திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில்

திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில்

அபூர்வக் கோலத்தில் வீற்றிருக்கும் யோக பைரவர்

மதுரை-காரைக்குடி சாலையில், 62 கிமீ தொலைவில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில். இறைவன் திருநாமம் திருத்தளி நாதர். இறைவியின் திருநாமம் சிவகாமி.

வான்மீகி மகரிஷி புற்று வடிவில் தவம் செய்து வழிபட்டதால் இத்திருத்தலத்திற்கு திருப்புத்தூர் என்ற பெயர் வந்தது.

சிவபெருமான் ஆடும் தாண்டவத்தில் ஏழு வகைகள் உண்டு. அவை, ஆனந்த தாண்டவம், சந்தியதாண்டவம், காளிகா தாண்டவம், திருப்புரத் தாண்டவம், கெளரி தாண்டவம், சம்ஹார தாண்டவம், மற்றும் உமைத் தாண்டவம் ஆகியவை ஆகும். சிவபெருமானின் கௌரி தாண்டவத்தை காண விரும்பிய திருமாலின் துணைவி மகாலட்சுமி கீழ் திசை ஈசனை நோக்கிக் கடுந்தவமிருந்தாள் அவள் முன் சிவபெருமான் தோன்றி கௌரித் தாண்டவம் ஆடிய ஆலயமாகும். ஆதலின் திரு வழிபட்ட ஆலயம் என்னும் பொருள்பட திருத்தளிநாதர் ஆலயம் என்று அழைக்கப்படுவதாகத் தலபுராணம் கூறுகின்றது

இத்தலத்திலுள்ள பைரவர் சன்னதி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்தத் தலத்தின் திருத்தளிநாதரைத் தரிசிக்க வந்த காசி பைரவரே, இங்கு யோக பைரவராக அருள்கிறார் என்பது ஐதீகம். ஆக, இவரை ஆதி பைரவர் என்றும் போற்றுகிறார்கள். நம் நாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் அருளும் பைரவ மூர்த்திகளும் இவரிடமிருந்தே தோன்றியதாக திருத்தளிநாதர் கோவில் தல வரலாறு சொல்கிறது.

இவரை, குலதெய்வமாகக் கொண்ட மருது சகோதரர்கள், எப்போது போருக்குச் சென்றாலும் இந்த யோக பைரவரை வழிபட்ட பிறகுதான் செல்வார்களாம்.

இக்கோவிலில் தனிச் சன்னதியில் யோகா பைரவர் எழுந்தருளி இருக்கிறார். இவர் வலக்கரத்தில் சிவலிங்கத்தை வைத்து, கால்கட்டை விரலை தரையில் ஊன்றியபடி யோகநிலையில் காட்சி தருகிறார். பொதுவாக பைரவர் கையில் சூலத்துடனும், நாய் வாகனத்துடனும், நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிப்பதே மரபு. ஆனால் இங்குள்ள பைரவர் அமர்ந்த நிலையில், யோக நிஷ்டையில் காணப்படுகின்றார். அதனால் 'யோக பைரவர்' என்று அழைக்கப்படுகின்றார். யோக நிலையில் இருப்பதால் இவருக்கு நாய் வாகனம் கிடையாது. இவருக்கு வெண்ணிற பட்டாடை அணிவித்து அலங்கரிப்பது விசேஷம். இந்த பைரவர் மிக உக்ரமானவர். அவர் தம் உக்ரத்தைக் குறைக்க, வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பாக, அவரை சங்கிலியால் பிணைத்து வைத்துள்ளதே இதற்குச் சான்று.

பிரார்த்தனை

தேய்பிறை அஷ்டமி அன்று இவருக்கு வடை மாலை சாற்றி வழிபடுகின்றனர். ராகுகாலம் போன்ற நேரங்களிலும் இவருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகின்றது. சத்ரு தொல்லை, ஏவல், பில்லி, சூனியம், காரியத்தடை, திருமண எதிர்ப்பு போன்றவை விலக இவரை வழிபடுதல் சிறப்பு. அதற்காக சிறப்பு ஹோமங்களும் அர்ச்சனை வழிபாடுகளும் இவ்வாலயத்தில் செய்யப்படுகின்றன.

நவகிரகங்கள் பைரவரின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. அதனால், கிரக தோஷங்கள் நீங்க நவக்கிரக தலங்களுக்கு செல்ல முடியாவிட்டாலும், இங்குள்ள யோக பைரவரை வணங்கினால் போதும். 'ஆபத்துத்தாரண பைரவர்' என்று அழைக்கப்படும் இவர் எல்லா தோஷங்களையும் நீக்குவார் என்பது ஐதீகம். தேய்பிறை, வளர்பிறை அஷ்டமி தினங்களில் பைரவருக்கு வாசனைப் பொருட்கள் வைத்து வழிபடுகிறார்கள்.

மேலும், குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான் இருமல், திருமணத்தடை போன்ற பிரச்னைகளை நீக்கும் வரப் பிரசாதியாகவும் திகழ்கிறார். இந்த யோக பைரவர். வெண் பூசணி, தேங்காய் போன்றவற்றில் நெய் தீபம் ஏற்றிவைத்து இவரை வழிபட்டால், எதிரிகள் பணிந்து போவார்கள். பங்காளிச் சண்டை முடிவுக்கு வரும். அதேபோல், ஒரு துணியில் மிளகு சுற்றி முடிந்து வைத்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் பிரச்னைகள் முடிவுக்கு வரும். கண் திருஷ்டிகளும் விலகும்.

Read More
சிதம்பரம் நடராஜர் கோவில்

சிதம்பரம் நடராஜர் கோவில்

நடனத்திற்கு அதிபதியான நடராஜர்

பரதநாட்டியத்தின் 108 கரணச் சிற்பங்கள்

நடராஜர் என்றால் 'நடனக்கலைகளின் அரசன்' அல்லது 'ஆடலரசன்' என்று பொருள். இது 'நடா' (நடனம்) மற்றும் 'ராஜா' (அரசன்) ஆகிய இரு சமஸ்கிருத வார்த்தைகளின் சேர்க்கையால் உருவானது. இது சிவபெருமானின் நடன வடிவம் (ஆனந்த தாண்டவம்) ஆகும். சிவபெருமானது இந்த நடனம் ஆனந்தத்தின் அடையாளமாகவும், அகங்காரத்தை அழித்து முக்தி தரும் வடிவமாகவும் வழிபடப்படுகிறது.

நடனத்திற்கு அதிபதியான நடராஜர் எழுந்தருளி இருக்கும் தேவாரத் தலமான சிதம்பரம் கோவிலில், பரதநாட்டியத்தின் 108 கரணங்களும் சிற்ப வடிவில் செதுக்கப்பட்டுள்ளன. சிதம்பரம் கோயிலில் கீழைக்கோபுரத்தின் கிழக்குப்பகுதியில் தெற்குச் சுவரிலும் வடக்குச் சுவரிலும் நான்கு வரிசையாக வரிசைக்கு 8 சிற்பங்கள் என்ற வகையில் 32 + 32 = 64 சிற்பங்கள் உள்ளன. மேற்குச் சுவரில் தெற்குப் பகுதியில் 24 சிற்பங்களும், வடக்குப் பகுதியில் 20 சிற்பங்களும் உள்ளன. இந்த நாட்டிய சிற்பங்கள் அந்த கால சிற்பிகளின் நாட்டிய அறிவையும், சிற்பக்கலை திறமையையும் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

பரதநாட்டியத்தில் கை, கால், உடல் அசைவுகளின் ஒருங்கிணைந்த இசைவு 'கரணம்' எனப்படும். 'கரன்' என்றால் கை, 'அண்' என்றால் அசைவு எனப் பொருள்படும், உடல் உறுப்புகளால் செய்யப்படும் செய்கையே கரணம். இது கை முத்திரைகள் (ஹஸ்தங்கள்), கால் அசைவுகள் (சாரிகள்), மற்றும் உடல் நிலை (ஸ்தானகம்) ஆகிய மூன்றின் ஒருங்கிணைந்த, முழுமையான இயக்கமாகும். நாட்டிய சாஸ்திரத்தின்படி, சிவபெருமானால் அருளப்பட்ட மொத்தம் 108 கரணங்கள் தாண்டவங்களில் பயன்படுத்தப்படுகின்றன. கரணங்கள் நாட்டியத்திற்கு அழகையும், கம்பீரத்தையும் அளிக்கும் முக்கிய அங்கங்களாகும்.

பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரத்தில் 108 வகை கரணங்கள் விளக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் சிதம்பரம் நடராஜர் கோயில், தஞ்சைப் பெரிய கோயில் போன்ற பழமையான கோயில்களில் 108 கரணச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

Read More
செங்கல்பட்டு கோதண்டராமசாமி (வீர ஆஞ்சநேயர்) கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

செங்கல்பட்டு கோதண்டராமசாமி (வீர ஆஞ்சநேயர்) கோவில்

சனிபகவானை மிதித்த வண்ணம் காட்சி தரும் வீர ஆஞ்சநேயர்

செங்கல்பட்டு நகரில் அமைந்துள்ளது 1100 ஆண்டுகள் பழமையான செங்கல்பட்டு கோதண்டராமசாமி (வீர ஆஞ்சநேயர்) கோவில். கருவறையில் ராமபிரான், ஸ்ரீ பட்டாபிராமன் என்ற திருநாமத்தோடு, வீராசனத்தில் ஞான முத்திரையுடன் சீதாதேவியுடன் அமர்ந்த கோலத்தில் உள்ளார். .அருகில் லக்ஷ்மணர் நின்றபடியும் ,பரதன் ,சத்ருகன் மற்றும் ஆஞ்சநேயர் ஆகியோர் கிழே அமர்ந்தபடி உள்ளார்கள் , ராமபிரானோடு சத்ருகனும், பரதனும் உடன் இருப்பது ஒரு அரிய காட்சியாகும்.

இக்கோவிலின் வாயு மூலையில் வீர ஆஞ்சநேயருக்கு தனி சன்னதி உள்ளது. இவர் தனது வலது கரம் அபய முத்திரையுடனும், இடது கரத்தில் தாமரை ஏந்தியபடியும் தனது தனது காலால் சனி பகவானை அழுத்திய படியும் காட்சி தருகிறார் ,இது ஒரு அபூர்வமாக காணக்கூடிய தோற்றம் ஆகும். இதன் பின்னணியில் ஒரு சுவையான நிகழ்ச்சி உள்ளது.

சனிபகவானுக்குரிய பரிகார தலம்

அனுமன் சீதையைத் தேடி, சேதுக்கரையில் இருந்து இலங்கைக்கு தாவ முயன்ற போது, அவரை ஏழரை சனி காலம் நெருங்க இருப்பதால் சனிபகவான் அவரை பிடித்துக் கொண்டார். அனுமன் தான் முக்கிய காரணத்திற்காக இலங்கை செல்ல இருப்பதால், தன்னை பின்னர் பிடித்துக் கொள்ளுமாறு சனி பகவானிடம் கூறினார். சனிபகவானும் அவரை அப்போது விட்டுவிட்டார். பின்னர் வானரப் படைகள், சேதுக்கரையில் இருந்து இலங்கைக்கு கற்பாறைகளை கொண்டு பாலம் அமைத்துக் கொண்டிருந்த போது சனி பகவான் மீண்டும் வந்தார். அனுமன் சனி பகவானை தன் தலையை மட்டும் பிடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். சனியும் அவ்வாறே அனுமன் தலையை பிடித்துக் கொண்டார். ஆனால் அனுமன் பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்ததால், அவர் தலையில் தூக்கிய பாறைகளுக்கும், அனுமன் தலைக்கும் இடையில் சிக்குண்டு தவித்தார். அதனால் அனுமன் தலையில் இருந்து விடுபட்டு, அனுமன் காலை பிடிக்க முயற்சி செய்தார். அந்த நேரத்தில் அனுமன் காலால் மிதித்து தரையில் அழுத்தினார். சனிபகவான் அனுமனிடம் தன்னை விட்டுவிடும்படி மன்றாடினார். தன்னை விடுவித்த அனுமனிடம் சனி பகவான் உன் பக்தர்கள் அனைவரையும், ஏன் உங்களை ஒரு கணம் நினைப்பவர்களைக் கூட நான் பிடிக்க மாட்டேன் என்று உத்தரவாதம் அளித்தார். அனுமாரே சனிபகவானை மிதித்த வண்ணம் காட்சி தருகிறார் என்றால் அவரை தரிசித்து வழிபட்டால் சனி பகவானின் கொடூர பார்வையில் இருந்து பக்தர்களை காத்து விடிவு அளிக்கிறார் என்பது உண்மை. அதனால் தான் இத்தலம் , சனி பகவானால் ஏற்படக்கூடிய தாக்கத்திலிருந்து விடுபட வேண்டிக் கொள்ளும் சிறந்த பரிகார தலமாக விளங்குகின்றது.

Read More
சிறுகமணி பக்தவத்ஸலேசுவரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

சிறுகமணி பக்தவத்ஸலேசுவரர் கோவில்

திருகு பீடம் எனப்படும் அபூர்வ வடிவமைப்பு கொண்ட பீடத்தின் மேல் எழுந்தருளி இருக்கும் அம்பிகை

திருமண வரம் அருளும் கற்பகாம்பிகை

திருச்சியிலிருந்து மேற்கே கரூர் செல்லும் சாலையில் 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சிறுகமணி பக்தவத்ஸலேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் கற்பகாம்பிகை. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.

இறைவி கற்பகாம்பிகை தெற்கு நோக்கி அமைந்துள்ள சந்நிதியில் நான்கு திருக்கரங்களுடன் தரிசனம் தருகிறார். மேலிரு கரங்களில் தாமரை மலர் தாங்கி இருக்கின்றார். கீழிரு திருக்கரங்களில் அபய வரத முத்திரைகள் விளங்குகின்றன.

இத்தலத்து இறைவி கற்பகாம்பிகையின் சிலையானது 'திருகு பீடம்' எனப்படும் ஒரு சிறப்பு அடிப்பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது. திருகு பீடம் (screw type base) என்பது சிற்பக்கலையில் மிகவும் அரிதான, திருகப்பட்ட அல்லது சுருள் வடிவமைப்பு கொண்ட ஒரு சிறப்பு பீட அமைப்பாகும். பொதுவாக கோவில்களில் இறைவன், இறைவியின் சிலைகள், சிலை அடிப்பீடத்தில் நேராக வைக்கப்படும், அதனால் சிலையை நேராகத் தூக்க முடியும். ஆனால் இத்தலத்து கற்பகாம்பாள் சிலை, ஒரு திருகு அடிப்பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது, அதில் சிலையைத் திருகித்தான் தூக்க வேண்டும். அந்த நாட்களில் சிலை திருட்டைத் தடுப்பதற்கான ஏற்பாடாக இது இருந்திருக்க வேண்டும். இத்தகைய திருகு பீட அமைப்பானது ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யர் மற்றும் மயிலாப்பூர் கற்பகாம்பாள் போன்ற சில அபூர்வமான கோயில் சிலைகளின் அடியில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

கற்பகம் என்றால் தேவலோகத்தில் உள்ள, கேட்ட வரங்களை வழங்கும் கற்பக விருட்சம் போன்றவள் என்று பொருள். பக்தர்களின் கோரிக்கைகளை கற்பகத் தருவாக இருந்து நிறைவேற்றித் தருவதால், அன்னைக்கு கற்பகாம்பாள் என்ற திருநாமம் ஏற்பட்டது.

இத்தலத்து அம்பிகை கற்பகாம்பாளை வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
கோவை வடமதுரை விருந்தீஸ்வரர் கோவில்

கோவை வடமதுரை விருந்தீஸ்வரர் கோவில்

அனுமனும், கருடனும் ஒரே இடத்தில் காட்சி தரும் தனிச்சிறப்பு

குடும்பத்தில் மன ஒற்றுமை மேலோங்க அருளும் லட்சுமி நாராயணர்

கோயம்புத்தூர் மாநகரிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில், துடியலூரை அடுத்து அமைந்துள்ளது வடமதுரை விருந்தீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் விஸ்வநாயகி. இக்கோவில் 1400 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. மூன்று யுகங்களைக் கண்ட பெருமை வாய்ந்த கோவில் இது.

நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர் பசியால் தளர்ந்து இக்கோவிலுக்கு வந்தபோது, இறைவனும் இறைவியும் வேடுவ தம்பதிகளாகத் தோன்றி அவருக்கு 'வன முருங்கைக்கீரை' சமைத்து அமுது படைத்தனர். விருந்தளித்த காரணத்தால் இத்தல இறைவன் 'விருந்தீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.

