
நாதன் கோவில் ஜெகநாதப் பெருமாள் கோவில் (நந்திபுர விண்ணகரம்)
திருமால் திருமார்பில் இடம் பிடிக்க திருமகள் தவம் செய்த தலம்
கும்பகோணத்திற்கு தெற்கே 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திவ்ய தேசம் நாதன்கோவில். பெருமாள் திருநாமம் ஜெகந்நாதன். தாயாரின் திருநாமம் செண்பகவல்லி. சைவ வைணவ ஒற்றுமையை எடுத்துக்காட்டும் கையில் மூலஸ்தானத்தில் நந்தியும், பிரமனும் பெருமாளை வணங்கிய நிலையில் உள்ளனர். ஆரம்பகாலத்தில் கிழக்கு பார்த்து அருள்பாலித்த பெருமாள் வட்சுமி மார்பில் ஏற்பதற்காகவும், புறாவுக்கு அடைக்கலம் தந்த சிபி சக்கரவர்த்தியின் தியாக உணர்வை காண்பதற்காகவும் மேற்கு பார்த்த அருள்பாலிக்கிறார் என்று தலபுராணம் கூறுகிறது.
திருப்பாற்கடலில் திருமகள் எப்போதும் திருமாலின் பாதத்தருகே இருந்து சேவை சாதிப்பது வழக்கம். அவளுக்கு ஒருநாள் திருமாலில் திருமார்பில் இடம் பிடிக்க வேண்டும் என்று ஓர் எண்ணம் உதித்தது. அந்த விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டி செண்பகாரண்யம் (செண்பக மரங்கள் நிறைந்த வனம்) என்ற இத்தலத்துக்கு வந்து கிழக்கு நோக்கி தவம் புரிந்தாள். திருமகளின் பிரிவை திருமாலால் தாங்க முடியவில்லை. ஓர் ஐப்பசி மாதம் வளர்பிறையில் வெள்ளிக்கிழமை அன்று திருமகளை தன் மார்பில் ஏற்றுக் கொண்டார் திருமால். அதன் காரணமாக வெள்ளிக்கிழமைகளில் இத்தலத்தில் தாயாருக்கு செய்யப்படும் அபிஷேகம், ஆராதனைகள் பக்தர்களின் வேண்டுதலை விரைவில் நிறைவேற்றும் என்பது நம்பிக்கை.
செண்பக வனத்தில் தவம் செய்ததால் தாயாருக்கு செண்பகவல்லி என்ற பெயர் வழங்கலாயிற்று. தாயார் கிழக்கு நோக்கி தவம் செய்தாள். திருமால் அவளை மார்பில் ஏற்றதால் மேற்கு நோக்கி சேவை சாதிக்கிறார். இத்தல பெருமாள் ஜெகநாதன் என்பதால் இவ்வூர் நாதன்கோவில் என்றே அழைக்கப்படுகிறது.
திருமண தடை நீக்கும் செண்பகவல்லி தாயார்
திருமணப் பிரார்த்தனைக்கு இது உகந்த தலமாகும். தாயாருக்கு ஒன்பது வெள்ளிக்கிழமைகளில் தொடர்ந்து அர்ச்சனை செய்து, பாசிப்பயறு சுண்டல் வைத்து பிரார்த்தித்து வர திருமணம் கைகூடும். பிரிந்திருக்கும் தம்பதிகள் இணையவும், தம்பதிகள் பிரியாமல் இருக்கவும், குடும்ப நலத்திற்கு உதவும் சுக்ல பட்ச அஷ்டமியில் இக்கோவிலில் ஸ்ரீ சூக்த ஹோமம் நடக்கிறது. ஐப்பசி மாத சுக்ல பட்சத்தில் தாயாருக்குத் திருமஞ்சனம் செய்தால், குழந்தைப்பேறு உண்டாகும்.

உத்தமபாளையம் காளத்தீஸ்வரர் கோவில்
ராசி, நட்சத்திரக் கட்டங்களுக்கு மத்தியில் காட்சியளிக்கும் வாஸ்து பகவான்
தேனியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள உத்தமபாளையம் என்ற ஊரில், சுருளியாற்றங்கரையில் அமைந்துள்ளது காளத்தீஸ்வரர் கோவில். ஆந்திர மாநிலம் காளகஸ்தியில் உள்ளது போல் தென்புறம் கண்ணப்பர் சன்னதியும், ராகு, கேது கிரகங்கங்களுக்கு தனி சன்னதியும் உள்ளது. காளஹஸ்திக்குச் செல்ல முடியாதவர்கள், இக்கோவிலில் இருக்கும் காளத்தீஸ்வரரை வழிபட்டு, காளஹஸ்தி சென்று வந்த பலனைப் பெற முடியும். இதனால் தான் இக்கோவிலை. பக்தர்கள் தென்னகத்து காளகஸ்தி என்று அழைக்கின்றனர்.
சூரிய மண்டல ஆகாய ராசிச் சக்கரம் அமைந்திருக்கும் தனிச்சிறப்பு
இக்கோவிலின் சிவன் சன்னதி முன்பாக இருக்கும் மண்டபத்தின் மேற்கூரையில் ராசி, நட்சத்திரக் கட்டங்களுக்கு மத்தியில் வாஸ்து பகவான் சடாமுடியுடன் பத்மாசனத்தில் அமர்ந்திருப்பது போன்று இருக்கிறது. வாஸ்து பகவானின் தலைக்கு மேலே பிரம்மா, அம்பிகை இருவரும் வழிபாடு செய்வது போன்ற சிற்பம் இருக்கிறது. இம்மூவரையும் ஒரு நாகம் சுற்றியிருப்பது போன்று உள்ளது. அருகில் சூரியன், சந்திரன், வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகியோர் இருக்கின்றனர். வாஸ்து பகவானைச் சுற்றிலும் 27 நட்சத்திரங்களுக்கான மிருகங்கள், 12 ராசிகளுக்கான சின்னங்கள் போன்றவை இடம் பெற்றிருக்கின்றன. இதனையடுத்து, நடுவில் சூரியனும், சுற்றிலும் 12 ராசிகளும் கொண்ட 'சூரிய மண்டல ஆகாய ராசிச் சக்கரம்' இருக்கிறது. தமிழ்நாட்டிலேயே ஆவுடையார் கோவில், உத்தமபாளையம் காளத்தீஸ்வரர் கோவில் ஆகிய இரண்டு தலங்களில் மட்டுமே, இந்த சூரிய மண்டல ஆகாய ராசிச் சக்கரம் இருக்கின்றது. இது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
நிலம், வீடு தொடர்பான பிரச்சனைகளை உடையவர்கள், இந்தச் சக்கரங்களின் கீழ் நின்று இறைவனை வழிபட்டால் அவர்களின் பிரச்சனை விரைவில் தீர்ந்து விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
நாதன் கோவில் ஜெகநாதப் பெருமாள் கோவில் (நந்திபுர விண்ணகரம்)
மூலஸ்தானத்தில், பெருமாளை வணங்கிய நிலையில் காட்சி தரும் நந்தியும், பிரம்மாவும்
தட்சிண ஜகந்நாதம் என்று போற்றப்படும் திவ்யதேசம்
கும்பகோணத்திற்கு தெற்கே 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திவ்ய தேசம் நாதன் கோவில். பெருமாள் திருநாமம் ஜெகந்நாதன். தாயாரின் திருநாமம் செண்பகவல்லி. இத் திவ்ய தேசம் 'தட்சிண ஜகந்நாதம்' என்று அழைக்கப்படுகிறது.
இத்தல பெருமாள் கையில் வாள், வில், சக்கரம், தண்டாயுதம், சங்கு ஆகிய ஆயுதங்களுடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சேர்ந்து அருள்பாலிக்கிறார். மூலஸ்தானத்தில் சிவபெருமானின் வாகனமாகிய நந்தியும், பிரம்மாவும் பெருமாளை வணங்கிய நிலையில் காட்சி தருவது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
நந்தி சாப விமோசனம் பெற்ற தலம்
ஒரு சமயம் நந்தி தேவர் திருவைகுண்டம் வந்த பொழுது, அங்கு காவலாக இருந்த துவாரபாலகர்களின் அனுமதி பெறாமல் உள்ளே நுழைய முயன்றார். அவர்கள் தடுத்தபோது அதை பொருட்படுத்தாமல் உள்ளே சென்றார். இதனால் கோபமடைந்த துவாரபாலகர்கள், நந்தி தேவரின் உடல் முழுதும் வெப்பம் ஏறி சூட்டினால் துன்பமுறுவாய் என்று சாபமிட்டனர். சாப விமோசனத்திற்காக சிவபெருமானிடம் தீர்வு கேட்டார். அதற்கு சிவபெருமான், 'சகல விதமான பாவங்களையும் போக்கும் செண்பகாரண்யம் எனும் தலம் கும்பகோணத்திற்குத் தெற்கே அமைந்துள்ளது. அங்கு போய் மகாவிஷ்ணுவை நோக்கி தவம் செய்து விமோசனம் பெற்றுக்கொள்' என்றார். அதன்படி நந்தி தேவர் இத்தலத்திற்கு வந்து தவம் செய்து, சாப நிவர்த்தி பெற்றார். அத்துடன், தான் இங்கு வந்து தவம் செய்து பேறு பெற்றமையால், தன் பெயராலேயே இத்தலம் விளங்க வேண்டும் என்று அருள் பெற்றார். அதன் பிறகு இத்தலம், நந்திபுரம் என்றும், நந்திபுர விண்ணகரம் என்றும் பெயர் பெற்றது. நந்தி சாப விமோசனம் பெற்ற தலம் என்பதால் சன்னதி, ஊர், தீர்த்தம் என அனைத்தும் நந்தியை முதன்மைப்படுத்தியே அமைந்திருக்கின்றது. இந்த தலத்தின் குளத்திற்கு நந்தி தீர்த்தம் என்றும், விமானத்திற்கு நந்தி விமானம் என்றும் அழைக்கப்படுகின்றன.
