தீர்த்தாண்டதானம் சகல தீர்த்தமுடையவர் கோவில்
ராமர் வழிபட்ட தீர்த்தாண்டதானம்
தை மாத அமாவாசையில் திதி கொடுத்தால் நற்பலன்களை தரும் தலம்
இராமநாதபுர மாவட்டம் தொண்டியிலிருந்து 15 கீ.மீ. தொலைவிலுள்ள தலம்தான் தீர்த்தாண்டதானம். இத்தலத்து இறைவன் திருநாமம் சகல தீர்த்தமுடையவர். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. இத்தலத் தீர்த்தமான கடலில் நீராடி, பின்னர் இறைவனை வழிபட்டால் 64000 தீர்த்தங்களில் நீராடிய புண்ணியமும், பலனும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இராமபிரான், இலட்சுமணனுடன் சீதா பிராட்டியை தேடி இவ்வழியே இலங்கைக்கு சென்றார். அப்போது இவ்விடத்தில் சற்றுநேரம் இளைப்பாறினார். அவருக்கு தாகம் எடுக்கவே, வருணபகவான் ஒரு தீர்த்தம் உண்டாக்கி கொடுத்தார். ராமரும் மகிழ்ச்சியுடன் அந்த நீரை அருந்தினார். தீர்த்தாண்டதானத்தில் ராமர் இருப்பதையறிந்து அங்கு வந்த அகத்தியர், 'ராவணன் சிறந்த சிவபக்தன். சிவபெருமானின் அருள் இல்லாமல் அவனை வீழ்த்துவது கடினம். சிவபெருமானை வணங்கிய பின்னர் இலங்கைக்கு செல்லுங்கள்' என்று தெரிவித்தார். இதனையடுத்து அருகே உள்ள திருப்புனல்வாசலில் வீற்றிருக்கும் விருத்தபுரீஸ்வரரை நினைத்து ராமர் வழிபட்டார்.
இதனால் மகிழ்ந்த சிவபெருமான் ராமர் முன்பு தோன்றினார். பின்னர் ராமருக்கு அருள் புரிந்த சிவபெருமான், அருகிலுள்ள கடற்கரையில், தந்தை தசரதனுக்கு தர்ப்பணம் செய்து விட்டு இலங்கைக்கு செல்லுமாறு கேட்டுக் கொண்டார். அப்போது வருணபகவான், 'ராமர் வழிபட்ட இடத்தில் சிவபெருமான் மேற்கு திசை நோக்கி காட்சியளிக்க வேண்டும், ராமருக்கு தீர்த்தம் கொடுத்ததால், அப்பகுதிக்கு தீர்த்தாண்டதானம் என்று பெயர் விளங்க வேண்டும். அங்குள்ள கடலில் நீராடி ஈசனை வழிபடுபவர்கள் அனைத்து தீர்த்தங்களிலும் நீராடியதற்கு ஒப்பான பலனை பெற வேண்டும்' என்று வரமளிக்குமாறு சிவபெருமானிடம் வேண்டினார். சிவபெருமானும் அப்பகுதியில் சர்வதீர்த்தேஸ்வரராக கோவில் கொண்டார் என்பது புராணம்.
ராமர் தர்ப்பணம் செய்த கடற்கரையில் பக்தர்கள் இன்றும் தர்ப்பணம் செய்துவிட்டு, ஈரத்துணியுடன் சர்வதீர்த்தேஸ்வரரை வழிபடுவது சிறப்பாகும். பூர்வ ஜென்ம தோஷங்கள் நீக்கும் பரிகாரத் தலமாகவும் இது கருதப்படுகிறது. தை அமாவாசை, ஆடி அமாவாசை, சிவராத்திரி, பிரதோஷம் ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. தை மாத அமாவாசையில் இங்கு திதி கொடுப்பது கூடுதல் பலனைத் தரும். இங்கு திதி கொடுத்தால், பித்ருக்களின் சாபத்தில் இருந்து விடுபடலாம். அவர்களது ஆத்மா அமைதி பெறும் என்பது ஐதீகம்.