இக்கோவிலின் தனித்துவமான சிறப்பு அம்சங்களில் ஒன்று, நிபந்தனையற்ற பக்தியும் மற்றும் சேவையில் ஈடுபடும் சிறிய திருவடி, பெரிய திருவடி என அழைக்கப்படும் அனுமனும், கருடனும் ஒரே இடத்தில் காட்சி அளிப்பதாகும். இக்கோவிலில் அமைந்துள்ள லட்சுமி நாராயணர் சன்னதிக்கு அருகே இவர்கள் எழுந்தருளி இருக்கிறார்கள். இவர்களிடம் வைக்கப்படும் கோரிக்கைகளை, உடனே நிறைவேற்றி வைக்கிறார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும், குடும்பத்தில் மன ஒற்றுமை மேலோங்கவும் இங்குள்ள லட்சுமி நாராயணருக்கு துளசியால் அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள்.

Read More
ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவில்

குரு, இராகு, கேது தோஷங்களை நிவர்த்தி செய்யும் ஸ்வயம் வியக்த க்ஷேத்திரம்

பெருமாள் தானாகவே, விக்கிரக வடிவில் ஓர் இடத்தில் தோன்றினால், அதை ஸ்வயம் வியக்த க்ஷேத்திரம் என்று சொல்வார்கள். வியக்தம் என்றால் வெளிப்படுதல் என்று பொருள். ஸ்வயம் வியக்தம் என்றால் இறைவன் சுயமாகவே வெளிப்பட்ட திருத்தலம் என்று பொருள். நாங்குநேரி, திருவரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருவேங்கடம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்ரிநாத், முக்திநாத் ஆகிய எட்டுத் திருத்தலங்களும் ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்களாகும். ஸ்ரீமுஷ்ணம், கடலூர் மாவட்டத்தில், விருத்தாசலத்தில் இருந்து 24 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. ‘முஷணம்’ என்றால் நமக்குத் தெரியாமல் அபகரித்துச் செல்லுதல் என்று பொருள். இந்தத் திருத்தலத்துக்கு வரும் அடியார்களின் பாபங்களை எல்லாம் அவர்களுக்கே தெரியாமல் இவ்வூர் அபகரித்து விடுவதால் (முஷணம் செய்வதால்) இவ்வூர் ‘ஸ்ரீமுஷ்ணம்’ என்று பெயர் பெற்றது.

மகாவிஷ்ணு, வராக (காட்டுப்பன்றி) அவதாரம் எடுத்து, இரண்யாட்சன் என்ற அசுரனிடமிருந்து பூமியை மீட்டார். கடலுக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த பூமியை, தன்னுடைய இரண்டு கோரைப் பற்களில் தாங்கியபடி மேல் எழுந்து வந்து, மீண்டும் வான்வெளியில் நிலைபெறச் செய்தார் என்பது புராண வரலாறு. தனது ஒரு விழிப் பார்வையால் அரச மரத்தையும், மறு விழிப் பார்வையால் துளசிச் செடியையும் உருவாக்கினார். அவர் உருவாக்கிய அரசமரம், இந்த ஆலயத்தின் பின்புறம் உள்ள நித்ய புஷ்கரணி திருக்குளத்தின் தென்கரையில் உள்ளது. இதுவே தலவிருட்சமாகவும் விளங்குகிறது.

கருவறையில், மேற்கு நோக்கியபடி பூவராக சுவாமியின், திருமேனி இருந்தாலும், அவரது முகம் தெற்கு பார்த்து இருக்கிறது. வழக்கமாகச் சங்கு, சக்கரம் ஏந்தி நான்கு திருக்கரங்களுடன் காட்சி தரும் மகாவிஷ்ணு, இங்கு வராக மூர்த்தியாக இரண்டு கரங்களுடன், அதுவும் இடுப்பில் கையை வைத்தபடி எழிலான தோற்றத்துடன் காணப்படுகிறார். அவருடன் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் இருப்பது மேலும் சிறப்பானதாகும். இங்குள்ள மூலவரின் திருமேனி, முழுவதும் சாளக் கிராமத்தினால் ஆனது. பன்றிக்கு மிகவும் விருப்பமானதான கோரைக் கிழங்கு இப்பெருமாளுக்குச் சிறப்பு பிரசாதமாக நிவேதனம் செய்யப்படுகிறது. இப்பிரசாதத்திற்கு, முஸ்தாபி சூரணம் என்று பெயர்.

பூவராக பெருமாளை வணங்குவோர் சிறந்த வாக்கு வன்மை, பெரிய பதவி, நிலைத்த செல்வம், மக்கட்பேறு, நோயற்ற வாழ்வு, நீண்ட ஆயுள் ஆகியவற்றை பெற்று வையத்தில் வாழ்வாங்கு வாழலாம் என்று புராணங்களும் மந்திர சாஸ்திரங்களும் சொல்கின்றன. குரு, இராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இங்கு வணங்கினால் அத்தகைய தோஷம் நிவர்த்தி ஆகும். தவிர புதிய வாகனங்கள் வாங்குவோர் இத்தலத்துக்கு கொண்டு வந்து அர்ச்சனை செய்வது வழக்கமாக உள்ளது. இதற்கு வாகனம் படைத்தல் என்று கூறுகிறார்கள். தவிர விபத்துக்குள்ளான வாகனங்களை ரிப்பேர் செய்த பின்பு இங்கு ஓட்டி வந்து பூவராக பெருமாளிடம் வழிபட்ட பின்னர் ஓட்டுகின்றனர்.

Read More
திருநாங்கூர் மதங்கீசுவரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருநாங்கூர் மதங்கீசுவரர் கோவில்

கருவறையில் ஊஞ்சலில் ஆடும் காளியம்மன்

சீர்காழியில் இருந்து 10 கி.மீ.தொலைவில் உள்ளது திருநாங்கூர் மதங்கீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் 'ராஜமாதங்கீசுவரி,

இக்கோவில் பிரகாரத்தின் வடக்கு புறத்தில் 'ஆனந்த வடபத்ரமாகாளியம்மன்' தனிச்சன்னதியில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். மரத்தினால் ஆன திருமேனி உடையவள். தனது எட்டு கைகளிலும் வெவ்வேறு ஆயுதங்களை ஏந்தியபடி அருளுகிறாள். கருவறையில் இவள் ஊஞ்சல் மீது அமர்ந்தபடி காட்சி தருகிறாள். இப்படி கருவறையில் ஊஞ்சலில் அமர்ந்து காட்சி தரும் அம்மனை வேறு எந்த தலத்திலும் நாம் தரிசிக்க முடியாது. ஊஞ்சலில் ஆடும்போது இந்தக் காளியம்மனின் தரிசனம் பெறுவது விசேஷம். பவுர்ணமியில் காளி சன்னதியில் மாவிளக்கு ஏற்றி, சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம் படைத்து வணங்குகின்றனர். பத்ரகாளி அம்மனின் மூலவர் விக்கிரகமே விழாக்காலங்களில், வீதி உலாவிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

Read More
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்ப உற்சவம்

சென்னை மாநகரில் , பிரசித்தி பெற்ற கோவில்களில் தேவாரத் தலமான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலும் ஒன்றாகும். இறைவனின் திருநாமம் கபாலீஸ்வரர். இறைவியின் திருநாமம் கற்பகாம்பாள். கற்பகம் என்றாலே வேண்டும் வரங்களை தருபவள் என்று பொருள்.

இத்தலத்தில் முருகப் பெருமான், வள்ளி - தெய்வானை சமேத சிங்கார வேலர் என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார். இக்கோவிலில் நடக்கும் பல திருவிழாக்கள் மிகவும் விசேஷமானவை, தனித்துவமானவை. அப்படி நடத்தப்படும் விழாக்களில் தைப்பூச தெப்ப உற்சவமும் ஒன்று. தைப்பூச நாளில் இக்கோவில் சிவன், அம்பாள், முருகன் ஆகிய மூவருக்கும் விழா எடுக்கப்படுவது தனிச்சிறப்பு.

இக்கோவிலில், தைப்பூச தெப்ப உற்சவம் மூன்று நாட்கள் நடைபெறும் முதல் நாள் கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரரும், அடுத்த இரண்டு நாட்கள் வள்ளி தெய்வயானை சமேத சிங்காரவேலரும், மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய தெப்பத்தில் திருக்குளத்தில் பவனி வருவார்கள்.

கபாலீஸ்வரரின் திருக்கரத்தை பற்றிய நிலையில் அன்னை கற்பகாம்பாள் மணப்பெண் போன்ற கோலத்தில் பல்லக்கில் எழுந்தருளி, தெப்பத்தில் உலா வரும் காட்சி கண் கொள்ளா காட்சியாக இருக்கும். அதேபோன்று சிங்காரவேலர், ஒரு காலை தரையில் ஊன்றியும், ஒரு காலை மயில் மேல் வைத்தபடியும், வள்ளி - தெய்வானையுடன் கம்பீரமாக, அழகிய கோலத்தில் காட்சி தருவது பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும்.

