
கோவை, ஒத்தக்கால் மண்டபம் நவகோடி நாராயணப்பெருமாள் கோவில்
ஜாதக தோஷங்களை நீக்கும் பெருமாள்
கோயம்புத்தூரிலிருந்து 19 கி.மீ தொலைவிலுள்ள ஒத்தக்கால் மண்டபம் என்ற ஊரில் அமைந்துள்ளது, ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த நவகோடி நாராயணப் பெருமாள் கோவில். தமிழ்நாட்டிலே, வேறு எங்கும் இல்லாத வகையில், பெருமாள் நவகோடி நாராயணர் என்ற திருநாமத்தில் எழுந்தருளியிருப்பது இத்தலத்தின் சிறப்பாகும்.
வைணவப் பெரியவரான ராமாநுஜர் இத்திருத்தலத்திற்கு வந்து, துறவறம் பூண்டு இந்த பெருமாளின் அன்பையும் அருளையும் பெற்றார் என்கிறது தல வரலாறு. இத்தலப்பெருமாள், நவகிரக தோஷங்களை நிவர்த்தி செய்வதால், ' நவகோடி நாராயணன்' என்ற பெயர் ஏற்பட்டதாகவும், ராமாநுஜர் பெருமாளை இத்திருநாமத்தில் முதன்முதலில் அழைத்ததால் இப்பெயர் ஏற்பட்டதாகவும் காரணங்களைக் குறிப்பிடுகின்றனர். நவகோடி ரிஷிகளும் வழிபட்ட நாராயணர் இவர் என்ற கூற்றும் இங்கு உண்டு.
கருவறையில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். மூலவர் எழுந்தருளியிருக்கும் கருவறையிலேயே ராமாநுஜரும் எழுந்தருளி இருப்பது ஒரு அபூர்வமான காட்சியாகும்.
கோவை மாவட்டத்தின் மத்தியப் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயிலையும், புற நகர்ப் பகுதியில் உள்ள இக்கோயிலையும் அரசர்களும் வீரர்களும் போர்ப் பாசறையாகப் பயன்படுத்தியுள்ளனர். திப்புசுல்தானின் படைவீரர்கள் ஸ்ரீரங்கப் பட்டிணத்திலிருந்து திண்டுக்கல் செல்லும்போது, இக்கோயிலில் முகாமிட்டிருந்தனர் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். இக்கோயிலைச் சுற்றியும் மிகப் பெரிய கோட்டை இருந்ததாகவும் பிற்காலத்தில் சிதைந்ததாகவும் குறிப்பிடுகின்றனர்.
பிரார்த்தனை
செண்பகம், மல்லிகை போன்ற மலர்களை பெருமாளுக்குச் சூட்டி வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. பெருமாளிடம் வைக்கப்படும் நியாயமான கோரிக்கைகள், உடனே நிறைவேறுவதாகக் கூறுகின்றனர் பக்தர்கள். மேலும், இங்கு வந்து வழிபட்டு ஜாதக தோஷங்கள், திருமணத் தடை, குழந்தைப் பேறின்மை உள்ளிட்ட குறைகள் நிவர்த்திப் பெற்று பலன் அடைந்தவர்கள் ஏராளம்.

காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில்
நம்பிக்கையுடன் வழிபடுபவர்களுக்கு நல்வழி காட்டும் முத்துமாரியம்மன்
காரைக்குடி மீனாட்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் 1960களில்தான் உருவானது. இக்கோவில் திருவிழா காலங்களில், மதுரை சித்திரை திருவிழாவில் கூடும் கூட்டத்தோடு ஒப்பிடும் வகையில், ஏராளமான எண்ணிக்கையில் பக்தர்கள் வந்து கலந்து கொள்கின்றனர். திருவிழாக்களில் கலந்து கொள்ள வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து பங்கேற்பது சிறப்பம்சமாகும். கிறித்துவர்களும், இசுலாமியர்களும்கூட இக்கோவிலுக்கு வந்து வழிபடுகின்றனர்
கோவில் உருவான பின்னணி
1956ம் ஆண்டில் இந்த ஊருக்கு வந்த ஒரு சிறுமி திடீரென மக்களின் குறைகளை தீர்க்க அம்மன் அருள்வாக்கு சொல்ல ஆரம்பித்தாள் இதை சில நாத்திகவாதிகள் எதிர்த்தனர்.இந்தசிறுமிக்கு சின்னம்மை நோய் ஏற்பட்டது.இருந்தாலும் அந்த சிறுமி அருள்வாக்கு சொல்வதை நிறுத்தவில்லை. திடீரென சின்னம்மை நோய் பெரியம்மை நோயாக மாறியது. சிறுமி இறக்கும் தருவாயில்கூட அருள்வாக்கு சொல்வதை நிறுத்தவில்லை. சிறுமி இறக்கும் தருவாயில் அவரை கேலிசெய்த ஒரு நபர் மிகுந்த கஷ்டத்துடன் வந்தார். தீராநோயுடன் வந்த நபரிடம் சிறுமி சொன்னாள். உன் வீட்டின் கிணற்றடியில் வடமேற்கில் ஒரு தக்காளிசெடி உள்ளது. அதில் ஒரு தக்காளி பழத்தை எனக்கு கொண்டு வந்து தா என சொன்னாள்
வந்தவருக்கு ஒன்றும் புரியவில்லை. என் வீட்டில் தக்காளி செடியே இல்லையே என்று சொன்னார். நான் சொன்ன இடத்தில் சென்று பார் இருக்கும் என்றாள்.உடனே அந்த நபர் வீட்டுக்கு விரைந்து சென்று பார்த்தபோது கண்ணுக்கே தெரியாத அளவிற்க்கு சிறு தக்காளி செடி முளைத்திருந்தது அதில் ஒரே ஒரு தக்காளிபழம் இருந்தது.அந்த நபருக்கு ஒரே ஆச்சரியம். பழத்தை எடுத்து கொண்டு சிறுமியிடம் சென்று கொடுத்தார். அந்த நபருக்கு ஓரிரு நாட்களில் அவருக்கு இருந்த நோய் முற்றிலும் குணமானது. அந்த சிறுமிக்கு பெரியம்மை முற்றியது இறக்கும் தருவாயில் ஊர் மக்களை அழைத்த சிறுமி, நான் மறைந்த பிறகு இந்த இடத்தில் அம்மனுக்கு ஒரு புது ஆலயம் எழுப்புங்கள். உங்களது அனைத்து பிரச்னைகளில் இருந்தும் நான் உங்களை காப்பேன் என்றாள். அதன் படியே கோவில் எழுப்பபட்டது.இந்த ஊரில் மிக சக்திவாய்ந்த அம்மனாக முத்துமாரியம்மன் இருக்கிறாள். வருடத்தின் பல நாட்கள் இந்த அம்மனுக்கு குளிர்ச்சி சார்ந்த அபிசேகங்களே நடைபெறுவதால் இந்த அம்மனுக்கு சீதளா தேவி என்ற பெயரும் உண்டு.
கருவறையில் அம்மன் நின்ற நிலையிலும், அதற்கு முன்னர் பீடம் அமைக்கப்பட்டு பீடத்தின் மீது அம்மன் தலையும் அமைக்கப்பட்டுள்ளது.
பிரார்த்தனை
இந்த அம்மனை நம்பிகையுடன் வழிபடுபவர்களுக்கு நிச்சயம் நல்ல வழியை ஏற்படுத்தி கொடுக்கிறாள் என்று பக்தர்கள் உறுதியாக நம்புகிறார்கள். அதற்கு இக்கோவிலுக்கு வரும் கட்டுக்கடங்காத கூட்டமே சாட்சியாகும்.
இங்கு முக்கிய பிரார்த்தனையாக திருமணத்தடை, குழந்தை பாக்கியம் வேண்டி பிரார்த்திக்கின்றனர். முத்துமாரி அம்மனுக்கு, தாவிவரும் வேல்போட்டு, காவடியும் பால்குடமும், முளைப்பாரி மதுக்குடமும், தீச்சட்டி பூமிதியும், நேர்த்திக் கடனாக செலுத்துகின்றனர்.

