தில்லை நடராசர் கோயில்
சிதம்பரத்து பொன்னம்பலத்திற்கும் நமது உடலுக்கும் உள்ள ஒற்றுமைகள்
சைவ உலகில் கோவில் என்றால் அது சிதம்பரத்தைத்தான் குறிக்கும். சிவபெருமானின் ஐந்து சபைகளுள் ஒன்றான பொற்சபை உள்ள தலம்.
பஞ்ச பூதத் தலங்களுள் ஆகாயத் தலம்.பொன்னம்பலத்தில் சிவபெருமான் நடராசர் திருக்கோலத்துடன் காட்சி தருகிறார்.
இந்த பொன்னம்பலத்திற்கும் நமது உடலுக்கும் ஒற்றுமைகள் உள்ளன. பொன்னம்பலத்தின் மேலே உள்ள ஒன்பது தங்கக் கலசங்கள் 9 சக்திகளைக் குறிக்கின்றன. இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள 64 மரத்துண்டுகள் 64 கலைகளையும், இதில் வேயப்பட்டுள்ள 21,600 ஓடுகள் ஒரு நாளில் நாம் உள்ளிழுக்கும் மூச்சுக்காற்றினையும், இவற்றில் அடிக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் ஆணிகள் நம் உடலில் உள்ள நரம்புகளின் எண்ணிக்கையையும் குறிக்கும். இக்கோயிலில் மட்டும் கருவறை இடதுபுறம் உள்ளது. அதேபோல் நமது உடம்பில் இதயம் இடப்புறத்தில்தான் உள்ளது.
சகல தீர்த்தமுடையவர் கோவில்
விசேடத் தீர்த்தம்
இராமநாதபுர மாவட்டம் தொண்டியிலிருந்து 15 கீ.மீ. தொலைவிலுள்ள தலம்தான் தீர்த்தாண்டதானம். இத்தலத்து இறைவன் சகல தீர்த்தமுடையவர்.இறைவி பெரியநாயகி. இத்தலத்து தீர்த்தமான கடலில் நீராடி பின்னர் இறைவனை வழிபட்டால் 64000 தீர்த்தங்களில் நீராடிய புண்ணியமும், பலனும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அனந்தபத்மநாபன் கோவில்
திருவனந்தபுரம் அனுமன் வெண்ணெய் காப்பு
திருவனந்தபுரம் அனந்தபத்மநாபன் ஆலயத்தில் மூலவர் எதிரில் ஆஞ்சநேயர் காட்சியளிக்கிறார். இவருக்கு பக்தர்கள் வெண்ணெய் சாற்றி வழிபடுகிறார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இவர் மீது சாற்றப்படும் வெண்ணெய் எவ்வளவு நாட்களானாலும் உருகுவதுமில்லை.வெய்யில் காலங்தளில் கெட்டுப் போவதுமில்லை.
சத்தியகிரீஸ்வரர் கோயில்
முருகப்பெருமான் அமர்ந்த கோலத்தில் இருக்கும் அறுபடை வீடு
அறுபடை வீடுகளில் முருகப்பெருமான் திருப்பரங்குன்றத்தில்தான் அமர்ந்த கோலத்தில் அருள் புரிகிறார்.மற்ற அறுபடை வீடுகளில் அவர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
மாணிக்க விநாயகர் கோயில்
முப்பத்திரண்டு விநாயகர்கள் காட்சி தரும் கோவில்
திருச்சி மலைக்கோட்டை நுறைவாயிலுள்ள ஸ்ரீமாணிக்க விநாயகர் சந்நிதியை வலம் வரும்போது, விமான மண்டபத்தைச் சுற்றி ஒரு பக்கத்திற்கு எட்டு விநாயகர்கள் வீதம் நான்கு பக்கங்களில் முப்பத்திரண்டு விநாயகர்கள் சுதை வடிவில் காட்சி தருகிறார்கள்.
மணக்குள விநாயகர் கோயில்
விநாயகருக்கு என்று தனி பள்ளியறை உள்ள கோவில்
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் வேறு எந்த விநாயகர் கோவிலிலும் இல்லாத வகையில்,விநாயகருக்கு என்று தனி பள்ளியறை உள்ளது. தினமும் நைவேத்தியம் முடித்தவுடன் விநாயகர் இந்த பள்ளியறைக்குச் செல்வார்.
ரங்கநாதர் கோவில்
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திவ்யதேசம்
வைணவர்களுக்கு கோவில் என்றால் அது ஸ்ரீரங்கத்தைத்தான் குறிக்கும்.ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் , ‘பூலோக வைகுண்டம்’ என்ற பெருமை பெற்றது. வைணவர்களின் 108 திவ்ய தேசங்களில்,ஸ்ரீரங்கம் முதன்மைத் தலமாகப் போற்றப்படுகின்றது.பன்னிரு ஆழ்வார்களில் 11 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஒரே திவ்ய தேசம் என்ற தனிச் சிறப்பைக் கொண்டது ஸ்ரீரங்கம்.
பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்
ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி ஆலய தல விருட்சங்கள்
தென்காசியிலிருந்து சுமார் 11 கி.மீ, தூரத்திலுள்ள ஆய்க்குடி கிராமத்திலுள்ளது பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயம். இத்தலம் அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் பெற்றது. மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமி பாலகனாக ஒரு முகத்துடனும்,நான்கு கரங்தளுடனும் தாமரைப் பூவின் மேல் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.அரசு, வேம்பு, கறிவேப்பிலை, மாதுளை, மாவிலங்கு ஆகிய ஐந்து விருட்சங்கள் சேர்ந்த பஞ்ச விருட்சம் இக்கோவிலின் தலவிருட்சமாக உள்ளது. ஐந்து விருட்சங்களும் ஐந்து கடவுளருக்குரியதாகக் கருதப்படுகிறது.இதில் அரச மரம் சூரியனுக்கும்,வேம்பு அம்பிகைக்கும்,கறிவேப்பிலை சிவனுக்கும், மாதுளை விநாயகருக்கும்,மாவிலங்கு விஷ்ணுவுக்கும் உரியதாகும்.
செல்வ விநாயகர் கோயில்
ஓங்கார வடிவில் விநாயகர்
வேலூர் மாவட்டம் சேண்பாக்கம் என்ற தலத்தில் அமைந்துள்ளது செல்வ விநாயகர் திருக்கோவில் . இங்கு பதினோரு சுயம்பு பிள்ளையார்கள், ஓங்கார வடிவில் காட்சி தருகிறார்கள். அதனால் இத்திருக்கோயிலை ‘பிள்ளையார் சபை’ என்று போற்றுகிறார்கள். பதினாறு செல்வங்களில் மனிதனுக்கு மிகவும் தேவையான பதினோரு செல்வங்களை இந்த விநாயகர்கள் அள்ளித் தருகிறார்கள்
ஹேரம்ப விநாயகர் கோயில்
ஹேரம்ப விநாயகர்
திருத்தணி அருகில் உள்ள மின்னல் கிராமத்தில் இருக்கும் ஆலயத்தில் ஐந்து முகங்களோடு கருவறையில் சிம்ம வாகனத்தின் மீது அமர்ந்த நிலையில் பிரதான மூர்த்தியாக ‘ஹேரம்ப விநாயகர்’ அருளாட்சி புரிகிறார். இந்த சிம்ம வாகனத்தின் பார்வை பட்டால் விபத்துக்களிலிருந்து தப்பிக்கலாம் என்பது இங்குள்ளோரின் நம்பிக்கையாகும்.
காமாட்சி அம்மன் கோயில்
காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலின் தனிச்சிறப்பு
காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் அம்பாளுக்கென்று தனி சன்னதி கிடையாது.காஞ்சி காமாட்சி அம்மன் கோவில்தான் காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களுக்கும் பொதுவான அம்பாள் சன்னதியாக கருதப்படுகிறது.