்வ வடிவமைப்பு
பெருமாளின் தலைக்கிரீடத்தில் கஜலட்சுமி அமைந்திருக்கும் சிறப்பு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து ஆவுடையார் கோவில் செல்லும் சாலையில் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பரமந்தூர்
ஆதிகேசவ பெருமாள் கோவில். ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் வேத வியாசரின் தந்தை பராசர மகரிஷியால் வழிபட்டதால், இத்தலம் 'பராசர க்ஷேத்திரம்' என்றும் அழைக்கப்பட்டது. 7000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.
கருவறையில் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் 8 அடி உயரத் திருமேனி உடையவராய், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக நின்ற கோலத்தில் அருள்புரிகிறார். அவர் நான்கு கைகளுடன், மேல் கைகளில் சங்கு மற்றும் சக்கரத்தை ஏந்தியுள்ளார், கீழ் வலது கை அபய ஹஸ்தத்திலும் இடது கை கதி ஹஸ்தத்திலும் உள்ளது. பெருமாள் மற்றும் இரு தாயர்கள் திருமேனி நவபாஷாணத்தால் செய்யப்பட்டது.மேலும் மூவரது திருமேனிகளும் ஒன்றோடொன்று இணைந்து காணப்படும். இப்படி திருமேனிகள் இணைந்திருக்கும் அமைப்பானது வேறு எந்த பெருமாள் கோவிலிலும் நாம் காண முடியாது. அந்தக் கோவில்களில் எல்லாம் மூவரின் திருமேனிகள் தனித்தனியாகத்தான் இருக்கும். மேலும் பெருமாளின் தலைக்கிரீடத்தில் கஜலட்சுமி அமைந்திருப்பதும் மற்றும் ஒரு சிறப்பாகும்.
இப்பெருமாள் நவபாஷாணத்தால் ஆனவர் என்பதால் திருமஞ்சனம் ஏதும் கிடையாது. வருஷத்துக்கு ஒரு முறை பெருமாளுக்கு தைலக்காப்பு நடைபெறும்.
இந்த பெருமாள் கல்யாண திருக்கோலத்தில் அருள்வதாக ஐதீகம். ஆகவே கல்யாண வரம் வேண்டும் அன்பர்கள், இவரின் சன்னதிக்கு வந்து பெருமாளை மனமுருக வேண்டி செல்கின்றனர். இந்த பெருமானின் திருவருளால் தடைகள் நீங்கி விரைவில் கல்யாண வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதேபோல் குழந்தை வரம் வேண்டியும் வெகுநாட்களாக அவதிப்படும் அன்பர்கள் இந்த பெருமாளை வேண்டி வணங்கி செல்கின்றனர். இப்பெருமாள் தீராத நோய்களையும் தீர்த்து வைக்கின்றார்.

அன்பில் மாரியம்மன் கோவில்
சமயபுரம் மாரியம்மனின் மூத்த சகோதரி
கண் நோய்களை தீர்க்கும் பச்சிலை மூலிகை சாறு
திருச்சி மாவட்டம் லால்குடியில் இருந்து எட்டு கி.மீ. தொலைவில் உள்ளது அன்பில் மாரியம்மன் கோவில். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு உட்பட்ட உபகோவில் ஆகும். 700 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.
பிரசித்தி பெற்ற ஏழு மாரியம்மன் கோவில்களில் இக்கோவில் ஒன்றாகும். சமயபுரம், நார்த்தா மலை, வீரசிங்க பேட்டை, கண்ணனூர், புன்ணை நல்லூர், திருவேற்காடு, அன்பில் மாரியம்மன் ஆகிய சிறப்பு மிக்க மாரியம்மன் தலங்களில் அன்பில் மாரியம்மன் மற்ற அனைத்து மாரியம்மன்களுக்கும் மூத்த சகோதரியாக விளங்குகின்றாள். அன்பில் மாரியம்மனுக்கு ஏழு குழந்தைகள் உள்ளன. சமயபுரம் மாகாளிகுடி கோயில் அருகில் வலது புறத்தில் ஓர் தெய்வீக வீட்டில் புற்றோடு, தன் குழந்தையோடு தங்கை மகமாயி அனுமதியோடு அமர்ந்திருக்கிறாள், மற்ற கோவில்களில் மாரியம்மனுக்கு குழந்தை கிடையாது.