திருவாரூர் ஐநூற்று விநாயகர் கோவில்
மூலவர், உற்சவர் ஆகிய இருவருக்கும் தனித்தனியே சன்னதி அமைந்த விநாயகர் கோவில்
திருவாரூர் அருகே விஜயபுரம் காந்தி சாலையில், 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற ஐநூற்றுப்பிள்ளையார் கோயில் உள்ளது. மூலவர் ஐநூற்று விநாயகர்.
கணபதி வழிபாட்டுக்கெனவே பார்க்கவ புராணம் என்னும் விநாயக புராணத்தைத் திருவாவடுதுறை கச்சியப்ப முனிவர் தமிழில் இயற்றியிருக்கிறார். சக்திகள் ஐம்பத்தொரு வகை என்றும், அதனால் கணபதியும் ஐம்பத்தொரு வகை என்றும் வரலாறு கூறுகிறது. ஐம்பத்தொரு சக்திகளையும் தன்னிடத்தே கொண்ட பிள்ளையார் கோவில் கொண்டதால் திருவாரூரில் இருக்கும் பிரசித்தி பெற்ற பிள்ளையார் கோயிலுக்கு ஐம்பத்தொரு பிள்ளையார் கோவில் எனப் பெயர் வந்தது. அது மருவி ஐநூற்றொரு பிள்ளையார் என்றும், இப்போது ஐநூற்றுப்பிள்ளையார் என்றானது. ஐநூற்று விநாயகரை வணங்கினால், ஐந்நூறு மடங்கு நற்பலன்கள் கிடைக்கும் என்பதால் இந்தப் பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.
வழக்கமாக கணபதி கோயில்களில் மூலவருக்கு மட்டுமே கருவறையில் தினசரி பூஜை நடக்கும். ஆனால் இக்கோவிலில் மூலவர், உற்சவர் ஆகிய இருவருக்கும் தனித்தனியே சன்னதி அமைந்துள்ளது. தனித்தனியாக சன்னிதி கொண்டுள்ளதோடு, இருவருக்குமே தினமும் ஆராதனைகள் நடைபெறுகிறது. நின்ற கோலத்தில் உள்ள உற்சவர். திருவிழா நாட்களில் நான்கு வீதிகளில் வீதியுலா வருகிறார். மூலவர், உற்சவர் தவிர, பிராகாரத்திற்குள் 18 பிள்ளையார்கள் தனித் தனி மாடங்களில் உள்ளனர்.
ஐநூற்று விநாயகரை வணங்கினால் ஐஸ்வர்யம் பெருகும். அறிவு, ஆற்றல், பெருமை, கல்வியோடு ஆனந்த வாழ்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

திண்டுக்கல் அபிராமி கோவில்
இரண்டு மூலவர் சன்னதிகள் கொண்ட கோவில்
திண்டுக்கல் நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் அபிராமி கோவில். பத்மகிரியென்பது திண்டுக்கல்லின் பழைய காலத்து பெயர். இதற்கு திண்டீச்சுரம் என்ற பெயரும் உண்டு.இது தேவார வைப்புத் தலங்களில் ஒன்று.
பொதுவாக கோவில்களில் ஒரு மூலவர் சன்னதிதான் அமைந்திருக்கும். ஆனால் இத்தலத்தில், இரண்டு மூலவர் சன்னதிகள் உள்ளது. இக்கோவிலில் எழுந்தருளியுள்ள இரண்டு இறைவன்களின் திருநாமம் காளகத்தீசுவரர் , பத்மகிரீசுவரர். அம்பிகைகளின் திருநாமம் ஞானம்பிகை, அபிராமியம்பிகை.
ஆரம்பத்தில் இங்குள்ள மலையில் பத்மகிரீஸ்வரர் கோவில் இருந்தது. விழாக்காலங்களில் அடிவாரத்திற்கு சுவாமி வருவார். இதற்காக தற்போதைய அபிராமியம்மன் கோயில் இருக்குமிடத்தில், ஒரு மண்டபம் அமைக்கப்பட்டது. இப்பகுதியை ஆண்ட அச்சுத தேவராயர், காளஹஸ்தியில் அருளும் காளஹஸ்தீசுவரர் மீது அதீத பக்தி கொண்டிருந்தார். அவரை தன் இருப்பிடத்தில் வழிபட எண்ணிய அவர், 1538ல் இம்மண்டபத்தில் காளஹஸ்தீசுவரரையும், ஞானாம்பிகையையும் பிரதிஷ்டை செய்தார். 1788ல் அன்னியர்கள் இப்பகுதியில் இருந்தபோது, மலை மீதிருந்த பத்மகிரீசுவரர், அபிராமி அம்பிகையை இம்மண்டபத்தில் பிரதிஷ்டை செய்தனர். பிற்காலத்தில் இந்த மண்டபமே கோவிலாகக் கட்டப்பட்டது. தற்போது இங்கு இரண்டு சிவன், இரண்டு அம்பிகையர் தனித்தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர்.
சிவத்தலம் என்றாலும் இங்கு அம்பிகையே பிரதானம் பெற்றிருக்கிறாள். இப்பகுதியில் 'அபிராமி கோயில்' என்றால்தான் தெரியும். இவளது உண்மையான பெயர், 'அபிராமா அம்பிகை' என்பதாகும். அபிராமம் என்றால் அழகு என்று பொருள். இப்பெயரே காலப்போக்கில் அபிராமி என மருவியது. 'அபிராமா' என்ற பெயர் மந்திர அட்சரத்துடன் அமைந்ததாகும். இப்பெயரைச் சொல்லி அம்பிகையை வழிபடும்போது, அம்பாளுக்குரிய அத்தனை மந்திரங்களையும் சொல்லி வழிபட்ட பலன் கிடைக்கும். தை அமாவாசையன்று இவளுக்கு விசேஷ பூஜை நடக்கும். திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகியவை இங்கு காலையில் நடக்காமல் மாலை வேளைகளில் நடைபெறுகிறது.
பிரார்த்தனை
ராகு, கேது தோஷம் நீங்க, செய்த தவறுக்கு மன்னிப்பு கிடைக்க, இழந்த வேலை மீண்டும் கிடைக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்க கிருத்திகை நட்சத்திர நாட்களில் சிவனிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
12 அடி உயர கம்பமாக காட்சியளிக்கும் பெருமாள்
அரியலூருக்கு கிழக்கே 6 கிமீ தொலைவில் உள்ள கல்லங்குறிச்சி என்னும் ஊரில் அமைந்துள்ளது கலியுக வரதராஜ பெருமாள் கோவில். இத்தலம் 'தென்னகத்தின் சின்ன திருப்பதி' என்று போற்றப்படுகிறது
இந்க் கோவிலில் உள்ள பெருமாள் 12 அடி உயர கம்பத்தில் நாமத்தோடு உருவம் இல்லாமல் அருள்பாலிக்கிறார். இந்த கம்பத்தையே மூலவராக கருதி பூஜைகள் நடக்கிறது. அந்தக் கம்பத்தின் கீழே ஆஞ்சநேயர் இருக்கிறார். இந்த ஆஞ்சநேயர் ருத்ர அம்சம் கொண்டவராக, கம்பத்தை தாங்கிப் பிடித்தவராக காட்சி தருகிறார். இவர் கதை இல்லாமல் வடக்குமுகம் பார்த்த ஒரு கண் ஆஞ்சநேயராக உள்ளார். இக்கோவிலில் தாயாருக்கு தனி சன்னதி கிடையாது. மூலவர் பெருமாளே கம்பத்தில் இருப்பதால், தாயாரும் உடன் இருப்பதாக ஐதீகம்.
பெருமாள் கம்பத்தில் எழுந்தருளிய வரலாறு
1751-ஆம் ஆண்டு காலகட்டத்தில் அரியலூர் மாவட்டம் கோப்பிலியன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த மங்கான் படையாட்சி எனும் பெரும் விவசாயி இருந்தார். அவர் நிறைய மாடுகளைக் கொண்டிருந்தார். அவற்றில், சினைமாடு ஒன்று மேய்ச்சலுக்குச் சென்று திரும்பிவராமல் போனது. அவர் அந்த மாட்டை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவரது கனவில் வந்த பெரியவர் ஒருவர், காணாமல் போன பசு இரண்டு மைல் தொலைவில் உள்ள ஆலமரத்துக்கும், மாவிலங்கை மரத்துக்கும் இடையில் உள்ள சங்கு இலைப் புதரில் கன்றுடன் உள்ளது என்று கூறி மறைந்தார்.
மறுநாள் காலை, கனவில் சொல்லப்பட்ட இடத்துக்குச் சென்றார் மங்கான் படையாட்சி. அங்கு கன்றுடன் நின்றிருந்த பசு அங்கு சாய்ந்துகிடந்த ஒரு கல் கம்பத்தின்மீது தானாகவே பாலைச் சொரிந்திருந்தது. அதன்பின், ஏழாவது நாள் இரவு மீண்டும் மங்கான் படையாட்சி கனவில் தோன்றிய பெரியவர், கல் கம்பத்தை நிலைநிறுத்தி நாளும் வணங்குமாறு கூறினார். மேலும் அவர் கலியுகத்தார் கவலையை நீக்கவே தோன்றியதாகவும் தானே கலியுக வரதராசப் பெருமாள் எனக் கூறி மறைந்தார். பின்னர், மங்கான் படையாட்சியால் அந்த 12 அடி உயரமுள்ள கல்கம்பம் கல்லங்குறிச்சி கிராமத்தில் நிலைநிறுத்தப்பட்டு இந்தக் கோயில் கட்டப்பட்டது.
பிரார்த்தனை
இக்கோவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல மாவட்ட மக்களுக்கு பிரார்த்தனை தலமாக விளங்குகின்றது. அதனால் சனிக்கிழமைகளில் இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். விவசாய விளை நிலங்களில் உணவு தானியங்கள் விளைச்சல் நன்றாக இருந்தால் குறிப்பிட்ட அளவு உணவு பொருட்களை கோவிலுக்கு செலுத்துவதாக பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர். கோவிலை சுற்றிலும் ராட்சத அளவிலான தானிய கிடங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பக்தர்கள் தாங்கள் விளைவித்த தானியங்களை நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர்.

