கும்பகோணம் நாகேஸ்வரர் கோவில்

ஆதிசேஷன் இழந்த தன் பலத்தை மீண்டும் பெற்ற தலம்

ஆதிசேஷன் சிவராத்திரி அன்று வழிபட்ட தலங்கள்

கும்பகோணம் நகரத்தில் அமைந்துள்ள தேவார பாடல் பெற்ற தலம் நாகேஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் பெரியநாயகி அம்மன். இத்தலம் தெற்கு திசையில் உள்ளதால் ‘கீழ்க்கோட்டம்’ என்றும் அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள நாகர் கோவில்களில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலும் ஒன்றாகும். இத்தலம் நாக தோஷ பரிகாரத் தலமாகும். சூரியன் வழிபட்டதால் 'பாஸ்கரஷேத்திரம்' என்றும், பிரளய காலத்தில் வில்வம் விழுந்த இடம் என்பதால் 'வில்வ வனம்' என்றும் அழைக்கப்படுகிறது.

நாகங்களின் தலைவனான ஆதிசேஷன் தனது ஆயிரம் தலைகளால் பூமியை தாங்கிக்கொண்டு இருப்பவர். எப்போதும் அவர் பூமியை தாங்கிக் கொண்டு இருந்ததால் தன் பலம் அனைத்தையும் இழந்து தவித்தார். இதனால் உடல் சோர்வு ஏற்பட்டு அதனை நீக்கி வலிமை பெறக் கருதி சிவபெருமானிடம் சென்று முறையிட்டார். அதைக் கேட்ட சிவபெருமான், ஆதிசேஷனை சோழநாட்டில் காவிரிநதி ஓடும் சிவாலயங்களுக்கு சென்று வழிபடும் படி கூறினார். அதன்படி ஆதிசேஷன் பல தலங்களையும் தரிசித்து இறுதியாக கும்பகோணம் வந்தார்.

ஒரு சிவராத்திரியில் ஆதிசேஷன், முதல் ஜாமத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், இரண்டாம் ஜாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமியையும், மூன்றாம் ஜாமத்தில் திருப்பாம்புரம் பாம்புரநாதரையும், நான்காம் ஜாமத்தில் நாகூர் நாகநாதரையும் தரிசித்தார். அப்போது சிவபெருமான் சிவலிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு ஆதிசேஷனுக்கு, பூமி முழுவதையும் தாங்கும்படியான வலிமையையும்,வேறு பல நலன்களையும் வழங்கினார்.

திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாதசுவாமி கோவில் கும்பகோணத்தில் இருந்து 7 கி.மீ. தூரத்தில் உள்ளது. இறைவன் திருநாமம் நாகேஸ்வரர். இறைவியின் திருநாமம் பிறையணியம்மன்.இது நவக்கிரகங்களில் ராகு தலமாகும். ராகு பகவான் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க சிவராத்திரியன்று முதல் காலத்தில் பூஜித்த தலம் . கோவில் வெளிப்பிரகாரத்தில் தென் மேற்கு மூலையில் ராகு பகவான் தன் இரு தேவியருடன் எழுந்தருளியுள்ளார்.

திருப்பாம்புரம் பாம்புரநாதர் கோவில் திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி அருகில் உள்ளது. இறைவன் திருநாமம் சேசபுரீஸ்வரர், பாம்புரநாதர். இறைவியின் திருநாமம் வண்டார்குழலி .

நாகூர் நாகநாதர் கோவில் நாகப்பட்டினத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரத்தில் காரைக்கால் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இறைவன் திருநாமம் நாகநாதர். இறைவியின் திருநாமம் நாகவல்லி.

இந்த நான்கு தலங்களும் சிவராத்திரி அன்று ஆதிசேஷன் வழிபட்ட தலங்கள் என்பதால், சிவராத்திரி நன்னாளில் இந்த நான்கு தலங்களுக்கும் சென்று சிவபெருமானை வழிபாடு செய்தால் உடலில் உள்ள எல்லா வியாதிகளும் நீங்கும் என்றும், சர்ப்பதோஷம் நீங்கி வாழ்வில் வளம் பெறலாம் என்பது ஐதீகம். நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட நாக தோஷம் நீங்கும்.

 
Previous
Previous

திருக்கழுக்குன்றம் ருத்திர கோடீஸ்வரர் கோவில்

Next
Next

திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் கோவில்