குழந்தை வேண்டி அம்மனை வழிபட்டால் பலன் கிடைக்கும். கண் சம்பந்தமான நோய்கள் தீர இந்த அம்மனை வழிபடலாம். நண்பகல் 12.00 மணியளவில் கண் குறைபாடு உள்ளவர்களுக்கு பூசாரியால் பச்சிலை மூலிகைகளால் ஆன சாறு கண்களில் பிழிந்து விடப்படுகிறது. இதனால் ஏராளமான பக்தர்கள் கண் நோயில் இருந்து குனமடைவதாக நம்பப்படுகிறது. அம்மை இருக்கும் காலத்தில் இந்த கோவிலில் வந்து தங்கி பூஜை செய்தால் பலன் கிடைக்கும்.

பிள்ளைப்பாக்கம் வைத்தீஸ்வரன் கோவில்
பக்தர்களின் நோய்களை தீர்த்து வைக்கும் வைத்தீஸ்வரன்
வட வைத்தீஸ்வரன் கோவில் என்று போற்றப்படும் தலம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ஐந்து கி.மீ. தொலைவில் உள்ளது பிள்ளைப்பாக்கம் எனும் கிராமம். இந்த கிராமத்தில் அமைந்துள்ள கோவிலின் இறைவன் திருநாமம் மருந்தீஸ்வரர், வைத்தீஸ்வரன். இறைவியின் திருநாமம் தையல் நாயகி. இக்கோவில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
இத்தலத்து இறைவன் தன்னை நாடிவரும் பக்தர்களின் நோய்களை தீர்த்து வைப்பதால், இந்த கோவில் வட வைத்தீஸ்வரன் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இப்படி இந்த கோவில் சிறப்பு பெயர் பெற்றதற்கு பின்னணியில் ஒரு வரலாற்று நிகழ்ச்சி உள்ளது.
முற்காலத்தில் ஒரு சமயம் இந்த கோவிலின் அர்ச்சகர் மகனை பாம்பு கடித்தது. அர்ச்சகர் தனது மகனை இறைவன் முன் நிறுத்தி பிரார்த்தனை செய்தார். அப்போது இறைவன், பசுவின் வடிவில் வந்து சிறுவனின் பாம்பு கடித்த பகுதியை நக்கினார். உடனே அர்ச்சகரின் மகன் குணமடைந்து எழுந்தான். இதனால் இத்தலத்து இறைவனின் குணப்படுத்தும் சக்தி வெளிச்சத்திற்கு வந்தது. அதுவரை மருந்தீஸ்வரர் என்று அழைக்கப்பட்டு வந்த இறைவன், இந்த சம்பவத்திற்கு பின்னால், வைத்தியநாத சுவாமி, வைத்தீஸ்வரன் என்று அழைக்கப்பட்டார். இத்தலமும் வட வைத்தீஸ்வரன் கோவில் என்று பெயர் பெற்றது. இந்த கிராமத்தின் முந்தைய பெயர் சோழவளவன் நாடு. இந்த சம்பவத்திற்குப் பிறகு, இந்த கிராமம் பிள்ளை நக்கிய பக்கம் என்று அழைக்கப்பட்டது. அதுவே பின்னர் பிள்ளைப்பாக்கம் என்று ஆனது.

திருப்பந்துறை சிவானந்தேசுவரர் கோவில்
தலையில் குடுமியுடன், தியான நிலையில் உள்ள முருகன்
வாய் பேச முடியாதவர்கள் வழிபட வேண்டிய கோவில்
கும்பகோணத்திலிருந்து எரவாஞ்சேரி வழியாக மயிலாடுதுறை செல்லும் வழியில் 12 கி.மீ. தொலைவில் உள்ள தேவார தலம் திருப்பேணுபெருந்துறை. தற்போது 'திருப்பந்துறை' என்று அழைக்கப்படுகிறது. இறைவன் திருநாமம் சிவானந்தேசுவரர். இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை. இத்தலத்தில் முருகன் தான் சிறப்புக்கு உரியவர். ஆடி கிருத்திகை இத்தலத்தில் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.
