இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோவில்
கல்வியில் முதன்மை பெறச் செய்யும் தேவாரத்தலம்
கும்பகோணத்திலிருந்து ஐந்து கிமீ தொலைவில் உள்ள தேவாரத்தலம், இன்னம்பூர். இங்குள்ள சிவனின் திரு நாமம் எழுத்தறிநாதர். சரிவரப் பேச முடியாதவர்கள், பாடுவதற்கு நல்ல குரல் வளம் வேண்டுவோர் இத்தலத்திர்கு வந்து இறைவன் எழுத்தறிநாதரை தரிசனம் செய்கிறார்கள். கோயில் அர்ச்சகர் தேனை பூவால் தொட்டு நாக்கில் தடவுகிறார். தேன் நாம் கொண்டு செல்ல வேண்டும். எழுத்தறிநாதரின் அருளால் நலம் அடைந்து, நல்ல குரல் வளம் பேச்சு வளம் பெற்றுச் செல்கின்றனர்.தமிழுக்கு இலக்கணம் எழுதியவர் அகத்திய முனிவர். அவருக்கு எழுத்தறிவித்தவர் இத்தல இறைவன் என்பதால், கல்வியில் சிறந்து விளங்க இத்தல இறைவனை வழிபட்டால் சிறப்பான வெற்றியைப் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
தேங்காய்க்கு பதிலாக தேங்காய் துருவல் படைக்கப்படும் திவ்யதேசம்
ஸ்ரீரங்கத்து கோவிலில், ஸ்ரீரங்கநாதப்பெருமாள் பாம்பணையில் துயில் கொண்டிருப்பதால் தேங்காய் உடைக்கும் வழக்கம் இல்லை. தேங்காய் உடைக்கும் சப்தம் கேட்டு பெருமாளின் அறிதுயில் கலைந்து விடக்கூடாது என்பதால் தேங்காயைத் துருவலாகவே படைக்கப்படுகிறது.
திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவில்
குழந்தை முருகனுக்கு வெந்நீர் அபிஷேகம்
திருத்தணி மூலஸ்தானத்திற்கு பின்புறமுள்ள சுவரில் குழந்தை வடிவில், ஆதி பாலசுப்பிரமணியர் இருக்கிறார். கைகளில் அட்சர மாலை, கமண்டலத்துடன் இருக்கும் இந்த முருகனே, வள்ளி திருமணத்திற்கு முன்பு இங்கு எழுந்தருளியிருந்தார். மார்கழி திருவாதிரையில் இவருக்கு வெந்நீரால் அபிஷேகிக்கின்றனர். குளிர்காலம் என்பதால், அவர் மீதுகொண்ட அன்பினால், வெந்நீர் அபிஷேகம் செய்யப்படுகிறது.
குளித்தலை கடம்பவனநாதர் கோவில்
ஒரே சன்னதியில் இரட்டை நடராஜர்
கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலமான குளித்தலை கடம்பவனநாதர் கோவிலில், இரண்டு நடராஜப் பெருமானை தரிசனம் செய்யலாம். ஒரே சன்னிதியில் அருகருகே இரண்டு நடராஜர்களை தரிசனம் செய்வது சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. இவர்களில் ஒரு நடராஜர் சிரசில் பிறை சூடி இருக்கிறார். ஆனால் அவர் பாதத்தில் முயலகன் இல்லை. இதில் ஒரு நடராஜருக்கு உத்திராயணத்திலும் மற்றவருக்கு தட்சிணாயத்திலும் பூஜைகள் நடக்கின்றன.
கள்ளழகர் கோயில்
பஞ்ச ஆயுதங்களோடு பெருமாள் காட்சி தரும் திவ்ய தேசம்
மதுரைக்கு வடக்கில் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திவ்ய தேசம், திருமாலிருஞ்சோலை. மூலவர் பரமசுவாமி. கருவறையில் இவர் சங்கு, சக்கரம், கதை, வில், வாள் ஆகிய பஞ்சாயுதம் தாங்கிய நிலையில், நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்
பெருவயல் ரணபலி முருகன் கோவில்
முருகன் உருவம் பொறித்த அபூர்வமான சத்ரு சம்ஹார வேல்
ராமநாதபுரம் அருகே பெருவயல் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த சிவ சுப்ரமணிய சுவாமி என்ற ரணபலி முருகன் கோவில் உள்ளது. ராமநாதபுரத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில், தேவிபட்டினம் செல்லும் வழியில், பெருவயல் விலக்கு எனற இடத்தில் இருந்து மேற்கே 3 கி.மீ. தொலைவில் பெருவயல் கிராமத்தில் ரண பலி முருகன் கோவில் உள்ளது. ரணபலி முருகன் கோவிலுக்கு பெருமை சேர்ப்பது முருகன் உருவம் பொறித்த சத்ரு சம்ஹார வேல் ஆகும். இத்தகைய வேலை நாம் வேறு எந்தத் தலத்திலும் காண முடியாது.
முருகன் சுட்டிக் காட்டி கிடைத்த சத்ரு சம்ஹார வேல்
இராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர்களில் ஒருவரான கிழவன் சேதுபதியின் தளபதியாக விளங்கியவர் தளவாய் வயிரவன் சேர்வை. முருகபக்தரான இவர் அடிக்கடி திருச்செந்தூர் முருகன் கோவில் சென்று வழிபட்டு வருவது வழக்கம்.