மாகாளிக்குடி (சமயபுரம்) உஜ்ஜயினி மாகாளி கோவில்
மூலவர் அம்பிகை அர்த்தநாரீசுவரியாக எழுந்தருளியிருக்கும் அபூர்வ தோற்றம்
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு கிழக்கே அரை கீ.மீ. தொலைவில் அமைந்துள்ளது மாகாளிக்குடி உஜ்ஜயினி மாகாளி கோவில். இக்கோவில் சமயபுரம் மாரியம்மன் கோவிலின் உபகோவிலாகும். இக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் அம்மன்கள் ஆனந்தசௌபாக்கிய சுந்தரி, உஜ்ஜைனி காளியம்மன் ஆகியோர் ஆவார்.
சிவனும் சக்தியும் எவ்வித வேறுபாடும் இல்லாதவர்கள் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் அர்த்தநாரீசுவர வடிவம் அமைந்தது. பார்வதிதேவி தனக்கும் சிவனைப்போலவே பூசைகள் நடக்கவேண்டும் எனக் கேட்டதன் விளைவாக, மாகாளிக்குடியில் அம்பாளுக்குள் சிவன் அடங்கும் விதத்தில் அம்பிகை ஆனந்த சௌபாக்கிய சுந்தரியாக எழுந்தருளினாள்.
பொதுவாக அர்த்தநாரீசுவர கோலத்தில், சிவபெருமான் வலதுபுறமும், பார்வதிதேவி இடதுபுறமும் காட்சியளிப்பார்கள். ஆனால் இக்கோவிலில், பார்வதிதேவி வலதுபுறமும் சிவபெருமான் அவருக்கு இடதுபுறமும் எழுந்தருளி இருப்பது தனிச்சிறப்பாகும். ஆனந்த சௌபாக்கிய சுந்தரிக்கு மூன்று கைகளே உள்ளன. பொதுவாக அம்மனுக்கு இரண்டு, நான்கு, எட்டு என்ற விதத்தில் கைகள் இருக்கும். ஆனால் ஒற்றைப்படையாக மூன்று கைகள் உள்ள அம்மன் இங்கு மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கையில் கபாலமும், மற்றொரு கையில் சூலமும், இன்னொரு கையில் தீச்சுடரும் ஏந்தியுள்ளார். அசுரனை வதம் செய்யும் கோலத்தில் இருந்தாலும் முகத்தில் சாந்தம் தவழ்கிறது. கோரப்பல் எதுவும் இல்லை. எனவே இவளை 'ஆனந்த சௌபாக்கிய சுந்தரி' என்கிறார்கள்.
விக்கிரமாதித்த மகாராஜா வழிபட்ட உஜ்ஜயினி காளியம்மன்
மத்திய பிரதேசம் உஜ்ஜயினியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தவர் விக்ரமாதித்தன்மகாராஜா. காட்டில் ஆறு மாதமும், நாட்டில் ஆறு மாதமும் ஆட்சி செய்வது வழக்கம். இவரது குலதெய்வம் உஜ்ஜயினி மாகாளி.
ஒரு சமயம் காட்டில் ஆட்சி செய்ய, காவிரிக்கரையிலுள்ள மகாகாளிகுடி காட்டுக்கு, தான் வழிபட்ட உஜ்ஜயினி காளி சிலையுடன் வந்தார். இங்கே தங்கிப் பூசை செய்து கொண்டிருந்தார். அவர் நாடு திரும்பும்போது, தான் வழிபட்ட சிலையை எடுக்க முயன்றார். முடியவில்லை. அம்பாளைத் தன்னுடன் வரும்படி எவ்வளவோ கெஞ்சினார். அப்போது அவர் முன் தோன்றிய காளி, இந்த இடத்திலும் தனது சக்தி தங்கும் என்று கூறி விட்டாள். அதைத் தொடர்ந்து காளியம்மனுக்கு இத்தலத்தில் கோவில் கட்டி வழிபட்டார்.
இத்தலத்தில், விக்கிரமாதித்தனுடன் வந்த வேதாளத்திற்கும், விக்கிரமாதித்தனின் மதியுக மந்திரியான கழுவனுக்கும் சிலைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. வேறு எந்த தலத்திலும் வேதாளத்திற்கு சிலை கிடையாது.
பிரார்த்தனை
பௌர்ணமி, அஷ்டமி, அமாவாசை ஆகிய தினங்களில் இங்குள்ள சக்தி தீர்த்தத்தில் குளித்து உஜ்ஜயினி காளியம்மனை வழிப்பட்டால், தீராத நோய்கள் தீரும் என்பது ஐதீகம். செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் உஜ்ஜயினி காளியம்மனை வழிப்பட்டு வந்தால் நினைத்தக் காரியங்கள் கைக்கூடும் என்று வரலாறு கூறுகிறது. அஷ்டமி நாளில் தொடர்ந்து அர்ச்சனை செய்து வழிபட்டு மேன்மை அடைந்து வெற்றிப் பெற்றவர்கள் ஏராளம்.
சண்டிஹோமம் வேள்வித்தீயில் தோன்றிய மாகாளியம்மன்
இக்கோவிலின் கும்பாபிஷேகம் இந்த வருடம் ஜனவரி மாத இறுதியில் நடைபெற்றது. அதன்பின்னர் நாற்பத்தி எட்டு நாட்கள் மண்டலாபிஷேக பூஜை நடைபெற்று, இறுதியாக சண்டிஹோமம் 16.03.2023 அன்று நடைபெற்றது. அன்று, சண்டிஹோமம் வேள்வித்தீயில் மாகாளியம்மன் தோன்றியது, அப்பூஜையில் பங்கேற்ற பக்தர்கள் அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது.
லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவில்
கைகளில் வீணையோடு நின்ற கோலத்தில் காட்சி தரும் வீணா தட்சிணாமூர்த்தி
திருச்சியில் இருந்து அரியலூர் செல்லும் வழியில், 23 கி.மீ. தொலைவில் உள்ள தலம் லால்குடி. இறைவனின் திருநாமம் சப்தரிஷீஸ்வரர். இறைவனின் திருநாமம் சப்தரிஷீஸ்வரர். இறைவியின் திருநாமம் பெருதிருப்பிராட்டியார். இவ்வூர் பக்கம் படையெடுத்து வந்த முகமதிய மன்னன் மாலிக் கபூர் இத்திருக்கோவிலின் சிவப்பு கோபுரத்தை கண்டு உருதுமொழியில் லால்குடி (லால் – சிவப்பு, குடி – கோபுரம்) என்று அழைக்க, அதுவே இவ்வூருக்கு பெயராகி அழைக்கபடுகிறது.
இத்தலத்தில் வீணையைக் கையிலேந்தி, சற்றே வித்தியாசமான கோலத்தில் அருள்பாலிக்கின்றார் தட்சிணாமூர்த்தி. இவரை 'வீணா தட்சிணாமூர்த்தி' என்றே தலபுராணம் குறிப்பிடுகின்றது. இசைக்கு தலைவன் சிவபெருமான். இதை உணர்த்தும் வகையில் அழகிய சடை முடியோடும், கைகளில் வீணையோடும், நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் இத்தலத்து தட்சிணாமூர்த்தி.
பிரார்த்தனை
இவரை வணங்கினால் உயர்பதவி, கல்வியில் முன்னேற்றம், நினைத்த படிப்பு படிக்கும் அமைப்பைக் கொடுப்பார். வியாழக் கிழமைகளில் இவருக்கு சந்தனக் காப்பிட நினைத்தக் காரியம் கைகூடும். வெண்தாமரை அர்ச்சனையும், தயிரன்ன நைவேத்தியமும் வியாழக்கிழமைகளில் கொடுக்க மனம் ஒருமுகப்படும். மேலும் இவர்க்கு தேனாபிசேகம் செய்தால் தேன் போன்ற இனிமையான குரல்வளம் கிடைக்கும்.

