சர்ப்ப விநாயகர் கோயில்
சர்ப்ப விநாயகர்
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் உள்ளது. ஸ்ரீசர்ப்பவிநாயகர் கோவில்.இவருக்கு சர்ப்பம்,தன் ஐந்து தலைகளுடன் குடையாக விளங்குகிறது.விநாயகரின் உடலில் ஐந்து பாம்புகள் அணிகலன்களாக உள்ளன.ராகு கேது தோஷங்கள் இவரை வழிபட நீங்கும்.
கொப்புடைய நாயகி அம்மன் கோயில்
மூலவரே உற்சவராகவும் இருக்கும் அம்மன்
காரைக்குடியில் உள்ள கொப்புடைய நாயகி அம்மன் மூல விக்கிரகமே திருவிழாக்களின் போது உற்சவ விக்கிரகமாக எடுத்துச் செல்லப்படுகிறது
ஸ்ரீவைகுண்டநாதன் கோயில்
யாளி வாயில் அனுமன்
108 திவ்விய தேசங்களில்,தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நவத்திருப்பதிகளும் அடங்கும்.அவற்றில் ஒன்றான ஸ்ரீவைகுண்டம் தலத்து ஆலயத்தில் திருவேங்கடமுடையான மண்டபம் என்றழைக்கப்படும் மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தின் இரண்டு புறங்களிலும் ஒன்பது தூண்களில் யாளிகள் தாணப்படுகின்றன.அவற்றில் ஒரு தூணிலுள்ள யாளியின் வாயில் அனுமன் காட்சியளிக்கின்றார்.
வீழிநாதேஸ்வரர் கோயில்
திருவீழிமிழிலை திருத்தலத்து ஆலயத்து படிகளின் சிறப்பு
பூந்தோட்டம் அருகிலுள்ள திருவீழிமிழிலை என்ற ஊரிலுள்ள திருவீழிமிழிலைநாதர் சிவாலயத்திலுள்ள மகாமண்டபத்து படிகள் சற்று வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளன.மகாமண்டபத்தின் கிழக்குப்புறத்தில் வாரத்தைக் குறிக்கும் விதமாக ஏழு படிக்கட்டுகளும்,தென்புறத்தில் மாதத்தைக் குறிக்கும் விதமாக பன்னிரெண்டு படிக்கட்டுகளும், வடக்குப்புறத்தில் நவக்கிரகங்களைக் குறிக்கும் விதமாக ஒன்பது படிக்கட்டுகளும் இருப்பது ஓர் விசேடமான அமைப்பாகும்.
சுப்பிரமணிய சுவாமி கோயில்
கந்த சஷ்டி கவசம் இயற்றப்பட்ட தலம்
கந்தசஷ்டிகவசம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டத்தில் அமைந்துள்ள சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில்தான் இயற்றப்பட்டது.இத்தலம் அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடலும் பெற்றது.
பகவத் விநாயகர் கோயில்
நவக்கிரக விநாயகர்
கும்பகோணம் மடத்துத் தெருவில் உள்ள ஸ்ரீபகவத் விநாயகர் கோயிலில் நவக்கிரக விநாயகர் அருள்கிறார்.இவர் சூரியனை நெற்றியிலும்,சந்திரனை நாபிக் கமலத்திலும்,செவ்வாயை வலது தொடையிலும்,புதனை வலது கீழ்க் கையிலும்,வியாழனை சிரசிலும்,வெள்ளியை இடது கீழ்க் கையிலும்,சனியை வலது மேல் கையிலும்,ராகுவை இடது மேல் கையிலும்,கேதுவை இடது தொடையிலும் கொண்டு காட்சி தருகிறார்.இவரை வழிபட்டால் நவக்கிரக தோஷம் தீரும் என்பர்.
மாரியம்மன் கோயில்
மூலிகைகளால் ஆன சமயபுரம் மாரியம்மன் திருமேனி
சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் திருமேனியானது சில மூலிகைகளால் ஆக்கப்பட்டது. இந்த அம்மன் உட்கார்ந்த கோலத்தில் மிகப் பெரிய திருமேனி உடையவர். இவ்வளவு பெரிய மூலிகைகளால் ஆன திருமேனியுள்ள அம்பிகை வேறு எந்த ஆலயத்திலும் இல்லை.
வனதுர்கா பரமேஸ்வரி கோயில்
தாமரைப்பூவில் தாள் பதித்த வண்ணம் காட்சி தரும் துர்க்கை
மயிலாடுதுறையில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது கதிராமங்கலம் திருத்தலம். இங்குதான் தனக்கென தனிக்கோயில் கொண்டு அருளாட்சி புரிகிறாள்,அருள்மிகு வனதுர்கா பரமேஸ்வரி.
