
ஸ்ரீபுருஷோத்தம பெருமாள் கோவில்
இரண்டு சங்கு இரண்டு சக்கரம் ஏந்திய பெருமாள்
பெருமாள் விழாக்களின்போதுதான் கருடன் மீது எழுந்தருளி காட்சி தருவார். ஆனால், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் ஸ்ரீபுருஷோத்தம பெருமாள் கோவிலில், மூலஸ்தானத்திலேயே பெருமாள் கருட சேவை சாதிக்கிறார். கருவறையின் நடுவில் சதுர பீடமும், அதன் மத்தியில் மலர்ந்த தாமரை மலரும் அதன்மேல் ஆதிசேஷனின் அடிபாகமும், அதில் கருட பகவான் ஒருகாலை மடித்து, மறுகாலை ஊன்றித் திகழ, அவரின் ஒரு கை பெருமாளின் வலது திருப்பாதத்தைத் தாங்கியவாறும், மற்றொரு கை மலர்ந்த தாமரை மலரை கையில் கொண்டும் இருக்கிறது. கருடன் தோளின்மேல் உள்ள பீடத்தில் ஸ்ரீபுருஷோத்தம பெருமாள் இடதுகாலை மடித்து, வலது காலை கருட பகவானின் கையில் வைத்தவாறும், பிராட்டியை தன் இடது மடியில் அமர்த்தி, ஆதிசேஷன் ஏழு தலைகளுடன் குடைபிடிக்க, வரதஹஸ்தம் கொண்டு அமர்ந்த திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். பொதுவாக பெருமாள் எல்லாத் தலங்களிலும் ஒரு சங்கு, ஒரு சக்கரம் ஏங்கிய நிலையில்தான் காட்சி தருவார்.ஆனால் மூலவர் புருஷோத்தம பெருமாள் கைகளில் இரண்டு சங்கு இரண்டு சக்கரம் ஏந்தி அருள் பாலிக்கிறார்.இந்த அமைப்புடன் பெருமாளை தரிசிப்பது அபூர்வம் ஆகும்.இத்தலத்தில் பெருமாள் ஒரு தாயாருடன் காட்சி தருவதால், 'புருஷோத்தமர்' என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு, 'ஏகபத்தினி விரதர்' என்றும் பெயருண்டு. புதுமணத் தம்பதியர்கள், தாயாரையும் பெருமாளையும் வணங்கினால் வாழ்க்கை முழுவதும் இணைபிரியாமல் இருப்பர் என்பது நம்பிக்கை. கடன் தொல்லை உள்ளவர்கள் இப்பெருமாளை வழிபட்டால் நிவாரணம் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

அக்னீஸ்வரர் கோவில்
மருத்துவச்சியாய் சென்று பிரசவம் பார்த்த திருப்புகலூர் அம்பாள் கருந்தார்குழலி
நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 24 கிலோமீட்டர் தொலைவில், நன்னிலத்திற்கு அருகிலுள்ள தேவாரத்தலம் ,திருப்புகலூர்.இறைவன் : அக்னீஸ்வரர். இறைவி: கருந்தார் குழலி.
ஒரு சமயம், திருப்புகலூர் அருகில் உள்ள போலகம் கிராமத்தில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை காப்பாற்ற அவரின் தாய் திருப்புகலூர் அம்பாள் கருந்தார்குழலியை வேண்ட, அம்பாளே வெள்ளைப் புடவை அணிந்து மருத்துவச்சியாய் சென்று சுகப்பிரசவம் செய்து கொடுத்ததால், சூளிகாம்பாள் என்று அழைக்கப்படுகிறார். அதற்காக அக்குடும்பத்தினர் கோயிலுக்கு காணிக்கையாக கொடுத்த நிலம் இன்றும் மருத்துவ காணி நிலம் என்று அழைக்கப்படுகிறது. இன்று வரை இப்பகுதியில் பிரசவத்தால் யாரும் இறந்ததில்லை என்பதிலிருந்து அம்பாளின் அருள் விளங்கும்.அதனால் இங்குள்ள சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள திருமருகல், இராமநந்தீஸ்வரம், திருசெங்காட்டங்குடி மற்றும் இத்தலத்தில் உள்ள அம்மனுக்கும் 'சூலிகாம்பாள்' என்னும் திருநாமம் ஏற்பட்டது. அதுமட்டுமல்லாது பிரசவம் பார்த்து இரவு தாமதமாகச் சென்றதால் அம்பாள் கோவில் உள்ளே செல்லாமல் வெளியிலேயே நின்று விட்டாள். அதனால் இந்த நான்கு கோயிலிலும் அம்மன் சன்னதி வெளியிலேயே உள்ளது. எனவே, அர்த்தஜாம பூஜையின்போது அம்பிகைக்கு சம்பா அரிசி, மிளகு, சீரகம், உப்பு, நெய் கலந்த சாதம் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது

பரிக்கல் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில்
நரசிம்மரும் லட்சுமி தாயாரும் ஆலிங்கனம் செய்தபடி உள்ள தலம்
பொதுவாக நரசிம்மர் கோவிலில், உக்கிர மூர்த்தியான நரசிம்மர் தன் மடியிலுள்ள மகாலட்சுமியை ஆலிங்கனம் செய்திருப்பார். ஆனால், விழுப்புரத்தில் இருந்து சுமார் 21 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, பரிக்கல் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் மட்டும்தான் நரசிம்மரை லட்சுமி தாயார் தன் வலக்கையாலும், லட்சுமி தாயாரை நரசிம்மரும் ஆலிங்கனம் செய்தபடி இருக்கிறார்கள்.இங்கு பெருமாளை தாயார் ஆலிங்கனம் செய்துள்ளபடி இருப்பதால், பெருமாள் இங்கு மிகவும் சாந்தசொரூபமாக உள்ளார்.

கோமுக்தீஸ்வரர் கோவில்
பசுவாய் தோன்றிய பார்வதிக்கு விமோசனம் தந்த தலம்
மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில் சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தேவாரத்தலம் திருவாவடுதுறை. இறைவன் : கோமுத்தீசுவரர். இறைவி: ஒப்பிலா முலையம்பிகை.ஒருசமயம் கைலாயத்தில் சிவனும், பார்வதியும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சிவனே தொடர்ந்து வெற்றி பெற்றதாக தன்னை அறிவித்துக் கொண்டார். அம்பாள் கோபம் கொள்ளவே, சிவன் அவளை பசுவாக பிறக்கும்படி சபித்து விட்டார். அவள் தன் வடிவம் நீங்கி மன்னிப்புத் தரும்படி சிவனிடம் வேண்டினாள். இத்தலத்தில் தம்மை வழிபட்டு வர சாபம் நீங்கப்பெறும் என்றார் சிவன். அதன்படி அம்பாள் பசுவின் வடிவில் இங்கு வந்து, சிவனை வேண்டி தவமிருந்தாள்.சிவன் அவளுக்கு காட்சி தந்து, தன்னுடன் அணைத்துக் கொண்டு, விமோசனம் கொடுத்தார். “கோ’வாகிய பசுவிற்கு விமோசனம் தந்தவர் என்பதால், “கோமுக்தீஸ்வரர்’ என்று பெயர் பெற்றார்.

காயாரோகணேஸ்வரர் கோவில்
நாக தோஷம் போக்கும் நாகாபரண விநாயகர்
நாகப்பட்டினத்தில் உள்ள காயாரோகணேஸ்வரர் கோவிலின் நுழைவாசலில், நாகாபரண விநாயகர் தனிச் சன்னதி கொண்டு அருள் பாலிக்கிறார். ஆலயத்தின் முகப்பில் வீற்றிருக்கும் இந்த விநாயகர், உடலில் நாகத்தை ஆபரணமாக சூடி, தலைக்கு மேலே ஐந்து தலை நாகம் குடை பிடித்தபடி இருக்க அதன் கீழே காட்சி தருகிறார். இவர் நாகத்தையே தன்மார்பினில் பூணூலாகவும், இடையில் கடி சூத்திரமாகவும் அணிந்திருக்கிறார். இதன் காரணமாகவே இந்த விநாயகருக்கு, 'நாகாபரண விநாயகர்' என்று பெயர் வந்தது.
சர்ப்ப ராஜன் தனக்கிருந்த தோஷத்தை நிவர்த்தி செய்ய இத்தலத்து இறைவனை வழிபட வந்தபோது,முதலில் இந்த நாகாபரண பிள்ளையாரை பிரதிஷ்டை செய்து அவருக்கு பூஜை செய்தான். பின்னர் காயாரோகணரை வழிபட்டு தோஷ நிவர்த்தி அடைந்தான்.
சர்ப்ப ராஜனே பிரதிஷ்டை செய்து வணங்கிய விநாயகர் இவர் என்பதால், ராகு-கேது சம்பந்தப்பட்ட தோஷங்கள் அனைத்தும் இவரை வழிபடுவதால் விலகும். கால சர்ப்ப தோஷம், நாகதோஷம், களத்திர சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இவருக்கு, ராகு காலத்தில் பாலபிஷேகம் செய்வித்து வேண்டிக்கொண்டால், அந்த தோஷங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். ராகு- கேது பெயர்ச்சியின்போது இவருக்கு விசேஷ பூஜைகளும் நடக்கிறது.

