
சுப்பிரமணிய சுவாமி கோவில்
கருவறையில் முருகப்பெருமானுடன் சிவபெருமானும் சேர்ந்து அருள் பாலிக்கும் தலம்
திருவிடைக்கழி,சிதம்பரத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், திருக்கடவூருக்கு தென்மேற்காக அமைந்துள்ளது. திருக்கடவூரில் இருந்து தில்லையாடிக்குச் செல்லும் வள்ளியம்மை நினைவு வளைவு சாலைவழியாக 3 கி.மீ. தெற்காகச் சென்று மேற்காக திரும்பினால் இத்திருத்தலத்தை அடையலாம்.இறைவர் திருப்பெயர் காமேசுவரர். இறைவியார் திருப்பெயர் காமேசுவரி. முருகனின்திருப்பெயர் சுப்பிரமணிய சுவாமி. இத்தலத்தில் இரண்டு வெவ்வேறு தலமரங்கள் உள்ளன; இவற்றுள் குரா மரம் முருகப் பெருமானுக்கும், மகிழ மரம் இறைவனுக்கும் தல மரங்களாம்.சுப்பிரமணியக் கடவுள் இக்குராமரத்தின் கீழ் யோக நிட்டையில் இருக்கின்றாராதலின் இங்கமர்ந்து தியானம் செய்தல் சிறப்புடையதாகின்றது.கருவறையில் முருகப்பெருமானுடன் சிவபெருமானும் சேர்ந்தே அருள்பாலிக்கிறார்.இங்குள்ள முருகப்பெருமானுக்கு மயிலுக்குப் பதிலாக யானை வாகனமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.மூலத்தானத்தில் முதற்கண் பிரதான மூத்தியாக சுப்பிரமணியப் பெருமானும், பின்னால் உள்ளடங்கிச் சிவலிங்க மூர்த்தமும் காட்சி தருகின்றனர். இருமூர்த்தங்களுக்கு உள்ள தனித்தனி விமானங்களில், முருகனுடைய விமானம் சற்று உயரமாகவும், இறைவனுடைய விமானம் சற்று தாழவும் உள்ளது.

கடம்பவனநாதர் கோவில்
ஒரே சன்னதியில் இரட்டை நடராஜர்
கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலமான குளித்தலை கடம்பவனநாதர் கோவிலில், இரண்டு நடராஜப் பெருமானை தரிசனம் செய்யலாம். ஒரே சன்னிதியில் அருகருகே இரண்டு நடராஜர்களை தரிசனம் செய்வது சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. இவர்களில் ஒரு நடராஜர் சிரசில் பிறை சூடி இருக்கிறார். ஆனால் அவர் பாதத்தில் முயலகன் இல்லை. இதில் ஒரு நடராஜருக்கு உத்திராயணத்திலும் மற்றவருக்கு தட்சிணாயத்திலும் பூஜைகள் நடக்கின்றன.

ரங்கநாதர் கோவில்
தேங்காய்க்கு பதிலாக தேங்காய் துருவல் படைக்கப்படும் திவ்யதேசம்
ஸ்ரீரங்கத்து கோவிலில், ஸ்ரீரங்கநாதப்பெருமாள் பாம்பணையில் துயில் கொண்டிருப்பதால் தேங்காய் உடைக்கும் வழக்கம் இல்லை. தேங்காய் உடைக்கும் சப்தம் கேட்டு பெருமாளின் அறிதுயில் கலைந்து விடக்கூடாது என்பதால் தேங்காயைத் துருவலாகவே படைக்கப்படுகிறது.

வெயிலுகந்த விநாயகர் கோவில்
சூரியன் வழிபட்ட விநாயகர்இக்கோவில் மூலவர் விநாயகர்
மீது வருடம் முழுவதும் சூரிய ஒளி படுவதால் இவருக்கு வெயிலுகந்த விநாயகர் என்று பெயர் ஏற்பட்டது. இந்தக் கோயிலைக் கட்டியவர் ராமநாதபுரம் மன்னரான பாஸ்கரசேதுபதி ஆவார். விநாயகர் பெருமான் மீது தட்சிணாயன காலங்களில் (ஆடி- மார்கழி) தெற்கு பகுதியிலும், உத்தராயண காலங்களில் (தை-ஆனி) வடக்கு பக்கமாகவும் சூரியஒளி படுகிறது. சூரியன் இங்கே தவம்புரிந்து, சித்தி பெற்று பாவ விமோசனம் பெற்றதால் சூரியபுரி, தவசித்திபுரி, பாவ விமோசனபுரம் ஆகிய பெயர்கள் இந்த ஊருக்கு உள்ளன. ராமபிரான் இலங்கைக்கு செல்வதற்க்கு முன் முதலில் உப்பூர் வெயிலுகந்த விநாயகரை வணங்கித்தான் சென்றார். உப்பூர், தொண்டியிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் 29 கிமீ தொலைவில் உள்ளது .

சுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகப் பெருமான் முக்தி தரும் தலம்
மயில் வாகனன் முருகன், வள்ளி, தெய்வயானை இல்லாமல் தனித்துக் காட்சி தரும் கோலத்தில் மயில் மீது அமர்ந்திருக்கையில், மயிலின் முகம் நேர்கொண்ட பார்வையில் காணப்படும். வள்ளி தெய்வ யானையுடன் முருகன் அமர்ந்திருக்கும்போது மயிலின் முகம் வலப்புறமாக நோக்கி யிருக்கும். வலப்புறம் வள்ளியும் இடப்புறம் தெய்வயானையுமாய்க் காட்சி தரும் முருகனைத்தான் கோயில்களில் பெரும்பாலும் காண முடியும். போகவாழ்வு தரும் முருகனின் கோலம் இது. ஆனால் வலப்புறம் தெய்வயானையும் இடப்புறம் வள்ளி என்ற கோலத்தில், ஞானியர்க்கு முக்தி தரும் மூர்த்தியாகக் காட்சிதரும் முருகனாக வயலூர் சுப்பிரமணிய சுவாமி விளங்குகின்றான்.

கொற்றவாளீசுவரர் கோவில்
வயலுக்கு காவலாக நின்ற அம்பிகை
ஒருசமயம் கோவிலூர் தலத்தில் சிவபக்தரான சிவகுப்தன், சுதன்மை தம்பதியரின் வயல் அறுவடைக்குத் தயாரானது. சுதன்மை, தன் மகள் அரதனவல்லிøயக் காவலுக்கு அனுப்பினாள். விளையாட்டுப் பெண்ணான அரதனவல்லி வயலுக்குப் போகமால் அருகிலிருந்த மலர்ச்சோலைக்கு சென்று விட்டாள். மகளுக்கு சுதன்மை தயிர்ச்சோறு கொண்டு சென்றாள். அங்கே, அவளது மகள் வடிவில், கோவிலூர் தலத்து அம்பாள் காவல் செய்து கொண்டிருந்தாள். அன்புடன் சுதன்மை கொடுத்த சோறை சாப்பிட்டாள். சுதன்மை வீட்டுக்கு வரவும், அரதனவல்லியும் உள்ளே வந்து, அம்மா! பசிக்கிறது, சோறு போடு என்றாள். அதன் பின் அவளை விசாரிக்க, அம்பாளே மகள் வடிவில் வந்தது புரிந்தது. நெல் வயலில் காட்சி தந்தவள் என்பதால், இந்த அம்பிகைக்கு நெல்லையம்மன் என்று பெயர் வந்தது. இவளை வழிபட்டால் நம்மைச் சேர்ந்த பொன், பொருள்,பெண்குழந்தைகள் என அனைத்திற்கும் காவலாக துணை நிற்பாள்.

ரங்கநாதர் கோவில்
ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு 365 வஸ்திரங்கள் போர்த்தும் வைபவம்
கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி, கைசிக ஏகாதசி எனப்படும். அன்று இரவு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், உற்சவ மூர்த்தியான நம்பெருமாளுக்கு 365 வஸ்திரங்கள் ஒவ்வொன்றாய் போர்த்தும் வைபவம் விடிய விடிய நடைபெறும். பெருமாளுக்கு தினமும் அணிவிக்கும் வஸ்திரங்களில் ஏதேனும் குறை இருந்தால் அதை நிவர்த்தி செய்யும் பரிகாரமாக இந்த வைபவம் நடைபெறுகிறது. மேலும் கார்த்திகை மார்கழி குளிர் மாதங்கள் என்பதால் பெருமாளின் மீதுள்ள அன்பின் காரணமாக இந்த வஸ்திரங்கள் போர்த்தப்படுகின்றன. அத்துடன், ஒவ்வொரு வஸ்திரம் சாற்றியவுடனும் வேளையம் என்று அழைக்கப்படும் வெற்றிலை, பாக்கு, கற்பூர ஆரத்தி ஆகியவையும் நம்பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.
கி.பி 1320 முதல் 1370 வரையிலான ஆண்டுகளில் முஸ்லிம் படையெடுப்பின் போது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சூறையாடப்பட்ட நிலையில், உற்சவ மூர்த்தியான நம்பெருமாள் திருப்பதி திருமலையில் சுமார் 50 ஆண்டு காலம் எழுந்தருளியிருந்தார். இதனை நினைவுகூறும் வகையில், ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து ஆண்டுதோறும் கைசிக ஏகாதசியன்று ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு வஸ்திர மரியாதை செய்யும் வைபவம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு கைசிக ஏகாதசியான நவம்பர் 15 அன்று நம்பெருமாளுக்கு 365 வஸ்திரங்கள் போர்த்தும் வைபவம் நடைபெற்றது.
வைகுண்ட ஏகாதசி விழா
மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி 'வைகுண்ட ஏகாதசி' என்று அழைக்கப்படுகிறது. இதனை 'மோட்ச ஏகாதசி' என்றும் அழைப்பார்கள். வைகுண்ட ஏகாதசியில் விரதம் மேற்கொள்வது, மூன்று கோடி ஏகாதசிகளில் விரதம் இருந்த பலனைத் தரக்கூடியது என்பதால், வைகுண்ட ஏகாதசி முக்கோடி ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. ஏகாதசி அன்று தன்னை வழிபடுவோர்க்கு வைகுண்டப்பதவி அளிப்பதாக கூறி பெருமாள் அருளியதாக புராணங்கள் கூறுகின்றன.
வைகுண்ட ஏகாதசி அன்று, அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் பரமபத வாசல் என்ற சொர்க்கவாசல் திறப்பு விழா நடத்தப்படும். ஆனால், இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில், இன்று(14.12.2021) வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிறது. மார்கழி மாதத்தில் போகிப்பண்டிகை நாளில் ஏகாதசி வருவதால் இந்த ஆண்டு கார்த்திகையிலேயே பரமபதவாசல் திறக்கப்படுகிறது. இப்படி கார்த்திகை மாதம் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடப்பது, சுமார் 19 ஆண்டுகளுக்கு ஒரு முறை அமையும்.

அஸ்திரபுரீஸ்வரர் கோவில்
சங்கீத விநாயகர்
செங்கல்பட்டு அருகில் உள்ள ஆனூர் என்னும் ஊரில் அமைந்திருக்கிறது, அஸ்திரபுரீஸ்வரர் கோவில், இத்தலத்து இறைவன் அர்ஜுனனுக்கு அஸ்திரம் தந்த ஊர் என்பதால், இங்கே குடி கொண்டுள்ள ஈசனுக்கு அஸ்திரபுரீஸ்வரர் என்கிற திருநாமம் ஏற்பட்டது. இக்கோவிலின் மதிலில் சங்கீத விநாயகரைத் தரிசிக்கலாம். இந்த விநாயகர் அமர்ந்த நிலையில் வலக்கையால் தொடையில் தாளம் போடும் பாவனையில் அருள்கிறார். இவரை தொடர்ந்து ஏழு நாள்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், சங்கீதக் கலையில் சிறப்படையலாம் என்பது நம்பிக்கை.

திருவதிகை சரநாராயண பெருமாள் கோவில்
சயனகோலத்தில் நரசிம்மர்
பண்ரூட்டியின் அருகில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவதிகையில், 2000 வருட பழமையான சரநாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நரசிம்மர் சயன (படுத்திருக்கும் ) கோலத்தில் தாயாருடன் காட்சிதருகிறார். திருமாலின் கோவில்களில் இந்தக்கோவிலில்தான் நரசிம்மர் சயன கோலத்தில் இருக்கிறார். இந்த சயன நரசிம்மர் திருவக்கரையில் வக்ரா சூரனை அழித்து விட்டு அதன் பரிகாரத்துக்காக இத்தலத்தில் வந்து சயனித்துள்ளார். தாயாருடன் எழுந்தருளியதால் இது போக சயனம் ஆகும் . சிவனுக்கு பிரதோஷம் நடைபெறுவது போல் இவருக்கும் பிரதோஷம் அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. சிங்கர்குடி ,பூவரசன்குப்பம் ,பரிக்கல் ஆகிய நேர்கோட்டில் உள்ள நரசிம்மர் தலங்களை வணங்கும்போது, இத்தலத்திற்கு வந்து இவரையும் வணங்குவது சிறப்பாகும் .

மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில்
கருவறை கதவிற்கு பூஜை நடக்கும் அம்மன் கோவில்
தேனி மாவட்டம் பெரிய குளத்திற்கருகில் தேவதானபட்டி என்ற கிராமம் உள்ளது. அங்குள்ள மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில் வித்தியாசமானது. அந்தக் கோவிலின் கருவறையில் அம்மன் சிலை இல்லை. கருவறை மூடப்பட்டு கதவிற்குத்தான் பூஜை நடைபெறுகிறது. கதவிற்கு முன் நாகபீடத்தில் சூலம் வைத்து வழிபடுகின்றனர். கருவறைக்குப் பின்னால் ஒரு கூரை வீட்டில் மூங்கில் பெட்டிக்குள் காமாட்சி அம்மன் இருப்பதாக ஐதீகம். இந்தக்கோவிலில் உடைக்காத தேங்காயும் உரிக்காத வாழைப்பழமும் நிவேதனமாகப் படைக்கப்படுகிறது.

இரத்தினகிரீசுவரர் கோவில்
இரத்தினகிரீசுவரர் கோவில்
காகம் பறக்காத தேவாரத்தலம்
கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலையில் இருந்து சுமார் 11 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தேவாரத்தலம் திருவாட்போக்கி ஆகும். தற்போது 'ஐயர் மலை' என்று அழைக்கப்படுகிறது.
ஆயர் ஒருவர் இறைவனின் அபிஷேகத்திற்கு கொண்டு வந்த பாலை ஒரு காகம் கவிழ்த்து விட்டது. அவர் விட்ட சாபத்தால் அக்காகம் எரிந்து போனது. அதனால் அன்று முதல் இந்த மலையில் காகம் பறப்பதில்லை. மேலும் இம்மலைக்கு 'காகம் பறவா மலை' என்ற பெயரும் ஏற்பட்டது.
காலையில் குளித்தலை, மதியம் ஐயர்மலை, மாலையில் ஈங்கோய்மலை ஆகிய மூன்று தேவாரத் தலங்களையும் ஒரே நாளில் வழிபாட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம். அதனால் கார்த்திகை சோமவாரத்தில் இம்மூன்று கோவில்களையும் ஒரே நாளில் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

கோதண்டராமர் கோவில்
பார்ப்பவரை பரவசமடையச் செய்யும் ராமர்
திருவாரூர் மாவட்டத்தில், ராமர் கோவில்கள் அமைந்துள்ள தில்லைவிளாகம், வடுவூர், பருத்தியூர், முடிகொண்டான், அதம்பார் என்னும் ஐந்து தலங்கள் 'பஞ்சராமர் க்ஷேத்திரங்கள்' என்று அழைக்கப்படுகின்றன. இதில் தில்லைவிளாகம் கோதண்டராமர் ஆலயம் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகாவில் உள்ளது. இலங்கை போர் முடிந்து வீர கோதண்ட ராமஸ்வாமியாக கையில் வில் ஏந்தி வலப்புறம் சீதை இடப்புறம் இளைய பெருமாளுடன் நின்ற திருக்கோலத்தில் அனுமனுடன், இத்தலத்தில் காட்சி தருகிறார். 150 ஆண்டுகளுக்கு முன் குளம் வெட்ட தோண்டியபோது பூமியில் சுயம்புவாய் ஸ்ரீ சீதாதேவி சமேத ஸ்ரீராமபிரானின் 5 அடி உயர பஞ்சலோக சிலைகள் கிடைத்தன. மூலவரே பஞ்சலோக விக்ரகமாய் எழுந்தருளி இருக்கும் தலம் இது. ராமரின் ஐந்தடி உயர பஞ்சலோக சிலாரூபம் பார்ப்பவரை பரவசமடையச் செய்யும். அவர் திருமேனியில், திரிபங்கம் என்று சொல்லப்படும் மூன்று வளைவுகள், திண்தோள், இடுப்பு மற்றும் முழந்தாள் பகுதிகளில் காணப்படுகின்றன. கைகளில் விரல்களும் மனிதர்களைப் போலவே விரல்களில் நகங்களும் அமைந்திருக்கின்றன. திருமார்பில் போரினால் ஏற்பட்ட வடுக்கள், தேமல்கள் மனிதர்களுக்கு உள்ளது போலவே காட்சியளிக்கின்றன. கைகள் மற்றும் கணுக்காலில் பச்சை நிற நரம்புகளும் விரலில் உள்ள ரேகைகளும் தெளிவாகத் தெரிவது நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. இவருடைய திருமேனியின் முழங்கால்கள், மனிதர்களின் முழந்தாள்களைப்போலவே உருண்டு திரண்டு, கால்களில் பச்சை நரம்போடுவது தெரிகின்றன. கால்களில் தாயார் கௌசல்யை கட்டிய ரக்ஷை மற்றும் மச்சங்கள், தேமல்கள் வடுக்கள் காட்சியளிக்கின்றன. மற்ற திருத்தலங்களில் அர்த்த சந்திர பாணத்துடன் காட்சியளிக்கும் ஸ்ரீராமன் இங்கு ராமசரம் எனப்படும் அம்புடன் காட்சிதருகிறார். ஸ்ரீராமன், இந்த ராம சரத்தை காகாசுரன், வாலி மற்றும் இராவணவதத்திற்காக பிரயோகித்தார்.

கந்தசாமி கோவில்
பாஸ்போர்ட், விசா பெற ஏற்படும் தடைகளை தகர்க்கும் முருகப்பெருமான்
திருப்போரூர் கந்தசாமி கோயில் முருகன் சந்நிதி சுற்றுச்சுவரில் அவரது ஒரு வடிவமான குக்குடாப்தஜர் (குக்குடம் என்றால் சேவல்) சிலை உள்ளது. ஒரு கையில் சேவல் வைத்திருப்பதால் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது. பாஸ்போர்ட், விசா கிடைக்க தாமதம் அல்லது சிக்கல் இருந்தால், வெளிநாடு செல்ல முடியதாவர்கள் இவருக்கு அர்ச்சனை செய்து வேண்டிக் கொள்கிறார்கள். வெளிநாட்டிலுள்ள உறவினர்கள் நலமாக இருக்கவும் இவரை வேண்டிக் கொள்கிறார்கள்.

சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
பஞ்சமுக விநாயகர்
பொதுவாக விநாயகர் அரசமரத்தடியில்தான் அமர்ந்து அருள்பாலிப்பார். ஆனால், கோவை மருதமலையில், முருகன் கோயிலுக்கு அருகில் அரசு, அத்தி, வேம்பு, வன்னி, கொரக்கட்டை ஆகிய மரங்கள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து வளர்ந்திருக்கின்றன. இம்மரங்களுக்கடியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பவர்தான் பஞ்சமுக விநாயகப் பெருமான். நடைப்பயணமாக மருதமலையேறி வருவோர் இந்த விநாயகரைத் தாண்டிதான் முருகன் சன்னிதிக்குச் செல்ல வேண்டும்.
விநாயகருக்கு ஐந்து முகங்கள் ஒரே வரிசையில் அமைந்திருப்பதும். வலம்புரி இடம்புரி துதிக்கைகள் இருப்பதும் சிறப்பு அம்சமாகும். பஞ்சமுக விநாயகர் பஞ்ச விருட்சத்தின் கீழ் காட்சி தருவது காணக்கிடைக்காத ஒன்றாகும். இந்த விருட்சத்தின்கீழ் அமர்ந்து தியானம் செய்யும்போது இதன் காற்று பல்வேறு பிணிகளைத் தீர்க்கும் வல்லமை பெற்றது என்பதும், பாம்பாட்டி சித்தர் உள்பட பல்வேறு சித்தர்களும் இங்கு தவம் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடதக்கது.
முருகனுக்கரிய விழா தினங்களிலும், விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி நாட்களிலும் பஞ்சமுக விநாயகருக்கு சிறப்பு பூஜை. ஆராதனைகள் வெகுவிமர்சையாக நடைபெறுகின்றது.

பாடலீஸ்வரர் கோவில்
பார்வதி தேவி அரூபமாக தவம் செய்த இடம்
பாண்டிச்சேரியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தேவாரத் தலமான கடலூரில் அமைந்துள்ளது பாடலீஸ்வரர் கோவில். இத்தலத்தின் முற்காலத்திய பெயர் திருப்பாதிரிப்புலியூர். பாதிரியை தலவிருட்சமாக கொண்டதாலும் ,புலிக்கால் முனிவர் (வியாக்ரபாதர் ) வழிப்பட்டதாலும் (பாதிரி + புலியூர் ) இவ்வூர் திருப்பாதிரிப்புலியூர் என்று பெயர் பெற்றது .ஒருமுறை பார்வதி தேவி தன் திருக்கரங்களால் இறைவனின் கண்களை மூடினாள். இதனால் உலகம் இருண்டு அணைத்து இயக்கங்களும் நின்று போயின.இதனை கண்ட பார்வதி தேவி மனம் வருந்தி, இறைவனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார் .இறைவன் தாயாரை பூலோகம் சென்று, அங்குள்ள சிவதலங்களில் பூஜிக்கும்படியும் அவ்வாறு பூஜை செய்யும் போது எந்த தலத்தில் இடது கண் மற்றும் இடது தோளும் துடிக்கின்றதோ அந்த தலத்தில் ஆட்கொள்வதாக கூறினார் .அதுபோல் தாயார் பூலோகம் வந்து சிவத்தலங்களுக்கு சென்று பூஜைகள் செய்துவந்தார் . அப்போது பாதிரி வனமாக திகழ்ந்த இத்தலத்திற்கு வந்தபோது இடது கண் மற்றும் தோள் துடித்தது ,பார்வதி தேவி இத்தலத்திலேயே தங்கி அரூபமாக தவம் செய்த இடம், இறைவன் கருவறையின் வெளிச்சுற்றில் 'அருந்தவநாயகி' சன்னதியாக உள்ளது . இச்சந்நதியில் விக்கிரகம் ஏதும் இருக்காது .பீடம் மட்டுமே இருக்கும்.

யோக நரசிம்மர் கோவில்
கார்த்திகையில் கண் திறக்கும் யோக நரசிம்மர்
சென்னையில் இருந்து 102 கி.மீ. தொலைவில் உள்ள திவ்ய தேசம், சோளிங்கர் யோக நரசிம்மர் கோவில்.வாழ்வில் ஒருமுறையேனும் இங்கு வந்து ஒரு கடிகை அதாவது 24 நிமிடங்கள் இருந்து, நரசிம்மரைத் தரிசித்தால் மோட்சம் நிச்சயம் என்று புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஒரு கடிகை என்றால் 24 நிமிடங்கள். அசலம் என்றால் மலை என்று பொருள். அதனால்தான் சோளிங்கர் திருத்தலத்துக்கு கடிகாசலம், திருக்கடிகாசலம் என்றெல்லாம் புராணத்தில் பெயர்கள் அமைந்துள்ளன. திருமால் எடுத்த அவதாரங்களிலேயே ஒப்பற்று உயர்ந்து நிற்பது நரசிம்ம அவதாரம். ஏனெனில் இறைவன் எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளார் என்ற உண்மையைக் கண்கூடாக வெளிப்படுத்திய அவதாரம் மட்டுமில்லாமல், சிறுவன் பிரகலாதனின் சொல்லை சத்தியமாக்க தன்னை அண்டியவர்க்காக உதவிய அவதாரமாகும்.அத்தகைய அவதாரமாக, திருமால் யோக நரசிம்மராக இருக்கும் தலம் இது.சுமார் 1305 படிகள் கொண்ட பிரமாண்டமான சோளிங்கர் மலையின் மீது கோவில் கொண்டிருக்கும் யோக நரசிம்மர், கிழக்கு நோக்கி யோகாசனத்தில் அமர்ந்த திருக்கோலமாக உள்ளார். அவர் வருடத்தில் 11 மாதங்கள் யோகநிலையில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆனால் கார்த்திகை மாதம் மட்டும் அவர் பக்தர்களை கண் திறந்து பார்க்கிறார். கார்த்திகை மாதம் முழுவதும் அவர் கண்திறந்து இருப்பதாக ஐதீகம். எனவே இத்தலத்தில் கார்த்திகை திருவிழா மிகவும் விசேஷம்.இவ்விழா நாட்களின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். மலை மீதுள்ள நரசிம்மருக்கு, பக்தோசித பெருமாள் என்னும் திருநாமமும் உண்டு. அதாவது, பக்தர்களின் எண்ணங்களை ஈடேற்றித் தருவார் என்பதால், பக்த உசிதப் பெருமாள் என்று அழைக்கப்பட்டு, அதுவே பக்தோசிதப் பெருமாள் என்றானது. இத்தலத்தில் உள்ள நரசிம்மரை வணங்கினால் புத்தி சுவாதீனம், பில்லி சூன்யம், ஏவல், தீராத வியாதி ஆகிய பிரச்சினைகள் தீரும். குழந்தையின்மை, திருமணத்தடை, வியாபார நஷ்டம் ஆகிய பிரச்னைகள் தீர்ந்து சுபிட்சம் ஏற்படும்.

யோகநந்தீசுவரர் கோவில்
நந்திதேவர், கொடிமரம் வித்தியாசமான நிலையில் அமைந்திருக்கும் தேவாரத்தலம்
கும்பகோணத்திற்கு அருகிலுள்ள தேவாரத்தலம் திருவிசநல்லூர். இறைவன் பெயர் யோகநந்தீசுவரர். இவர் ஏழு முனிவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததால் இவருடைய லிங்கத் திருமேனியில் எழு சடைகள் இருக்கின்றன. பொதுவாக எல்லா கோவில்களிலும் ராஜகோபுரத்தை கடந்து உள்ளே நுழைந்தவுடன் முதலில் கொடி மரம் இருக்கும். பின்னர் பலிபீடம், நந்தி அமைந்திருக்கும். ஆனால் இக்கோவிலில், நந்தி முதலில் இருக்கும். மேலும் நந்தி தேவர் ஒரு கால் எடுத்து எழுந்த பாவனையிலும், திரும்பி வாசலைப் பார்த்த நிலையிலும் இருப்பார்.ஒரு சமயம் பெரும் பாவங்கள் செய்த ஒருவன், தன் விதிப்படி மரணிக்க வேண்டிய தினத்தன்று, இக்கோவில் வாசலில் நின்று இறைவனை அழைத்தான்.அப்போது சிவபெருமான் நந்திதேவரிடம் வாசலில் நிற்பது யார் என்று கேட்டார். நந்திதேவர் வாசலை நோக்கி திரும்பி வந்தவனை பார்த்தார். அன்று பிரதோஷ தினமாக இருந்ததாலும், நந்திதேவர் பார்வை பட்டதாலும் உடனே அவன் பாவங்கள் தொலைந்தன.அதே சமயம் விதிப்படி அந்த மனிதனின் உயிரை பறிக்க எமன் வந்தான். நந்திதேவர் எமனை கொடிமரத்திற்கு வெளியே தடுத்து நிறுத்தி சண்டையிட்டு வெளியேற்றினார். இதனால்தான் நந்திதேவர் இக்கோவிலில், வேறு எந்த தலத்திலும் காணமுடியாத, மாறுபட்ட நிலையில் அமைந்திருக்கிறார்.
ரிஷப ராசிக்காரரர்களின் பரிகார தலம்
இங்கு நந்தி ரிஷபவாகனமாக காத்து நிற்பதால், ரிஷப ராசிக்காரரர்களின் (கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிஷம் நட்சத்திரம்) பரிகார தலமாக விளங்குகிறது. இவரை பிரதோஷம், சிவராத்திரி, சோமவார நாட்களில் வழிபடுவது சிறப்பு.
சூரிய ஒளி கடிகாரம்
கோவிலின் அம்மன் சன்னதிக்கு எதிரில், சுமார் 700 ஆண்டுகள் பழைமையான சோழர் கால சூரியஒளி கடிகாரம் அமைந்துள்ளது. இச்சுவர்க் கடிகாரம் சூரிய ஒளி முள்ளின் மீது ஏற்படுத்தும் நிழலின் அடிப்படையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை சூரியனின் இயக்க அடிப்படையில் கணக்கிட்டு இக்கடிகாரம் நேரத்தை காட்டுகின்றது. கிரானைட் கல்லில் அரைக்கோள வடிவில் dial pad செதுக்கப்பட்டுள்ளது. நடுவில் பித்தளையால் செய்யப்பட்ட ஆணி செங்குத்தாக பொருத்தப்பட்டுள்ளது. சூரியனின் நிழல் இந்த ஆணியில் பட்டு நிழல் எந்த புள்ளியில் விழுகிறதோ அதுவே அப்போதைய நேரம் ஆகும்.
.கார்த்திகை மாத அமாவாசையன்று கிணற்றில் கங்கை பொங்கும் அதிசயம்
இத்தலத்தில் சுமார் 370 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர் ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள். சிறந்த சிவபக்தர். இவர் கர்நாடக சமஸ்தானத்தில் திவானாகப் பணிபுரிந்தவர். இன்றளவும், சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக, இவர் வாழ்ந்த வீட்டின் கிணற்றில், ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாத அமாவாசையன்று கங்கை பொங்கி எழுந்தருளுகிறாள். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த ஆச்சரியமான நிகழ்வுக்கு பின்னால் இறையருளின் மகத்துவம் இருக்கின்றது. ஸ்ரீதர அய்யாவாள் தந்தையார் மறைந்த திதி கார்த்திகை மாதத்தில் வரும். அத்தகைய ஒரு நாளில் இவர் பிராமணர்களுக்கு உணவளிப்பதற்காக அந்தணர்களை எதிர்பார்த்து தன் வீட்டு வாசலில் காத்திருந்தார். அப்போது தாழ்த்தப்பட்டவர் ஒருவர் அவர் இல்லம் வந்து பசியால் துடிப்பதாக சொன்னார். உடனே அந்தணர்கள் உண்பதற்காக வைத்திருந்த உணவை அந்த தாழ்த்தப்பட்டவருக்கு அளித்து மகிழ்ந்தார். சிரார்த்த சமையலை திதி கொடுக்கும் அந்தணர்கள் மட்டுமே உண்ண வேண்டும். மீதம் உள்ளதை பசுவுக்குத்தான் தருவார்கள். அந்த நியதியை அய்யாவாள் மீறியதால், அந்தணர்கள் வெகுண்டனர் ஸ்ரீதர அய்யாவாள் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக கங்கையில் நீராடி விட்டு வந்தால்தான் அவர்களால் திதி கொடுக்க முடியும் என்றனர். சிவபக்தரான ஸ்ரீதர அய்யாவாள் இறைவனைமனம் உருக வேண்டி, கிணற்றடியில் நின்றபடி கங்காஷ்டகம் பாடினார். ஐந்தாம் பாடல் பாடியவுடன் கிணற்றில் கங்கை பொங்கி வழிந்தது. கிணற்றின் நீர்மட்டம் விறுவிறுவென ஏறி, வழிந்து, அந்தத் தெரு முழுதும் கங்கை நீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்பொழுது தான் அந்த அந்தணர்கள் ஐயாவாளின் மகிமையை அறிந்தனர். மன்னிப்பும் கேட்டனர். இன்றளவும் கார்த்திகை அமாவாசையன்று, 300 ஆண்டுகளுக்குமுன் கங்கை பொங்கி வந்ததுபோல, அய்யாவாள் இல்லக் கேணியில் நீர் பொங்கி வருவதைக் காணலாம். நீராடலாம். கார்த்திகை மாதம் பத்து நாள் விழா நடக்கும். பத்தாம் நாள் கார்த்திகை அமாவாசையன்று காலை கிணற்றுக்கு பூஜை செய்வார்கள். முதலில் வேத விற்பன்னர்கள் நீராடியபின் பக்தர்கள் நீராடுவார்கள். அன்று முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் நீராடினாலும், கிணற்று நீர் குறையாமலேயே இருப்பது அதிசயம்!

சுப்ரமணிய சுவாமி கோவில்
முருகனின் இடப்பக்கம் மயிலின் தலை திரும்பி இருக்கும் தலம்
நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் என்ற ஊரில் இருந்து சுமார்14 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது பெரம்பூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் .இத்தலத்தில் முருகப்பெருமான் ஆறு முகங்களுடனும் 12 திருக்கரங்களுனும் மயில் மீது அமர்ந்து வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார். பெரும்பாலான முருகன் ஆலயங்களில் மயிலின் தலையானது முருகனின் வலப்பக்கம் திரும்பியிருக்கும் ஆனால் இத்தலத்தில் மயிலின் தலையானது முருகனின் இடப்பக்கம் திரும்பி இருக்கிறது.இது ஒரு விசேடமான அமைப்பாகும்.

ஈச்சனாரி விநாயகர் கோவில்
தன் இருப்பிடத்தைத் தேர்ந்தெடுத்த விநாயகர்
கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் 10வது கிலோ மீட்டரில் அமைந்துள்ளது ஈச்சனாரி விநாயகர் கோவில். இங்கு விநாயகர் அருள்பாலிப்பதற்கு பின்னயில் ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது.
கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் 10வது கிலோ மீட்டரில் அமைந்துள்ளது ஈச்சனாரி விநாயகர் கோவில். இங்கு விநாயகர் அருள்பாலிப்பதற்கு பின்னணியில் ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது.இங்குள்ள மூலவர் சிலையை பேரூர் கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக மதுரையில் இருந்து கொண்டு வந்தனராம். வழியில் வண்டியின் அச்சு முறிந்து தற்போது கோவில் இருக்கும் இடத்தில் நின்று விட எத்தனையோ முயற்சிகள் மேற்கொண்டும் வண்டியை மேற்கொண்டு நகர்த்த முடியவில்லை. பின்னர் விநாயகர் இவ்விடத்திலேயே இருக்க விரும்புகிறார் என எண்ணி அங்கேயே கோவிலை நிர்மாணித்தனர். ஈச்சனாரி எனும் இடத்தில் வாசம் செய்வதால் ஈச்சனாரி விநாயகர்' என்றே இவர் அழைக்கப்படுகிறார்.கோவையில் புதிதாக வாகனங்களை வாங்குவோர் தங்கள் வாகனங்களுக்கு முதல் பூஜை போடுவது இங்குதான் என்பது சிறப்பம்சமாகும.

நாடியம்மன் கோவில்
பக்தர்களின் உயிர்நாடியாக இருக்கும் அம்மன்
தஞ்சாவூருக்குத் தென்கிழக்கே 47 கிமீ தொலைவில் பட்டுக்கோட்டையில் அமைந்துள்ளது, நாடியம்மன் கோவில். தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளைத் தீர்த்து வைப்பதாலும், தன் பக்தர்களின் உயிர்நாடியாக இருப்பதாதாலும் அவளை இப்பெயரிட்டு அழைக் கிறார்கள். கருவறையில் தீ ஜுவாலை, கிரீடம் நான்கு கரங்களில் கத்தி, சூலம், கேடயம், கபாலம் ஏந்தி ஆயுதபாணியாகக் காட்சி தருகிறாள். மூன்று குதிரைகள் காவலுக்கு நிற்கின்றன. அம்மன் சன்னதியின் முன்பாக சிம்மம் உள்ளது. கி.பி. 1600 ஆம் ஆண்டு இப்பகுதியை ஆட்சி செய்தவர் பட்டு மழவராய நாயக்கர். அவர் பெயரால் விளங்கி வந்த கோட்டை இருந்த இடத்தின் பெயர் பட்டு மழவராயர் கோட்டை. அது நாளடைவில் சுருங்கி பட்டுக்கோட்டை ஆகிவிட்டது. மழவராயர் ஒருமுறை வேட்டைக்குச் சென்றார். அங்கே தெய்வீகக் களையோடு ஒரு பெண்மணி நிற்பதைக் கண்டார். அரசரைப் பார்த்ததும் அந்த பெண் ஓட, அரசரும் அவளைத் துரத்திக் கொண்டு ஓடினார். அவள் ஓடிச் சென்று ஒரு புதரில் மறைந்து விட்டாள். புதர் அருகே சென்று பார்த்தபோது, அங்கே ஓர் அழகான அம்மன் சிலை இருந்தது. பட்டு மழவராயர், தங்களை நாடி வந்த அம்மனுக்கு அங்கு கோவிலை எழுப்பினார்.இப்பகுதியில் பிறக்கும் பெரும்பாலான குழந்தைகளுக்கு 'நாடி' என்கிற பெயர் சூட்டப்படுகிறது. பௌர்ணமி பூஜை செய்து இங்குள்ள நாகலிங்க மரத்தில் சரடு கட்டினால் எப்படிப்பட்ட தோஷம் இருந்தாலும் விலகி மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். மேலும் பல்லாயிரக்கணக்கானோர், ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கூடி பெருந்திருவிழாவாக மாவிளக்கு போடும் அதிசயம் நடப்பது இந்த கோவிலில் மட்டும்தான்.