பொதுவாக சிவாலயங்களில் துர்க்கை வடக்கு அல்லது மேற்கு நோக்கி சிம்மவாஹினியாக மகிஷாசுரனை பாதத்தில் வதைத்த வண்ணம் திருக்காட்சி தருவாள்.ஆனால் கதிராமங்கலத்தில் கிழக்கு நோக்கி, அருளையும் பொருளையும் வாரி வழங்கும் மகாலஷ்மி அம்சமாக தாமரைப் பூவில் தாள் பதித்த வண்ணம், வலது மேற்கரத்தில் தீவினையறுக்க பிரத்யேக சக்கரம், இடதுமேற்கரத்தில் சங்கு, வலது கீழ்க்கரத்தில் அபயஹஸ்தம், இடது கீழ்க்கரம் இடுப்பில் வைத்த எழிலான பாவனையுடன் அருளாட்சி புரிகிறாள். இது மிக அபூர்வ அமைப்பாகும்.
மீனாட்சி அம்மன் கோயில்
மரகதக் கல்லால் ஆன அம்மன்களின் விசேடச் சிறப்பு
மதுரை மீனாட்சி அம்மனும் சென்னை அருகே புழல் பக்கத்தில் உள்ள சிறுவாபுரி உண்ணாமுலை அம்மனும் மரகதக் கல்லால் ஆனவர்கள்.இத்தகைய மரகதக்கல்லால் ஆன அம்மனை வணங்கினால் புதன் கிரகத்தின் அருள் கிடைத்து கல்வியும் ஞானமும் வளரும் என்பது ஐதீகம்.
பாடலீஸ்வரர் கோவில்
சிவன் சன்னதியில் பள்ளியறை
அனைத்து சிவ ஆலயங்களிலும், அம்பாள் சன்னதியில்தான பள்ளியறை அமைந்திருக்கும். ஆனால் தேவாரப் பாடல் பெற்ற திருப்பாதிரிப்புலியூர் (கடலூ்ர்) சிவாலயத்தில் பள்ளியறை சிவன் சன்னதியில் உள்ளது, இங்கு மற்ற ஆலயங்களைப் போல சுவாமி அம்மனின் சன்னதியிலுள்ள பள்ளியறைக்கு எழுந்தருள்வதற்கு பதிலாக, அம்மன் தானே சிவன் சன்னதியி லுள்ள பள்ளியறைக்கு எழுந்தருள்கிறாள்.
கந்தசாமி கோயில்
திருப்போரூர் ஆலயத்தின் வித்தியாசமான கொடி மர அமைப்பு
ஆலயங்களில் கொடி மரம் பொதுவாக கோபுரத்தைக் கடந்த பின்தான் அமைந்திருக்கும். ஆனால் திருப்போரூர் கந்தசாமி ஆலயத்தில் வித்தியாசமாக,கொடி மரம் கோபுரத்திற்கு முன்னதாக அமைந்துள்ளது.
சண்முகநாதர் கோயில்
முருகன் கோவிலில் சுருட்டு பிரசாதம்
திருச்சியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விராலிமலை முருகன் கோவிலில் பக்தர்களுக்கு சுருட்டு பிரசாதமாக வழங்கப்படுகின்றது.
சுப்பிரமணியர் கோயில்
குதிரை வாகனத்தில் முருகன்
முருகப்பெருமான் விழாக்காலங்களில் பெரும்பாலும் மயில் வாகனத்தில்தான் பவனி வருவார்.ஆனால் மருங்கூர் சுப்பிரமணியர் ஆலயத்தில் உற்சவகாலங்களில் முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் வலம் வருகிறார்.இத்தலம் கன்னியாகுமரியிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும்,சசீந்திரத்திலிருந்து 6 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
முந்தி விநாயகர் கோயில்
தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய விநாயகர்
கோயம்புத்தூர் டவுனில் புலிக்குளம் பகுதியில் எழுந்தருளியுள்ள முந்தி விநாயகர்தான் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் ஆவார்.இவர் 10 அடி 10 அங்குலம் உயரத்துடனும்,11அடி10 அங்குலம் அகலத்துடனும்,8 அடி சுற்றளவுடனும்,190 டன் எடை உள்ளவராகவும் இருக்கிறார்.இவர் வலம் சுழித்த தனது தும்பிக்கையில் அமுத கலசம் ஏந்தி இருக்கிறார்
காஞ்சனமாலை கோயில்
மதுரை மீனாட்சி அம்மனின் தாயார் கோவில்
மதுரை அரசாளும் மீனாட்சி அம்மனின் தாயார் பெயர் காஞ்சனமாலை.இவருக்கென்று மதுரை எழுகடல் தெருவில் தனி ஆலயம் இருக்கின்றது.அம்பாளின் அன்னைக்கு என்று தனி ஆலயம் இடம்பெற்றுள்ள ஒரே தலம் மதுரைதான்.