ஒருநாள் அவர் கனவில் முருகன் தோன்றி, என்னை வழிபட இனி திருச்செந்தூர் வர வேண்டாம். தேவிப்பட்டினம் கடலில் நவபாஷாண கற்கள் இருக்கும் இடத்துக்குக் கிழக்கில் கண்ணாமுனை என்ற இடத்தில் மேலே கருடன் வட்டமிடும். அதற்குக் கீழே கடலில் மாலையும் எலுமிச்சம் பழமும் மிதக்கும். அந்த இடத்தில் கடலுக்கு அடியில் வள்ளி-தெய்வானை சமேதராக சத்ரு சம்ஹார வேலுடன் நான் இருப்பேன். என்னை எடுத்துச் சென்று உங்கள் ஊரில் பிரதிஷ்டை செய்து வழிபடு என்று கூறினார்.
இதே போன்று கனவு அருகில் உள்ள திரு உத்திரகோச மங்கை என்னும் தலத்தைச் சேர்ந்த ஆதிமங்களேஸ்வர குருக்களுக்கும் தோன்றியதால், இருவரும் மறுநாள் சந்தித்து, முருகன் கனவில் சொன்ன அடையாளங்களின்படி ஆட்களை விட்டு கடலுக்குள் முருகன் சிலையைத் தேடினார்கள். பல மணி நேரம் தேடியும் சிலை கிடைக்கவில்லை. கடைசியில் வயிரவன் சேர்வையே கடலுக்குள் மூழ்கி அந்த சிலையையும் வேலையும் எடுத்து வந்தார். கடலுக்குள் இறங்கி முருகன் சிலையை எடுக்க முற்பட்ட பலருக்கு உடல் முழுவதும் ரணம்(காயம்) ஏற்பட்டதால் மூலவர் சிவ சுப்ரமணிய சுவாமி, ரணபலி முருகன் என்றும் அழைக்கப்படுகிறார்.
விஷயம் அறிந்த ராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி, தன் அரண்மனையில் 'ராமலிங்க விலாசம்' என்ற தர்பார் மண்டபம் கட்டுவதற்காக வைத்திருந்த பொருட்களைத் தந்து பெருவயல் ஊரணிக்கரையில் முருகனுக்கு ஆலயம் அமைக்க நிலங்களையும் தானமாக கொடுத்து உதவினார். அதன் பின்னர் ஆலயத்திருப்பணிகள் வேகமாக நடைபெற்று, கடலில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
தளபதி வயிரவன் சேர்வை ராமேஸ்வரத்தில் உள்ள இராமநாத சுவாமி, பர்வத வர்த்தினி அம்மன் மீதும் தீவிர பக்தி உடையவராதலால் இருவருக்கும் இங்கு சன்னதி அமைத்துள்ளார்.
பக்தர்களின் உள்ள ரணத்தை ஆற்றும் முருகன்
பக்தர்களின் உள்ளத்தில் ரணத்தை ஏற்படுத்தும் கடன், பிணி, சத்ரு ஆகிய துன்பங்களையெல்லாம் பலி செய்து, அவர்களுக்கு சகல நன்மைகளும் அருள்வதால், ரணபலி முருகன்' என்ற பெயர் இவருக்கு மிகப் பொருத்தமான பெயராகும். முருகன் உருவம் பொறித்த சத்ரு சம்ஹார வேலை பிரம்மோற்சவம், சூரசம்ஹாரம் போன்ற கோவில் விழா நாட்களில்தான் நாம் தரிசிக்க முடியும். இந்த வேலைத் தரிசித்தவர்களுக்கு எதிரிகள் தொல்லை நீங்கி சகல செளபாக்கியஙகளும் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் இங்கு முருகன் ராகு கேதுக்களுடன் தனியாக காட்சி தருகிறார் இவரை வழிபட்டால் ராகுதோஷம் நீக்குவார் என்பது ஐதீகம்..
இத்தலத்துக்கு வந்த பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் திரு.கிருபானந்த வாரியார் அவர்கள், இங்குள்ள முருகனின் திரு உருவம் பொறிக்கப்பட்ட வேல் போல் எங்கும் கண்டதில்லை என இத்தலத்தின் சிறப்பை பற்றி கூறியதை இங்கு அவரது புகைப்படத்துடன் செய்தியாக வைத்துள்ளார்கள்.
இக்கோவில் கட்டிய தளபதி வயிரவன் சேர்வையின் சமாதிக்கோவிலும் இங்கு உள்ளது. அங்கு சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது.
விருதாச்சலம் பழமலைநாதர் கோவில்
சிவபெருமான் சந்தோஷத்திற்காக நடனமாடிய தேவாரத் தலம்
விருதாச்சலம் கடலூரில் இருந்து சுமார் 61 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு தேவாரத் தலம்.சுவாமியின் திருநாமம் விருத்தகிரீசுவரர்.அம்மன் திருநாமம் விருத்தாம்பிகை.இத்தலத்தின் புராண பெயர் திருமுதுகுன்றம் ஆகும்.ஒருமுறை உலகம் அழிந்த போது இந்தத்தலம் மட்டும் அழியாமல் இருந்தது என்ற புராணச் சிறப்பைப் பெற்றது. சிவத்தலங்கள் அனைத்திலும் 1008 தலங்கள் சிறப்பானதாக கூறப்படும். இதில் நான்கு தலங்கள் முக்கியமானவை. அதில் விருத்தாசலமும் ஒன்று. தேவர்களுக்காக இறைவன் இங்கு நடனம் ஆடியுள்ளார். சிதம்பரத்தில் சிவன் போட்டிக்காக ஆடிய தலம் என்றும், இத்தலம் சிவன் சந்தோஷத்திற்காக ஆடிய தலம் என்றும் கூறுவர்.
