
பாலதண்டாயுதபாணி கோவில்
வாதம் நோய் தீர்க்கும் குமரமலை முருகன்
புதுக்கோட்டையிலிருந்து காரையூர் செல்லும் வழியில் 12 கி.மீ., சென்றால் குமரமலை விலக்கு வரும். அங்கிருந்து சற்றுதூரம் நடந்தால் மலை அடிவாரத்தை அடையலாம். மலையில் 45 படி ஏறினால் கோவிலை அடையலாம். சுவாமிக்கு பாலதண்டாயுதபாணி என்ற திருநாமம்.
குமரமலை முருகனின் வரலாறு
குமரமலை பகுதியில் சேதுபதி என்ற தீவிர முருக பக்தர் வாழ்ந்து வந்தார். அவர் சிறு வயது முதலே பழநிக்கு பாதயாத்திரை மேற்கொள்பவர். 80 வயதைக் கடந்த நிலையில், ஒருமுறை கார்த்திகையன்று பழனிக்கு காவடி எடுத்துச் செல்ல முடியாத அளவுக்கு அவர் உடல் நோயுற்றது. 'பழனிக்குச் சென்று வழிபட முடியவில்லையே? இனி நான் உயிர் வாழ்ந்து என்ன பயன்?' என்ற வேதனைப்பட்ட அவர் கனவில் தோன்றிய முருகன், இத்தனை ஆண்டுகள் நீ என்னைத் தேடி வந்தாய். இந்த ஆண்டு உன்னைத் தேடி நான் வருகிறேன். உன் ஊருக்கு அருகிலுள்ள குன்றில் சங்குச் செடிகள் வளர்ந்து கிடக்கும் இடத்திற்கு காலையில் நான் வருவேன். அங்கு வந்து என்னைத் தரிசனம் செய்து வழிபடு. நான் அங்கு குடிகொண்டதற்கு அடையாளமாக அந்த இடத்தில் ஒரு விபூதிப் பை, உத்திராட்ச மாலை, பிரம்பு, எலுமிச்சம் பழம் ஆகியவை இருக்கும்.
அந்த இடத்தில் மேற்கு நோக்கி ஒரு வேலை வைத்து நீயும் இப்பகுதி மக்களும் வழிபடுங்கள். இனி இந்தக் குன்று 'குமரமலை' என்ற பெயருடன் விளங்கும். இப்பகுதி மக்கள் அனைவரும் அனைத்து நன்மைகளும் பெறுவார்கள்! என்று சொல்லி மறைந்தார்.
கனவில் முருகன் சொல்லியபடி சங்குச் செடிகளின் இடையில் இருந்த விபூதிப் பை, பிரம்பு, உத்திராட்ச மாலை, எலுமிச்சம் பழம் அனைத்தையும் கண்டு, பழனி முருகன் வந்தமர்ந்த இடத்தில்,அவர் அருளாணைப்படி ஆள் உயர வேலை பிரதிஷ்டை செய்து, அப்பகுதி மக்களும் வழிபட்டனர்.
வேலை எடுத்து விட்டு, அந்த இடத்தில் பழனி தண்டாயுதபாணியின் திருவுருவத்தை எழுந்தருளச் செய்யலாம் என்று திட்டமிட்ட போதும் முருகன் தோன்றி, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் இருக்கும் சிற்பியின் பெயரைச் சொல்லி, 'அவர் ஒரு முருகன் சிலையை வடிவமைத்து வைத்திருக்கிறார். அதை நான் சொன்னதாகச் சொல்லி கேள், தருவார். வாங்கி வந்து நான் வந்து நின்ற சங்குச் செடி மண்டிக் கிடக்கும் இடத்தில் மேற்கு நோக்கி வைத்து வழிபடுங்கள்' என்று சொல்லி மறைந்தார்.
அந்த இடத்தில் கோவில் கட்டி, சிற்பியிடம் பெற்ற பாலமுருகன் சிலையை பிரதிஷ்டை செய்தார்.
சங்கு சுனைத் தீர்த்தம்
குமரமலைக்கு மேல் சங்கு வடிவிலான சுனைத்தீர்த்தம் உள்ளது. இங்கிருந்தே சுவாமிஅபிஷேகத்துக்கு தேவையான புனித நீர் எடுக்கப்படுகிறது. கோவிலில் வழங்கப்படும் இந்த தீர்த்தத்தை பக்தர்கள் பருகுவதன் மூலம் நோய் நொடிகள் நீங்குவதாகவும் நம்பிக்கையுள்ளது.
வாதநோய்க்கு பிரார்த்தனை
வாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குமரமலை அடிவாரத்திலுள்ள தீர்த்தத்தில் நீராடி முருகனுக்கு பால் அபிஷேகம் செய்வதுடன், அர்ச்சனை செய்து வழிபட்டு செல்வதால் வாதம் நோய் நீங்குகிறது.
வேலுக்கு வளையல் கட்டி, சுகப் பிரசவத்திற்கு பிரார்த்தனை
இப்பகுதி பெண்கள் தங்கள் வளைகாப்பு நிகழ்ச்சியன்று அர்த்தமண்டபத்திலுள்ள வேலில் வளையல்களை கட்டி வழிபடுகின்றனர். இவ்வாறு செய்தால் பிரசவம் எளிமையாகும் என்பது நம்பிக்கை. குமரமலைக்கு சஷ்டி திதிகளில் வந்து விரதம் இருப்பதன் மூலம் திருமணத்தடை நீங்கவும், குழந்தை பேறு கிடைக்கவும் செய்வதாக நம்பிக்கையுள்ளது.

சூரியகோடீசுவரர் கோவில்
பக்தர்களை எழுந்து வந்து வரவேற்கும் அபூர்வத் தோற்றத்தில் துர்க்கை அம்மன்
கும்பகோணத்தில் இருந்து, கஞ்சனூர், திருலோகி கிராமங்களை அடுத்து 15.கி.மீ தொலைவில், சூரியனார் கோவிலுக்கு அருகே மைந்துள்ளது கீழசூரியமூலை என்ற தலம். இறைவன் திருநாமம் சூரியகோடீசுவரர். இறைவி பவளக்கொடி.
இக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் துர்க்கையின் ஒரு பாதத்தில் மட்டும் மெட்டி உள்ளது. மேலும் துர்க்கையின் இரு பாதங்களும் ஒன்றுக்கொன்று நேரான நிலையில் இல்லை. அதாவது துர்க்கை அம்மன் தன் வலது காலை சற்று முன்பக்கமாக நீட்டி வைத்துக்கொண்டு காட்சி தருகிறாள். இந்த தோற்றமானது, தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்களை துர்க்கை அம்மன் வலது காலை முன் வைத்து எழுந்து, அவளே முன்னால் வந்து வரவேற்பது போல தோன்றும். துர்க்கை அம்மனின் இந்த தோற்றத்தை நாம் வேற எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
வலது காலில் ஆறு விரல்கள் உள்ள மகாலட்சுமி
இக்கோவிலின் குபேர மூலையில், பத்மாசனத்தில் வீற்றிருக்கும் மகாலட்சுமியின் வலது காலில் ஆறு விரல்கள் அமைந்துள்ளன. 'ஆறு' என்பது சுக்கிரனுக்குரிய எண் ஆகும். எனவே சுக்கிரனின் சக்தி அவளிடம் பூரணமாக உள்ளது. எப்போதும் சுக்கிரனுடைய அனுக்கிரகத்திலேயே இருப்பதால், அவளை வழிபடும் பக்தர்களுக்கு செல்வத்தை வாரி வழங்குபவளாக விளங்குகின்றாள்.

மகாலிங்கேசுவரர் கோவில்
தலைமைச் சிவாச்சாரியாராகத் திகழும் ஆண்ட விநாயகர்
கும்பகோணத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவில் மயிலாடுதுறை செல்லும் சாலை வழியில் தேவாரத்தலமான திருவிடைமருதூர் இருக்கிறது. இறைவன் திருநாமம் மகாலிங்கேசுவரர்.
மூலவர் மகாலிங்கப் பெருமான் சன்னிதிக்கு தென்பகுதியில் ஆண்ட விநாயகர் சன்னிதி உள்ளது. இவர் வடக்கு திசை நோக்கி, மகாலிங்கப் பெருமானைப் பூஜிக்கும் நிலையில் அமர்ந்து நமக்கு அருள்பாலிக்கிறார்.
இவர் தேவகணங்கள் கொண்டு வந்து கொடுக்கும் பூஜைப் பொருட்களைக் வைத்து, பஞ்சாட்சர விதிப்படி மகாலிங்கப் பெருமானைப் பூஜித்து வருகிறார். மேலும் இந்த இடத்தில் இருந்து தனது அருட்சக்தியால், பல உயிர்களும் உய்யும் வண்ணம் அரசாட்சி செய்து வந்தமையால் இவ்விநாயகப் பெருமான், 'ஆண்ட விநாயகர்' என்னும் திருநாமம் பூண்டு எழுந்தருளியுள்ளார்.
இந்த ஆண்ட விநாயகர்தான் தினம் ஆறு காலம் மகாலிங்கப் பெருமானை அர்ச்சித்து பூஜை செய்து வருகிறார். எனவே இத்தலத்து தலைமைச் சிவாச்சாரியாராக, இவர் கருதப்படுகிறார். மற்ற சிவாச்சாரியார்கள் எல்லாம் இவருடைய உதவியாளர்களாகவே கருதப்படுகின்றனர்.
பொதுவாக சிவாலயங்களில், சிவாச்சாரியார், தான் முதலில் ஸ்நானம் செய்துவிட்டு, அதன் பிறகு இறைவனுக்கு அபிக்ஷேகம், நைவேத்தியம், தீபாராதனைகளைச் செய்வார். மேலும் சிவாலயங்களில் விநாயகருக்கு அபிக்ஷேகம், நைவேத்தியம், தீபாராதனை ஆன பிறகுதான் அவையெல்லாம் சுவாமிக்கு நடைபெறும். ஆனால் இத்தலத்தில் ஆண்ட விநாயகருக்கு முதலில் அபிஷேகம் மட்டும் நடைபெறும். இது சிவாச்சாரியார் பூஜை செய்வதற்கு முன் செய்யும் ஸநானத்திற்கு ஒப்பானது. அதன் பின்னர் கோவில் சிவாச்சாரியார் ஆண்ட விநாயகரின் கைகளில் இருக்கும் தர்ப்பையைப் பெற்றுக் கொண்டு, சுவாமி சன்னதிக்குச் சென்று ஆண்ட விநாயகர் சார்பாக சுவாமிக்கு அபிக்ஷேகம், நைவேத்தியம், தீபாராதனை செய்வார். இவ்விநாயகர் தன் கைகளில் பாசாங்குசத்திற்குப் பதிலாக தர்ப்பை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆகம விதிப்படி, சுலாமிக்குச் செய்த நைவேத்தியத்தின் ஒரு பகுதி சிவாச்சாரியருக்கு உரியதாகவும், அவருக்கு உணவாகவும் ஆகிறது. அதன்படியே மகாலிங்கப் பெருமானுக்கு சமர்பிக்கப்பட்ட நைவேத்தியத்தின் ஒரு பகுதி ஆண்ட விநாயகருக்கு நைவேத்தியமாகிறது.
ஆண்ட விநாயகரின் தலைமைச் சிவாச்சாரியார் என்ற பொறுப்பிற்கு ஏற்ப, கோவில் திருவிழாக்களின் கொடியேற்றத்தின்போது முதல் கொடியேற்றம் அவர் உற்சவ மூர்த்தியின் முன்னிலையில் நடைபெறுகிறது. அதுபோல, சந்திரசேகர், சுப்பிரமணியர் முதலியோரின் வீதிப்புறப்பாட்டின்போதும் இவர் உடன் செல்வார்.

நவபாஷாண நவக்கிரக கோவில்
ராமபிரான் கடலின் நடுவே நவக்கிரக பூஜை செய்த தலம்
ராவணன் சீதையை கவர்ந்து சென்று அசோகவனத்தில் சிறைவைத்தான். இதை அறிந்த ராமன் சீதையை மீட்பதற்காக தென்திசை நோக்கி வந்தார். தேவசாஸ்திரங்களிலே குறிப்பிட்டது போல் எந்த ஒரு காரியம் செய்வதற்கும் முன்பாக பிள்ளையார் பூஜை, நவக்கிரக பூஜை செய்வது வழக்கம். அதன்படி ராமபிரானும் உப்பு படிவங்கள் நிறைந்த இடத்தில் விநாயகரை பூஜை செய்தார். அதுவே தற்போது ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள உப்பூர் வெயிலுகந்த விநாயகரானது.
பின்பு 15 கி.மீ. தொலைவிலுள்ள தேவிபட்டினம் வந்த ராமபிரான் தமது கையால் கடலின் நடுவே ஒன்பது பிடி மணலால் நவக்கிரங்களை பிரதிஷ்டை செய்து நவக்கிரக பூஜை செய்தார். புராண காலம் தொட்டு இத்தலத்தில் ஆரவாரமில்லாத கடலின் நடுவே 9 கல் சிலைகளாக நவக்கிரகங்கள் அமைந்த அற்புத காட்சி ஆச்சர்யம் அளிப்பதாக உள்ளது.
இத்தலத்திலே பார்வதியும், பரமேஸ்வரனும் சௌந்தர்ய நாயகி சமேத திலகேஸ்வரராக எழுந்தருளி, இராமபிரானுக்கு ஆசிகள் வழங்கினார்கள். மேலும் ராமபிரானுக்கு சனி தோஷத்தை நிவர்த்தி செய்த தலம் இதுவேயாகும்.
பாவங்கள் தீர, பிதுர்கடன் கழிக்க அருளும் தலம்
முன்ஜென்ம பாவங்கள் தீர, பிதுர்கடன் கழிக்க, தர்ப்பணம், ஸ்ரார்த்தம் முதலியவை இத்தலத்தில் செய்யலாம். நவக்கிரக தோஷங்கள் விலக இங்கு வழிபடலாம். இவை தவிர குழந்தை பாக்கியம், ஆயுள் , கல்வி, செல்வம் பெருகவும் இங்கு பிரார்த்தனை செய்யலாம். அனைவரும் இங்குள்ள நவக்கிரகங்களை தொட்டு அவரவர் கைகளாலேயே அபிஷேகம், அர்ச்சனை செய்வது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.
ஆடி அமாவாசை திருவிழா
இத்தலத்தில் நடைபெறும் ஆடி அமாவாசை பத்து நாள் திருவிழாவின்போது, நாடு முழுவதும் இருந்து 1 லட்சம் பேர் தீர்த்தம் ஆட கூடுவது வெகு சிறப்பு. தை அமாவாசை அன்றும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவர்.

சேஷபுரீஸ்வரர் கோவில்
ராகு – கேது தோஷம் நீக்கும் தேவாரத் தலம்
மயிலாடுதுறை – திருவாரூர் சாலையில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 7 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருப்பாம்புரம். இத்தலத்து இறைவன் சேஷபுரீஸ்வரர், பாம்புரநாதர். இறைவி பிரமராம்பிகை.
ஆதிசேஷன் வழிபட்ட தலம்
கைலாயத்தில் ஒருமுறை விநாயகர் சிவபெருமானை வழிபடும் போது, இறைவன் கழுத்திலிருந்த பாம்பு விநாயகர் தன்னையும் வணங்குவதாக எண்ணி கர்வமடைந்தது. அதனால் கோபமடைந்த சிவன் நாக இனம் முழுவதும் தன் சக்தி அனைத்தும் இழக்கும்படி சாபமிட்டார். அதனால் உலகைத் தாங்கும் ஆதிசேஷனும், இராகு, கேது மற்ற நாக இனங்களும் தங்கள் சக்தி அனைத்தும் இழந்து அல்லல் பட்டன. சாப விமோசனம் வேண்டி ஈசனைத் துதிக்க இறைவனும் மனமிரங்கி பூவுலகில் சேஷபுரி எனப்படும் திருப்பாம்புரம் தலத்தில் சிவராத்திரி நாளன்று தம்மை தொழுதால் சாப விமோசனம் கிட்டும் என அருளினார்.
அவ்வாறே ஆதிசேஷன் தலைமையில் நாகங்கள் சிவராத்திரி முதல் சாமத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், இரண்டாம் சாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாதரையும், மூன்றாம் சாமத்தில் திருப்பாம்புரம் பாம்புர நாதரரையும், நான்காம் சாமத்தில் நாகூர் நாகநாதரையும் வழிபட்டு சாப விமோசனம் பெற்றனர்.
விஷம் தீண்டாப் பதி
ஆதிசேஷன் வழிபட்ட கோவில் ஆதலால் இன்றும் இக்கோவிலுக்கே உரிய அதிசயமாக வாரத்தின் மூன்று தினங்களில் கோவிலின் கர்ப்ப கிரகங்களில் நாக பாம்புகள் வந்து இறைவனை தரிசிப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.ஞாயிறு, செவ்வாய், வெள்ளிகிழமைகளில் திருப்பாம்புரம் கோவிலுக்குள் மல்லிகையின் மணமோ, தாழம்பூவின் மணமோ வீசுவதாகவும் அச்சமயம் பாம்பு கோவிலுக்குள் எங்கேனும் உலாவிக் கொண்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. இத்தலத்தில் பாம்புகள் யாரையும் கடிப்பது இல்லை என்கிறார்கள். விஷம் தீண்டாப் பதி என்ற சிறப்பு இத்தலத்திற்கு உள்ளது.
ராகு கேது பரிகார தலம்
திருப்பாம்புரம் ஒரு ராகு கேது நிவர்த்தி தலம். குடந்தை, நாகூர், திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, கீழப்பெரும்பள்ளம் ஆகிய நாக தோஷ பரிகார தலங்கள் அனைத்தையும் தரிசித்த பலன் திருப்பாம்புரம் ஒன்றை மட்டும் தரிசித்தாலே போதும் என்கிறது தல மகாத்மியம். ராகுவும் கேதுவும் ஏக சரீரியாக அதாவது ஓருடலாக இருந்து தன் நெஞ்சில் சிவபெருமானை வைத்து வழிபட்டதால் இத்தலம் ராகு கேது பரிகாரத் தலமாக விளங்கிகிறது.
நாகதோஷத்தால் பாதிக்கப்பட்டு புத்திர பேறின்மை மற்றும் திருமணமாகா நிலையிலிருப்பவர்கள் இங்கு வந்து பூஜைகள் செய்து வழிபட அந்த தோஷங்கள் தீரும் அதோடு வாழ்வில் இருந்து வந்த காரிய தடைகள் விலகும். ஜாதகத்தில் ராகு- கேது கிரக நிலை சரியில்லாமல் இருப்பவர்கள், அந்த கிரகங்களின் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரே நாளில் காலையில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில் வழிபட்டு, மதியம் திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலிலும், மாலை திருப்பாம்புரம் கோவிலில் வழிபட்டு, இரவு நாகூர் நாகேஸ்வரர் கோவிலில் தங்களின் வழிபாட்டை முடிக்க ராகு-கேது கிரகங்களால் தீமையான பலன்கள் ஏதும் ஏற்படாமல் காக்கும்.
போதை பழக்கம் விடுபட, வழிபட வேண்டிய தலம்
போதை பழக்கம் உள்ளவர்கள் ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 - 6 ராகு காலத்தில் இத்தல இறைவனுக்கு அர்ச்சனை செய்து வழிப்பட்டால் தீய பழக்கங்களில் இருந்து விடுபடலாம். இவ்வாறு செய்து வந்தால் 264 வகையான பாவங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

இருக்கன்குடி மாரியம்மன் கோவில்
இருக்கன்குடி மாரியம்மனின் சிறப்பம்சம்
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் எனும் ஊரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது இருக்கன்குடி மாரியம்மன் கோயில்.
வழக்கமாக, கோவில்களில், மாரியம்மன், இடது காலை மடித்து, வலது காலைத் தொங்கவிட்டபடிதான் இருப்பார். ஆனால் இந்தக் கோயிலில் இருக்கும் மாரியம்மனோ, வலது காலை மடித்து, இடது காலைத் தொங்கவிட்டிருக்கிறார். இந்த அமைப்பே, 'இருக்கன்குடி மாரியம்மனின் மிகப் பெரிய சிறப்பம்சமாகும்.
இருக்கன்குடி என்று பெயர் வரக் காரணம்
கோயிலின் தெற்குப் பக்கம் வைப்பாறு, வடக்குப் பக்கம் அர்ச்சுனன் ஆறு என்று இரு ஆறுகள் சேர்ந்து வருவதால் இரு கங்கை கூடுமிடம் என்று சொல்லப்பட்டு, இந்த இடத்தில் அம்மன் குடி கொண்டு விட்டதால், 'இரு கங்கை' குடி என்று இருந்து, பின்னாளில் அது, 'இருக்கன்குடி' என்றாகி விட்டது.
மாரியம்மன் கோவில் உருவான வரலாறு
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு சாணம் பெருக்க வந்த இருக்கன்குடி கிராமத்தை சார்ந்த பெண் ஒருத்தி, கூடையை வைத்துச் சாணம் பொறுக்கி சேர்த்திருக்கிறாள். ஓரளவு சாணம் சேர்ந்த பின்பு, அந்த இடத்தில் இருந்து கூடையை எடுக்க முயன்று இருக்கிறாள். அந்தக் கூடையை எடுக்க முடியவில்லை. அப்பொழுது அவள் சாமி வந்து ஆடியிருக்கிறாள். சாமியாடிய அந்தப் பெண், அந்தக் கூடை இருக்கும் இடத்தில், சிலையாகப் புதைந்து கிடக்கும் தன்னை வெளியில் எடுத்து, கோயில் அமைத்து வணங்கினால், அனைத்து வேண்டுதல்களையும், நிறைவேற்றித் தருவதாகத் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு, மக்கள் அந்த இடத்தில் புதைந்து கிடந்த சிலையை எடுத்துக் கோயில் அமைத்து வழிபடத் துவங்கினர்.
குழந்தை வரம் அருளும் மாரியம்மன்
ஆடி, தை, பங்குனி மாதங்களில் கடைசி வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் இத்தலத்திற்கு அதிக அளவில் வருகின்றனர். இங்கு, குழந்தையில்லாதவர்கள், குழந்தை வேண்டி தொட்டில் கட்டி வேண்டுகின்றனர். உடல் குறைபாடுள்ளவர்கள், உருவம் செய்து வைத்து வழிபடுகின்றனர். கண் நோய், வயிற்று வலி, அம்மை, கை, கால் வலி உள்ளவர்கள் இந்த மாரியம்மனை வணங்கினால் நோய் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தட்சிணாமூர்த்தி கோவில்
வடதிசை நோக்கி அருள்பாலிக்கும் அபூர்வ தட்சிணாமூர்த்தி
சென்னை மாநகரத்தின் திருவொற்றியூர் பகுதியில் தனிக்கோவில் கொண்டு தட்சிணாமூர்த்தி அருள் பாலிக்கிறார்.
எல்லா கோயிலிலும் சுற்றுப்பகுதியில் தெற்கு நோக்கி அமைந்திருக்கும் தட்சிணா மூர்த்தி இந்த கோயிலில் மூலவராக அதுவும் வடக்கு நோக்கி அருள்பாலிப்பது, வேறெங்கும் காண முடியாத அமைபபு. இதனால், இத்தலம் 'வட குருதலம்' என அழைக்கப்படுகிறது. நவக்கிரகங்களில் குரு பகவான், வடக்கு நோக்கி காட்சியளிப்பதன் அடிப்படையில் இவ்வாறு பிரதிஷ்டை செய்ததாகச் சொல்கிறார்கள். குபேரனின் திசையான வடக்கு நோக்கியிருப்பதால், இவரிடம் வேண்டிக்கொள்ள குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது நம்பிக்கை.
மூலவர் தட்சிணாமூர்த்தி வலது கையில் அக்னி, இடக்கையில் நாகம் வைத்து, காலுக்கு கீழே முயலகனை மிதித்தபடி சுவாமி காட்சி தருகிறார். பொதுவாக தட்சிணாமூர்த்தியின் கீழே சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் என நான்கு சீடர்கள் மட்டுமே இருப்பர். ஆனால் இங்கு மூலவரின் பீடத்தில் 18 மகரிஷிகள் சீடர்களாக இருக்கின்றனர். இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம். உற்சவர் தட்சிணாமூர்த்தியின் பீடத்தில் யானை வணங்கியபடி அமைக்கப்பட்டிருக்கிறது
வீடு கட்ட, புது நிலம் வாங்க விரும்புபவர்கள் கோவில் வளாகத்தில் கற்களை வீடு போல, அடுக்கி வைத்து வேண்டிக் கொள்கிறார்கள். கல்வி, கலை, இலக்கியம், இசை போன்ற துறைகளில் சிறப்பிடம் பெற இங்கு வேண்டிக் கொள்கிறார்கள். திருமணத்தடை நீங்க, ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் எலுமிச்சையில் நெய் தீபம் ஏற்றியும் வழிபடுகிறார்கள். தெட்சிணாமூர்த்தியிடம் வேண்டிக்கொள்பவர்கள் கொண்டை கடலை மாலை அணிவித்து, சன்னதி முன்பு நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

அகத்தீஸ்வரர் கோவில்
திருமேனியைத் தட்டினால் ஓசை தரும் அம்மன்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்-பந்தநல்லூர் சாலையில் திருப்பனந்தாளில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது மேலக்காட்டூர். இத்தலத்து இறைவன் அகத்தீஸ்வரர். இறைவி அகிலாண்டேஸ்வரி.
அம்பிகை அகிலாண்டேஸ்வரி நான்கு கரங்களுடன், முகத்தில் புன்னகை தவழ நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். அம்பிகை தன் மேல் இரண்டு கரங்களில் தாமரை மலரையும் கீழ் இரண்டு கரங்களில் அபய வரத ஹஸ்த முத்திரைகளுடன் அருள்பாலிக்கிறாள். இந்த அம்பிகையின் திருமேனியில் அர்ச்சகரின் மோதிரமோ அல்லது அர்ச்சனை தட்டோ அல்லது வேறு ஏதாவது உலோகமோ பட்டால், சப்த ஸ்வரங்களுடன் ஓசை வெளியிட்டு, கேட்பவரை மெய் சிலிர்க்க வைக்கிறது.
இதனால் இங்கு அருள்பாலிக்கும் அம்பிகையை 'ஓசை அம்மன்' என்று பக்தர்கள் கூறுகின்றனர்.
இந்த ஆலயத்தில் இறைவன் அகத்தீஸ்வரர் சன்னிதியில் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு, குழந்தையை தத்துக் கொடுக்கும் வைபவமும் சிறப்பாக நடைபெறுகிறது. அந்தக் குழந்தை மட்டுமல்ல, குழந்தையை தருபவர்களும், பெறுபவர்களும் இறைவன் அருளால் நிறைவாக வாழ்கிறார்கள் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.
இறைவன் அகத்தீஸ்வரரின் தேவ கோட்டத்தில், தென்புறம் தட்சிணாமூர்த்தியின் திருமேனி உள்ளது. இவரது அமைப்பு வித்தியாசமாக உள்ளது. அமர்ந்த நிலையில் உள்ள தட்சிணாமூர்த்தியின் காலை, அவரது பின்புறம் இருந்து நந்தி தேவர் தனது நாவால் வருடிக் கொண்டிருக்கும் காட்சி புதுமையாக உள்ளது. நந்தி தேவர் தனது நாவால் குருபகவானை வருடுவதால், குருபகவான் கண் துயிலாது பக்தர்களின் கோரிக்கைகளை எந்த நேரத்திலும் கேட்டு அருள்பாலிக்கிறார் என்று இதற்கு விளக்கம் சொல்லப்படுகிறது.

திருவெண்காடர் சிவன் கோவில்
சிவலிங்கத் திருமேனி வடிவில் சிறியதாகவும், பெரியதாகவும் மாறித் தோன்றும் அதிசயம்
திருநெல்வேலியிலிருந்து மேற்கே சுமார் 38 கி. மீ தூரத்தில் திருநெல்வேலி - பொட்டல்புதூர் சாலையில் பாப்பான்குளம் எனும் ஊரில் திருவெண்காடர் சிவன் கோவில்
அமைந்துள்ளது. இறைவன் திருநாமம் திருவெண்காடர். இறைவி வாடாகலை நாயகி.
வடக்கே வெண்பனி உறைந்த கயிலை மலையில் உறையும் ஈசனே இங்கு வந்து எழுந்தருளி இருப்பதால் இவருக்கு திருவெண்காடர் என்று பெயர்.
இந்தக் கோவிலின் சிவலிங்கத் திருமேனியானது சந்திரகாந்தக் கல் என்னும் அபூர்வமான கல்லைக் கொண்டு செய்யப் பட்டது ஆகும். கருவறைக்கு அருகில் இருந்து பார்த்தால் சிவலிங்கமானது சிறியதாகவும், கொடிமரத்திற்கு அருகில் இருந்து பார்த்தால் பெரிதாகவும் தெரிவது ஒரு அதிசயமாகும். மூலவர் சந்திரகாந்த கல்லில் செய்யப்பட்ட லிங்கத் திருமேனி என்பதால் குறிப்பிட்ட விநாடிக்கு ஒரு முறை சில நீர் துளிகள் சிவலிங்கத்தின் மீது விழுகிறது.
சுவாமி திருவெண்காடர் சந்திரகாந்த லிங்கத் திருமேனியனாக இருப்பதனால் இவருக்குச் செய்யப்படும் அபிஷேகத் தீர்த்தம் நோய் தீர்க்கும் அருமருந்தாக விளங்குகிறது. ஒரு மண்டலம் இவரை வழிபட்டு அபிஷேகத் தீர்த்தத்தினைப் பருகிவர, அனைத்துவித நோய்களும் குணமாகிறது என்பது பக்தர்களின் அனுபவம்.

ஆதி திருவரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவில்
பள்ளிகொண்ட பெருமாள்களில் பெரிய பெருமாள்
தமிழகத்திலுள்ள ஶ்ரீரங்கநாதா் திருமேனிகளிலேயே மிகப் பெரிய விக்கிரகத் திருமேனி, ஆதி திருவரங்கத்தில் அமைந்துள்ள அா்ச்சாவதாரத் திருமேனியாகும். இத்தலம் சத்திய யுகமான 'கிருதயுகம்' முதல் திகழ்வதாலும், திருவரங்கத்திற்கு முந்தைய திருத்தலமாக இருப்பதாலும் இத்தலம் 'ஆதி திருவரங்கம்' என்றும், இத்தலத்தில் அருள்பாலிக்கும் ஶ்ரீரங்கநாதா் 'பெரிய பெருமாள்' என்றும் வணங்கப்படுகின்றாா்.
மீன ராசிக்காரர்களின் பரிகாரத் தலம்
இத்தலத்தில் பள்ளி கொண்டிருக்கும் ஆதி திருவரங்கனின் சயனக் கோலத் திருமேனி சுதையால் அமைக்கப்பட்டது என்பதால் இவருக்கு அபிஷேகம் கிடையாது. தைலக் காப்பு மட்டுமே சாற்றப்படுகின்றது.ஶ்ரீமந்நாராயணனின் மச்ச அவதாரத் தலமாகவும் இத்தலம் வணங்கப்படுகின் றது. மீன ராசியில் பிறந்த அன்பா்கள் வணங்க வேண்டிய பரிகாரத் தலம் ஆதி திருவரங்கம் தலமாகும்.
ஆதி திருவரங்கம் திருக்கோயிலூரிலிருந்து 16 கி.மீ. தூரத்திலும், திருவண்ணாமலையிலிருந்து 30 கி.மீ. தூரத்திலும், சென்னையிலிருந்து 220 கி.மீ. தூரத்திலும் உள்ளது.

சுப்பிரமணிய சுவாமி கோவில்
தனித்தனி மயில் வாகனத்தில் எழுந்தருளியிருக்கும் முருகன், வள்ளி, தெய்வயானை
திருச்சி நகரத்திலிருந்து 35 கி.மீ. தொலைவில் லால்குடிக்கு அருகில் உள்ள திண்ணியம் எனும் தலத்தில் அமைந்துள்ளது சுப்பிரமணிய சுவாமி கோவில். இக்கோவிலில் எழுந்தருளியுள்ள ஈசனின் திருநாமம் கோடீசுவரர். இறைவி பிருகந்தநாயகி.
இக்கோவிலின் உள்ளே நுழைந்ததும் நமக்கு முதன்மையாக காட்சி தருபவர் சுப்பிரமணிய சுவாமிதான். பொதுவாக சிவாலயங்களில் ஈசுவரனை தரிசித்த பின்புதான் முருகப்பெருமானை தரிசிக்கும் வகையில் சன்னதிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இக்கோவிலில் ஒரே இடத்தில் நின்றபடி சிவனையும், முருகனையும் தரிசிக்கும்படி சன்னதிகள் அமைந்திருப்பது தனிச் சிறப்பாகும்.
மற்ற கோவில்களில் தனியாகவோ அல்லது வள்ளி தெய்வயானை சமேதராகவோ முருகப்பெருமான் மயில் மேல் எழுந்தருளியிருப்பார். ஆனால் இக்கோவிலில் மூவரும் தனித்தனியே மயில் வாகனத்தில் எழுந்தருளியிருப்பது மேலும் ஒரு சிறப்பாகும்.
திருமணப்பேறு, குழந்தை வரம், கல்வி ஞானம் அருளும் முருகன்
இத்தலத்தில் முருகனுடைய வலது கரம், அபயம் காட்டுகிறது. பக்தர்களை காக்கும் கரமாக விளங்குகிறது. அதேசமயம் இடது கரம் வரத ஹஸ்தமாக இல்லாமல் அரிஷ ஹஸ்தமாக உள்ளது. அதாவது, பக்தர்களுடைய கஷ்டங்களை தான் வாங்கிக் கொள்ளும் கையாக உள்பக்கமாக அணைந்தபடி உள்ளது. பிற பத்துக் கரங்களும் பக்கத்துக்கு ஐந்தாக அமைந்து, பக்தர்களின் துயர்களை யெல்லாம் களைகின்றன. இதனால் இந்தக் கோயிலுக்கு வருபவர்களுக்கு திருமணத்தடை நீங்குதல், குழந்தை பாக்கியம், கல்வி ஞானம் உள்ளிட்ட பலன்கள் கிடைக்கிறது என்கிறார்கள் பக்தர்கள். இக்கோவில் முருகன் சிலை, வண்டியிலிருந்து கீழே சரிந்து இத்தலத்தில் நிலை கொண்டுவிட்டதால், இந்தக் கோயிலுக்கு வந்து வழிபடுவோர் விரைவிலேயே சொந்த வீடு, நிலம் வாங்குவார்கள் என்றும் நம்பப்படுகிறது.

ஏரி காத்த ராமர் கோவில்
அம்பு அணையால் ஏரி உடையாமல் காத்த ராமர்
சென்னையில் இருந்து சுமார் 32 கி.மீ. தூரத்திலுள்ள திருநின்றவூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது ஏரி காத்த ராமர் கோவில். திருநின்றவூர் பக்தவத்சலப் பெருமாள் கோவிலுக்கு மிக அருகில் உள்ளது.
திருநின்றவூர் திவ்ய தேசமான பக்தவத்சலப் பெருமாள் கோவிலுக்கும், பூசலார் நாயனாரால் மனக்கோயில் கட்டி வழிபடப்பட்ட இரு தயாலீஸ்வரர் கோவிலுக்கும் இடையே உள்ளது இத்தலம். பக்தவத்சலப் பெருமாள் கோவிலை விட, திரு நின்றவூர் ஏரிக்கரையில் உள்ள இக்கோவில் மிகப் பிரசித்தமானது என்கிறார்கள். திருநின்றவூர் ஏரியானது தமிழ்நாட்டினிலே அமைந்துள்ள ஏழாவது பெரிய ஏரியாகும்.
கருவறையில் கிட்டத்தட்ட எட்டடி உயரத்தில் ஆஜானுபாகுவாகக் கைகளில் வில்லும் அம்பும் ஏந்தி, இதழோரத்தில் குறுநகை பொலியக் காட்சி தருகிறார் ராமபிரான். உடன் ஆயுதமின்றி லக்ஷ்மணர் தனது வலது கரம் வில்லைப் பிடிப்பதைப் போன்ற பாவனையிலும், சீதா பிராட்டி கையில் தாமரை மலர் ஏந்திய கோலத்திலும் விளங்குகின்றனர். இந்த விக்கிரகங்கள் அனைத்தும் சுதையால் செயப்பட்டுள்ளன.
ஒருமுறை திருநின்றவூரில் மிகப்பெரிய மழை பெய்தது. இதனால் அவ்வூர் ஏரி நிரம்பி, உடைந்து ஊரே அழியக்கூடிய தறுவாயில் மக்கள் ராமரிடம் முறையிட்டனர். தங்கள் ஊரை சேதத்தில் இருந்து காத்தால் கோவில் கட்டி வழிபடுவதாக வேண்டிக் கொண்டனர். ஆனால், மழையோ விடுவதாக இல்லை. ஒரு கட்டத்தில், 'எப்படியும் இன்று இரவு ஏரி உடைந்து தண்ணீர் ஊருக்குள் வந்து விடும். ராமா, நீயே துணை' என்று ஜபித்தவாறே அவரவர் தத்தமது வீடுகளை அடைந்தனர். நேரமானதால் கண்ணயர்ந்தும் விட்டனர்.
பொழுது புலர்ந்தது. திடுக்கிட்டு எழுந்த மக்கள் வெள்ளத்தின் நிலைமையைக் காண வெளியே வந்தனர். அப்போது சிலர் ஏரிக்கரையில் இருந்து, 'ராமர் நம்மைக் கைவிட வில்லை. பாருங்கள் இந்த அதிசயத்தை'என்று கூவியவாறு தலை மேல் கரம் குவித்து ஓடி வந்தனர். அவர்களைக் கண்ட மற்றவர்களும் ஏரியை நோக்கி ஓடினர். அங்கு அவர்கள் கண்டகாட்சி அவர்களை உவகையில் ஆழ்த்தியது. கரை முழுவதும் ஒரே சீராக அம்புகள் தைக்கப்பட்டிருந்தன. அம்பு அணைக்குள், தண்ணீர் ததும்பிக் கொண்டிருந்தது. ராமரின் கருணையை எண்ணி, மக்கள் பேரானந்தம் அடைந்தனர். உடனே ஏரிக்கரையில் ராமபிரானுக்குக் கோவில் அமைக்கும் பணிகளைத் துவக்கினர்.

சங்கரநாராயணர் கோவில்
கோமதி அம்மனின் ஆடித்தபசு
மதுரையிலிருந்து சுமார் 120 கி.மீ. தூரத்திலுள்ள சங்கரன்கோவில் என்னும் ஊரில் அமைந்துள்ளது சங்கரநாராயணர் கோவில். இறைவன் சங்கரலிங்கசுவாமி. இறைவி கோமதி அம்மன். கோ என்றால் பசுக்கள். மதி என்றால் நிலவு போன்ற முகம் கொண்டவர் என்று பொருள்.
கருவறையில் கோமதி அம்மன் அழகே உருவானவளாக ஸ்ரீசக்ர பீட பஞ்ச பிரம்மாசனத்தின் மேல் வலது இடை நெளிந்து, வலது கையில் மலர்பாணம் மற்றும் பூச்செண்டு எந்தியவளாக, இடது கையை பூமியை நோக்கி தளரவிட்டவளாக இளமங்கை கோலத்தில் புன்னகை பூத்த முகத்துடன் சர்வாலங்கார பூஷிதையாக கருணை பொங்க காட்சி தருகிறாள்.
கோமதி அம்மன் ஆடித்தபசு மேற்கொண்டதின் பின்னணி
சங்கரன் கோவிலில் அன்னை கோமதியை பிரதானப்படுத்தி நடக்கும் திருவிழா ஆடித்தபசு விழா ஆகும். மக்களுக்காக கோமதி அம்மன் ஊசி முனையில் தவம் இருந்தார். அரியும் ஹரனும் இணைந்து சங்கர நாராயணராக ஆடி மாதத்தின் உத்திராட நாளில் கோமதி அம்மனுக்கும், சங்கன், பதுமன் ஆகியோருக்கும் காட்சியளித்ததை நினைவுகூரும் வகையில் ஆடி மாதத்தில் தபசு விழா கொண்டாடப்படுகிறது.
சங்கன், பதுமன் என்ற இரு நாக வம்சத்து அரசர்களுக்கு இடையே ஒரு போட்டி இருந்தது. சங்கன் சிவனை வணங்குபவர். பதுமன் நாராயணரை வணங்குபவர். சங்கன் தன் கடவுளான சிவனே அதிக ஆற்றல் உள்ளவர் என்றும் பதுமன் தன் விருப்பக் கடவுளான திருமாலே அதிக ஆற்றல் உடையவர் என்றும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இருவரும் அம்மனிடன் சென்று முறையிட்டனர். சங்கன், பதுமன் மட்டுமின்றி, இறைவனின் முழு வடிவத்தை உலக மக்கள் உணர வேண்டும் என அம்மன் சிவனிடம் வேண்டி, தன் தோழியர்கள் பசுக்கூட்டங்களாக உடனிருக்க ஆவுடை நாயகியாக ஒற்றைக்காலில் ஊசி முனையில் இறைவனை நோக்கி தவம் இருந்தாள். அம்மனின் வேண்டுகோளுக்கு இணங்க சிவன், சங்கரநாராயணராகக் (சங்கரன்-சிவன்; நாராயணன்-திருமால்) காட்சியளித்தார். ஒரு புறம் சிவப்பு, மறு புறம் சியாமளம் ஒரு புறம் கங்கை சந்திரன் சடைமுடி, மறு புறம் வஜ்ர மாணிக்க மகுடம் ஒரு புறம் மழு, மறு புறம் சங்கு ஒரு புறம் புலித்தோல், மறு புறம் பீதாம்பரம், ஒரு புறம் ருத்திராட்சம், மறு புறம் துளசி மாலை , ஒரு புறம் வைணவன் பத்மன், ஈசனுக்குக் குடை பிடிக்கிறான்; மறு புறம் சைவச் சங்கன் பெருமாளுக்குக் குடை பிடித்து நிற்க அரிஹரனாய் காட்சி தந்தார் இறைவன்.
கடவுளர் இருவருமே சமம் என்றும், அன்பினாலும் தியாகத்தாலும் மட்டுமே இவர்களை அடைய முடியும் என்றும், சிவனும் திருமாலும் இணைந்த சங்கரநாராயணர் தோற்றத்தால் உணர்த்தப்பட்டது. பசுக்களுடன் அன்னை தவம் இருந்ததால் கோமதி என்று அழைக்கப்பட்டார்.நாகர் இருவரும் இறைவனை வழிபட்டு, கோமதி அம்மனுடன் தங்கினர்.
பிரதான பிரசாதமாக புற்று மண்
சங்கரன்கோவில் பாம்புகள் சங்கன்,பதுமன் வழிபட்ட கோவில் என்பதால் இங்கு புற்று இருக்கிறது. புற்று மண்தான் பிரதான பிரசாதம். நோயுள்ளவர்கள் இந்த மண்ணை நீரில் கரைத்து சாப்பிடுகின்றனர். இதனால் சரும நோய்கள் நீங்குகின்றன. மேலும் வீடுகளில் பூச்சி, பல்லி, வயல்களில் பாம்புத் தொல்லை இருந்தால், மூலவர் சங்கரலிங்கனாருக்கு வேண்டிக் கொண்டு, அந்தந்த பூச்சிகளின் உருவங்களை வாங்கி உண்டியலில் காணிக்கையாக அளித்தால் தொல்லை நீங்கும். ஆடித்தபசு நாளில் அம்பிகையையும், சங்கரலிங்கரையும், சங்கரநாராயணரையும் வழிபட நன்மைகள் நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும் என்பது நம்பிக்கையாகும்.

கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி கோவில்
குருதோஷம் போக்கும் பரிகாரத் தலம்
காஞ்சீபுரத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் அரக்கோணம் செல்லும் வழியில் பள்ளுர் ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ. தூரத்தில் கோவிந்தவாடி உள்ளது.
இத்தலத்தில் சிவபெருமானே குருவாகக் காட்சி தந்து மகாவிஷ்ணுவுக்கு உபதேசித்தார். கோவிந்தனாகிய திருமால் சிவனைத் துதித்து பாடல்கள் பாடி வழிபட்ட தலம் என்பதால் 'கோவிந்தபாடி' என்றழைக்கப்பட்ட இத்தலம், தற்போது 'கோவிந்தவாடி அகரம்' என அழைக்கப்படுகிறது.
இங்கு தனி கருவறையில் தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கியுள்ளார். ஆறடி உயரமுள்ள இந்த தட்சிணாமூர்த்தியின் விழிகள் எவரையும் பார்க்காதது போலவும், இருக்கும் எல்லாரையும் பார்ப்பது போலவும் இரு கோணங்களில் காணப்படுகிறது. வியாக்யான வடிவ தட்சிணாமூர்த்தி இவர். பெருமாளுக்கு தனித்துக் காட்சி தந்தவர் என்பதால் இவருக்குமேல் கல்லால மரம் இல்லாமல் 'கயிலாயம்' போன்ற அமைப்பில் மண்டபம் உள்ளது. சிவனே தட்சிணாமூர்த்தியாக வீற்றிருந்து உபதேசம் செய்தார் என்பதால், இவர் நெற்றியில் மூன்று கண், தலையில் பிறைச்சந்திரன், கங்கா தேவியுடன் காட்சி தருகிறார். வலக்கரம் சின்முத்திரை காட்டியும், இடக்கரம் சுவடி ஏந்தியும் எழுந்தருளியிருக்கிறார்.
தட்சிணாமூர்த்தி மூலவராக வீற்றிருக்கும் ஒரே கோவில் இதுவாகும். இங்கு வந்து தட்சிணாமூர்த்தியை வணங்கினால், புத்தியில் தெளிவும் காரியத்தில் வெற்றியும் கிடைக்கும். கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம். குருதோஷம் போக்கும் சிறந்த பரிகாரத் தலமாக விளங்க்கின்றது.பக்தர்கள் தங்கள் கரங்களாலயே தேங்காயை இரண்டாக உடைத்து அர்ச்சகரிடம் தர, தட்சிணாமூர்த்தி சன்னிதியில் அர்ச்சனை செய்து தருவது இவ்வாலய சிறப்பு. இங்கு வழிபடுவோருக்கு தடைகள் நீங்கி உடனே திருமணம் கூடி இனிய இல்லறம் அமைகிறது. தோஷங்கள் அகன்று குருபலம் கூடுவதால் பதவி உயர்வு, தொழில் சிறப்பு கிட்டுகின்றன.

குழந்தை வேலப்பர் கோவில்
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறை கிராமத்தில் குழந்தை வேலப்பர் கோவில்அமைந்துள்ளது. இக்கோவில் மூன்றாயிரம் ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில் உள்ள சிலையானது போகர் என்னும் சித்தரால் நவபாஷானத்தால் உருவாக்கப்பட்டது.இந்தியாவில் இரண்டு கோவில்களில் மட்டுமே நவபாஷானத்தால் உருவாக்கப்பட்ட அபூர்வமான முருகன் சிலைகள் உள்ளன, அவற்றில் ஒன்று பழனி மலை மீதுள்ள தண்டாயுதபாணி முருகன் சிலை. மற்றொன்று பூம்பாறை மலையில் உள்ள குழந்தை வேலப்பர் முருகன் சிலை.
பழனி மலை முருகன் நவபாஷான சிலையை உருவாக்கி பிரதிஷ்டை செய்தவர் மாமுனிசித்தர் போகர் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் பூம்பாறை முருகன் சிலையையும் அவர்தான் நவபாஷானத்தால் உருவாக்கியவர் என்பது பலருக்கும் தெரியாத செய்தி. அதுபோல் அருள் பாலிப்பதிலும் பழனி முருகன் போன்று அருள் தர வல்லவர் என்பது அந்த கோவிலு்க்கு சென்று அனுபவரீதியாக பயன் அடைந்த பக்தர்களுக்குத்தான் தெரியும்.
பழனி மலைக்கும், பூம்பாறை மலைக்கும் நடுவில் உள்ள யானை முட்டி குகையையில் சித்தர் போகர் அமர்ந்து, தான் கற்று வந்த கலைகளை சோதிக்க அதற்கான மூலிகைகள் ராசாயண பொருட்கள் சேகரித்து முதலில் ஒரு முருகன் சிலையை உருவாக்கினார். அந்த சிலையைத் தான் பழனி மலை மீது பிரதிஷ்டை செய்தார். தண்டம் கொண்டு அச்சிலையை உருவாக்கியதால் அதற்கு தண்டாயுதபாணி என்று பெயர். அக்கோவிலை இறைவனிடம் வேண்டி சிவ பூதங்களால் கோவில் மற்றும் மண்டபகங்களை கட்ட செய்தார் என்பது வரலாறு.
பின்னர் சித்தர் போகர் மறுபடியும் சீனநாட்டிற்கு சென்று பஞ்சபூத சக்திகளை மீண்டும் பெற்று யானை முட்டி குகைக்கு வந்து ஞான நிலையை அடையும் பிரம்மத்தை உணர்ந்து கொள்ளவும், ஆதிபராசக்தியின் துணைகொண்டு குருமூப்பு என்ற அருமருந்தை நிலைநிறுத்தவும் பஞ்சபூதங்களை நிலைப்படுத்தி அதன் மூலம் குருமூப்பு சிலையை உருவாக்கினார், அந்த சிலைதான் பூம்பாறை மலையுச்சியிலுள்ள, சேர மன்னன் தவத்திற்கு பழனி முருகன் திருமண காட்சியளித்து, சேர மன்னனால் கட்டப்பட்ட திருமண மண்டபத்தில் பிரதிஷ்டை செய்தார்.
அருணகிரிநாதரை குழந்தை வடிவில் வந்து காப்பாற்றிய முருகன்
ஒரு சமயம் அருணகிரிநாதர் பூம்பாறை மலைக்கு வந்து முருகனை தரிசிக்க வந்தார். அப்போது இரவு நேரமானதால் கோவில் மண்டபத்தில் தங்கி தூங்கி விட்டார். அப்போது ராட்சசி ஒருத்தி அருணகிரிநாதரை கொல்ல வந்தபோது, முருகன் குழந்தை வடிவம் கொண்டு காவியுடை அணிந்திருந்த அருணகிரி நாதர் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டு, குழந்தையும் தாயும்தான் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணி அருணகிரிநாதரைக் கொல்லாமல் சென்று விட்டதாம்.
இதனை தனது ஞான திருஷ்டியால் நடந்த சம்பவத்தை அறிந்த அருணகிரிநாதர், குழந்தை வேடம்த்தில் வந்து தன் உயிரை காப்பாற்றியது முருகனே என்று உணர்ந்தார். அன்று முதல் இத்தலத்து முருகன்,குழந்தை வேலப்பர் என்று அழைக்கப்பட்டு வருகிறார்.

திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவில்
எமனுக்கே பாபவிமோசனம் கிடைக்கச் செய்த தேவாரத் தலம்
திருவாரூரிலிருந்து 15 கி.மீ. தூரத்திலுள்ள தேவாரத் தலம் ஸ்ரீவாஞ்சியம். இறைவன் திருநாமம் வாஞ்சிநாதர். இறைவி மங்களநாயகி.
ஒரு சமயம் எமதர்மராஜா, எத்தனையோ நல்ல பதவிகள் இருக்கும் போது, தனக்கு மட்டும் ஏன் உயிர்களை எடுக்கும் பதவியை சிவபெருமான் கொடுத்துள்ளார் என மிகவும் வருந்தினார். திருவாரூர் சென்று தியாகராஜரிடம் தனது குறைபாட்டை தெரிவித்தார். உயிர்வதை தொழிலை செய்யும் தனக்கு பிரம்மஹத்தி தோஷம் பீடித்துள்ளதாகவும், தன்னைக் கண்டு உயிர்கள் அனைத்தும் பயம் கொள்வதாகவும் திருவாரூர் தியாகராஜ பெருமானைக் கண்டுப் புலம்பினார். அதற்கு அப்பெருமான் ஸ்ரீவாஞ்சியம் சென்று வாஞ்சிநாதரை வழிபட்டு உனது தோஷத்தில் இருந்து விடுபட்டுக் கொள் எனக் கூறினார். அவ்வாறே எமதர்மன் ஸ்ரீவாஞ்சியம் தலத்திற்கு வந்து நெடுங்காலம் கடுந்தவம் புரிந்து வாஞ்சிநாதரை வழிபட்டு தனது தோஷத்தில் இருந்து விடுபட்டார். இங்கு எமதர்மராஜன் யோக நிலையில் காட்சி தருகிறார். ஸ்ரீவாஞ்சிநாதர் இத்தலத்தில் முதலில் எமதர்மராஜனை தரிசித்த பின்னரே தன்னை வந்து பக்தர்கள் தரிசிப்பர் எனும் பெரும்பேற்றை எமதர்மனுக்கு வழங்கினார். அதன்படியே இங்கு எமதர்மனுக்கே முதல் வழிபாடு நடைபெறுகிறது.
இங்கு எமதர்மராஜன் யோக நிலையில் காட்சி தருகிறார். அதனால் இங்கு வந்து தரிசனம் செய்பவர்களுக்கு மரண பயம் நீங்கும். தெற்கு நோக்கிய சன்னதியில் எமதர்மன் நான்கு கரஙகளுடன் பாசம், கதை, சூலம் ஏந்தி இடது காலை மடித்து வலது காலைத் தொங்கவிட்டு பாதக்குறடுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இங்கு எமதர்மனுக்கு வடை மாலை சாற்றி வழிபடுவது சிறப்பு. எமதர்மனை சாந்தி செய்யும் விதத்தில், இங்கு ஆயுள் ஹோமம், சஷ்டியப்தபூர்த்தி செய்து வழிபட்டால் நீண்ட ஆயுள் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோவில்
சூடிக்கொடுத்த நாச்சியார்
திருவில்லிப்புத்தூர் தலத்தில் மூலவர் வடபத்ரசாயி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் மட்டுமே ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார் ஆகிய மூவரும் ஒரே ஸ்தானத்தில் காட்சியளிக்கிறார்கள். உற்சவர் பெருமாள் பேண்ட், சட்டை அணிந்தும், முக்கிய விழாக்காலங்களில் வெள்ளை வேஷ்டி அணிந்தும் அருள்பாலிக்கிறார்.
இத்தலத்தில் பிறந்த பெரியாழ்வார், கருடாழ்வாரின் அம்சமாக பிறந்ததாக ஐதீகம். தன் மகளை, திருமாலுக்கு திருமணம் செய்து கொடுத்த போது, மாப்பிள்ளைக்கு அருகில் நின்றுகொண்டாராம். இதன் அடிப்படையில் இத்தலத்தில் ரங்கமன்னாருக்கு அருகில் கருடாழ்வார் இருக்கிறார்.
திருவில்லிப்புத்தூர் தலத்தில்தான் ஆண்டாள் பிறந்து வளர்ந்தார். பெரியாழ்வாரின் மகளாக பிறந்த ஆண்டாள், பெருமாளுக்கு சாற்றப்படும் பூவை, அவள் ஒவ்வொரு முறையும் அவள் தலையில் வைத்து அழகு பார்த்ததற்கு பின் கொடுத்திருக்கிறாள். இதனை அறியாத பெரியாழ்வார் பெருமாளுக்கு பூவை போட்டிருக்கிறார். ஒருமுறை பூவில் தலைமுடி இருப்பது கண்டு பெரியாழ்வார் அஞ்சி, அதை தவிர்த்து வேறு பூவை சூட்டினார்.உடனே இறைவன், 'ஆழ்வார்! கோதையின் கூந்தலில் சூட்டிய பூவையே நான் விரும்புகிறேன். அதையே எனக்கு சூட்டு' என்றார். இன்றளவும் ஆண்டாளுக்குச் சாத்தப்படும் மாலை, மறு நாள் காலையில் வடபெருங்கோயில் உடையவருக்கு சாத்தப்படுகிறது. மேலும் இந்த நகரம் திருமகளே, தெய்வீக குழந்தையாக ஆண்டாள் என்று பிறந்ததின் காரணமாக ஸ்ரீவில்லிப்புத்தூர் என்று பெயரிடப்பட்டது, அது திருமகளைக் குறிக்கும் வண்ணம் தமிழ் வார்த்தையான 'திரு' என்ற அடைமொழி கொண்டு திருவில்லிப்புத்தூர் என்று வழங்கப்படுகிறது.
ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பெருமாளை வேண்டி திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய பிரபந்தங்களை பாடினாள். இதில் திருப்பாவை 30 பாசுரங்களும், நாச்சியார்திருமொழி 143 பாசுரங்களும் கொண்டுள்ளது.ஸ்ரீனிவாசபெருமாளுக்கு திருப்பாவை என்ற பாசுரத்தால் பாமாலை பாடி பூமாலை சூடிக்கொடுத்ததால் 'சூடிக்கொடுத்த நாச்சியார்' என்ற பெயரும் உண்டு. பெரியாழ்வார், பெருமாளுக்கு பல்லாண்டு பாடிய திருத்தலம்.
திருப்பதி பெருமாளுக்கு புரட்டாசி 3 வது சனிக்கிழமை பிரம்மோற்சவத்துக்கு, ஆண்டாளுக்கு சூட்டிய மாலை அணிவிக்கப்படுகிறது. இங்கு ஆண்டாள் திருக்கல்யாணத்துக்கு திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலிலிருந்து திருமணப் பட்டுப் புடவை வருகிறது. மதுரையில் சித்திரைத் திருவிழா அழகர் எதிர் சேவையின் போது ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை கள்ளழகர் அணிகிறார்.
தமிழ்நாடு அரசு சின்னத்தில் போடப்பட்டுள்ள கோபுரம், இக்கோவிலின் கோபுரம் என்பது இத்தலத்துக்கு கூடுதல் சிறப்பு.

தான்தோன்றீஸ்வரர் கோவில்
நவக்கிரகங்கள் தம் மனைவியருடனும், வாகனத்துடனும் இருக்கும் ஆபூர்வக் காட்சி
திருச்சி மாநகரின் ஒரு பகுதியான உறையூர் தலத்தில், சுமார் 1800 ஆண்டுகள் பழமையான குங்குமவல்லி சமேத தான்தோன்றீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
பொதுவாக சிவாலயங்களில் நவக்கிரகங்கள் ஒரு பீடத்தின் மேல் நின்ற கோலத்தில் வக்கரித்த நிலையில் காட்சி தருவார்கள். மேலும் சில தலங்களில் தம்பதி சமேதராகவோ அல்லது தம் வாகனத்துடனோ காட்சி தருவார்கள். ஆனால் இக்கோவிலில் நவக்கிரகங்கள் தம்பதி சமேதராய் தம் வாகனத்துடன் எழுந்தருளியிருப்பது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.
இக்கோவிலில் குங்குமவல்லி தேவிக்கு, ஒவ்வொரு ஆண்டும் வளையல் காப்புத் திருவிழா ஆடிப்பூரம் மற்றும் தை மாத மூன்றாம் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு தினங்களில் மூன்று நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் இந்த வளையல் காப்புத் திருவிழா வெகு பிரசித்தம்.

ராமநாதீஸ்வரர் கோவில்
சிவனே குருவாக இருந்து ராமருக்கு வழிகாட்டிய தலம்
ராமநாதீஸ்வரர் கோவில் , சென்னை போரூர் சந்திப்புக்கு அருகில் அமைந்து இருக்கிறது. இக்கோவில் மிகவும் பழமையானது.
ராமர் சீதையை தேடி வனத்தில் அலைந்து திரிந்து செல்லும் வேளையில் ஒரு நெல்லி மரத்தின் வேர் ராமரின் காலை இடர, ராமர் உள்ளுணர்வால் வேரின் உள்ளே சிவலிங்கம் இருக்கிறது என்பதை உணர்கிறார்.சிவனின் தலைமீது கால்பட்டதால்,உண்டான தோஷத்தை போக்க ,அங்கேயே தவத்தில் இருந்தார்,நாள் ஒன்றிற்கு ஒரு நெல்லிக்கனியை மட்டுமே உணவாக உண்டு 48 நாட்கள் தவம் மேற்கொண்டார்.முடிவில் வேரின் அடியில் இருந்த லிங்கம் பூமியை பிளந்துகொண்டு வந்து வெளிப்பட,சிவபெருமான் ராமருக்கு விஸ்வரூப தரிசனம் தருகிறார். பரவசத்தில் ராமர் சிவபெருமானை கட்டியணைக்க உடனே சிவலிங்கம் ஆறு அடி உயர அமிர்தலிங்கமாக மாறுகிறது. ராமர் சீதையை தேட வழிகேட்க, 'ராமேஸ்வரம் நோக்கி செல்' என்ற அசரீரி கேட்கிறது.
சிவபெருமான் ராமருக்கு காட்சி அளித்தமையால், இங்குள்ள மூலவர் ஸ்ரீராமநாதீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். மிகப்பெரிய லிங்கவடிவில் 6 அடி அமைப்பும் மிக அழகிய அலங்காரத்துடனும் கிழக்கு நோக்கி அருள்பலிக்கிறார். இந்த பிரும்மாண்ட லிங்கம் சுயம்புவாக தோன்றியவர். அம்பிகை சிவகாமசுந்தரி தனி சன்னதியில் தெற்கு நோக்கி அருளுகிறார். சிவனே வந்து வழிகாட்டிய காரணத்தால் அவரே குருவாகிறார் . ஆகவே தனியாக குருச்சன்னதி கிடையாது . குருவருள் பெறவும் ,வியாழன் கோள் சம்பந்தமான எந்தவித தோஷத்தையும் போக்கும் தலமாக விளங்குகிறது.
ராமேஸ்வரம் செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து ராமேஸ்வரத்தில் செய்யும் பரிகாரங்களை செய்கிறார்கள். ராமேஸ்வரத்தில் செய்யும் பலன், இத்தலத்திலேயே கிடைப்பதாக நம்பப்படுகிறது. ஆகவே இந்த கோவில் உத்திரராமேஸ்வரம் என்றும் கூறப்படுகிறது.
தீர்த்தம் தந்து, சடாரி வைக்கும் சிவன் கோவில்
பொதுவாக பெருமாள் கோவிலில் மட்டுமே பிரசாதமாக கிடைக்கும் தீர்த்தம் , சடாரி போன்றவை சிவன் கோவிலான இங்கும் கிடைக்கும். தீர்த்தம் தந்து, சடாரியும் வைக்கும் சிவன் கோவில் என்பதால் இத்தலம் தனிச் சிறப்பைப் பெறுகிறது. இங்கு சுவாமிக்கு திராட்சை மாலை சாத்தி வழிபடுவது மிகவும் விசேக்ஷம். இங்கு பிரசாதமாகத் தரப்படும் நெல்லிக்கனியை உண்டால் ஆயுள் விருத்தியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

நம்புநாயகி அம்மன் கோவில்
நம்பி வந்தவர்களைக் காக்கும் அம்மன்
ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் சாலையில் 5 கீ.மீ. தொலைவில் நம்புநாயகி அம்மன் கோவில் உள்ளது. இத்தலத்தில் அம்மன் நம்புநாயகி என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறாள். அம்மனை நம்பி வந்து வேண்டுவது நடப்பதால், நம்பு நாயகி அம்மன் என்று அழைக்கப்படுகிறாள். இப்பகுதி மக்களின் கண் கண்ட தெய்வமாக விளங்குகின்றாள். நம்பு என்பது ராமேஸ்வரம் தீவை சுற்றி மிகவும் பொதுவான மற்றும் பிரபலமான வார்த்தை.அதனால் இப்பகுதி மக்களின் பெயர் நம்பு குமார், நம்பு லட்சுமி, நம்பு ராஜன் என்று இந்த அம்மனின் பெயரை இணைத்துதான் இருக்கும்.
நம்புநாயகி அம்மன் கோவில் தல வரலாறு
ஒரு சமயம் இத்தலத்தில் தட்சிணத்துருவன், பச்சிமத்துருவன் என்ற இரண்டு முனிவர்கள் ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மனை நோக்கி கடுமையான தவம் மேற்கொண்டிருந்தனர். அவர்களது தவத்தை கண்டு மெச்சிய அம்மன் அவர்களுக்கு காளி தேவியாக காட்சி கொடுத்தாள். அன்றிலிருந்து இரண்டு முனிவர்களும் அந்த காட்டிலேயே காளியை வழிபட்டு வந்ததாகவும், அவளின் அருளால் பிணியுற்றவர்களுக்கு நோய் போக்கும் பணியை செய்து வந்ததார்கள். இரண்டு முனிவர்களும் குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு கற்பகோடி காலம் கண்டவர்களாய் இப்பகுதியிலேயே ஆழ்ந்த நிஷ்டையில் சமாதியிலிருந்து வருவதாகவும் நம்பப்படுகிறது. இப்பகுதியை ஆண்டு வந்த சூலோதரன் என்ற மன்னன் இந்த காளியை நம்பி வேண்டி தன் நோய் நீங்கி நலமடைந்தான். அம்மனை நம்பி குணமடைந்ததால் அம்மன் நம்பு நாயகி என அழைக்கப் பெற்றாள்.
சர்வரோக நிவாரண தீர்த்தங்கள்
இக்கோயிலை சுற்றிலும் அமைந்துள்ள நண்ணீர் தடாகங்கள் பல்வேறு நோய்களை போக்கும் தன்மையுடையதாக விளங்குவதால் இவைகள் சர்வரோக நிவாரண தீர்த்தங்கள் என்று அழைக்கப்படுகிறது. அம்பிகையே தீர்த்தங்கள் வடிவில் அருள்கிறாள். தீராத நோய்களை உடையவர்களும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் இக்கோயிலிலேயே மாதக்கணக்கில் தங்கி சர்வரோக நிவாரண தீர்த்தத்தில் தினமும் நீராடி குணமடைகிறார்கள். மஞ்சள் தூள் இந்த கோவிலில் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
திருமண வரம், மழலைச் செல்வம் அளிக்கும் அம்மன்
திருமணத்தடை உள்ள பெண்களும், கணவனால் கைவிடப்பட்டவர்களும், குழந்தை வரம் வேண்டுவோரும் விரதமிருந்து செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் நம்பு நாயகியை வழிபட்டால் பிரார்த்தனை விரைவில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.