கபாலீசுவரர் கோயில்
இரண்டு கொடிமரங்கள் அமைந்த தேவாரத்தலம்
பொதுவாக ஆலயங்களில் ஒரு கொடிமரம்தான் இருக்கும்.ஆனால் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில்,சுவாமி சன்னதிக்கு எதிராக ஒரு கொடிமரமும் சிங்காரவேலர் சன்னதிக்கு எதிராக மற்றொரு கொடிமரமும் என இரண்டு கொடிமரங்கள் அமைந்துள்ளன.
லட்சுமி நரசிம்மர் கோவில்
அரிய தோற்றமுள்ள நரசிம்மர்
திண்டிவனம் லட்சுமி நரசிம்மர் ஆலயத்திலுள்ள மூலவர் தோற்றம் மிகவும் அரியதான ஒன்றாகும். மூலவர் நரசிம்மரின் இடது தொடையில் அமர்ந்துள்ள லட்சுமி தாயார்அவரை இரு கைகளும் கூப்பி வணங்கிய நிலையிலுள்ளார்.இந்த ஆலயத்தில் அனுமன் சங்கு சக்கரம் ஏந்தி நான்கு திருக்கரங்களோடு இருப்பதும் ஒர் அரிய காட்சியாகும்.இந்த ஆலயம் 1300 ஆண்டுகளுக்கும் மேலாக முற்பட்டது்.
உலகளந்த பெருமாள் கோயில்
பெருமாள் சங்கு சக்கரத்தை வி்த்தியாசமாக ஏந்தியிருக்கும் தலம்
எல்லா வைணவத் தலங்களிலும் பெருமாள் சக்கரத்தை வலது கையிலும் சங்கை இடது கையிலும் ஏந்தியிருப்பார்.ஆனால் 108 திவ்ய தேசங்களளில் ஒன்றான திருக்கோவிலூரில்,திரிவிக்கிரமன் என்ற பெயரோடு, காலை உயர்த்தி உலகளந்த கோலத்தில் காட்சித் தரும் பெருமாள், வித்தியாசமாக சக்கரத்தை தனது இடது கையிலும் சங்கை வலது கையிலும் தரித்திருக்கிறார்.
ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில்
பெருமாள் பாதணிகள்
ஸ்ரீவில்லிப்புக்தூரிலிருந்து சுமார் 3 கி.மீ. தூரத்திலுள்ள திருவண்ணாமலை என்னும் ஊரில் ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆலயம் உள்ளது.இவர் ஆண்டாளை திருமணம் செய்வதற்காக திருப்பதியிலிருந்து வந்து இங்கு எழுந்தருளியிருக்கிறார்.இவர் திருப்பதி பெருமாள் போலவே தோற்றமளிக்கிறார்.
இப்பெருமாளுக்கு நேர்த்திக் கடனாக மிகப் பெரிய தோல் பாதணிகள் செய்து வந்து கோவில் பிரகாரத்தில் வைக்கிறார்கள்.சில நாட்களில் இப்பாதணிகள் பயன்படுத்தப்பட்டதைப் போல தேய்ந்த நிலையில் காணப்படுகின்றன.பெருமாளே இப்பாதணிகளைப் பயன்படுத்தியுள்ளார் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.அதனால் இவற்றைத் தங்கள் தலையிலும் உடம்பிலும் ஒற்றிக் கொள்கிறார்கள்.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்
கால் மாற்றி ஆடும் நடராஜப் பெருமான்
நடராஜப் பெருமான் பொதுவாக தன் வலது காலை முயலகன் மீது ஊன்றி இடது காலைத் தூக்கி ஆடும் கோலத்தில் தான் எல்லா சிவாலயங்களிலும் காட்சி தருவார்.ஆனால் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், ஒரு பாண்டிய மன்னன் ஒரே காலில் நிற்பது நடராஜப் பெருமானுக்கு வலிக்குமே என்று ஆதங்கப் பட்டதால்,தன் இடது காலை முயலகன் மீது ஊன்றி வலது காலைத் தூக்கி ஆடும் கோலத்தில், வெள்ளியம்பலத்தில் காட்சி தருகிறார்.