Read More
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

ஆங்கிலேய கலெக்டர் உணர்ந்த திருச்செந்தூர் முருகனின் தெய்வீக சக்தி

1803ம் ஆண்டில் ஆங்கிலேய கலெக்டராக திருநெல்வேலியில் பணிபுரிந்த லூசிங்க்டன் துரை, ஒரு முறை திருச்செந்தூருக்கு வந்தார். அப்போது முருகனுக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த வழிபாடுகளைக் கண்டார். அதில் முருகனுக்கு அளிக்கப்படும் சோடச உபசாரம் எனப்படும் 16 வகை உபசாரங்களைக் கண்டார். அதில் வெள்ளி விசிறியால் முருகனுக்கு வீசுதலும் ஒன்றாகும்.

இதைப் பார்த்த லூசிங்க்டன் துரை, 'உங்கள் கடவுளுக்கு வியர்வை உண்டாகிறதோ' எனக் கேலி செய்து சிரித்தார். இதைக் கவனித்த அர்ச்சகர்கள், 'ஆமாம். எங்கள் சண்முகனுக்கு வியர்க்கும்' என்றார்கள். பின்னர் லூசிங்க்டன் துரைக்கு முருகப் பெருமானின் சிறப்பை உணர்த்தும் விதத்தில் முருகப் பெருமானின் மேலிருந்த மாலைகளை எடுத்து விட்டு ஒரு புதிய துணியை முருகப்பெருமானின் மேல் போர்த்தினார்கள். கொஞ்ச நேரத்தில் முருகப்பெருமான் மீது வியர்வை உருவாகி அந்த துணி முழுவதும் நனைந்தது. வியர்வை அதிகமாகி அது தரையிலும் ஓட ஆரம்பித்தது.

இதற்குக் காரணம், திருச்செந்தூர் கோவில் முருகன் விக்ரகம் எப்போதும் மிகவும் சூடாக இருக்கும். சூரபத்மனை வதம் செய்வதற்காக கோபத்தில் முருகன் இருந்ததால், அவர் திருமேனி எப்போதும் வியர்த்தவாறு இருக்கிறது
அதனால் அர்ச்சகர்கள் சந்தனைத்தை அரைத்து அதில் சிறிதும் தண்ணீர் இல்லாமல் நன்றாக வடிகட்டி அதனை, காலை நேரத்தில் முருகன் விக்ரகம் மீது முழுவதுமாக பூசி மூடி விடுவார்கள். விக்ரகத்தில் இப்படி பூசப்பட்டிருக்கும் சந்தனம், மாலை நேரத்தில் ஈரத்தினால் சொத சொதவென சிலை முழுக்க வழிந்து இருக்கும்.

முருகப்பெருமானின் விக்ரகத்தில் திட்டு திட்டாக வியர்வை அரும்பி இருப்பதைக் கண்டு லூசிங்டன் வியந்தார். வீடு திரும்பிய லூசிங்டன் கலெக்டருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவரின் மனைவி திடீரென கடுமையான வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்தார்.

தான் முருகனின் வழிபாட்டை ஏளனம் செய்ததாலேயே `தனக்கு இப்படி ஏற்பட்டதாக உணர்ந்தார். என்ன செய்வதென்று புரியாமல், தனக்கு கீழே வேலை பார்க்கும் முருக பக்தர் ஒருவரிடம், முருகனின் கோபம் தணிய என்ன செய்ய வேண்டும் என கேட்டார். அவர் கூறிய யோசனையின்படி, முருகப்பெருமானிடம் தான் செய்தது தவறு, என்னை மன்னித்து என் மனைவியை காப்பாற்று. அப்படி செய்தால் நான் என் சொந்த செலவில் உன் ஆலயத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி தருகிறேன் என வேண்டினார். முருகனிடம் வேண்டி விட்டு வீடு திரும்பிய லூசிங்டன் பிரபு, மனைவியின் வயிறு வலி நீங்கியிருந்ததைக் கண்டு அதிசயித்துப் போனார். உடனே அவர் முருகனுக்கு வேண்டிக் கொண்டபடி வெள்ளிப் பாத்திரத்தை கோவிலுக்கு காணிக்கையாகக் கொடுத்தார்.
அவர் கொடுத்த வெள்ளிப் பாத்திரம் இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் 'லூசிங்க்டன் 1803' என்று பொறித்திருப்பதை நாம் காண முடியும்.

Read More
திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோவில்

திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோவில்

சனி பகவானை வணங்கிய பின் தான் சிவனை வழிபட வேண்டும் என்ற அபூர்வமான நடைமுறை உள்ள தேவார தலம்

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து 5 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலம் திருநள்ளாறு. இறைவனின் திருநாமம் தர்ப்பாரண்யேசுவரர், இறைவியின் திருநாமம் பிராணேசுவரி. இறைவன் தர்ப்பையில் முளைத்தவர் என்பதால் தர்ப்பாரண்யேசுவரர் எனப்படுகிறார். தர்ப்பையில் முளைத்த தழும்புடன் உள்ளார். தரப்பாணேஸ்வரரை சனிபகவான் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்று புராணம் கூறுகிறது.

பிராணேசுவரி அம்மன் சன்னதிக்கு முன்னால், சனிபகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இக்கோவிலின் வாயிற் காப்பாளராக சனி பகவானே கருதப்படுகிறார். பொதுவாக சிவனை வழிபட்ட பிறகு தான் நவகிரகங்களை வழிபடுவார்கள். ஆனால் இத்தலத்தில் சனீஸ்வரனை வணங்கிய பிறகு தான் சிவனை வழிபட வேண்டும் என்ற வழக்கம் உள்ளது. மேலும் சனி பகவானை தவிர, மற்ற எட்டு கிரகங்களும் இந்தக் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படவில்லை. சனிபகவானது விக்ரகத்தின் கீழே, அவரது சாந்நித்யம் கொண்ட மகாயந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சனி பகவானாலேயே அந்த மகாயந்திரம் அருளப்பட்டதால், அதனுடைய சக்தி அளவிட முடியாதது. அதனாலேயே சனிபகவானின் திருச்சன்னதி மிக்க சிறப்பும், சக்தியும், மூரத்திகரமும் பெற்று விளங்குகிறது.

பிரார்த்தனை

இத்தலத்தில் நள தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், வாணி தீர்த்தம் தவிர அஷ்டதீர்த்தங்கள் எனப்படும் மொத்தம் 8 தீர்த்தங்கள் உள்ளன. சனித் தொல்லை தீர நள தீர்த்தத்திலும், முன் ஜென்ம சாபவங்கள் விலக பிரம்ம தீர்த்தத்திலும், கலைகளில் தேர்ச்சி பெற வாணி தீர்த்தத்திலும் நீராடி பிரார்த்தனை செய்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

சனி பகவானை வழிபடும் போது சொல்ல வேண்டிய காயத்ரி மந்திரம்

சனி காயத்ரி மந்திரம் :

காகத் வஜாய வித்மஹே

கட்க ஹஸ்தாய தீமஹி

தந்நோ மந்த: ப்ரசோதயாத்

Read More
உறையூர் தான்தோன்றீஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

உறையூர் தான்தோன்றீஸ்வரர் கோவில்

வளைகாப்பு நாயகி குங்குமவல்லி அம்மன்

திருச்சி மாநகரின் ஒரு பகுதியான உறையூர், முற்காலத்தில் சோழ மன்னர்களின் தலைநகராக விளங்கியது. உறையூரின் மத்தியில் அமைந்துள்ளது, சுமார் 1800 ஆண்டுகள் பழமையான தான்தோன்றீஸ்வரர் கோவில். இக்கோவில் கர்ப்பிணி பெண்களுக்கான கோவில் என்ற சிறப்பை பெற்றுள்ளது.

சூரவாதித்தன் என்ற சோழ மன்னனின் மனைவி காந்திமதி. சிவ பக்தையான இவள், திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமியை தினமும் வழிபடும் வழக்கம் உள்ளவள. காந்திமதி கருவுற்றிருந்த சமயம் ஒருநாள், தாயுமான சுவாமியை தரிசிக்க திருச்சி மலைக்குச் சென்றபோது களைப்பின் காரணமாக நடக்க முடியாமல். மயங்கி அமர்ந்தாள். அப்போது காந்திமதியின் முன் தோன்றிய சிவபெருமான், நீ மிகவும் பிரயாசைப்பட்டு என்னை தேடி வர வேண்டாம். உன்னைப் பார்க்க நானே வந்துவிட்டேன். உனக்கு காட்சி தந்த இந்த இடத்தில் லிங்க ரூபமாக, 'தான்தோன்றி ஈசனாக' எப்போதும் இருந்து உன்னைப் போன்ற கர்ப்பிணிப் பெண்களை காத்து நிற்பேன் என்று கூறி மறைந்தார். சிவபெருமானுடன் பார்வதி தேவியும் இந்தத் தலத்தில் குங்குமவல்லியாக எழுந்தருளி பெண்களின் மங்கலம் காக்கும் தேவியாக அருள்பாலிக்கிறாள். இவள் வளைகாப்பு நாயகி என்றும் திருச்சி மாநகரப் பெண்களால் அன்போடு அழைப்படுகிறாள்.

கோவில் கருவறையில் தான்தோன்றீஸ்வரர் கிழக்கு முகமாக ஏழடி கொண்ட பிரமாண்ட வடிவாக அருள்கிறார். குங்குமவல்லி, இரு கரங்களில் அங்குசம் மற்றும் தாமரை ஏந்தி நின்ற கோலத்தில் அழகுற காட்சி தருகிறாள்.

குங்குமவல்லி தேவிக்கு, ஒவ்வொரு ஆண்டும் வளையல் காப்புத் திருவிழா ஆடிப்பூரம் மற்றும் தை மாத மூன்றாம் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு தினங்களில் மூன்று நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் இந்த வளையல் விழா வெகு பிரசித்தம்.

விழாவின் முதல் நாளில் கர்ப்பிணிப் பெண்கள் குங்குமவல்லி அம்மனுக்கு சுகப்பிரசவம் வேண்டி வளையல்களைக் காணிக்கையாக அளிப்பார்கள். அதேபோல் இரண்டாம் நாள் திருமணமான பெண்கள் குழந்தை வரம் வேண்டி வளையல்களைக் காணிக்கையாக தருவார்கள். விழாவின் மூன்றாம் நாளில் திருமணமாகாத கன்னிப்பெண்கள் தங்களின் திருமண தடை நீங்கி நல்ல வரன் கிடைக்க வளையல்களைக் காணிக்கையாக தருவார்கள்.. வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாள்களிலும் குங்குமவல்லி வளையல் அலங்காரத்தில் வெகு அழகாகக் காட்சி அளிப்பாள். பிறகு பூஜை வழிபாட்டுக்குப் பின்னர் காணிக்கையாகப் பெறப்பட்ட வளையல்கள் பிரசாதமாகத் தரப்படும்.

இந்தத் தலத்தில் வழிபட்டால் களத்திர தோஷம், செவ்வாய் தோஷம், நாக தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருமணம் கைகூட, குழந்தைப்பேறு உண்டாக மாநிலம் முழுவதிருந்தும் ஏராளமான பெண்கள், கூட்டம் கூட்டமாக இந்த கோவிலுக்கு வருகிறார்கள். வேண்டுதல் நிறைவேறி குழந்தைப் பிறந்தவுடன் இங்கு வந்து வளையல் மாலை போடும் சடங்கு அநேகமாக எல்லா நாளிலும் இங்கு நடக்கிறது. சுருங்கச் சொன்னால் குழந்தை வரம் வேண்டுவோருக்கு இந்த கோவில் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

Read More
திருவாரூர் தியாகராஜர் கோவில்

திருவாரூர் தியாகராஜர் கோவில்

எமதர்மனுக்கு புதிய வேலைக் கிடைத்த தேவாரத் தலம்

பொதுவாக எல்லா சிவாலயங்களிலும் ஒரு சண்டிகேசுவரர் மட்டுமே இருப்பார். ஆனால் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் இரண்டு சண்டிகேசுவரர்கள் இருக்கிறார்கள். ஒருவர் ஆதி சண்டிகேசுவரர். மற்றொருவர் எம சண்டிகேசுவரர்.

பிறக்க முக்தி எனும் சிறப்புடையது திருவாரூர் தலம். அதனால் இத்தலத்தில் பிறந்தவரகள் அனைவரும் சிவ கணங்கள் என்னும் தகுதியைப் பெறுகிறார்கள். இக்காரணத்தினால் எமதர்மன் அவர்களை நெருங்க முடியாது. இறைவனே முக்தி பேறு தந்து அவர்களை அழைத்துச் செல்வதால், இத்தலம் முக்தித் தலம் என்றழைக்கப்படுகிறது.ஆதலால் திருவாரூரில் தனக்கு வேலை இல்லையே என்று எமதர்மன் சிவபெருமானிடம் முறையிட்டான். அவன் மனக்குறையைப் போக்குவதறகாக, சிவபெருமான் அவனுக்கு சண்டிகேசுவரர் பதவி கொடுத்தார். இக்கோவிலில் இரண்டாம் பிரகாரத்தில் எமதர்மன் ஒரு காலை ஊன்றி கையில் முகத்தைத் தாங்கி நமக்குக் காட்சி தருகிறார். எமதர்மன் இறைவனை வேண்டி, சண்டிகேசுவரர் பதவி பெற்று தனது வேலையைக் காப்பாற்றிக் கொண்டதால், எமபயமுள்ளவர்கள் இத்தலத்துக்கு வந்து வழிபட்டால் நன்மை பயக்கும்.

Read More
எண்கண் ஆதிநாராயணபெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

எண்கண் ஆதிநாராயணபெருமாள் கோவில்

மூலஸ்தானத்தில் பெருமாள் கருட வாகனத்தின் மீது எழுந்தருளியிருக்கும் அபூர்வக் காட்சி

திருவாரூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள எண்கண் தலத்தில் அமைந்துள்ளது, ஆதிநாராயண பெருமாள் கோவில்.

பொதுவாக, பெருமாள் கோவில்களில் பெருமாள் நின்ற, இருந்த, கிடந்த என்ற மூன்று நிலைகளிலும், சிறப்பம்சமாக நடந்த நிலை எனப்படும் திரிவிக்ரம அவதார நிலையிலும் தரிசனம் தருவார். பெருமாளின் எதிரே பெரிய திருவடியான கருடாழ்வார், நின்ற நிலையில் கைகூப்பியபடி காட்சி தருவார். திருவிழாக் காலங்களில் உற்ஸவ மூர்த்திகள் மட்டும் கருடாழ்வாரின் மீதேறி கருட வாகனராக சேவை சாதிப்பார்.

ஆனால் இந்த எண்கண் திருத்தலத்தில், பெருமாளின் நித்யகருட சேவையை தினமும் தரிசிக்கும் வகையில், மூலஸ்தானத்தில் பெருமாள் கருட வாகனத்தின் மீது அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். இதுபோன்று மூலஸ்தானத்தில் பெருமாள் கருட வாகனத்தின் மீது அமர்ந்த கோலத்தில் உள்ள அமைப்பை வேறு எங்கும் காண்பது அரிது. இங்கே கருடாழ்வாரும் பெருமாளும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டிருப்பது சிறப்பம்சம். உற்சவர் ஆதிநாராயணப்பெருமாள் பிரயோகச்சக்கரம் ஏந்தி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கிறார்.

ஒருசமயம் பிருகு முனிவர் இத்தலத்தில் பெருமாளைக் குறித்து தவம் இருந்தார். அச்சமயம் சிங்க வேட்டைக்கு வந்த சோழ மன்னன் படைகள் எழுப்பிய கூச்சலால் அவர் தவம் கலைந்தது. அதனால் சோழ மன்னனின் முகம் சிங்க முகமாக மாற சபித்து விட்டார். தனது செயலை எண்ணி வருந்திய மன்னன், தனக்கு சாப விமோசனம் அளிக்கும்படி முனிவரை வேண்டினான்.

மனம் இரங்கிய பிருகு முனிவர், 'தைப்பூசத் திருநாளில், விருத்த காவேரி என்று அழைக்கப்படும் வெட்டாற்றில் நீராடி, எண்கண் எனப்படும் இந்தத் தலத்தில் அமர்ந்து பெருமாளை நோக்கி தவமிருந்து வழிபட்டால், அப்போது, பெருமாள் கருடன் மீதமர்ந்து காட்சி தருவார். மயில் மீது முருகனும் அமர்ந்து காட்சி தர, சாப விமோசனம் கிட்டும். அதன்பின்னர்,பெருமானுக்கு சிம்ம, ரிஷப, மயூர, அன்ன, மேஷ வாகானாதிகள் உள்பட 108 வாகனங்கள் அமைத்து பெருவிழாவை நடத்த வேண்டும்' என்றார். அதன்படி சோழனும் பெருமாளை நினைந்து மனமுருகி வழிபட்டு வந்தான்.