சிபிச் சக்கரவர்த்திக்குப் பெருமாள் காட்சி தந்து அருளிய தலமாகும். தன்னிடம் வந்து அடைக்கலமான புறாவின் எடைக்குச் சமமாக, தானே தராசின் மறு தட்டில் அமர்ந்து தன்னை காணிக்கை ஆக்கிய சிபிச் சக்கரவர்த்தியைக் காண பெருமாள் அவருக்கு காட்சி அளித்தார். இதற்காக கிழக்கு நோக்கி இருந்த பெருமாள் மேற்கு நோக்கி திரும்பினார். காளமேகப் புலவர் இவ்வூரில் அவதரித்தவர்.
சந்திர தோஷ பரிகார தலம்
நந்தி சாபம் விலகி தலம் என்பதுடன், சந்திர தோஷ பரிகார தலமாகவும் இக்கோவில் உள்ளது. சந்திர தோஷம் நீங்க, வேண்டியது நிறைவேற, திருமணத் தடை நீங்க, வழக்குகளில் வெற்றி பெற, குழந்தை வரம் கிடைக்க, பிரிந்த தம்பதி ஒன்று சேர, நரம்பு நோய் நீங்க பக்தர்கள் இப்ப பெருமாளிடம் வேண்டிக் கொள்கின்றனர்.

தபசுமலை பாலதண்டாயுதபாணி கோவில்
மூலிகை கலந்த பிரசாதம் வழங்கப்படும் முருகன் தலம்
புதுக்கோட்டையில் இருந்து 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தபசுமலை பாலதண்டாயுதபாணி கோவில். சிறிய குன்றின் மேல் அமைந்துள்ள இந்த கோவிலை அடைய, 75 படிக்கட்டுகள் உள்ளன. சப்த ரிஷிகள் தவம் செய்ததால், இந்த மலைக்குத் தபசு மலை என்ற பெயர் வந்துள்ளது. இக்கோவில், 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. கருவறையில் முருகப்பெருமான், கையில் தண்டத்துடன் நின்ற கோலத்தில் பாலதண்டாயுதபாணியாக காட்சி தருகிறார்.
இந்த கோவிலில் வழிபாடு செய்ய செல்லும் பக்தர்களுக்கு, மூலிகை கலந்த பிரசாதம் வழங்கப்படுவது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். இந்த பிரசாதத்தை சாப்பிட்டால் சர்க்கரை நோய், வயிறு நோய் உள்ளிட்டவைகள் அனைத்தும் குணமாகும் என்பது ஐதீகம்.
கிரக தோஷங்களால் பாதிக்கப்பட்டுள்ள பக்தர்கள் இங்கு வீற்றிருக்கக்கூடிய முருக பெருமானை வழிபட்டால் அனைத்து வித தோஷங்களும் நிவர்த்தி ஆகும் என நம்பப்படுகிறது. கந்த சஷ்டி திருநாளில் பெண்கள் விரதம் இருந்து ஒருமுறை தபசுமலையில் வீற்றிருக்கக்கூடிய முருகப்பெருமானை தரிசனம் செய்து, விளக்கேற்றி வழிபட்டால் விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும். குழந்தை இல்லாதவர்கள் முருகப்பெருமானின் காலடியில் வைக்கப்பட்ட எலுமிச்சை பழத்தை சாறு எடுத்து குடித்தால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
மனவேற்றுமையால் பிரிந்து வாழும் கணவன் அல்லது மனைவி முருகனிடம் மனமுருகி பிரார்த்தனை செய்தால் விரைவில் பிரிந்த தம்பதி ஒன்று சேர்வர் என்பது நம்பிக்கை. கிரக தோஷம், நாக தோஷம் உள்ளவர்களும் முருகப் பெருமானை வேண்டிக் கொள்கிறார்கள்.

பேரூர் பட்டீஸ்வரர் கோவில்
சிவபெருமானும் பார்வதி தேவியும் விவசாயிகளாக வந்திருந்து நாற்று நட்ட தலம்
கோயம்புத்தூரில் இருந்து சிறுவானி செல்லும் வழியில் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பேரூர் பட்டீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் பட்டீஸ்வரர். இறைவியின் திருநாமம் மனோன்மணி, பச்சைநாயகி.
பேரூர் பட்டீசுவரர் கோயிலில் ஆண்டுக்கொருமுறை நாற்று நடும் விழா, ஆனி மாதத்தில் கிருத்திகை தொடங்கி பூராட நட்சத்திரத்தில் நாற்று நடவும், உத்திரத்தில் திருமஞ்சனமும் ஆக கோலாகலமாய் நடக்கிறது. காஞ்சி நதிக்கரையில் நாற்று நடும் திருவிழா இன்றும் சிறப்பாக நடைபெறுகிறது. இவ்விழா ஏற்பட்டதற்கு பின்னணியில் ஒரு வரலாற்று நிகழ்ச்சி உள்ளது.
சிவபெருமான், சகலமும் தானே என்ற தத்துவத்தை சுந்திரமூர்த்தி நாயனாருக்கு உணர்த்த எண்ணினார். சுந்தரர் பேரூர் வந்திருந்தபோது, சிவபெருமான் விவசாயக் குடிமகனாக அவதாரமெடுத்தார். சிவபெருமான் பள்ளன் என்ற விவசாயியாகவும், உமாதேவி பள்ளி என்ற விவசாயப் பெண்ணாகவும் அவதரித்து, காஞ்சி நதிக்கரைக்கு நாற்று நடச் சென்றனர். தேவர்களுனம், சிவ கணங்களும் உதவியாளர்களாய் வந்தார்கள்.
சிவபெருமான் அடித்த அடியால், சப்பையான தாடையுடன் காட்சி தரும் நந்தி தேவர்
தனது பக்தரான சுந்தரரை பற்றி நன்கு அறிந்த சிவபெருமான் 'சுந்தரன் வந்து கேட்டால் 'நான் இருக்கும் இடத்தை சொல்லாதே' என்று நந்திதேவரிடம் எச்சரித்துவிட்டு சென்றார். இறைவனை தரிசிக்க பட்டீஸ்வரர் கோவிலுக்கு வந்த சுந்தரமூர்த்தி நாயனார், கோவிலில் இறைவனை காணாமல் நந்தி தேவரை விசாரித்தார். சிவபெருமானின் எச்சரிக்கையையும் மீறி நந்தி தேவர் சுந்தரரிடம் இறைவன் இருக்குமிடத்தை கூறிவிட்டார். சுந்தரரும் காஞ்சி நதிக்கரையில் நாற்று நட்டுக் கொண்டிருந்த சிவபெருமானை தரிசித்து மகிழந்தார். நந்தி தம் சொல்லை மீறியதால் கோபமடைந்த சிவபெருமான், தன் கையிலிருந்த மண் வெட்டியால் நந்தியின் தாடையில் அடித்து விட்டார். இதனால் இந்தக் கோவிலில், நந்தி தேவரின் தாடை சற்று சப்பையாகக் காட்சியளிக்கிறது. பிறகு நந்தி தேவர், மன்னிப்பு வேண்டி தவமிருக்க, தனது தாண்டவ தரிசனத்தை அவருக்கு சிவபெருமான் அருளினார். பிறப்பில் பேதமில்லை என்று இறைவனே உணர்த்திய தலம் இதுவாகும்.

தென்காசி காசி விசுவநாதர் கோவில்
கோபுர வாசலில் இரண்டு எதிர் திசைகளில் காற்று வீசும் அதிசயம்
தென்காசி நகரில் அமைந்துள்ளது காசி விசுவநாதர் கோவில். இறைவியின் திருநாமம் உலகம்மை.
இந்தக் கோவில் ராஜகோபுரம் நம் முன்னோர்களின் கட்டிடக்கலை திறனுக்கும், பொறியியல் தொழில்நுட்பத் திறனுக்கும் ஒரு சான்றாக விளங்குகின்றது. ஒன்பது நிலையும் 175 அடி உயரமும் கொண்ட இக்கோவில் கோபுரம், கி.பி.1456-ல் பராக்கிரம பாண்டிய மன்னரால் கட்ட ஆரம்பிக்கபட்டு, கி.பி.1462-ல் குலசேகர பாண்டியரால் கட்டி முடிக்கப்பட்டது.
