வழுவூர் வீரட்டேஸ்வர் கோவில்

வழுவூர் வீரட்டேஸ்வர் கோவில்

சனி பகவான் கையில் வில்லுடன் இருக்கும் அபூர்வத் தோற்றம்

மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில், 9 கி. மீ. தூரத்தில் அமைந்துள்ளது வழுவூர் வீரட்டேஸ்வர் கோவில். இறைவன் திருநாமம் கஜசம்ஹார மூர்த்தி. இறைவியின் திருநாமம் பாலாங்குராம்பிகை, அட்ட வீரட்டான தலங்களுள் ஒன்று, வழுவூர். பிரளய காலத்தில் உலகமெலாம் அழிந்தும், அவ்வூர் அழியாமல் வழுவியதால் வழுவூர் என்று பெயர் ஏற்பட்டது.

சோழ மன்னன் ஒருவர் இப்பகுதியை அரசாண்டபோது சனிபகவானின் சஞ்சாரம் காரணமாக நாட்டில் கடும் பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. அந்த மன்னன் சனிபகவானை நோக்கித் தவமிருந்து நாட்டில் பஞ்சம் வராத வரத்தைப் பெற்றார். அவர் வழிபட்ட சனி பகவான், மேகத்தைத் துளைத்து மழைபொழிய வைத்தாராம். அதை நிரூபிக்கும் வகையில் அவர் கையில் வில்லுடன் அற்புதமாக காட்சி தருகிறார். அதனால் இவரை வழிபட்டால் நம்முடைய துன்பத்தை, பஞ்சத்தை போக்கி செழிப்புடன் நம்மை வாழ வைப்பார் என்பது ஐதீகம். சனீஸ்வரனின் ஏழரைச்சனி காலத்தில் பொருளாதார ரீதியாக நஷ்டத்தை சந்தித்தோர், வில்லேந்திய வடிவில் உள்ள சனீஸ்வரரை வழிபட்டு வாழ்வில் நன்மை பெறலாம்.

Read More
லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவில்

லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவில்

கைகளில் வீணையோடு நின்ற கோலத்தில் காட்சி தரும் வீணா தட்சிணாமூர்த்தி

திருச்சியில் இருந்து அரியலூர் செல்லும் வழியில், 23 கி.மீ. தொலைவில் உள்ள தலம் லால்குடி. இறைவனின் திருநாமம் சப்தரிஷீஸ்வரர். இறைவியின் திருநாமம் பெருதிருப்பிராட்டியார். இவ்வூர் பக்கம் படையெடுத்து வந்த முகமதிய மன்னன் மாலிக் கபூர் இத்திருக்கோவிலின் சிவப்பு கோபுரத்தை கண்டு உருதுமொழியில் லால்குடி (லால் – சிவப்பு, குடி – கோபுரம்) என்று அழைக்க, அதுவே இவ்வூருக்கு பெயராகி அழைக்கபடுகிறது.

இத்தலத்தில் வீணையைக் கையிலேந்தி, சற்றே வித்தியாசமான கோலத்தில் அருள்பாலிக்கின்றார் தட்சிணாமூர்த்தி. இவரை 'வீணா தட்சிணாமூர்த்தி' என்றே தலபுராணம் குறிப்பிடுகின்றது. இசைக்கு தலைவன் சிவபெருமான். இதை உணர்த்தும் வகையில் அழகிய சடை முடியோடும், கைகளில் வீணையோடும், நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் இத்தலத்து தட்சிணாமூர்த்தி.

பிரார்த்தனை

இவரை வணங்கினால் உயர்பதவி, கல்வியில் முன்னேற்றம், நினைத்த படிப்பு படிக்கும் அமைப்பைக் கொடுப்பார். வியாழக் கிழமைகளில் இவருக்கு சந்தனக் காப்பிட நினைத்தக் காரியம் கைகூடும். வெண்தாமரை அர்ச்சனையும், தயிரன்ன நைவேத்தியமும் வியாழக்கிழமைகளில் கொடுக்க மனம் ஒருமுகப்படும். மேலும் இவர்க்கு தேனாபிசேகம் செய்தால் தேன் போன்ற இனிமையான குரல்வளம் கிடைக்கும்.

Read More
தீர்த்தாண்டதானம் சகல தீர்த்தமுடையவர் கோவில்

தீர்த்தாண்டதானம் சகல தீர்த்தமுடையவர் கோவில்

ராமர் வழிபட்ட தீர்த்தாண்டதானம்

தை மாத அமாவாசையில் திதி கொடுத்தால் நற்பலன்களை தரும் தலம்

இராமநாதபுர மாவட்டம் தொண்டியிலிருந்து 15 கீ.மீ. தொலைவிலுள்ள தலம்தான் தீர்த்தாண்டதானம். இத்தலத்து இறைவன் திருநாமம் சகல தீர்த்தமுடையவர்.இறைவியின் திருநாமம் பெரியநாயகி. இத்தலத் தீர்த்தமான கடலில் நீராடி, பின்னர் இறைவனை வழிபட்டால் 64000 தீர்த்தங்களில் நீராடிய புண்ணியமும், பலனும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இராமபிரான், இலட்சுமணனுடன் சீதா பிராட்டியை தேடி இவ்வழியே இலங்கைக்கு சென்றார். அப்போது இவ்விடத்தில் சற்றுநேரம் இளைப்பாறினார். அவருக்கு தாகம் எடுக்கவே, வருணபகவான் ஒரு தீர்த்தம் உண்டாக்கி கொடுத்தார். ராமரும் மகிழ்ச்சியுடன் அந்த நீரை அருந்தினார். தீர்த்தாண்டதானத்தில் ராமர் இருப்பதையறிந்து அங்கு வந்த அகத்தியர், 'ராவணன் சிறந்த சிவபக்தன். சிவபெருமானின் அருள் இல்லாமல் அவனை வீழ்த்துவது கடினம். சிவபெருமானை வணங்கிய பின்னர் இலங்கைக்கு செல்லுங்கள்' என்று தெரிவித்தார். இதனையடுத்து அருகே உள்ள திருப்புனல்வாசலில் வீற்றிருக்கும் விருத்தபுரீஸ்வரரை நினைத்து ராமர் வழிபட்டார்.

இதனால் மகிழ்ந்த சிவபெருமான் ராமர் முன்பு தோன்றினார். பின்னர் ராமருக்கு அருள் புரிந்த சிவபெருமான், அருகிலுள்ள கடற்கரையில், தந்தை தசரதனுக்கு தர்ப்பணம் செய்து விட்டு இலங்கைக்கு செல்லுமாறு கேட்டுக் கொண்டார். அப்போது வருணபகவான், 'ராமர் வழிபட்ட இடத்தில் சிவபெருமான் மேற்கு திசை நோக்கி காட்சியளிக்க வேண்டும், ராமருக்கு தீர்த்தம் கொடுத்ததால், அப்பகுதிக்கு தீர்த்தாண்டதானம் என்று பெயர் விளங்க வேண்டும். அங்குள்ள கடலில் நீராடி ஈசனை வழிபடுபவர்கள் அனைத்து தீர்த்தங்களிலும் நீராடியதற்கு ஒப்பான பலனை பெற வேண்டும்' என்று வரமளிக்குமாறு சிவபெருமானிடம் வேண்டினார். சிவபெருமானும் அப்பகுதியில் சர்வதீர்த்தேஸ்வரராக கோவில் கொண்டார் என்பது புராணம்.

ராமர் தர்ப்பணம் செய்த கடற்கரையில் பக்தர்கள் இன்றும் தர்ப்பணம் செய்துவிட்டு, ஈரத்துணியுடன் சர்வதீர்த்தேஸ்வரரை வழிபடுவது சிறப்பாகும். பூர்வ ஜென்ம தோஷங்கள் நீக்கும் பரிகாரத் தலமாகவும் இது கருதப்படுகிறது. தை அமாவாசை, ஆடி அமாவாசை, சிவராத்திரி, பிரதோஷம் ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. தை மாத அமாவாசையில் இங்கு திதி கொடுப்பது கூடுதல் பலனைத் தரும். இங்கு திதி கொடுத்தால், பித்ருக்களின் சாபத்தில் இருந்து விடுபடலாம். அவர்களது ஆத்மா அமைதி பெறும் என்பது ஐதீகம்.

Read More
கொடுமுடி மகுடேசுவரர் கோவில்

கொடுமுடி மகுடேசுவரர் கோவில்

கையில் திரிசூலம் ஏந்தி இருக்கும் சனிபகவானின் அபூர்வ தோற்றம்

கரூர்- ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் 27 கி.மீ. தூரத்தில், காவிரி நதிக் கரையில் அமைந்துள்ள தேவாரத்தலம் கொடுமுடி. இறைவன் திருநாமம் மகுடேசுவரர். இறைவியின் திருநாமம் வடிவுடை நாயகி. இக்கோவிலில் பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மூவரும் எழுந்தருளி இருப்பது தனிச்சிறப்பாகும்.

திருநள்ளாறு,திருநாரையூர், திருக்கொள்ளிக்காடு, திருவாதவூர், வழுவூர் போன்ற சனிப் பரிகாரத் தலங்களில் இத்தலமும் ஒன்று. இக்கோவிலில் சனிபகவான் காகத்தின் மேல் வலது காலை மடித்து, இடது காலை தொங்கவிட்ட நிலையில் அமர்ந்து கோலத்தில் எழுந்தருளி இருக்கிறார். அவர் வலது கையில் திரிசூலத்தை ஏந்திய நிலையில் காட்சி தருகிறார். இப்படி திரிசூலம் ஏந்திய சனி பகவானை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. இங்கு சனி பரிகாரம் செய்து வழிபட்டால் சனீஸ்வரர் அருள் கிட்டும்.

இத்தலத்து அனுமன், கோரை பற்களோடு எழுந்தருளி இருப்பதும் ஒரு அபூர்வமான காட்சியாகும்.

Read More
பிரமனூர் கைலாசநாத சுவாமி கோவில்

பிரமனூர் கைலாசநாத சுவாமி கோவில்

ஆலயத்துளிகள் வாசகர்களுக்கு,

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!!

அபூர்வமான ஆறடி உயரமுள்ள சூரியபகவான்

மதுரையில் இருந்து 23 கிமீ தூரத்தில், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்திலுள்ள பிரமனூரில் அமைந்துள்ளது கைலாசநாத சுவாமி கோவில். இறைவியின் திருநாமம் காமாட்சி. பிரம்மதேவன் சிவனால் ஏற்பட்ட சாபம் நீங்க இத்தலத்துக்கு வந்து வழிபட்டதால், இந்த ஊருக்கு (பிரமன்+ஊர்) பிரமனூர் என பெயர் ஏற்படடது.

பல நூறு ஆண்டுகள் பழமையான கோவிலில் உள்ள சூரியபகவான் சிலை மிகவும் அபூர்வமானது. சுமார் 6 அடி உயரமுள்ள இந்த சூரியபகவான் இறைவனை பார்த்த வண்ணம், சுவாமியின் இடப்பாகம் எழுந்தருளி உள்ளார்.

பொதுவாக சூரிய பகவான், சூரியபகவான் இறைவனின் வலப்பாகத்தில் தான் இருப்பார். இத்தகைய சூரிய பகவானை, இந்தியாவின் வேறு எந்த தலத்திலும் நாம் காண்பது அரிது.

மகர சங்கராந்தி

சூரிய பகவான் மகர ராசிக்குள் பிரவேசிக்கும் தினமே மகர சங்கராந்தி ஆகும். சூரியபகவான் வான்வெளியில் வடக்கு நோக்கி தனது பயணத்தை திருப்புகின்ற நாள் தான் மகர சங்கராந்தி. சமசுகிருதத்தில் 'சங்கரமண' என்றால், 'நகரத் துவங்கு' என்று பொருள். இதுவே இவ்விழா சங்கராந்தி என அழைக்கப்பட காரணமாயிற்று. தமிழகத்தில் இந்நாள், பொங்கல் பண்டிகை எனவும், இந்தியாவின் பிற பகுதிகளில் சூரிய வழிபாடு எனும் மகர சங்கராந்தி என்ற பெயரிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் பல பகுதிகளில் இது தானிய அறுவடையோடு ஒன்றுவதால், அறுவடை திருவிழாவாகவும், சூரியனுக்கு வரவேற்பும், நன்றியும் தெரிவிக்கும் திருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது.

Read More
குண்டடம் கொங்கு வடுகநாத சுவாமி கோவில்

குண்டடம் கொங்கு வடுகநாத சுவாமி கோவில்

காசி காலபைரவருக்கு இணையான குண்டடம் கொங்கு வடுகநாதர்

கோவை - மதுரை நெடுஞ்சாலையில், பல்லடத்துக்கும் தாராபுரத்துக்கும் நடுவில், பல்லடத்திலிருந்து 28 கி.மீ தூரத்திலும் தாராபுரத்திலிருந்து 16 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது குண்டடம் கொங்கு வடுகநாத சுவாமி கோவில். இறைவன் திருநாமம் விடங்கீசுவரர். இறைவியின் திருநாமம் விசாலாட்சி. இந்தக் கோவிலில் உள்ள காலபைரவ வடுகநாத சுவாமி மிகவும் சக்தி வாய்ந்தவர் என்றும்,காசி சென்று கால பைரவ சுவாமியை வணங்க முடியாதவர்கள் இவரை வணங்கினால் போதும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். 'காசு இருந்தால் காசிக்கு செல்லுங்கள்! காசு இல்லாவிட்டால் குண்டடத்தக்கு வாருங்கள்! ' என்று திருமுருக கிருபானந்த வாரியார் கூறி இருக்கிறார். அதாவது காசிக்குச் சென்று கால பைரவரை தரிசிக்க ஆயிரக்கணக்கில் செலவாகும். ஆனால் காசியில் இருக்கும் அதே கால பைரவரைதான், சிவபெருமானின் ஆணையால் தமிழகத்தில் கொங்கு மண்டலத்தில் இருக்கும் குண்டடத்துக்கும் வந்து, அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். அதனால் ரொம்ப செலவில்லாமல் காசி கால பைரவரை இந்தக் குண்டடத்திலேயே கொங்கு வடுகநாதராக வழிபடலாம் வாருங்கள் என்று அழைத்தார் வாரியார்.

முன்னொரு காலத்தில், விடங்கர் என்ற முனிவர் இந்த காட்டில் தவம் இருக்கும்போது அரக்கர்களால் தவத்திற்கு இடையூறு ஏற்படாமல் இருக்க உதவ வேண்டும் என்று காசி விசுவநாதரை மனமுருக வேண்டினார். காசி விசுவநாதர் விடங்கரின் பிரார்த்தனைக்கு இணங்கி வடுக பைரவரை அனுப்பினார். பைவர் இடையூறு செய்த அரக்கர்களை அழித்தார், பின் இலந்தை மரத்தின் அடியில் இருந்த புற்றில் நிரந்தரமாய்க் குடிகொண்டார். அருகே ஒர் அரசமரத்தடியில் பாம்பாட்டீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். சேர நாட்டிலிருந்து மிளகு விற்க வரும் வியாபாரிகள் இந்த அரசமரத்தடியில் இளைப்பாறுவது வழக்கம். ஒரு நாள் காலபைரவர் வயதான அந்தணர் தோற்றத்தில், மிளகு வியாபாரியிடம் சென்று தனக்கு உடல்நிலை சரியில்லை, கஷாயம் வைக்க மிளகு கொஞ்சம் கேட்கிறார், ஆனால் கொடுக்க நினைக்காத வியாபாரி மாட்டு வண்டியில் உள்ள மூட்டையில் மிளகு இல்லை பயறு என்று பொய் சொல்லிவிடுகிறார்.

மதுரை சென்று சேர்ந்த வியாபாரிகள் பாண்டிய மன்னரிடம் விலை பேசி மிளகு மூட்டைகளை விற்று விட்டார்கள். மிளகு மூட்டையை பரிசோதித்துப் பார்க்க, அவை பச்சைப் பயறாக இருப்பதைப் பார்த்து ஏமாற்றி விட்டதாய் கோபப்படுகிறார் மன்னர். வியாபாரிகள் ஒரு பெரியவர் மிளகு கேட்டதாகவும் தாங்கள் மிளகு கொடுக்க மறுத்து மூட்டையில் உள்ளது பச்சைப் பயிறு என்று சொன்னதாகச் சொல்கிறார்கள். நம்ப மறுக்கிறார் மன்னர். அப்போது பைரவர் திருவிளையாடல் புரிகிறார், எந்த வியாபாரியிடம் மிளகு கேட்டாரோ அந்த விபாபாரி மேல் அருள் வந்து நான்தான் மிளகு மூட்டைகளைப் பயிறு மூட்டைகளாக மாற்றினேன் என்று சொல்கிறார் பைரவர். அப்போதும் மன்னருக்கு நம்பிக்கை வரவில்லை.என் மகன், மகள் இருவரும் உடல்நிலை சரியில்லாதவர்கள் அவர்களைச் சரி செய்தால் நம்புவதாகச் சொல்கிறார்.

பைரவர் மன்னரிடம் புற்றில் இருக்கும் என்னைக் கோவில் கட்டிக் குடியமர்த்து .அபிஷேகம் செய்து மிளகு சாற்றி வழிபடு. உன் குழந்தைகளைக் குணப்படுத்துகிறேன் என்கிறார். பாண்டிய மன்னரும் அவ்வாறு செய்ய, குழந்தைகள் எட்டு நாட்களில் நலம் பெற்றார்கள்.. பேசமுடியாது இருந்த பெண் குழந்தை பேசியது, நடக்க முடியாது இருந்த ஆண் குழந்தை பைரவர் அருளால் நடந்தது. காசியிலிருந்து கொங்கு நாட்டுக்கு வந்ததால், பைரவருக்கு கொங்கு வடுகநாதர் என்ற பெயர் எழுநதது. கொங்கு நாட்டுக் காசியாக, குண்டடம் விளங்குகின்றது.

பிரார்த்தனை

தேய்பிறை அஷ்டமியில் இவரை தரிசித்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும். இவரை வணங்கினால் நவக்கிரக தோஷம் நீங்கிவிடும். பதினோரு மிளகு வைத்து நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி எட்டு தீபங்களை ஏற்றி வைத்தால் நாம் வேண்டும் பிரார்த்தனை நிறைவேறும்.

ஆஞ்சநேயருக்கு சாற்றுவது போல் இவருக்கு வடை மாலை சாற்றப்படுகிறது. வெண்பொங்கல் நைவேத்தியமும் இவருக்கு விசேஷம். தேங்காய் மூடியிலும், வெட்டப்பட்ட பூசணித் துண்டிலும் எண்ணெய் ஊற்றி சிலர் பரிகாரத்துக்காக விளக்கேற்றுகிறார்கள்.

Read More
தென்காசி காசி விசுவநாதர் கோவில்

தென்காசி காசி விசுவநாதர் கோவில்

ஒரே கோவிலில் இரண்டு நவக்கிரகங்கள் அமைப்பு இருக்கும் அபூர்வ காட்சி

தென்காசி நகரில் அமைந்துள்ளது காசி விசுவநாதர் கோவில். இறைவியின் திருநாமம் உலகம்மை. ஆயிரம் ஆண்டுகள் மேல் பழமையானது இக்கோவில்.

பொதுவாக சிவன் கோவில்களில் நவக்கிரகங்கள் ஒரு பீடத்தின் மேல் அவரவர் திசையை நோக்கியபடி எழுந்தருளி இருப்பார்கள். அரிதாக சில கோவில்களில் நவக்கிரகங்கள் நேர் வரிசையில் அமைந்து இருப்பார்கள். ஆனால், தென்காசி காசி விசுவநாதர் கோவிலில் உள்ள நவக்கிரகங்கள், மண்டபத்தில் அவரவர் திசையிலும், மண்டபத்தின் முன்னால் நேர் வரிசையிலும் எழுந்தருளி இருக்கிறார்கள். இப்படி ஒரே கோவிலில் நவக்கிரகங்கள் இரண்டு விதமாக அமைந்திருப்பது ஒரு அரிய காட்சியாகும்.

Read More
சிவகங்கா கவிகங்காதீஸ்வரர் கோவில்

சிவகங்கா கவிகங்காதீஸ்வரர் கோவில்

அபிஷேகம் செய்யப்பட்ட நெய் வெண்ணெயாக மாறும் அதிசயம்

பெங்களூருவில் இருந்து 54 கிலோமீட்டர் தொலைவில் தும்கூர் மாவட்டத்தில், சிவகங்கா என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள மலையடிவாரத்தில் ஒரு குகையில் லிங்க வடிவத்தில் குடிகொண்டு அருள்பாலிக்கிறார் சிவபெருமான். இத்தல இறைவனுக்கு 'கவிகங்காதீஸ்வரர்' என்று பெயர்.

5 அடி உயரமும், நல்ல பருமனும் கொண்ட இந்த லிங்கத்தை மிக அருகில் நின்று தரிசனம் செய்யலாம். இந்த ஆலயத்தில் இறைவழிபாடு செய்யவும், அபிஷேகத்திற்காகவும் நெய் விற்பனை செய்யப்படுகிறது. அதை வாங்கி அபிஷேகத்தின் போது அர்ச்சகரிடம் கொடுத்தால், அவர் மந்திரங்கள் சொல்லி நெய்யைக் கொண்டு லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வார்.

மீண்டும் அந்த நெய் கொடுத்தவருக்கே பிரசாதமாக வந்து சேரும். ஆனால் அப்படி பிரசாதமாக வரும் நெய், வெண்ணெயாக மாறி இருக்கும் என்பதுதான் அதிசயம். இந்த வெண்ணெயை வீட்டுக்குக் கொண்டு செல்லலாம். எத்தனை நாள் ஆனாலும் வெண்ணெய் உருகுவதில்லை.இப்படி பிரசாதமாக அளிக்கப்படும் வெண்ணெய் பல நோய்களுக்கு அருமருந்தாக பயன்படுகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சாதாரணமாக வெண்ணெய்தான் நெய்யாக உருகுவது இயற்கை. ஆனால் இக்கோவிலில் அபிஷேகம் செய்யப்படும் நெய், வெண்ணெயாக மாறுவது ஒரு அதிசய நிகழ்வாகும்.

Read More
கீவளூர் கேடிலியப்பர் கோவில்

கீவளூர் கேடிலியப்பர் கோவில்

தேவாதி தேவர்கள் இன்னிசைக்க நடராஜர் வலது காலைத் தூக்கி ஆடும் அபூர்வக் காட்சி

பொதுவாக சிவாலயங்களில் நடராஜர் தன் இடது காலைத் தூக்கி ஆடும் தாண்டவக் கோலத்தைதான் நாம் தரிசிப்போம். ஆனால், நடராஜர் தன் வலது காலைத் காலைத் தூக்கி ஆடும் அபூர்வக் காட்சியை நாம் மதுரை மற்றும் கீவளூரில் மட்டுமே தரிசிக்க முடியும்.

தேவாரத் தலமான கீவளூர் கேடிலியப்பர் கோவில், நாகப்பட்டிணம்-திருவாரூர் சாலையில் 12 கீ.மீ. தொலைவில் உள்ளது.

நடராஜரின் அபூர்வத் தாண்டவக் கோலத்தின் பின்னணி நிகழ்ச்சி

ஒரு சமயம், பரமேசுவரன்-பார்வதி திருமணத்தைக் காண தேவர்கள், முனிவர்கள் முதலானோர் கைலாயத்தில் கூடினர். அதனால் உலகத்தின் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது.இதனை சரி செய்ய அகத்திய முனிவரை சிவபெருமான் தென் திசைக்கு அனுப்பினார். அகத்திய முனிவர் தென் திசை வந்து பஞ்சாட்சர மந்திரத்தை ஒதி வழிபட்டதும் உலகம் சமன் நிலையடைந்தது. தன் பணியை முடித்த அகத்திய முனிவருக்கு இறைவனின் திருமணக் கோலத்தைக் காண ஆசை ஏற்பட்டது. அதற்கு சிவபெருமான் அகத்திய முனிவர் விரும்பும் தலத்தில் தன் திருமணக் கோலத்தைக் காணலாம் என அருளினார். அதனபடி திருமறைக்காடு தலத்தில் அகத்திய முனிவர் சிவ பூஜை செய்து வேண்டியபோது தனது திருமணக் கோலத்தை சிவபெருமான் அவருக்கு காட்டி அருளினார். அதைக் கண்டு மனமகிழ்ந்த அகத்திய முனிவர், அடுத்து இறைவனின் வலது பாத தரிசனம் கிடைக்க வேண்டினார். அதற்கு சிவபெருமான், அகத்திய முனிவரை பத்ரிகாரண்யத் தலத்தில் (கீவளூரின் புராணக் காலப் பெயர்) தன்னை பூஜை செய்து வழிபடும்படியும், அங்கு அவருக்கு தன் விக்ஷேச வலது பாத தரிசனத்தைத் தருவதாகவும் அருளினார்.

அகத்திய முனிவர் கீவளூர் தலத்துக்கு வந்து சிவபெருமானை வழிபடலானார். சிவபெருமான்,ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று அகத்திய முனிவருக்கு கால் மாறி ஆடி, தன் வலது பாத தரிசனத்தைக் காட்டி அருளினார். அப்போது நடராஜப் பெருமானும், சிவகாமி அம்மையும் தாணடவமாட அதற்கு விநாயகரும், முருகப்பெருமானும் பாட்டுப் பாட, பிரம்மா தாளம் போட, சரஸ்வதி வீணை வாசிக்க, விஷ்ணு மத்தளம் வாசிக்க, மகாலஷ்மி கர தாளம் போட, இந்திரன் புல்லாங்குழல் வாசிக்க, வியாக்ரபாத முனிவர், பதஞ்சலி முனிவர் உடனிருக்க அகத்திய முனிவருக்குக் காட்சி தந்தார்.

Read More
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில்

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில்

வைகுண்ட ஏகாதசியன்று திருப்பதி வெங்கடேசுவர பெருமாளுக்கு திருஷ்டி பொட்டாக வைக்கப்படும் திருவண்ணாமலை மகாதீப முதல் மை

திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபம், சிவன் அக்னி பிழம்பாக நின்றதை நினைவுபடுத்தும் வகையில் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், 2668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படும் பெரும் தீபமாகும். இது திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாய் சிவன் காட்சியளித்ததைச் சிறப்பிக்கிறது,

ஐந்து அடி உயரமும், 250 கிலோ எடையும் கொண்ட கொப்பரையில் 3,500 லிட்டர் நெய் ஊற்றப்பட்டு, 1500 மீட்டர் காடா துணியால் ஆன திரியின் மூலம் இந்த மகாதீபம் ஏற்றப்படும். இந்த மகாதீபம் தொடர்ந்து பதினோரு நாட்கள் எரியும். திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றும் உரிமை பெற்றவர்கள் பர்வதராஜ குலத்தினர். இந்தப் பர்வத ராஜ குலத்தினரே மகாதீபம் அணைந்த பின் தீபக் கொப்பரையை மலையிலிருந்து இறக்கி கோவில் வசம் ஒப்படைப்பார்கள். இந்தக் கொப்பரையில் இருந்து எடுக்கப்படும் முதல் மை, வைகுண்ட ஏகாதசி அன்று திருப்பதி வெங்கடேசுவர பெருமாளுக்கும், மலையப்ப சுவாமிக்கும் திருஷ்டி பொட்டாக வைக்கப்படுகின்றது. மார்கழி ஆருத்ரா தரிசனத்தன்று திருவண்ணாமலை நடராஜப் பெருமானுக்கும் சாற்றப்படுகின்றது.

Read More
அச்சிறுபாக்கம் ஆட்சீசுவரர் கோவில்

அச்சிறுபாக்கம் ஆட்சீசுவரர் கோவில்

கழுத்தில் கபால மாலை அணிந்து காட்சி தரும் கால பைரவர்

கால பைரவர் மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கும் தனிச்சிறப்பு

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 79 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் அச்சிறுபாக்கம் ஆட்சீசுவரர் கோவில். இக்கோவிலில் ஆட்சிபுரீஸ்வரர் , உமையாட்சீஸ்வரர் என இரண்டு மூலவர்கள் தனித்தனி கருவறைகளில் அருள்பாலிக்கிறார்கள். இளங்கிளியம்மை, உமையாம்பிகை என இரண்டு அம்மன்கள் தனித்தனி சன்னதிகளில் அருள் பாலிக்கிறார்கள்.

இக்கோவிலில் இருக்கும் கால பைரவர் வித்தியாசமான கோலத்தில் காணப்படுகிறார். மிக சிறிய உருவ தோற்றத்துடன் இருக்கும் இந்த கால பைரவர் கழுத்தில் ஆளுயர கபால மாலை அணிந்து காட்சி தருகிறார். பொதுவாக சிவாலயங்களில் கால பைரவர் தெற்கு அல்லது வடக்கு நோக்கி எழுந்தருளி இருப்பார். ஆனால் இத்தலத்தில் கால பைரவர் மேற்கு நோக்கி எழுந்தருளி இருப்பது ஒரு தனிச்சிறப்பாகும். இத்தகைய நிலையில் இருக்கும் கால பைரவரை, நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

இவரை வழி பட்டால் கொடுத்த கடன் திரும்ப கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். தொழில் தொடங்கும் முன்பும் இவரை வழிபட வேண்டும். எதிரிகள் தொல்லை நீங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அவசியம் இவரை வழிபட்டால் பலன் கிடைக்கும்.

Read More
திருவாய்மூர் வாய்மூர்நாதர் கோவில்

திருவாய்மூர் வாய்மூர்நாதர் கோவில்

நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் அமைந்திருக்கும் அரிய காட்சி

நவக்கிரக தோஷம் நிவர்த்தியாகும் தலம்

திருவாரூர் - வேதாரண்யம் பேருந்து வழித்தடத்தில் திருவாரூரில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருவாய்மூர். இறைவன் திருநாமம் வாய்மூர்நாதர். இறைவியின் திருநாமம் பாலினும் நன்மொழியம்மை. திருவாய்மூர் தலம் தியாகராஜருக்குரிய சப்தவிடங்கத் தலங்களில் மூன்றவதாக கருதப்படும் தலமாகும். விடங்கருக்கு நீலவிடங்கர் என்று பெயர். தியாகராஜர் சந்நிதி மூலவர் சந்நிதிக்கு வலப்புறம் தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. அப்பர் திருஞானசம்பந்தர் ஆகிய இரு நாயன்மார்களுக்கும் ஒரே நேரத்தில் இறைவன் அம்மையப்பனாக காட்சி அளித்த ஒரே திருத்தலம் திருவாய்மூர்.

நவக்கிரகங்களில் ஒருவரான சூரிய பகவான் இத்தலத்து இறைவனைப் பூஜித்து விமோசனம் பெற்றார். பொதுவாக சிவாலயங்களில் நவக்கிரகங்கள் ஒரு பீடத்தின் மேல் தங்களுக்கு உரிய திசையை நோக்கிய வண்ணம் எழுந்தருளி இருப்பார்கள். ஆனால் இத்தலத்தில் நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் உள்ளன. நவக்கிரகங்களின் இத்தகைய அமைப்பை நாம் ஒரு சில இடங்களில் மட்டுமே காண முடியும். இத்தலத்து இறைவன் வாய்மூர்நாதரை வணங்கி வழிபடுவோருக்கு நவக்கிரக தோஷங்கள் விலகும்.

Read More
திருத்தங்கூர் வெள்ளிமலைநாதர் கோவில்

திருத்தங்கூர் வெள்ளிமலைநாதர் கோவில்

உமாதேவிக்கு மிகவும் பிடித்தமான தேவார தலம்

மகாலட்சுமி சிவபூஜை செய்த தலம்

திருவாரூரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருத்தங்கூர். இறைவன் திருநாமம் வெள்ளிமலைநாதர், ரஜதகீரிஸ்வரர். இறைவியின் திருநாமம் பெரியநாயகி.

ஒரு சமயம் உலகம் முழுக்க பிரளயம் எழும்பி கடல்நீர் பூவுலகம் முழுவதையும் மூழ்கடித்துக் கொண்டிருந்தது. இத்தலத்தில் விருப்பமாக எழுந்தருளியிருந்த உமாதேவி சிவபெருமானிடம் தனக்கு மிகவும் விருப்பமானதும், அடியார்கள் நிரம்பியுள்ளதுமான இத்தலத்தை மட்டும் பிரளயம் விழுங்காமல் காத்தருள வேண்டும் என்று விண்ணப்பித்தாள். சிவபெருமானும் உமையின் விருப்பத்திற்கிணங்க இத்தலத்தின் பெருமையை உலகறியும் பொருட்டு காத்தருளினார். அதன்படி உலகம் முழுக்க கடல் நீரால் கொள்ளப்பட்டும் இத்தலத்தில் மட்டும் தெளிந்த நீர் தேங்கி நின்றதால் இத்தலம் திருத்தேங்கூர் என்று பெயர் பெற்றது.

உமாதேவியின் விருப்பப்படி பிரளயத்தில் மூழ்காமல் இருந்த இத்தலத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட மகாலட்சுமி இத்தலத்திற்கு வந்து சிவபூஜை செய்து நிரந்தரமாக இங்கேயே தங்கினாள். திரு என்னும் லட்சுமி வந்து தங்கியதால் இத்தலத்திற்கு திருத்தங்கூர் என்ற பெயர் ஏற்பட்டது.

சிவபெருமானின் சடையை அலங்கரிக்கும் கங்காதேவி, இக்தலத்தில் சிவகங்கை தீர்த்தம் என்ற தீர்த்தத்தை உருவாக்கி, சிவபூஜை செய்து தனது பாவத்தை போக்கிக் கொண்டாள்.

Read More
திருத்தங்கூர் வெள்ளிமலைநாதர் கோவில்

திருத்தங்கூர் வெள்ளிமலைநாதர் கோவில்

நவக்கிரகங்கள் சிவலிங்கம் நிறுவி வழிபட்ட தேவாரத் தலம்

திருவாரூரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருத்தங்கூர். இறைவன் திருநாமம் வெள்ளிமலைநாதர், ரஜதகீரிஸ்வரர். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. தென்னை மரங்கள் வளம் பெற்ற ஊராதலின் 'தெங்கூர்' என்று இத்தலத்திற்கு பெயர் வந்தது. அதற்கேற்ப தென்னை மரமே இத்தலத்தின் தலவிருட்சமாகும்.

ஒரு சமயம் சுக்கிரன் மகாவிஷ்ணுவின் சாபம் பெற்று ஒற்றைக் கண்ணுடன் மறைந்து வாழ்ந்து வந்தார். மகாவிஷ்ணுவின் சாபத்திலிருந்து விடுபட சிவனை வழிபடுவதே சிறந்தது என்று எண்ணி சுக்கிரன் இத்தலம் வந்து சிவபெருமானை ஒரு லிங்கம் நிறுவி வழிபட்டார். வெள்ளிமலைநாதர், அம்பாள் பெரியநாயகியுடன் சுக்கிரனுக்கு காட்சி தந்து வேண்டய வரத்தை அருளினார். சுக்கிரனுக்கு அருள் கிடைத்ததைக் கண்ட மற்ற எட்டு கிரகங்களும் தங்களது பெயர்களில் சிவலிங்கம் நிறுவி வழிபட்டனர். பலவித அளவுகளில் அந்தந்த நவக்கிரகங்களின் பெயர்களாலேயே வழங்கப்படும் ஒன்பது சிவலிங்கங்களையும் தரிசித்து வழிபடுவோர் சகல நவக்கிரக தோஷங்களில் இருந்தும் விடுபடுவர் என்பது ஐதீகம்.

Read More
தக்கோலம் ஜலநாதீசுவரர் கோவில்

தக்கோலம் ஜலநாதீசுவரர் கோவில்

அபூர்வக் கோலத்தில் காட்சி தரும் தக்கோலம் தட்சிணாமூர்த்தி

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் தக்கோலம். இறைவன் திருநாமம் ஜலநாதீசுவரர். இறைவி கிரிராஜ கன்னிகை.

பொதுவாக தட்சிணாமூர்த்தி ஒருகாலை மற்றொரு காலின் மீது மடித்து வைத்திருக்கும் திருக்கோலத்தை பார்த்திருப்போம். ஆனால், இங்கு அமர்ந்த நிலையில்(உத்குடிகாசனம் / உத்கடி ஆசனம்) வேறு எங்கும் காண முடியாத உத்கடி ஆசன திருக்கோலத்தில் தட்சிணாமூர்த்தி வீற்றிருக்கின்றார். கல்லால மரத்தின் கீழ் வலக்காலைத் தொங்கவிட்டு, இடக்காலைக் குத்துக்காலிட்டு அபூர்வமாகக் காட்சி தருகின்றார். மனதைக் கட்டுப்படுத்தும் இந்த ஆசனம், மனம் அலைபாயும் மாணவர்களுக்கு கல்வி மேன்மை தரும். தலையை இடதுபுறம் சாய்த்த வண்ணம் ஒரு கையில் ருத்ராட்ச மாலையும், மற்றொரு கையில் தாமரையும்கொண்டும், காலடியில் முயலகன் இல்லாமலும் அருள்பாலிக்கிறார். வலது பின் கையில் அக்க மாலையுடன், சீடர்களை ஆட்கொண்டருளும், அடக்கியாளும், கண்டிப்போடு ஆசிரியர் போன்ற பாவனையில் இருக்கிறார்.

கல்வியில் நாட்டம் தரும் தட்சிணாமூர்த்தி

இவரை மஞ்சள் நிற மலர்களால் வியாழக்கிழமைகளில் அர்ச்சித்து வழிபடுவது விசேஷமானது. வியாழக்கிழமை தினங்களில் இவருக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து அதை வாங்கி வந்து தினமும் தலையில் தடவிவந்தால் மாணவர்களுக்குக் கல்வியில் நாட்டம் பெருகும், நினைவாற்றல் கூடும் என்பது ஐதீகம். வியாழக்கிழமை தோறும் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறந்த பலனைத் தரும்.

Read More
திருவெண்ணைநல்லூர் கிருபாபுரீசுவரர் கோவில்

திருவெண்ணைநல்லூர் கிருபாபுரீசுவரர் கோவில்

தர்மதேவதை நந்தி வடிவில் எழுந்தருளி இருக்கும் தேவாரத்தலம்

திருமண வரம் அருளும் நந்தி தேவர்

விழுப்புரத்திலிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருவெண்ணைநல்லூர். இறைவன் திருநாமம் கிருபாபுரீசுவரர். இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை. சிவபெருமான் முதியவர் தோற்றத்தில் வந்திருந்து, சுந்தரரை ஆட்கொண்ட தலம் இது.

தர்மதேவதையே நந்தி வடிவில் இக்கோவிலில் எழுந்தருளி இருப்பதாக ஐதீகம். திருமணம் தடைப்பட்டுக் கொண்டிருப்பவர்கள், தாங்களும் மாலை போட்டு, நந்திக்கும் மாலை போட்டு சுற்றினால் திருமண வரம் கண்டிப்பாக ஈடேறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

பூர்வ ஜென்ம பாவம் விலக இக்கோவிலில் யாகம் செய்கிறார்கள். உடல் ஆரோக்கியம், தொழில் ஆகியவற்றுக்காக ஜப்பான் நாட்டிலிருந்தெல்லாம் இங்கு வந்து பக்தர்கள் யாகம் நடத்துகிறார்கள். நவகிரகங்கள் வழிபட்ட ஜோதிலிங்கம் இத்தலத்தில் உள்ளது. இங்குள்ள தலவிருட்சத்தை பூஜித்து பால் அபிசேகம் செய்து ஐந்து தீபம் ஏற்ற நவகோள்களான சூரியன் முதல் கேது வரையிலான திசா புத்திகளினால் ஏற்படும் எல்லா கஷ்டங்களும் நீங்கப்பெறுவார்கள்.

Read More
விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீசுவரர் கோவில்

விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீசுவரர் கோவில்

சிறுவனாக வந்த பிரம்ம தேவனின் பூஜையை ஏற்றுக் கொள்வதற்காக தன் சிவலிங்க பாணத்தை தாழ்த்திய சிவபெருமான்

வேலூர் நகரத்திலிருந்து 12 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் மரகதாம்பிகை.இக்கோவில் 1300 வருடங்கள் பழமையானது. ‘திருவிரிஞ்சை மதிலழகு' என்பது சொல் வழக்கு.

திருவண்ணாமலையில் ஜோதியாய் நின்ற ஈசனின் திருமுடியைக் கண்டதாக பொய் சொன்ன பிரம்மனுக்கு, சிவபெருமான் சாபமிட்டார். அந்த சாபத்தை நீக்கும் பொருட்டு, பிரம்மதேவன் வழிபட்ட தலம் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவில் ஆகும்.

பிரம்மதேவன், சாபவிமோசனம் பெற, இத்தலத்து கோவில் அர்ச்சகர் சிவநாதன்-நயினாநந்தினி தம்பதிக்கு, சிவசர்மன் என்ற பெயருடன் மகனாகப் பிறந்தார். சிவசர்மன் தனது ஐந்தாவது வயதில் தனது தந்தையை இழந்தார். சிவசர்மனுக்கு உரிய பருவம் வந்ததும், உபதேசமும், சிவ தீட்சையும் தம் மகனுக்குச் செய்விக்கும்படி அன்னை நயினாநந்தினி உறவினர்களிடம் கேட்டாள். அவர்கள் அதற்கு மறுத்ததுடன் பூஜா உரிமையையும், சொத்துக்களையும் தமக்கே எழுதித்தரக் கூறினர். வேறு வழியற்ற அவள் சிவபெருமானைச் சரணடைந்தாள்.

அவள் கனவில் தோன்றிய சிவபெருமான், பிரம்ம தீர்த்தக் கரையில் நாளை அதிகாலை உன் மகனை நீராட்டி வை என்று சொன்னார். ஈசன் சொன்னது கார்த்திகை மாத சனிக்கிழமை. மறுநாள் அதிகாலை (கார்த்திகை மாதம் கடைசி ஞாயிறு) சிவபெருமான் சொன்னபடியே தன் மகனுடன் காத்திருந்தாள். வயோதிக அந்தணராக வந்த சிவபெருமான், சிறுவனுக்கு பிரும்மோபதேசமும், சிவ தீட்சையும் செய்வித்தார். கரையேறி வந்தவர் மகா லிங்கமாக மறைந்து விட்டார். ஈசன் கனவில் சொன்னபடியே சிறுவனை யானை மீது திருமஞ்சனக் குடத்துடன் ஊர்வலமாக அழைத்து வந்தனர். மன்னர்கள் ஆலயத்தை நெருங்கியதும், பூட்டியிருந்த ஆலயக் கதவு திறந்துகொண்டது. குடத்துடன் உள்ளே சென்ற சிறுவனோ, மரபு வழுவாமல் முறைப்படி பூஜைகளைச் செய்ய முற்பட்டான். அப்போதுதான், அபிஷேகம் செய்ய தன்னுடைய உயரம் போதாமையால் வருந்தினான். சிறுவனின் வருத்தம் அறிந்த பெருமான். சிவபாணத்தைச் சாய்த்து, அந்த அபிஷேகத்தை ஏற்றுக் கொண்டார். அதே கோலத்தில் இன்றும் முடி சாய்ந்த மகா லிங்கமாக மார்க்கபந்தீசுவரர் காட்சி அளிக்கிறார். சிருஷ்டிகர்த்தாவாக விளங்கும்போது பிரம்மனுக்குக் காட்டாத திருமுடியை, சிறுவனாக வந்து வருந்தியபோது காட்டி, அந்த அபிஷேகத்தையும் ஏற்றருளிய நாள் கார்த்திகை மாதம் கடைசி ஞாயிறு ஆகும்.

கார்த்திகை கடைசி ஞாயிறு தீர்த்தமாடி வழிபட்டால் குழந்தை பேறு அருளும் இறைவன்

கார்த்திகை மாதம் கடைசி ஞாயிறன்று, கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிப்பட்டு, விசேஷ வழிபாடுகள் நடைபெறும். பக்தர்கள் ஆலயத்தின் திருக்குளத்தில் நீராடி கோயிலில் உறங்குகிறார்கள். அவர்கள் கனவில் பெருமான் காட்சி தந்தால் அடுத்த வருடமே கட்டாயம் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இங்குள்ள சிம்மக்குளம் தீர்த்தத்தில் பீஜாட்சர யந்திரம், ஆதி சங்கரரால் ஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் இத்தீர்த்த குளம், கார்த்திகை மாதம் கடைசி சனிக்கிழமை நள்ளிரவு 11-55 மணிக்கு திறக்கப்படும். அதாவது கார்த்திகை கடைசி ஞாயிறு நள்ளிரவு 12 மணிக்கு இந்த சிம்மக்குள தீர்த்தக் குளத்தில் குளித்தால், குழந்தை பேறு இல்லாத பெண்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும் என்பதும், பேய், பிசாசு, பில்லி, சூனியம் போன்ற தீவினைகள் அகலும் என்பதும் நம்பிக்கை.

முதலில் அருகில் உள்ள பாலாற்றில் குளித்துவிட்டு கோவிலின் அருகில் உள்ள பிரம்மனால் உருவாக்கப்பட்ட பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, தொடர்ந்து சிம்ம வாய்முகம் கொண்ட சிம்ம தீர்த்தத்தில் நள்ளிரவு 12 மணிக்கு மூழ்கி எழ வேண்டும். பின்னர் ஆலயத்தில் அமைந்துள்ள மகா மண்டபத்தில் ஈர உடையுடன் மடியில் பூ, பழம், தேங்காய் வைத்துக் கொண்டு கோவில் பிரகாரத்தில் படுத்து உறங்கினால், அவர்களது கனவில் சிவபெருமான் மலர் வடிவில் தோன்றி குழந்தை வரம் அருள்வார் என்பது ஐதீகம்.

இதனால் வெளிமாநிலங்களிலிருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் மற்றும் குழந்தை வரம் வேண்டுபவர்கள் என சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.

பனை காய்கள் ஒரு வருடம் கருப்பாகவும், மறுவருடம் வெள்ளையாகவும் காய்க்கும் அதிசய பனை மரம்

இக்கோவில் தலமரமாக பெண்பனை மரம் உள்ளது. இது ஒரு அதிசய பனைமரமாக உள்ளது. அதாவது இந்த பனைமரத்தில் காய்க்கும் பனை காய்கள் கறுப்பாக இருக்கிறது.மறுவருடம் காய்க்கும் பனை காய்கள் வெள்ளையாக இருக்கிறது.

Read More
ஆவூர் பசுபதீஸ்வரர் கோவில்

ஆவூர் பசுபதீஸ்வரர் கோவில்

பிதுர் தோஷத்தை நிவர்த்தி செய்யும் பஞ்ச பைரவர்கள்

கும்பகோணத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேவாரத் தலம் ஆவூர். இங்கு பசுபதீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இறைவன் திருநாமம் பசுபதீஸ்வரர். இத்தலத்தில் பங்கஜவல்லி , மங்களாம்பிகை என்ற திருநாமம் தாங்கி இரண்டு அம்பிகைகள் அருள் புரிகிறார்கள்.

இந்தக் கோவிலின் முக்கிய சிறப்பம்சமாக பஞ்ச பைரவ மூர்த்திகள் உள்ளனர். ஐந்து பைரவர்களும் ஒரே பீடத்தில் வீற்றிருக்கிறார்கள். இக்கோவிலில் மங்களாம்பிகை அம்மனை பிரதிஷ்டை செய்யும்போது, ஹோமத்திலிருந்து பஞ்ச பைரவர்கள் வெளிப்பட்டனர். அவர்களையும் பிரதிஷ்டை செய்து ஆராதனைகள் செய்தால் பித்ருசாபம் நீங்கப் பெறும் என அசரீரி ஒலித்துள்ளது. அதன்படி பஞ்ச பைரவர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டனர். பஞ்ச பைரவர்களை வழிபட்டதன் மூலம் தசரத மன்னனின் பித்ரு சாபம் விலகியது. எனவே இத்தலம் பித்ரு சாப நிவர்த்தித் தலமாக விளங்குகின்றது.

பிதுர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த பஞ்ச பைரவர்களை வழிபாடு செய்து வந்தால் உடனடியாக பலன் கிடைக்கும் .ஒரு சிலர் நிறைய சம்பாதிப்பார்கள். இருந்தாலும் கடன் தீராது. இன்னும் சிலருக்கு நல்ல திறமைகள் இருக்கும். ஆனால் சரியான வேலையும் வாய்ப்புகளும் அமையாமல் வருமானம் இன்றி இருப்பார்கள். பல பேர் அனைத்து செல்வங்களையும் பெற்று இருப்பார்கள். ஆனால் வாழ்வில் நிம்மதி இருக்காது. அப்படிப்பட்டவர்களின் அந்த நிலைக்கு பிதுர் தோஷம் தான் காரணம். அவர்கள் அனைவரும் இத்தல பஞ்ச பைரவர்களை வழிபட்டு பிதுர் தோஷத்தை போக்கி வாழ்வில் வளம் பெறலாம். இவர்களை தேய்பிறை அஷ்டமி தினத்தில் வழிபாடு செய்தால் அனைத்து துன்பங்களும் நீங்கும். குறைவான வருமானம் கடன் சிக்கல்கள், வேலைவாய்ப்பின்மை, திருமண சிக்கல்கள் போன்றவைகள் பிதுர் தோஷ காரணத்தினால் கூட ஏற்படலாம். அதனை இந்த தலத்தில் உள்ள பஞ்ச பைரவர்களை வழிபாடு செய்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

Read More
திருக்கண்டியூர் பிரம்மசிரகண்டீசுவரர் கோவில்

திருக்கண்டியூர் பிரம்மசிரகண்டீசுவரர் கோவில்

பிரம்மாவும் அவருடைய மனைவி சரஸ்வதியும் தம்பதி சமேதராக எழுந்தருளி இருக்கும் அபூர்வ காட்சி

திருவையாற்றில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலை வழியில் சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் திருக்கண்டியூர். திருவையாறு மற்றும் அதைச் சுற்றியுள்ள சப்த ஸ்தான கோவில்களில் இத்தலமும் ஒன்று. சிவபெருமானின் அட்டவீரட்டானத் தலங்களில் முதலாவது தலம் இது. இறைவன் திருநாமம் பிரம்மசிரகண்டீசுவரர். இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை. இங்கு பிரம்மதேவரின் அகந்தையை அகற்ற சிவபெருமான் அவரின் தலையை அகற்றி தண்டித்ததால், ‘சீரகண்டீஸ்வரர்’ என்ற திருநாமம் பெற்றார்.

இக்கோவிலில் பிரம்மதேவர் தவமிருந்து சிவனிடம் சாப விமோசனம் பெற்றார். இங்கு சரஸ்வதியுடன் பிரம்மாவிற்கு சன்னதி உள்ளது.மற்ற கோவில்களில் பிரம்மாவிற்கு தனி சந்நிதி அல்லது கோஷ்டத்தில் வீற்றிருக்கும் நிலையில், இங்கு பிரம்மாவும் அவருடைய மனைவி சரஸ்வதியும் ஒன்றாக தம்பதி சமேதராகக் காட்சியளிப்பது, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத காட்சியாகும். பிரம்மா சரஸ்வதியுடன் தம்பதி சமேதராக, புன்னகை தவழும் கோலத்தில் காட்சியளிக்கிறார், அவரது கரங்களில் பூ மற்றும் ஜெபமாலைகள் இருக்கின்றன.

இந்த தலத்தில் தரிசனம் செய்தால் பிரம்மா தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. தலையெழுத்து சரியில்லை என வருந்துவோர் பிரம்மாவிற்கும், படிப்பில் சிறப்பிடம் பெற விரும்புவோர் சரஸ்வதிக்கும் வெண்ணிற ஆடை அணிவித்து, தாமரை மலர் வைத்து வழிபடுகிறார்கள். பிரம்மா, நவக்கிரகங்களில் கேதுவிற்கு அதிபதி, குரு பகவானுக்கு ப்ரீத்தி தேவதையாகத் திகழ்கிறார். குரு பலன் இருந்தால்தான் திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்கும். கேது பலன் நன்றாக இருந்தால் ஞானம் உண்டாகும். எனவே, இந்த பலன்கள் கிடைக்க பிரம்மா சன்னதியில் நெய் தீபமேற்றி வேண்டிக் கொள்கிறார்கள்.

Read More
திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோவில்

திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோவில்

'ப' என்ற தமிழ் எழுத்து வடிவ அமைப்பில் எழுந்தருளி இருக்கும் நவக்கிரகங்களின் அரிய தோற்றம்

திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில், 22 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருக்கொள்ளிக்காடு. இறைவன் திருநாமம் அக்னீஸ்வரர். இறைவியின் திருநாமம் பஞ்சின் மெல்லடியம்மை, மிருதுபாத நாயகி.

இத்தலத்தில் சனி பகவான் அனுக்கிரக மூர்த்தியாக இரண்டாவது அவதாரம் எடுத்து, பொங்கு சனீஸ்வரராக அருள்பாலிக்கிறார். அதனால் இங்கு சனி பகவான் தன்னை வழிபடுபவர்களுக்கு வெறும் நற்பலன்களை மட்டுமே வாரி வழங்குகின்றார். அவரைப் போலவே மற்ற நவக்கிரகங்களும், இத்தலத்தில் தங்களுடைய காரகப் பலன்களை அளிக்காமல் சிவ தியானத்தில் இருக்கின்றன. இந்த காரணத்தினால் இத்தலத்தில் நவக்கிரகங்கள் மாறுபட்ட அமைப்பில் எழுந்தருளி இருக்கிறார்கள். இங்கு அவர்கள் 'ப' என்ற தமிழ் எழுத்து வடிவ அமைப்பில் காட்சி அளிக்கிறார்கள். இத்தகைய வடிவமைப்பில் நவக்கிரகங்கள் எழுந்தருளி இருப்பதை நாம் வேறு எந்த கோவிலிலும் தரிசிக்க முடியாது.

நவக்கிரகங்களின் இந்த 'ப' எழுத்து வடிவமைப்பில், சூரியன், சந்திரன், அங்காரகன் ஆகிய மூவரும் பின்புறம் இருக்கிறார்கள். சந்திர பகவானுக்கு வலது புறம் குருபகவான், சனி பகவான், புதன் பகவான் ஆகிய மூவரும் இருக்கிறார்கள். அங்காரகனுக்கு இடது புறம் சுக்கிர பகவான், ராகு பகவான், கேது பகவான் ஆகியோர் இருக்கின்றார்கள்.

Read More