ஊட்டத்தூர் சுத்தரத்தினேசுவரர் கோவில்

ஊட்டத்தூர் சுத்தரத்தினேசுவரர் கோவில்

சிறுநீரக நோய்களைத் தீர்க்கும் பஞசநதன நடராஜர்

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பாடலூர் என்ற ஊரிலிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள தலம் ஊட்டத்தூர். இறைவன் திருநாமம் சுத்தரத்தினேசுவரர். இறைவி அகிலாண்டேசுவரி.

இக்கோவிலில் தனிச் சன்னதியில் பஞ்சநதன நடராஜர் அருள் பாலிக்கிறார்.எட்டு அடி உயரத் திருமேனி உடைய இவர் ஆசியக் கண்டத்திலேயே மிகப் பெரிய நடராஜர் என்ற பெருமை உடையவர். இவர் சூரிய பிரகாசிப்புத் தருகின்ற, அரிய வகைக் கல்லான பஞ்சநதன என்ற கல்லால் ஆனவர். இத்தகைய கல்லாலான சிற்பங்களை கோவில்களில் காணபது என்பது மிக மிக ஆபூர்வம்.

சிறுநீரகத்தில் கல் உருவாகி அவதிப்படுபவர்கள், சிறுநீரகம் செயலிழந்து அதனால் ரத்தம் சுத்தகரிப்பு செய்ய வேண்டியவர்கள் என சிறுநீரக பாதிப்புக்கு உள்ளானவர்கள். இத்தலத்துக்கு ஒரு கிலோ வெட்டிவேரை வாங்கி வந்து அதனை 48 துண்டுகளாக்கி பின் அதனை மாலையாகத் தொடுத்து பஞ்சநதன நடராஜருக்கு சாற்றி அர்ச்சனை செய்ய வேண்டும். பின்னர் அந்த மாலையையும், இத்தலத்து தீர்த்தமான பிரம்ம தீர்த்தத்தையும் தங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

வெட்டிவேரை தினம் ஒரு துண்டு வீதம் பிரம்ம தீர்த்தத்தில் ஊற வைத்து அதன் சாற்றை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சிறுநீரக பாதிப்பு குறைகின்றது என்று பக்தர்கள் கூறுகின்றனர். வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமானவர்கள் இங்கு வந்து வழிபட்டு தங்கள் சிறுநீரக நோய் குணமடைந்து செல்கின்றனர்.

Read More
விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோவில்

விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோவில்

குடும்ப சமேதராக அருள் பாலிக்கும் அனுக்கிரக சனி பகவான்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் விளங்குளம் . இறைவன் திருநாமம் அட்சயபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் அபிவிருத்தி நாயகி.

இத்தலத்தில் நவக்கிரக சன்னிதி கிடையாது. அதற்குப் பதில் சூரியனும் அவரது புத்திரர் சனிபகவானும் தனித் தனி சன்னதிகளில் அருளுகின்றனர். இத்தலத்தில் சனீஸ்வர பகவான் தெற்கு நோக்கி குடும்ப சமேதராக தனது மனைவியர் மந்தா, ஜேஷ்டா ஆகியோருடன் எழுந்தருளியிருக்கிறார். இத்தலத்தில் சனிபகவான் சிவபெருமானை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றதால் இங்கு அவர் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

இவரை ஆதி பிருஹத் சனீஸ்வரர் எனப் போற்றுகிறார்கள். சனி பகவான் குடும்பத்துடன் இருப்பதால், 12 ராசிக்காரர்களும் இங்கு வந்து வழிபட்டால், சனியின் கோபத்தில் இருந்து தப்பிக்கலாம், அவரின் அருளைப் பெறலாம் என்கிறது தல புராணம்.

பூச நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டிய சனிபகவான்

இவரை நினைத்து மாதந்தோறும் அமாவாசை தினங்களில் காகத்துக்கு அல்லது இயலாதவர்களுக்கு உணவு வழங்கினால், பித்ரு தோஷம் நீங்கும். கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும். வீட்டில் தரித்திரம் விலகி ஐஸ்வரியம் பெருகும் என்கிறார்கள்.

குறிப்பாக, பூச நட்சத்திரக்காரர்கள் வணங்கிய வேண்டிய திருத்தலம் என்றும் பூச மருங்கர் எனும் சித்தர் வழிபட்ட தலம் இது என்றும் சொல்கிறது தல புராண மகிமை. எனவே, மாதந்தோறும் பூச நட்சத்திர் நாளில், தைப் பூச நாளில் வந்து வேண்டிக்கொள்ளலாம்.

Read More
கீழமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் கோவில்

கீழமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் கோவில்

அயல்நாட்டில் கல்வி பயிலும் யோகம் அருளும் அஷ்ட தட்சிணாமூர்த்தி தலம்

தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனையில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள கீழமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது காளஹஸ்தீஸ்வரர் கோவில். இந்தக் கோவிலில் அஷ்ட தட்சிணாமூர்த்திகள் அருள் புரிகிறார்கள்.

இவர்களில் ஸ்ரீஞான தட்சிணாமூர்த்தி கிழக்குத் திசையிலும், ஸ்ரீயோக பட்டாபிராம தட்சிணாமூர்த்தி வட கிழக்கிலும், ஸ்ரீசக்தி தட்சிணாமூர்த்தி தென்கிழக்கிலும், ஸ்ரீயோக தட்சிணாமூர்த்தி தெற்கிலும், ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி தென்மேற்கிலும், ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தி மேற்கிலும், ஸ்ரீஆசிந தட்சிணாமூர்த்தி(பரசுராமருக்கு வில்லும் அம்பும் வழங்கியவர்) வடமேற்கிலும், ஸ்ரீவர தட்சிணாமூர்த்தி (வேதத்துக்கு குரு) வடக்கிலும் எழுந்தருளியிருக்கிறார்கள்.

படிப்பில் மந்த நிலையில் உள்ளவர்கள், ஞாபக சக்தி குறைவாக உள்ளவர்கள், அதிக மதிப்பெண் எடுத்து உயர் கல்வியில் சேரத் துடிப்பவர்கள், மேலை நாடுகளுக்குச் செல்ல எண்ணுவோர் இந்தத் தலத்துக்கு வந்து, அஷ்ட தட்சிணாமூர்த்தியரையும் வணங்கினால், உரிய பலன் கிடைக்கும்.

கோயிலின் ஞான கங்கை தீர்த்தக்குளத்தில் 11 வியாழக் கிழமைகள் நீராடி, அஷ்ட தட்சிணாமூர்த்திகளுக்கும் 11 வகை அபிஷேகங்கள் செய்து, எட்டு நெய்த் தீபங்கள் ஏற்றி வைத்து, மஞ்சள் பட்டு மற்றும் மஞ்சள் அரளிப்பூ சார்த்தி வழிபட, தடைப்பட்ட கல்விச் செல்வம் தங்குதடையின்றிக் கிடைக்கும்; விரும்பிய பாடப் பிரிவில் சாதனை படைக்கலாம் என்கின்றனர். தேர்வில் அதிக மதிப்பெண் பெற, அஷ்ட தட்சிணாமூர்த்தியருக்கு சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுகின்றனர். அஷ்ட தட்சிணாமூர்த்தியரின் அருளால் வெளிநாட்டில் கல்வி பயிலும் யோகமும் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
நன்னிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்

நன்னிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்

குபேரன் மற்றும் லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும் தலம்

குபேரன் புதல்வர்கள் பொன் வில்வ சாரத்தால் வழிபட்ட தலம்

திருச்சியிலிருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ளது நன்னிமங்கலம். இத்தலத்தில் அமைந்துள்ளது , 1200 ஆண்டுகள் பழமையான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் சுந்தரேஸ்வரர். இறைவியின் திருநாமம் மீனாட்சி. இந்த ஆலயத்தை பக்தர்கள் சென்னி வாய்க்கால் கோவில் என்றே அழைக்கின்றனர். பிரம்மா இங்கு சிவனை தன் தலைகளால் (சென்னி) வணங்கி வரம் பெற்றதால் இத்தல இறைவன் சென்னி சிவம் என்றே அழைக்கப்பட்டார். பிற்காலத்தில் இதுவே சென்னி வளநாடு எனப் பெயர்கொண்டு, தற்போது சென்னிவாய்க்கால் கோயில் என்றானது. கருவறையில் இறைவன் சுந்தரேஸ்வரர், ஐந்தடி உயர லிங்கத்திருமேனியில், கரும்பச்சை நிறத்தில் மரகத மேனியராய் ஜொலிக்கிறார். இவர் மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

பொன்னாலாகிய மூன்று தளத் தொகுதியுடைய பொன் வில்வ சாரம், யோக தவ ஜப சக்திகளைப் பெற்றிருப்பவர்களைத் தவிர வேறு எவர் கண்களுக்கும் தென்படாது. மகிமைமிக்க பொன்வில்வ சாரத்தை சிவபெருமான் குபேரனிடம் அளித்தார். குபேரன் இதை தன் குமாரர்களான மணிக்ரீவன், நளகூபன் இருவரிடமும் அளித்து பூலோகத்தில் உள்ள சுயம்பு லிங்க மூர்த்திகளில் வைத்து வழிபட்டு அதன் மகிமையை அறிந்துவரும்படி கட்டளையிட்டார்.

அவ்வாறே அவர்கள் வழிபட, அந்த பொன்வில்வசாரம் பல இடங்களில் பசுமையாக சாதாரண வில்வ தளம் போல் காட்சி தர, சில இடங்களில் மறைந்து விட்டது. பிரபஞ்சத்தின் தெய்வீக மையமாகத் திகழும் திருவண்ணாமலை வந்தடைந்தனர். பௌர்ணமி அன்று கிரிவலம் வந்து பொன்வில்வ சாரத்தை அண்ணாமலை ஆண்டவன் பாதங்களில் வைத்து 'ஓம் நமசிவாய' மந்திரத்தை ஓதினர். அண்ணாமலையாரிடம் வில்வதளம் சுவர்ணமாகப் பிரகாசித்தது. சென்னிவளநாடு செல்லும்படி அவர்களுக்கு அண்ணாமலையார் அசரீரியாய் அருள் வழிகாட்டினார்.

அதன்படி இருவரும் திருத்தவத்துறை என்ற தற்போதைய லால்குடியில் உள்ள சப்தரீஷிஸ்வரர் ஆலயத்திற்கு வந்தனர். அங்கிருந்த சிவகங்கை தீர்த்தத்தில் மூழ்கி நீராடிய அவர்கள் அருகில் வேறொரு ஆலயம் இருப்பதைக் கண்டனர். அதேசமயம் தங்கள் கரத்திலிருந்த பொன்வில்வசாரம் மறைந்தது கண்டு பதறினர். உடனே அந்த ஆலய கருவறை நோக்கிச் சென்றனர். அங்கே கரும்பச்சை வண்ணத்தில் மரகதமாய் ஜொலிக்கும் சுயம்பு லிங்கத்திருமேனியில் தாங்கள் கொண்டு வந்த பொன்வில்வசாரம், பன்மடங்காகப் பெருகி மணம் வீசக்கண்டனர்.

அவை ஸ்வர்ணவில்வ தளங்களாக மஞ்சள் நிறத்தில் ஜொலித்தன. இருவரும் மெய் சிலிர்த்து 'ஓம் நமசிவாய' என ஓதி அர்ச்சிக்க, அது மேலும் பொங்கிப் பெருகியது. இருவரும் மன பூரிப்போடு தேவலோகம் சென்றனர். தன் புதல்வர்கள் பொன்வில்வ சாரத்தின் மகிமையையும் தேவரகசியத்தையும் உணர்ந்ததை அறிந்த குபேரன் மனம் மகிழ்ந்தார். சென்னி வளநாட்டிற்கு வந்து மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபட்டார்.

பௌர்ணமி அன்று இத்தலவிருட்சமான பொன்வில்வ மரத்திற்கு அரைத்த சந்தனம் மஞ்சள் குங்குமம் சாத்தி, அடிப்பிரதட்சனம் செய்து இறைவன் இறைவியை வழிபட்டால் குபேரன் மற்றும் லட்சுமி தேவியின் அருளைப் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

Read More
மாசி மகத்தின் சிறப்புகள்

மாசி மகத்தின் சிறப்புகள்

மாசிமக தீர்த்தமாடலின் சிறப்பு

பெண்களின் மாங்கல்ய பாக்கியத்தை நீட்டிக்கும் மாசிமகம்

மாசி மாதம் முழுவதும் 'கடலாடும் மாதம்' என்றும், 'தீர்த்தமாடும் மாதம்' என்றும் சொல்வார்கள். இதன் காரணமாகவே இந்த மாதத்தில் நீர்நிலைகளில் புனித நீராடுவதை இந்துக்கள் பழக்கமாகக் கொண்டுள்ளனர். மாசி மாதத்தில் வரும் பௌர்ணமியுடன் கூடிய மக நட்சத்திர நாள் தான் மாசி மகம். மாசி மகத்தன்று கடல், குளம், ஆறு ஆகிய நீர்நிலைகளில் கூட புண்ணிய நதியாகிய கங்கையும் கலந்திருப்பதாக கருதப்படுகிறது.

மாசி மகம் அன்று புனித நீராடல் ஏழு ஜென்ம பாவங்களை கூட அடியோடு போக்கும் என்பது ஐதீகம். இதனால் தான் 12 ஆண்டுகளுக்கு ஒரு தடவை கும்பகோணத்தில் மகாமகம் கொண்டாடப்படுகிறது.

மாசிமக தீர்த்தமாடல் பற்றிய புராணக்கதை

ஒருசமயம் வருண பகவானை பிரம்மஹத்தி தோஷம் பீடித்தது. அதனால் அவர் உடல் கட்டப்பட்ட நிலையில் கடலில் வீசப்பட்டார். வருணன் கட்டுண்டு கிடந்ததால் உலகத்தில் பஞ்சமும் வறட்சியும் ஏற்பட்டது. வருண பகவான் சிவபெருமானை நினைத்து பிரார்த்தனை செய்தார். அவரின் தவத்தை மெச்சிய சிவ பெருமான் அருள் பாலித்தார். வருண பகவான் தோஷத்தில் இருந்து நிவாரணம் அடைந்த தினம் தான் மாசி மகம் ஆகும். இந்த தினத்தில் புனித நீராடும் நபர்களுக்கு பாவங்களை போக்கிவிட சிவனிடம் வருண பகவான் அருள் செய்ய கேட்டு கொண்டாராம். அதனை கேட்ட சிவ பெருமானும் கேட்ட வரத்தை கொடுத்தாராம். வருண பகவானுக்கு முழுமையாக தோஷ நிவர்த்தி கிடைத்த தினம் என்பதால் அன்றைய தினம் புனித நீராடுவது புண்ணியமாக கருதப்படுகிறது.

திருஞானசம்பந்தா் தன்னுடைய மயிலாப்பூா் பதிகத்தில் கபாலீசுவரரின் மாசிமகக் கடலாடு விழாவைப் பற்றிக் கூறுகிறார்.

சிவபெருமான் திருவிளையாடல்கள் பல புரிந்ததும் மாசிமகத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. மாசி பௌர்ணமியில்தான் சிவபெருமானால் மன்மதன் எரிக்கப்பட்டான். இந்நிகழ்ச்சி காமதகனம் என்று அழைக்கப்படுகிறது. கடலுக்கு அடியில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிக்கொண்டு வந்ததும் இந்த மாசி மகத்தன்றுதான் என புராணங்கள் கூறுகின்றன.

பார்வதி தேவி, தாட்சாயிணியாக உருவெடுத்த நாளும் மாசி மகம் நாள்தான். மாசிமக நாளில் அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபடுபவர்களுக்கு, இன்பமும் வெற்றியும் தேடி வரும். துளசியால் மகாவிஷ்ணுவை வழிபட்டால், வைகுண்டத்தில் இடம் கிடைக்கும்.

மாசி மக நட்சத்திரத்தில் பிறப்போர் ஜகத்தை ஆள்வர் என்பதும் மாசிக் கயிறு பாசி படியும் என்பதும் பழமொழி. இம் மாதத்தில் பெண்கள் புது மாங்கல்யச் சரடு கட்டிக் கொள்வது சிறப்பானது. அதனால் அவர்களது மாங்கல்ய பாக்கியம் நீடித்திருக்கும் என்பது நம்பிக்கை.

மாசிமகம் பித்ரு தோஷம் மற்றும் தடைகள் நீக்கும் புனித நாளாகும். மாசி மகம் நாளில் புனித நீர் நிலைகளில் நீராடினால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. ஆண் குழந்தை வேண்டுபவர்கள் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கி வேண்டிக் கொண்டால் ஆண்குழந்தை நிச்சயம் பிறக்கும் என்பது நம்பிக்கை.

Read More
எட்டியத்தளி அகஸ்தீஸ்வரர் கோவில்

எட்டியத்தளி அகஸ்தீஸ்வரர் கோவில்

திருநள்ளாறு சனிபகவானை விட பலமடங்கு சக்தி மிக்க சனிபகவான்

சனி மற்றும் ராகு தோஷத்தை ஒரு சேர நீக்கும் தலம்

புதுக்கோட்டை, அறந்தாங்கியிலிருந்து, 5 கி.மீ தூரத்திலுள்ளது எட்டியத்தளி அகஸ்தீஸ்வரர் கோவில். இது 2000 ஆண்டுகள் பழமையானது. இறைவியின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி. இக்கோவில் தொண்டை நாட்டு மன்னன் காளிங்கராயனால் கட்டப்பட்டது.

ஒரு சமயம் அகஸ்திய முனிவர், காசி விஸ்வநாதரை தரிசித்து விட்டு, எட்டியத்தளி கிராமத்துக்கு வந்தார். அப்போது மன்னன் காளிங்கராயன் தனது அஷ்டம சனி தோஷம் நீங்க, திருநள்ளாறு சனி ஆலயம் செல்வதற்கு, இவ்வழியாக வந்தான்.