இந்த கோபுர வாசல் வழியில் எப்பொழுதும் காற்று வீசி கொண்டே இருக்கும். பொதிகை மலையில் இருந்து ஆரியங்காவு கணவாய் வழியாக வரும் காற்று கோவிலுக்குள் நுழையும் பக்தர்களை வரவேற்பது போல், மேற்கிலிருந்து கிழக்காக, அதாவது கோபுர வாசலுக்குள் நுழையும் பக்தர்களுக்கு எதிராக, வீசுகின்றது. கோபுர வாசலை கடந்து உள்ளே போகும் போது, கோபுர வாசலில் இருந்து இறங்கும் இடத்தில், காற்று சுழன்று சுற்றி வீசுவது போல ஒரு அனுபவம் ஏற்படும். தொடர்ந்து உள்ளே செல்லும் போது, காற்று, கிழக்கில் இருந்து மேற்காக வீசும் . அதாவது பக்தர்களின் பின்புறத்தில் இருந்து கோவிலுக்குள் தள்ளுவது போல, காற்று வீசுகிறது.
காற்றை எதிர் திசையில் திருப்புவதற்கு எந்த தடுப்பும் இல்லாத நிலையில், ஒரே நேர்கோட்டில் காற்று, இரண்டு எதிர் திசையில் வீசும்படி கோபுரத்தை அமைத்திருப்பது, நம் முன்னோர்களின் மதிநுட்பத் திறனை எடுத்துக் காட்டுகின்றது. இப்படி, கோவில் கோபுரத்தினுள் நுழையும் போது கோவிலுக்குள்ளிருந்தும், பாதி பகுதி நுழைந்தபின் நம் முதுகுக்குப் பின்னிருந்தும் (கோவிலுக்கு வெளியிலிருந்தும்) தென்றல் காற்று வீசும் சிறப்பானது வேறெந்த கோவிலிலும் கிடையாது.

அழிவிடைதாங்கி சொர்ணகால பைரவர் கோவில்
சொர்ணகால பைரவர் மூலவராக விளங்கும் தலம்
காஞ்சிபுரத்திலிருந்து, வெம்பாக்கம் வழியாக சுமார் 21 கி.மீ. தொலைவில் உள்ளது அழிவிடைதாங்கி. இங்கு 600 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சொர்ண கால பைரவர் கோவில் இருக்கின்றது. ஆதிசங்கரர் இத்தல பைரவரை பிரதிஷ்டை செய்தார் என்று ஒரு கருத்து நிலவுகிறது. கருவறையில் ஐந்தடி உயர திருமேனியுடன் நின்ற கோலத்தில், தனது நான்கு திருக்கரங்களில் உடுக்கை, பாசுரம், சூலம், கபாலம் ஆகியவவற்றை ஏந்தியபடி தலையில் அக்னி ஜுவாலை கிரீடத்துடனும், தெற்கு முகம் நோக்கி, நாய் வாகனத்துடன் காட்சி அளிக்கிறார். பொதுவாக பைரவரின் வாகனம் மேற்க்கு நோக்கி இருக்கும். ஆனால் இத்தலத்தில் அவருடைய வாகனம் கிழக்கு நோக்கி இருக்கின்றது. மேலும் இக்கோவிலில் அட்ட பைரவர்கள் தங்கள் மனைவியருடனும், வாகனத்துடனும் பிரகாரத்தில் சுதை வடிவில் எழுந்தருளி இருப்பது தனிச்சிறப்பாகும்.
கி.பி.14ஆம் நூற்றாண்டில் வீர சம்புவராயன் என்ற மன்னர் இங்கு கோட்டையை கட்டி ஆட்சி செய்து வந்தான். அப்போது வடக்கே இருந்து யாதவராயன் என்ற மன்னன் படையெடுத்து வந்தான். இருவருக்கும் இடையே நடந்த போரின் முதல் நாள் தனது படைகள் பெருமளவில் நாசமடைந்ததைக் கண்டு சம்புவராயன் மனம் வருந்தினார். அன்று இரவு, கால பைரவர் அவரது கனவில் தோன்றி நீ வருத்தப்படவேண்டாம் நாளைய போரில் நீ வெற்றி பெற நான் துனையிருப்பேன் என்றார். அடுத்த நாள் போரில் சம்புவராயன் பெரும் வெற்றி பெற்றார். அழிந்துபோன தனது படையையும், பட்டணத்தையும் இறைவன் காப்பாற்றியதால் இவ்வூரை அழிபடைதாங்கி எனப் பெயரிட்டார். இந்த வெற்றியை அருளிய சொர்ணகாலபைரவருக்கு பெரியதொரு கோவிலையும் எழுப்பினார். இதுபோன்று, சொர்ணகால பைரவருக்கு என்ற தனி கோவில் வேறு எங்கும் கிடையாது.
பிரார்த்தனை
சொர்ணகால பைரவர், வாஸ்து பகவானுக்கு குரு என்பதால் நிலம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் விலகும். சனி பகவானுக்கு குரு என்பதால் சனி பகவான் தொல்லையிலிருந்து விடுபடலாம். திருமணத்தடை, பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வர். பில்லி சூனியம் விலகும். வியாபார அபிவிருத்தி, வீட்டில் சண்டை சச்சரவுகள் விலகும். பூர்வீக தோஷம் அனைத்தும விலகும்.

நத்தம் மாரியம்மன் கோவில்
மயில் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் மாரியம்மனின் அபூர்வ தோற்றம்
திண்டுக்கல்லிருந்து 36 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நத்தம். இங்கு, 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான, சுயம்புவாக எழுந்தருளி உள்ள மாரியம்மன் கோவில் இருக்கின்றது.
கருவறையில் மாரியம்மன், எட்டு திருக்கரங்களில் ஆயுதங்கள் ஏந்தி, வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டுக் கொண்டு மயில் மேல் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகின்றாள். இப்படி மயில் மேல் அமர்ந்து மாரியம்மன் காட்சி தருவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். வேறு எந்த தலத்திலும் நாம் அம்மனை இப்படி மயில் மீது அமர்ந்த கோலத்தில் தரிசிக்க முடியாது.
பிரார்த்தனை
குழந்தைவரம், அம்மைநோய், உடல் ரீதியான பிரச்சினைகள் தீர பக்தர்கள் இங்கு அம்மனை வேண்டுகின்றனர். குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து வேண்டி,மூலிகை பச்சிலை உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். டாக்டர்களால் கைவிடப்பட்ட பல நோய்கள் இங்கு தீர்க்கப்படுகின்றன. வயிற்று வலி உட்பட நிறைய நோய்கள் குணமாக்கப்படுகின்றன.
நேர்த்திக் கடன்
தீச்சட்டி எடுத்தல், தீ மிதித்தல்,கரும்பு தொட்டில் கட்டுதல், கழுகு மரம் ஏறுதல் முதலானவற்றை பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களாக செய்கின்றனர்.
சற்று கடினமான உயரமான யூகலிப்டஸ் மரத்தை வழுவழுவென செதுக்கி, அந்த மரத்தின் மேல் விளக்கெண்ணெய், மிளகு, கடுகு ஆகிய எளிதில் வழுக்கும் பொருட்களை பூசுவார்கள். அந்த மரத்தில் பக்தர்கள் விடாப்பிடியுடன் மேலே ஏறுவார்கள். இந்த நேர்த்திக் கடனுக்கு கழுகு மரம் ஏறுதல் என்று பெயர்.
இக்கோவிலில் மாசி மாதம் நடைபெறும் பூக்குழித் திருவிழா, தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. பூக்குழிக்கு ஒரு ஆள் உயரத்திற்கு பள்ளம் வெட்டப்படும். அதற்கு மேல் ஒரு ஆள் அடி உயரத்திற்கு கட்டைகள் அடுக்கப்பட்டு பூக்குழி அமைக்கப்படும். சுமார் 45,000 பேர் தங்கள் நேர்த்திக் கடனுக்காக பூக்குழியில் இறங்குவார்கள்.
கொங்குநாடு பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழாவுக்கு அடுத்து, இக்கோவிலில் தான் அதிக அளவில் மக்கள் பூக்குழி இறங்குவார்கள்.

திருவையாறு ஐயாறப்பர் கோவில்
குகனுக்காக, வில்லும் அம்பும் ஏந்தி ராமராக காட்சியளித்த முருகப்பெருமான்
தஞ்சாவூரிலிருந்து 16 கி.மீ. தொலைவில் காவிரிக் கரையில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருவையாறு. இறைவன் திருநாமம் ஐயாறப்பர். இறைவியின் திருநாமம் தர்ம சம்வர்த்தினி.
இக்கோவிலில் அமைந்துள்ள வேலவன் கோட்டம் என்ற சன்னதியில் முருகப்பெருமான் வில்லும் அம்பும் ஏந்தி, தனுசு சுப்பிரமணியயராக வள்ளி தெய்வானையுடன் காட்சியளிக்கிறார். இப்படி இவர் ராமர் போல், வில்லும் அம்பும் ஏந்தி காட்சி அளிப்பதற்கு, இராமாயண காலத்து நிகழ்ச்சி ஒன்றுதான் காரணம். ராவணனிடம் இருந்து சீதையை மீட்டு அயோத்தி திரும்பிய ராமர், அங்கு பட்டாபிஷேகம் செய்து கொண்டு அயோத்தியை ஆளத் துவங்கினார். அப்போது தன்னுடைய சொந்த ஊரான சிருங்கிபேரபுரத்தில் தங்கி இருந்த குகனுக்கு, ராமருடைய பிரிவை தாங்கிக் கொள்ள முடியவில்லை. ராமரைக் காண வேண்டும் என்று முருகரிடம் குகன் பிரார்த்திக்க, முருகர் கோதண்ட ராமனாகவும், வள்ளி சீதையாகவும், தெய்வயானை லட்சுமணராகவும் காட்சி கொடுத்தனராம்.
