
தேரழுந்தூர் தேவாதிராஜன் பெருமாள் கோவில்
பெருமாளின் அருகில் இருந்து பிரகலாதனும் கருடாழ்வாரும் காட்சி தரும் திவ்ய தேசம்
மயிலாடுதுறையிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள குத்தாலம் என்ற ஊரில் இருந்து சுமார் 3 கி.மீ. தூரத்தில் உள்ள திவ்ய தேசம், தேரழுந்தூர். இத்தலத்து மூலவர் தேவாதி ராஜப் பெருமாள், சாளக்கிராமத்தில் அமைந்த 13 அடி உயர திருமேனியுடன் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். பெருமாளுக்கு இடது புறம் கருடாழ்வாரும். வலதுபுறம் பிரகலாதனும் இருக்கிறார்கள். உக்கிரமாகக் காட்சியளித்த பெருமாளிடம் பிரகலாதன், சாந்த சொரூபியாக, கண்ணன் உருவில் காட்சி தர வேண்டுகோள் வைத்ததைத் தொடர்ந்து, இத்தலத்தில் பிரகலாதனை அருகில் வைத்துக் கொண்டு பெருமாள், கண்ணனாக சாந்த சொரூபியாக காட்சி அளிக்கிறார். இத்தலத்தில் மட்டும்தான் பிரகலாதன் கருவறையில் பெருமாள் அருகில் இருந்து காட்சி தருகிறார்.
இந்தக் கோவிலில் கருட விமானம் உள்ளது மற்றொரு சிறப்பாகும். பொதுவாக எல்லா பெருமாள் கோவில்களிலும், சுவாமியின் எதிரே உள்ள கருடாழ்வார், இந்த தலத்தில் மட்டும் சுவாமிக்கு விமானம் கொடுத்து சுவாமிக்கு பக்கத்திலேயே அருள் பாலிக்கிறார். இப்படி பிரகலாதனும் கருடாழ்வாரும் பெருமாளின் அருகில் இருந்து காட்சி தருவது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.
ஆமருவியப்பன் என்னும் திருநாமம் அமைந்த புராணம்
இத்தலத்து உற்சவ பெருமாளின் திருநாமம் ஆமருவியப்பன். ஆமருவியப்பன் என்றால் பசுவை மேய்ப்பவன் என்று பொருள். ஒருமுறை, மகாவிஷ்ணுவும் சிவபெருமானும் சொக்கட்டான் ஆடினார்கள். இந்த ஆட்டத்துக்கு நடுவராக பார்வதிதேவியை நியமித்தார்கள். காய் உருட்டும் போது, சகோதரனான பெருமாளுக்கு சாதகமாக பார்வதிதேவி தீர்ப்பு கூற, அதனால் கோபமுற்ற சிவபெருமான், பார்வதிதேவியை பூவுலகில் பசுவாக அவதாரம் எடுக்க சாபமிட்டார். அதன்படி உமையவள் பசுவானாள். இதைக் கண்டு கலங்கிய சரஸ்வதிதேவியும் லக்ஷ்மிதேவியும் உமையவளுக்குத் துணையாக இருக்க முடிவு செய்து, பசுவாக மாறினார்கள். மூவரும் பசுவாக, பூலோகத்தில் இருந்தபடி, சிவனாரையே நினைத்து வேண்டினார்கள். அவர்களுக்கு மேய்ப்பராக பெருமாள் உடனிருந்து காத்தார். அதனால் இந்தத் தலத்துப் பெருமாளுக்கு 'ஆமருவியப்பன்' என்னும் திருநாமம் அமைந்தது என்கிறது தல புராணம்.
தேரழுந்தூர் என்று ஊர் பெயர் வந்ததன் பின்னணி
இத்தலத்தில் இறைவன் மாடு மேய்த்துக்கொண்டு இருந்த போது உபரிசரவசு என்ற தேவலோக அரசன் ஆகாய மார்க்கமாக தேரில் சென்றான். தன் தேரின் நிழல் , எதன் மீது விழுந்தாலும் அவை கருகிவிடும் வரம் பெற்றவன் அவன். இத்தலத்தில் பெருமாள் மாடு மேய்த்துக் கொண்டு இருந்த போது, அந்தத் தேரின் நிழல்பட்டு, பூமியில் மேய்ந்து கொண்டிருந்த பசுக்களுக்கு ஆபத்து ஏற்பட்டது. இதனால் இறைவன் பசுக்களைக் காப்பாற்ற அந்தத் தேரை தடுத்து நிறுத்தி, பூமியில் அழுத்தினார் . இவ்வாறு தேர் பூமியில் அழுந்திய ஊரே தேரழுந்தூர் என்று அழைக்கப்படுகிறது.
கவிச் சக்கரவர்த்தி கம்பர் இத்தலத்தில் பிறந்தவர்.
பிரார்த்தனை
இத்தலத்து தேவாதி ராஜபெருமாளை வணங்கினால், காணாமல் போனவர்கள் வீடு திரும்பவும், தொலைந்து போன பொருட்கள் மீண்டும் கிடைக்கவும், மேல் அதிகாரிகளின் அராஜகத்தில் இருந்து விடுபடவும், திருமணத்தடை நீங்கவும் வழி பிறக்கின்றது.

அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில்
சங்கு சக்கரம் ஏந்திய முருகப்பெருமானின் அபூர்வத் தோற்றம்
கும்பகோணம் திருவாரூர் சாலையில் சுமார் ஏழு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் அழகாபுத்தூர். இத்தலத்து இறைவன் திருநாமம் படிக்காசுநாதர். இறைவியின் திருநாமம் அழகம்மை. முருகப்பெருமான் இத்தலத்தில் சங்கு சக்கரத்துடன் காட்சியளிக்கிறார்.
ஒருசமயம் அசுரர்களின் தொல்லை அதிகரிக்கவே, தேவர்கள் தங்களை காக்கும்படி சிவனிடம் வேண்டினர். சிவன், அசுரர்களை அழிக்க முருகனை அனுப்பினார். அப்போது சிவனும், தேவர்களும் அவருக்கு பல ஆயுதங்களை கொடுத்தனர். திருமால் முருகனுக்கு தனது சங்கு, சக்கரத்தை கொடுத்தார். ஆயுதங்களுடன் சென்ற முருகன், அசுரர்களை சம்ஹாரம் செய்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்குள்ள முருகன் கேடயம், வில், அம்பு, சாட்டை, கத்தி, சூலாயுதம், வஜ்ரம் மற்றும் சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார். சங்கு, சக்கரமே இவரது பிரதான ஆயுதமாக இருக்கிறது. இந்திர மயில் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் இவரை, கல்யாணசுந்தர சண்முக சுப்பிரமணியர் என்று அழைக்கிறார்கள். இவரது திருவாசி ஓம் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. வள்ளி தெய்வானை உடனிருக்கின்றனர். அருகில் மகாலட்சுமி சன்னதி இருக்கிறது. திருமாலின் ஆயுதங்களுடன் முருகனையும், அருகில் மகாலட்சுமியையும் ஒரே சமயத்தில் தரிசிப்பது அபூர்வம்.
திருமண, புத்திர தோஷம் உடையவர்கள் இத்தல முருகனுக்கு பால் பாயாசம் நைவேத்யம் படைத்து, பூஜை செய்து வழிபடுகிறார்கள். இதனால் இந்த தோஷங்கள் நீங்குவதாக ஐதீகம்.