திருவதிகை சரநாராயண பெருமாள் கோவில்
சயனகோலத்தில் நரசிம்மர்
பண்ரூட்டியின் அருகில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவதிகையில், 2000 வருட பழமையான சரநாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நரசிம்மர் சயன (படுத்திருக்கும் ) கோலத்தில் தாயாருடன் காட்சிதருகிறார். திருமாலின் கோவில்களில் இந்தக்கோவிலில்தான் நரசிம்மர் சயன கோலத்தில் இருக்கிறார். இந்த சயன நரசிம்மர் திருவக்கரையில் வக்ரா சூரனை அழித்து விட்டு அதன் பரிகாரத்துக்காக இத்தலத்தில் வந்து சயனித்துள்ளார். தாயாருடன் எழுந்தருளியதால் இது போக சயனம் ஆகும் . சிவனுக்கு பிரதோஷம் நடைபெறுவது போல் இவருக்கும் பிரதோஷம் அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. சிங்கர்குடி ,பூவரசன்குப்பம் ,பரிக்கல் ஆகிய நேர்கோட்டில் உள்ள நரசிம்மர் தலங்களை வணங்கும்போது, இத்தலத்திற்கு வந்து இவரையும் வணங்குவது சிறப்பாகும் .
சோளிங்கர் யோக ஆஞ்சநேயர் கோவில்
சங்கு சக்கரம் ஏந்திய ஆஞ்சநேயர்
தொண்டை நாட்டில் உள்ள திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கரில், பெரிய மலையில் யோக நரசிம்மரும் சிறிய மலையில் யோக ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கிறார்கள். யோக ஆஞ்சநேயருக்கு இங்கு மட்டுமே கோவில் உள்ளது.யோக ஆஞ்சநேயருக்கு நான்கு திருக்கரங்கள் உள்ளன. ஒரு கையில் சங்கு, ஒரு கையில் சக்கரம் மற்ற இரு கைகளில் ஜெபமாலை உள்ளன.ஒரு காலத்தில் விசுவாமித்திரர் இத்தலத்தில் சிறிது நேரம் நரசிம்மனை வழிபட்டு “பிரம்மரிஷி’ பட்டம் பெற்றாராம். அதே போல் நரசிம்மரின் அவதாரத்தை தாங்களும் தரிசிக்க வேண்டுமென வாமதேவர், வசிஷ்டர், கத்யபர், அத்திரி, ஜமத்கனி, கவுதமர், பரத்வாஜர் ஆகிய சப்தரிஷிகளும் இங்கு வந்து தவமிருந்தனர். ராமாவதாரம் முடிந்ததும் ராமன் ஆஞ்சநேயரிடம், 'பிற்காலத்தில் இந்த மலையில் தவம் செய்யவிருக்கும் ரிஷிகளுக்கு அரக்கர்களால் இடைஞ்சல் ஏற்படும். அதை தவிர்த்து ரிஷிகளை பாதுகாப்பாயாக' என்றார். அதன்படி ஆஞ்சநேயர் இங்கு வந்து சப்தரிஷிகளின் தவத்துக்கு இடையூறாக இருந்த காலன், கேயன் என்னும் இரு அரக்கர்களுடன் சண்டை செய்தார். ஆனால் அவர்களை வெல்ல முடியவில்லை. அதனால் பெருமாளை வழிபட்டு அவரிடமிருந்து சங்கு, சக்கரங்களை பெற்று அதன் மூலம் அரக்கர்களை அழித்து சப்தரிஷிகளை காப்பாற்றினார். கடைசியில் சப்தரிஷிகளின் தவத்தினை மெச்சிய பெருமாள் அவர்களது விருப்பப்படி நரசிம்ம மூர்த்தியாக காட்சி கொடுத்தார். இந்த அவதாரத்தை கண்டு களித்த ஆஞ்சநேயரிடம் பெருமாள், 'கலியுகத்தில் உன்னுடைய பணி, பூமியில் மிக மிக அவசியம். உன்னை நாடி வரும் என் பக்தர்களின் குறைகளை போக்கி வா' என்று கூறினார். அதன்படி ஆஞ்சநேயர் நரசிம்மர் கோயில் உள்ள மலைக்கு அருகில் உள்ள சிறிய மலையலில் 'யோக ஆஞ்சநேயராக' சங்கு சக்கரத்துடன் அருள்பாலித்து வருகிறார்.யோக ஆஞ்சநேயர், மனநோயாளிகளை குணப்படுத்தும் வலிமையுள்ளவர். மனநோயாளிகள் முறைப்படி இந்த தலத்திலுள்ள 'ஹனுமத் தீர்த்தம்' என்னும் குளத்தில் நீராடி பின் ஸ்ரீயோக ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய, அவர்களது மனநிலை சரியாவதை கண்கூடாகப் பார்க்கலாம்.