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தமது திருப்புகழில் போற்றிப் பாடியுள்ளார்.

அவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோவில்
நவ நரசிம்மர் அருளும் தட்சிண அகோபிலம்
திருமகளும் கருடாழ்வாரும் சிம்ம முகத்துடன் காட்சி தரும் தலம்
ஐந்து பெருமாள் எழுந்தருளி இருக்கும் பஞ்ச திருப்பதி தலம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியிலிருந்து ஆரணி செல்லும் சாலையில் 15 கி.மீ, தூரத்தில் அமைந்திருக்கிறது அவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோவில். தட்சிண அகோபிலம் என்று சொல்லப்படும் இந்த நவநரசிம்ம தலம் சிறிய மலைமேல் உள்ளது. சிங்க முகத்துடன் நாராயணன் அருள்பாலிப்பதால் ஆவணி நாராயணபுரம் என்றும் பின்னர் மருவி அவணியாபுரம் என்று அழைக்கப்படுகிறது. பிரமாண்ட புராணத்தில் இத்தலத்தின் பெருமைகள் கூறப்பட்டுள்ளது.
அவணியாபுரம் பஞ்ச திருப்பதி என போற்றப்படுகிறது. பிருகு முனிவருக்கு அருள் செய்ய, பெருமாள் அவருக்கு திருப்பதி வெங்கடாஜலபதி, திருவரங்கம் அரங்கநாதர், காஞ்சிபுரம் வரதராஜபெருமாள், சோளிங்கர் யோக நரசிம்மர், ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் ஆகிய ஐந்து மூர்த்திகள் கோலத்தில் இங்கு எழுந்தருளி அருள் புரிந்தார்.
இக்கோவில் சன்னதிகள் மலையில் இருநிலைகளாக அமைந்துள்ளன. மலை உச்சியில் ஸ்ரீ ரங்கநாதரும், ஸ்ரீ வெங்கடாஜலபதியும், ஸ்ரீ வரதராஜபெருமாளும், ஸ்ரீ யோக நரசிம்மரும் எழுந்தருளியுள்ளனர்.
கீழே குகை போன்ற கர்ப்பகிரகத்தில் லட்சுமிநரசிம்மர் அமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். அவரது இடதுபுறம் எழுந்தருளி உள்ள தாயாருக்கும் சிம்மமுகம், சன்னதியின் எதிரில் எழுந்தருளியுள்ள கருடாழ்வாருக்கும் சிம்ம முகம் அமைந்திருக்கின்றது. இச்சிறப்பு வேறு எங்கும் காணக் கிடைக்காதது. நரசிம்ம அவதாரம் நடைபெற்று அசுர சம்ஹாரம் முடிந்தபிறகு, தட்சிணப் பகுதியில் இந்த மலைக் குகையில்தான் சுயம்பு மூர்த்தமாகத் தோன்றினார் பெருமாள். அவரே இப்போது மூலவராக உள்ளார். புராண காலத்தில் இந்தத் தலத்தில் ஸ்ரீநரசிம்மர் உக்கிரமாக இருந்தார். அவரின் சினத்தைக் குளிர்விக்க பிரம்மா இங்கே யாகம் செய்தார். அப்போது, யாகத் தீயால் பெருமாளின் திருமுகம் பின்னமானது. இதனால் பதறிப்போன திருமகள், நரசிம்மரின் திருமுகத்தை தான் ஏற்று பெருமாளின் மடியில் அமர்ந்து அருள் செய்யத் தொடங்கினாள். பெருமாளுக்காக, அவரின் முதல் அடியாரான கருடாழ்வாரும் சிம்ம முகம் தாங்கி சேவை புரிந்தார்.
லட்சுமி நரசிம்மர் கர்ப்பகிரகத்தில் மூன்று நரசிம்மரும், தாயார் சன்னதி அருகே வீர நரசிம்மர், ஹிரண்ய நரசிம்மர், உக்கிர நரசிம்மர், பிரகலாத நரசிம்மர், மங்கள நரசிம்மர் என்று பஞ்ச நரசிம்மரும், மலை உச்சியில் உள்ள சன்னதியில் யோக நரசிம்மர் என்று நவ நரசிம்மராக சேவை சாதிக்கிறார். நவ நரசிம்மர்கள் அருளாட்சி செய்வதால், 'தட்சிண அகோபிலம்' என்று போற்றப்படுகிறது.
பிரார்த்தனை
இந்தக் கோவிலின் விசேஷம் துலாபாரம். குழந்தை இல்லாத தம்பதியினர் இந்தத் தலத்துக்கு வந்து லட்சுமி நரசிம்மரை வேண்டிக்கொண்டால், விரைவில் சந்தான பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பெருமாளின் திருவருளால் பிள்ளை வரம் பெற்றவர்கள், தங்கள் குழந்தையைக் கொண்டு வந்து எடைக்கு எடை துலாபாரம் அளிக்கிறார்கள். அதேபோல், சுவாதி நட்சத்திர நாளில் இங்கு வந்து வழிபடுவதால். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்; திருமணத் தடைகள் நீங்கி மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும். மேலும் பித்ரு தோஷம் போன்ற தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.
திருமெய்ஞ்ஞானம் பிரம்மபுரீஸ்வரர் கோவில்
ஒட்டிய வயிறுடன் காட்சி தரும் விநாயகர்
மயிலாடுதுறை - தரங்கம்பாடி வழித்தடத்தில், திருக்கடையூர் அபிராமி அம்மன் கோவிலுக்கு கிழக்கே 2 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருக்கடவூர் மயானம். இத்தலத்திற்கு திருமெய்ஞானம் என்ற பெயரும் உண்டு. இறைவன் திருநாமம் பிரம்மபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் மலர்க்குழல் மின்னம்மை.
பிரணவ விநாயகர்
பொதுவாக விநாயகப் பெருமான் பெரிய வயிறுடன் தான் தோற்றமளிப்பார். ஔவையார் தனது விநாயகர் அகவலில் விநாயகப் பெருமானின் தோற்றத்தை விவரிக்கையில் 'பேழை வயிறு' என்று அவருடைய பெருத்த வயிற்றை குறிப்பிட்டு இருப்பார். ஆனால் இக்கோவிலில் விநாயகர், ஒட்டிய வயிறுடன் காட்சி தருகிறார். இவரை, 'பிரணவ விநாயகர்' என்று அழைக்கிறார்கள். ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் வடிவமான முருகனையும், பிரணவ விநாயகரையும் இங்கு தரிசிப்பது விசேஷம். படைப்புக்கடவுளான பிரம்மாவுக்கு சிவன் படைப்பின் ரகசியத்தை இத்தலத்தில் உபதேசித்த போது, கைகட்டி, மெய் பொத்தி விநாயகரும் உபதேசத்தைக் கேட்டாராம். இதனால், இவர் வயிறு சிறுத்து இருக்கின்றது. படிக்கிற குழந்தைகள் அடக்கத்துடன் இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை இதன் மூலம் விநாயகர் சுட்டிக்காட்டி இருக்கின்றார்.

நாம மலை சீனிவாசப் பெருமாள் கோவில்
பூஜையின்போது திருமுகம் வியர்க்கும் பெருமாள்
சிரிப்பு, கோபம் என மாறுபட்ட முகபாவங்களைக் காட்டும் பெருமாள்
திருப்பதி ஏழுமலையான் தினமும் உறங்கி ஓய்வெடுக்க வரும் தலம்
சேலம் மாவட்டம் நாம மலையில் அமைந்துள்ளது சீனிவாசப் பெருமாள் கோவில். மலைமேல் அமைந்துள்ள இக்கோவிலில் சீனிவாசப் பெருமாள், நின்ற கோலத்தில் தாயார் ஸ்ரீதேவி-பூதேவி ஆகியோருடன் அருள்பாலிக்கிறார். இக்கோவிலுக்கு கிருஷ்ணதேவராயர் நிறைய
திருப்பணிகள் செய்திருக்கிறார். மலை அடிவாரத்தில் கிணறு ஒன்று உள்ளது. பெருமாளைத் தரிசிக்கும்போது, இந்தக் கிணற்று நீரை தீர்த்தமாகத் தருகிறார்கள். மூலிகைத் தன்மை கொண்ட இந்த தீர்த்தத்தை, பக்தர்கள் நோய் தீர்க்கும் அமிர்தமாகக் கருதுகின்றனர்.
இக்கோவிலில் பூஜையின்போது மூலவர் சீனிவாசப் பெருமாளின் திருமுகத்தில் வியர்ப்பது ஒரு அதிசயமான காட்சியாகும். மேலும் பெருமாள் இங்கு தரிசிக்கும் பக்தர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப சிரிப்பு, கோபம் என மாறுபட்ட முகபாவங்களைக் காட்டுவதும் ஒரு ஆச்சரிய நிகழ்வாக இருக்கின்றது. மேலும் திருப்பதி மலைவாழும் ஏழுமலையான், தினமும் தமது சயன நேரத்தில் இங்கு வந்து உறங்கி ஓய்வெடுத்துச் செல்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பக்தரின் வேண்டுதலுக்கு ஏற்ப பால் திரிந்து தயிராகும் அதிசயம்
ஒருமுறை இந்தக் கோவிலின் அர்ச்சகர் ஒருவரது கனவில் தோன்றிய பெருமாள், 'ராமானுஜர் இல்லாததே இத்தலத்தின் ஒரே குறை' என்றாராம். பக்தர்கள், அந்தக் குறையைக் களையும் விதமாக, ஸ்ரீராமானுஜர் விக்கிரத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர்.