அகத்தியர், மன்னன் காளிங்கராயரிடம் அஷ்டம சனி தோஷம் நீங்க, ஆலயம் ஒன்றை எழுப்ப சொன்னார். பின்பு, தான் வழிபட்ட சிவலிங்க மூர்த்தத்தை கருவறையில் பிரதிஷ்டை செய்து வழிபடும்படி கூறினார். அதன்படியே காளிங்கராயன் ஆலயம் ஒன்றை எழுப்பி, அதில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு தனது அஷ்டம சனி  தோஷம் நீங்கப் பெற்றான். அகத்தியர் வழிபட்டதால் இத்தல இறைவன் அகத்தீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார்.

 திருநள்ளாறு சனிபகவானை விட இவர் அருள் வழங்குவதில் பலமடங்கு சக்தி மிக்கவர் என்பது ஐதீகம். அதனால், இத்திருத்தலத்தில் சனி பகவானின் சக்தி இங்கு அதிகம்.

பொதுவாக, கோயில்களில் சனீஸ்வரருக்கு இடது புறம் ராகுவும், வலது புறம் கேதுவும் இருப்பார்கள். ஆனால் இந்த ஆலயத்தில் சனி பகவானின் வலதுபுறம் ராகு பகவானும், இடதுபுறம் கேது பகவானும் உள்ளனர். அதனால் ராகுவின் பார்வை சனி பகவானின் மீது படுகிறது. எனவே, இங்கு வந்து வழிபட்டால், சனி தோஷமும், ராகு தோஷமும் நீங்குகிறது. மேலும் ஜாதகத்தில் களத்திரன், செவ்வாய் தோஷமுள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் குறைகள் நீங்கி திருமண பாக்கியம் கிட்டும்.

இக்கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி, கல்யாண தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். திருமணம் தடைப்பட்டவர்கள் இவரை வழிபட்டால், விரைவில் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இக்கோவிலில் நவக்கிரகத்தின் அருகில் ஜாதகத்தை வைத்து பூஜை செய்யும் வழக்கமானது, இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பாகும். இப்படிப்பட்ட நடைமுறை வேறு எந்த கோவிலிலும் கடைபிடிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More
பெருங்குடி அகத்தீஸ்வரர் கோவில்

பெருங்குடி அகத்தீஸ்வரர் கோவில்

சாய்ந்த நிலையில், சயனக் கோலத்தில் இருக்கும் அபூர்வ சிவலிங்கத் திருமேனி

கண் நோய்களை தீர்க்கும் அகத்தீஸ்வரர்

திருச்சியிலிருந்து வயலூர் செல்லும் வழியில், சுமார் ஒன்பது கி.மீ. தொலைவில், சோமரசம் பேட்டைக்கு அருகே இருக்கிறது, பெருங்குடி கிராமம். இத்தலத்து இறைவனின் திருநாமம் அகத்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் சிவகாமசுந்தரி. இறைவனார் பெயர் `பெருமுடி பரமேஸ்வரனார் என்றே அந்தக் காலத்தில் அழைக்கப்பட்டது. அகத்தியர் வழிபட்ட சுயம்பு லிங்கமாகக் கருதப்படுவதால் இவர் `அகத்தீஸ்வரர்' என்றும், `அகத்தீஸ்வரமுடையார்' என்றும் பெயர்பெற்றார். இக்கோவில் ராஜராஜனின் தந்தையான சுந்தரச்சோழனின் காலத்தில் எழுப்பப்பட்டது.

கருவறைக்குள் அகத்தீஸ்வரர்,சுயம்புலிங்க மூர்த்தியாக வடக்குத் திசை நோக்கி சாய்ந்த நிலையில், கிழக்குத் திசை பார்த்து ஆனந்த சயனக் கோலத்தில் காட்சியளித்து வருவது மிகவும் விசேஷமானது. இப்படி சிவலிங்கத் திருமேனி சாய்ந்த நிலையில், சயனக் கோலத்தில் இருக்கும் தோற்றத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. இவரை வழிபட்டால், கண் நோய்கள் யாவும் நீங்கும் என்பது நம்பிக்கை.

கல்வெட்டில் பொறிக்கப்பட்ட, சிவபெருமான் கண் நோய் தீர்த்த வரலாறு

இக்கோவில் இறைவனிடம் தன் மகளின் கண்நோய் குறித்து வேண்டுதல் செய்து பலன் பெற்ற பக்தன் ஒருவன் இறைப்பணிக்குக் கழஞ்சுபொன் கொடையளித்த சம்பவம் ஒன்று வரலாற்றில் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளது. 13-ம் நூற்றாண்டில் கூத்தன் என்னும் சிவபக்தன், இத்தலத்தில் வாழ்ந்துவந்தார். அவருக்கு நல்லமங்கை என்று ஒரு மகள் இருந்தாள். சிறுவயதில் அவளின் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக மங்கத் தொடங்கிவிட்டது. கூத்தன் எவ்வளவோ வைத்தியம் செய்தும் பார்வை குறைபாடு சரியாகவில்லை. ஒரு கட்டத்தில் நல்லமங்கை பார்வை முழுவதையும் இழந்தாள்.

வெளியூர்களில் வாழும் பெரும் வைத்தியர்களிடம் சென்று வைத்தியம் பார்க்கலாம் என்று கூத்தன் முடிவு செய்து, அதற்கெனப் பணத்தைச் சேர்க்கத் தொடங்கினான். கி.பி 1268, ஆண்டில், ஹொய்சாள மன்னன் ராமநாதன் இக்கோவிலில் திருப்பணி செய்ய ஆரம்பித்தான். அவனிடம் இருந்த நிதி தீர்ந்து விட்டதால், கோயில் வேலை அப்படியே நின்றுபோனது. இறைவனின் திருப்பணி நின்றுபோனதால் மனம் வருந்திய கூத்தன், தன் மகள் நல்லமங்கையின் கண் வைத்தியத்துக்கென வருடக்கணக்காக உழைத்துச் சேர்த்து வைத்திருந்த மூன்று கழஞ்சு பொன்னையும் கோயில் திருப்பணிக்குக் கொடை அளித்தான். அதனால் கோவில் திருப்பணிகள் நடந்து முடிந்தன.

மகள் கண் வைத்தியத்துக்குச் சேர்த்து வைத்திருந்த பொன்னை, கோயில் திருப்பணிக்குச் செலவிட்டு விட்டதால் கூத்தன் வைத்திய செலவுக்கு மீண்டும் பணம் சேர்க்க வேண்டியதாயிற்று. வேறுவழியின்றி இத்தலத்து இறைவன் திருவடிகளில் விழுந்து சரணடைந்தான். அப்போதுதான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. சிவபெருமான் அருளால் நல்லமங்கைக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வை தெரிய ஆரம்பித்தது. சில நாள்களில் அவளுடைய கண்கள் பிரகாசமாகி முழுமையாகப் பார்வை திரும்பியது. கூத்தன் இறைவனுடைய அருளை நினைத்து நெக்குருகினான். தன் துயர் துடைக்க இறைவன் இருக்கும்போது தனக்குப் பணம் எதற்கு என்று முடிவுசெய்து அவன் சேர்க்கும் பணத்தையெல்லாம் இறைவனின் திருப்பணிக்கே வழங்கினான். இறைவனுக்கு கழஞ்சு பொன் பட்டம் செய்து சாற்றித் தன் நன்றியைத் தெரிவித்தான்.

இந்தப் பொன் கொடுத்த நிகழ்வு ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டில் வடித்து வைக்கப்பட்டிருக்கிறது.

Read More
தில்லையாடி சரணாகரட்சகர் கோவில்

தில்லையாடி சரணாகரட்சகர் கோவில்

சனி பகவான் சன்னதியின் விசேட அமைப்பு

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள தில்லையாடி என்ற ஊரில் அமைந்துள்ளது சரணாகரட்சகர் கோவில். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. தன்னிடம் சரணடைந்தவர்களை இத்தலத்து இறைவன் காத்து அருள்வதால், 'சரணாகரட்சகர்' என்று அழைக்கப்படுகிறார்.

முக்காலத்தில் இத்தலத்தின் பெயர் தில்லைவனம் என்று இருந்தது. பின்னர் தேவேந்திரன் தில்லைவனத்திலிருந்த இந்த இறைவனை வணங்கி, தில்லையில் ஆனந்த தாண்டவம் ஆடியதுபோல் இந்த தலத்திலும் திருநடனம் புரிய வேண்டும் என்று வேண்டிக்கொண்டதன் பேரில், இந்திரனுக்காக ஆனந்த நடனம் ஆடியருளியதால் தில்லையாடி என பெயர் பெற்றது.

இத்தலத்தில் சனி பகவான் சன்னதி, இறைவன் சரணாகரட்சகர் சன்னதிக்கும், இறைவி பெரியநாயகி சன்னதிக்கும் இடையில் அமைந்திருப்பது ஒரு விசேடமான அமைப் பாகும். இது போன்ற சனி பகவான் சன்னதி அமைப்பு திருநள்ளாறு தலத்தில்தான் இருக்கின்றது.

சனி பகவான் பூஜை செய்த தலம்

சனி பகவான் மக்களின கர்ம வினைகளை, ஒரு நீதிபதி போல் சீர் தூக்கிப் பார்த்து, அதற்கேற்ப பலன்களைத் தருபவர். ஆனால் கடமையை சரியாகச் செய்யும் அவருக்கு அவப்பெயர்தான் மிஞ்சுகின்றது. தனக்கு ஏற்படும் அபவாதத்தை நீக்கிக் கொள்ளவும், தன்னை வழிபடுபவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் விரும்பிய சனி பகவான் இத்தலத்துக்கு வந்து இறைவன் சரணாகரட்சகரை வழிபட்டார். சனி பகவான் பூஜையினால் மனம் மகிழ்ந்த இறைவன, சனி பகவானை வழிபட்டவர்களுக்கு அவர் நற்பலன்களைக் கொடுக்கும் சக்தியைக் அளித்தார்.

இத்தலத்து சனி பகவானுக்கு ருத்ர ஹோமம், அபிஷேகம் செய்து வழிபடுவது தற்பலன்களைத் தரும். ஒன்பது வாரங்கள் தொடர்ந்து இவரை வழிபட்டால் சகல பிரச்சனைகளும் நீங்கும்.

கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் இத்தலத்து இறைவனை வழிபட்டால் குறைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
கீழக்கொற்கை பிரம்மஞானபுரீஸ்வரர் கோவில்

கீழக்கொற்கை பிரம்மஞானபுரீஸ்வரர் கோவில்

அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தலையெழுத்தை மாற்றும் தலம்

கும்பகோணம் மகாமகம் குளம் மேல் கரையிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் கீழக்கொற்கை பிரம்மஞானபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இறைவன் திருநாமம் பிரம்மஞானபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் புஷ்பாம்பிகை. பிரம்மாவுக்கு அருளியதால் சிவபெருமான் பிரம்மபுரீஸ்வரர் எனும் திருநாமம் கொண்டார். அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டிய தலம். இந்தத் தலத்துக்கு வரும் அடியவர்களுக்கு ஞானம் கிடைப்பது மட்டுமின்றி, அவர்கள் வாழ்வில் சுபிட்சம் நிலவும் என்பது ஐதீகம்.

கொற்கை என்று தலத்திற்கு பெயர் வரக் காரணம்

முன்னொரு காலத்தில் 18 சித்தர்களில் ஒருவரான கோரக்கர் இப்பகுதியில் உள்ள அட்ட வீரட்டத் தலங்களை தரிசித்து வந்தார். அவர் இத்தலத்திற்கு வந்தபோது இருட்டிவிடவே, இங்கிருந்த பொது மடத்தில் தங்கினார். இந்த மடத்தில் ஏற்கெனவே நிறைய பக்தர்கள் தங்கியிருந்தனர்.

கோரக்கர் பயணக் களைப்பில் நன்றாக உறங்கிவிட்டார். நள்ளிரவு வேளையில் திடீரென கண்விழித்த கோரக்கர், மடத்தில் தங்கியிருந்த சிவபக்தை ஒருவரின் சேலைத்தலைப்பு தன் கை மேல் விழுந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் மனம் வருந்திய அவர், உடனே இதற்கு பிராயச்சித்தம் தேடி, அரிவாளால் தன் இரு கைகளையும் வெட்டிக் கொண்டார்.

பின் இந்த மடத்திலேயே சில காலம் தங்கி, தனது இந்த தோஷம் நீங்க இங்கிருந்த சந்திர புஷ்கரணியில் நீராடி, தனது குறுகிய கையால் தாளம் போட்டு, இத்தல ஞானபுரீஸ்வரரையும், புஷ்பவல்லியையும் தினமும் வணங்கி வந்தார். கோரக்கரின் பக்தியில் மகிழ்ந்தார் சிவபெருமான்.

சிவனின் அருளால் சித்தரின் கை கொஞ்ம், கொஞ்சமாக வளர்ந்தது. கோரக்கர் கை வெட்டுப்பட்டதால் இத்தலம் கோரக்கை எனவும், சிறிது காலம் குறுகிய கைகளில் பூஜை செய்ததால் குறுக்கை எனவும் வழங்கப்பட்டு தற்போது கொற்கை ஆனது.

பிரம்மஞானபுரீஸ்வரர் பெயர்க் காரணம்

பிரம்மனிடம் இருந்த வேதத்திரட்டுக்களை மது, கைடப அசுரர்கள் எடுத்துக்கொண்டு போய் கடலுக்கடியில் ஒளித்து வைத்துக்கொண்டனர். வேதங்களை மீட்டு மகாவிஷ்ணு பிரம்மாவிடம் கொடுத்தார். இருந்தாலும் பிரம்மனால் முன்பு போல் இயல்பாக படைப்புத்தொழிலை செய்ய முடியவில்லை. எனவே அவர் விஷ்ணுவின் ஆலோசனைப்படி இத்தலம் வந்து, சந்திர புஷ்கரிணியில் நீராடி, அடிப்பிரதட்சணம் செய்து சிவனை வழிபட்டு வந்தார். ஒரு ஆவணி அவிட்ட நட்சத்திர நாளில், சிவன் பிரம்மனுக்கு ஞானம் கொடுத்தார். இதனால் பிரம்மா மீண்டும். சிறப்பாக படைப்புத் தொழில் புரிந்தார். இதனால் இத்தல இறைவன் பிரம்மஞானபுரீஸ்வரர் ஆனார்.

அவிட்ட நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபட வேண்டிய தலம்

இத்தலத்தில் அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அடிக்கடியோ,தங்ளது பிறந்த நட்சத்திர நாளிலோ, ஆவணி அவிட்டத்தன்றோ அடிப்பிரதட்சணம் செய்து வழிபாடு செய்தால் தலையெழுத்தே மாறிவிடும் என்பது ஐதீகம்.

குழந்தைகளின் கல்வியறிவு, வியாபார விருத்தி, மன உளைச்சல் நீங்க, தோஷங்கள் நிவர்த்தியாக இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.

Read More
திருக்கழுக்குன்றம் ருத்திர கோடீஸ்வரர் கோவில்

திருக்கழுக்குன்றம் ருத்திர கோடீஸ்வரர் கோவில்

சிவராத்திரி அன்று வழிபட வேண்டிய சிறப்பு தலம்

சிவபெருமானின் இருதயமாக விளங்கும் தலம்

ஒருமுறை வழிபட்டாலே கோடிமுறை வழிபட்ட பலனைத் தரும் தலம்

செங்கல்பட்டு - மகாபலிபுரம் சாலை வழியில், 14 கி. மீ. தொலைவில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ளது ருத்திர கோடீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் பெண்ணின் நல்லாள் என்கிற அபிராம நாயகி. இக்கோவில் 2500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள தேவார பாடல் பெற்ற தலமான வேதகிரீஸ்வரர் கோவிலுக்கும் முந்தையது. இத்தலத்தை கோடி ருத்ரர்கள் (சிவனடியார்கள்) பூஜித்ததால், 'ருத்ர கோடி தலம்' என்ற பெயர் பெற்றது. இறைவன் ருத்திர கோடீஸ்வரர் ஒரு கோடி லிங்க உருவத்தையும் தன்னுள் அடக்கி எழுந்தருளி இருக்கின்றார். திருநாவுக்கரசரால் பாடப்பட்ட வைப்பு தலம் இது. இந்த பெரிய கோவிலில் ஒன்பது முக வில்வ விருட்சம் மற்றும் உருத்திராட்ச விருட்சமும் உள்ளன.

சிவராத்திரி அன்று வழிபட வேண்டிய சிறப்பு தலங்கள் திருவைகாவூர், காளஹஸ்தி, திருவண்ணாமலை, திருக்கழுக்குன்றம், ஓமாம்புலியூர் கோகர்ணம், ஸ்ரீசைலம் ஆகியவை ஆகும். இக்கோவில் உட்புறச் சுவரில் பொறிக்கப்பட்டுள்ள ஒரு பழங்கால கவிதையில், காசி, சிதம்பரம், திருவாரூர், திருவண்ணாமலை, மதுரை, காளஹஸ்தி, காஞ்சி போன்ற தலங்களில் உள்ள கோவில்கள் சிவபெருமானின் உடலாகவும், திருக்கழுக்குன்றம் ருத்திர கோடீஸ்வரர் கோவில் அவரின் இருதயம் ஆகவும் விளங்குகின்றது என்று குறிப்பிட்டு இருப்பதிலிருந்து இக்கோவிலின் தனிச்சிறப்பு நமக்கு விளங்குகின்றது.