சோழ மன்னனின் வேண்டுதலுக்கு உடனே செவி சாய்க்கும் விதத்தில், பெருமாள் கருட வாகனத்தில் பறந்து வந்து சோழ மன்னனுக்கு காட்சி தந்து அருள்புரிந்தார். முருகனும் மயில் மீது அமர்ந்து சோழ மன்னனுக்கு காட்சி தந்து அருள்புரிந்தார். அதன்மூலம், மன்னனின் சிங்க முகம் மாறி பழைய நிலை அடைந்தான்.

சோழனுக்கு பெருமாள் கருட வாகனத்தில் காட்சி கொடுத்த அதே அமைப்பில் சோழ மன்னன் பெருமாளுக்கு இங்கே கோயில் எழுப்பினானாம். எனவே இங்கே கருவறையில் மூலவர் பெருமான் கருட வாகனத்தில் அமர்ந்த நிலையில் நித்திய கருடசேவையாக பக்தர்களுக்குக் காட்சி தந்து கொண்டிருக்கின்றார்.

மிருகசீரிஷ நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கோவில்

பெருமாளின் அருளால் அரசனுக்கு மிருக முகம் நீங்கி, பழைய முகம் கிடைத்ததன் காரணமாக இத்தலம் மிருகசீர்ஷ நட்சத்திரக்காரர்களின் தோஷம் போக்கும் பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தமது வாழ்நாளில் அடிக்கடியோ, அல்லது மிருகசீரிட நட்சத்திரத்தன்றோ இத்தல பெருமாளை வழிபாடு செய்தால், உடனே கருட வாகனத்தில் தோன்றி மிருக சீரிட நட்சத்திரக்காரர்களின் நட்சத்திர தோஷத்தை நீக்குவதாக ஜதீகம்.

படிப்புக்கேற்ற வேலை கிடைக்காதவர்கள், நல்ல சம்பளத்துடன் கூடிய உயர் பதவி வேண்டுபவர்கள், புதன், சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும்.

குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், திருமணத்தில் தடை உள்ளவர்கள், நாக தோஷம், பட்சி தோஷம் உள்ளவர்கள் , தோல் நோயால் பாதிக்கப்பட்வர்கள், பகைவர்களால் பாதிக்கப்பட்டவர்கள், பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர நினைப்பவர்கள், அடிக்கடி மரண சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் தொந்தரவுகள், பவுர்ணமி மற்றும் மிருகசீரிட நட்சத்திர நாட்களில் இங்கு வழிபாடு செய்ய வேண்டும்.

Read More
மோகனூர் காந்தமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

மோகனூர் காந்தமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

ஆவுடையார் மேல் நின்ற கோலத்தில் இருக்கும் அபூர்வ முருகன்

நாமக்கல்லிலிருந்து 19 கி.மீ. தொலைவிலுள்ள மோகனூரில் உள்ள காந்தமலை என்ற குன்றின் மேல் அமைந்திருக்கிறது பாலசுப்பிரமணிய சுவாமி கோவில். சிவபார்வதியின் மகன் முருகன் நின்ற தலம் என்பதால் மகனூர் என்று அழைக்கப்பட்ட இத்தலம் பின்னர் மோகனூர் என்று மருவியது. பழனியைப் போலவே இத்தலத்தில் முருகன் மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார். தனது வலது கையில் தண்டம் வைத்து, ஆவுடையார் மேல் நின்ற கோலத்தில் தோற்றம் அளிக்கிறார். இப்படி ஆவுடையார் மேல் நின்ற கோலத்தில் இருக்கும் முருகனை, நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. இந்தக் கோவிலுக்குச் செல்ல 39 படிகள் இருக்கின்றன. அவை 27 நட்சத்திரங்களையும், 12 ராசிகளையும் குறிக்கின்றது.

தல வரலாறு

முருகன், தனக்கு மாம்பழம் கிடைக்காததால், தாய் தந்தையரிடம் கோபித்துக் கொண்டு கயிலாயத்தில் இருந்து பழனி நோக்கிப் புறப்பட்டார். அவரைப் பின்தொடர்ந்த பார்வதிதேவி 'முருகா நில்' என்று அழைத்தார். தாயின் சொல் கேட்டு முருகன் நின்றார். தாயின் அறிவுரை சொல் கேட்டும் அவர் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. பார்வதி தேவி அழைத்தபோது முருகன் நின்ற இடம் தான் இத்தலம் என்று தல வரலாறு கூறுகின்றது.

பிரார்த்தனை

செவ்வாய் தோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் இவருக்கு செவ்வாய்க்கிழமைகளில் மஞ்சள் வஸ்திரம் அணிவித்து, செவ்வரளி மாலை சாற்றி வேண்டிக்கொள்கிறார்கள். ஜாதகத்தில் நட்சத்திர தோஷம் உடையவர்கள் இவரை வழிபட்டால் அது நிவர்த்தி ஆகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்தலத்து முருகனிடம் வேண்டிக் கொண்டால் அறிவு மற்றும் தன்னம்பிக்கையுடன் செயலாற்றும் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

Read More
திலதர்ப்பணபுரி (திலதைப்பதி) முக்தீஸ்வரர் கோவில்

திலதர்ப்பணபுரி (திலதைப்பதி) முக்தீஸ்வரர் கோவில்

இப்பிறவியில் செய்த பாவங்களைப் போக்கும் பீஷ்மாஷ்டமி தர்ப்பணம்

மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ள தேவாரத்தலம் திலதர்ப்பணபுரி . இத்தலம் தற்போது திலதைப்பதி என்று அழைக்கப்படுகிறது. திலம் என்றால் எள், புரி என்றால் தலம். எள் தர்ப்பணம் செய்ய சிறந்த தலம் என்பது பொருள். இந்தியாவில் பித்ரு தலங்கள் 7 உள்ளன. அவை காசி, ராமேஸ்வரம், கயா, திரிவேணி சங்கமம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி ஆகும். ராமேஸ்வரத்தில் செய்யப்படும் பித்ருக்கள் சம்பந்தமான அனைத்து பூஜைகளும் திலதர்ப்பணபுரியிலும் செய்யப்படுகின்றன. இறைவன் திருநாமம் முக்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் சொர்ணவல்லி.

சாதி, மத பேதமின்றி அனைத்து மக்களுக்கும் செய்யப்படும் காருண்ய தர்ப்பணம் இங்கு மிக விசேஷம். சொர்ணவல்லித் தாயார், பிரம்மா, மகாலட்சுமி, ஸ்ரீராமர், நட்சோதி மன்னன் போன்றவர்களே இத்திருக்கோவில் வந்து பித்ரு தர்ப்பணம் செய்துள்ளனர் என்றால், இக்கோவிலின் மகிமையும், பித்ரு தர்ப்பணத்தின் மகிமையும் நமக்கு விளங்கும். இக்கோவிலில் பித்ரு தர்ப்பணம் செய்ய அமாவாசை, திதி, நட்சத்திரம் ஆகியவை பார்க்கத் தேவையில்லை. இத்தலத்தில் எந்த நாளில் வேண்டுமானாலும் சிரார்த்தம், தர்ப்பணம் செய்யலாம்.

பீஷ்மாஷ்டமி தர்ப்பணம்

தை மாதம் ரதசப்தமிக்கு மறுநாள் வரும் அஷ்டமி தினம், பீஷ்மாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. மஹாபாரதத்தில் கங்கையின் மைந்தரான பீஷ்மரை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவர் இல்லாமல் மஹாபாரத காவியமே கிடையாது. கிருஷ்ணபரமாத்மா எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவரோ, அதே அளவுக்கு பீஷ்மரும் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவர். உலக நன்மைக்காகவும், தன்னுடைய தந்தைக்காகவும் செய்த தியாகத்திற்கு பிரதிபலனாக, பீஷ்மர் தான் விரும்பாமல் தன்னுடைய உயிர் உடலை விட்டு பிரியாது என்னும் வரத்தை பெற்றார். இதனால் பாண்டவர்கள்,கௌரவர்கள் என இரு தரப்புக்கும் பிரியமான பிதாமகர் என்று மரியாதையுடன் அழைக்கப்பட்டார்.