நெய் நந்தீஸ்வரர் கோவில்
நெய் மீது ஈ, எறும்பு மொய்க்காத அதிசயம்
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதிக்கு அருகே உள்ள வேந்தன்பட்டி என்ற ஊரில் அமைந்துள்ளது நெய் நந்தீஸ்வரர் கோவில். இறைவன் சொக்கலிங்கேசுவரர்.
ஒரு சமயம் இத்தலத்தில், சிவ பக்தர் ஒருவர் சிவ லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்தார். ஆனால் நந்தீஸ்வரரை பிரதிஷ்டை செய்யாமல் விட்டு விட்டார். நந்தியின் புனிதம் கருதி அதை தீர்த்த குளத்திற்குள் வைத்து விட்டார். ஒரு நாள் அவருக்கு கடுமையான வயிறு வலி ஏற்பட்டது. அப்போது மானசீகமாக சிவனை வேண்டிக்கொண்டார். தொடர்ந்து அவரின் கனவில் மாடுகள் விரட்டுவது போல காட்சிகள் கண்டு திடுக்கிட்டார். உடனே நந்தியை பிரதிஷ்டை செய்வதாகவும், அதற்கு நெய் அபிஷேகம் செய்வதாகவும் வேண்டிக்கொண்டார். இந்த நிகழ்வு நடந்த சில நாட்களிலேயே அந்த பக்தரின் உடல் பிணி தீர்ந்தது. அவர் நெய் அபிஷேகம் செய்து வழிபட்டது போல பலரும் நெய் அபிஷேகம் செய்யும் வழக்கம் ஏற்பட்டது. அதனால், இங்குள்ள நந்தி, நெய் நந்தீஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றார்.
பொதுவாக நம் வீட்டில் அல்லது வெளியில் சிறிதளவு நெய் கொட்டினாலும் எறும்பு, ஈக்கள் குவிந்துவிடும். ஆனால் இந்த நந்தீஸ்வரருக்கு நெய் அபிஷேகம் செய்யப்படும். நெய் மீது ஈ, எறும்புகள் மொய்ப்பதில்லை. இதற்கு நந்தியின் கொம்புகளுக்கு இடையே ஒரு சக்கரம் உள்ளது. இது இயற்கையாக அமைந்த அமைப்பாக உள்ளது. இந்த சக்கரம் ஆதார சக்தியாக அமைந்துள்ளது. இதன் காரணமாகத்தான் நந்தி மீது அபிஷேகம் செய்யப்படும் நெய் மீது ஈயும், எறும்பும் மொய்ப்பதில்லை. நந்தியம் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகிற நெய்யானது, கோவிலுக்குள் இருக்கும் கிணற்றில் சேகரிக்கப்படுகிறது. நெய் பல லிட்டர் கணக்கில் இருந்தும்,,அங்கும், ஒரு பூச்சியும் மொய்ப்பதில்லை.
ரிஷப ராசியினர் பரிகாரம் செய்ய சிறந்த தலமாக இந்த நெய் நந்தீஸ்வரர் கோயில் பரிந்துரைக்கப்படுகிறது.

சற்குணேஸ்வரர் கோயில்
மறுபிறப்பைத் தடுக்கும் திருக்கருவிலித் தலம்
கும்பகோணத்தில் இருந்து சுமார் 25 கி.மி. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருக்கருவிலி. இறைவன் திருநாமம் “சற்குணேஸ்வரர்.
திருக்கருவிலித் தலத்து இறைவனைக் காண்போருக்கு மறுபிறவி இல்லை. அதாவது, அவர்கள் மீண்டும் ஒரு தாயின் கருவில் உதிக்கமாட்டார்கள். இதனால் தான் இவ்வூர் ‘கரு இல்லை’ என்ற பொருளில் ‘கருவிலி’ எனப்பட்டது. காலப்போக்கில் கருவேலி என மருவியது. கருவுக்கு வேலி என்றும் இதன் பொருளை எடுத்துக் கொள்ளலாம்.இந்த தலத்தின் முக்கிய பெருமை, நல்ல குணங்கள் உள்ளவருக்கு அந்த குணங்கள் என்றும் நிலைத்து நிற்கும் என்பதும், தீய குணங்கள் இருந்தால் அது மறைந்துவிடும் என்பதும் ஆகும். எனவே இவ்வூர் இறைவன் ‘சற்குணேஸ்வரர்’ எனப்படுகிறார். அம்பாள் ‘சர்வாங்க சுந்தரி’ எனப்படுகிறாள்.அம்பாள் சர்வாங்க சுந்தரி சிலை ஐந்தரை அடி உயரத்தில், நான்கு திருக்கரங்களுடன் பேரழகு கொண்டதாக உள்ளது.

பொய்யாமொழி பிள்ளையார் கோவில்
லிங்கத்தில் காட்சி தரும் விநாயகர்
திண்டிவனத்திலிருந்து 13 கி.மீ. தொலைவில், செஞ்சி செல்லும் சாலையில் உள்ள தலம் தீவனூர். இங்கு கோயில் கொண்டிருக்கும் பொய்யாமொழி பிள்ளையார் லிங்க ரூபத்தில் காட்சி தருகிறார். அதனால் இவருக்கு கணபதி லிங்கம் என்ற பெயரும் உண்டு. தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற விநாயகர்களில் இவரும் ஒருவர.பல நூறு ஆண்டுகளுக்கு முன், ஆடுமேய்க்கும் சிறுவர்கள் நெல் குத்த கல் தேடிய போது, யானைத்தலை வடிவில் ஒரு கல் கிடைத்தது. அது விநாயகரின் உருவம் போல் தெரியவே, அதை விநாயகராகக் கருதி பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தனர். பால் அபிஷேகம் செய்யும் போது லிங்கத்தில் படிந்திருக்கும் விநாயக வடிவைத் தரிசிக்கலாம். இவருக்கு மூன்று வாகனங்கள் இருக்கின்றன. லிங்க ரூபத்தில் இருப்பதால் நந்தி ஒரு வாகனம், வழக்கமான மூஞ்சூறு இரண்டாவது வாகனமாகவும், யானை தலையர் என்பதால் யானை மூன்றாவது வாகனமாகவும் உள்ளன. விநாயகர் கோயிலுக்கு பின்புறம் ஒன்றோடு ஒன்று இணைந்தபடி, மூன்று விழுதில்லாத ஆலமரங்கள் உள்ளன. இவற்றை பிரம்மா, விஷ்ணு, சிவன் என கூறுகின்றனர். திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இந்த மரங்களைச் சுற்றி வழிபடுகின்றனர். இத்தலத்தோடு தொடர்புடைய அதிசய நிகழ்ச்சிகள் ஏராளம். அவற்றில் சில
கொம்பு முளைத்த தேங்காய்
ஒருசமயம் இக்கோவிலுக்கு வந்து கொண்டிருந்த பக்தர் ஒருவர், மரக்காணத்தில் இருந்த தென்னந்தோப்பில் பொய்யாமொழி பிள்ளையாருக்கு உடைக்க என்று ஒரு தேங்காய் கேட்டிருக்கிறார். அப்போது அங்கிருந்த தோப்புக்காரர்கள் 'பிள்ளையாருக்குத் தேங்காய் கொடுக்காவிட்டால் அவற்றுக்கு என்ன கொம்பா முளைத்துவிடும்' என்று பரிகாசம் செய்து அனுப்பிவிட்டனர். மறுநாளே தோப்பில் இருந்த எல்லாத் தேங்காய்களுக்கும் தும்பிக்கை போன்ற கொம்பு நிஜமாகவே முளைத்துவிட்டதாம். இதனால் பயந்துபோன தோப்பின் சொந்தக்காரர்கள் இந்தப் பிள்ளையாரை வேண்டி வணங்கித் தேங்காய்களை வழிபாட்டுக்குக் கொடுத்தார்களாம். கொம்பு முளைத்த தேங்காய்களில் ஒரு குலை இன்றும் இங்கு கட்டப்பட்டுள்ளது.
மிளகு உளுந்தாகிய அதிசயம்
மிளகு வணிகர் ஒருவர், பொதி மாடுகளின் மீது மிளகு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு இக்கோயிலின் வழியே சந்தைக்குச் சென்றார். அப்போது இந்த கோயில் நிர்வாகிகள் விநாயகருக்குப் பொங்கல் நிவேதனம் செய்வதற்காக அவரிடம் கொஞ்சம் மிளகு கேட்டனர். அதற்கு வணிகர், 'மூட்டையில் உளுந்துதான் இருக்கிறது. என்னிடம் மிளகு இல்லை' என்று பொய் சொல்லிவிட்டுப் போய்விட்டார். அவர் சொன்னபடியே மூட்டைகளை அவிழ்த்துப் பார்த்தால் மிளகுக்கு பதில் உளுந்துதான் இருந்தது. வணிகர் கதறி அழுது விநாயகரிடம் மன்னிப்பு கேட்டதும் மீண்டும் மிளகாகி விட்டது.

சுந்தரேஸ்வரர் கோயில்
பார்வதிதேவி மீனவ மகளாக அவதரித்த தலம்
காரைக்காலில் இருந்து பொறையார் செல்லும் சாலையில் சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேவாரத்தலம், திருவேட்டக்குடி. இறைவன் : சுந்தரேஸ்வரர்....ஒருசமயம் கைலாயத்தில் பார்வதிதேவி சிவனிடம், ”உலகில் வாழும் உயிர்களுக்கு ஆதாரமாக நீங்கள் மட்டும் எப்படி இருக்க முடியும்? நான் இல்லாமல் உங்களால் தனித்து இயங்க முடியாதே!” என்றாள். அம்பாளின் ஆணவத்தை அறிந்த சிவன், அவளை பூலோகத்தில் மீனவப்பெண்ணாக பிறக்கும்படி செய்துவிட்டார். அதன்படி அம்பாள் இத்தலத்தில் மீனவக்குழந்தையாக பிறந்தாள்.சிவன் மீது பக்தி கொண்டு இத்தலத்தில் தவமிருந்தாள். சிவனும், மீனவராக வந்து அம்பாளை திருமணம் செய்து கொண்டார். இந்த நிகழ்வின் அடிப்படையில் மாசி திருவிழாவின்போது, சிவனை மீனவர்கள் இங்கிருந்து தங்கள் பகுதிக்கு அழைத்துச்சென்று'மாப்பிள்ளை அழைப்பு' கொடுக்கின்றனர். அப்போது, மீனவர்கள் சிவனை,'மாப்பிள்ளை' என்றும் அழைக்கும் வழக்கமும் உள்ளது. இவரிடம் வேண்டிக்கொண்டால் திருமண தோஷங்கள் நீங்கும், விரைவில் வரன் அமையும் என்பது நம்பிக்கை.

ஆதிஜெகநாத பெருமாள் கோவில்
ராமபிரான் சயன கோலத்தில் இருக்கும் அபூர்வ காட்சி
ராமநாதபுரத்துக்குத் தென்கிழக்கே 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திவ்யதேசம் திருப்புல்லாணி. இத்தலத்து பெருமாளின் திருநாமம் ஆதிஜெகநாத பெருமாள். தாயார் திருநாமம் கல்யாணவல்லி.
இக்கோவில் மிகவும் புராதனமானது. ராமாயண காலத்துக்கு முற்பட்ட தலம் இது.
ராமபிரான் சேது கடலில் பாலம் கட்டி இலங்கைக்குச் சென்று ராவணனை வெல்ல இத்தலப் பெருமாளைச் சேவித்து கோதண்டம் பெற்றதாகத் தலபுராணம் கூறுகின்றது. மூலவர் ஆதிஜெகநாத பெருமாள் சன்னிதிக்கு வடகிழக்கே தர்ப்ப சயனப் பெருமாள் (ராமபிரான்) சன்னிதி விளங்குகிறது. வழக்கமாகப் பள்ளி கொண்ட பெருமாளாக அரங்கநாதரும், பத்மநாபரும், ஆதிகேசவரும் மற்ற கோவில்களில் இருக்கும் போது, இங்கே ராமபிரான் இடுப்பில் உடைவாளோடு தர்ப்பைப் புல்லின் மீது படுத்து துயில் கொள்வது வேறு எந்த தலத்திலும் நாம் தரிசிக்க முடியாத காட்சியாகும்.
சீதையை மீட்க இலங்கை செல்லவிருந்த ராமபிரான், கடலில் பாலம் அமைப்பதற்காக சமுத்திரராஜனிடம் அனுமதி கேட்டு மூன்று நாட்கள் காத்திருந்தார். அப்போது, ராமபிரான் புல்லையே தலையணையாகக் கொண்டு படுத்து உறங்கியதால், இது திருப்புல்லணை என அழைக்கப்பட்டது. இங்கு ராமபிரான், ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து, அதில் சயனிக்கும் கோலத்தில் காட்சி தருகிறார். சீதையை மீட்கச் செல்லும் முன் தங்கிய தலமென்பதால், ராமருடன் சீதை இல்லை. லட்சுமணனின் வடிவமாக ஆதிசேஷன் இருப்பதால், லட்சுமணனும் இல்லை; அனுமன் மட்டும் உள்ளார். கருவறை சுவரில் பாலம் அமைக்க ஆலோசனை செய்த காட்சியில் சூரியன், சந்திரன், தேவர்கள் இருக்கின்றனர்., விபீஷணன் ராமபிரானிடம் இவ்வூரில்தான் சரணடைந்ததாக சொல்லப்படுகிறது.