இக்கோவிலில் சுவாமி சன்னிதியின் முன்பு முருகப்பெருமான் தண்டாயுதபாணி என்னும் திருநாமத்துடன், சின் முத்திரையுடன், கண் மூடி நின்ற நிலையில் தியானம் செய்யும் கோலத்தில் இருக்கின்றார். அவரது காது நீளமாக வளர்ந்திருக்கிறது. தலையில் குடுமி இருக்கிறது. தலையில் குடுமியுடன் தியான நிலையில் உள்ள முருகனை வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாது.
பிரம்மாவுக்கு பிரணவத்தின் பொருள் தெரியாததால், முருகப்பெருமான், அவரை சிறையில் அடைத்தார். அதனால் ஏற்பட்ட தோஷத்தினால் முருகப்பெருமானுக்கு பேசும் திறன் குறைந்தது. தோஷம் நீங்குவதற்கு முருகப்பெருமான், இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றார். எனவே வாய்பேசமுடியாதவர்கள், திக்கு வாய் உள்ளவர்கள் கோவில் எதிரே உள்ள மங்கள தீர்த்தத்தில் நீராடி, முருகனுக்கு 45 நாட்கள் தேனபிஷேகம் செய்து, சிவனுக்கு அர்ச்சனை செய்தால் விரைவில் பேச்சு வரும் என்பது நம்பிக்கை.

அருகன்குளம் காட்டுராமர் கோவில்
அசல் ராமரின் அழகோடு ஒப்பிடத் தோன்றும் காட்டுராமர்
ஜடாயுவுக்கு ராமரே மகனாக இருந்து தர்ப்பணம் கொடுத்த இடம்
திருநெல்வேலியில் இருந்து ஐந்து கி.மீ .தொலைவில் அமைந்துள்ளது, அருகன்குளம் எனும் கிராமம். தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள இந்த ஊரில், அருகம்புல் அதிகம் கொண்ட குளம் இருக்கிறது. இதனால் இந்தப் பகுதி அருகன் குளம் என்று அழைக்கப்படுகிறது.இங்கு மயில்கள் நிறைந்த அமைதியான வனப்பகுதியில் ராமர் கோயில் அமைந்துள்ளது.காட்டுப்பகுதியில் இந்த கோவில் இருப்பதால் இது காட்டுராமர் கோவில் என அழைக்கப்படுகிறது.இக்கோவில் 2000 ஆண்டுகளுக்கு முந்தையது.
ராமபிரான் வனவாசத்தில் இருந்தபோது, சீதையை ராவணன் கடத்தினான். சீதையை ராவணன் கடத்துவதை அருகன்குளம் பகுதியில் வைத்துப் பார்த்த ஜடாயு என்ற கழுகு அரசன், ராவணனை தடுத்து நிறுத்தினான். இதனால் ராவணனுக்கும் ஜடாயுவுக்கும் போர் ஏற்பட்டது.இதில் ஜடாயுவின் இறக்கையை ராவணன் வெட்டினான். இதில் காயமடைந்த ஜடாயு, உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தது. அந்த வழியாக வந்த ராமரும், லட்சுமணரும் துடித்துக்கொண்டு இருந்த ஜடாயுவை பார்த்தனர். உடனே ராமர், ஜடாயுவை தனது தொடையில் தூக்கிவைத்து தடவிக்கொடுத்தார். அப்போது ஜடாயு, சீதையை ராவணன் இலங்கைக்கு கடத்திச் செல்கிறான் என்ற தகவலை சொல்லியது. மேலும் தான் இறந்ததும் இறுதிச்சடங்கை ராமர் செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்து விட்டு இறந்தது. அதன்படி ராமபிரான் ஜடாயுவுக்கு, தாமிரபரணி ஆற்றங் கரையில் இறுதிச்சடங்கு செய்தார். அப்போது ஜடாயுவுக்கு தீர்த்தம் கொடுப்பதற்காக ஜடாயு தீர்த்தத்தை உருவாக்கி அதில் இருந்து தண்ணீர் எடுத்து கொடுத்தார். ஜடாயுவுக்கு ராமரே மகனாக இருந்து தர்ப்பணம் கொடுத்த இடம், தாமிரபரணி நதிக்கரையில் 'ஜடாயுத்துறை' யாக இன்றும் அழைக்கப்படுகிறது.