மஹாபாரதப் போரில் , பீஷ்மர் அர்ச்சுனனின் அம்புகளால் வீழ்த்தப்பட்டு அம்புப்படுக்கையில் கிடந்தாலும், தான் பெற்ற வரத்தின் காரணமாக, மோட்ச காலமான உத்தராயண காலத்தில் உயிர் துறக்க விரும்பி தன் மரணத்தை தள்ளிப் போட்டு வந்தார். பீஷ்மர் மரணப் படுக்கையில் இருந்தபோது,மஹாவிஷ்ணுவை வேண்டிக் கொண்டார். அவருக்கு கிருஷ்ணபரமாத்மா தன்னுடைய விஸ்வரூபத்தை காட்டி அருளினார். அந்த சமயத்தில் பீஷ்மர் அருளியதே விஷ்ணு சகஸ்ரநாமம் ஆகும். அப்போது மோட்சம் அளிக்கும் உத்தராயண காலம் ஆரம்பமாகிவிட்டதால், பீஷ்மர், தன்னுடைய உயிர் பிரியவேண்டும் என்று வேண்டிக்கொண்டார். ஆனால், உயிர் பிரியவில்லை. உத்தராயண காலம் தொடங்கியும் தன்னுடைய உயிர் பிரியாததைக் கண்டு மனம் வருந்தி வியாசரிடம் விளக்கம் கேட்டார் பீஷ்மர். அதற்கு வியாசர், பீஷ்மர் செய்த பாவச்செயலை, அதாவது திரௌபதியை கௌரவர்கள் மானபங்கப் படுத்தியபோது தடுக்காததை, அவரிடம் எடுத்துரைத்தார். தன்னுடைய மாபெரும் தவறை உணர்ந்து கொண்ட பீஷ்மர், தன்னுடைய உடலை எரிக்கும் சக்தியை, சூரிய தேவனிடம் இருந்து பெற்றுத் தருமாறு வியாசரிடம் கேட்டுக்கொண்டார். உடனே வியாசரும், சூரிய சக்திக்கு நிகரான எருக்க இலைகளைக் கொண்டு பீஷ்மரை அலங்கரித்தார். இதையடுத்து நிம்மதியடைந்த பீஷ்மர் தியான நிலைக்கு சென்று மோட்சம் பெற்றார்.

பீஷ்மர் உயிர் பிரிந்து மோட்சம் பெற்றாலும், அவர் பிரம்மச்சாரி என்பதால், அவருக்கு தர்ப்பணம் செய்ய வாரிசுகள் இல்லை. ஆனால், பீஷ்மர் ஒழுக்க நெறி தவறாமல் பிரம்மச்சாரிய விரதத்தைக் கடைபிடித்து வந்ததால், அவருக்கு சிரார்த்தம் செய்யவேண்டிய அவசியம் இல்லை என்று வியாசர் கூறினார். வியாசர் அப்படி சொன்னாலும், பீஷ்மரின் ஆத்மாவுக்காக இந்த நாடே தர்ப்பணம் செய்யும். அதனால் புண்ணியமும் கிடைக்கும் என்று ஆசி வழங்கினார் வியாசர். பீஷ்மர், ரதசப்தமி முடிந்த மறுநாளான அஷ்டமி திதியன்று தன்னுடைய உயிரைப் போக்கிக்கொண்டார். அந்த அஷ்டமியே பீஷ்மாஷ்டமி என்று கூறப்படுகிறது.

பீஷ்மாஷ்டமி தினத்தில், பீஷ்மருக்காகவும், நம்முடைய முன்னோர்களுக்காகவும் தர்ப்பணம் செய்தால், நாம் இப்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி, நம்முடைய வாழ்வில் நிச்சயம் சுபிட்சம் ஏற்படும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

Read More
திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்

திருப்பதி ரத சப்தமி உற்சவம்

தை மாதத்தில், அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை சப்தமியையே ரத சப்தமி என்று அழைக்கிறார்கள். ரத சப்தமி நாள் சூரிய ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது. அன்றைய தினம் சூரியன் பயணிக்கும் தேரை இழுத்துச்செல்லும் 7 குதிரைகளும் ஒரு சேர வடக்கு நோக்கி திரும்பி பயணத்தை தொடங்குகின்றன என விளக்குகிறது புராணம்.

திருமலை திருப்பதியில் புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழா மிகவும் விசேஷமானது. இந்தத் திருவிழாவின்போது, தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் மலையப்பசாமி ஒரு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருவார். ஆனால் தை மாதம் ரத சப்தமியன்று ஒரே நாளில் ஏழு வாகனங்களில் மலையப்ப சுவாமி தனித்தும்,ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடனும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார். ரதசப்தமி அன்று நடைபெறும் வாகன சேவைகள்

சூரிய பிரபை வாகனம் - அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 8 மணி வரை.

சிறிய சே‌ஷ வாகனம் - காலை 9 மணியில் இருந்து 10 மணி வரை

கருட வாகனம் - பகல் 11 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை

அனுமந்த வாகனம் - மதியம் 1 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை

கல்ப விருட்ச வாகனம் - மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணி வரை

சர்வ பூபால வாகனம் - மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை

சந்திரபிரபை வாகனம் - இரவு 8 மணியில் இருந்து இரவு 9 மணி வரை

சூரிய பகவானை வழிபடும் விரதங்களில் முக்கியமானது ‘ரதசப்தமி’. ரத சப்தமி நாளில் சூரிய பகவானின் பெயரில் தானம் செய்யவது நல்லது. ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் ஏழு வகையான பாவங்களைச் செய்கிறான் என்று கூறப்படுகிறது. இவை வேண்டுமென்றே, தற்செயலாக, வாய் வார்த்தையாலும், உடல் செயலாலும், மனதாலும், முற்பிறவியிலும் செய்த பாவங்கள். ரத சப்தமி அன்று சூரிய பகவானை வழிபடுவதால் இந்த பாவங்களில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Read More
வழுவூர் வீரட்டேஸ்வர் கோவில்

வழுவூர் வீரட்டேஸ்வர் கோவில்

சனி பகவான் கையில் வில்லுடன் இருக்கும் அபூர்வத் தோற்றம்

மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில், 9 கி. மீ. தூரத்தில் அமைந்துள்ளது வழுவூர் வீரட்டேஸ்வர் கோவில். இறைவன் திருநாமம் கஜசம்ஹார மூர்த்தி. இறைவியின் திருநாமம் பாலாங்குராம்பிகை, அட்ட வீரட்டான தலங்களுள் ஒன்று, வழுவூர். பிரளய காலத்தில் உலகமெலாம் அழிந்தும், அவ்வூர் அழியாமல் வழுவியதால் வழுவூர் என்று பெயர் ஏற்பட்டது.

சோழ மன்னன் ஒருவர் இப்பகுதியை அரசாண்டபோது சனிபகவானின் சஞ்சாரம் காரணமாக நாட்டில் கடும் பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. அந்த மன்னன் சனிபகவானை நோக்கித் தவமிருந்து நாட்டில் பஞ்சம் வராத வரத்தைப் பெற்றார். அவர் வழிபட்ட சனி பகவான், மேகத்தைத் துளைத்து மழைபொழிய வைத்தாராம். அதை நிரூபிக்கும் வகையில் அவர் கையில் வில்லுடன் அற்புதமாக காட்சி தருகிறார். அதனால் இவரை வழிபட்டால் நம்முடைய துன்பத்தை, பஞ்சத்தை போக்கி செழிப்புடன் நம்மை வாழ வைப்பார் என்பது ஐதீகம். சனீஸ்வரனின் ஏழரைச்சனி காலத்தில் பொருளாதார ரீதியாக நஷ்டத்தை சந்தித்தோர், வில்லேந்திய வடிவில் உள்ள சனீஸ்வரரை வழிபட்டு வாழ்வில் நன்மை பெறலாம்.

Read More
திருநாங்கூர் மதங்கீசுவரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருநாங்கூர் மதங்கீசுவரர் கோவில்

ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியின் அமைச்சராக விளங்கும் ஸ்ரீராஜமாதங்கீசுவரி

சீர்காழியில் இருந்து 10 கி.மீ.தொலைவில் உள்ளது திருநாங்கூர் மதங்கீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் ஸ்ரீராஜமாதங்கீசுவரி. இறைவிக்கு அஞ்சனாட்சி, கடம்பவனவாசினி என்று மேலும் 16 பெயர்கள் உண்டு. அம்பிகை, ஸ்ரீ சக்கரத்தில் எழுந்தருளி இருக்கும், அரசர்க்கெல்லாம் அரசி என்று போற்றப்படும் ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியின் அமைச்சராக விளங்குபவள்.

பிரம்மதேவனின் புதல்வரான மதங்க முனிவரின் மகளாக பிறந்தமையால், மாதங்கி என அழைக்கப்படுகிறார். அம்பிகை மாதங்கி, சிவபெருமானை இத்தலத்துக்கு அருகில் உள்ள திருவெண்காட்டு தலத்தில் திருமணம் புரிந்தாள். அதனால் இங்கு திருமண கோலத்தில் எழுந்தருளி இருக்கிறாள். மேல் இரு கரங்களில் பத்மத்தையும், சக்கரத்தையும் சுமந்து கீழ் இரு கரங்களில் அபய, வரத முத்திரைகளுடன் காட்சி தருகிறாள்.