தேவதானம் ரங்கநாதர் கோவில்
வட ஸ்ரீரங்கம் என்று போற்றப்படும் தேவதானம் ரங்கநாதர் கோவில்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது தேவதானம் கிராமம். பெருமாள் செய்த சேவைக்கு நன்றி செய்யும் விதமாக தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அளித்த தானம் ஆகையால் இவ்விடம் , தேவதானம் என்று பெயர் பெற்றது.
இக்கோவில் வட ஸ்ரீரங்கம் என்று போற்றப்படுகிறது. ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதரை விட தேவதானம் பெருமாள் அரை அடி நீளம் அதிகமானவர். இங்குள்ள பெருமாள் சாளக்கிராம கல்லால் ஆனவர். பெருமாள் ,பதினெட்டரை அடி நீளத்தில் 5 அடி உயரத்தில், ஐந்து தலை கொண்ட ஆதிசேஷன் மீது, மரக்காலைத் தலைக்கு வைத்து வடக்கே திருமுகமும், , தெற்கே திருவடியும் வைத்த சயன கோலத்தில் காட்சி தருகிறார் . இவரின் நாபியின் மீது பிரம்மா உள்ளார் . பெருமாளின் பாதத்தின் அருகில் ஸ்ரீதேவி ,பூதேவி தாயார் இருவரும் அமர்ந்து களைப்பில் இருக்கும் பெருமாளுக்கு சேவை செய்கிறார்கள் . அவரின் திருவடியை சேவித்தவாறு தும்புரு மகரிஷியும் ,பக்த ஆஞ்சநேயரும் காட்சி தருகின்றனர் . இந்த ரங்கநாதர் திருமேனி முழுதும் சாளக்ராம கற்களால் வடித்த சுதை விக்ரகம் என்பதால் அபிஷேகம் இல்லை. ஆண்டுக்கு ஒரு முறை தைலக் காப்பு மட்டும் சாத்தப்படும்.
சாளுக்கிய மன்னனுக்கு விவசாயியாக காட்சியளித்த பெருமாள்
ஆயிரம் வருடம் பழமையான இக்கோவில் சாளுக்கிய மன்னரால் கட்டப்பட்டது. சாளுக்கிய மன்னன் ஒருவன் தென் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தான். ஸ்ரீரங்கத்தை அடைந்த மன்னன், அங்கிருந்த ரங்கநாதர் ஆலயத்திற்கு சென்று பெருமாளைத் தரிசித்தான். பெருமாளின் பேரழகில் அப்படியே சொக்கிப் போய் விட்டான். அப்போது தன் நாட்டிலும் இதே போன்ற பேரழகுடன் பெருமாளைப் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது.
சாளுக்கிய மன்னன் தேவதானம் கிராமத்திற்கு வந்தபோது, அந்த பகுதி முழுவதும் ஸ்ரீரங்கத்தைப் போன்றே நெல் வயல்கள் நிரம்பி பசுமை போர்த்தி காட்சி அளித்ததைக் கண்டான். அப்போது ஓரிடத்தில் விவசாயி ஒருவர் வயல் களத்தில் குவிக்கப்பட்டிருந்த நெல்மணிகளை ஒரு மரக்கால் கொண்டு அளந்து கொண்டிருந்தார். மன்னர் அவரைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அந்த விவசாயி மறைத்துவிட்டார். சுற்றும் முற்றும் பார்த்த மன்னன் கண்களில் ஓர் இடத்தில் அந்த விவசாயி மரக்காலை தன் தலைக்கு வைத்தபடி படுத்திருந்தார். அருகில் சென்ற மன்னனுக்கு அந்த விவசாயி பெருமாளாகக் காட்சி கொடுத்ததுடன், அந்த இடத்திலேயே ஆலயம் கட்ட வேண்டும் என்றும், அந்த ஆலயம் ஸ்ரீரங்கம் போன்று பிரசித்தி பெற்று விளங்கும் என்றும் கூறினார்.
சாளுக்கிய மன்னன், பெருமாளின் திருவுருவம் வடிக்கப் பொருத்தமான கல்லைத் தேடிக்கொண்டே தன் படையினருடன் வட இந்தியாவுக்குச் சென்றான். இமயமலையின் அடிவாரத்தில் பிரம்மாண்டமான ஒரு கல்லைப் பார்த்தான். அந்தக் கல்லில் பெருமாளின் திரு உருவத்தை வடிக்க நினைத்து, அந்தக் கல்லை வீரர்களைத் தூக்கச் செய்து தென்னிந்தியாவுக்குப் புறப்பட்டான். வரும் வழியில் வீரர்கள் எடுத்து வந்த கல் தவறி கங்கையில் விழுந்து விட்டது. ஆனால் கல் மூழ்காமல் மிதந்தது. ஆற்றில் விழுந்த கல்லை வீரர்கள் திரும்ப எடுத்துக் கொண்டு புறப்பட்டனர். ஆற்றில் விழுந்து முழுகாத அந்த கல் பற்றி ஆன்மீகப் பெரியோர்களிடம் கேட்டான் மன்னன். அது சாளக்கிராமக் கல் என்றும், அந்தக் கல்லில் இறைவனின் திரு உருவத்தை வடித்து பிரதிஷ்டை செய்து வழிபட்டால் அந்த பகுதி முழுவதும் செழிப்பாக இருக்கும் என்றும் கூறினர். பின்னர் தேவதானம் திரும்பிய மன்னன், இறைவன் தனக்குக் காட்சி கொடுத்த இடத்தில் ஆலயத்தை நிர்மாணித்தான். ஸ்ரீரங்கத்தில் உள்ளது போல் பெருமாள் பெரியதாக உள்ளதால், இத்தலம் வட ஸ்ரீரங்கம் என்று அழைக்கப்படுகிறது .
பலன்கள்
இந்த ஆலயத்தை சுக்ர ஓரையில் வழிபடுவது மிகவும் விசேஷம். ரங்கநாத பெருமாளை அமாவாசை மற்றும் ஏழு அல்லது பதினோரு வெள்ளிக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பணக்கஷ்டம், திருமணத்தடை போன்றவை தீர்ந்து செல்வச் செழிப்பு, மகிழ்ச்சியான இல்லறம், குழந்தை பாக்கியம் போன்ற பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கோலாப்பூர் மகாலக்ஷ்மி கோவில்
சகல செல்வங்களையும் தந்தருளும் மகாலட்சுமி
கோலாப்பூர் மகாலட்சுமி கோவில், மகாராட்டிர மாநிலத்தில் கோலாப்பூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. கரவீரபுரம் என்பது இந்த தலத்தின் முந்தைய பெயர். இந்த இடத்தில் மக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த கோலாசுரனை, தேவி மகாலட்சுமியாக வந்து அழித்தாள். அவன் இறக்கும் தருவாயில், இந்த இடம் தன் பெயரால் அழைக்கப்பட வேண்டும் என்று விண்ணப்பிக்க அதன்படி கோலாப்பூர் ஆயிற்றாம். லக்ஷ்மி அஷ்டோத்திரத்தில் ‘நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி..’ என்று குறிப்பிடப்படுவது, இத்தருணத்தில் நினைவு கூறத்தக்கது. பாரதத்தில் பற்பல இடங்களில் நிறுவியுள்ள சக்தி பீடங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த சக்தி பீடம் இந்துக்களுக்கு மிகவும் சிறப்பு பெற்ற ஆறு சக்தி பீடங்களில் ஒன்றாகும்.
இந்த இடத்தின் சிறப்பு, இங்கே ஒருவன் வந்து மகாலட்சுமியை வழிபடுவதால் அவன், அவனுடைய விருப்பங்கள் அனைத்தையும் துறந்து, இறைவனடி அடைந்து முக்தி பெறுவான் அல்லது அவனது அனைத்து விருப்பங்களையும் அன்னை மகாலட்சுமி நிறைவேற்றி வைப்பாள் என்று இந்துக்கள் நம்புவதே ஆகும்.
இக்கோவில் கன்னடத்து சாளுக்கிய மன்னர்களால் சுமார் 1300 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது.
கருவறையில் மகாலட்சுமி, நான்கு கரங்களுடன், மகுடம் தரித்து, மூன்று அடி உயரத்தில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள்.மகாலட்சுமியின் பின்புறம்,அவள் வாகனமான சிங்கத்தின் உருவச்சிலை இருக்கிறது. மகாலட்சுமியின் மகுடத்தில் சேஷ நாகத்தின்(இறைவன் விஷ்ணுவின் நாகப் பாம்பு) உருவமும் செதுக்கப் பெற்றுள்ளது. மகாலட்சுமியின் நான்கு கரங்களில், கீழ் வலது கரத்தில் ஒரு கிச்சிலி பழத்தையும், வலது மேல் கரத்தில் கௌமோதகி என்ற தண்டாயுதம் ஒன்றையும், இடது மேல் கரத்தில் கேடகம் என்ற கவசத்தையும் மற்றும் கீழ் இடதுகரத்தில் பானபாத்திரம் என்ற கிண்ணத்தையும் வைத்துக் காணப்படுகிறாள்.
மகாலட்சுமியை சூரிய பகவான் வழிபடும் கிரண் உற்சவம்
பொதுவாக கோவில்களில் மூலவர் வடக்கு அல்லது கிழக்கு முகமாக அமைந்திருக்கும். இந்தக் கோவிலில், தேவியின் உருவச்சிலை மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. மேற்கு சுவர்ப்பகுதியில் ஒரு திறந்த ஜன்னல் அமைந்துள்ளது, அதன் வழியாக கதிரவனின் ஒளிக்கீற்று வருடத்தில் இரு முறை தேவியின் பாதங்களை தொட்டு திருமுகத்தை பளிச்சிடும். சூரியனின் ஒளிக் கீற்றுக்கள் இந்த ஜன்னல் வழியாக தேவியின் பாதங்களை தொட்டு வணங்கி, பின்னர் மறைவது ஒரு கண்கொள்ளாக் காட்சியாகும். அம்பாளின், பாதம், மார்பு, திருமுகம் ஆகிய மூன்று பகுதிகளிலும் சூரியனின் ஒளிக் கீற்றுக்கள் விழுவது, இங்கு கிரனோத்ஸவ்('கிரண் உற்சவம்') என்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் 31 ஜனவரி, 1 பிப்ரவரி, 2 பிப்ரவரி, 9 நவம்பர், 10 நவம்பர், 11 நவம்பர் ஆகிய நாட்களில், இந்த விழா கொண்டாடுகிறார்கள். ஜனவரி 31 மற்றும் நவம்பர் 9 ஆம் தேதிகளில் சூரியனின் ஒளி, மகாலட்சுமி தாயாரின் பாதங்களில் படுகிறது. பிப்ரவரி 1 மற்றும் நவம்பர் 10 தேதிகளில் சூரியனின் கதிர்கள் மகாலட்சுமி தாயாரின் மார்பின் மீது படுகின்றன. பிப்ரவரி 2 மற்றும் நவம்பர் 11 தேதிகளில் தாயாரின் முழு உருவத்தின் மீதும் சூரியனின் ஒளி கதிர்கள் விழுகின்றன. மகாலட்சுமி விக்ரகத்தின் மீது சூரியனின் ஒளி படும் போது அவரை வணங்குவது மிகுந்த நன்மை தரும்.
சகல செல்வங்களையும் தரும் இக்கோவிலுக்கு சென்று வந்தால், வாழ்வில் சுபிட்சம் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பெருங்குடி அகத்தீஸ்வரர் கோவில்
செவ்வாய், சனி தோஷங்களை நீக்கும் பரிகார தலம்
திருச்சியிலிருந்து வயலூர் செல்லும் வழியில் சோமரசன் பேட்டைக்கு அடுத்து வலது பக்கமாகப் பிரிந்து செல்லும் சாலையில் அமைந்துள்ளது பெருங்குடி கிராமம். அகத்திய முனிவர் வழிபட்டதால் 'அகத்தீஸ்வரர்' எனும் திருப் பெயர் ஏற்று சிவபெருமான் அருள்பாலிக்கும் எண்ணற்ற சிவத்தலங்கள் தென்னகத்தில் உண்டு. அவற்றில் ஒன்று பெருங்குடி. இறைவியின் திருநாமம் சிவகாமசுந்தரி.
இத்தலத்தில், அகத்தீஸ்வரர் சன்னதியின் வலது பக்கத்தில் முருகப்பெருமான் தெய்வானையுடன் அருள்புரிகிறார். வள்ளி இங்கு அரூபமாக காட்சி தருகிறார். வள்ளியை மணம் புரிவதற்கு முன், முருகப்பெருமான் தெய்வானையுடன் காட்சியளித்தது இக்கோவிலில்தான். அருணகிரிநாதர் இத்தலத்து முருகப்பெருமானை தனது திருப்புகழில் போற்றிப் பாடியுள்ளார். செவ்வாய் கிரகத்திற்கு அதிபதியான முருகப்பெருமானுக்கு நேர் எதிரே ஈசானிய மூலையில், சனீஸ்வர பகவான் தனியே எழுந்தருளியிருக்கிறார். இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக்கொள்வதால், செவ்வாய் தோஷம், சனி தோஷம் இருப்பவர்களுக்கு இந்தக் கோயில் சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது. அதனால் செவ்வாய், சனிக்கிழமைகளில் இத்தலத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
வாகனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தீர்த்து அருளும் சனீஸ்வர பகவான்
இத்தலத்து சனீஸ்வர பகவான், திருநள்ளாறு சனீஸ்வர பகவானுக்கு நிகரான வல்லமை உடையவர் என்று அகத்திய முனிவர் குறிப்பிட்டிருக்கிறார். சனீஸ்வர பகவான் தனது காக வாகனத்தை இழந்தபோது இத்தலத்து அம்மனை வழிபட்டு தங்க காக வாகனத்தைப் பெற்றார் என்று தல புராணம் கூறுகிறது. அதனால் புதிய வாகனம் வாங்குவோர், வாகனப் பிரச்சனை உள்ளவர்கள், வாகனத்தை இழந்தவர்கள் போன்ற பலரும் இங்கு வந்து சனீஸ்வர பகவானையும், சிவகாமசுந்தரி அம்மனையும் வழிபடுகிறார்கள்.

