எட்டியத்தளி அகஸ்தீஸ்வரர் கோவில்
திருநள்ளாறு சனிபகவானை விட பலமடங்கு சக்தி மிக்க சனிபகவான்
சனி மற்றும் ராகு தோஷத்தை ஒரு சேர நீக்கும் தலம்
புதுக்கோட்டை, அறந்தாங்கியிலிருந்து, 5 கி.மீ தூரத்திலுள்ளது எட்டியத்தளி அகஸ்தீஸ்வரர் கோவில். இது 2000 ஆண்டுகள் பழமையானது. இறைவியின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி. இக்கோவில் தொண்டை நாட்டு மன்னன் காளிங்கராயனால் கட்டப்பட்டது.
ஒரு சமயம் அகஸ்திய முனிவர், காசி விஸ்வநாதரை தரிசித்து விட்டு, எட்டியத்தளி கிராமத்துக்கு வந்தார். அப்போது மன்னன் காளிங்கராயன் தனது அஷ்டம சனி தோஷம் நீங்க, திருநள்ளாறு சனி ஆலயம் செல்வதற்கு, இவ்வழியாக வந்தான்.
அகத்தியர், மன்னன் காளிங்கராயரிடம் அஷ்டம சனி தோஷம் நீங்க, ஆலயம் ஒன்றை எழுப்ப சொன்னார். பின்பு, தான் வழிபட்ட சிவலிங்க மூர்த்தத்தை கருவறையில் பிரதிஷ்டை செய்து வழிபடும்படி கூறினார். அதன்படியே காளிங்கராயன் ஆலயம் ஒன்றை எழுப்பி, அதில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு தனது அஷ்டம சனி தோஷம் நீங்கப் பெற்றான். அகத்தியர் வழிபட்டதால் இத்தல இறைவன் அகத்தீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார்.
திருநள்ளாறு சனிபகவானை விட இவர் அருள் வழங்குவதில் பலமடங்கு சக்தி மிக்கவர் என்பது ஐதீகம். அதனால், இத்திருத்தலத்தில் சனி பகவானின் சக்தி இங்கு அதிகம்.
பொதுவாக, கோயில்களில் சனீஸ்வரருக்கு இடது புறம் ராகுவும், வலது புறம் கேதுவும் இருப்பார்கள். ஆனால் இந்த ஆலயத்தில் சனி பகவானின் வலதுபுறம் ராகு பகவானும், இடதுபுறம் கேது பகவானும் உள்ளனர். அதனால் ராகுவின் பார்வை சனி பகவானின் மீது படுகிறது. எனவே, இங்கு வந்து வழிபட்டால், சனி தோஷமும், ராகு தோஷமும் நீங்குகிறது. மேலும் ஜாதகத்தில் களத்திரன், செவ்வாய் தோஷமுள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் குறைகள் நீங்கி திருமண பாக்கியம் கிட்டும்.
இக்கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி, கல்யாண தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். திருமணம் தடைப்பட்டவர்கள் இவரை வழிபட்டால், விரைவில் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இக்கோவிலில் நவக்கிரகத்தின் அருகில் ஜாதகத்தை வைத்து பூஜை செய்யும் வழக்கமானது, இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பாகும். இப்படிப்பட்ட நடைமுறை வேறு எந்த கோவிலிலும் கடைபிடிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சனி பகவானின் வலதுபுறம் ராகு பகவான்