சரஸ்வதி தேவிக்கு கல்வி உபதேசம் செய்தவள்

சகல கலைகளுக்கும் அதிபதியாக விளங்குபவள் மதங்கீசுவரி. சரஸ்வதி தேவிக்கு குருவாக இருந்து கல்வி உபதேசம் செய்தவள் என்பதால் இவளிடம் வேண்டிக்கொள்ள கல்வியில் சிறக்கலாம் என்பது ஐதீகம். புதிதாக பள்ளியில் சேர்க்கும் குழந்தைகளை பௌர்ணமி மற்றும் அஷ்டமி தினங்களில் அம்பாள் சன்னதி முன்பு நாக்கில் தேன் வைத்து எழுதி 'அக்ஷராப்பியாசம்' செய்கின்றனர். இவ்வாறு செய்வதால் அவர்களது கல்வி சிறக்கும் என்கிறார்கள். பேச்சு வராத குழந்தைகளை அன்னையின் சன்னிதி முன் அமரச் செய்து, அவர்கள் நாக்கில் தேனைத் தடவி மூல மந்திரத்தை எழுத, அவர்கள் மெல்ல மெல்ல பேசத் தொடங்குகின்றனர். இந்த அம்பிகையை தரிசிப்பவருக்கு கலை, கல்வி, தேர்வில் தேர்ச்சி, உயர் பதவி, தொழில் மேன்மை, பேச்சு வன்மை அனைத்தும் கிடைக்கப்பெறும்.

திருமண தடை நீங்க மட்டை தேங்காயுடன் அர்ச்சனை

திருமணத் தடை உள்ளவர்கள்அஷ்டமி அன்று இவளுக்கு பாசிப்பருப்பு பாயாச நைவேத்யம் படைத்து, மட்டை உரிக்காத முழு தேங்காயை அர்ச்சனை பொருட்களுடன் தட்டில் வைத்து அன்னைக்கு அர்ச்சனை செய்கின்றனர். பின் அந்த தேங்காயை, 11 மாதங்கள் வீட்டில் வைத்து, மாதந்தோறும் அஷ்டமி அன்று பூஜை செய்து வர வேண்டும். அப்படி செய்தால் 11 மாதங்களுக்குள் அவர்கள் திருமணம் நடைபெறுவது உறுதி என்கிறார்கள். திருமணத்திற்கு பின்னர், தம்பதிகள் ஆலயம் வந்து, அன்னைக்கு அபிஷேகம் செய்து, புத்தாடை அணிவித்து, சன்னிதியை 11 முறை வலம் வருவார்கள். பிறகு அந்த தேங்காயை அம்மன் சன்னிதிலேயே கட்டிச் செல்வது வழக்கமாக உள்ளது.

Read More
லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவில்

லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவில்

கைகளில் வீணையோடு நின்ற கோலத்தில் காட்சி தரும் வீணா தட்சிணாமூர்த்தி

திருச்சியில் இருந்து அரியலூர் செல்லும் வழியில், 23 கி.மீ. தொலைவில் உள்ள தலம் லால்குடி. இறைவனின் திருநாமம் சப்தரிஷீஸ்வரர். இறைவியின் திருநாமம் பெருதிருப்பிராட்டியார். இவ்வூர் பக்கம் படையெடுத்து வந்த முகமதிய மன்னன் மாலிக் கபூர் இத்திருக்கோவிலின் சிவப்பு கோபுரத்தை கண்டு உருதுமொழியில் லால்குடி (லால் – சிவப்பு, குடி – கோபுரம்) என்று அழைக்க, அதுவே இவ்வூருக்கு பெயராகி அழைக்கபடுகிறது.

இத்தலத்தில் வீணையைக் கையிலேந்தி, சற்றே வித்தியாசமான கோலத்தில் அருள்பாலிக்கின்றார் தட்சிணாமூர்த்தி. இவரை 'வீணா தட்சிணாமூர்த்தி' என்றே தலபுராணம் குறிப்பிடுகின்றது. இசைக்கு தலைவன் சிவபெருமான். இதை உணர்த்தும் வகையில் அழகிய சடை முடியோடும், கைகளில் வீணையோடும், நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் இத்தலத்து தட்சிணாமூர்த்தி.

பிரார்த்தனை

இவரை வணங்கினால் உயர்பதவி, கல்வியில் முன்னேற்றம், நினைத்த படிப்பு படிக்கும் அமைப்பைக் கொடுப்பார். வியாழக் கிழமைகளில் இவருக்கு சந்தனக் காப்பிட நினைத்தக் காரியம் கைகூடும். வெண்தாமரை அர்ச்சனையும், தயிரன்ன நைவேத்தியமும் வியாழக்கிழமைகளில் கொடுக்க மனம் ஒருமுகப்படும். மேலும் இவர்க்கு தேனாபிசேகம் செய்தால் தேன் போன்ற இனிமையான குரல்வளம் கிடைக்கும்.

Read More
பழைய சீவரம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

பழைய சீவரம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில்

நாள்பட்ட நோயால் சிரமப்படுபவர்கள் வழிபட வேண்டிய தலம்

செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் 16 கி.மீ.தூரத்திலும், காஞ்சிபுரத்திலிருந்து 21 கி.மீ. தூரத்திலும் பழைய சீவரம் தலத்தில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் அமைந்துள்ளது.

மூலவர் லட்சுமிநரசிமமர் மேற்குநோக்கி வீற்றிருக்கிறார். கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தியும்,வலக்கரத்தால் அபயம் அளித்தும், இடது கையால் லட்சுமியை அணைத்தபடியும் உள்ளார். தாயார் அகோபிலவல்லி.

பக்தரின் வயிற்று வலியை போக்கிய லட்சுமிநரசிமமர்

300 ஆண்டுகளுக்கு முன், வடஇந்தியாவிலிருந்து பக்தர்கள் இங்கு வந்தனர். அதில் ஒருவருக்கு தீராத வயிற்றுவலி இருந்தது. பழைய சீவரம் தலத்திற்கு தாிசனம் செய்ய வந்த இந்த அன்பா் புண்ணியநதியான 'ஷீர நதியில்' (பாலாறு) நீராடி எம்பெருமானை வழிபட்டு அன்று இரவு இத்தலத்திலேயே ஓய்வெடுத்தாா் . அவரது கனவில் பிரத்யக்ஷமான எம்பெருமான் இத்தலத்தில் ஒரு மண்டலம் தங்கி வழிபாடு செய்ய உடல் நோய் முற்றிலும் குணமாகும் என அருள்பாலித்தாா். நெஞ்சம் நெகிழ்ந்த அன்பா் எம்பெருமானின் திருவுள்ளப்படி இத்தலத்தில் தங்கி வழிபாடுகள் செய்ய அவரது உடல் நோய் முற்றிலும் நீங்கியது. எம்பெருமானின் அருட்கடாட் சத்தை எண்ணி வியந்த இந்த அன்பா் திருக்கோயிலுக்குப் பல திருப்பணிகளை செய்து மகிழ்ந்தாா். அவருடைய பரம்பரையில் வந்தவர்களே அறங்காவலர்களாக இன்றும் இருந்து வருகின்றனர்.

நாள் பட்ட நோய்களை விரட்டும் லட்சுமி நரசிம்ம மந்திரம்

நாள்பட்ட வியாதிகளால் அவதியுறும் அன்பா்கள் இத்தலத்தில் வழிபட, நோயின் தாக்கம் உடனடியாகக் குறைந்து உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுகிறது. நாள்பட்ட நோய்களால் அவதிப்படுபவர்கள் ஆரோக்கியம் பெற லட்சுமி நரசிம்மரை வீட்டிலிருந்த படியே வேண்டிக் கொள்ளலாம். அறுவை சிகிச்சை செய்ய இருப்பவர்கள், மருத்துவமனை செல்லும் முன் இங்கு வந்து தரிசிக்கின்றனர். இவர்கள் லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே என்ற மந்திரத்தை ஜபித்தபடியே மருந்து உண்டால், நோய்கள் பறந்தோடும் என்பது நம்பிக்கை. பாவம் காரணமாகவே நோய்கள் வருகின்றன. இந்த மந்திரத்தை ஜெபித்து, நல்லதை மட்டுமே செய்தால் நோய்கள் தங்கள் பரம்பரைக்கும் வராமல் தடுக்கலாம். துளசி மாலை சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

Read More