அரியமங்கலம் வைத்தியநாத சுவாமி கோவில்
சிறுமி ரூபத்தில் வந்து ரயில் விபத்தை தடுத்த தையல்நாயகி
திருச்சி - தஞ்சாவூர் சாலையில் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அரியமங்கலம். இத்தலத்து இறைவனின் திருநாமம் வைத்தியநாத சுவாமி. இறைவியின் திருநாமம் தையல்நாயகி. கருவறையில் நின்ற கோலத்தில் தையல்நாயகி நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள். அம்பிகை மேல் இரு கரங்களில் தாமரை மலரைத்தாங்கி, கீழ் இரு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் அருள்கிறாள்.
பக்தனுக்காக வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து அரியமங்கலம் வந்து எழுந்தருளிய தையல்நாயகி
சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்னர், அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் திருச்சி ரயில்வேயில் இஞ்சின் டிரைவராக பணி புரிந்து வந்தார். அவர் மயிலாடுதுறையின் அருகில் உள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் எழுந்தருளியிருக்கும் தையல்நாயகி மேல் தீராத பக்தி கொண்டவர். வாரம் தவறாமல் வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்று தையல் நாயகி அம்மனை வழிபட்டு வருவார்.
அவர் ஒரு நாள், என்ஜின் ஓரம் அமர்ந்து, எதிரே உள்ள ரயில் பாதையைப் பார்த்துக் கொண்டே ரயிலை ஓட்டிக் கொண்டிருந்தார். அப்போது எதிரே சற்று தொலையில் தண்டவாளத்தின் அருகே, யாரோ நிற்பது போன்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டது. ரயிலின் வேகத்தைக் குறைத்தார். தண்டவாளத்தின் அருகே ஒரு சிறுமி, சிவப்பு துணி ஒன்றை கையில் வைத்து அசைத்தப்படி நின்று கொண்டிருந்தாள். அவர் அவசரம் அவசரமாக ரயிலை நிறுத்தினார். அந்தச் சிறுமியின் அருகே வந்ததும் ரயில் நின்றது. உடன் கீழே இறங்கினார் அவர். அந்தச் சிறுமி நின்று கொண்டிருந்த இடத்திற்கு அருகே, தண்டவாளம் உடைந்து வளைந்து அலங்கோலமாகக் கிடந்தது.ரயில் நின்றதும் பயணிகள் பலரும் இறங்கி ஓடி வந்தனர். நடக்க இருந்த விபரீதம் அனைவருக்கும் புரிந்தது. ரயில் அந்த இடத்தை கடந்திருந்தால் பல பெட்டிகள் கவிழ்ந்திருக்கும். பல உயிர்கள் பலியாகியிருக்கும். கூட்டத்தினர் டிரைவரின் சாமர்த்தியத்தைப் பாராட்டினர். மனதாரப் புகழ்ந்தனர். சிறிது நேரத்தில் டிரைவர், பயணிகள் உள்பட பலரும் விபத்து தவிர்க்கப்பட காரணமான அந்தச் சிறுமியை கூட்டத்தில் தேடினர். சிறுமி காணவில்லை. அன்று இரவு அவர் கனவில் வந்தாள் அந்தச் சிறுமி. 'நான் வேறு யாருமில்லை. நீ வணங்கும் தையல் நாயகிதான்' என்றாள் அந்தச் சிறுமி.
மனம் சிலிர்த்த அந்த டிரைவர் கண்ணீர் வடித்தார். கரங்கூப்பி வணங்கினார். 'தாயே நான் என்ன செய்ய வேண்டும் சொல்' என்றார். 'எனக்கு இங்கே ஓர் ஆலயம் கட்டு' என்றாள் அந்த சிறுமி. 'அப்படியே செய்கிறேன் தாயே. ஒரு சிலை செய்து உன்னை இங்கே பிரதிஷ்டை செய்து ஆலயம் கட்டுகிறேன்.'
'வேண்டாம். நீ எனக்காக சிலை செய்ய வேண்டாம். நீ நேராக மாட்டு வண்டியில் கொல்லிமலை செல். போகும்போது உன்னுடன் நெல் மூட்டையை கொண்டு செல். அங்குள்ள சித்தரிடம், பணத்திற்கு பதில் நெல் மூட்டையைக் கொடு. அவர் தரும் சிலையை உன்னுடன் வண்டியில் கொண்டு வா. வரும் வழியில் உன் மாட்டு வண்டியின் அச்சு முறியும். எந்த இடத்தில் அச்சு முறிகிறதோ அதே இடத்தில் என்னை பிரதிஷ்டை செய்' என்று கூறியவாறு சிறுமி மறைந்தாள். அவர் கனவு கலைந்து விழித்தார்.
மறுநாளே தான் கண்ட கனவின்படி அவர் கொல்லிமலைக்குப்புறப்பட்டார். அந்தச் சிறுமி சொன்னபடியே எல்லாம் நடந்தது. வனப்பகுதியாக இருந்த ஒரு இடத்தில் அச்சு முறிந்தது. அந்த இடத்தில் அம்மனை பிரதிஷ்டை செய்து, தகரக் கொட்டகையில் ஆலயம் அமைத்தார். அந்த ஆலயமே தற்போது அரியமங்கலத்தில் உள்ள அருள்மிகு தையல்நாயகி அம்மன் ஆலயம் ஆகும்.
பிரார்த்தனை
மாத பௌர்ணமி நாட்களில் மாலையில் தையல்நாயகியின் சன்னதியில் நடைபெறும் கும்ப பூஜை இங்கு மிகவும் பிரபலம். மூன்று கலசம் அமைத்து, அதில் மஞ்சள் கலந்த நீரை நிரப்பி பூஜை செய்வார்கள். பூஜை முடிந்தபின் அந்த கலச நீரை தீர்த்தமாக பக்தர்களுக்குத் தருவார்கள். அந்த தீர்த்த நீரைக் கொண்டு போய் வீட்டிலும், வியாபார நிலையங்களிலும் தெளித்தால் கண் திருஷ்டி, ஏவல் போன்றவை விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. முகப்பரு நீங்க அன்னைக்கு முன் மகாமண்டபத்தில் உள்ள தனியிடத்தில் பக்தர்கள் உப்பு, மிளகு காணிக்கை செலுத்துகின்றனர். உடம்பில் கட்டி ஏதாவது வந்தால், அன்னைக்கு வெல்லக் கட்டிகளை காணிக்கை செலுத்துகின்றனர். இவ்வாறு 5 செவ்வாய்க் கிழமைகள் பிரார்த்தனை செய்தால் பூரண குணம் பெறுவது நிச்சயம் என்கின்றனர் பக்தர்கள்.

பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோவில்
கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் அபூர்வ தட்சிணாமூர்த்தி
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே, 7 கி.மீ. தொலைவில் உள்ள பட்டமங்கலம் ஒரு குருஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலின் மூலவராக தட்சிணாமூர்த்தி உள்ளார். தல விருட்சமாக ஆலமரமும், தீர்த்தமாக பொற்றாமரை குளமும் உள்ளது.
கருவறையில் தட்சிணாமூர்த்தி, புன்னகை தவழும் முகத்துடன் பிறைமதி, கொன்றை, வலது மேற்கரத்தில் அக்னியும், வலது கீழ்க்கரத்தில் ஞான முத்திரையும், இடது மேல் கரத்தில் நாகமும் கொண்டு, இடது கீழ்க்கரத்தை தொடையில் வைத்தபடி காட்சியளிக்கிறார். தென்முகக்கடவுள் என்னும் தட்சிணாமூர்த்தி எல்லா கோவில்களிலும் தெற்கு நோக்கியே காட்சியளிப்பார். ஆனால், இந்தியாவிலேயே கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியின் ஒரே தலம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள பட்டமங்கலம் மட்டும்தான்.
பொதுவாக எல்லாத் தலங்களிலும், கல்லால் ஆன ஆலமரத்தடியில்தான் தட்சிணாமூர்த்தி இருப்பார். ஆனால் இங்குதான் உண்மையான ஆலமரத்தடியில் உள்ளார். இந்த தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில், சன்னதிக்கு பின்புறமுள்ள ஆலமரத்தையும் சேர்த்து வலம் வந்தால் உயர்கல்வி யோகம் உண்டாகும். நல்ல மணவாழ்க்கையும் குழந்தைப்பேறும் அமையும். பக்தர்கள் இந்த ஆலமரத்தில் பிரார்த்தனையை கட்டி வேண்டிக் கொள்கிறார்கள். மரம் முழுவதும் மஞ்சள் கயிறுகளும், மஞ்சள் துணியாலான சிறு தொட்டில்களும் கட்டப்பட்டுள்ளன.
பிரார்த்தனை பலன்கள்
தட்சிணாமூர்த்தி சன்னதியையும், அதன்பின் அமைந்துள்ள தெய்வ ஆலமரத்தையும் சேர்த்து சரியாக 108 சுற்றுக்கள் வலம் வந்தால் நமது குறைகள் அனைத்தும் நீங்கி பெருவளம் ஏற்படும் என்பது நம்பிக்கை. விரும்பிய காரியம், வாழ்க்கையில் அமைதி, குழந்தை பேறு, ஆயுள் விருத்தி அடைய, செல்வம் பெருக இங்கு வந்து பிரதட்சணம் செய்தால் இறைவன் அருளால் அடையலாம் என்பது ஐதீகம். ஆலயத்தை 3 முறை பிரதட்சணம் செய்தால் விரும்பிய காரியம் நடக்கும். 5 முறை செய்தால் காரிய வெற்றி கிடைக்கும். 7 முறை செய்தால் நல்ல குணம், எண்ணம், வாழ்க்கையில் அமைதி ஏற்படும். 9 முறை செய்தால் குழந்தை பேறு கிடைக்கும். 11 முறை செய்தால் ஆயுள் விருத்தி ஏற்படும். 15 முறை செய்தால் செல்வம் பெருகும்.

கடையநல்லூர் நீலமணிநாத சுவாமி கோவில்
இரட்டை சிம்ம வாகனத்தில் அருள்பாலிக்கும் சக்கரத்தாழ்வார்
தென்காசியில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள கடையநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது நீலமணிநாத சுவாமி கோவில். அர்ஜுனன் வழிபட்ட தலம் என்பதால் இவ்வூருக்கு, 'அர்ஜுனபுரி க்ஷேத்திரம்' என்ற பெயரும் உண்டு.
கருவறையில் நீலமணிநாத சுவாமி என்ற கரியமாணிக்கப்பெருமாள் ஸ்ரீ பூமி, நீளா தேவியருடன் நின்ற கோலத்தில் இருக்கிறார். திருப்பதி வெங்கடாஜலபதியைப் போன்ற கோலத்தில் இவர் காட்சி தருவது சிறப்பு. திருப்பதியில் வேண்டுதல்களை நிறைவேற்ற முடியாதவர்கள் இங்கு முடிக்காணிக்கை செலுத்தி, நேர்த்திக் கடன்களை நிவர்த்தி செய்து கொள்கிறார்கள். திருமண, புத்திர தோஷம் இருப்பவர்கள் சுவாமிக்கு, திருவோண நட்சத்திர தினத்தில் கறிவேப்பிலை சாதம், பாயாசம் நைவேத்யமாக படைத்து வழிபடுகின்றனர். இவ்வாறு செய்வதால் தோஷங்கள் நீங்குவதாக நம்புகின்றனர்.
இக்கோயிலில் உள்ள சக்கரத்தாழ்வார் தனி சன்ன தியில் 16 கைகளுடன் இருக்கிறார். இவரது பீடத்திற்கு கீழே இரண்டு சிங்கங்கள் சக்கரத்தாழ்வாரையும், அவருக்கு பின்புறம் இருக்கும் யோக நரசிம்மரையும் தாங்கியபடி இருக்கிறது. நரசிம்மருக்கு கீழே ஐந்து தலை நாகம் ஒன்று இருக்கின்றது. சக்கரத்தாழ்வாரின் இந்தத் தோற்றம் மற்ற இடங்களில் இல்லாத அபூர்வக் கோலமாகும். சக்கரத்தாழ்வாரின் இந்த தரிசனம் மிகவும் விசேஷமானது. இவருக்கு சுதர்சனஹோமம் செய்து வழிபட்டால், பயம் நீங்கி, எடுத்த செயல்களில் வெற்றி உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஆவூர் பசுபதீஸ்வரர் கோவில்
முருகப்பெருமான் வில்லும் அம்பும் ஏந்தி இருக்கும் அபூர்வ கோலம்
கும்பகோணத்தில் இருந்து மெலட்டூர் வழியாக தஞசாவூர் செல்லும் சாலையில் சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேவாரத் தலம் ஆவூர். பசுக்களால் பூசிக்கப்பட்டதால் இவ்வூர் ஆவூர் எனப்பட்டது. வசிட்டரால் சாபம் பெற்ற காமதேனு, பிரமன் அறிவுரைப்படி உலகிற்கு வந்து இங்கு வழிபட்டுச் சாபம் நீங்கிய தலம். இறைவன் திருநாமம் பசுபதீஸ்வரர். இத்தலத்தில் பங்கஜவல்லி , மங்களாம்பிகை என்ற திருநாமம் தாங்கி இரண்டு அம்பிகைகள் அருள் புரிகிறார்கள்.
தசரத மகாராஜா புத்திர செல்வம் வேண்டி இத்தலத்து இறைவனையும், முருகனையும் வழிபட்டு பூஜை செய்தார். பின்னர் ராமபிரான் அவருக்கு மகனாக அவதரித்தார். இந்நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில், இக்கோவில் மேற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள சன்னதியில் முருகப்பெருமான் கையில் வில்லும் அம்பும் ஏந்தி, வள்ளி தெய்வயானை சமேதராக காட்சி தருகிறார். அதனால் இவர் தனுசு சுப்பிரமணியர் என்று அழைக்கப்படுகிறார். இப்படி முருகப் பெருமான், கையில் வேல் இல்லாமல், வில்லும் அம்பும் ஏந்தி இருப்பது ஒரு அபூர்வ கோலமாகும்.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு
பிதுர் தோஷத்தை நிவர்த்தி செய்யும் பஞ்ச பைரவர்கள்
https://www.alayathuligal.com/blog/6bexs8x8ztshxkgsrdpzxzwnay2zhg

பெருங்குடி அகத்தீஸ்வரர் கோவில்
கண் நோய்களை தீர்க்கும் அகத்தீஸ்வரர்
திருச்சியிலிருந்து வயலூர் செல்லும் வழியில், சுமார் ஒன்பது கி.மீ. தொலைவில், சோமரசம் பேட்டைக்கு அருகே இருக்கிறது, பெருங்குடி கிராமம். இத்தலத்து இறைவனின் திருநாமம் அகத்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் சிவகாமசுந்தரி. இறைவனார் பெயர் `பெருமுடி பரமேஸ்வரனார் என்றே அந்தக் காலத்தில் அழைக்கப்பட்டது. அகத்தியர் வழிபட்ட சுயம்பு லிங்கமாகக் கருதப்படுவதால் இவர் `அகத்தீஸ்வரர்' என்றும், `அகத்தீஸ்வரமுடையார்' என்றும் பெயர்பெற்றார். இக்கோவில் ராஜராஜனின் தந்தையான சுந்தரச்சோழனின் காலத்தில் எழுப்பப்பட்டது.
கருவறைக்குள் அகத்தீஸ்வரர் சாய்ந்த திருமேனியாக வடக்கே சாய்ந்து தென்கிழக்கைப் பார்த்தபடி அருள்பாலிக்கிறார். இவரை வழிபட்டால், கண் நோய்கள் யாவும் நீங்கும் என்பது நம்பிக்கை.
கல்வெட்டில் பொறிக்கப்பட்ட, சிவபெருமான் கண் நோய் தீர்த்த வரலாறு
இக்கோவில் இறைவனிடம் தன் மகளின் கண்நோய் குறித்து வேண்டுதல் செய்து பலன்பெற்ற பக்தன் ஒருவன் இறைப்பணிக்குக் கழஞ்சுபொன் கொடையளித்த சம்பவம் ஒன்று வரலாற்றில் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளது.
13-ம் நூற்றாண்டில் கூத்தன் என்னும் சிவபக்தன், இத்தலத்தில் வாழ்ந்துவந்தார். அவருக்கு நல்லமங்கை என்றுஒரு மகள் இருந்தாள். சிறுவயதில் அவளின் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக மங்கத் தொடங்கிவிட்டது. கூத்தன் எவ்வளவோ வைத்தியம் செய்தும் பார்வை குறைபாடு சரியாகவில்லை. ஒரு கட்டத்தில் நல்லமங்கை பார்வை முழுவதையும் இழந்தாள்.
வெளியூர்களில் வாழும் பெரும் வைத்தியர்களிடம் சென்று வைத்தியம் பார்க்கலாம் என்று கூத்தன் முடிவு செய்து, அதற்கெனப் பணத்தைச் சேர்க்கத் தொடங்கினான். கி.பி 1268, ஆண்டில், ஹொய்சாள மன்னன் ராமநாதன் இக்கோவிலில் திருப்பணி செய்ய ஆரம்பித்தான். அவனிடம் இருந்த நிதி தீர்ந்து விட்டதால், கோயில் வேலை அப்படியே நின்றுபோனது. இறைவனின் திருப்பணி நின்றுபோனதால் மனம் வருந்திய கூத்தன், தன் மகள் நல்லமங்கையின் கண் வைத்தியத்துக்கென வருடக்கணக்காக உழைத்துச் சேர்த்து வைத்திருந்த மூன்று கழஞ்சு பொன்னையும் கோயில் திருப்பணிக்குக் கொடை அளித்தான். அதனால் கோவில் திருப்பணிகள் நடந்து முடிந்தன.
மகள் கண் வைத்தியத்துக்குச் சேர்த்து வைத்திருந்த பொன்னை, கோயில் திருப்பணிக்குச் செலவிட்டு விட்டதால் கூத்தன் வைத்திய செலவுக்கு மீண்டும் பணம் சேர்க்க வேண்டியதாயிற்று. வேறுவழியின்றி இத்தலத்து இறைவன் திருவடிகளில் விழுந்து சரணடைந்தான். அப்போதுதான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. சிவபெருமான் அருளால் நல்லமங்கைக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வை தெரிய ஆரம்பித்தது. சில நாள்களில் அவளுடைய கண்கள் பிரகாசமாகி முழுமையாகப் பார்வை திரும்பியது. கூத்தன் இறைவனுடைய அருளை நினைத்து நெக்குருகினான். தன் துயர் துடைக்க இறைவன் இருக்கும்போது தனக்குப் பணம் எதற்கு என்று முடிவுசெய்து அவன் சேர்க்கும் பணத்தையெல்லாம் இறைவனின் திருப்பணிக்கே வழங்கினான். இறைவனுக்கு கழஞ்சுபொன் பட்டம் செய்து சாற்றித் தன் நன்றியைத் தெரிவித்தான்.
இந்தப் பொன் கொடுத்த நிகழ்வு ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டில் வடித்து வைக்கப்பட்டிருக்கிறது.

பேரங்கியூர் திருமூலநாதர் கோவில்
பத்ம பீடத்தில் எழுந்தருளியிருக்கும் விஷ்ணு துர்க்கையின் அபூர்வ கோலம்
விழுப்புரத்திலிருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் உள்ள பேரங்கியூர் என்னும் கிராமத்தில் மிகவும் தொன்மை வாய்ந்த கோவில் ஒன்று அமைந்துள்ளது. இத்தலத்து இறைவனின் திருநாமம் திருமூலநாதர் . இறைவியின் திருநாமம் அபிராமி அம்மை.
கி.பி. 10-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த ஆலயத்தை, பராந்தகச் சோழன் கட்டியதாக கல்வவெட்டுக் குறிப்புகள் சொல்கின்றன. மேலும் ராஜராஜ சோழன், ராஜேந்திரச் சோழன், குலோத்துங்கன் ஆகியோரது கல்வெட்டுகளும் இங்கு காணப்படுகிறது. இக்கோவிலில் முற்காலச் சோழர்களின் எழில்மிகு சிற்பங்கள் அமைந்துள்ளன. அவை தனிச்சிறப்புடையவை. அதனால், இக்கோவில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை பராமரிப்பின் கீழ், மரபுச் சின்னமாக உள்ளது..
பொதுவாக சிவாலயங்களில் துர்கை அம்மன், மகிஷாசுரன் தலையின் மேல் நின்ற வண்ணம் காட்சி தருவாள். ஆனால் இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் விஷ்ணு துர்க்கை, மகிஷனற்று பத்ம பீடத்தில் நின்றவண்ணம், பின்னிரு கரங்களில் எறிநிலை சக்கரமும், சங்குமேந்தி முன்னிடக்கரம் தொடையிலிருத்தி வலது கரத்தில் அருள் புரியும் கோலத்தில் காட்சி தருகிறாள். இது விஷ்ணு துர்க்கையின் ஓர் அபூர்வ தோற்றமாகும்

சூலூர் திருவேங்கடநாதப் பெருமாள் கோவில்
துளசி தீர்த்தத்துடன் மிளகும் பிரசாதமாக வழங்கப்படும் பெருமாள் கோவில்
கோயம்புத்தூரில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ள சூலூர் தலத்தில் அமைந்துள்ளது திருவேங்கடநாதப் பெருமாள் கோயில். இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. கருவறையில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். கருவறையில் பெருமாள் திருமேனியின் பின்புறம் ஆஞ்சநேயர் வீற்றிருக்கிறார். இது பெருமாள் கோவில்களில் ஓர் அபூர்வ அமைப்பாகும்.
பொதுவாக எல்லாப் பெருமாள் கோயில்களிலும் தீர்த்தம், துளசி, குங்குமம் மட்டும்தான் பிரசாதமாக கொடுப்பார்கள். ஆனால், இக்கோயிலில் துளசி தீர்த்தம் வழங்கியபின் சிறிதளவு மிளகு வழங்குகிறார்கள். பெருமாளே, மிளகு கேட்ட வரலாற்றாலும், ஓரு பிடி மிளகு கொடுத்ததன் சிறப்பாலும், இன்றும் இக்கோயிலில் மதியம் பெருமாளுக்கு மிளகு நைவேத்தியம்தான் படைக்கப்படுகிறது. அதையே பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கிறார்கள். மேலும், வருடம் முழூவதும் மிளகு வைத்துக் காரமாகப் பூசை செய்வதால் இனிப்பான அதாவது, சர்க்கரைப் பொங்கல் தவிர வேறு நைவேத்தியம் இங்கு கிடையாது. பெருமாளின் வெப்பம் குறைய விசேஷ நாட்களில் பச்சரிசியை ஊற வைத்து சர்க்கரை, ஏலக்காய், தேங்காய்த் துருவல் ஆகியவற்றைக் கலந்து படைப்பதும் உண்டு. மிளகே அக்னி வடிவமாக இருப்பதால் இக்கோவில் சுவாமிக்குத் தவிர, சுபகாரியங்களுக்கு அக்னி உபயோகிப்பதில்லை.

தத்தனூர் ஸ்ரீபஞ்ச முக ஆஞ்சநேயர் கோவில்
சிவபெருமானைப்போல் நெற்றிக் கண்ணும், மகாவிஷ்ணுவைப்போல் சங்கு சக்கரமும் உடைய ஸ்ரீபஞ்ச முக ஆஞ்சநேயரின் அபூர்வக் கோலம்
ஸ்ரீபெரும்புதூர்-செங்கல்பட்டு நெடுஞ்சாலையில், சுமார் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பாதிரிமேடு என்னும் இடத்திலிருந்து பிரியும் கிளைச் சாலையில் ஒரு கி.மீ. பயணித்தால் தத்தனூர் ஸ்ரீபஞ்ச முக ஆஞ்சநேயர் கோவிலை அடையலாம்.
ராம பக்தனான ஸ்ரீஆஞ்சநேயருக்கு பல ஆலயங்கள் தமிழ் நாட்டில் உண்டு. ஆனால் அவரை ஐந்து முகம் கொண்ட மூர்த்தியாக சித்தரித்து அமைந்துள்ள ஆலயங்கள் ஒரு சில தலங்களில்தான் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான், தத்தனூர் ஸ்ரீபஞ்ச முக ஆஞ்சநேயர் கோவில். இக்கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீபஞ்ச முக ஆஞ்சநேயர், ஸ்ரீ கருடன், ஸ்ரீ வராகம், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ ஹயக்ரீவர் ஆகிய ஐந்து திருமுகங்களோடு நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.
பஞ்சமுகத்தின் சிறப்பு
ஸ்ரீபஞ்ச முக ஆஞ்சநேயரின் திருமுகங்களும், அதன் சிறப்பம்சங்களும்
1. ஸ்ரீ கருடன்: நோய் நீக்குதல், தீராத பிணி, விஷக்கடி நீங்குதல்.
2. ஸ்ரீ வராகம்: குடும்பத்தில் வளம், சுபகாரியங்கள் தடையின்றி நடத்தல், வேலை வாய்ப்பு, முன்னேற்றம், சந்தான பிராப்தி.
3. ஸ்ரீ ஆஞ்சநேயர்: நெற்றி கண்ணுடன், ருத்திராவதார மூர்த்தியாய், எதிரிகளை அழிக்கும் தன்மை பெற்றவராய், ஆக்கிரோஷமாக விளங்குகிறார்.
4. ஸ்ரீ நரசிம்மர்: செய்வினை, பில்லி, சூனியம், இவைகள் நீங்குதல்.
5. ஸ்ரீ ஹயக்ரீவர் (குதிரை முகம் கொண்ட விஷ்ணுவின் அம்சம்): கல்வியில் முன்னேற்றம், ஞாபகத்திறன் அதிகரித்தல், வாக்கு வன்மை, புத்தி சாதுர்யம், மற்றவர்களை வசீகரிக்கும் தன்மை போன்றவை கிடைக்கும்.
இங்குள்ள மூர்த்திக்கு சிவபெருமானைப்போல் நெற்றியில் மூன்றாவது கண் இருப்பதும், இவரது வலது, இடது கரங்களில் மகாவிஷ்ணுவைப்போல் சங்கு சக்கரம் ஏந்தி இருப்பதும், வேறு எந்த தலத்திலும் நாம் தரிசிக்க முடியாத அபூர்வக் கோலமாகும்..
Comments (0)Newest First

திருவேங்கைவாசல் வியாக்ரபுரீஸ்வரர் கோவில்
அர்த்தநாரீஸ்வரராக காட்சி தரும் தட்சிணாமூர்த்தியின் அபூர்வக் கோலம்
புதுக்கோட்டை - கீரனூர் சாலையில் அமைந்துள்ள தலம் திருவேங்கைவாசல். இறைவன் புலியாக வந்து, காமதேனுவின் சாபம் நீங்கப் பெற்றதால், இத்தலத்து இறைவனின் திருநாமம் வியாக்ரபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் பிரகதாம்பாள்.
இத்தலத்து தட்சிணாமூர்த்தி, ஒரு பாதி ஆண் தன்மையும், மறு பாதி பெண் தன்மையும் கொண்டு, சிவசக்தியாக அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலத்தில் சதுர பீடத்தில் அமர்ந்து ஒற்றைக்காலில் நின்று கொண்டு காட்சி தருவது தனிச் சிறப்பாகும். இந்த அர்த்தநாரீஸ்வர தட்சிணாமூர்த்தி அபய வர ஹஸ்தங்களுடன், ஒரு கரத்தில் ருத்திராட்சமும் மற்றொரு கரத்தில் சர்ப்பமும் ஏந்தி காட்சி தருகிறார்.
இங்கு வந்து அர்த்தநாரீஸ்வர தட்சிணாமூர்த்தியை வழிபட்டால், குழந்தைகளின் ஞாபக சக்தி பெருகும். தொழில் விருத்தியாகும் என்பது நம்பிக்கை.

கங்கைகொண்ட சோழபுரம் கணக்க விநாயகர் கோவில்
அபிஷேகத்தின்போது பச்சை நிறமாக மாறும் விநாயகர்
அரியலூர் மாவட்டத்தில், யுனெஸ்கோ அமைப்பு உலக கலாச்சார சின்னமாக அறிவித்துள்ள கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தின் தென்மேற்கில், ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கணக்க விநாயகர் கோவில். இவரின் திருமேனி மரகதக் கல்லால் ஆனது. இந்த விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்யும்போது, இவரின் திருமேனி பச்சை நிறமாக மாறுவது தனிச் சிறப்பாகும்.
ராஜேந்திர சோழனுக்கு கோவில் செலவுக் கணக்கை சுட்டிக் காட்டிய விநாயகர்
கங்கை கொண்ட சோழபுரத்தை நிர்மாணம் செய்த போது ராஜேந்திர சோழன், தன் அரண்மனைக்கு முன் பச்சை நிறக் கல்லினால் ஆன விநாயகர் சிலையை நிர்மாணித்து வழிபட்டு வந்தான். இந்த விநாயகரை பக்தர்கள் கனக விநாயகர் என்று போற்றுவர். இந்த விநாயகர் இருக்கும் இடத்திலிருந்து வடகிழக்குப் பகுதியில் ராஜேந்திர சோழன் 180 அடி உயரம் கொண்ட பிரகதீஸ்வரர் கோயிலைக் கட்டினான். பிரகதீஸ்வரர் கோயிலைக் கட்டும் பணியை அமைச்சர் ஒருவர் கவனித்து வந்தார். திருப்பணிகளுக்குத் தேவையான பொன், பொருட்களை அரண்மனைக் கணக்கர் தினமும் அமைச்சரிடம் தருவார். அவற்றை அமைச்சர் இந்த கனக விநாயகர் திருமுன் வைத்து வணங்கிய பின்பே ஆலயத் திருப்பணிகளை ஆரம்பிப்பார். இப்படியே இடைவிடாமல் 16 ஆண்டுகள் அமைச்சர் தலைமையில் திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.
ஒரு நாள் ராஜேந்திர சோழன், 'பதினாறு ஆண்டுகளாக கட்டிக்கொண்டிருக்கும் இந்த ஆலயத்த்திற்கு இதுவரை எவ்வளவு பொருள் செலவாகியிருக்கும் என்று நாளைக் காலையில் கூறுங்கள்' என்று அமைச்சரிடம் கணக்கு சொல்லும்படி கேட்டான். திடீர் என்று மன்னன் கோயில் கட்டும் பணிக்கு ஆன செலவைக் கேட்டதில் ஒன்றும் புரியாமல் தவித்தார் அமைச்சர். அவரிடம் சரியான கணக்கு இல்லாததால் அரண்மனை வாசலில் முன் காட்சி தந்த விநாயகரிடம் 'எந்தக் கணக்கை சொல்வது? என்ன சொல்வது?' என்றும் இதற்குத் தகுந்த பதில் கூறுமாறும் விநாயகரிடம் வேண்டினார்.
அன்றிரவு அமைச்சர் கனவில் தோன்றிய விநாயகர், 'கவலை வேண்டாம். எத்து நூல் எட்டு லட்சம் பொன்' என்று சொல்லிவிட்டு மறைந்தார். மறு நாள் காலை அரசவைக்கு வந்து அமைச்சர் ஓலைச்சுவடி கட்டினைப் பிரித்து எத்து நூல் எட்டு லட்சம் பொன் என்று ஓலைச் சுவடியில் எழுதியதை கணக்காகச் சொன்னார். 'ஓ! எத்து நூல் எட்டு லட்சம் பொன் ஆனதா? கோயில் கட்டுவதற்கு, சரியான அளவு பார்ப்பதற்கு மட்டும் வாங்கிய நூல், அதாவது எத்து நூல் மட்டுமே எட்டு லட்சம் பொன் என்றால், கோயில் மிகவும் சிறந்த முறையில்தான் உருவாகிறது' என்று மகிழ்ந்தான் சோழன். 'அமைச்சரே, எத்து நூல் மட்டும் எட்டு லட்சம் பொன் என்று எப்படி கணக்கிட்டீர்கள்' என்று தன் சந்தேகத்துக்கு பதில் கேட்டான்.
அமைச்சர் உண்மையை சொல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டார். 'மன்னா! உண்மையில் கோயில் கட்டும் பணியின் கணக்கை என்னால் சரியாகப் பராமரிக்க முடியவில்லை. கோயில் கட்டும் பணிக்கு காசாளரிடம் பொருள் வாங்கியதும் அந்தப் பொற்காசுகளை அரண்மனை வாசல் முன் அருள்புரியும் விநாயகர் முன் சமர்பித்து வணங்கிய பின் எடுத்துச் சென்று பணிகளை கவனிப்பேன். தாங்கள் கணக்கைக் கேட்டதும் அரண்மனை வாயிலில் அருள்புரியும் நமது கனக விநாயகரை வேண்டினேன். அவர்தான் நேற்று இரவு என் கனவில், எத்து நூல் எட்டு லட்சம் பொன் என்று கணக்கு சொன்னார்' என்றார். அமைச்சர் உண்மையை சொன்னதும் மன்னருக்கு மகிழ்ச்சி. விநாயகப் பெருமான் சொன்னதால் கணக்கு சரியாகத்தான் இருக்கும் என்று விநாயகருக்கு சிறப்பு அபிஷேக வழிபாடுகள் செய்தான். அன்றிலிருந்து இந்தக் கனக விநாயகர், கணக்கு விநாயகர் என்று அழைக்கப்பட்டார். மேலும் இந்த அற்புத விநாயகரை பிற்காலத்தில் எவரேனும் வேறு இடத்திற்கு மாற்றிவிடக்கூடாது என்று நினைத்த மன்னன், 4 அடி உயரம், 3 அடி அகலமுடைய இந்த விநாயகரின் சன்னிதி முன் மிகச்சிறிய நுழைவு வாசலைக் கட்டினான். கோயிலை இடித்து அகற்றினால்தான் இந்த சிலையை அகற்ற முடியும். அந்நியர் படையெடுப்பு நடந்தபோது, பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கும் இந்த கனக விநாயகர் ஆலயத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதற்கு இந்த கனக விநாயகரின் அருளே காரணமாகும்.
எத்து நூல்
அது என்ன எத்து நூல்? எத்து நூல் என்பது மரத்திலும், சுவரிலும் வளைவு வராமல் இருக்க, நேராக கட்டுமானப்பணி திகழ்வதற்காகப் பயன்படுத்தும் நூலை எத்து நூல் என்பார்கள் எத்து நூல் எண்பது லட்சம் பொன் என்றால் கல், மரம், மணல், சுண்ணாம்பு எவ்வளவு வாங்கப்பட்டிருக்கும் என்று அரசரையே யோசிக்க வைக்கும் கணக்கை சொன்னதால் இந்த பிள்ளையார் கணக்குப் பிள்ளையார் ஆனார்.
புதன் தோஷ நிவர்த்தி தலம்
நவக்கிரகங்களில் புதனுக்கு உரிய ரத்தினமாக மரகதம் கருதப்படுகிறது. ஞான காரக கேதுவின் அதிதேவதையான விநாயகர் இங்கு மரகத மூரத்தியாக விளங்குவதால், புதனால் ஏற்படும் தோஷங்களை நீக்குபவராக விளங்குகிறார்.
புதிதாக ஆலயம் கட்டும் முயற்சியில் ஈடுபடுவோர், ஏற்கனவே உள்ள ஆலயத்தை புதுப்பிக்க நினைப்போர், சொந்தமாக வீடு மற்றும் கட்டிடம் கட்டுபவர்கள் புதிதாக வணிகம் தொடங்குவோர், ஏற்கனவே செய்துவரும் வணிகத்தில் சரிவை சந்திப்பவர்கள், கல்வியில் மேன்மை பெற விரும்புபவர்கள், இந்த விநாயகரை வழிபட்டு பலன் பெறலாம்.

முனுகப்பட்டு பச்சையம்மன் கோவில்
சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் துவாரபாலகர்களாக விளங்கும் அபூர்வக் கோவில்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி – செய்யாறு வழித் தடத்தில், 11 கி.மீ. தொலைவில் முனுகப்பட்டு அமைந்துள்ளது. இத்தலத்திலுள்ள பச்சையம்மன் கோவில், உலகெங்கும் அமைந்துள்ள பச்சையம்மன் ஆலயங்களுக்கு பிரதான கோவிலாக அமைந்துள்ளது. சிவபெருமான் மனித வடிவம் கொண்ட கோவில், அன்னை பார்வதி வாழைப்பந்தல் அமைத்து வரம் பெற்ற பூமி, சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் துவாரபாலகர்களாக விளங்கும் அபூர்வக் கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாக விளங்குகிறது, முனுகப்பட்டு பச்சையம்மன் ஆலயம்.
சிவபெருமானின் உடலில் சரி பாதியை பெற வேண்டி பார்வதி தேவி தவம் இருக்க தேர்ந்தெடுத்த இடம்தான், வாழை மரங்கள் நிறைந்த இயற்கை எழில் சூழ்ந்த இன்றைய முனுகப்பட்டு. அன்னை அங்கேயே வாழை மரங்களால் பந்தல் அமைத்து தவமிருக்க முடிவு செய்தாள். லிங்கம் அமைக்க, தவமிருக்க தண்ணீர் தேவைப்பட்டது. உடனே தன் புதல்வர்களான விநாயகரையும், முருகனையும் தண்ணீர் கொண்டு வரப் பணித்தாள். அதன்படி விநாயகர் சற்றுத் தொலைவில் உள்ள மலையில் முனிவர் தவமிருப்பதையும், அவர் அருகே கமண்டலத்தில் நீர் இருப்பதையும் அறிந்து, அதனைத் தன் வாகனமான மூஞ்சுறுவின் உதவியால் கவிழ்த்தார். கமண்டல நீர், கமண்டல நாக நதியாகி, அன்னை தவம் இருந்த இடத்தை நோக்கிப் பாய்ந்தது. முருகப்பெருமான் தொலைவில் உள்ள மலை மீது தன் வேலைப் பாய்ச்சி நீர் வரச்செய்து ஆறாக்கியதால், அது சேயாறு ஆனது. இதற்குள் அன்னை தன் பிரம்பினை பூமியில் அடித்து நீர் வரச் செய்தாள். அது பிரம்பக நதி என்று பெயர் பெற்றது. இந்த மூன்று நதிகளும் ஒன்று சேரும் ஊரான முனுகப்பட்டில் அமைந்த இடத்தை முக்கூட்டு என்றும், இங்குள்ள சிவனை 'முக்கூட்டு சிவன்' என்றும் அழைக்கின்றனர்.
அன்னையின் தவத்தினைக் கலைக்க அசுரர்கள் சிலர் முயன்றனர். இதனை முறியடிக்க சிவன் வாழ்முனியாகவும், விஷ்ணு செம்முனியாகவும் அவதாரம் எடுத்து அன்னையின் தவம் நிறைவுபெற உதவினர். இதன்பின் திருவண்ணாமலையில், பார்வதி தேவி சிவபெருமானிடம் சரிபாதி உடலைப் பெற்றாள் என தலபுராணம் கூறுகிறது.
பச்சை நிற குங்கும பிரசாதம்
இத்தல இறைவன் மண்ணால் உருவானவர் என்பதால், ஈசனுக்கு 'மண் லிங்கேஸ்வரர்' என்ற பெயர் வந்தது. இந்த பெயர் மருவி தற்போது 'மன்னார்சாமி' என்ற பெயர் நிலைத்து விட்டது. இறைவன் சிவபெருமானை லிங்க வடிவிற்கு பதிலாக மனித வடிவில், சிலா ரூபத்தில் காண முடிவது இத்தலத்தின் சிறப்பாகும். சிவபெருமான் நான்கு கரங்களோடு, கீழ் வலது கரத்தில் சூலம், கீழ்இடது கரத்தில் கபாலம், மேல் வலது கரத்தில் மழு, மேல் இடது கரத்தில் மான் தாங்கியுள்ளார். இவரே மன்னார் ஈஸ்வரன் எனும் மன்னார்சாமி ஆவார். இவரையடுத்து நடுநாயகமாக பச்சையம்மன் சன்னிதி இருக்கிறது. இந்த ஆலயத்தின் துவாரபாலகர்களாக, வலதுபுறம் சிவபெருமானும், இடதுபுறம் மகாவிஷ்ணுவும் காட்சி தருவது அபூர்வ அமைப்பாகும்.
இக்கோவில் கருவறையில் நின்ற கோலத்திலும், அமர்ந்த கோலத்திலும் இரு பச்சையம்மன்கள் காட்சி தருகின்றனர். நின்ற அம்மன் கற்சிலையாகவும், அமர்ந்த அம்மன் சுதைவடிவிலும் அமைந்துள்ளது. அன்னையின் கீழ் வலது கரம் பிரம்பையும், கீழ் இடது கரம் கபாலத்தையும், மேல் வலது கரம் அங்குசத்தையும், மேல் இடது கரம் பாசத்தையும் தாங்கி அருள்கின்றது. இரண்டு அம்மன்களுக்கும் அலங்காரம், தீபாராதனை நடத்தப்படுகிறது. ஆனால் நின்ற கோலத்தில் இருக்கும் அம்மனுக்கு மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. பச்சை அம்மன் ஆலயம், அம்மன் ஆலயமாக இருந்தாலும், இங்குள்ள மன்னார்சாமியே பிரதானமாகத் திகழ்கிறார். இதனால் அம்மனுக்கு திங்கட்கிழமையே உகந்த நாளாக போற்றப்படுகிறது. இது தவிர ஞாயிற்றுக்கிழமையிலும் ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். இக்கோவிலில் பிரசாதமாக வேப்பிலையும், பச்சை நிற குங்குமமும் வழங்கப்படுவது ஒரு தனிச் சிறப்பாகும்.
எண்ணற்ற குடும்பங்களுக்கு முனுகப்பட்டு பச்சையம்மன் குலதெய்வமாக விளங்குகின்றாள். இந்த அம்மன், மணப்பேறு, மகப்பேறு வழங்கும் தெய்வமாக விளங்குவது தனிச்சிறப்பு. மகப்பேறு வேண்டுதல் நிறைவேறியவர்கள் 5 அல்லது 7–வது மாதத்தில் அம்மனுக்கு வளையல் சாத்தி வழிபட்டுச் செல்கின்றனர். இங்கு பில்லி, சூனியம், கண் திருஷ்டி, சொத்துப் பிரச்சினை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் காலில் எலுமிச்சை பழத்தை நசுக்கி, எதிரில் உள்ள முனிகளுக்கு நடுவில் உள்ள கருங்கல்லில், தேங்காயை வீசி சிதறச் செய்கின்றனர். இதனால், அனைத்துப் பிரச்சினைகளும் தீரும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

கும்பகோணம் ஆதிவராகப் பெருமாள் கோவில்
நிலம், வீடு தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கும் பெருமாள்
கும்பகோணத்தின் மையப்பகுதியில், சக்கரபாணி கோவிலுக்கு தென்மேற்கில், ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது, மிகப் பழமையான ஆதிவராகப் பெருமாள் கோவில். இதன் அருகிலேயே வராக விநாயகராகிய கரும்பாயிரம் பிள்ளையார் கோவிலும் உள்ளது.
இக்கோயிலில் உள்ள மூலவர் ஆதிவராகப்பெருமாள் ஆவார். தாயார் அம்புஜவல்லி.
உலகில் முதலில் தோன்றிய இடம் 'வராகபுரி' என்னும் கும்பகோணம் என்று இந்தக் கோவில் தல புராணம் சொல்கிறது. எனவே முதலில் இந்தக் கோவிலில் உள்ள ஆதிவராகப் பெருமாளை வழிபட்ட பிறகே, அனைத்து தெய்வங்களையும் வழிபட வேண்டும் என்றும் சொல்கிறார்கள். கும்பகோணத்தில் மகாமகம் திருவிழா உண்டாவதற்கு முன்பாகவே இவர், இத்தலத்தில் எழுந்தருளியிருந்தார். எனவே இவரை, 'ஆதிவராகர்' என்று அழைக்கின்றனர். இவரே இங்குள்ள பெருமாள்களுக்கெல்லாம் முந்தியவர். மாசிமகத் திருவிழாவின்போது, கும்பகோணத்திலுள்ள சாரங்கபாணி, சக்கரபாணி, வரதராஜர், ராஜகோபாலர் மற்றும் இத்தலத்து மூர்த்தி ஆகிய ஐவரும் காவிரிக்கரைக்கு தீர்த்த நீராட எழுந்தருளுகின்றனர்.
மூலஸ்தானத்தில் சுவாமி, பூமாதேவியை இடது மடியில் அமர்த்திய கோலத்தில் காட்சி தருகிறார். பூமாதேவி திருமாலை வணங்கியபடி இருக்கிறாள். மூலவர் ஆதிவராகப் பெருமாள் அமர்ந்த கோலத்தில் இருக்க, அவருக்கு முன்பாக உற்சவர் நின்றபடி இருக்கிறார். உற்சவர் ஆதிவராகர், தனது இடது பாதத்தை ஆதிசேஷன் மீது வைத்தபடி காட்சி தருகிறார். சுவாமி முன்பாக 'வராக சாளக்கிராமம்' உள்ளது. இதில் சங்கு, சக்கர ரேகைகள் உள்ளன.
தல வரலாறு
வராகத்தின் (பன்றி) முகத்தோடு விளங்குவதால் வராகப் பெருமாள் என்ற பெயர் பெற்றார். ஒருசமயம் இரண்யாட்சன் என்னும் அசுரன், பூமியை பாதாள உலகிற்குள் எடுத்துச்சென்று மறைத்து வைத்தான். தன்னை மீட்கும்படி, பூமாதேவி திருமாலிடம் வேண்டினாள். திருமால் வராக அவதாரம் எடுத்து பாதாளத்திற்குள் சென்று பூமியை மீட்டு வந்தார். இவரே இத்தலத்தில் வராகமூர்த்தியாக அருள்புரிகிறார்.
கோரைக்கிழங்கு மாவுருண்டை பிரசாதம்
தினமும் ஆதிவராகப் பெருமாளுக்கு அர்த்தஜாம பூஜையின்போது, கோரைக்கிழங்கு மாவுருண்டையை நைவேத்யமாக படைக்கிறார்கள். பாய் நெய்வதற்குரிய நாணல் புல்லின் அடியில் முளைப்பது கோரைக்கிழங்கு. இந்தக்கிழங்கை பொடித்து, அதனுடன் அரிசி மாவு, சர்க்கரை மற்றும் நெய் சேர்த்து உருண்டையாகப் பிடித்து வைப்பர். மறுநாள் காலையில் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கிறார்கள். பூமியை மீட்டு வந்த பெருமாள் என்பதால். பூமிக்கு கீழே விளையும் கிழங்கு கலந்த நைவேத்யம் இவருக்கு படைக்கப்படுகிறது.
ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் சுவாமியை வணங்கி, தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் பெற, கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். நிலம், வீடு தொடர்பான பிரச்னைகள் நீங்க இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் கோவில்
மகாலிங்க தலத்தின் பரிவார தலங்கள்
கும்பகோணத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவில் மயிலாடுதுறை செல்லும் சாலை வழியில் தேவாரத்தலமான திருவிடைமருதூர் இருக்கிறது. இறைவன் திருநாமம் மகாலிங்கேசுவரர். இறைவியின் திருநாமம் பிரகத் சுந்தரகுஜாம்பிகை.
இத்தலம் மகாலிங்கத் தலம் எனவும் இதனைச் சுற்றியுள்ள ஒன்பது தலங்களை இதன் பரிவாரத் தலங்கள் என்றும் சொல்வர். ஒரு சிவாலயத்தில் மூலவராக விளங்கும் லிங்கம், அவருக்கு நேர் எதிரே அமைந்திருக்கும் நந்தி, சுற்றுப்பிரகாரத்தில் பிரதட்சணமாகச் சென்றால் விநாயகர், சுப்ரமணியர், தட்சிணாமூர்த்தி, சோமாஸ் கந்தர், சண்டேச்வரர், பைரவர், நடராஜர், துர்க்கை மற்றும் நவக்கிரகங்கள் ஆகிய தெய்வங்கள் குடிகொண்டுள்ளன. ஐதீகப் பிரகாரம் மூலவரைத் தரிசித்து வணங்கியபின் சுற்றுப்பிரகாரத்தில் உள்ள கோஷ்ட தெய்வங்களைத் தரிசித்தால்தான் சிவதரிசனம் பூர்ணமாகப் பூர்த்தியாகும் என்பது நமது பண்டைய மரபு மற்றும் சாஸ்திரமாகும்.
இந்த ஆகம முறைப்படி, ஒரு ஆலயம் எவ்வாறு நிர்மாணிக்க வேண்டுமோ அதேபோல் சோழ நாட்டையே ஒரு சிவாலயமாக்கி, அதன் நடுநாயகராகத் திருவிடை மருதூர் உறை மகாலிங்கத்தை மூலவராக்கி இருக்கிறார்கள். இந்த ஆலயத்தின் மூலவரான மகாலிங்கத்தை கர்ப்பக்கிரகமாக நோக்கினால், இவ்வாலயத்தின் ஏனைய பரிவார மூர்த்திகள் இருக்க வேண்டிய திசைகளில் உள்ள ஊர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திவ்ய ஷேத்ரமாக விளங்குவதைப் பார்க்கலாம். இவை அனைத்துமே ஆகம விதிப்படி எந்தெந்தப் பரிவார மூர்த்திகள் எந்தெந்தத் திசைகளில் இருக்க வேண்டுமோ, அவ்வூரில் உள்ள அந்த ஆலயம் அவ்வாறே விசேஷ தலமாக அமைந்திருக்கிறது. அந்த பரிவாரத் தலங்களும், அத்தலத்து மூர்த்தியும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
1 - நந்தி - திருவாவடுதுறை.
2- சோமாஸ்கந்தர் - திருவாரூர்.
3- தட்சிணாமூர்த்தி - ஆலங்குடி.
4 - விநாயகர் - திருவலஞ்சுழி.
5 - முருகன் - சுவாமிமலை.
6 - சண்டேஸ்வரர் - திருவாய்ப்பாடி.
7 - நடராசர் - தில்லை.
8 - பைரவர் - சீர்காழி.
9 - நவக்கிரகம் - சூரியனார் கோயில்.
இப்படிச் சோழ தேசமே ஒரு சிவாலயமாக விளங்குகிறது.