வடக்கு நோக்கி அருளும் இந்த ராமானுஜரின் திருமுன் பாலைச் சமர்ப்பித்து சில நிமிட வேண்டுதலுக்குப் பிறகு, பாத்திரத்தை திறந்தால் பால் திரிந்து தயிராகியிருக்குமாம். இப்படி பால் திரிந்து போனால், பக்தர்களுக்கு ராமானுஜரின் திருவருள் பரிபூரணமாகக் கிடைத்துவிட்டது என்பது நம்பிக்கை.
பிரார்த்தனை
இத்திருத்தலத்துக்கு வரும் பக்தர்கள் மூலவரை வணங்கிய பின், தங்கள் வேண்டுதல் நிறைவேறுமா என்பதை அறிய, திருவுளச் சீட்டு போட்டு இறைவனிடம் உத்தரவு கேட்கின்றனர்.
திருபுவனம் கம்பகரேசுவரர் கோவில்
பயத்தை நீக்கி, மனதில் துணிச்சலைத் தரும் கம்பகரேசுவரர்
கும்பகோணம் - மயிலாடுதுறை வழியில், கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது திருபுவனம் கம்பகரேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் தர்மசம்வர்த்தினி. கம்பகம் என்றால் நடுக்கம் என்று அர்த்தம். நடுக்கத்தை ஏற்படுத்தும் பயத்தை போக்கும் ஈசன் என்பதால் இந்த தலத்து சிவபெருமானுக்கு கம்பகரேசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது. இது தேவார வைப்புத் தலமாகும். பட்டுக்கும் பெயர் பெற்ற ஊர் இது.
சரபேசுவரருக்கான பிரதான தலம்
அம்மன் சன்னிதிக்கு நேர் எதிரே, இத்தலத்தின் முக்கிய சன்னிதியாக விளங்கும் சரபேசுவரர் சன்னிதி, தெற்கு முகமாய் அமைந்துள்ளது. சிவன், விஷ்ணு, காளி(பிரத்யங்காரா தேவி), துர்க்கை(சூலினி துர்க்கை) ஆகிய நான்கு மூர்த்திகளும் சேர்ந்த அம்சம் தான் சரபேசுவரர். நான்கு பெரிய தெய்வங்களும் ஒன்றாக இருப்பதால் நான்கும் சேர்ந்த அருள் கிடைக்கிறது. இத்தலத்தில் சரபேசுவரர் 7 அடி உயரத்தில் தனிசன்னதியில் பிரம்மாண்டமான தோற்றத்தில் அருள்பாலிக்கிறார்.
மகாவிஷ்ணு, தன் பக்தன் பக்த பிரகலாதனுக்காக, இரண்யன் பெற்ற வரத்தின்படி மனிதனும் இல்லாத மிருகமும் இல்லாத வடிவமாக நரசிம்மராக அவதாரம் எடுத்து, இரண்யனை அழித்ததாக புராணங்கள் கூறுகின்றன. அதன்படி இரண்யனின் குடலை உருவி மாலையாக அணிந்த நரசிம்மர், இரண்யனின் உதிரத்தைக் குடித்தார். இதனால் அவரது செயல் அசுரத்தனமாக மாறியது. அவரது இந்த மாற்றத்தால் உலகே அச்சத்தில் நடுங்கியது. அனைவரும் சிவபெருமானிடம் சரணடைந்தனர். அதற்குச் செவி மடுத்த சிவபெருமான், தன் அம்சத்தில் இருந்து தோன்றிய வீரபத்திரரிடம் நரசிம்மரின் அட்டகாசங்களை நிறுத்தி, அவரை சாந்த மூர்த்தியாக்க ஆணையிட்டார்.
வீரபத்திரர் பேரண்டப் பட்சியாக, சரப வடிவம் ஏற்றார். சிங்கமுகம், நரிவால் கொண்டிருந்த அந்த தோற்றத்தைக் கொண்டு, நரசிம்மரை சாந்தப்படுத்தினார். அதே வடிவத்தில் சரபேசுவரர் என்ற பெயரில் கோவில் கொண்டார். பல்வேறு திருக்கோவில்களில் சரபேசுவரர் வடிவங்கள் இருந்தாலும், திரிபுவனம் கம்பகரேசுவரர் திருக்கோவிலில் உள்ள சரபேசுவரரே பிரதானமாக போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தின் உற்சவமூர்த்தியும் சரபேசுவரர் தான். இங்குள்ள சரபர் ஆறு கால்கள், நான்கு கரங்களுடன் பன்னிரு கால் பீடத்தையும், இரு கரங்கள் நரசிம்மனைப் பற்றியும் அமைந்துள்ளது.
பிரார்த்தனை
சரபேசரை வணங்கினால் வியாதிகள், மனக்கஷ்டங்கள், கோர்ட் விவகாரங்கள், பில்லி சூன்யங்கள், ஏவல், மறைமுக எதிரிகள் தொல்லை, திருஷ்டி தோசங்கள், சத்ரு தொல்லைகள், ஜாதக தோசங்கள், கிரக தோசங்கள் அனைத்தும் நீங்கும். கல்வி, ஆரோக்கியம், ஆயுள் விருத்தி , மனம் விரும்பும் படியான வாழ்க்கை, உத்தியோக உயர்வு போன்ற நினைத்த காரியங்கள் கைகூடும். குழந்தை பேறு கிடைக்கும். கடன் தொல்லை நீங்கும்.
செவ்வரளிப்பூ, மரிக்கொழுந்து, வில்வம், செண்பக புஷ்பம், நாகலிங்கப்பூ ஆகிய மலர்களால் சரபேசருக்கு சரப அர்ச்சனை செய்வது முக்கிய நேர்த்திகடனாக உள்ளது. வெள்ளிக்கிழமை அன்று சரபேசருக்கு தயிர் அபிசேகம்(வியாதி நீக்கம்) பால் அபிசேகம்(ஆயுள் விருத்தி) ஆகியவை செய்வதும் பக்தர்களது நேர்த்திகடனாக உள்ளது.

ஊட்டத்தூர் சுத்தரத்தினேசுவரர் கோவில்
மேற்கூரையில் நவக்கிரகங்கள் அமைந்திருக்கும் அபூர்வ அமைப்பு
திருச்சியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பாடாலூரில் இருந்து புள்ளம்பாடி வழித்தடத்தில் உள்ளது ஊட்டத்தூர். இறைவன் திருநாமம் ஆரண்ய சுத்தரத்தினேசுவரர். இறைவியின் திருநாமம் அகிலாண்டேசுவரி.
பொதுவாக சிவன் கோவில்களில் நவக்கிரகங்கள் மற்றும் ராசிகளின் அதிபதிகள் ஒரு பீடத்தின் மீதோ அல்லது தனி சன்னதியிலோ எழுந்தருளி இருப்பார்கள். ஆனால், ஊட்டத்தூர் சுத்தரத்தினேசுவரர் கோவிலில் கொடி மரம் அருகே மேற்கூரையில் 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள் செதுக்கப்பட்டு அவை பூமியை நோக்கி பார்க்கும்படி உள்ளது. அதன் அருகிலேயே ஒன்பது கிரகங்களும் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இவை அனைத்தும் பூமியை நோக்கி இருப்பதால் அதன் அடியில் வைத்து செய்யப்படும் யாக பூஜைகள் அனைத்திற்கும் உடனடி பலன் கிடைக்கும். எந்த ராசியை சேர்ந்தவர்களும் இதன் மூலம் முழு பயன் அடைய முடியும்.
சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களை தீர்க்கும் அபூர்வ பஞசநதன நடராஜர்
இக்கோவிலில் ஆசியாவிலேயே மிகவும் அரிதான, பஞசநதன கல்லில் செய்யப்பட்ட நடராஜர் திருமேனி அமைந்துள்ளது. இந்த கற்கள் சூரியனில் இருந்து வெளிவரும் ஆரோக்கிய கதிர்வீச்சினை சேமித்து வைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையன. இந்த வகை கற்சிலை தற்போது எங்குமே கிடையாது. சிறுநீரகம், மற்றும் சிறுநீரக கல் தொடர்பான நோய்களுக்கு இந்த பஞசநதனநடராஜர் மருந்தாக திகழ்கிறார்.