ஒரு சமயம் தேவர்களை துன்புறுத்திய அசுரர்களை அழிப்பதற்காக சிவபெருமான் தன் திருமேனியில் இருந்து ஒரு கோடி ருத்திரர்களை தோற்றுவித்தார். அவர்கள் அசுரர்களுடன் போரிட்டு, அவர்களை அழித்தனர். அசுரர்களைக் கொன்ற பாவம் தீர்க்க சிவபெருமானை வேண்டி நின்றனர். சிவபெருமான், அவர்கள் திருக்கழுக்குன்றம் தலத்தில் தனித்தனியே சிவபூஜை செய்தால் பாவம் விலகும் என்று அருளினார். ஒரு கோடி ருத்திரர்களும் திருக்கழுக்குன்றம் தலத்தில் தனித்தனியே சிவலிங்கம் அமைத்து, அபிஷேக ஆராதனை செய்தனர். பூஜையின் முடிவில் ஒரு கோடி லிங்க உருவத்தையும் தன்னுள் அடக்கி சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக இத்தலத்தில் எழுந்தருளினார். கோடிருத்திரர்களின் வேண்டுகோளுக்கிணங்க, இறைவனின் திருநாமம் ருத்ரகோடீஸ்வரர் எனவும், தலம் ருத்ர கோடி தலம் எனவும் ஆயிற்று.

"ருத்திர கோட்டீஸ்வரர்" என ஒரு முறை கூறும்போதே பாவம் விலகும், புன்னியம் உண்டாகும். ருத்திர கோட்டீஸ்வரரை வழிபட்டால் பலன் கோடியாக பெருகும். நாம் இத்தலத்தில் ஒரு முறை தானம் செய்தாலும், ஜெபம் செய்தாலும் அது கோடி முறை செய்ததற்கு ஈடான பலனைத் தரும். பிரதோஷ காலங்களில் இறைவனை திருநந்தி தேவரும் பெருஞ்சிறப்புடன் வழிபடும் தலம். சித்தர்கள் வழிபடும் பெருமை மிக்க தலம். மூன்று பிரதோஷ காலங்களில் வழிபட்டால் பிள்ளை பேறு நல்கும் பெரும்பதி இது.

கோடி ருத்திரர்கள் சிவராத்திரி வழிபாடு செய்த தலம் என்பதால், சிவராத்திரியன்று இங்கு வழிபடுவது சிறந்த பலன்களை கொடுக்கும்.

Read More
கும்பகோணம் நாகேஸ்வரர் கோவில்

கும்பகோணம் நாகேஸ்வரர் கோவில்

ஆதிசேஷன் இழந்த தன் பலத்தை மீண்டும் பெற்ற தலம்

ஆதிசேஷன் சிவராத்திரி அன்று வழிபட்ட தலங்கள்

கும்பகோணம் நகரத்தில் அமைந்துள்ள தேவார பாடல் பெற்ற தலம் நாகேஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் பெரியநாயகி அம்மன். இத்தலம் தெற்கு திசையில் உள்ளதால் ‘கீழ்க்கோட்டம்’ என்றும் அழைக்கப்படுகிறது.தமிழகத்தில் உள்ள நாகர் கோவில்களில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலும் ஒன்றாகும். இத்தலம் நாக தோஷ பரிகாரத் தலமாகும். சூரியன் வழிபட்டதால் 'பாஸ்கரஷேத்திரம்' என்றும், பிரளய காலத்தில் வில்வம் விழுந்த இடம் என்பதால் 'வில்வ வனம்' என்றும் அழைக்கப்படுகிறது.

நாகங்களின் தலைவனான ஆதிசேஷன் தனது ஆயிரம் தலைகளால் பூமியை தாங்கிக்கொண்டு இருப்பவர். எப்போதும் அவர் பூமியை தாங்கிக் கொண்டு இருந்ததால் தன் பலம் அனைத்தையும் இழந்து தவித்தார். இதனால் உடல் சோர்வு ஏற்பட்டு அதனை நீக்கி வலிமை பெறக் கருதி சிவபெருமானிடம் சென்று முறையிட்டார். அதைக் கேட்ட சிவபெருமான், ஆதிசேஷனை சோழநாட்டில் காவிரிநதி ஓடும் சிவாலயங்களுக்கு சென்று வழிபடும் படி கூறினார். அதன்படி ஆதிசேஷன் பல தலங்களையும் தரிசித்து இறுதியாக கும்பகோணம் வந்தார்.

ஒரு சிவராத்திரியில் ஆதிசேஷன், முதல் ஜாமத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், இரண்டாம் ஜாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமியையும், மூன்றாம் ஜாமத்தில் திருப்பாம்புரம் பாம்புரநாதரையும், நான்காம் ஜாமத்தில் நாகூர் நாகநாதரையும் தரிசித்தார். அப்போது சிவபெருமான் சிவலிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு ஆதிசேஷனுக்கு, பூமி முழுவதையும் தாங்கும்படியான வலிமையையும்,வேறு பல நலன்களையும் வழங்கினார்.

திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாதசுவாமி கோவில் கும்பகோணத்தில் இருந்து 7 கி.மீ. தூரத்தில் உள்ளது. இறைவன் திருநாமம் நாகேஸ்வரர். இறைவியின் திருநாமம் பிறையணியம்மன்.இது நவக்கிரகங்களில் ராகு தலமாகும். ராகு பகவான் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க சிவராத்திரியன்று முதல் காலத்தில் பூஜித்த தலம் . கோவில் வெளிப்பிரகாரத்தில் தென் மேற்கு மூலையில் ராகு பகவான் தன் இரு தேவியருடன் எழுந்தருளியுள்ளார்.

திருப்பாம்புரம் பாம்புரநாதர் கோவில் திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி அருகில் உள்ளது. இறைவன் திருநாமம் சேசபுரீஸ்வரர், பாம்புரநாதர். இறைவியின் திருநாமம் வண்டார்குழலி .

நாகூர் நாகநாதர் கோவில் நாகப்பட்டினத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரத்தில் காரைக்கால் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இறைவன் திருநாமம் நாகநாதர். இறைவியின் திருநாமம் நாகவல்லி.

இந்த நான்கு தலங்களும் சிவராத்திரி அன்று ஆதிசேஷன் வழிபட்ட தலங்கள் என்பதால், சிவராத்திரி நன்னாளில் இந்த நான்கு தலங்களுக்கும் சென்று சிவபெருமானை வழிபாடு செய்தால் உடலில் உள்ள எல்லா வியாதிகளும் நீங்கும் என்றும், சர்ப்பதோஷம் நீங்கி வாழ்வில் வளம் பெறலாம் என்பது ஐதீகம். நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட நாக தோஷம் நீங்கும்.

Read More
தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில்

தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில்

லிங்கோத்பவர் அருகில் பெருமாள், பிரம்மன் இருவரும் சிவனை வணங்கிய கோலத்தில் இருக்கும் அரிய காட்சி

கடலூரில் இருந்து சுமார் 18 கி.மீ. தூரத்திலுள்ள தேவாரத்தலம் திருத்திணை சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில். தற்போது இந்தத் தலம், தீர்த்தனகிரி என்று அழைக்கப்படுகிறது. இறைவியின் திருநாமம் நீலாம்பிகை, ஒப்பிலா நாயகி.

பொதுவாக சிவாலயங்களில், கருவறையின் பின்புறம் கோஷ்டத்தில் சிவபெருமான் லிங்கோத்பவராக, அக்னி பிழம்பிலிருந்து வெளிப்படும் உருவமாக, எழுந்தருளி இருப்பார். இது சிவபெருமானின் 25 மூர்த்தங்களில் ஒன்றாகும். லிங்கோத்பவர் என்பது சிவபெருமான் ஆதி அந்தம் (தொடக்கமும் முடிவும்) இல்லாத அக்னி தூணாகத் தோன்றி, பிரம்மா மற்றும் விஷ்ணுவின் அகந்தையை அடக்கிய காட்சியை உணர்த்தும் ஒரு சிறப்பு வடிவமாகும்.

லிங்கோத்பவர் மூர்த்தத்தின் புராண பின்னணி

ஒரு சமயம் பிரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற விவாதம் ஏற்பட்டது. அப்போது, இருவருக்கும் இடையே ஒரு பிரம்மாண்டமான நெருப்புத் தூண் தோன்றியது. இருவரும் அதன் அடியையும் முடியையும் தேடி கிளம்பினார்கள். தூணின் அடியைக் காண வராஹமாக (பன்றி) விஷ்ணுவும், முடியைக் காண அன்னமாக பிரம்மாவும் சென்றனர். இருவராலும் காண முடியவில்லை.அந்த நெருப்புத் தூணின் நடுவிலிருந்து சிவபெருமான், தலை, கை, கால்களுடன் வெளிப்பட்டார். இதுவே லிங்கோத்பவர் (லிங்கத்திலிருந்து உதித்தவர்) எனப்படுகிறது. இதை குறிப்பிடும் வகையில் எல்லா சிவாலயங்களிலும் கோஷ்டத்தில், லிங்கோத்பவர் சிற்பத்தின் மேல்பகுதியில் பிரம்மா அன்னமாகவும், கீழ்ப்பகுதியில் பன்றியாக விஷ்ணுவும், லிங்கத்திற்கு நடுவில் சிவபெருமானும் காட்சி தருவார்கள்.