குத்தாலம் சோழீஸ்வரர் கோவில்
கையில் அமிர்த கலசத்துடன் காட்சி தரும் பாதாள சனீஸ்வரர்
கும்பகோணத்தில் இருந்து 24 கி.மீ. தொலைவில், மயிலாடுதுறை செல்லும் சாலை வழியில் உள்ள குத்தாலம் என்னும் கிராமத்தில் சோழீஸ்வரர் கோவில் உள்ளது. சுந்தரரால் பாடல் பெற்ற தேவார வைப்புத்தலம் இது. இறைவன் திருநாமம் சோழீஸ்வரர் . இத்தலத்தில் பரிமளசுகந்தநாயகி, சவுந்தரநாயகி என்ற திருநாமத்துடன் இரண்டு அம்பிகைகள் அருள்பாலிக்கிறார்கள். தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சுவாமிக்கு திராட்சை சாறு அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வழிபட விரைவில் நல்ல வரன் அமைந்து, திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை. நிச்சயதார்த்தம் செய்த பிறகு, பிரச்னையின்றி திருமணம் நடக்கவும் இங்கு வேண்டிக் கொள்கிறார்கள். தீ தொடர்பான பணியில் இருப்பவர்கள் ஆபத்து வராமல் இருக்கவும், உஷ்ணத்தால் நோய் ஏற்பட்டவர்கள் நிவர்த்திக்காகவும் இங்கு வழிபடுகிறார்கள்.
அமிர்த கலச சனீஸ்வரர்
மகரிஷிகள், தேவர்கள் சிவனை வழிபட்ட தலம் இது. இவர்கள் இங்கு சிவனை வழிபட வந்தபோது, சனீஸ்வரர் அவர்களை கையில் அமிர்த கலசம் ஏந்தி வரவேற்றாராம். இந்த அமைப்பிலேயே காட்சி தருவதால் இவர் அமிர்த கலச சனீஸ்வரர் என்றும், பாதாளத்திலிருந்து சுயம்புவாக தோன்றியதால், பாதாள சனீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இவரது பீடம் பழுது பட்டிருந்ததால், திருப்பணி செய்வதற்காக சனி பகவானின் விக்கிரகத்தை அகற்றுவதற்கு பீடத்தின் அடியில் பள்ளம் தோண்டினார்கள். சுமார் பதினைந்து அடி வரை தோண்டியும் பீடத்தின் அடிப் பகுதியைக் காண முடியாததால் அந்த வேலையை அப்படியே விட்டுவிட்டார்கள். அடி காணமுடியாத நிலையில் அப்படியே ஒழுங்குபடுத்தி சீர்செய்தார்கள்.
இரண்டு கரங்களுடன் பாதாள சனி பகவான் நின்ற நிலையில் கைகூப்பிய வண்ணம் காட்சி தருகிறார். கூப்பிய கைகளுக்குள் அமிர்த கலசம் உள்ளது. இவரை "பொங்கு சனி' என்றும் சொல்வர். சனி பகவானை வணங்கும்போது நேரிடையாக அவரைப் பார்க்காமல், சற்று பக்கவாட்டில் நின்று வழிபட வேண்டும் என்று சாஸ்திரம் சொல்லும். ஏனெனில், சனியின் பார்வை நேரிடையாக நம்மீது படுவது மேலும் துன்பத்தைக் கொடுக்கும் என்பர். ஆனால், இங்கு எழுந்தருளியுள்ள பாதாள சனீஸ்வரரை நேரிடையாக நின்று வழிபடலாம் என்கிறார்கள். கைகளில் அமிர்த கலசம் இருப்பதால் நமக்கு அமிர்தமான வாழ்வினை வழங்குவார் என்பது நம்பிக்கை. சனீஸ்வர பரிகார தலமென்பதால், இங்கு நவக்கிரக சன்னதி இல்லை.
சனிதோஷ பரிகாரத் தலம்
சனி தோஷத்தால் பாதிக்கப்பட்ட நளமகாராஜன், நிவர்த்திக்காக சிவத்தலங்களுக்கு யாத்திரை சென்று, சுவாமியை வழிபட்டான். அவன் இத்தலம் வந்தபோது, இங்கிருந்த பாதாள சனீஸ்வரரையும் வணங்கி, தனக்கு அருளும்படி வேண்டினான். சனீஸ்வரர் அவனிடம் திருநள்ளாறு தலத்தில் தோஷ நிவர்த்தியாகும் என்று கூறியருளினார். மகிழ்ந்த நளன், திருநள்ளாறு சென்று தோஷ நிவர்த்தி பெற்றான். சனி தோஷ பரிகார தலமான இங்கு சனிப்பெயர்ச்சியன்று பரிகார மகா யாகம் நடக்கும். சனிப்பெயர்ச்சியால் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் இவரை வழிபட்டு வரலாம்.

கீழமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் கோவில்
சகல தோஷங்களையும் விலக்கும் ஞானபைரவர்
தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே 5 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது, கீழமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் காளஹஸ்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் ஸ்ரீஞானாம்பிகை.
காசி, காளஹஸ்தி, திருக்கைலாயம் போன்ற ஸ்தலங்களுக்கு சமமான தலம்தான் இந்த கீழமங்கலம் சிவாலயம் . சனி பகவானுக்கு குருவாக இருந்து உபதேசித்த ஞானபைரவர் காசியில் உள்ளார். அது போல இத்தலத்திலுள்ள ஞானபைரவர் எட்டு கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் சிவாகமத்தை கையில் வைத்து சனி பகவானுக்கு உபதேசம் செய்யும் கோலத்தில் உள்ளார். இங்கு மேற்கு திசையை நோக்கி சனி பகவான், கூப்பிய கைகளுடன் நின்ற கோலத்தில் தனது வலது காதால் தனது குரு, ஞானபைரவர் உபதேசத்தை கேட்டுக் கொண்டு இருக்கிறார். இந்த தலத்திற்கு வந்து வணங்கினால் காலத்திற்கும் சனியினால் வரக்கூடிய தீமைகள் வராது. என்றும் நன்மையே விளையும். ஏனெனில் இங்கு சனி பகவான் தனது குருவின் ஆணையை மீறி சிவபக்தர்களை தொந்தரவு செய்யமாட்டார். இத்தலத்தில் நித்திய சிவ அக்கினியுடன், ஜோதியுடன் இருப்பவர் பைரவர் மட்டுமே. அதனால் முதல் தீபம் இவருக்கு ஏற்றிய பிறகுதான் மூலஸ்தான சன்னதி மூர்த்திகளுக்கு தீபம் ஏற்ற வேண்டும். மடப்பள்ளியில் பிரசாதம் செய்வதற்கும் பைரவரிடம் இருந்துதான் அக்கினி எடுத்து செல்லவேண்டும். இந்த ஆலயத்தில் உள்ள ஞான பைரவர் சம கலைச் சந்திரனைச் சூடி இருப்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும். மேலும் அனைத்து கிரக தோஷங்களும் இத்தல ஞான பைரவரை வழிபட்டால் விலகும் என்பதால், இத்தலம் எல்லா தோஷத்திற்கும் சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகின்றது.
ஞானபைரவருக்கு ராகு காலம், எமகண்டம், தேய் பிறை அஷ்டமி போன்ற நாட்களிலும் சிறப்பு அபிசேகமும், சிறப்பு அலங்கார தீப ஆராதனையும் வெகு விமரிசையாக நடக்கிறது. அன்று மட்டும் சுமார் ஆயிரம் பக்தர்கள் வந்து, இத்திருக் கோவிலில் அருள் கடாட்சம் கொடுக்கும் ஞான பைரவரை வணங்கி நல்லருள் பெற்றுச் செல்கின்றனர்.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்
1. வருடத்திற்கு நான்கு முறை அன்னாபிஷேகம் செய்யப்படும் தலம்
https://www.alayathuligal.com/blog/8aksam98depeyt9nx7nyan3nc728lh
2. இரவும், பகலும் இடைவிடாமல் சிவ பூஜை செய்யும் அம்பிகை
https://www.alayathuligal.com/blog/t638e9awnfbxrh8k2wyt4ha975ee4w
3. அயல்நாட்டில் கல்வி பயிலும் யோகம் அருளும் அஷ்ட தட்சிணாமூர்த்தி தலம்
https://www.alayathuligal.com/blog/yxaj24gw2t24a2hp7wxemwy49y2zs5