அய்யன்பேட்டை சுந்தரேசுவரர் கோவில்
சிவபெருமான் கையில் தராசுடனும், அம்பிகை கையில் படியுடனும் வணிக வியாபாரிகளாக காட்சி தரும் தலம்
கும்பகோணம் - பூந்தோட்டம் வழித்தடத்தில் மருதுவாஞ்சேரி என்ற கிராமத்தில் இருந்து இரண்டு கி மீ தொலைவில் உள்ளது அய்யன்பேட்டை. இறைவன் திருநாமம் சுந்தரேசுவரர். இறைவியின் திருநாமம் மீனாட்சி. இக்கோவிலில், சிவபெருமானின் உற்சவமூர்த்தி கையில் தராசு பிடித்த கோலத்திலும், அன்னை பார்வதி கையில் அரிசி அளக்கும் படியுடனும் காட்சி தருவது தனிச்சிறப்பாகும். இப்படி இறைவனும், இறைவியும் வணிக வியாபாரிகளாக காட்சி தருவது நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாத காட்சியாகும். கையில் தராசுடன் திகழும் இறைவனின் திருநாமம் செட்டியப்பர். அரிசி அளக்கும் படியுடன் இருக்கும், அம்பிகையின் திருநாமம் படியளந்த நாயகி.
இப்படி சிவபெருமானும், பார்வதியும் வணிக வியாபாரிகளாக காட்சி தருவதன் பின்னணியில் ஒரு சுவையான வரலாற்று நிகழ்ச்சி உள்ளது.
நாயன்மார்களான திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் ஒரு சமயம் திருவீழிமிழலைக்கு தங்கள் அடியார் கூட்டத்துடன் வந்து தங்கி இருந்து சைவத் தொண்டு ஆற்றிக் கொண்டிருந்தனர். அப்போது கடுமையான வறட்சி ஏற்பட்டது. உணவுப் பற்றாக்குறையால் மக்கள் பட்டினியாக இருந்தனர். இதனால் திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் தங்கள் அடியவர் கூட்டத்திற்கு ஏற்பட்டிருக்கும் உணவு பஞ்சத்தை சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவபெருமான் அவர்களை ஆசிர்வதித்து, தினமும் இரண்டு பொற்காசுகளை திருவீழிமிழலை கோவிலில் அவர்களுக்குக் கிடைக்கும்படி வழங்கினார். ஆனால் அந்த தங்க நாணயங்களை கொடுத்து, எங்கு சென்று உணவு பொருட்களை வாங்குவது என்று தெரியவில்லை. அப்போது, சிவபெருமான் அவர்கள் முன் தோன்றி, அய்யன்பேட்டை என்ற இடத்தில் இருந்து உணவுப் பொருட்களை வாங்குங்கள், ஆண்டார்பந்தியில் உணவு படையுங்கள் என்று அறிவுறுத்தினார். அய்யன்பேட்டையை அடைந்த நாயன்மார்கள், சிவபெருமானும், பார்வதி தேவியும் அங்கு வியாபாரம் செய்வதைக் கண்டு வியந்தனர். மளிகை பொருட்களை விற்பதற்காக சிவபெருமான் கையில் தராசுடனும், அம்மன் அரிசியை அளக்கும் படியுடனும் காட்சியளித்தார்கள். எனவே இக்கோவிலின் இறைவன் செட்டியப்பர் என்றும், மீனாட்சி அம்மன் படியளந்த நாயகி என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
வியாபாரத்தில் வெற்றி பெற வழிபட வேண்டிய கோவில்
புதிதாய் வியாபாரம் தொடங்குவோர், தொழில் செய்வோர், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டவர்கள் ,வறுமையில் சுழல்பவர்கள் இங்கு வந்து வழிபட்டால் தொழில் சிறக்கும், செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை. இங்கு அட்சய திரிதியை, மாதாந்திர பரணி நட்சத்திர நாட்கள், சித்திரை பரணி நட்சத்திர நாள், வரலக்ஷ்மி விரதம், வெள்ளி கிழமைகளில் வந்து முறைப்படி வழிபட வியாபாரத்தில் , வெற்றி பெற்று வாழ்க்கையில் வளம் கொழிக்கும் என்கிறார்கள்.
திருவீழிமிழலையில் பெற்ற படிக்காசினை மாற்றி பொருட்கள் வாங்கிய இடம் அய்யன் பேட்டை. இந்த நிகழ்வை ஆண்டுதோறும் ஐதீக விழாவாக, சித்திரை பரணி நட்சத்திர நாளன்று 'வியாபார விழா' என்னும் பெயரில் இங்கு வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்கள். வணிகத்தைப் போற்றும் திருவிழா, தமிழகத்திலேயே இங்கு மட்டுமே நடைபெறுகிறது. அந்நாளில் ஏராளமான வணிகர்கள் தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இது வியாபாரத் தலம் என்பதால் பெரும்பாலும் கரூர், திருப்பூர், கோயம்புத்தூர், நாமக்கல் பகுதியைச் சேர்ந்த வணிகர்கள் வந்து வணங்குகிறார்கள்.
தொழில் முன்னேற்றம் இல்லாதவர்கள், எதனை தொட்டாலும் நஷ்டம் காண்பவர்கள் மற்றும் அனைத்து விதமான நஷ்டங்களும் தீர இத்தல வழிபாடு கைகொடுக்கும்.
திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோவில்
சிவபெருமான் அப்பர், சம்பந்தருக்கு படிக்காசு அளித்த தலம்
கும்பகோணம் - இரவாஞ்சேரி வழித்தடத்தில், 26 கி.மீ., தொலைவில், தென்கரை என்ற கிராமத்து அருகில் உள்ளது திருவீழிமிழலை. இறைவன் திருநாமம் வீழிநாதேஸ்வரர் . இறைவியின் திருநாமம் சுந்தரகுசாம்பிகை. தல விருட்சம் வீழிச் செடி. அதனால் தான் திருவீழிமிழலை என்று தலத்துக்குப் பெயர்.
மிழலைக்குறும்பர் என்ற வேடுவர் இத்தல இறைவன் மேல் கொண்ட அன்பினால் தினமும் விளாங்கனியை நைவேத்யம் செய்து வழிபட்டு வந்தார். இறைவன் அவரது அன்பிற்கு இரங்கி, அஷ்டமாசித்திகளை வழங்கினார். வேடுவரால் நிவேதனம் செய்யப்பட்ட விளாங்கனி, வீழிநாதரின் பாதத்தில் இன்றும் காட்சியளிக்கிறது. இதனால் இத்தலம் திரு+வீழி+மிழலை என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்திற்குப் பூகைலாசம், கல்யாணபுரம், பஞ்சாக்கரபுரம், தக்ஷிணகாசி, ஷண்மங்களஸ்தலம், சுவேதகானனம், ஆகாசநகரம், பனசாரண்யம், நேத்திரர்பணபுரம், தேஜிநீவனம் எனப் பத்துப் பெயர்களுண்டு.
திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் பல தலங்களையும் பணிந்து பாடி, பின் திருவீழிமிழலையை அடைந்து இறைவனைப் பணிந்து, இன்னிசைப் பாமாலைகள் சூட்டி இன்புற்றனர். இருவரும் தினமும், ஐந்நூற்று மறையவர்களுக்கும், மற்ற அடியார்களுக்கும் உணவு படைத்து வந்தனர். சம்பந்தரும், அப்பரும் தங்கியிருந்த திருமடங்கள் வடக்கு வீதியில் கீழ்க்கோடியிலும் (சம்பந்தர்), மேற்குக் கோடியிலும் (அப்பர்) உள்ளன. அப்பொழுது நாட்டில் உணவு பஞ்சம் ஏற்பட்டது. தங்களுடன் இருக்கும் அடியாருக்கு உணவு படைப்பது எப்படி என்று இருவரும் கவலை உற்றனர். அச்சமயம் வீழிமிழலைப் பெருமான் இருவருடைய கனவிலும் தோன்றி, உங்களை வழிபடும் அடியவர்களுக்காக, தினந்தோறும் உங்கள் இருவருக்கும் ஒவ்வொரு பொற்காசு தருகின்றோம். அதைக் கொண்டு நீங்கள் உங்கள் அடியவர்களுக்கு உணவு படைக்கலாம் என்று கூறி மறைந்தார்.
கனவு நீங்கி, பெருமான் கருணையை வியந்த அவர்கள் மறுநாள் காலையில் திருவீழிமிழலை கோவிலுக்கு சென்றனர். கிழக்கு பீடத்தில் ஒரு பொற்காசு காணப்பட்டது. அதை சம்பந்தர் எடுத்துக்கொண்டார். வலம் வரும்போது மேற்கு பீடத்தில் ஒரு காசு இருப்பதைக் கண்டு, அதை அப்பர் பெருமான் எடுத்துக்கொண்டார். தங்கள் மடத்துப் பணியாளர்களிடம் அக்காசுகளைக் கொடுத்து, வேண்டிய பண்டங்களை வாங்கி அடியவர்களுக்கு உணவு அளித்திடுங்கள் என்றார்கள். அவர்களும் வேண்டியவற்றை வாங்கி, இரண்டு மடத்து அடியவர்களுக்கும் உணவு படைத்தார்கள்.