ஆறகளூர் காமநாத ஈஸ்வரர் கோவில்
தலையாட்டி விநாயகர்
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம், ஆறகளூர் கிராமத்தில் உள்ள திருகாமநாத ஈஸ்வரன் கோவிலில் 'தலையாட்டி விநாயகர்' தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார். கோவில். கெட்டி முதலி என்னும் குறுநிலமன்னன் இக்கோவிலை கட்டும் பணிகளை தொடங்கும் முன்பு விநாயகரிடம் உத்தரவு கேட்டுவிட்டு அதன்பின்பு, பணியைத் துவங்கினான். கோவிலைக் கட்டி முடித்த பிறகு, இவ் விநாயகரிடம் வந்து, கோவில் கட்டும் பணிகள் சரியாக நடந்து இருக்கிறதா என்று கேட்டான். அதற்கு இவர், நன்றாகவே கோவிலைக் கட்டியிருக்கிறாய் என சொல்லும் விதமாக தனது தலையை ஆட்டினார். எனவே இவருக்கு 'தலையாட்டி பிள்ளையார்' என்ற பெயர் வந்தது. தற்போதும் இவர் தனது தலையை இடப்புறமாக சற்று சாய்த்தபடி இருப்பதைக் காணலாம். தொழில், கட்டடப்பணிகளைத் தொடங்கும் முன்பு இவரிடம் வேண்டிக் கொண்டால் அச்செயல் முடியும் வரையில் பாதுகாப்பாக இருந்து அதனை சிறப்புற முடித்து தருவார் என்பதால், இவரைக் காவல் கணபதி என்றும் அழைக்கின்றனர்.
உடுமலைப்பேட்டை பிரசன்ன விநாயகர் கோவில்
திப்பு சுல்தானிடம் காணிக்கை கேட்ட விநாயகர்
முற்காலத்தில் உடுமலைப்பேட்டை ஊரைச்சுற்றி சக்கர வடிவில் அரணாக மலை அமைந்திருந்ததால் சக்கரகிரி என்றும், அம்மலையில் உடும்புகள் நிறைந்து காணப்பட்டதால் உடும்புமலை என்றும் அழைக்கப்பட்டது. இவ்வூர், பின் உடுமலைப்பேட்டை என்றானது. திப்பு சுல்தான் வனமாக இருந்த இப்பகுதியை ஆட்சி செய்தார். அரை வட்ட மலையினால் இப்பகுதி பாதுகாப்புடன் அமைந்திருந்தது. இதனால், எதிரிகள் யாரும் எளிதில் நெருங்க முடியாததால், திப்புசுல்தான் தனி ராச்சியம் கொண்டு ஆட்சி செய்து வந்தார். ஒர் நாள், அவரது கனவில் விநாயகர் தோன்றி, 'உன் நாட்டை நான் பாது காத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் எனக்கு காணிக்கை கூட செலுத்தாமல் இருக்கிறாய்' என்றாராம். அதைக் கேட்ட திப்புசுல்தான், காணிக்கை கேட்ட விநாயகருக்காக, ஊரின் மேற்கு பகுதியில் குளக்கரையில் பிரசன்ன விநாயகர் கோவில் அமைத்தார். இத்தல விநாயகர் ஆறடி உயரத்தில், ராஜ கம்பீர கோலத்தில், ஏகதள விமானத்தின் கீழ் அமர்ந்துள்ளார். மூஷிக வாகனம் பெரிய அளவில் இருப்பதும், முன் மண்டபத்தின் மேற்கூரையில் 12 ராசிகளைக் குறிக்கும்படியான சிற்பம் பொறிக்கப் பட்டிருப்பதும் சிற்பக்கலையின் சிறப்பை உணர்த்துகிறது. . ஒவ்வொரு கிருத்திகை யன்றும் விநாயகர் வெள்ளித் தேரில் பவனி வருகிறார்இத்தலத்தில் காசி விசுவநாதர், அவருக்கு இடப்புறம் காசி விசாலாட்சி, அருகில் தம்பதி சமேதராக முருகன், முகப்பில் வன்னி மரத்தின் அடியில் பிரம்மன், வடமேற்கில் கண்ணபுரநாயகி உடனாய சுவுரிராசப் பெருமாள், அருள்பாலிக்கிறார்கள். இதனால், இத்தலம் சிறந்த சைவ வைணவ இணைப்பு பாலமாகவும், மும்மூர்த்திகள் அமைந்த தலமாகவும் திகழ்கிறது.கல்வியில் சிறக்கவும்,அனைத்து தோஷங்கள் மற்றும் குடும்ப பிரச்னைகள் விலகவும், இத்தல விநாயகரை வேண்டிக் கொள்கின்றனர்.
திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவில்
அதிசயமான குதிரை வாகனம் உள்ள திவ்ய தேசம்
காஞ்சிபுரத்திலிருந்து 13 கி.மீ. தூரத்தில் உள்ள திவ்ய தேசம் திருப்புட்குழி ஆகும். இத்தலத்தில் உள்ள குதிரை வாகனம் மிகவும் அதிசயமான வாகனம் ஆகும். 'கல் குதிரை' என வழங்கப்படும் இக்குதிரை உண்மையான குதிரை போலவே அசையும் உறுப்புகளைக் கொண்டதாகும். இதைச் செய்த கலைஞா் இனி எவருக்கும் இது போன்ற வாகனம் செய்து கொடுப்பதில்லை என்ற உறுதியினை எடுத்ததுடன், அதனைக் கடைசி வரைக் கடைப்பிடித்து உயிா்துறந்தாராம். இக் கலைஞரது உறுதிக்கும் பக்திக் கும் மதிப்பளிக்கும் விதமாக, திருப்புட்குழி உற்சவப் பெருமான், மாசி பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாள் திருவிழாவின் போது இவரது வீதிக்கு எழுந்தருளிச் சேவை சாதிப்பது இன்றும் நடைமுறையில் உள்ளது.மேலும் இந்தக் குதிரை குறித்து அதிசய செய்தி ஒன்றை சொல்கிறார்கள். குதிரையின் தலை, உடல், வால் பகுதி என மூன்றும் தனித்தனியாக மரத்தினால் செய்யப்பட்டதாம். அவை மூன்றையும் இணைத்த பின் உயிர் பெற்ற குதிரை இரவு நேரங்களில் வயற்காட்டை மேய்ந்து தீர்த்ததாம். இதனால் இப்போதும் ஆண்டு முழுவதும் இக்குதிரையின் உடல் மூன்றாக பிரிக்கப்பட்டே வைக்கப்படுகிறது. பிரம்மோற்ஸவத்தின் குதிரை வாகன நாளன்று மட்டும் இணைக்கப்பட்டு அதில் உற்சவமூர்த்தி எழுந்தருளுகிறார்.
வல்லம் ஏகௌரியம்மன் கோவில்
இரண்டு திருமுகங்கள் கொண்ட அபூர்வ அம்மன்
தஞ்சையில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வல்லம் என்ற ஊரில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஏகௌரியம்மன் கோவில் உள்ளது. சோழ மன்னர்களின் வழிபாட்டு தெய்வமாக விளங்கியவள். இந்த தேவி அக்னி கிரீடம் அணிந்து, எட்டு திருக்கரங்களுடன், பத்மபீடத்தின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். ஒன்றன்மீது ஒன்றாக அமைந்த இரண்டு திருமுகங்களுடன் காட்சி தருகிறாள். ஒரு தலை கோரைப் பல்லுடன் உக்கிரமாக உள்ளது. இதற்கு மேலுள்ள மற்றொரு தலை அமைதியே வடிவமாக உள்ளது. தீயவர்களை அழிக்க உக்கிரமுடன் ஒரு முகம், வழிபடும் அடியவர்களின் துயர் நீக்க சாந்தமுடன் மற்றொரு முகத்துடனும் காட்சி அளிக்கிறாள். எட்டு கைகளில் சூலம், கத்தி, உடுக்கை, நாகம், கேடயம், மணி, கபாலமும், பார்வதியின் அம்சத்தை உணர்த்தும் விதமாக கிளியும் உள்ளது. இப்படி ஒன்றன் மேல் ஒன்றாக இரண்டு இரண்டு திருமுகங்கள் அமைந்திருப்பது ஒரு அபூர்வமான தோற்றமாகும்.
அம்மனுக்கு ஏகௌரி என்ற பெயர் வந்த வரலாறு
முன்னொரு காலத்தில் தஞ்சன் என்ற அரக்கன் சிவனை நினைத்து கடும் தவம் புரிந்து, ஒரு பெண்ணை தவிர யாராலும் தன்னை வெல்ல முடியாது என்ற வரத்தை பெற்றான். பின்னர் தஞ்சன், ஆணவத்தால் முனிவர்களையும், தேவர்களையும் மிகவும் கொடுமைப் படுத்தினான். தேவர்கள் சிவபெருமானிடம் தஞ்சனின் கொடுமைகள் குறித்து முறையிட்டனர். சிவபெருமான் பார்வதி தேவியை அழைத்து அரக்கனை அழிக்க ஆணையிட்டார். ஈசனின் ஆணையை ஏற்ற பார்வதி தேவி சிம்ம வாகன மேறி எட்டுக்கரங்களிலும் ஆயுதம் ஏந்தி புறப்பட்டாள். தேவிக்கும், தஞ்சனுக்கும் கடும்போர் ஏற்பட்டது.
போரின் இறுதியில், தஞ்சன் எருமைக் கடாவாக மாறி தேவியைத் தாக்கினான். தேவி எருமைக் கடாவாக வந்த அரக்கனை வாளால் தலை வேறு, உடல் வேறு என இரண்டு துண்டாக்கினாள்.
உயிர் பிரியும் நேரத்தில் தஞ்சன் தேவியைப் பணிந்து, இந்த பகுதி எனது பெயரால் தஞ்சாபுரி என்று அழைக்கப்பட வேண்டும் என்று வேண்டினான். தேவி, அவன் கேட்ட வரத்தை வழங்கினாள் . அரக்கனை வதைத்த பின்னும், அம்மனின் ஆக்ரோஷம் அடங்கவில்லை. அதே உக்கிரத்துடன் வல்லத்தில் அலைந்து திரிந்தாள். இதனால் நாடெங்கும் வறட்சி உண்டாயிற்று. நாடெங்கும் பஞ்சம், பசி, பட்டினி என மக்கள் தவித்தனர். நிலைமையை உணர்ந்த சிவபெருமான் பார்வதியை ;ஏ கவுரி; சாந்தம் கொள் என்று கேட்டுக்கொண்டார். அம்மையின் கோபம் சற்று தணிந்தது. நெல்லிப்பள்ளம் என்ற குளத்தில் மூழ்கினாள். அப்போது பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து அங்கேயே எழுந்தருளவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இங்கு ஏகௌரி அம்மனாக அருள்புரிந்து வருகிறாள். அம்மன் அரக்கனை வதம் செய்தது ஆடிமாத கடைசி வெள்ளிக்கிழமை ஆகும். எனவே அன்றைய தினம் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து, தீ மிதித்து அம்மனை சாந்தப் படுத்துகின்றனர்.
குழந்தை பாக்கியத்திற்கு எலுமிச்சை பழச்சாறு பிரசாதம் தரும் நடைமுறை
குழந்தை வரம் வேண்டி இத்தலத்துக்கு வரும் பெண்களுக்கு எலுமிச்சம் பழத்திற்கு பதிலாக எலுமிச்சை பழச்சாறை பிரசாதமாகத் தருகிறார்கள். வேறு எந்த தலத்திலும் இப்படி ஒரு நடைமுறை இல்லை.
ஏகௌரி அம்மனின் இருபுறமும் ராகு கேது எழுந்தருளி இருக்கிறார்கள். அதனால் இத்தலம் கால சர்ப்ப தோஷம் , களத்திர தோஷம், திருமணத்தடை போன்ற பிரச்சினைகளுக்கு சிறந்த பரிகார தலமாக இருக்கிறது.
திருவேடகம் ஏடகநாதேஸ்வரர் கோவில்
திருஞானசம்பந்தர் சமணர்களுடன் அனல் வாதம். புனல் வாதம் புரிந்த தலம்
மதுரையை ஆண்ட கூன்பாண்டிய மன்னர், சைவ நாயன்மார்களுள் ஒருவர் ஆவார். இவருக்கு நின்றசீர் நெடுமாறன் என்ற பெயரும் உண்டு. இவர் சோழமன்னரின் மகளாகிய மங்கையர்க்கரசியாரின் கணவர். இவர் காலத்தில் சமணர்கள் மிகத் தீவிரமாக சமணசமயத்தைப் பரப்பி வந்தனர். சைவத்தைக் காப்பாற்ற மங்கையர்க்கரசியாரின் அழைப்பின் பேரில் திருஞானசம்பந்தர் மதுரைக்கு வந்தபோது திருநீறு பூசி அரசன் கூன்பாண்டியனின் வெப்ப நோய் நீங்க உதவினார். இதனால் சமணர்கள் ஆத்திரமுற்று திருஞானசம்பந்தரை அனல் வாதம். புனல் வாதம் புரிய அழைத்தனர்.
சமணர்கள் தாங்கள் எழுதிய ஏட்டை தீயில் இட்ட போது அது எரிந்து சாம்பல் ஆயிற்று. ஆனால் திருஞானசம்பந்தர் திருநள்ளாற்றுப் பதிகம் எழுதிய ஏட்டை தீயில் இட்ட போது அது எரிந்து சாம்பல் ஆகாமல் பச்சையாகவே இருந்தது. பின்பு புனல் வாதத்தின் போது சமணர்கள் எழுதிய ஏட்டை வைகை ஆற்றில் விட்ட போது அது ஆற்றுடன் சென்றது. ஆனால் திருஞானசம்பந்தர் 'வாழ்க அந்தணர்' என்று தொடங்கும் பதிகம் எழுதியிட்ட ஏட்டை வைகை ஆற்றில் விட்ட போது அது வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்து சென்றது. மதுரை பாண்டிய மன்னனின் மந்திரி குலச்சிறையார் என்பவர் குதிரையின் மீதேறி வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்து செல்லும் ஏட்டைப் பின் தொடர்ந்து செல்ல அது ஓரிடத்தில் வைகை ஆற்றின் கரையில் ஒதுங்கியது. பாண்டிய மன்னன் ஏடு ஒதுங்கிய இடத்தில் ஒரு சிவலிங்கத்தைக் கண்டு அங்கு ஒரு கோவில் எழுப்பினான். அதுவே திருவேடகம் என்ற தேவார பாடல் பெற்ற தலம் ஆனது.
இத்தலத்தில் ஒரு நாள் தங்கி இருந்து இறைவனை முழுமனதுடன் பூஜை செய்து வழிபட்டால் காசியில் ஆயுள் முழுவதும் வாழ்ந்த புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த கோயிலில் உள்ள கால பைரவர் சன்னதி மிகவும் விசேஷமானது வைகை நதிக்கரையில் பித்ரு காரியங்கள் மற்றும் அவர்கள் இறந்த திதி போன்ற நாட்களில் பூஜைகள் செய்வது மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. இத்தலம் காசிக்கு நிகராகக் கருதப்படுவதால் முன்னோர் வழிபாடுகள் இத்தலத்தில் செய்யலாம். நம் முன்னோர்களின் முக்தி அடையை மோட்ச தீபம் ஏற்றும் பழக்கம் இக்கோவிலில் உள்ளது.
இக்கோவில் பிரம்ம தீர்த்தக் குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டால், சித்த பிரமை நீங்குவது தலத்தின் தனி சிறப்பாகும்.
திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் கோவில்
ஒரே வரிசையில் நிற்கும் நவக்கிரகங்கள்
திருவாரூரில் இருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருக்குவளை. நவக்கிரகங்களின் குற்றம் நீக்கியருளியதால், இத்தல இறைவனுக்கு கோளிலிநாதர் என்ற திருநாமம் ஏற்பட்டது. இங்கு,நவக்கிரகங்கள் தங்கள் தோஷம் நீங்க, தென்திசை நோக்கி வக்கிரமின்றி வரிசையாக நின்று இறைவனை வழிபட்டதால், இக்கோவிலில், அவை ஒரே திசை நோக்கி வரிசையாக காட்சி அளிக்கின்றன. இதனால், கோளிலிநாதரை வழிபடுவோருக்கு நவக்கிரகங்களின் தோஷம் நீங்கும் என்பது இத்தலத்தின் சிறப்பு. இதனையே, 'கோளாய நீக்குமவன் கோளிலி எம்பெருமான்' என்று தேவாரப்பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார் திருஞானசம்பந்தர்.
திருக்கோடிக்காவல் கோடீசுவரர் கோவில்
சனி பகவான் தலையில் சிவலிங்கம்
கும்பகோணத்துக்கு அருகில் திருக்கோடிக்காவல் கோடீசுவரர் கோவில் என்ற தேவாரப் பாடல் பெற்ற தலம் உள்ளது.இங்குள்ள சிவாலயத்தில் அமைந்துள்ள சனி பகவான் தலையில் சிவலிங்கம் ஒன்று உள்ளது.இந்த சனி பகவான் 'பால சனி' என்று அழைக்கப்படுகிறார். பொதுவாக சனி பகவானுக்கு காகம்தான் வாகனமாக இருக்கும். ஆனால் இங்குள்ள சனி பகவானுக்கு கருடன் வாகனமாக அமைந்திருக்கிறது.மூலவர் கோடீசுவரர் கருவறை செல்லும் வழியில் இருபுறமும் சித்தரகுப்தரும், எமதர்மனும் உள்ளனர். இக்கோவிலில் சனீஸ்வரனை எமதர்மன்பார்ப்பது போன்றும் எமதர்மனை சனீஸ்வரர் பார்ப்பது போன்றும் அமைந்து இருக்கின்றது. இங்கு சுவாமியின் இடப்புறமாக சித்திரகுப்தன் இருக்கிறார் சனிபகவான், எமதர்மராஜன், சித்திரகுப்தன் இவர்கள் மூவரையும் தரிசித்த பின்பு தான் மூலவரை தரிசிக்க முடியும்.சனி பகவானுடைய நீதிமன்றமாக திருக்கோடிக்காவல் அமையப் பெற்றுள்ளது.நமது பாவ புண்ணிய வரவு செலவு கணக்குப்படி, நமது பால்ய வயதில் அஷ்டமச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனி, மரணச் சனி என்ற அனைத்து சனி திசைகளுக்கும், இத்தலமே நிவர்த்தி செய்யும் இடமாகும். நமது பால்ய வயதில் ஏற்பட்ட பாவ புண்ணிய வரவு-செலவு கணக்குகளை சரி பார்க்க கூடிய இடம் திருக்கோடிக்காவல். உலகத்தின் நீதிபதியாகிய பால சனீஸ்வரர் நமது பாவ புண்ணிய வரவு செலவு கணக்குகளை ஆராய்ந்து, அதை சித்திரகுப்தன் சரி பார்த்து எமதர்மனிடம் தீர்ப்பு சொல்லப்படுகிறது. தீர்ப்புக்கான பரிகார நிவர்த்தி இத்தலத்தில் செய்யப்படுகிறது. சாதாரணமாக இத்தலத்தில் யாரும் வழிபட்டு விடமுடியாது யாருக்கு எந்த வயதில் இந்த ஊழ்வினை கர்மா தீர்க்கப்படுகிறதோ, அவர்கள் மட்டுமே இத்தலத்திற்கு சென்று வழிபட முடியும். சனீஸ்வரனின் மனைவியான ஜேஷ்டாதேவி, மகன் மாந்தி, மகள் மாந்தாவுடன் உள்ள சிலை உள்ளது. மாந்தாவின் கையில் தாமரை மலரும், மாந்தியின் முகம் ரிஷப முகமாயும், இம்மூன்றும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டு அற்புதமாய் காட்சியளிக்கிறது.
திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் கோவில்
சரும நோய்களைத் தீர்க்கும் அம்பிகை
தேவாரத் தலமான திருக்காரவாசல் இறைவன் பெயர் கண்ணாயிரநாதர். இறைவியின் பெயர் கைலாச நாயகி. கைலாசநாயகி. நின்ற கோலத்தில் ஒரு கையில் அக்கமாலையுடனும், மற்றதில் தாமரையுடனும் தெற்கு நோக்கி தரிசனம் தருகிறாள். இக்கோவிலில், ஓரிடத்தில் நின்று நேரே சிவபெருமானையும் வலதுபுறம் அம்பாளையும் தரிசிக்கும்படியாக சன்னதிகள் அமைந்துள்ளன.இத்தலத்து அம்பிகை "பஞ்ச்சதசா ஷர" சொரூபிணியாக விளங்குகிறாள் என்று புராணங்கள் கூறுகின்றன. இத்தலத்தில் அம்பிகைக்குத் தனிச் சிறப்பு உண்டு. மக்கள் செய்த பாவங்களால் உலகில் தலங்கள் மகிமை குன்றிய காலத்தில் பராசக்தியே இத்தலத்தை உயர்த்தினார் என்பது புராண வரலாறு. கைலாசநாயகிக்கு நடைபெறும் மாதாந்திர பௌர்ணமி அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதில் வைத்துத்தரும் சேஷ தீர்த்தத்தை ஒரு மண்டலம் சாப்பிட்டுவர தீராத நோய்களும் , முக்கியமாக சரும நோய்களும் தீர்கின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பாமணி நாகநாத சுவாமி கோவில்
நான்கு சிங்கங்களின் மேல் அமர்ந்து இருக்கும் தட்சிணாமூர்த்தி
மன்னார்குடிக்கு வடக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் பாமணி. இறைவன் திருநாமம் நாகநாத சுவாமி. இறைவியின் திருநாமம் அமிர்தநாயகி.