திருநிலை பெரியாண்டவர் கோவில்
சிவபெருமான் மனிதனாக அவதாரம் எடுத்த தலம்
செங்கல்பட்டிற்கு கிழக்கே 14 கி.மீ. தொலைவிலுள்ள திருநிலை கிராமத்தில் அமைந்துள்ளது பெரியாண்டவர் கோவில். இறைவியின் திருநாமம் அங்காள பரமேசுவரி. இந்த தலத்தில் சிவபெருமான், மனித வடிவம் தாங்கி உலகெல்லாம் வலம் வந்து திருநிலையில் ஒருநிலையாய் தன் பாதம் பதித்து, பெரியாண்டவராய் காட்சி தந்த பின் சுயம்பு லிங்கமாய் கோவில் கொண்டார். இத்தலத்தில் சிவபெருமான் நின்ற கோலம், அமர்ந்த கோலம், தவக்கோலம் என மூன்று வித தோற்றத்தில் இருப்பது ஒரு அரிய காட்சியாகும். சிவபெருமானை சுற்றி 21 சிவகணங்கள் கைகூப்பி வணங்கி நிற்கும் காட்சி இவ்வாலயத்தை தவிர வேறு எங்கும் காணமுடியாத அரிய காட்சியாகும்.
சிவபெருமான் ஒரு நாழிகைப் பொழுது மனிதனாக அவதாரம் எடுத்ததன் பின்னணி
சுந்திரபத்திரன் என்ற அசுரன் சிவபெருமானை வணங்கி, பல அரிய வரங்கள் பெற்றான். அவன் பெற்ற வரத்தின்படி, சிவபெருமான் ஒரு நாழிகைப் பொழுது மனிதனாய் வாழ்ந்தால்தான் அவனை அழிக்க முடியும் என்னும் நிலை இருந்தது. இறைவனின் திருவிளையாடலின்படி, பார்வதி தேவி எம்பெருமான்மேல் கோபம் கொண்டு, ஒரு நாழிகைப் பொழுது மனிதனாய் பிறப்பீர்கள்! என்று ஈசனை சபித்தாள். அதன் காரணமாக சிவபெருமான் மனிதனாகப் பிறந்து தன்நிலை மறந்து பூமியில் அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருந்தார். இதனால் அனைத்து இயக்கங்களும் தடைப்பட்டன. தேவர்கள் மனம் கலங்கினர். அவர்கள் அனைவரும் பார்வதி தேவியிடம் சென்று, ஈசனை ஆட்கொண்டு உலகை உய்விக்க வேண்டும் என்று வணங்கி நின்றனர். அதையேற்ற பார்வதி தேவி அங்காள பரமேசுவரியாக பூவுலகம் வந்து, மனம்போன போக்கில் அலைந்து கொண்டிருந்த சிவனைக் கண்டு மனம் வருந்தி, தன் சூலாயுதத்தை ஓரிடத்தில் வீசியெறிந்தாள். அது பூமியில் ஓர் இடத்தில் குத்தி, நிலையாய் நின்றது. சூலாயுதம் வீழ்ந்த இடத்தில் இருந்து 21 மண் உருண்டைகள் சிதறி விழுந்தன. பின் அவை ஒவ்வொன்றும் சிவகணங்களாக மாறி, சுற்றி சிவனின் வருகைக்காகக் காத்து நின்றன. சூலாயுத ஒளியைக் கண்டு சிவபெருமான் அந்த இடத்தில் பாதம் பதித்து, ஒருநிலையாய் நின்றார். அவரை பரமேஸ்வரி வணங்கினாள். அப்போது ஒரு நாழிகைப் பொழுது நிறைவுற, சிவபெருமான் மனித உருவம் நீங்கி தன்நிலை அடைந்தார். பெரிய மனிதராய் உலகை வலம் வந்த ஆண்டவராகிய நீவிர் பெரியாண்டவர் என்னும் பெயரில் வழங்கப் பெறுவீர்கள் என்று உமாதேவி கூற, தேவர்கள் அனைவரும் பெரியாண்டவரே என்று சொல்லி ஈசனின் பாதங்களைப் பணிந்தனர். அங்கேயே சிவபெருமான் சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார். இந்த நிகழ்ச்சி நடந்த திருத்தலம்தான் திருநிலை.
நந்திதேவர் மனித உடலுடன் இருக்கும் அபூர்வ தோற்றம்
சிவபெருமான் மனித அவதாரம் எடுத்தபோது அவருடன் நந்தி தேவரும் மனித வடிவில் சென்றார். எனவே இங்குள்ள நந்திதேவர் மனித உடலுடன் காணப்படுகிறார். இங்குள்ள விநாயகரும் இரண்டு கரங்களோடு மனித உடலுடன் காட்சி தருகிறார். இவருக்கு திருநீறு அபிஷேகம் மட்டுமே செய்யப்படுகிறது. இந்தத் திருநீற்றைப் பூசி, உட்கொள்வதால், நோய் நீங்குவதாகவும்; கல்வி, செல்வம் கிட்டுவதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர்.
பிரார்த்தனை
இவ்வாலயத்தின் அருகிலுள்ள சித்தாமிர்த குளத்தில் குளித்துவிட்டு, சிவபெருமானையும் அம்மனையும் தொடர்ந்து ஆறு வாரங்கள் வணங்கி வந்தால் நடக்காத காரியங்களும் நடைபெறும் என்கின்றனர். மகப்பேறு கிட்ட பிரார்த்தனை தலமாகவும் இது விளங்குகிறது. பல்லாயிரம் பேர் இந்த சிவனை குலதெய்வமாக வணங்கி வருகின்றனர். அவர்கள் 21 மண் உருண்டைகளை சிவலிங்கத்தைச் சுற்றி வைத்து வணங்கிச் செல்கின்றனர்.

வேலுடையான்பட்டு சிவசுப்ரமணிய சுவாமி கோவில்
வேடுவக் கோலத்தில் கையில் வில்லும் அம்பும் ஏந்தி காட்சி தரும் முருகன்
கடலூர் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப் எல்லைக்குள் உள்ள வேலுடையான்பட்டு என்ற கிராமத்தில் அமைந்துள்ளது சிவசுப்ரமணிய சுவாமி கோவில். அருணகிரிநாதரின் திருப்புகழலில் இத்தலம் அத்திப்பட்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பெரும்பாலும் முருகப் பெருமான் வேலுடனும் அல்லது தண்டத்துடனும்தான் காட்சி தருவார். ஆனால், இத்தலத்தில் மூலவர் சிவசுப்ரமணியசாமி, வேடுவக் கோலத்தில் சடா முடியுடனும், திருக்கரங்களில் வில்லும் அம்பும் ஏந்தி, இடுப்பில் சல்லடத்துடன், காலில் இறகு அணிந்து வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார். மூவரின் திருவுருவங்களும் ஒரே கல்லில் அமைந்திருப்பது அதன் சிறப்பம்சம் ஆகும். கொடிமரத்தின் அருகேபெரிய அளவில் ஏழு வேல்கள் முருகனின் உத்தரவிற்காகக் காத்து நிற்கும் சேவகர்களைப் போல் இருப்பது வேறு எந்த முருகன் தலத்திலும் காணமுடியாத அமைப்பாகும்.
பிரார்த்தனை
கந்த சஷ்டியின்போது குழந்தைப் பேறு இல்லாதவர்கள், இந்தக் கோயிலுக்கு வந்து வேண்டிக் கொண்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும். கடன், நோய் போன்ற பல பிரச்னைகளையும் தீர்க்கும் பிரார்த்தனைக் கடவுளாக இத்தல முருகனை பக்தர்கள் போற்றுகிறார்கள்.

பெரிய அய்யம்பாளையம் உத்தமராய பெருமாள் கோவில்
சிறுவனின் தோற்றத்தில் காட்சியளிக்கும் அபூர்வ பெருமாள்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகாவில் பெரிய அய்யம்பாளையம் என்னும் ஊரில், ஒரு சிறு குன்றின் மேல் அமைந்திருக்கிறது உத்தமராய பெருமாள் கோவில். இத்தலம் வேலூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில், கண்ணமங்கலத்திலிருந்து 4 கி.மீ. தூரத்தில் உள்ளது.
இத்தல பெருமாள் ஊமை சிறுவனுக்கு காட்சி கொடுத்து பேச வைத்தவர் என்பதால், மூலவர் உத்தமராயப்பெருமாள் சிறுவன் போலவே பால்ய மூர்த்தியாக காட்சியளிப்பது தனிச்சிறப்பாகும். சதுர வடிவான கருவறையில் ஏகாந்தமாக, தேவியர்கள் இன்றி சிவனும், விஷ்ணுவும் ஒன்று என்ற தத்துவத்தை விளக்கும் முகமாக, ஆவுடையார் மீது நின்ற கோலத்தில் உத்தமராய பெருமாள் நான்கு கரங்களுடன் திகழ்கிறார். மேலிரு கரங்கள் சங்கு, சக்கரத்தைத் தாங்க, கீழ் இரு கரங்கள் திருப்பதி-திருமலை பெருமாளைப் போல அபய, கடி ஹஸ்தங்களாகக் கொண்டு அருள்பாலிக்கிறார். பெருமாள் தனியே வந்து தங்கியவர் என்பதால், தாயாருக்கு சன்னதி கிடையாது.
பேசாத குழந்தைகளைப் பேச வைக்கும் பெருமாள்
சில குழந்தைகள் பிறந்ததில் இருந்தே பேசும் தன்மையற்ற ஊமைகளாக இருப்பர். இன்னும் சிலர் திக்குவாய் பிரச்னையுடனோ, சரியான உச்சரிப்பு இல்லாதவர்களாகவோ இருப்பர். இவர்கள் நன்கு பேசவும், ஊமைக்குழந்தைகளுக்கு பேச்சு வரவும் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கின்றனர் பேசாத குழந்தைகளுக்காக சுவாமிக்கு தேனபிஷேகம் செய்கின்றனர் அபிஷேக தேனை சவாமி முன்பாக குழந்தையின் நாக்கில் துளசியால் தொட்டு வைக்கின்றனர் பின் அந்த தேனையே பிரசாதமாகத் தருகின்றனர் தினமும் தேனைப் பருகி சுவாமியை வழிபட விரைவில் பேசும் தன்மை கிடைக்கும் என்பது நம்பிக்கை. பேச்சாளர்கள் பாடகர்கள் தாங்கள் குரல் வளத்துடன் இருக்கவும்: இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும் தவாமிக்கு அபிஷேகம் செய்தும், துலாபாரம் செலுத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
சனிக்கிழமைதோறும் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடக்கும். மனதில் இருக்கும் தீய சிந்தனைகள் விலகவும், திருமணமாகாதோர் உத்தமமான வரன் அமையவும் இங்கு வழிபடுகிறார்கள்.