கோவில் கருவறையில் ராமபிரான் கம்பீரமான தோற்றத்துடன், இடது கையில் அலங்காரமாக வடிவமைக்கப்பட்ட வில்லையும் வலது கையில் வாளையும் ஏந்தி நிற்கிறார், முதுகில் ஒரு அம்பறாத்தூணி தெளிவாகத் தெரியும். அவரது வலது பக்கத்தில், சீதை இடது கையில் ஒரு பூவை ஏந்தியுள்ளார், அவரது இடது பக்கத்தில், லட்சுமணன் முதுகில் ஒரு வில்லையும் வாளையும் ஏந்தியுள்ளார். இந்த மூன்று பெரிய மூர்த்திகளின் அழகு இணையற்றது.இந்த காட்டு ராமரின் அழகுக்கு, அசல் ராமரின் அழகே இணையாக இருக்க முடியுமா என்ற சந்தேகத்தை எழுப்பும் வகையில் இந்த ராமர் மிகவும் அழகுடன் காட்சி அளிக்கிறார்.
தோஷங்களாலும் கல்யாணத் தடையாலும் வருந்தும் அன்பர்கள், இங்கு வந்து வழிபட்டால், விரைவில் அவர்களுக்குக் கல்யாண வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில்
நெற்றிக்கண்ணுடன் மகாலட்சுமி இருக்கும் அபூர்வ தோற்றம்
சிவபெருமானுக்கு துளசியால் அர்ச்சனை செய்யப்படும் தலம்
கும்பகோணம் நன்னிலம் சாலையில், ஸ்ரீவாஞ்சியம் தலத்திற்கு மிக அருகே 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது அச்சுதமங்கலம். இறைவன் திருநாமம் சோமநாதர். இறைவியின் திருநாமம் சௌந்தர்ய நாயகி. திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாக வைத்துப் பாடப் பெற்ற தலம்.
அச்சுதன் என்னும் திருமால், பிரிந்து சென்ற தன் மனைவி மங்கலம் என்னும் மகாலட்சுமியை, இத்தலத்து இறைவனைப் பூஜித்து திரும்பப் பெற்றதால் இத்தலத்திற்கு அச்சுதமங்கலம் என்ற பெயர் ஏற்பட்டது. இக்கோவிலில் தனிச்சன்னதியில் மகாவிஷ்ணுடன் எழுந்தருளி இருக்கும் மகாலட்சுமிக்கு நெற்றிக்கண் இருப்பது ஒரு சிறப்பம்சமாகும். அதன் பின்னணியில் ஒரு புராண வரலாறு உள்ளது.
ஒரு சமயம் கஜேந்திரன் என்னும் யானையானது, முதலையிடம் சிக்கிக் கொண்டபோது, ஆதிமூலமே காப்பாற்று என்று மகாவிஷ்ணுவிடம் அபயக்குரல் எழுப்பியது. அப்போது மகாவிஷ்ணு விரைந்து வந்து முதலையிடம் இருந்து யானையை மீட்டு, அதற்கு மோட்சம் அளித்தார். அப்படி யானையை காப்பாற்ற மகாவிஷ்ணு விரைந்து வந்தபோது, மகாலட்சுமியை தனியே விட்டு வந்ததால், மகாலட்சுமி கோபமுற்று அவரை விட்டு பிரிந்து சென்றாள். பிரிந்து சென்ற மகாலட்சுமியை மீண்டும் அடைய, மகாவிஷ்ணு இத்தலத்து இறைவன் சோமநாதரை பூஜை செய்ய ஆரம்பித்தார். 48 ஆண்டுகள் கடந்தும், இறைவன் அவருடைய கோரிக்கையை நிறைவேற்றவில்லை. இதுவரை எந்த ஒரு பொருளால் இறைவனை யாரும் பூஜை செய்யவில்லையோ, அதைக் கொண்டு பூஜை செய்தால் இறைவன் தம்முடைய கோரிக்கை நிறைவேற்றுவார் என்ற அடிப்படையில், மகாவிஷ்ணு தமக்கு பிரியமான துளசியைக் கொண்டு இறைவனை பூஜை செய்ய ஆரம்பித்தார். இதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமான், மகாலட்சுமியை மகாவிஷ்ணுடன் சேர்ந்து இருக்குமாறு பணித்தார். அதற்கு மகாலட்சுமி சிவபெருமானிடம் இருக்கும் நெற்றிக்கண் போல் தனக்கும் ஒன்று வேண்டும் என்று அவரிடம் வரம் கேட்டு நெற்றிக்கண்ணை பெற்றுக்கொண்டார். அதனால் தான் இத்தலத்தில் மகாலட்சுமிக்கு நெற்றிக்கண் அமைந்துள்ளது. மகாலட்சுமியின் இந்த நெற்றிக்கண்ணை, அபிஷேகத்தின் போது நாம் தரிசிக்க முடியும்.
இத்தலத்தில் மகாவிஷ்ணு துளசி கொண்டு சிவபெருமானை பூஜித்ததால், இன்றும் இக்கோவிலில் சிவபெருமானுக்கு துளசியால் அர்ச்சனை செய்யப்படுகிறது.

பிள்ளைப்பாக்கம் வைத்தீஸ்வரன் கோவில்
சூலாயுதம் ஏந்தி இருக்கும் தட்சிணாமூர்த்தியின் அபூர்வ தோற்றம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ஐந்து கி.மீ. தொலைவில் உள்ள பிள்ளைப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது வைத்தீஸ்வரன் கோவில். இறைவியின் திருநாமம் தையல் நாயகி.
இக்கோவிலில் எழுந்தருளி உள்ள தட்சிணாமூர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தவர். இவர் கால தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகின்றார். இவர் கையில் சூலாயுதம் ஏந்தி நாக ஆபரணத்துடன் காட்சியளிக்கிறார். இப்படி சூலாயுதம் ஏந்திய தட்சிணாமூர்த்தியை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
நாகாபரணம் அணிந்த இவரை வணங்கினால் நாக தோஷங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவில்
தென் திருப்பதி என்று போற்றப்படும் தலம்
திருப்பதி வெங்கடாசலபதி நிரந்தரமாக தங்கி இருக்கும் திருவண்ணாமலை
ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வடக்கே சுமார் 5 கி.மீ தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பின்புறத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை என்ற ஊரில் அமைந்துள்ளது சீனிவாச பெருமாள் கோவில். பெருமாள் சன்னிதியை அடைய 150 படிகளுக்கு மேல் ஏற வேண்டும். எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவிலில் மூலவர் ஸ்ரீனிவாச பெருமாள் ஒன்பதடி உயரத் திருமேனியுடன் காட்சி அளிக்கிறார். திருப்பதியில் இருப்பது போன்று நின்ற நிலையில் பெருமாள் அருள் பாலிப்பதால் ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், இக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் - ரெங்கமன்னார் திருக்கல்யாணத்தை காண திருப்பதி வெங்கடாசலபதி தனது பரிவாரங்களுடன் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து கொண்டிருந்தார். அவர் இந்தத் தலத்தை கடந்தபோது நாரதர், ஆண்டாள் ரங்கமன்னார் திருமணம் நடந்து முடிந்துவிட்டது என்று கூறினார்.அதனால் வெங்கடாசலபதி திருப்பதிக்குத் திரும்ப முடிவு செய்தார், இருப்பினும் ஆண்டாள் அவரை இந்த இடத்திலேயே தங்கி, தனக்கும் பக்தர்களுக்கும் தனது மூத்த சகோதரனாக இருந்து தரிசனம் அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆண்டாளால் அமைதியடைந்த ஸ்ரீனிவாச பெருமாள், அவளுடைய வேண்டுகோளை ஏற்று, இந்த மலையின் உச்சியில் நிரந்தரமாக தங்கினார். திருப்பதி வெங்கடாசலபதி இத்தலத்தில் தங்கி இருப்பதால், இக்கோவில் தென் திருப்பதி என அழைக்கப்படுகிறது.
திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கு நேர்த்திக் கடன் செலுத்தலாம் என்றும் திருப்பதி சென்றால் என்ன பலன் கிடைக்குமோ அதே பலன் சீனிவாச பெருமாள் கோயிலுக்கு வந்தாலும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருச்செந்தூர் தூண்டுகை விநாயகர் கோவில்
பக்தர்களுக்கு செந்தில் வேலவன் இருக்கும் இடத்தை காட்டும் தூண்டுகை விநாயகர்
முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடு திருச்செந்தூர் ஆகும். திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்லும் பாதையின் தொடக்கத்தில் தூண்டுகை விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலிலிருந்து முருகன் கோவில் இருநூறு மீட்டர் தொலைவில் உள்ளது.
இவ்விநாயகப் பெருமான் தம் தம்பியாகிய செந்தில் வேலவன் இருக்கும் இடத்தை பக்தர்களுக்குத் தூண்டிக் காண்பிக்கும் வகையில் எழுந்தருளியுள்ளதால் இப்பெயர் பெற்று விளங்குகின்றார். திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்கள் அனைவரும் முதலில் தூண்டுகை விநாயகரை வணங்கி தேங்காய் உடைத்து விட்டு, பின்பு முருகனை தரிசிப்பது என்பது வழக்கமாக உள்ளது. முருகனுக்கு பால்குடம் மற்றும் காவடி எடுக்கும் பக்தர்கள் தூண்டுகை விநாயகர் கோயிலில் இருந்துதான் பால்குடம் மற்றும் காவடி எடுத்து வருகின்றனர்.
திருச்செந்தூர் முருகன் கோவில் ராஜகோபுரம் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்தபோது, கட்டுமானத் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத அளவிற்கு நிதி தட்டுப்பாடு இருந்தது. எனவே கட்டுமானத் தொழிலாளர்களுக்கு, திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி பிரசாதத்தை பன்னீர் இலைகளில் வைத்து சம்பளமாக கொடுத்தனர். வேலை நாளின் முடிவில் தூண்டுகை விநாயகரிடம் பிரார்த்தனை செய்த பிறகு, தொழிலாளர்கள் பன்னீர் இலை விபூதி பொட்டலத்தைத் திறந்து பார்த்தால், அதில் இருக்கும் விபூதியானது அன்றைய தினம் அவர்கள் செய்த வேலைக்கு ஏற்ப தங்க நாணயங்களாக மாறி இருக்கும் அதிசயம் நிகழ்ந்தது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில்
வேலுக்கு மட்டும் அபிஷேகம் நடக்கும் அறுபடை வீடு
மதுரைக்கு தென்மேற்கில் 8 கி.மீ.தொலைவில் உள்ள அறுபடை வீடு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில். அறுபடை வீடுகளில் இத்தலம் முதல் படை வீடாகும். மற்ற ஐந்து அறுபடை வீடுகளில் நின்ற கோலத்தில் காட்சி தரும் முருகப்பெருமான் இத்தலத்தில் தெய்வானையை மணம் முடித்த கோலத்தில் அமர்ந்தபடி காட்சி தருகிறார். இவரது அருகில் நாரதர், இந்திரன், பிரம்மா, நின்றகோலத்தில் வீணையில்லாத சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும், மேலே சூரியன், சந்திரன், கந்தர்வர்களும் இருக்கின்றனர். சுப்பிரமணியருக்கு கீழே அவரது வாகனமான யானை, ஆடும் உள்ளது.
இங்கு முருகப்பெருமான் குடவரை மூர்த்தியாக இருப்பதால் அவருக்கு அபிஷேகம் கிடையாது. அதற்கு பதிலாக புனுகு மட்டுமே சாற்றப்படுகிறது. அபிஷேகம் அவரது வேலுக்கே நடைபெறுகின்றது. அறுபடை வீடுகளில் வேலுக்கு அபிஷேகம் நடக்கும் கோவில் இது மட்டும் தான். சூரனை ஆட்கொண்டு வெற்றி வேலுடன் முருகப்பெருமான் இங்கு வந்து அமர்ந்ததால், வேலுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.

தொடுகாடு பீமேஸ்வரர் கோவில்
ஜோதிடக் கலை தொடர்புடைய முதல் படைப்பு எழுதப்பட்ட தலம்
ஒரு முருங்கைக் காய், ஒரு மாம்பழம், ஒரு தேங்காய், ஒரு வாழைப்பழம் என்று ஒற்றை எண்ணிக்கையிலே நைவேத்தியம் படைக்கப்படும் வித்தியாசமான நடைமுறை
திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து நான்கு கி.மீ. தொலைவில் தொடுகாடு என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது பீமேஸ்வரர் கோவில். பீமேஸ்வரரின் முந்தைய பெயர் வீமேஸ்வரர், காலப்போக்கில் அது பீமேஸ்வரர் ஆனது. இறைவியின் திருநாமம் நகைமுகவல்லி . இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
இக்கோவில் இறைவன் வீமேஸ்வரர் சொல்லச் சொல்ல, 63 நாயன்மார்களில் ஒருவரான ஐயடிகள் காடவர்கோன் 'வீமேஸ்வர உள்ளமுடையான்' என்னும் ஜோதிட நூலை இயற்றினார். ஜோதிடத்துடன் தொடர்புடைய முதல் படைப்பு, இந்த கோவிலில் தான் எழுதப்பட்டது என்பது இத்தலத்தின் சிறப்பாகும். எனவே இத்தலம் ஜோதிடத்தின் பிறப்பிடம் என்று கூறப்படுகிறது. இங்கு பூஜையின் போது ஒரு முருங்கைக்காய், ஒரு மாம்பழம், ஒரு தேங்காய், ஒரு வாழைப்பழம் என்று ஒற்றை எண்ணிக்கையிலேயே, தினமும் இறைவனுக்கு நைவேத்தியம் படைத்து வழிபாடு நடத்துகின்றனர். இது வேறு எந்த தலத்திலும் பின்பற்றாத வித்தியாசமான நடைமுறை ஆகும்.
இத்தலத்தில் கற்புக்கரசி நளாயினி தனது கணவரின் சாப விமோசனம் பெற வழிபாடு செய்தார். எனவே, திருமணத்தில் பிரச்சினைகள் உள்ளவர்கள் அல்லது தங்கள் மனைவியைப் பிரிந்தவர்கள், பீமேஸ்வரரை பிரார்த்தனை செய்தால், அவர்கள் ஒன்றிணைந்து மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என்பது ஐதீகம். இத்தலத்து இறைவன் திருமேனியானது 16 பட்டைகள் கொண்ட சோடச லிங்கமாக விளங்குவதால், இவரை வழிபட்டால் 16 வகை செல்வங்களையும் பெறலாம்.

இரும்பை மாகாளேசுவரர் கோவில்
கையில் ஏடு ஏந்தியிருக்கும் சந்திரனின் அபூர்வ தோற்றம்
கல்வி , கலைகளை பக்தர்களுக்கு அருளும் கலா சந்திரன்
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வானூர் வட்டத்தில் அமைந்துள்ள தேவாரத்தலம், இரும்பை மாகாளேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் மதுரசுந்தர நாயகி. இத்தலம் திண்டிவனத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து 9 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
இக்கோவில் பிரகாரத்தில் சந்திரன், மேற்கு பார்த்தபடி தனிச்சன்னதியில் எழுந்தருளி இருக்கிறார். இவர் தனது இடது கையில் ஏடு ஒன்றை ஏந்தியிருப்பது வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாத காட்சியாகும். கையில் ஏடு வைத்திருப்பது, இவர் கல்வி, கலைகளுக்கு காரகனாக விளங்குகிறார் என்பதை குறிப்பிடுகிறது. எனவே இவர் கலா சந்திரன் என்று குறிப்பிடப்படுகின்றார். பக்தர்கள் இவருக்கு பால் சாதம் நைவேத்யமாக படைத்து வணங்குகின்றனர். இதனால் கல்வி, கலைகளில் சிறந்து விளங்கலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மனோதிடம் அதிகரிக்கவும் இவரை வழிபடலாம். ஒருவருக்கு மாதத்தில், உத்தேசமாக, இரண்டரை நாள் வரை சந்திராஷ்டமம் வரும். இந்த காலத்தில் மனோதிடம் குறையும். செயல்களில் தடை உண்டாகும் என்பது ஜோதிடவிதி. இந்த பாதிப்பு சந்திராஷ்டம காலத்தில் ஏற்படக்கூடாது என வேண்டி, கலா சந்திரனுக்கு பால்சாதம் நைவேத்யம் செய்து வழிபடலாம்.
.