இத்தலத்தில் குருபகவான் நான்கு சிங்கங்களின் மேல் அமர்ந்து சிம்ம தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிப்பதால், இவரை வழிபடுபவர்களுக்கு சிம்ம குருவின் அருள் கிடைக்கும். ஒருமுறை தட்சிணாமூர்த்தியின் சீடர்கள் நால்வரும் விஷ்ணுவை தரிசிக்க வைகுண்டம் சென்றார்கள். அப்போது இவர்களை துவார பாலகர்கள் தடுத்தனர். கோபம் கொண்ட முனிவர்கள், அவர்களுக்கு சாபம் கொடுத்தனர். இதனால் முனிவர்களுக்கு தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் நீங்க பாமணி நாகநாதரையும், சிம்ம தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு தங்கள் தோஷம் நீங்கப் பெற்றனர்.
சிம்மம், கும்பம், கடகம், தனுசு, மேஷம், விருச்சிகம் ராசிக்காரர்களும், லக்னத்திற்குரியவர்களும் சிம்ம தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் சிறப்பான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை.
கபிஸ்தலம் கஜேந்திரவரதன் கோவில்
இரண்டு விலங்கினங்களுக்கு பெருமாள் காட்சி கொடுத்த திவ்ய தேசம்
தஞ்சை மாவட்டத்தில் உள்ள பாபநாசம் ரெயில் நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள திவ்ய தேசம் கபிஸ்தலம். இக்கோவிலில் உள்ள மூலவரான கஜேந்திர வரதன் கிடந்த கோலத்தில் புஜங்க சயனமாக சேவை தருகின்றார். இவர் தனது பக்தனாக விளங்கிய கஜேந்திரன் என்ற யானைக்கும் ஆஞ்சநேயருக்கும் பிரதியட்சம் ஆனவர். 108 திவ்ய தேசங்களில் இரண்டு விலங்கினங்களுக்கு பெருமாள் காட்சி கொடுத்தது இந்த திவ்ய தேசத்தில் மட்டும்தான்.
ஆவூர் பசுபதீஸ்வரர் கோவில்
பிதுர் தோஷத்தை நிவர்த்தி செய்யும் பஞ்ச பைரவர்கள்
கும்பகோணத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேவாரத் தலம் ஆவூர். இங்கு பசுபதீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இறைவன் திருநாமம் பசுபதீஸ்வரர். இத்தலத்தில் பங்கஜவல்லி , மங்களாம்பிகை என்ற திருநாமம் தாங்கி இரண்டு அம்பிகைகள் அருள் புரிகிறார்கள்.
இந்தக் கோவிலின் முக்கிய சிறப்பம்சமாக பஞ்ச பைரவ மூர்த்திகள் உள்ளனர். ஐந்து பைரவர்களும் ஒரே பீடத்தில் வீற்றிருக்கிறார்கள். இக்கோவிலில் மங்களாம்பிகை அம்மனை பிரதிஷ்டை செய்யும்போது, ஹோமத்திலிருந்து பஞ்ச பைரவர்கள் வெளிப்பட்டனர். அவர்களையும் பிரதிஷ்டை செய்து ஆராதனைகள் செய்தால் பித்ருசாபம் நீங்கப் பெறும் என அசரீரி ஒலித்துள்ளது. அதன்படி பஞ்ச பைரவர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டனர். பஞ்ச பைரவர்களை வழிபட்டதன் மூலம் தசரத மன்னனின் பித்ரு சாபம் விலகியது. எனவே இத்தலம் பித்ரு சாப நிவர்த்தித் தலமாக விளங்குகின்றது.
பிதுர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த பஞ்ச பைரவர்களை வழிபாடு செய்து வந்தால் உடனடியாக பலன் கிடைக்கும் .ஒரு சிலர் நிறைய சம்பாதிப்பார்கள். இருந்தாலும் கடன் தீராது. இன்னும் சிலருக்கு நல்ல திறமைகள் இருக்கும். ஆனால் சரியான வேலையும் வாய்ப்புகளும் அமையாமல் வருமானம் இன்றி இருப்பார்கள். பல பேர் அனைத்து செல்வங்களையும் பெற்று இருப்பார்கள். ஆனால் வாழ்வில் நிம்மதி இருக்காது. அப்படிப்பட்டவர்களின் அந்த நிலைக்கு பிதுர் தோஷம் தான் காரணம். அவர்கள் அனைவரும் இத்தல பஞ்ச பைரவர்களை வழிபட்டு பிதுர் தோஷத்தை போக்கி வாழ்வில் வளம் பெறலாம். இவர்களை தேய்பிறை அஷ்டமி தினத்தில் வழிபாடு செய்தால் அனைத்து துன்பங்களும் நீங்கும். குறைவான வருமானம் கடன் சிக்கல்கள், வேலைவாய்ப்பின்மை, திருமண சிக்கல்கள் போன்றவைகள் பிதுர் தோஷ காரணத்தினால் கூட ஏற்படலாம். அதனை இந்த தலத்தில் உள்ள பஞ்ச பைரவர்களை வழிபாடு செய்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.