வேதபுரீஸ்வரர் கோவில்
அபூர்வமான அர்த்தநாரீஸ்வர கோலம்
தஞ்சை மாவட்டம் திருவையாறில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள தேவாரத் தலமான திருவேதிகுடியில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற வேதபுரீஸ்வரர் கோவில். மூலவர் வேதபுரீஸ்வரர். இத்தலத்திலுள்ள அர்த்தநாரீஸ்வர கோலம் சற்று வித்தியாசமாக உள்ளது. பொதுவாக அர்த்தநாரீஸ்வரர் என்றால் சிவன் வலது புறமும், அம்மன் இடது புறமும் இருப்பார்கள். ஆனால் இங்கு அம்மன் வலது புறமும், சிவன் இடது புறமும் இணைந்துள்ள அர்த்தநாரீஸ்வரரைக் கணலாம்.

காரண விநாயகர் கோவில்
கருவறையில் விநாயகரும் நந்தியும் சேர்ந்து காட்சி தரும் தலம்கோயம்புத்தூர் மாவட்டம் காரமடையில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மத்தம் பாளையத்தில் அமைந்துள்ளது காரண விநாயகர் கோவில். ஏதோ ஒரு காரணத்தால் விநாயகர் இந்த இடத்தில் அமர்ந்ததால் காரண விநாயகர் என அழைக்கப்படுகிறார். கருவறையில் விநாயகரின் அருகில் நந்தி இருப்பது ஒரு அரிதான காட்சியாகும். காரண விநாயகரின் சந்நிதி அருகில் அவரது தம்பியான காரண முருகனும், மாமாவான பெருமாளும், ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கின்றனர். ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோவில், கால்நடைகளின் விருத்திக்காகவும், நோயற்ற வாழ்க்கை வாழவும் பிரார்த்தனை தலமாக விளங்குகிறது.

தில்லை காளி கோவில்
பெண் உருவில் தட்சிணாமூர்த்தி
சிதம்பரம் தில்லை காளி ஆலயத்தில் தட்சிணாமூர்த்தி பெண் உருவத்தில் கடம்பவன தக்ஷணரூபிணி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். விரிந்த கூந்தலுடன் கல்லால மரத்தடியில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். அருகில் சனகர், சனந்தனர், சனவாதனர், சனத்குமாரர் என்ற முனிவர்கள் வீற்றிருக்கின்றனர். கல்வியில் சிறப்பு பெற மாணவர்கள் இவரை வியாழனன்று நெய் தீபமேற்றி வழிபடுகின்றனர்.

புண்டரீகாட்சன் கோவில்
இரண்டு வாசல்கள் கொண்ட திவ்ய தேசம்
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே அமைந்துள்ளது 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவெள்ளறை புண்டரீகாட்சன் கோவில் .இந்த திருத்தலம் ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலை விட மிகவும் பழமையானது. அதனால் ஆதிவெள்ளறை என்றும் அழைக்கப்படுகிறது. எந்த கோயிலிலும் இல்லாத வகையில் இங்கு உத்தராயண வாசல் (வடக்கு வாசல்), தட்சிணாய வாசல் (தெற்கு வாசல்) என இரு வாசல்கள் உண்டு. தை முதல் ஆனி வரை உத்தராயண வாசல் வழியாகவும், ஆடி முதல் மார்கழி வரை தட்சினாய வாசல் வழியாக பெருமாளை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.பொதுவாகவே பெருமாளைத் தரிசித்துவிட்டு அதன் பின்னரே தாயாரின் சந்நிதிக்குச் செல்வது போல் ஆலயங்களின் அமைப்பு இருக்கும். வழிபாடுகளும் அப்படித்தான் இருக்கும். ஆனால், திருவெள்ளறையில் நாச்சியாரை முதலில் தரிசித்த பின்னரே பெருமாளைத் தரிசிக்கும்படியான அமைப்பு உள்ளது. அதேபோல், திருவிழாக்களின்போது திருப்பல்லக்கில் பவனி வரும் வைபவத்தில், தாயார் பல்லக்கில் முன்னே செல்வார். பிறகு தாயாரை அடியொற்றி பெருமாள் பின் தொடர்ந்து செல்வார். இது வேறு எந்தத் தலத்திலும் காணக்கிடைக்காத ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

சௌந்தரநாதர் கோவில்
பக்தனுக்காக நைவேத்தியத்தை சாப்பிட்ட பொல்லாப் பிள்ளையார்சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார் கோயில் செல்லும் வழியில் 18 கி.மீ. தூரத்தில், தேவாரத்தலமான திருநாரையூர் உள்ளது. இறைவன் திருநாமம் சௌந்தரநாதர். இறைவி திரிபுரசுந்தரி..தேவாரப் பாடல்களைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பி இத்தலத்தில் பிறந்தவர். இவரது தந்தை சௌந்தரநாதர் கோவிலில் உள்ள பிள்ளையாருக்கு தினமும் பூஜை செய்வார். ஒருமுறை, தந்தை வெளியூர் சென்று விட்டதால், நம்பி கோயிலுக்கு பூஜைக்கு கிளம்பினார். பிள்ளையாருக்கு நைவேத்யம் செய்த பின், அவரைச் சாப்பிடும்படி வற்புறுத்தினார். பிள்ளையாரோ அமைதியாக இருந்தார். மனம் வருந்திய நம்பி, பிள்ளையாரின் மடியில் முட்டி அழுதார். நம்பியாண்டார் நம்பியின் உண்மையான பக்திக்கு மகிழ்ந்த பிள்ளையார் அவர் கொண்டு வந்த சர்க்கரைப் பொங்கலைச் சாப்பிட்டார். இந்த தகவலைக் கேள்விப்பட்ட மன்னன் ராஜராஜசோழன் இதை நம்பவில்லை. இருப்பினும், நம்பியின் பேச்சை ஏற்று, பலவகையான பலகாரங்களுடன் கோயிலுக்கு வந்து, பிள்ளையாருக்கு நைவேத்யம் செய்யச் சொன்னான். பிள்ளையார் சாப்பிடவில்லை. உடனே நம்பி பக்தியுடன் அவர் மீது பாடல்களைப் பாடினார். இதுவே இரட்டை மணிமாலை என்று பெயர் பெற்றது. பாடல் கேட்டு மகிழ்ந்த பிள்ளையார், தன் பக்தன் அவமானப் படக்கூடாதே என்பதற்காக நைவேத்யத்தை அனைவர் முன்னிலையிலும் சாப்பிட்டார். இந்த பிள்ளையார் சிலை உளியால் செதுக்கப்படாத சுயம்பு விநாயகர் என்பதால் பொள்ளாப் பிள்ளையார் எனப்பட்டார். பொள்ளா என்றால் செதுக்கப்படாத என்பது பொருள். காலப்போக்கில் இது பொல்லாப்பிள்ளையார் ஆகி விட்டது.

சங்காரண்யேசுவரர் கோயில்
சங்கு போன்ற உருண்டை வடிவிலான சிவலிங்கம்தேவாரப்பாடல் பெற்ற தலைச்சங்காடு என்னும் தலம் மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில், மயிலாடுதுறையில் இருந்து சுமார் 21 கி.மி. தொலைவில் உள்ளது. .இத்தலத்து இறைவன் பெயர் சங்காரண்யேஸ்வரர். தலைச்சங்காட்டில் திருமால், சிவபெருமானை வழிபட்டு, பாஞ்சஜன்ய சங்கைப் பெற்றதால் இங்கு சிவபெருமான் சங்கு போன்ற உருண்டையான வடிவில் மூலவராகக் காட்சியளிக்கிறார். மூலவர் சங்காரண்யேஸ்வரருக்கு நல்லெண்ணை ஊற்றி அபிஷேகம் செய்யும் போது விளக்கு வெளிச்சத்தில் பார்த்தால் லிங்கத்தின் மீது மயிர்க்கால்கள் தெரியும்

வைகுண்டநாதர் கோவில்
வைகுண்டநாதர் கோவில்
ஆதிசேஷன் பெருமாளுக்கு குடைபிடிக்கும் திவ்ய தேசம்
பொதுவாக பெருமாள் ஆதிசேஷன் மேல் சயனித்தபடி இருப்பார். ஆனால் பாண்டிய நாட்டு திவ்ய தேசங்களில், நவ திருப்பதிகளில் ஒன்றான ஸ்ரீவைகுண்டத்தில், ஆதிசேஷன் குடைபிடிக்க, பெருமாள் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். இது ஒரு அரிதான காட்சியாகும். சித்திரை மாதம் ஆறாம் நாள் மற்றும் ஐப்பசி மாதம் ஆறாம் நாள், இந்த இரண்டு நாட்களிலும் மூலவர் வைகுண்ட நாதர் திருமேனி மீது சூரிய கதிர்கள், கோபுரம் வழியாக பொன்னொளி பரப்புவதைக் காணலாம். மூலவரின் திருமேனியில் தங்க கவசம் சாற்றப்பட்டு, சூரியக்கதிரில் பெருமாள் தகதகவென ஒளி வீசுவார். இந்த காட்சி சூரியனே பெருமாளை தரிசித்து அபிஷேகம் செய்வது போலிருக்கும்.திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில், 28-வது கிலோ மீட்டர் தூரத்தில் ஸ்ரீவைகுண்டம் உள்ளது. .

ஸ்ரீகற்கடேஸ்வரர் கோவில்
அம்பிகை நண்டு வடிவத்தில் வழிபட்ட தலம்
கும்பகோணம் - பூம்புகார் சாலையில், கும்ப கோணத்திலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத்தலம் திருந்து தேவன்குடி.முற்காலத்தில் ஈசனின் சாபத்தினால் நண்டாக மாறிய அம்பிகை, திருந்து தேவன்குடித் தலத்துக்கு வந்து ஈசனை தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டு வந்தாள். அதேநேரம், தான் கொண்ட ஆணவத்தின் காரணமாக இந்திர பதவியை இழந்த தேவேந்திரனும் குருபகவானின் ஆலோசனை யின்படி இந்தத் தலத்துக்கு வந்து, தினமும் 1,008 தாமரை மலர்களால் இறைவனை அர்ச்சித்து வழிபட்டு வந்தான்.இந்த நிலையில், தான் வளர்த்து வந்த தாமரை மலர்களை நண்டு ஒன்று பறித்து வந்து இறைவனை அர்ச்சிப்பதைக் கண்டு, இந்திரன்கோபம் கொண்டான் . தனது வாளால் அந்த நண்டை வெட்டத் துணிந்தான். அவனது வாளின் முனை சிவலிங்கத்தின் மீது பட்டது. அப்போது, சிவலிங்கத்தின் உச்சியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்திய சிவபெருமான், நண்டின் வடிவத்தில் இருந்த அம்பிகையை தம்முள் ஐக்கியப்படுத்திக் கொண்டார்.நண்டின் வடிவத்தில் வந்தது அம்பிகையே என்பதை உணர்ந்த இந்திரன், தனது தவற்றுக்கு வருந்தி இறைவனிடம் மன்னிப்பு கேட்டான். அதன் காரணமாக இந்தத் தலத்துக்கு திருந்து தேவன்குடி என்ற பெயர் ஏற்பட்டது.. சிவலிங்கத் திருமேனியில் வெட்டுத் தழும்புகளையும், லிங்கத் திருமேனியின் உச்சியில் நண்டு ஐக்கியமான துளையையும் இன்றும் காணலாம். கடக ராசி, ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குச் சிறப்பான பரிகாரத் தலம் இது. ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள், தங்களின் பிறந்த நட்சத்திரத்தில் அல்லது தேய்பிறை அஷ்டமி நாளில் இங்கு வந்து இறைவனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து வழிபட்டால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

ஜலகண்டேஸ்வரர் கோவில்
ஜலகண்டேஸ்வரர் கோவில்
தவழும் குழந்தையாக காட்சி தரும் விநாயகர்
வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில், அமர்ந்திருக்கும் குழந்தை விநாயகர், பார்ப்பவரை பரவசம் அடைய செய்பவர். தவழும் கண்ணனைப் போல, இங்கு துதிக்கையில் கொழுக்கட்டையுடன், தவழ்ந்தபடியே பின்புறம் திரும்பிப் பார்க்கும் கோலத்தில் அமைந்துள்ளார் விநாயகர்."

சுவேதாரண்யேசுவரர் கோவில்
திருஞான சம்பந்தரை இடுப்பில் தாங்கி நிற்கும் அம்மன்
சீர்காழியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருவெண்காடு ஆகும். திருஞானசம்பந்தர், இத்தலத்திற்கு வந்தபோது ஊரெல்லாம் சிவலிங்கமாகத் தெரிய, காலால் மிதிக்க அஞ்சி நின்றார். இதைக் கண்ட அம்பிகை, பெண் உருவெடுத்து வந்து சம்பந்தரை தமது இடுப்பில் தாங்கி கோயிலுக்குள் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அதனால் அம்பிகை 'இடுக்கி அம்மன்' என்று அழைக்கப்பட்டாள். அம்மன் பிரகாரத்தின் இடது மூலையில் சம்பந்தரை இடுப்பில் இருத்தியபடி உள்ள இடுக்கி அம்மன் சன்னதி உள்ளது.
இக்கோவிலில் உள்ள மூன்று குளத்திலும் நீராடி பிள்ளைஇடுக்கி அம்மனை வழிபட்டால் நிச்சயம் குழந்தைபேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை..