சிதம்பரம் நடராஜர் கோவில்

நடனத்திற்கு அதிபதியான நடராஜர்

பரதநாட்டியத்தின் 108 கரணச் சிற்பங்கள்

நடராஜர் என்றால் 'நடனக்கலைகளின் அரசன்' அல்லது 'ஆடலரசன்' என்று பொருள். இது 'நடா' (நடனம்) மற்றும் 'ராஜா' (அரசன்) ஆகிய இரு சமஸ்கிருத வார்த்தைகளின் சேர்க்கையால் உருவானது. இது சிவபெருமானின் நடன வடிவம் (ஆனந்த தாண்டவம்) ஆகும். சிவபெருமானது இந்த நடனம் ஆனந்தத்தின் அடையாளமாகவும், அகங்காரத்தை அழித்து முக்தி தரும் வடிவமாகவும் வழிபடப்படுகிறது.

நடனத்திற்கு அதிபதியான நடராஜர் எழுந்தருளி இருக்கும் தேவாரத் தலமான சிதம்பரம் கோவிலில், பரதநாட்டியத்தின் 108 கரணங்களும் சிற்ப வடிவில் செதுக்கப்பட்டுள்ளன. சிதம்பரம் கோயிலில் கீழைக்கோபுரத்தின் கிழக்குப்பகுதியில் தெற்குச் சுவரிலும் வடக்குச் சுவரிலும் நான்கு வரிசையாக வரிசைக்கு 8 சிற்பங்கள் என்ற வகையில் 32 + 32 = 64 சிற்பங்கள் உள்ளன. மேற்குச் சுவரில் தெற்குப் பகுதியில் 24 சிற்பங்களும், வடக்குப் பகுதியில் 20 சிற்பங்களும் உள்ளன. இந்த நாட்டிய சிற்பங்கள் அந்த கால சிற்பிகளின் நாட்டிய அறிவையும், சிற்பக்கலை திறமையையும் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

பரதநாட்டியத்தில் கை, கால், உடல் அசைவுகளின் ஒருங்கிணைந்த இசைவு 'கரணம்' எனப்படும். 'கரன்' என்றால் கை, 'அண்' என்றால் அசைவு எனப் பொருள்படும், உடல் உறுப்புகளால் செய்யப்படும் செய்கையே கரணம். இது கை முத்திரைகள் (ஹஸ்தங்கள்), கால் அசைவுகள் (சாரிகள்), மற்றும் உடல் நிலை (ஸ்தானகம்) ஆகிய மூன்றின் ஒருங்கிணைந்த, முழுமையான இயக்கமாகும். நாட்டிய சாஸ்திரத்தின்படி, சிவபெருமானால் அருளப்பட்ட மொத்தம் 108 கரணங்கள் தாண்டவங்களில் பயன்படுத்தப்படுகின்றன. கரணங்கள் நாட்டியத்திற்கு அழகையும், கம்பீரத்தையும் அளிக்கும் முக்கிய அங்கங்களாகும்.

பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரத்தில் 108 வகை கரணங்கள் விளக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் சிதம்பரம் நடராஜர் கோயில், தஞ்சைப் பெரிய கோயில் போன்ற பழமையான கோயில்களில் 108 கரணச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

வாசகர்களின் கவனத்திற்கு

இப்பதிவில் வரைபடத்திற்கு (Map) கீழ் இடம் பெற்றுள்ள 'நுணுக்கமான சிற்பம்' என்று குறி சொல்லை கிளிக் செய்தால், முந்தைய பதிவுகளில் வெளியான நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட கோவில்களை பற்றிய தகவல்களைப் படிக்கலாம்.

 
Previous
Previous

திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில்

Next
Next

செங்கல்பட்டு கோதண்டராமசாமி (வீர ஆஞ்சநேயர்) கோவில்