யனமதுரு சக்தீசுவரர் கோவில்
தலைகீழாக காட்சி தரும் சிவபெருமானின் அபூர்வ தோற்றம்
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ளது பீமாவரம் என்ற ஊர். இந்த ஊரின் அருகில் 5 கி.மீ. தொலைவில் யனமதுரு கிராமத்தில் அமைந்துள்ளது சக்தீசுவரர் கோவில். இறைவனின் திருநாமம் சக்தீசுவரர்.இறைவியின் திருநாமம் பார்வதி.
இந்த ஆலயத்தில் சதுர வடிவ ஆவுடையாரின் மீது சிவலிங்கத் தோற்றத்தில் இறைவன் அருள்பாலிக்கிறார். இதில் என்ன விசேஷம் என்றால், இந்த சிவலிங்க தோற்ற கல்லின் மீது, ஜடா முடியுடன் கூடிய சிவபெருமானின் உரு வம் செதுக்கப்பட்டுள்ளது. அதுவும் தலை கீழாக. தியான கோலத்தில் இருப்பது போல கண்களை மூடியிருக் கும் ஈசனின் தலைப் பகுதி கீழேயும், கால் பகுதி மேலேயும் அமைந்திருக்கிறது. இந்த இறைவனின் அருகில் பார்வதி அமர்ந்திருக்கிறார். அவர் தன்னுடைய மடியில் முருகனை கிடத்தி வைத்திருக்கும் நிலையில் காட்சி தருகிறார்.
சிரசாசன கோல தலவரலாறு
முன்னொரு காலத்தில் சம்பாசுரன் என்ற அரக்கன் கடும் தவம் புரிந்து பிரம்மனிடம் இருந்து பல வரங்களை பெற்றான். தன் வரத்தை கொண்டு அனைத்து தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். அஷ்டதிக்கு பாலகர்களில் எமனை தவிர அனைவரையும் தோற்கடித்தான். எமன் தனது பலத்தால் போர் புரிந்தார். போர் தொடர்ந்து கொண்டே இருக்க எமன் தன் பலத்தை இழந்து கொண்டே வந்தார். இறுதியாக சம்பாசுரன் எமபுரியை கைப்பற்றினான். தேவர்களை அடிமைப்படுத்தினான். இதனால் எமன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தார். அப்போது இறைவன் தற்பொழுது கோவில் உள்ள இடத்தில் ஆழ்ந்த தியானத்தில் சிரசானத்தில் இருந்தார். ஈசனின் தியானம் கலைய வழி அறியாது எமன் நின்றார். எமனின் வேதனை அறிந்த அன்னை பார்வதி காட்சி அளித்தார். எமனிற்கு அசுரனை அழிக்கும் சக்தி வழங்கினார். எமனும் சம்பாசுரனை கொன்று தேவர்களின் குறையை தீர்த்தார். பின் இங்கு வந்து சிரசாசனத்தில் இருந்த இறைவனையும், குழந்தை முருகனுடன் இருந்த பார்வதியையும் பூஜித்தார். எனவே தான் இன்றும் இங்கே இறைவன் சிரசாசனத்தில் தலைகீழாய் காட்சி தருகிறார் என்கிறது தலபுராணம்.
யம பயம் போக்கும் சிவ பெருமான்
எமன் பூஜித்த தலம் ஆதலால் ஜாதகத்தில் அபமிருத்யு தோஷம் உள்ளவர்கள், ஜாதகத்தில் கண்டம் உள்ளவர்கள் இங்கு வந்து இறைவனையும் அம்பிகையையும் ஒரு சேர தரிசித்து செல்ல எம பயம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. நவகிரகங்களால் ஏற்படும் பிரச்சனைகள், திருமண தடை, குழந்தையின்மை போன்ற குறைபாடுகளை நீக்கும் தலமாகவும் விளங்குகிறது. இந்த இறைவனையும், அம்பாளையும் வழிபட் டால் குடும்ப ஒற்றுமை ஓங்கும், கணவன்-மனைவி பிரச்சினை மறையும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

தேனி மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில்
நவக்கிரகங்கள் தங்களின் தேவியருடனும், வாகனத்துடனும்அருள்பாலிக்கும் அரிய காட்சி
தேனி மாவட்டம் அல்லிநகரம் பங்களா மேடு பகுதியில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் அமைந்துள்ளது. இறைவனின் திருநாமம் சுந்தரேசுவரர்.இறைவியின் திருநாமம் மீனாட்சி.
பொதுவாக சிவாலயங்களில் நவக்கிரகங்கள் ஒரே பீடத்தில் தனியாக எழுந்தருளி அருள் பாலிப்பார்கள். ஆனால் இக்கோவிலில் நவக்கிரகங்கள் தங்கள் மனைவியரோடும், வாகனங்களோடும் எழுந்தருளியிருப்பது ஒரு அரிய காட்சியாகும். நவக்கிரகங்களின் இத்தகைய தோற்றத்தை, நாம் ஒரு சில இடங்களில் மட்டுமே தரிசிக்க முடியும்.

அதியமான்கோட்டை தட்சிண காசி காலபைரவர் கோவில்
தனது திருமேனியில் 12 ராசிகளும் 27 நட்சத்திரங்களும் கொண்ட தட்சிண காசி காலபைரவர்
தர்மபுரி - சேலம் சாலையில் 7 கி.மீ. தொலைவிலுள்ள அதியமான்கோட்டையில் அமைந்துள்ளது கால பைரவர் கோவில். இந்தியாவில் 2 காலபைரவர் கோயில்கள் மட்டுமே உள்ளன. 'ஒன்று காசி கங்கைக்கரையில். இரண்டாவது அதியமான் கோட்டையில்' உள்ள தட்சிண காசி காலபைரவர். காசிக்கு அடுத்தபடியாக இக்கோவில் போற்றப்படுவதால், தட்சிண காசி கால பைரவர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. அதனால் இந்தத் தலம் முக்தி க்ஷேத்திரம் என்றும் போற்றப்படுகிறது.
வள்ளல் அதியமான் கட்டிய கோவில்
ஔவைக்கு நெல்லிக்கனியைக் கொடுத்த, கடையெழு வள்ளல்களில் ஒருவராகப் போற்றப்படும் அதியமான்தான் இங்குள்ள தட்சிண காசி காலபைரவர் கோவிலைக் கட்டினார். அதியமான், தனக்கு பகை மன்னர்களால் ஆபத்து எதுவும் நேராமல் இருக்க தெய்வ சக்தி துணை இருந்தால் நல்லது என்றும், அந்த தெய்வ சக்தி, சிவபெருமானின் அவதாரங்களில் ஒன்றான, காவல் தெய்வமான கால பைரவர்தான் என்றும் நினைத்தார். அதனால் கால பைரவருக்கு ஓர் ஆலயம் ஏற்படுத்த விரும்பினார். காலபைரவர் சிலையை காசியிலிருந்து கொண்டு வந்து தான் கட்டிய கோவிலில் பிரதிஷ்டை செய்தார். கால பைரவரின் கருவறை விதானத்தில் நவகிரகங்களின் திருவடிவங்களையும் வடித்தார். நவகிரகங்களின் ஆற்றலும் கோயிலில் இருக்கவேண்டும் என்பதற்காகவும், கால பைரவரை மட்டுமே ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யக்கூடாது என்பதற்காகவும்தான் அதியமான் மன்னர் நவகிரகங்களை வடித்து வழிபட்டார் என்று சொல்லப்படுகிறது. 64 வகை பைரவர்களும் ஒரே சொரூபமாக, 'உன்மத்திர பைரவராக' அருள்பாலிக்கும் இவர் திருமேனியில் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் இருக்கின்றன. கோவில் உட்கூரையில் 9 நவகிரகங்களும் சக்கரம்போல் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
அதியமான் மன்னருக்கும், நாட்டு மக்களுக்கும் தட்சணகாசி காலபைரவர் குலதெய்வமாக விலங்கினார். அதியமான் கோட்டையின் சாவி கூட காலபைரவரின் கையில்தான் இருக்கும். தனது நாட்டைப் பாதுகாக்க அமைக்கப்பட்ட பைரவர் என்பதால், பைரவர் கையில் திரிசூலத்துடன் சேர்த்துப் போர் ஆயுதமான வாளும் வைத்து இன்றளவும் வணங்கி வருகின்றனர்.
பிரார்த்தனை
மேஷராசிகாரர்கள் இவர் சிரசினை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும், ரிஷபம் கழுத்து, மிதுனம் தோள், கடகம் மார்பு, சிம்மம் வயிறு, கன்னி குறி, துலாம் தொடை, விருச்சிகம் முட்டி, தனுசு மகரம் முட்டியின் கீழ்பகுதி, கும்பம் கனுக்கால், மீனம் பாதம் ஆகிய பகுதிகளை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும்.
தட்சிண காசி கால பைரவருக்கு பூசணி தீபம் ஏற்றி வழிபட்டால், எதிரிகளின் தொல்லைகள் அகல்வதுடன், காரியங்கள் சித்தியாகும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால பூஜை, மாதம்தோறும் வரும் தேய்பிறை அஷ்டமி அன்று காலை கணபதி, லட்சுமி, அஷ்டமி நாளில் அஷ்ட பைரவ ஹோமம் செய்து சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதும் குறிப்பிடத் தக்கது. மேலும் அன்று நள்ளிரவு 1,008 கிலோ மிளகாய் மற்றும் 108 கிலோ மிளகு கொண்டு சத்ரு சம்ஹார ஹோமமும் நடைபெறுகிறது.
பக்தர்களுக்கு தீர்த்தம் தெளிப்பு பிரசாதம்
பக்தர்களுக்கு தீர்த்தம் தெளிப்பது, திருச்சி குணசீலம் பெருமாள் கோயில் போல், இங்கேயும் நடைபெறுகிறது. இதனால், பில்லி, சூனியம் முதலான துஷ்ட சக்திகளின் தொல்லைகளில் இருந்து விடுபடலாம். எதிரிகளின் தொல்லை ஒழியும். எதிர்ப்புகள் யாவும் அகலும் என்பது ஐதீகம்.
தர்மபுரி மக்கள் மட்டுமல்ல, கர்நாடகா, கேரளா போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து தட்சிண காசி கால பைரவரை வழிபட்டு அருள் பெற்றுச் செல்கின்றனர்.

தென்குடித்திட்டை வசிட்டேசுவரர் கோயில்
தென்குடித்திட்டை - தமிழகத்தில் குரு பெயர்ச்சிக்கு சிறந்த தலம்
தஞ்சாவூருக்கு வடமேற்கே 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் தென்குடித்திட்டை. இறைவன் திருநாமம் வசிட்டேசுவரர். இறைவியின் திருநாமம் உலகநாயகியம்மை.
தமிழகத்தில் குரு பெயர்ச்சிக்கு சிறந்த தலம் என்றால் அது தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கோவில்தான். குருபகவான் இக்கோவிலில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில், தெற்கு நோக்கி தனி சன்னதியில், ராஜ குருவாக நின்ற நிலையில் அபய ஹஸ்த முத்திரையுடன் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். சனி பகவானுக்கு பரிகாரம் செய்ய உகந்த கோவிலிலாகவும் இது விளங்குகின்றது.
நவக்கிரகங்களில் மகத்தான சுப பலம் கொண்டவர் குரு. தான் இருக்கும் இடத்தை விடவும், தான் பார்க்கும் இடங்களை தன் பார்வை பலத்தால் சுபமாக்கும் தன்மை படைத்தவர். மேலும் ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்ரன் போன்ற கிரகங்களினால் வரும் தோஷங்களை, தமது பார்வை பலத்தினால் குறைக்கும் சக்தி படைத்தவர். எனவேதான் குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழி ஏற்பட்டது.
இவருக்கு இந்தத் தலத்தில் ஆண்டுதோறும் குரு பெயர்ச்சி விழாவும், அதனையொட்டி லட்சார்ச்சனையும் குருபரிகார ஹோமங்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இங்குள்ள குரு பகவானை வேண்டினால் கல்விச் செல்வம், பொருட்செல்வம், குழந்தைச் செல்வம் உள்பட அனைத்து செல்வங்களும் எளிதில் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வியாழ பகவானுக்குரிய நாளாகிய வியாழக்கிழமையில் விரதம் இருந்து பரிகாரம் செய்யலாம். நீராடி மஞ்சள் நிற ஆடை அணிந்து, புஷ்பராக மோதிரம் அணிந்து வழிபட வேண்டும். குருபகவானுக்கும் மஞ்சள் நிற ஆடையும், சரக்கொன்றை, முல்லை மலர் களும் கொண்டு அலங்கரிக்க வேண்டும். கடலைப்பொடி சாதம், வேர்க்கடலைச் சுண்டல், பருப்பு கலந்த இனிப்பு பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபட்ட பின்னர், மற்றவர்களுக்கு தானம் செய்தல் அவசியம். மஞ்சள் நிற ஆடையையும் தானம் செய்யலாம். கடலை, சர்க்கரை கலந்து குருவுக்கு நிவேதனம் செய்து குழந்தைகளுக்கு தானம் செய்வது சிறப்பு தரும். குரு பகவானின் அதி தேவதைகளான பிரம்மன், இந்திரன் ஆகியோரை வழிபட்டாலும் குரு மகிழ்ச்சி கொண்டு பலன்களை வழங்குவார். ஜாதகத்தில் குரு பலவீனமாகவோ, தோஷத்துடனோ இருந்தால், நவமி அன்று சண்டி ஹோமம் செய்வது சிறப்பான பலனை தரும்.
சந்தான பாக்கியம் அளிக்கும் தலமாக இத்திருத்தலம் விளங்குகிறது. மேலும் கடன் தொல்லை அகலவும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படவும் இங்கு வந்து வழிபடுகின்றனர்.

உத்தமர் சீலி வேணுகோபால சுவாமி (செங்கனிவாய் பெருமாள்) கோவில்
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அருளும் செங்கனிவாய் பெருமாள்
திருச்சி - கல்லணை செல்லும் சாலையில் 12 கி.மீ. தொலைவில் உள்ளது உத்தமர் சீலி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது வேணுகோபால சுவாமி (செங்கனிவாய் பெருமாள்) கோவில். தாயார் திருநாமம் அரவிந்தநாயகி.
கருவறையில் குழலூதும் நிலையில், திருவாயில் வெண்ணெயுடன் புல்லாங்குழல் ஏந்தி, புன்முறுவலுடன் புல்லாங்குழல் வாசிக்கும் நிலையில் ருக்மிணி – சத்யபாமா சமேதராக, வேணுகோபால சுவாமி நின்ற கோலத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கிறார். இவருக்கு 'செங்கனிவாய்ப் பெருமாள்' என்ற பெயரும் உண்டு. இந்த கோவிலை கட்டியவர் சோழ மன்னன் கரிகாலன். இந்தத் தலத்தில்தான் கரிகாலன், மைத்ரேய மகரிஷியிடம் கல்லணை கட்டுவதற்கான ரகசியங்களை உபதேசமாகப் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. சோழ மன்னர்களில் முதலாம் பராந்தக சோழனின் (907-953) நான்கு புதல்வர்களில் ஒருவர் பெயர் உத்தமசீலி. இவர் பெயராலேயே இவ்வூர் உத்தமசீலி என்றும் உத்தமசீலி சதுர்வேதி மங்கலம் என்றும் அழைக்கப்படுகிறது.
பிரார்த்தனை
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசியம் தரிசித்து வழிபட வேண்டிய கோவில் இது. இந்தக் கோவிலுக்கு வந்து வேண்டிக் கொண்டால், குழந்தை பாக்கியம் கிடைப்பதாகப் பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள். மேலும் வீடு கட்டும் பணியில் தடை ஏற்பட்டால், இங்கு வந்து வேணுகோபால சுவாமியை வேண்டிக் கொண்டு சென்றால், உடனே வீடு கட்டும் பணி நல்லபடியாக முடிவதும் பக்தர்கள் நம்பிக்கையாக இருக்கிறது.

தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி ஹரித்ரா விநாயகர் கோவில்
உடல் முழுவதும் பாம்புகள் பின்னப்பட்டுள்ள, தமிழகத்திலேயே உயரமான விநாயகர்
தஞ்சாவூர்-வல்லம் சாலையில் 7 கி.மீ. தொலைவில் உள்ள பிள்ளையார்பட்டி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது ஹரித்ரா விநாயகர் கோவில். காரைக்குடியில் ஒரு பிள்ளையார்பட்டி இருப்பதால் இக்கோவில் தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி ஹரித்ரா விநாயகர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. ஹரித்ரா என்றால் மங்களம் என்று பொருள்.
ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில், மாமன்னன் ராஜராஜ சோழனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மாமன்னன் ராஜராஜ சோழன் தஞ்சை பெருவுடையார் கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக, புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலில் உள்ள சிற்பக்கூடத்தில் இருந்து நந்தி மற்றும் விநாயகர் விக்கிரகங்களை யானை பூட்டிய தேரில் வைத்து எடுத்து வந்தான். அப்படி வரும் வழியில், விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்த தேரின் அச்சு முறிந்து, தேர் ஒரு இடத்தில் நின்றுவிட்டது. தேரின் அச்சு முறிந்ததால் விநாயகர் சிலையின் இடது பக்க தந்தம் உடைந்து விட்டது. இதனால் பின்னம் அடைந்த சிலை, தஞ்சை பெரிய கோவிலுக்கு வேண்டாம் என்று ராஜராஜ சோழன் முடிவு செய்து விட்டான். இருப்பினும் விநாயகர் சிலையை, அதே பகுதியில் பிரதிஷ்டை செய்து ஒரு ஆலயத்தை எழுப்பினான். அதுவே பிள்ளையார்பட்டி விநாயகர் ஆலயம் ஆகும். பெரிய பிள்ளையாரை தரிசிக்க, மிகவும் அடக்கமாக செல்ல வேண்டும் என்பதற்காக சிறிய நுழைவுவாசல் அமைக்கப்பட்டிருப்பது. பொதுவாக விநாயகருக்கு, எலிதான் வாகனமாக இருக்கும். ஆனால் இங்கு நந்தியே விநாயகரின் முன்புறம் வாகனமாக இருப்பது கவனிக்கத்தக்கது.
இங்குள்ள விநாயகர் சிலை, தமிழகத்திலேயே உயரமான சிலை என்று குறிப்பிடப்படுகிறது. ஒரே கல்லினால் வடிவமைக்கப்பட்ட இந்த விநாயகரின் உயரம் 11 அடி. தரை மட்டத்துக்கு கீழே அமைந்துள்ள அடிபீடம் 5 அடி கொண்டது. இந்த சிலையில் ஒரு தந்தம் உடைந்து காணப்படுகிறது. பிள்ளையாரின் முதுகு பகுதியில் ஸ்ரீ சக்கரம் அமைந்துள்ளது. அமர்ந்த கோலத்தில் உள்ள விநாயகரின், நாபி அருகில் பாம்பு ஒன்று படமெடுத்தபடி உள்ளது. அது விநாயகரின் உடலை சுற்றிய நிலையில் காணப்படுகிறது.
கேது நிவர்த்தி தலம்
ஹரித்ரா விநாயகரின் உடல் முழுவதும் பாம்புகள் பின்னப்பட்டுள்ளது. எனவே இந்த தலம் கேது நிவர்த்தி தலமாக கருதப்படுகிறது. திருமண தடை நீக்கவும், புத்திர பாக்கியம் கிடைக்கவும், தீராத நோயை தீர்க்கவும் உகந்த ஆலயம் என்பதால் ஏராளமான பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.

திருமங்கலக்குடி மங்களாம்பிகை உடனாய பிராணநாதேசுவரர் கோவில்
சரும நோய் தீர எருக்க இலையில் உப்பில்லாத தயிர் சாத நைவேத்தியம் படைக்கப்படும் தேவாரத்தலம்
கும்பகோணம் - மயிலாடுதுறை நெடுஞ்சாலையில், ஆடுதுறைக்கு வடக்கே இரண்டு கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருமங்கலகுடி. இறைவன் திருநாமம் பிராணநாதேசுவரர். இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை.
தலபுராணம்
இத்தலம் ஒரு சிறந்த குஷ்டரோக நிவர்த்தித் தலம் ஆகும். ஒரு முறை காலமா முனிவர் கிரக மாற்றத்தால் தனக்கு தொழு நோய் ஏற்படப் போவதை அறிந்து, நவக்கிரகங்களை வேண்ட, நவக்கிரகங்கள் அவருக்கு அருள் புரிந்தன. இதையறிந்த பிரம்மன் கோபம் கொண்டு முனிவருக்கு வரவிருந்த நோயை நவக்கிரகங்களுக்கு உண்டாகும்படி சபித்து விட்டார். பூலோகம் வந்த நவக்கிரகங்கள் சிவனை நோக்கித் தவமிருந்து சாப விமோசனம் பெற்றனர். நவக்கிரகங்கள் தங்களுக்குத் தொழுநோய் ஏற்படாமலிருக்க ஸ்தாபித்த லிங்கத்தைக் கொண்டு எழுந்த ஆலயம் திருமங்கலக்குடி பிராணநாதேசுவரர் ஆலயம்.
நவக்கிரகங்கள் தங்களின் சாபம் நீங்க, வெள்ளெருக்கு இலையில் தயிர்சாதம் படைத்து இறைவனை வழிபட்டதாக தல புராணம் சொல்கிறது. எனவே இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் உச்சிகால பூஜையின் போது, உப்பில்லாத தயிர் சாதம் சுவாமிக்கு நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. பித்ரு தோஷம் உள்ளவர்கள், முன்னோர்களுக்கு முறையாக தர்ப்பணம் செய்யாதவர்கள், இத்தல இறைவனுக்கு தயிர் சாதம் நைவேத்தியமாக படைத்து வழிபடலாம். இங்கு நவக்கிரகங்களுக்கு என்று தனிச் சன்னிதி கிடையாது. இங்கிருந்து சற்று தூரத்தில் நவக்கிரகங்கள் அனைத்தும் அருளும், சூரியனார் கோவில் அமைந்திருக்கிறது. ஒரே ஆலயம்தான் இப்படி இரண்டாக பிரிந்திருப்பதாகவும், அதில் பிராணநாதேசுவரர் கோவில்தான் பிரதானமானது என்றும் சொல்லப்படுகிறது. பிராணநாதேசுவரரை வழிபட்ட பிறகுதான், சூரியனார் கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.
சரும நோய் தீர செய்யப்படும் பரிகாரம்
உடலில் சரும வியாதியுள்ளவர்கள் இங்கு வந்து கார்த்திகை முதல் ஞாயிறு தொடங்கி 11 ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள வெள்ளெருக்கு இலையில் தயிர்சாதம் சுவாமிக்கு நிவேதனம் செய்து சாப்பிட்டு வந்தால் வியாதியிலிருந்து நீங்கப்பெருவர் என்பது வரலாறு.
கோடங்கிப்பட்டி சித்திரபுத்திர நாயனார் கோவில்
அசுவினி,மகம்,மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய சித்திரகுப்தன் தலம்
தேனி - போடிநாயக்கனூர் சாலையில், சுமார் 9 கி.மீ. தூரத்திலுள்ள கோடங்கிபட்டி என்னும் ஊரில் அமைந்துள்ளது, 500 ஆண்டுகள் பழமையான சித்திரபுத்திர நாயனார் கோவில். தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தையும், கோடங்கிபட்டியையும் தவிர வேறு எந்த தலத்திலும் சித்திரகுப்தனுக்கு என்று தனி கோவில் கிடையாது.
பூலோகத்தில் மனிதர்கள் செய்யும் பாவ, தர்மங்கள் குறித்த முழு விபரங்களையும் பதிவு செய்துவைப்பது சித்திரகுப்தன். ஜீவனின் மரண காலத்தில் சித்திரகுப்தன் கொடுக்கும் பாவ, புண்ணியக் கணக்கின் முடிவை வைத்தே எமதர்மன் ஜீவனுக்கு தண்டனை அளிப்பதும், பிரம்மா அதன் தலையில் எழுதுவதும் அமையும். ஆகவே சித்திரகுப்தரை வேண்டிக்கொள்வது மிகவும் அவசியமாகிறது.
சித்திரகுப்தன் காமதேனுவின் மகனாக சித்திரை மாதத்தில், சித்திரை நட்சத்திரத்தில், பௌர்ணமி தினத்தன்று பிறந்தார். இதனாலும், சக்திதேவி வரைந்த சித்திரத்தில் இருந்து தோன்றியதாலும் சித்திரபுத்திரன் என்று அழைக்க்கப்படுகிறார். இருப்பினும், சித்திரகுப்தன் என்ற பெயரே பிரசித்தி பெற்றுள்ளது.
சித்திரகுப்தர் பிறந்த நாளான சித்ரா பௌர்ணமியன்று எண்ணெய் தேய்த்து குளித்தால் அவர் நமது பாவங்களை நீக்குவார் என்பது நம்பிக்கை. கோடாங்கிபட்டி சித்திரபுத்திரநாயனார் கோவிலில் இவரது மனைவியான பிரபாவதிக்கு சன்னதி உள்ளது. பசுவின் கர்ப்பத்தில் இருந்து இவர் பிறந்ததால் பசும்பால், பசுந்தயிர், பசுநெய் உள்ளிட்டவற்றை முற்றிலுமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சித்திராபவுர்ணமியன்று சித்திரகுப்த மந்திரம் சொல்லி வழிபட அவர் நமது இல்லத்தில் குடியேறி செழிப்பான வாழ்க்கை அமைய வழிவகுப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
நவகிரகங்களில் கேதுவுக்கு சித்திரகுப்தன்தான் அதிபதியாக உள்ளார். எனவே, கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், இவரை வழிபட்டால், தோஷம் நீங்கும். அசுவினி,மகம்,மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இவரை வழிபட நற்பலன்கள் அடைவார்கள். சித்ரா பௌர்ணமி அன்று பெண்கள் விரதமிருந்து, உப்பில்லாத உணவு உண்டு வேண்டிக்கொள்வதால் ஆயுள் நீளும் என்பது நம்பிக்கை. சித்திரகுப்தனிடம் மலையளவு பாவத்தை கடுகளவாகவும், கடுகளவு புண்ணியத்தை மலையளவாகவும் எழுதிக்கொள்ளும்படி பிரார்த்திப்பார்கள்.