சில நாட்கள் சென்றன. திருநாவுக்கரசர் திருமடத்தில் அடியவர்கள் சரியான நேரத்திற்கு உணவருந்துவதையும், தமது திருமடத்தில் காலதாமதமாக அடியவர்கள் உணவருந்துவதையும் ஞானசம்பந்தர் உணர்ந்து, சமையல் பணியாளர்களை நோக்கி, 'உணவு படைப்பதில் ஏன் காலதாமதம்?' என்று கேட்டார். அதற்கு அவர்கள், சிவபெருமான் கொடுத்த பொற்காசை கடைவீதிக்குக் கொண்டுசென்றால், நாவுக்கரசர் பெறும் காசுக்கு உடனே பொருட்கள் கொடுக்கிறார்கள். நாவுக்கரசருக்கு கிடைக்கும் காசு நல்ல காசாக இருக்கின்றது. ஆனால் நீங்கள் பெற்று வரும் காசு மாற்று குறைந்த காசாக இருக்கின்றது. அதனால் நீங்கள் பெற்ற பொற்காசு கொடுத்து நாங்கள் பண்டம் வாங்க சென்றால், நம்முடைய காசுக்கு வட்டங் (தரகு, கமிஷன்) கேட்டு தீர்த்து, பின்புதான் பண்டங்களைக் கொடுக்கிறார்கள். அதனால் தான் காலதாமதம் என்று கூறினர். மறுதினம் திருவீழிமிழலை கோவிலுக்குச் சென்ற சம்பந்தர்,
"வாசிதீரவே காசுநல்குவீர்
மாசின் மிழலையீர், ஏசலில்லையே
காழி மாநகர் வாழி சம்பந்தன்
வீழிமிழலைமேல் தாழும் மொழிகளே''
என்னும் திருப்பதிகத்தைப் பாடினார். பின்னர் சிவபெருமான் திருஞானசம்பந்தருக்கும் நற்காசு வழங்கினார். அதுமுதல் காலத்தோடு அவருடைய அடியவர்களுக்கும் உணவு படைத்தார்கள். பின்பு மழை பெய்து எங்கும் செழித்து விளைபொருட்கள் மிகுந்தன. நாட்டில் பஞ்சம் அகன்றது.
இரண்டாம் கோபுரத்தைக் கடந்தவுடன் வெளித் திருச்சுற்றில் கிழக்கே, சம்பந்தருக்கு இறைவன் படிக்காசு அளித்த பலிபீடமும்; மேற்கே திருநாவுக்கரசருக்கு படிக்காசு வழங்கிய பலிபீடமும்; அருகில் படிக்காசு விநாயகரையும், அப்பர், திருஞானசம்பந்தர் திருவுருவங்களையும் தரிசிக்கலாம்.

திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோவில்
பாதாளத்தில் அமர்ந்திருக்கும் அபூர்வ நந்தி
கும்பகோணம் - இரவாஞ்சேரி வழித்தடத்தில், 26 கி.மீ., தொலைவில் தென்கரை என்ற கிராமத்து அருகில் உள்ளது திருவீழிமிழலை. இறைவன் திருநாமம் வீழிநாதேஸ்வரர் . இறைவியின் திருநாமம் சுந்தரகுசாம்பிகை. சிவபெருமான் காத்தியாயன முனிவருக்கு மகளாக பிறந்த பார்வதி தேவியை திருமணம் புரிந்த தலம் இது. காத்தியாயன முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க கருவறையில் சிவபெருமானும் பார்வதியும் திருமண கோலத்தில் காட்சி தருவது இத்தலத்தின் சிறப்பு. திருமணப் பரிகாரத் தலங்களில் முக்கியமான தலம். திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் தேவாரப் பாடல் பெற்ற தலம் இது.
இத்தலத்து இறைவனின் உற்சவ மூர்த்தி காசி யாத்திரைக்கு கிளம்பும் மாப்பிள்ளைக் கோலத்தில் அருள்பாலிப்பதால், மாப்பிள்ளை சுவாமி எனப்படுகிறார். சிவனும், பார்வதியும் திருமணக்கோலத்தில் வீற்றிருக்கும் தலங்கள் பல உண்டு. அங்கு மூலவரோ, உற்சவரோ மட்டுமே கல்யாண கோலத்தில் இருப்பர். மூலமூர்த்தி, உற்சவமூர்த்தி என இருவருமே திருமணக் கோலத்தில் விளங்கும் தலம் திருவீழிமிழலை ஒன்றே ஆகும்.
இறைவன் உமையை மணந்து கொண்ட தலம் என்னும் நிலைக்கேற்ப, கர்ப்பக்கிருக வாயிலில் அரசாணிக்கால் என்னும் தூணும், வெளியில் மகாமண்டபத்தில் பந்தக்கால் என்னும் தூணும் உள்ளன. திருமணத்தில் இரண்டு கால்களை முக்கியமாகச் சொல்வர். அரசனுடைய ஆணையை சாட்சியாக வைத்து திருமணம் நடக்கிறது என்ற பொருளில் ஒரு மரக் கொம்பினை நடுவர். மணமேடையில் இருக்கும் அந்தக் கொம்பு அரசாணைக்கால் எனப்படும். திருவீழிமிழலை கர்ப்பக்கிரக வாயிலில் அரசாணைக்கால் இருக்கிறது. இந்த அமைப்பு வேறெங்கும் இல்லாத விசேஷ அமைப்பாகும். மகாமண்டபம் திருமணமண்டபம் போல், பந்தல் காலுடன் காட்சியளிப்பது இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு. கொடிமரம் அருகே சிவலிங்கம் அமைந்திருப்பது இன்னொரு சிறப்பம்சம்.
இக்கோவிலில் இறைவன் எழுந்தருளி இருக்கும் கருவறை மண்டபத்திற்கு செல்ல நாம் 15 படிக்கட்டுகள் ஏறி செல்ல வேண்டும். பொதுவாக சிவாலயத்தில், நந்தி, கொடிமரம், பலிபீடம் ஆகியவை தரை மட்டத்தில் அமைந்திருக்கும். ஆனால் இக் கோவிலிலோ பாதாளத்தில் நந்தி அமைந்துள்ளது. முழு கோவிலே நந்திக்கு மேல் அமைந்திருப்பது போல் உள்ளது. இப்படிப்பட்ட பாதாள நந்தியை நாம் வேறு எந்த கோவிலிலும் தரிசிக்க முடியாது.
திருமண தடை உள்ளவர்கள் வழிபட வேண்டிய கோவில்
திருமண தடை உள்ளவர்கள் அவசியம் வழிபட வேண்டிய கோவில் இது. இக்கோவிலுக்கு வந்து வழிபட்ட பின் தொடர்ந்து 45 நாட்கள், தினமும் காலையில் எழுந்து, குளித்து முடித்ததும்,
தேவந்திராணி நமஸ்துப்யம்
தேவந்திரப்ரிய பாமினி
விவாஹ பாக்யமாரோக்யம்
என்று துவங்கும் சுலோகத்தைப் பாராயணம் செய்யவேண்டும். தினமும் காலையில் மட்டுமின்றி, மாலையிலும் பாராயணம் செய்து வந்தால், விரைவில் மாங்கல்ய வரம் கிடைக்கும்.
கீழ்வேளூர் கேடிலியப்பர் கோவில்
முருகனின் சிவபூஜைக்கு இடையூறு வராமல் காத்த அஞ்சுவட்டத்தம்மன்
நாகப்பட்டிணம்-திருவாரூர் சாலையில் 12 கீ.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் கீழ்வேளூர். இறைவன் திருநாமம் கேடிலியப்பர். இறைவியின் திருநாமம் சுந்தர குஜாம்பிகை.
முருகப் பெருமான் தேவர்களைக் காக்க திருச்செந்தூரில் அசுரன் சூரபத்மனையும், அவனைச் சார்ந்தவர்களையும் அழித்தார். அசுரர்களைக் கொன்றதால் ஏற்பட்ட வீரஹத்தி தோஷம் நீங்க என்ன செய்வது என்று அவரது தந்தையான சிவபெருமானைக் கேட்டார். அதற்கு ஈசன், 'பூவுலகில் தட்சிண பதரி ஆரண்யம் என்ற போற்றப்படும் கீழ்வேளூர் திருத்தலத்தில், சுயம்புலிங்க வடிவில் எழுந்தருளி அருள்பாலிக்கும் என்னை நவலிங்க பூஜை செய்து, வழிபட்டு, தவமியற்றி வந்தால் இந்த தோஷம் நீங்கும்' என்று கூறி அருளினார்.
அவரது அருளாணைப்படியே இத்தலத்திற்கு வந்த முருகப்பெருமான் தன் வேலால் பூமியைப் பிளந்து தீர்த்தம் உண்டாக்கினார். பின்னர் இந்தக் கீழ்வேளூரின் எட்டுத் திசைகளிலும் உள்ள கோவில்கடம்பனூர், ஆழியூர், இளங்கடம்பனூர், பெருங்கடம்பனூர், கடம்பர வாழ்க்கை, வல்ல மங்கலம், பட்டமங்கலம், சொட்டால்வண்ணம், ஒதியத்தூர் ஆகிய ஒன்பது ஊர்களில் நவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பின்னர் கீழ்வேளூரில் எழுந்தருளியுள்ள சுயம்புமூர்த்தியாகிய கேடிலியப்பரை சரவணப் பொய்கையில் நீராடி, வழிபட்டு, வீரஹத்தி தோஷம் போக்க வேண்டினார். அப்போது வீரஹத்திகளான மாயைகள், முருகப் பெருமானின் தவத்திற்கு இடையூறு செய்தனர். உடனே சாந்த ஸ்வரூபியான சுந்தரகுஜாம்பிகை, பத்ரகாளியாகத் திருவுருவங் கொண்டு வடதிசை நோக்கி பத்து திருக்கரங்களுடன், நான்கு திசைகள் மற்றும் ஐந்தாவது திக்கான ஆகாயத்தில் இருந்தும் குமரனுக்கு இடையூறு வராமல் காத்து நின்றார். எனவே இந்த அம்பிகைக்கு ஸ்ரீ அஞ்சுவட்டத்தம்மன் என்ற திருநாமம் உண்டு.