ஆனால் தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் கோவிலில், கோஷ்டத்தில் உள்ள லிங்கோத்பவர் அருகில் பெருமாள், பிரம்மன் இருவரும் சிவனை வணங்கிய கோலத்தில் இருக்கின்றனர். இத்தகைய காட்சியை நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாது.

லிங்கோத்பவர் வழிபாட்டின் சிறப்பு

மகா சிவராத்திரி அன்று இரவு லிங்கோத்பவ காலத்தில் (நடுநிசி) சிவனை லிங்கோத்பவராக வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. லிங்கோத்பவர் வழிபாட்டின் மூலம் அஞ்ஞானம் அகன்று, ஞானம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Read More
திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில்

திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில்

அபூர்வக் கோலத்தில் வீற்றிருக்கும் யோக பைரவர்

மதுரை-காரைக்குடி சாலையில், 62 கிமீ தொலைவில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில். இறைவன் திருநாமம் திருத்தளி நாதர். இறைவியின் திருநாமம் சிவகாமி.

வான்மீகி மகரிஷி புற்று வடிவில் தவம் செய்து வழிபட்டதால் இத்திருத்தலத்திற்கு திருப்புத்தூர் என்ற பெயர் வந்தது.

சிவபெருமான் ஆடும் தாண்டவத்தில் ஏழு வகைகள் உண்டு. அவை, ஆனந்த தாண்டவம், சந்தியதாண்டவம், காளிகா தாண்டவம், திருப்புரத் தாண்டவம், கெளரி தாண்டவம், சம்ஹார தாண்டவம், மற்றும் உமைத் தாண்டவம் ஆகியவை ஆகும். சிவபெருமானின் கௌரி தாண்டவத்தை காண விரும்பிய திருமாலின் துணைவி மகாலட்சுமி கீழ் திசை ஈசனை நோக்கிக் கடுந்தவமிருந்தாள் அவள் முன் சிவபெருமான் தோன்றி கௌரித் தாண்டவம் ஆடிய ஆலயமாகும். ஆதலின் திரு வழிபட்ட ஆலயம் என்னும் பொருள்பட திருத்தளிநாதர் ஆலயம் என்று அழைக்கப்படுவதாகத் தலபுராணம் கூறுகின்றது

இத்தலத்திலுள்ள பைரவர் சன்னதி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்தத் தலத்தின் திருத்தளிநாதரைத் தரிசிக்க வந்த காசி பைரவரே, இங்கு யோக பைரவராக அருள்கிறார் என்பது ஐதீகம். ஆக, இவரை ஆதி பைரவர் என்றும் போற்றுகிறார்கள். நம் நாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் அருளும் பைரவ மூர்த்திகளும் இவரிடமிருந்தே தோன்றியதாக திருத்தளிநாதர் கோவில் தல வரலாறு சொல்கிறது.

இவரை, குலதெய்வமாகக் கொண்ட மருது சகோதரர்கள், எப்போது போருக்குச் சென்றாலும் இந்த யோக பைரவரை வழிபட்ட பிறகுதான் செல்வார்களாம்.

இக்கோவிலில் தனிச் சன்னதியில் யோகா பைரவர் எழுந்தருளி இருக்கிறார். இவர் வலக்கரத்தில் சிவலிங்கத்தை வைத்து, கால்கட்டை விரலை தரையில் ஊன்றியபடி யோகநிலையில் காட்சி தருகிறார். பொதுவாக பைரவர் கையில் சூலத்துடனும், நாய் வாகனத்துடனும், நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிப்பதே மரபு. ஆனால் இங்குள்ள பைரவர் அமர்ந்த நிலையில், யோக நிஷ்டையில் காணப்படுகின்றார். அதனால் 'யோக பைரவர்' என்று அழைக்கப்படுகின்றார். யோக நிலையில் இருப்பதால் இவருக்கு நாய் வாகனம் கிடையாது. இவருக்கு வெண்ணிற பட்டாடை அணிவித்து அலங்கரிப்பது விசேஷம். இந்த பைரவர் மிக உக்ரமானவர். அவர் தம் உக்ரத்தைக் குறைக்க, வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பாக, அவரை சங்கிலியால் பிணைத்து வைத்துள்ளதே இதற்குச் சான்று.

பிரார்த்தனை

தேய்பிறை அஷ்டமி அன்று இவருக்கு வடை மாலை சாற்றி வழிபடுகின்றனர். ராகுகாலம் போன்ற நேரங்களிலும் இவருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகின்றது. சத்ரு தொல்லை, ஏவல், பில்லி, சூனியம், காரியத்தடை, திருமண எதிர்ப்பு போன்றவை விலக இவரை வழிபடுதல் சிறப்பு. அதற்காக சிறப்பு ஹோமங்களும் அர்ச்சனை வழிபாடுகளும் இவ்வாலயத்தில் செய்யப்படுகின்றன.

நவகிரகங்கள் பைரவரின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. அதனால், கிரக தோஷங்கள் நீங்க நவக்கிரக தலங்களுக்கு செல்ல முடியாவிட்டாலும், இங்குள்ள யோக பைரவரை வணங்கினால் போதும். 'ஆபத்துத்தாரண பைரவர்' என்று அழைக்கப்படும் இவர் எல்லா தோஷங்களையும் நீக்குவார் என்பது ஐதீகம். தேய்பிறை, வளர்பிறை அஷ்டமி தினங்களில் பைரவருக்கு வாசனைப் பொருட்கள் வைத்து வழிபடுகிறார்கள்.

மேலும், குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான் இருமல், திருமணத்தடை போன்ற பிரச்னைகளை நீக்கும் வரப் பிரசாதியாகவும் திகழ்கிறார். இந்த யோக பைரவர். வெண் பூசணி, தேங்காய் போன்றவற்றில் நெய் தீபம் ஏற்றிவைத்து இவரை வழிபட்டால், எதிரிகள் பணிந்து போவார்கள். பங்காளிச் சண்டை முடிவுக்கு வரும். அதேபோல், ஒரு துணியில் மிளகு சுற்றி முடிந்து வைத்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் பிரச்னைகள் முடிவுக்கு வரும். கண் திருஷ்டிகளும் விலகும்.

Read More
சிதம்பரம் நடராஜர் கோவில்

சிதம்பரம் நடராஜர் கோவில்

நடனத்திற்கு அதிபதியான நடராஜர்

பரதநாட்டியத்தின் 108 கரணச் சிற்பங்கள்

நடராஜர் என்றால் 'நடனக்கலைகளின் அரசன்' அல்லது 'ஆடலரசன்' என்று பொருள். இது 'நடா' (நடனம்) மற்றும் 'ராஜா' (அரசன்) ஆகிய இரு சமஸ்கிருத வார்த்தைகளின் சேர்க்கையால் உருவானது. இது சிவபெருமானின் நடன வடிவம் (ஆனந்த தாண்டவம்) ஆகும். சிவபெருமானது இந்த நடனம் ஆனந்தத்தின் அடையாளமாகவும், அகங்காரத்தை அழித்து முக்தி தரும் வடிவமாகவும் வழிபடப்படுகிறது.

நடனத்திற்கு அதிபதியான நடராஜர் எழுந்தருளி இருக்கும் தேவாரத் தலமான சிதம்பரம் கோவிலில், பரதநாட்டியத்தின் 108 கரணங்களும் சிற்ப வடிவில் செதுக்கப்பட்டுள்ளன. சிதம்பரம் கோயிலில் கீழைக்கோபுரத்தின் கிழக்குப்பகுதியில் தெற்குச் சுவரிலும் வடக்குச் சுவரிலும் நான்கு வரிசையாக வரிசைக்கு 8 சிற்பங்கள் என்ற வகையில் 32 + 32 = 64 சிற்பங்கள் உள்ளன. மேற்குச் சுவரில் தெற்குப் பகுதியில் 24 சிற்பங்களும், வடக்குப் பகுதியில் 20 சிற்பங்களும் உள்ளன. இந்த நாட்டிய சிற்பங்கள் அந்த கால சிற்பிகளின் நாட்டிய அறிவையும், சிற்பக்கலை திறமையையும் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

பரதநாட்டியத்தில் கை, கால், உடல் அசைவுகளின் ஒருங்கிணைந்த இசைவு 'கரணம்' எனப்படும். 'கரன்' என்றால் கை, 'அண்' என்றால் அசைவு எனப் பொருள்படும், உடல் உறுப்புகளால் செய்யப்படும் செய்கையே கரணம். இது கை முத்திரைகள் (ஹஸ்தங்கள்), கால் அசைவுகள் (சாரிகள்), மற்றும் உடல் நிலை (ஸ்தானகம்) ஆகிய மூன்றின் ஒருங்கிணைந்த, முழுமையான இயக்கமாகும். நாட்டிய சாஸ்திரத்தின்படி, சிவபெருமானால் அருளப்பட்ட மொத்தம் 108 கரணங்கள் தாண்டவங்களில் பயன்படுத்தப்படுகின்றன. கரணங்கள் நாட்டியத்திற்கு அழகையும், கம்பீரத்தையும் அளிக்கும் முக்கிய அங்கங்களாகும்.

பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரத்தில் 108 வகை கரணங்கள் விளக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் சிதம்பரம் நடராஜர் கோயில், தஞ்சைப் பெரிய கோயில் போன்ற பழமையான கோயில்களில் 108 கரணச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

Read More
கோவை வடமதுரை விருந்தீஸ்வரர் கோவில்

கோவை வடமதுரை விருந்தீஸ்வரர் கோவில்

அனுமனும், கருடனும் ஒரே இடத்தில் காட்சி தரும் தனிச்சிறப்பு

குடும்பத்தில் மன ஒற்றுமை மேலோங்க அருளும் லட்சுமி நாராயணர்

கோயம்புத்தூர் மாநகரிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில், துடியலூரை அடுத்து அமைந்துள்ளது வடமதுரை விருந்தீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் விஸ்வநாயகி. இக்கோவில் 1400 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. மூன்று யுகங்களைக் கண்ட பெருமை வாய்ந்த கோவில் இது.

நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர் பசியால் தளர்ந்து இக்கோவிலுக்கு வந்தபோது, இறைவனும் இறைவியும் வேடுவ தம்பதிகளாகத் தோன்றி அவருக்கு 'வன முருங்கைக்கீரை' சமைத்து அமுது படைத்தனர். விருந்தளித்த காரணத்தால் இத்தல இறைவன் 'விருந்தீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.

இக்கோவிலின் தனித்துவமான சிறப்பு அம்சங்களில் ஒன்று, நிபந்தனையற்ற பக்தியும் மற்றும் சேவையில் ஈடுபடும் சிறிய திருவடி, பெரிய திருவடி என அழைக்கப்படும் அனுமனும், கருடனும் ஒரே இடத்தில் காட்சி அளிப்பதாகும். இக்கோவிலில் அமைந்துள்ள லட்சுமி நாராயணர் சன்னதிக்கு அருகே இவர்கள் எழுந்தருளி இருக்கிறார்கள். இவர்களிடம் வைக்கப்படும் கோரிக்கைகளை, உடனே நிறைவேற்றி வைக்கிறார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும், குடும்பத்தில் மன ஒற்றுமை மேலோங்கவும் இங்குள்ள லட்சுமி நாராயணருக்கு துளசியால் அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள்.

Read More
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்ப உற்சவம்

சென்னை மாநகரில் , பிரசித்தி பெற்ற கோவில்களில் தேவாரத் தலமான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலும் ஒன்றாகும். இறைவனின் திருநாமம் கபாலீஸ்வரர். இறைவியின் திருநாமம் கற்பகாம்பாள். கற்பகம் என்றாலே வேண்டும் வரங்களை தருபவள் என்று பொருள்.

இத்தலத்தில் முருகப் பெருமான், வள்ளி - தெய்வானை சமேத சிங்கார வேலர் என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார். இக்கோவிலில் நடக்கும் பல திருவிழாக்கள் மிகவும் விசேஷமானவை, தனித்துவமானவை. அப்படி நடத்தப்படும் விழாக்களில் தைப்பூச தெப்ப உற்சவமும் ஒன்று. தைப்பூச நாளில் இக்கோவில் சிவன், அம்பாள், முருகன் ஆகிய மூவருக்கும் விழா எடுக்கப்படுவது தனிச்சிறப்பு.

இக்கோவிலில், தைப்பூச தெப்ப உற்சவம் மூன்று நாட்கள் நடைபெறும் முதல் நாள் கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரரும், அடுத்த இரண்டு நாட்கள் வள்ளி தெய்வயானை சமேத சிங்காரவேலரும், மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய தெப்பத்தில் திருக்குளத்தில் பவனி வருவார்கள்.

கபாலீஸ்வரரின் திருக்கரத்தை பற்றிய நிலையில் அன்னை கற்பகாம்பாள் மணப்பெண் போன்ற கோலத்தில் பல்லக்கில் எழுந்தருளி, தெப்பத்தில் உலா வரும் காட்சி கண் கொள்ளா காட்சியாக இருக்கும். அதேபோன்று சிங்காரவேலர், ஒரு காலை தரையில் ஊன்றியும், ஒரு காலை மயில் மேல் வைத்தபடியும், வள்ளி - தெய்வானையுடன் கம்பீரமாக, அழகிய கோலத்தில் காட்சி தருவது பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும்.

Read More
திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோவில்

திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோவில்

சனி பகவானை வணங்கிய பின் தான் சிவனை வழிபட வேண்டும் என்ற அபூர்வமான நடைமுறை உள்ள தேவார தலம்

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து 5 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலம் திருநள்ளாறு. இறைவனின் திருநாமம் தர்ப்பாரண்யேசுவரர், இறைவியின் திருநாமம் பிராணேசுவரி. இறைவன் தர்ப்பையில் முளைத்தவர் என்பதால் தர்ப்பாரண்யேசுவரர் எனப்படுகிறார். தர்ப்பையில் முளைத்த தழும்புடன் உள்ளார். தரப்பாணேஸ்வரரை சனிபகவான் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்று புராணம் கூறுகிறது.

பிராணேசுவரி அம்மன் சன்னதிக்கு முன்னால், சனிபகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இக்கோவிலின் வாயிற் காப்பாளராக சனி பகவானே கருதப்படுகிறார். பொதுவாக சிவனை வழிபட்ட பிறகு தான் நவகிரகங்களை வழிபடுவார்கள். ஆனால் இத்தலத்தில் சனீஸ்வரனை வணங்கிய பிறகு தான் சிவனை வழிபட வேண்டும் என்ற வழக்கம் உள்ளது. மேலும் சனி பகவானை தவிர, மற்ற எட்டு கிரகங்களும் இந்தக் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படவில்லை. சனிபகவானது விக்ரகத்தின் கீழே, அவரது சாந்நித்யம் கொண்ட மகாயந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சனி பகவானாலேயே அந்த மகாயந்திரம் அருளப்பட்டதால், அதனுடைய சக்தி அளவிட முடியாதது. அதனாலேயே சனிபகவானின் திருச்சன்னதி மிக்க சிறப்பும், சக்தியும், மூரத்திகரமும் பெற்று விளங்குகிறது.

பிரார்த்தனை

இத்தலத்தில் நள தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், வாணி தீர்த்தம் தவிர அஷ்டதீர்த்தங்கள் எனப்படும் மொத்தம் 8 தீர்த்தங்கள் உள்ளன. சனித் தொல்லை தீர நள தீர்த்தத்திலும், முன் ஜென்ம சாபவங்கள் விலக பிரம்ம தீர்த்தத்திலும், கலைகளில் தேர்ச்சி பெற வாணி தீர்த்தத்திலும் நீராடி பிரார்த்தனை செய்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

சனி பகவானை வழிபடும் போது சொல்ல வேண்டிய காயத்ரி மந்திரம்

சனி காயத்ரி மந்திரம் :

காகத் வஜாய வித்மஹே

கட்க ஹஸ்தாய தீமஹி

தந்நோ மந்த: ப்ரசோதயாத்

Read More
திருவாரூர் தியாகராஜர் கோவில்

திருவாரூர் தியாகராஜர் கோவில்

எமதர்மனுக்கு புதிய வேலைக் கிடைத்த தேவாரத் தலம்

பொதுவாக எல்லா சிவாலயங்களிலும் ஒரு சண்டிகேசுவரர் மட்டுமே இருப்பார். ஆனால் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் இரண்டு சண்டிகேசுவரர்கள் இருக்கிறார்கள். ஒருவர் ஆதி சண்டிகேசுவரர். மற்றொருவர் எம சண்டிகேசுவரர்.

பிறக்க முக்தி எனும் சிறப்புடையது திருவாரூர் தலம். அதனால் இத்தலத்தில் பிறந்தவரகள் அனைவரும் சிவ கணங்கள் என்னும் தகுதியைப் பெறுகிறார்கள். இக்காரணத்தினால் எமதர்மன் அவர்களை நெருங்க முடியாது. இறைவனே முக்தி பேறு தந்து அவர்களை அழைத்துச் செல்வதால், இத்தலம் முக்தித் தலம் என்றழைக்கப்படுகிறது.ஆதலால் திருவாரூரில் தனக்கு வேலை இல்லையே என்று எமதர்மன் சிவபெருமானிடம் முறையிட்டான். அவன் மனக்குறையைப் போக்குவதறகாக, சிவபெருமான் அவனுக்கு சண்டிகேசுவரர் பதவி கொடுத்தார். இக்கோவிலில் இரண்டாம் பிரகாரத்தில் எமதர்மன் ஒரு காலை ஊன்றி கையில் முகத்தைத் தாங்கி நமக்குக் காட்சி தருகிறார். எமதர்மன் இறைவனை வேண்டி, சண்டிகேசுவரர் பதவி பெற்று தனது வேலையைக் காப்பாற்றிக் கொண்டதால், எமபயமுள்ளவர்கள் இத்தலத்துக்கு வந்து வழிபட்டால் நன்மை பயக்கும்.

Read More
திலதர்ப்பணபுரி (திலதைப்பதி) முக்தீஸ்வரர் கோவில்

திலதர்ப்பணபுரி (திலதைப்பதி) முக்தீஸ்வரர் கோவில்

இப்பிறவியில் செய்த பாவங்களைப் போக்கும் பீஷ்மாஷ்டமி தர்ப்பணம்

மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ள தேவாரத்தலம் திலதர்ப்பணபுரி . இத்தலம் தற்போது திலதைப்பதி என்று அழைக்கப்படுகிறது. திலம் என்றால் எள், புரி என்றால் தலம். எள் தர்ப்பணம் செய்ய சிறந்த தலம் என்பது பொருள். இந்தியாவில் பித்ரு தலங்கள் 7 உள்ளன. அவை காசி, ராமேஸ்வரம், கயா, திரிவேணி சங்கமம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி ஆகும். ராமேஸ்வரத்தில் செய்யப்படும் பித்ருக்கள் சம்பந்தமான அனைத்து பூஜைகளும் திலதர்ப்பணபுரியிலும் செய்யப்படுகின்றன. இறைவன் திருநாமம் முக்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் சொர்ணவல்லி.

சாதி, மத பேதமின்றி அனைத்து மக்களுக்கும் செய்யப்படும் காருண்ய தர்ப்பணம் இங்கு மிக விசேஷம். சொர்ணவல்லித் தாயார், பிரம்மா, மகாலட்சுமி, ஸ்ரீராமர், நட்சோதி மன்னன் போன்றவர்களே இத்திருக்கோவில் வந்து பித்ரு தர்ப்பணம் செய்துள்ளனர் என்றால், இக்கோவிலின் மகிமையும், பித்ரு தர்ப்பணத்தின் மகிமையும் நமக்கு விளங்கும். இக்கோவிலில் பித்ரு தர்ப்பணம் செய்ய அமாவாசை, திதி, நட்சத்திரம் ஆகியவை பார்க்கத் தேவையில்லை. இத்தலத்தில் எந்த நாளில் வேண்டுமானாலும் சிரார்த்தம், தர்ப்பணம் செய்யலாம்.

பீஷ்மாஷ்டமி தர்ப்பணம்

தை மாதம் ரதசப்தமிக்கு மறுநாள் வரும் அஷ்டமி தினம், பீஷ்மாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. மஹாபாரதத்தில் கங்கையின் மைந்தரான பீஷ்மரை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவர் இல்லாமல் மஹாபாரத காவியமே கிடையாது. கிருஷ்ணபரமாத்மா எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவரோ, அதே அளவுக்கு பீஷ்மரும் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவர். உலக நன்மைக்காகவும், தன்னுடைய தந்தைக்காகவும் செய்த தியாகத்திற்கு பிரதிபலனாக, பீஷ்மர் தான் விரும்பாமல் தன்னுடைய உயிர் உடலை விட்டு பிரியாது என்னும் வரத்தை பெற்றார். இதனால் பாண்டவர்கள்,கௌரவர்கள் என இரு தரப்புக்கும் பிரியமான பிதாமகர் என்று மரியாதையுடன் அழைக்கப்பட்டார்.

மஹாபாரதப் போரில் , பீஷ்மர் அர்ச்சுனனின் அம்புகளால் வீழ்த்தப்பட்டு அம்புப்படுக்கையில் கிடந்தாலும், தான் பெற்ற வரத்தின் காரணமாக, மோட்ச காலமான உத்தராயண காலத்தில் உயிர் துறக்க விரும்பி தன் மரணத்தை தள்ளிப் போட்டு வந்தார். பீஷ்மர் மரணப் படுக்கையில் இருந்தபோது,மஹாவிஷ்ணுவை வேண்டிக் கொண்டார். அவருக்கு கிருஷ்ணபரமாத்மா தன்னுடைய விஸ்வரூபத்தை காட்டி அருளினார். அந்த சமயத்தில் பீஷ்மர் அருளியதே விஷ்ணு சகஸ்ரநாமம் ஆகும். அப்போது மோட்சம் அளிக்கும் உத்தராயண காலம் ஆரம்பமாகிவிட்டதால், பீஷ்மர், தன்னுடைய உயிர் பிரியவேண்டும் என்று வேண்டிக்கொண்டார். ஆனால், உயிர் பிரியவில்லை. உத்தராயண காலம் தொடங்கியும் தன்னுடைய உயிர் பிரியாததைக் கண்டு மனம் வருந்தி வியாசரிடம் விளக்கம் கேட்டார் பீஷ்மர். அதற்கு வியாசர், பீஷ்மர் செய்த பாவச்செயலை, அதாவது திரௌபதியை கௌரவர்கள் மானபங்கப் படுத்தியபோது தடுக்காததை, அவரிடம் எடுத்துரைத்தார். தன்னுடைய மாபெரும் தவறை உணர்ந்து கொண்ட பீஷ்மர், தன்னுடைய உடலை எரிக்கும் சக்தியை, சூரிய தேவனிடம் இருந்து பெற்றுத் தருமாறு வியாசரிடம் கேட்டுக்கொண்டார். உடனே வியாசரும், சூரிய சக்திக்கு நிகரான எருக்க இலைகளைக் கொண்டு பீஷ்மரை அலங்கரித்தார். இதையடுத்து நிம்மதியடைந்த பீஷ்மர் தியான நிலைக்கு சென்று மோட்சம் பெற்றார்.

பீஷ்மர் உயிர் பிரிந்து மோட்சம் பெற்றாலும், அவர் பிரம்மச்சாரி என்பதால், அவருக்கு தர்ப்பணம் செய்ய வாரிசுகள் இல்லை. ஆனால், பீஷ்மர் ஒழுக்க நெறி தவறாமல் பிரம்மச்சாரிய விரதத்தைக் கடைபிடித்து வந்ததால், அவருக்கு சிரார்த்தம் செய்யவேண்டிய அவசியம் இல்லை என்று வியாசர் கூறினார். வியாசர் அப்படி சொன்னாலும், பீஷ்மரின் ஆத்மாவுக்காக இந்த நாடே தர்ப்பணம் செய்யும். அதனால் புண்ணியமும் கிடைக்கும் என்று ஆசி வழங்கினார் வியாசர். பீஷ்மர், ரதசப்தமி முடிந்த மறுநாளான அஷ்டமி திதியன்று தன்னுடைய உயிரைப் போக்கிக்கொண்டார். அந்த அஷ்டமியே பீஷ்மாஷ்டமி என்று கூறப்படுகிறது.

பீஷ்மாஷ்டமி தினத்தில், பீஷ்மருக்காகவும், நம்முடைய முன்னோர்களுக்காகவும் தர்ப்பணம் செய்தால், நாம் இப்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி, நம்முடைய வாழ்வில் நிச்சயம் சுபிட்சம் ஏற்படும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

Read More
வழுவூர் வீரட்டேஸ்வர் கோவில்

வழுவூர் வீரட்டேஸ்வர் கோவில்

சனி பகவான் கையில் வில்லுடன் இருக்கும் அபூர்வத் தோற்றம்

மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில், 9 கி. மீ. தூரத்தில் அமைந்துள்ளது வழுவூர் வீரட்டேஸ்வர் கோவில். இறைவன் திருநாமம் கஜசம்ஹார மூர்த்தி. இறைவியின் திருநாமம் பாலாங்குராம்பிகை, அட்ட வீரட்டான தலங்களுள் ஒன்று, வழுவூர். பிரளய காலத்தில் உலகமெலாம் அழிந்தும், அவ்வூர் அழியாமல் வழுவியதால் வழுவூர் என்று பெயர் ஏற்பட்டது.

சோழ மன்னன் ஒருவர் இப்பகுதியை அரசாண்டபோது சனிபகவானின் சஞ்சாரம் காரணமாக நாட்டில் கடும் பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. அந்த மன்னன் சனிபகவானை நோக்கித் தவமிருந்து நாட்டில் பஞ்சம் வராத வரத்தைப் பெற்றார். அவர் வழிபட்ட சனி பகவான், மேகத்தைத் துளைத்து மழைபொழிய வைத்தாராம். அதை நிரூபிக்கும் வகையில் அவர் கையில் வில்லுடன் அற்புதமாக காட்சி தருகிறார். அதனால் இவரை வழிபட்டால் நம்முடைய துன்பத்தை, பஞ்சத்தை போக்கி செழிப்புடன் நம்மை வாழ வைப்பார் என்பது ஐதீகம். சனீஸ்வரனின் ஏழரைச்சனி காலத்தில் பொருளாதார ரீதியாக நஷ்டத்தை சந்தித்தோர், வில்லேந்திய வடிவில் உள்ள சனீஸ்வரரை வழிபட்டு வாழ்வில் நன்மை பெறலாம்.

Read More