கள்ளழகர் கோவில்
மதுரை சித்திரை திருவிழா - கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம்
மதுரை சித்திரை திருவிழாவில், சித்திரா பௌர்ணமி தினத்தில் கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது. கள்ளழகரை காண பல லட்சம் மக்கள் வைகை ஆற்றங்கரையில் திரள்வார்கள்.
16ஆம் நுாற்றாண்டு வரை, கள்ளழகர் அழகர்கோவிலில் இருந்து புறப்பட்டு அலங்காநல்லுார் சென்று அங்கே அலங்காரம் செய்து கொண்டு தேனுார் ஆகிய ஊர்கள் வழியாக சோழவந்தான் வந்து அங்குள்ள வைகையாற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பாராம். சைவம், வைணவ சமயங்களை ஒன்று சேர்க்கும் விதத்தில் திருமலை நாயக்கர் இந்த விழாவை மதுரைக்கு மாற்றியமைத்தாராம். மாசி மாதத்தில் நடைபெற்ற மீனாட்சி திருக்கல்யாணத்தை சித்திரை மாதத்திற்கு மாற்றினாராம் திருமலை நாயக்கர். தங்கை மீனாட்சி கல்யாணத்தைக் காண சீர்வரிசைகளுடன் மதுரைக்கு புறப்பட்டு வரும் அழகர், மீனாட்சி திருமணம் நடந்து முடிந்து விட்டதால் சித்ரா பௌர்ணமியன்று வைகை ஆற்றில் இறங்கி பின்னர் தன் கோவிலுக்கு திரும்பி விடுவதாக வழக்கம்.
அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக உடுத்தும் ஆடைகள், அணியும் தங்க நகைகள் அனைத்தும் ஒரு பெரிய மரப்பெட்டியில் இருக்கும். இந்தப் பெட்டிக்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதா, என பல வண்ணங்களில் பட்டுப்புடவைகள் இருக்கும். அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது, கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வெள்ளை மற்றும் நீலப்பட்டு கட்டி வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும். மஞ்சள்பட்டு கட்டிவந்தால், அந்த வருடத்தில் மங்களகர நிகழ்வுகள் நடக்கும். அழகர் சிவப்புப் பட்டு கட்டிவந்தால் பேரழிவு ஏற்படும் என்கின்றனர். அந்த வருடம் போதிய விளைச்சலுமிருக்காது. நாட்டில் அமைதியும் இருக்காதாம். பச்சைப்பட்டு உடுத்தி வந்தால் நாடு செழிக்க நல்ல மழை பெய்யும் என்பது நம்பிக்கை.
இந்த ஆண்டு, 05.05.2023 வெள்ளிக்கிழமையன்று தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி வந்த கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்ற பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், தண்ணீர் பீய்ச்சியடித்து கள்ளழகரை குளிர்வித்திடும் தீர்த்தவாரி வழிபாடுகளை மேற்கொண்டனர்.

திருமங்கலக்குடி மங்களாம்பிகை உடனாய பிராணநாதேஸ்வரர் கோவில்
மஞ்சள் சரடு கையில் ஏந்தி மாங்கல்ய பாக்கியம் அருளும் மங்களாம்பிகை
கும்பகோணத்தில் - மயிலாடுதுறை சாலையில் அமைந்துள்ள ஆடுதுறையில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ள தேவாரத்தலம் திருமங்கலகுடி. இறைவன் திருநாமம் பிராணநாதேஸ்வரர். இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை.
மந்திரியின் மனைவிக்கு மாங்கல்ய பாக்கியம் அருளிய மங்களாம்பிகை
முதலாம் குலோத்துங்கச் சோழனிடம் மந்திரியாக இருந்தவர் அலைவாணர். இவர் மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு, மன்னனின் அனுமதியைப் பெறாமல், திருமங்கலக்குடியில் சிவன் கோவிலைக் கட்டினார். இதை அறிந்த மன்னன், மந்திரியை சிறைபிடித்து, சிரச்சேதம் செய்யும்படி உத்தரவிட்டார். தன்னை சிரச்சேதம் செய்தாலும், உடலை திருமங்கலக்குடியிலேயே தகனம் செய்யும்படி மன்னனுக்கு வேண்டுகோள் வைத்திருந்தார், அலைவாணர். அதன்படி சிரச்சேதம் செய்யப்பட்ட அவரது உடல், திருமங்கலக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது மந்திரியின் மனைவி, தன் கணவர் கட்டமைத்த கோவிலில் வீற்றிருக்கும் அன்னையிடம் சென்று, தன் கணவரின் உயிரைத் திரும்பத் தருமாறு வேண்டினாள். அந்த நேரத்தில் அம்மன் கரு வறையில் இருந்து, 'உன் வேண்டுதல் பலிக்கும்' என்று அசரீரி கேட்டது. அதன்படியே மந்திரியின் தலை ஒன்றிணைந்து, உயிர் வரப் பெற்றார். உயிர்பெற்றதும் கோவிலுக்குச் சென்று சிவலிங்கத்தை வழிபட்டார். மந்திரிக்கு உயிர் அளித்த காரணத்தால், இறைவன்- பிராணநாதேஸ்வரர் என்று திருநாமம் பெற்றார். மந்திரியின் மனைவிக்கு மாங்கல்ய பாக்கியம் அருளியதால், அம்பாள்- மங்காளம்பிகை என்று அழைக்கப்பட்டாள்.
தீர்க்க சுமங்கலியாக வாழ வரமருளும் மங்களாம்பிகை
அம்பாள் மங்களாம்பிகை தனிச் சன்னிதியில் தெற்கு நோக்கி வீற்றிருக்கிறார். இந்த அம்பிகை மிகச் சிறந்த வரப்பிரசாதியாக திகழ்கிறாள். அம்பாளின் வலது கையில் எப்போதும் தாலிக்கயிறு இருக்கும். அம்பாளை வழிபடும் பெண்களுக்கு, தாலிக்கயிறு பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது. இதை வாங்கிக்கொள்ளும் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். திருமணம் நடைபெற்ற பெண்கள், தீர்க்க சுமங்கலியாக வாழ்வார்கள் என்பது ஐதீகம். சுமங்கலிப்பெண்கள், அம்பிகையிடம் இருந்து தாலியை வாங்கி தங்கள் கழுத்தில் அணிந்து கொண்டு, ஏற்கனவே அணிந்திருக்கும் தாலியை அம்பாள் பாதத்தில் வைத்து பூஜை செய்கின்றனர். இதனால் பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
ஜாதகங்களில் சொல்லப்படும் தோஷங்களில் கடுமையானது மாங்கல்ய தோஷம். அந்த தோஷத்தைப் போக்கி வளமான வாழ்வை அளிப்பவர் இந்த மங்களாம்பிகை. அம்பிகையை தீபங்கள் ஏற்றி வழிபடுவது, 11 ஞாயிற்றுக் கிழமை வழிபடுவது, ஏழு வெள்ளிக்கிழமை வழிபடுவது என்று பலப்பல பிரார்த்தனை முறைகள் உள்ளன. எந்த வகையான வழிபாடு மேற்கொண்டாலும் அதற்கான பலன் கட்டாயம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
மங்களாம்பிகையின் நவராத்திரி அலங்காரம்
நவராத்திரியின்போது கோயில்களில் அம்பாள் உற்சவர் சிலைக்கு ஒவ்வொருநாளும் ஒவ்வொரு அலங்காரங்கள்செய்வார்கள். ஆனால், இங்கு மூலஸ்தானத்தில் இருக்கும் மங்களாம்பிகைக்கே அலங்காரம் செய்யப்படுகிறது. அப்போது இவளது சிலைக்கு வஸ்திரம், ஆபரணங்கள் என எதுவும் சாத்தப்படாமல் சந்தனக்காப்பு மட்டும் செய்யப்படுகிறது. அந்த சந்தனத்திலேயே பட்டுத் துணிகளுக்கு பயன்படுத்தப்படும் வண்ண சாயங்களை சேர்த்து வஸ்திரம் மற்றும் ஆபரணங்கள் அணிந்ததைப்போல அலங்கரிக்கின்றனர். சந்தனத்திலேயே, இவ்வாறு அம்பிகை சர்வ அலங்காரத்துடன் காட்சி தருவதை காண கண் கோடி வேண்டும்.