கீவளூர் காளி எனப்படும் அஞ்சு வட்டத்தம்மண் மிக உக்கிரமானவள். சோழர்கள் போருக்கு செல்லும முன்னர் இந்த கீவளூர் காளியை வழிபாட்டு செல்வார்கள் என்று வரலாறு சொல்கிறது. அஞ்சு வட்டத்து அம்மையின் சன்னிதி முதல் பிரகாரத்தில் முருகன் சன்னிதிக்கு முன்னால் தனியே வட பக்கத்தில் இருக்கிறது. அஞ்சு வட்டத்தம்மண் சுதைவடிவில் பெரிய திருஉருவுடன் பத்து திருக்கரங்களுடன் வடக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.
இங்கு அமாவாசை மற்றும் ராகு காலங்களில் எலுமிச்சை தீபம் ஏற்றி,கருவறை தீபத்தில் எள் எண்ணெய் சேர்த்து,9 உதிரி எலுமிச்சை பழங்களை சமர்ப்பித்து,குங்குமார்ச்சனை செய்து அஞ்சுவட்டத்துக் காளி அம்மனை வழிபட்டு வர நம்மை பீடித்த நோய்கள்,தீராதநோய்கள், தரித்திரம், வறுமை,ஏவல்,பில்லி, சூன்யம், மாந்திரீகம் என அத்தனை பீடைகளும், தீவினைகளும், தோஷங்களும் விலகி ஓடும். பித்ரு தோஷம்,குலதெய்வ சாபம் விலகும். தொடுவதால்,காற்றுமூலம் பரவுவதால் என பரவும் தொற்றுக் கிருமிகளையும்,தொட்டு தொடரும்,பற்றிப்படரும் தொற்றுநோய்களையும் அடியோடு துடைத்தெறியும் வல்லமைபடைத்தவள் அஞ்சுவட்டத்து அம்மன்.

திருமால்பூர் மணிகண்டீசுவரர் கோவில்
மூலவர் சிவபெருமானை திருமால் வணங்கி நிற்கும் அபூர்வ காட்சி
காஞ்சீபுரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருமால்பூர். இறைவன் திருநாமம் மணிகண்டீசுவரர். இறைவியின் திருநாமம் அஞ்சனாட்சி. திருமால் வழிபட்டு பேறு பெற்ற தலம் என்பதால், இத்தலம் 'திருமாற்பேறு' என்றானது. அதுவே மருவி நாளடைவில் திருமால்பூர் என்றானது.
திருமால், சிவபெருமானிடமிருந்து சக்கராயுதம் பெறுவதற்காக இத்தலத்திற்கு வந்து, சக்கர தீர்த்தம் ஏற்படுத்தி, பாசுபத விரதம் பூண்டு, திருநீற்றை உடல் முழுவதும் பூசி ருத்ராட்சம் அணிந்து, அம்பிகை பூஜித்த ஈசனை முறைப்படி பூஜை செய்து வந்தார். தினமும் ஆயிரம் தாமரை மலர்கள் கொண்டு, ஆயிரம் நாமங்கள் சொல்லி ஈசனை அர்ச்சித்து வந்தார். ஒருநாள் பூஜையின்போது, ஈசனின் திருவிளையாடலால் ஒரு மலர் குறைந்தது..வழிபாட்டில் குறையேற்படலாகாது என்றெண்ணி, தன் கண்ணைப் பறித்து, கண் மலரால் ஈசனை வழிபாடு செய்தார். திருமாலின் ஆழ்ந்த பக்திக்கு ஈசன் உளம் மகிழ்ந்து காட்சி கொடுத்தார். தனக்கு காட்சி தந்த சிவபெருமானை மும்முறை வலம்வந்து வணங்கினார் திருமால். பின்னர் ஈசன் திருமாலைப் பார்த்து, 'நாராயணரே! தாமரை மலருக்காக உம் கண்ணை எடுத்து அர்ச்சித்தமையால், உள்ளம் மகிழ்ந்து உமக்கு தேன் மருவிய தாமரை மலர்க்கண்ணை அளித்தோம். இனி நீ தாமரைக்கண்ணன், பதுமாஷன் என்று பெயர்பெற்று விளங்குவாய். நீ பேறு பெற்றதால், இத்தலம் உன் திருப்பெயரால் 'திருமாற்பேறு' என விளங்கப் பெறும். இச்சக்கரத்தால் வெல்லற்கரிய பகைவரையும் வெல்க' என்று கூறி சுதர்சன சக்கரம் வழங்கி ஆசீர்வதித்தார்.
பெருமாளின் கருட சேவை நடைபெறும் ஒரே சிவத்தலம்
மூவருக்கு தீபாராதனை காட்டியபின், எதிரில் இருக்கும் திருமாலுக்கும் தீபாராதனை காட்டப்படுவது சிறப்பாகும். திருமால் பூஜித்த காரணத்தால் இக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கி, சடாரி சாற்றப்படுகிறது. இது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். சிவன் கோவில் என்றாலும், பெருமாள் அருள் பெற்ற தலம் என்பதால் பிரம்மோற்சவ காலத்தில் கருடசேவை இங்கு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. பெருமாளின் கருட சேவை நடைபெறும் ஒரே சிவத்தலம் என்பது வியப்புக்குரியதாகும்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
அனுமனை விழுங்கிய முதலை சிற்பம்
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஒரு சிற்பக்கலை பொக்கிஷமாகவும் விளங்குகின்றது. இக்கோவிலில் இருக்கும் மண்டபத் தூண்கள், சிற்பங்கள், வேணுகோபாலன் சன்னதி சிற்பங்கள் நம் முன்னோர்கள் சிற்பக் கலையில் அடைந்திருந்த மகோன்னத நிலையையும், பெருமையையும் உணர்த்துகின்றது.
இக்கோவில் சேசராயர் மண்டபத்தில் பல அழகிய சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. அம்மண்டபத்து தூண் ஒன்றில், முதலை ஒன்று அனுமனை விழுங்கும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் சுவாரசியமான, ஒரு ராமாயண நிகழ்ச்சி உள்ளது
ராமாயணத்தில், ராவணன் மகனான இந்திரஜித்துக்கும், லட்சுமணனுக்கும் இடையே போர் நடந்தது இந்திரஜித் ஏவிய அஸ்திரத்தால் வட்சுமணன் மயங்கி விழுந்தார். இலங்கை அரச மருத்துவரான சுசேனர் இமயமலையில் விளையும் சஞ்சீவினி என்னும் மூலிகையை கொண்டு வந்தால் குணப்படுத்த முடியும் எனத் தெரிவித்தார். உடனடியாக இமயமலைக்கு விரைந்தார் அனுமன். இதையறிந்த ராவணன், தடைகளை ஏற்படுத்த அவற்றை அனுமன் முறியடித்தார். இமயமலைக்கு காலநேமி என்னும் அசுரனை அனுப்பினான் இந்திரஜித். காலநேமி மாரீசனின் மகன் ஆவார். சஞ்சீவினி மூலிகை உள்ள பகுதியை அனுமன் அடைந்த போது, அங்கு முனிவர் வடிவில் நின்றிருந்தான் காலநேமி. முனிவரைக் கண்ட அனுமன் வணங்க, அருகில் இருந்த குளத்தைக் காட்டி, இதில் நீராடி வந்து ஆசி பெற்றுக்கொள். உன் எண்ணம் ஈடேறும் என்றான். அனுமன் நீராடிய போது காலநேமியால் ஏவப்பட்ட மாய முதலை அவரை விழுங்கியது. அதன் வயிற்றைக் கிழித்துக் கொண்டு அனுமன் வெளியேறினார். அத்த முதலை ஒரு தேவனாக மாறியது. "என் பெயர் தான்யமாகி. சாபத்தால் முதலையாக குளத்தில் இருந்தேன். உங்களால் சாப விமோசனம் பெற்றேன். நீங்கள் முனிவர் என்று நினைத்துக் கொண்டிருப்பவர் ஒரு அசுரன். முனிவர் வேடத்தில் உங்களை கொல்ல திட்டம் தீட்டி இருக்கின்றான் என்று காலநேமியின் சதித் திட்டத்தை அனுமனுக்கு எடுத்துரைத்து, காலநேமியைக் கொன்று விடிவதற்குள் சஞ்சீவினிச் செடிகள் பறித்து லட்சுமணனைக் காக்குமாறு தேவன், அனுமனிடம் கூறினான். அனுமனும் காலநேமியைக் கொன்று சஞ்சீவினி மூலிகைச் செடிகள் வளரும் மலையை கொண்டு வந்து லட்சுமணனின் மூர்ச்சையை தெளிய வைத்தார். ராமாயணத்தின் மிக முக்கிய திருப்புமுனையாக விளங்கும் இந்த நிகழ்வுகள் அனைத்தும் சேசராயர் மண்டபத்தில் உள்ள தாணில் அழகிய சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளது.