விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீசுவரர் கோவில்
சிறுவனாக வந்த பிரம்ம தேவனின் பூஜையை ஏற்றுக் கொள்வதற்காக தன் சிவலிங்க பாணத்தை தாழ்த்திய சிவபெருமான்
வேலூர் நகரத்திலிருந்து 12 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் மரகதாம்பிகை.இக்கோவில் 1300 வருடங்கள் பழமையானது. ‘திருவிரிஞ்சை மதிலழகு' என்பது சொல் வழக்கு.
திருவண்ணாமலையில் ஜோதியாய் நின்ற ஈசனின் திருமுடியைக் கண்டதாக பொய் சொன்ன பிரம்மனுக்கு, சிவபெருமான் சாபமிட்டார். அந்த சாபத்தை நீக்கும் பொருட்டு, பிரம்மதேவன் வழிபட்ட தலம் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவில் ஆகும்.
பிரம்மதேவன், சாபவிமோசனம் பெற, இத்தலத்து கோவில் அர்ச்சகர் சிவநாதன்-நயினாநந்தினி தம்பதிக்கு, சிவசர்மன் என்ற பெயருடன் மகனாகப் பிறந்தார். சிவசர்மன் தனது ஐந்தாவது வயதில் தனது தந்தையை இழந்தார். சிவசர்மனுக்கு உரிய பருவம் வந்ததும், உபதேசமும், சிவ தீட்சையும் தம் மகனுக்குச் செய்விக்கும்படி அன்னை நயினாநந்தினி உறவினர்களிடம் கேட்டாள். அவர்கள் அதற்கு மறுத்ததுடன் பூஜா உரிமையையும், சொத்துக்களையும் தமக்கே எழுதித்தரக் கூறினர். வேறு வழியற்ற அவள் சிவபெருமானைச் சரணடைந்தாள்.
அவள் கனவில் தோன்றிய சிவபெருமான், பிரம்ம தீர்த்தக் கரையில் நாளை அதிகாலை உன் மகனை நீராட்டி வை என்று சொன்னார். ஈசன் சொன்னது கார்த்திகை மாத சனிக்கிழமை. மறுநாள் அதிகாலை (கார்த்திகை மாதம் கடைசி ஞாயிறு) சிவபெருமான் சொன்னபடியே தன் மகனுடன் காத்திருந்தாள். வயோதிக அந்தணராக வந்த சிவபெருமான், சிறுவனுக்கு பிரும்மோபதேசமும், சிவ தீட்சையும் செய்வித்தார். கரையேறி வந்தவர் மகா லிங்கமாக மறைந்து விட்டார். ஈசன் கனவில் சொன்னபடியே சிறுவனை யானை மீது திருமஞ்சனக் குடத்துடன் ஊர்வலமாக அழைத்து வந்தனர். மன்னர்கள் ஆலயத்தை நெருங்கியதும், பூட்டியிருந்த ஆலயக் கதவு திறந்துகொண்டது. குடத்துடன் உள்ளே சென்ற சிறுவனோ, மரபு வழுவாமல் முறைப்படி பூஜைகளைச் செய்ய முற்பட்டான். அப்போதுதான், அபிஷேகம் செய்ய தன்னுடைய உயரம் போதாமையால் வருந்தினான். சிறுவனின் வருத்தம் அறிந்த பெருமான். சிவபாணத்தைச் சாய்த்து, அந்த அபிஷேகத்தை ஏற்றுக் கொண்டார். அதே கோலத்தில் இன்றும் முடி சாய்ந்த மகா லிங்கமாக மார்க்கபந்தீசுவரர் காட்சி அளிக்கிறார். சிருஷ்டிகர்த்தாவாக விளங்கும்போது பிரம்மனுக்குக் காட்டாத திருமுடியை, சிறுவனாக வந்து வருந்தியபோது காட்டி, அந்த அபிஷேகத்தையும் ஏற்றருளிய நாள் கார்த்திகை மாதம் கடைசி ஞாயிறு ஆகும்.
கார்த்திகை கடைசி ஞாயிறு தீர்த்தமாடி வழிபட்டால் குழந்தை பேறு அருளும் இறைவன்
கார்த்திகை மாதம் கடைசி ஞாயிறன்று, கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிப்பட்டு, விசேஷ வழிபாடுகள் நடைபெறும். பக்தர்கள் ஆலயத்தின் திருக்குளத்தில் நீராடி கோயிலில் உறங்குகிறார்கள். அவர்கள் கனவில் பெருமான் காட்சி தந்தால் அடுத்த வருடமே கட்டாயம் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இங்குள்ள சிம்மக்குளம் தீர்த்தத்தில் பீஜாட்சர யந்திரம், ஆதி சங்கரரால் ஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் இத்தீர்த்த குளம், கார்த்திகை மாதம் கடைசி சனிக்கிழமை நள்ளிரவு 11-55 மணிக்கு திறக்கப்படும். அதாவது கார்த்திகை கடைசி ஞாயிறு நள்ளிரவு 12 மணிக்கு இந்த சிம்மக்குள தீர்த்தக் குளத்தில் குளித்தால், குழந்தை பேறு இல்லாத பெண்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும் என்பதும், பேய், பிசாசு, பில்லி, சூனியம் போன்ற தீவினைகள் அகலும் என்பதும் நம்பிக்கை.
முதலில் அருகில் உள்ள பாலாற்றில் குளித்துவிட்டு கோவிலின் அருகில் உள்ள பிரம்மனால் உருவாக்கப்பட்ட பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, தொடர்ந்து சிம்ம வாய்முகம் கொண்ட சிம்ம தீர்த்தத்தில் நள்ளிரவு 12 மணிக்கு மூழ்கி எழ வேண்டும். பின்னர் ஆலயத்தில் அமைந்துள்ள மகா மண்டபத்தில் ஈர உடையுடன் மடியில் பூ, பழம், தேங்காய் வைத்துக் கொண்டு கோவில் பிரகாரத்தில் படுத்து உறங்கினால், அவர்களது கனவில் சிவபெருமான் மலர் வடிவில் தோன்றி குழந்தை வரம் அருள்வார் என்பது ஐதீகம்.
இதனால் வெளிமாநிலங்களிலிருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் மற்றும் குழந்தை வரம் வேண்டுபவர்கள் என சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.
பனை காய்கள் ஒரு வருடம் கருப்பாகவும், மறுவருடம் வெள்ளையாகவும் காய்க்கும் அதிசய பனை மரம்
இக்கோவில் தலமரமாக பெண்பனை மரம் உள்ளது. இது ஒரு அதிசய பனைமரமாக உள்ளது. அதாவது இந்த பனைமரத்தில் காய்க்கும் பனை காய்கள் கறுப்பாக இருக்கிறது. மறுவருடம் காய்க்கும் பனை காய்கள் வெள்ளையாக இருக்கிறது.
சிம்மக்குளம்