திருமறைக்காடர் கோவில்
சரஸ்வதி தவக்கோலத்தில் இருக்கும் அபூர்வ காட்சி
நாகப்பட்டினத்தில் இருந்து தெற்கே சுமார் 50 கி.மீ. தொலைவில் தேவாரத் தலமான வேதாரண்யம் உள்ளது. இறைவர் திருப்பெயர் திருமறைக்காடர்.
இத்தலத்து அம்பாளின் பெயர் வேதநாயகி எனவும் தமிழில் யாழைப் பழித்த மொழியாள் என்றும் வடமொழியில் வீணாவாத விதூஷணி எனவும் வழங்கப்படுகிறது.அம்பிகையின் குரல் சரசுவதியின் வீணை நாதத்தை விட இனிமையாக இருந்ததால் அம்பிகைக்கு இங்கே இப்பெயர்.அதனால் பொதுவாக கையில் வீணையுடன் காட்சியளிக்கும் சரஸ்வதி இத்தலத்தில் வீணையில்லாமல் தவக்கோலத்தில் சுவடியைக் கைக் கொண்டு இருப்பதைக் காணலாம். சரஸ்வதியின் இந்த கோலத்தை நாம் வேறு எந்தத் தலத்திலும் காண முடியாது.
வடகுரங்காடுதுறை தயாநிதீசுவரர் கோவில்
சிவன் கோவிலில் விஷ்ணு துர்க்கை
அபிஷேகத்தின் போது நீல நிறமாக மாறும் பால்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் வடகுரங்காடுதுறை. மக்கள் வழக்கில் ஆடுதுறை பெருமாள் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இறைவன் திருநாமம் தயாநிதீசுவரர். இறைவி அழகுசடைமுடி அம்மை.
பொதுவாக சிவாலயத்தில் இருக்கும் துர்க்கையை சிவதுர்க்கை என்றே அழைப்பார்கள். ஆனால், இத்தலத்தில் எழுந்தருளியுள்ள துர்க்கை, கையில் சங்கு- சக்கரத்துடன் பெருமாள் அம்சமாகத் திகழ்வதால், ஸ்ரீவிஷ்ணுதுர்க்கை என்று போற்றப்படுகிறாள். எட்டுத் திருக்கரங்களுடன் அற்புதமாகக் காட்சி தரும் ஸ்ரீவிஷ்ணு துர்க்கைக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. இந்தத் துர்க்கைக்குப் பாலபிஷேகம் செய்யும்போது, அந்தப் பாலானது நீலநிறத்தில் காட்சியளிக்கும் அதிசயத்தை இன்றைக்கும் தரிசிக்கலாம்.
நவராத்திரி காலத்தில் இந்த அதிசய துர்க்கையை வழிபடுவதன் மூலம் மனதில் தைரியம் அதிகரிக்கும்.
திருக்கழுக்குன்றம் பக்தவத்சலேஸ்வரர் கோவில்
அம்பாளுக்கு வருடத்தில் மூன்று நாட்கள் மட்டுமே அபிஷேகம் செய்யப்படும் தேவாரத் தலம்
பக்தவத்சலேஸ்வரர் செங்கல்பட்டு- மாமல்லபுரம் சாலையில் சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருக்கழுக்குன்றம். மலைமேல் உள்ள கோவிலில் வேதகிரீஸ்வரர் அருள்பாலிக்கிறார். ஊரில் அமைந்துள்ள கோவிலில் எழுந்தருளியுள்ள ஈசனின் திருநாமம் பக்தவத்சலேஸ்வரர். இறைவி திரிபுரசுந்தரி.
அம்பாள் திரிபுரசுந்தரி சுயம்பு திருமேனியுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அம்பாள் மார்பில் ஸ்ரீ சக்கரப் பதக்கம் சார்த்தப்பட்டுள்ளது. ஆண்டில் ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், நவராத்தியில் வரும் நவமி ஆகிய மூன்று நாட்களில் மட்டுமே அம்பாளுக்கு முழு அபிஷேகம் செய்யப்படுகின்றது. நாடொறும் பாத பூஜை மட்டுமே நடக்கின்றது. மற்ற நாட்களில் தினசரி நடைபெறும் அபிஷேகம், அம்பாளின் பாதத்திற்கு மட்டுமே செய்யப்படுகிறது
கோயம்புத்தூர் தண்டுமாரியம்மன் கோவில்
திப்பு சுல்தான் படை வீரர்களின் அம்மை நோய் தீர்த்த அம்மன்
கோயம்புத்தூர் உப்பிலிபாளையத்தில் அமைந்துள்ளது தண்டு மாரியம்மன் கோவில். இந்த அம்மன் திப்பு சுல்தான்படை வீரர்களின் அம்மை நோயை குணப்படுத்தியதாக வரலாற்று நிகழ்ச்சி ஒன்று உண்டு.
ஒரு சமயம், திப்பு சுல்தான் தனது படைவீரர்களை கோவை கோட்டை மதில்களுக்கிடையில் ஓர் கூடாரத்தில் தங்க வைத்திருந்தார். அங்கு தங்கியிருந்த வீரர்களில் ஒருவன் அம்மனை தினமும் வழிபடுபவன். அப்போது,ஒருநாள் அவனது கனவில் தோன்றிய மாரியம்மன், தான் வீரர்கள் குடியிருக்கும் பகுதியில், வேப்பமரங்களுக்கும் காட்டுக் கொடிகளுக்கும் இடையே இருக்கும் நீர்ச்சுனைக்கு அருகில் நீண்ட காலமாக வசித்து வருவதை உணர்த்தி, தன்னை அங்கேயே வழிபடும்படி கட்டளையிட்டாள்.
கனவில் மாரியம்மனை தரிசித்த அவ்வீரன், மறுநாள் காலையில், அம்மன் உணர்த்திய இடத்திற்கு சென்று வேப்ப மரங்களின் இடையே தேடினான். அப்போது அங்கே கனவில் கண்ட அம்மன் வீற்றிருந்தாள். அங்கேயே அம்மனை வணங்கிய அவன் சக படைவீரர்களுக்கும், கனவில் தோன்றி அருள்புரிந்த அம்மன் வீற்றிருந்த இடத்தை காண்பித்தான். பின், படை வீரர்கள் அனைவரும் ஒன்று கூடி இவ்விடத்தில் ஆதியில் சிறிய மேடை போல அமைத்து வழிபட்டு, , காலப் போக்கில் பெரிய கோயிலாக எழுப்பினர். 'தண்டு' என்றால் 'படை வீரர்கள் தங்கும் கூடாரம்' என்று பொருள். படைவீரர்கள் தங்கும் இடத்தில் கிடைத்த அம்மன் என்பதால் இந்த அம்மன் 'தண்டுமாரியம்மன்' என்று அழைக்கப்பட்டாள். தண்டு என்பதற்கு 'தங்கு' என்பது பொருள். தங்கும் (தண்டு) இடமாக இருந்ததால் அம்மனுக்கு 'தண்டு மாரியம்மன்' என பெயர் உண்டானது. ஆங்கிலத்தில் 'டென்ட்' என்பது கூடாரத்தை குறிப்பதால் 'டென்ட்' மாரியம்மன் என்றும் பெயருண்டு.
படை வீரர்கள் தண்டு மாரியம்மனை வணங்கி வந்த நேரத்தில், ஒரு சமயம், பெரும்பாலான வீரர்களுக்கு அம்மை நோய் தோன்றியது. அவர்கள் அம்மை விலக அம்மனை வணங்கி, தண்டுக்கீரை சாறால் அபிஷேகம் செய்து வழிபட்டு, அத்தீர்த்தத்தைப் பருகிட, அனைவருக்கும் ஒரே நேரத்தில் அம்மை நோய் குணமான அதிசயம் நிகழ்ந்தது. இந்த நிகழ்ச்சியும் அம்மனுக்கு 'தண்டு மாரியம்மன்' என்ற பெயர் ஏற்பட காரணமாயிற்று.
தண்டு மாரியம்மன்: கருவறையில் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். உற்சவரின் பெயர், அகிலாண்ட நாயகி. தினமும் மாலையில் தங்கத்தேர் பவனி நடக்கிறது. ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடக்கும். திருமணம் நிறைவேற கன்னிப்பெண்கள் ஆடி வெள்ளியில் அடிப்பிரதட்சணம் செய்கின்றனர். சித்திரை மாதத்தில் அக்னி (பூ) சட்டி ஊர்வலம் நடக்கும்.
அம்மை நோய் குணமாக, தொழில் விருத்தியடைய, குடும்பம் சிறக்க, தீராத பிணிகள் தீர்ந்திட இந்த அம்மனை பிரார்த்தித்துக் கொள்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் அம்மனுக்கு பால் அபிசேகம் செய்து பால்குடம், அக்னிசட்டி எடுத்தும் அங்க பிரதட்சணம் செய்தும் நேர்த்திக்கடன் செய்கின்றனர்.
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில்
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் உருவான கதை
தஞ்சாவூரிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில். பல நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு மன்னர் சமயபுரம் மாரியம்மனை தரிசிக்க சென்று கொண்டிருந்தார். அவர் கனவில் ஒரு அம்மன் தோன்றி நான் இந்த புன்னை மரக் காட்டில் இருக்கிறேன். நீ வந்து என்னை பார் எனக் கூறி மறைந்துவிட்டார். அவர் அடுத்த நாள் அந்த இடத்தை தேடிப் பார்த்தபோது அங்கு ஒரு பெரிய புற்று ஒன்று இருந்தது. அந்தப் புற்று மண் அம்மன் போன்ற அமைப்பில் இருந்தது. உடனே அவர் அந்த புன்னை மர காட்டை சீர் செய்து, அதில் ஒரு கோவிலைக் கட்டி அந்த அம்மனை வழிபட ஆரம்பித்தார் அவள்தான புன்னைநல்லூர் மாரியம்மன். அந்த அம்மன் புற்று மண்ணால் செய்யப்பட்ட அம்மன் என்பதால் இன்றுவரை அபிஷேகம் கிடையாது. தைல காப்பு மட்டும்தான்.
ஆங்கிலேய துரையிடம் மாரியம்மன் நடத்திய திருவிளையாடல்
புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு எப்போதும் வியர்த்துக் கொண்டே இருக்கும். அதை குருக்கள் துடைத்து விடுவார். ஒரு முறை ஒரு ஆங்கிலேயே துரை இதைப் பற்றிக் கேள்விப்பட்டு அதை சோதிப்பதற்காக கோவிலுக்கு வந்தார். கோவில் குருக்களிடம் அம்மன் முகத்தை துணியால் துடைக்கச் சொன்னார். அதேபோல் குருக்கள் ஒரு துணியை வைத்து துடைத்ததும், ஆங்கிலேயர் துரைக்கு கண்ணில் அம்மை போட்டு விட்டது. அவர் மிகவும் அவதிப்பட ஆரம்பித்து விட்டார்.
அப்போது அங்கிருந்தவர்கள் அவரை அம்மனுக்கு கண்மலர் சாத்துவதாக வேண்டிக் கொண்டால், கண்பார்வை திரும்பிவிடும் என்று சொனனார்கள்.
அதேபோல் அவர் வேண்டிக்கொண்டதும் அவருக்கு கண் பார்வை சரியானது. அவர் கண்மலர் செலுத்திவிட்டு அதன்பின அவர் வீடு இருந்த வல்லம் என்ற ஊரிலிருந்து மாரியம்மன் கோவில் வரை, தான் அம்மனை அடிக்கடி காண வேண்டும் என்தற்காக சாலை அமைத்தார். அதுமட்டும் இல்லாது, அவர் கோவில் பக்கம் செல்லும் போதெல்லாம் அம்மனை கும்பிட வேண்டும் என்பதற்காக, சுற்றுச்சுவரில் ஒரு சிறு துவாரம் வைத்தார். இப்பொழுதும் அந்த சதுர வடிவ துவாரம் அந்த சுற்றுச்சுவரில் இருக்கிறது.
மகா மருத்துவ குணம் கொண்ட மாரியம்மன்
இக்கோயிலுக்கு செல்லும் வழியில் மண்ணினால் சுட்ட மனித உருவங்கள், வெள்ளியினால் செய்த மனித உருவங்கள் விற்பார்கள். நமக்கு எந்த பகுதியில் நோய் உள்ளதோ அந்தப் பகுதியை வாங்கி உண்டியலில் செலுத்தினால் நோய் நீங்கிவிடும். உப்பும், மிளகும் கொடி மரத்தில் செலுத்தினால் நமது உடம்பில் உள்ள நோய்கள், மருக்கள் போன்றவை போய்விடும். ஒரு வெல்ல கட்டி வாங்கி அதை அந்தக் குளத்தில் வீசி விட்டால், வெல்லம் கரைவது போல் நமது கவலைகளும் நோய்களும் கரைந்து விடும். தீராத நோய்களையும் மாரியம்மன் குணப்படுத்துவாள் என்பது இந்த பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில்
திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே திறந்திருக்கும் கோவில்
பெரம்பலூர் மாவட்டத்தில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூருக்கு 8 கி.மீ. முன்னதாகவே உள்ளது சிறுவாச்சூர். இங்கு அமைந்திருக்குந் மதுரகாளியம்மன் கோவில் வாரத்தில் இரு நாட்கள், அதாவது திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே திறந்திருக்கும்
வேதங்களில் பழைமையான வேதம் ரிக் வேதம். ரிக் வேதத்தில், 'அதிதி' என்கிற பெண் தெய்வம் பற்றிய குறிப்பு வருகிறது. அதிதியை தேவர்களின் தாய் என்கின்றனர். அன்னை காளி அதிதியாய், ஒரு கிராமத்துக்கு வந்து, அந்த ஊருக்கு அனுகிரகம் செய்து அங்கேயே கோவில் கொண்டு அருள்புரிகிற அற்புதத் தலம்தான் சிறுவாச்சூர்.
மதுரகாளியம்மனின் அருட்கோலம்
இங்குக் கோயில் கொண்டிருக்கும் மதுரகாளியம்மன், நான்கு அடி உயரத்தில் வடக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். உடுக்கை, பாசம், சூலம், அட்சய பாத்திரம் ஆகியனவற்றைத் தன் திருக்கரங்களில் ஏந்தியிருக்கிறாள். இடது திருவடியை மடித்து அமர்ந்து வலது திருவடியை சிம்மத்தின் மீது ஊன்றியிருக்கிறாள். ஆதிசங்கரர் இந்தப் பகுதி வழியாக வந்தபோது தாகம் ஏற்பட்டதாகவும் அப்போது மதுரகாளியம்மன் இந்தத் திருவடிவத்தோடு தோற்றமளித்து அங்கே ஒரு தீர்த்தத்தை ஏற்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த ஆலயத்துக்குள் விநாயகரைத் தவிரவேறு தெய்வங்கள் இல்லை.
மாவிளக்கு நைவேத்தியம்
இங்குப் பிரதான நைவேத்தியம் மாவிளக்கு. மாவிளக்கு ஏற்றி வழிபட வேண்டிய எண்ணம் ஈடேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆனால் மற்ற ஆலயங்களைப் போல மாவாகச் செய்து கொண்டு சென்று மாவிளக்கு இட இங்கு அனுமதியில்லை. அரிசியாகக் கொண்டு சென்று அங்கே இருக்கும் உரலில் இட்டு இடித்து அங்கேயே மாவைத் தயார் செய்து மாவிளக்கிடவேண்டும். பூஜையின் போது நடைபெறும் முதல் தீபாராதனை, செல்லியம்மன் உறையும் மலை நோக்கியே காட்டப்படும். பின்பே மதுரகாளியம்மனுக்குக் காட்டப்படும்.
மாவிளக்கு பிரார்த்தனை பலன்கள்
இங்கு மாவிளக்கு செலுத்தி அம்மனை வேண்டிக்கொள்ள தீராத நோய்கள் எல்லாம் தீரும் என்கின்றனர் பக்தர்கள். திருமணத் தடை, குழந்தையின்மை உள்ளவர்கள் அம்மனை தரிசித்து வழிபட விரைவில் குறைகள் நீங்கப் பெறுவர். இங்கு அங்கப் பிரதட்சிணம் செய்து வேண்டிக்கொள்ள, காணாமல் போன பொருள்கள் திரும்பக் கிடைக்கும் என்றும் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டங்கள் மாறி லாபம் ஏற்படும் என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள்.
சிவசைலம் சிவசைலநாதர் கோவில்
வீதி உலாவிற்கு தங்க கைக்கடிகாரம் அணிந்து வரும் அம்பிகை
திருநெல்வேலி மாநகரிலிருந்து மேற்கே சுமார் 57 கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ள தேவார வைப்புத் தலம் சிவசைலம். இத்தலம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கடனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இறைவன் திருநாமம் சிவசைலநாதர். இறைவியின் திருநாமம் பரமகல்யாணி.
இத்தலத்தில் அம்பிகைக்கு தனி சன்னதி கட்ட ஏற்பாடாகி கொண்டிருந்த வேளையில், சிவசைலத்திற்கு அருகே உள்ள சிநேகபுரி (தற்போதைய ஆம்பூர்) என்னும் ஊரில் வாழ்ந்த அந்தணர் ஒருவரின் கனவில் தோன்றி அந்த ஊரில் உள்ள கிணறு ஒன்றில் அம்மையின் திருமேனி ஒன்று நான்கு கரங்களுடன் ஜலவாசமாக இருந்து வருவதாகவும், அந்த அம்பாள் திருமேனியை எடுத்து சிவசைலத்தில் கட்டப்படும் கோவிலுக்குள் பரமகல்யாணி என்ற பெயர் சூட்டி பிரதிஷ்டிக்கும் படி கூறியருள்கிறார் சிவபெருமான். அந்த அந்தணரும் தான் கண்ட கனவை ஊர் மக்களுக்கும், மன்னனுக்கும் தெரியப்படுத்தி, அந்த குறிப்பிட்ட கிணற்றில் தேடிட சிவபெருமான் கூறியது போலவே ஒரு நான்கு கரங்கள் கொண்ட அழகிய அம்மையின் திருவுருவ சிலை கிடைக்க பெற்றது. அந்த அம்மையின் திருவுருவை மங்கள வாத்தியங்கள் முழங்க அங்கிருந்து எடுத்து வந்து சிவசைலம் கோவிலில் பிரதிஷ்டை செய்ததாகவும் வரலாறு கூறுகிறது.
இங்குள்ள அம்பிகை நான்கு கரங்கள் கொண்டு அழகே உருவாக புன்முறுவல் பூத்த முகத்தவளாய் அளவில் சற்றே பெரிய உருவில் காட்சித் தருகிறாள். பாண்டிய நாட்டில் பிரசித்தி பெற்ற அநேக கோவிலின் அம்பிகைகள் இருகரம் கொண்டவர்களாக காட்சியளிக்க, இங்கு அம்பிகை பரமகல்யாணி, நான்கு கரங்கள் கொண்டு காட்சியளிப்பது சிறப்பம்சம் ஆகும். இங்குள்ள உற்சவர் பரமகல்யாணி அம்பிகையும் நான்கு கரங்கள் கொண்டு காட்சியளிக்கிறாள்.
உற்சவர் பரமகல்யாணி அம்பிகைக்கு தங்கக் கை கடிகாரம் ஆபரணமாக அணிவிக்கப்படுவது சிறப்பம்சம். விழாக் காலங்களில் இடது கரத்தில் தங்க கைக்கடிகாரத்தை ஆபரணமாக சார்த்துவார்கள்.இந்த அலங்கார நடைமுறை வேறு எந்த தவத்து அம்பிகைக்கும் செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில்
திருவான்மியூர் திரிபுரசுந்தரி அம்மன்
நாயன்மார்களால் பாடப்பட்ட தொண்டை நாட்டுப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று சென்னையில் உள்ள திருவான்மியூர். இறைவன் திருநாமம் மருந்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி அம்மன். இந்த அம்மனுக்கு சொக்கநாயகி என்ற என்ற பெயரும் உண்டு. இத்தலத்தில் அன்னை திரிபுரசுந்தரியாக மூன்று உலகங்களிலும் அழகும், அருளும் நிறைந்தவளாகக் காட்சி தருகிறாள்.
பத்தாம் நூற்றாண்டின் சோழர் கால கல்வெட்டுக்கள் அம்மன் கோவில் சுவற்றில் உள்ளன. இறைவன் திருவான்மியூருடைய மகாதேவனென்றும், இவ்வூரை ஜயங்கொண்ட சோழ மண்டலத்துப் புலியூர் என்றும் குறித்துள்ளனர்.
கோவில் கிழக்கு வெளிப் பிரகாரத்தில் வலது புறம், திரிபுரசுந்தரி அம்மன் தனி சந்நிதியில் தெற்கு நோக்கி தாமரைப் பீடத்தின் மேலே, நான்கு திருக்கரங்களோடு பூரண சந்திர பிரகாசத்தோடு காட்சி தருகிறாள்.அவரது இரு கரங்கள் அங்குச, பாசங்களை ஏந்தியுள்ளன. மற்ற இரு கரங்கள் அபய முத்திரைகளைப் பெற்றுள்ளன. ஒன்பது கஜ பச்சை பட்டு உடுத்தி ரோஜா, செவ்வந்தி, மல்லிகை மாலைகள் அணிந்து, அன்னை நிற்கும் கம்பீரத்தில் நம்மையே மறந்து போய் விடுவோம். விசேட நாட்களில் சந்தனக்காப்பு, மஞ்சள் காப்பு, புஷ்ப அலங்காரம் ஆகியவற்றுடன் அம்மன் தோன்றும் போது, அக்காட்சியைக் காணும் கண்களே பாக்கியம் செய்தவை. இந்த அன்னையைப் பலரும் வழிபட்டு, கலைகளில் சிறந்த ஞானமும், கல்வி கேள்விகளில் தேர்ச்சியும் அடைந்தார்கள்.
இந்தத் தலத்தில், இறைவன் அகத்தியருக்கு திருமணக் காட்சி வழங்கி அருளினார். அவரைப் போன்றே யோகத்தில் ஆழ்ந்து சிவ மந்திரங்களை ஜபித்து, இறைவனிடத்தில் ஈடுபடும் அடியார்கள், பெருமானின் திருமணக் கோலத்தைக் காண வேண்டும் என்று அகத்தியர் வேண்டிக் கொண்டார். அவருடைய வேண்டுதலுக்கு இணங்க, இறைவனும் சிவயோகத்தின் இரகசியங்களை அன்னைக்கு இந்தத் தலத்தில் உபதேசம் செய்து வைத்தார். அதோடு, தானே எல்லா சுகங்களையும் துறந்து, தியாகம் செய்து தியாகராஜராக எழுந்தருளி, யோகமும் செய்து, இந்த யோகத்தின் மூலம் அடியார்கள் பெறக்கூடிய பரமானந்த நிலையைத் தான் அடைந்து, அன்னைக்குக் காண்பித்தார்.
திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோவில்
நாள் பட்ட சரும நோய்களைத் தீர்க்கும் அம்பிகை
திருவையாற்றில் இருந்து வடமேற்கே 13 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தவம் திருமழபாடி. இறைவன் திருநாமம் வைத்தியநாதசுவாமி. இத்தலத்தில் சுந்தராம்பிகை மற்றும் பாலாம்பிகை என்ற இரண்டு அம்பிகைகள் அருள் பாலிக்கிறார்கள்.
இறைவி சுந்தராம்பிகை, அழகம்மை என்று அழகு தமிழிலும் அழைக்கப்படுகிறார். சரும நோய்களைப் போக்கும் வரப்பிரசாதி இந்த சுந்தராம்பிகை. நாள்பட்ட சரும நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், பங்குனி மாதம் நான்கு அல்லது ஐந்து செவ்வாய்க்கிழமைகள் இந்தத் தலத்துக்கு வந்து, ஆற்றிலும் கோயில் தீர்த்தத்திலும் நீராடிவிட்டு, ஈர உடையுடன் ஒன்பது முறை அம்பாளை வலம்வந்து, உப்பும் மிளகும் போட்டு வேண்டிக் கொண்டால், நாள்பட்ட சரும நோய்களும் அதனால் ஏற்பட்ட சங்கடங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
குழந்தை பாக்கியம் வேண்டும் பக்தர்கள், கோயிலில் உள்ள சோமாஸ்கந்தருக்கு வெள்ளை வஸ்திரமும் ரோஜாப்பூ மாலையும் சாத்தி, 11 நெய்தீபம் ஏற்றி வழிபட்டால், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
பசுபதி கோயில் ஆலந்துறைநாதர் கோயில்
அழகும், கம்பீரமும் மிகுந்த துர்க்கையம்மன்
கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூருக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் ஐயம்பேட்டையைத் தாண்டி, கண்டியூர் செல்லும் பேருந்துச் சாலையில் சென்றால் தேவாரத் தலமான பசுபதி கோயிலை அடையலாம். இத்தலத்தின் புராணப்பெயர் புள்ளமங்கை. இறைவன் திருநாமம் ஆலந்துறைநாதர். இறைவி அல்லியங்கோதை. இத்தலம் சப்தமாதர்களும், சப்த ரிஷிகளும் வழிபட்ட சப்தஸ்தான தலங்களுள் ஒன்றாகும்.
இக்கோவிலின் வடக்குப் பிரகாரத்திலுள்ள துர்க்கையம்மனின் மகிஷாசுரமர்த்தினி உருவம் தனிச் சிறப்புடையதாகத் திகழ்கின்றது. இந்த துர்க்கையம்மனின் அழகும், கம்பீரமும் பார்ப்பவரை பிரமிக்க வைக்கும். கருங்கல் குடை நிழலில், எட்டுக் கைகளுடன்,எருமைத் தலைமீது நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். தன் கைகளில் சங்கு சக்கரம், வாள், வில், கதை, சூலம், கேடயம், அங்குசம் முதலிய ஆயுதங்களை ஏந்தியிருக்கிறாள். துர்க்கையம்மனின் வாகனங்களான சிம்மம் வலதுபுறமும், கலைமான் இடதுபுறமும் இருக்கின்றன. துர்க்கையம்மனின் வாகனங்ககளின் கீழே இரு வீரர்கள் கத்தியால் தலையை அரிந்து தருவதுபோலவும், தொடையைக் கிழித்து இரத்த பலி தருவது போலவும் காட்சித் தருகிறார்கள். துர்க்கையம்மன் திரிபங்கியாய் ஒரு கையில் வில்லேந்தி, மற்றது அபயகரமாக மோதிர விரல் மடக்கிய முத்திரையுடன் இருக்க, பின்புறம் அம்பறாத்தூணி, அம்புகளும் விளங்க துர்கையம்மன் நின்றிருக்கும் கோலம், நேரிலேயே அவளைப் பார்க்கும் சிலிர்ப்பைத் தரும்.
திருநாகேஸ்வரம், பட்டீச்சுரம், திருப்புள்ளமங்கை ஆகிய இம்மூன்று தலங்களிலும் உள்ள துர்க்கையம்மன்கள் ஒரே சிற்பியால் செய்யப்பட்டவை என்றும், இம்மூன்றுமே மிகவும் சக்தி வாய்ந்தவை என்றும் சொல்லப்படுகிறது.
ராமேஸ்வரம் நம்புநாயகி அம்மன் கோவில்
நம்பி வந்தவர்களைக் காக்கும் அம்மன்
ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் சாலையில் 5 கி.மீ. தொலைவில் நம்புநாயகி அம்மன் கோவில் உள்ளது. இத்தலத்தில் அம்மன் நம்புநாயகி என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறாள். அம்மனை நம்பி வந்து வேண்டுவது நடப்பதால், நம்பு நாயகி அம்மன் என்று அழைக்கப்படுகிறாள். இப்பகுதி மக்களின் கண் கண்ட தெய்வமாக விளங்குகின்றாள். நம்பு என்பது ராமேஸ்வரம் தீவை சுற்றி மிகவும் பொதுவான மற்றும் பிரபலமான வார்த்தை.அதனால் இப்பகுதி மக்களின் பெயர் நம்பு குமார், நம்பு லட்சுமி, நம்பு ராஜன் என்று இந்த அம்மனின் பெயரை இணைத்துதான் இருக்கும்.
நம்புநாயகி அம்மன் கோவில் தல வரலாறு
ஒரு சமயம் இத்தலத்தில் தட்சிணத்துருவன், பச்சிமத்துருவன் என்ற இரண்டு முனிவர்கள் ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மனை நோக்கி கடுமையான தவம் மேற்கொண்டிருந்தனர். அவர்களது தவத்தை கண்டு மெச்சிய அம்மன் அவர்களுக்கு காளி தேவியாக காட்சி கொடுத்தாள். அன்றிலிருந்து இரண்டு முனிவர்களும் அந்த காட்டிலேயே காளியை வழிபட்டு வந்ததாகவும், அவளின் அருளால் பிணியுற்றவர்களுக்கு நோய் போக்கும் பணியை செய்து வந்தார்கள். இரண்டு முனிவர்களும் குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு கற்பகோடி காலம் கண்டவர்களாய் இப்பகுதியிலேயே ஆழ்ந்த நிஷ்டையில் சமாதியிலிருந்து வருவதாகவும் நம்பப்படுகிறது. இப்பகுதியை ஆண்டு வந்த சூலோதரன் என்ற மன்னன் இந்த காளியை நம்பி வேண்டி தன் நோய் நீங்கி நலமடைந்தான். அம்மனை நம்பி குணமடைந்ததால் அம்மன் நம்பு நாயகி என அழைக்கப் பெற்றாள்.
சர்வரோக நிவாரண தீர்த்தங்கள்
இக்கோயிலை சுற்றிலும் அமைந்துள்ள நண்ணீர் தடாகங்கள் பல்வேறு நோய்களை போக்கும் தன்மையுடையதாக விளங்குவதால் இவைகள் சர்வரோக நிவாரண தீர்த்தங்கள் என்று அழைக்கப்படுகிறது. அம்பிகையே தீர்த்தங்கள் வடிவில் அருள்கிறாள். தீராத நோய்களை உடையவர்களும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் இக்கோயிலிலேயே மாதக்கணக்கில் தங்கி சர்வரோக நிவாரண தீர்த்தத்தில் தினமும் நீராடி குணமடைகிறார்கள். மஞ்சள் தூள் இந்த கோவிலில் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
திருமண வரம், மழலைச் செல்வம் அளிக்கும் அம்மன்
திருமணத்தடை உள்ள பெண்களும், கணவனால் கைவிடப்பட்டவர்களும், குழந்தை வரம் வேண்டுவோரும் விரதமிருந்து செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் நம்பு நாயகியை வழிபட்டால் பிரார்த்தனை விரைவில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மேலக்காட்டூர் அகத்தீஸ்வரர் கோவில்
திருமேனியைத் தட்டினால் ஓசை தரும் அம்மன்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்-பந்தநல்லூர் சாலையில் திருப்பனந்தாளில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது மேலக்காட்டூர். இத்தலத்து இறைவன் அகத்தீஸ்வரர். இறைவி அகிலாண்டேஸ்வரி.
அம்பிகை அகிலாண்டேஸ்வரி நான்கு கரங்களுடன், முகத்தில் புன்னகை தவழ நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். அம்பிகை தன் மேல் இரண்டு கரங்களில் தாமரை மலரையும் கீழ் இரண்டு கரங்களில் அபய வரத ஹஸ்த முத்திரைகளுடன் அருள்பாலிக்கிறாள். இந்த அம்பிகையின் திருமேனியில் அர்ச்சகரின் மோதிரமோ அல்லது அர்ச்சனை தட்டோ அல்லது வேறு ஏதாவது உலோகமோ பட்டால், சப்த ஸ்வரங்களுடன் ஓசை வெளியிட்டு, கேட்பவரை மெய் சிலிர்க்க வைக்கிறது.
இதனால் இங்கு அருள்பாலிக்கும் அம்பிகையை 'ஓசை அம்மன்' என்று பக்தர்கள் கூறுகின்றனர்.
இந்த ஆலயத்தில் இறைவன் அகத்தீஸ்வரர் சன்னிதியில் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு, குழந்தையை தத்துக் கொடுக்கும் வைபவமும் சிறப்பாக நடைபெறுகிறது. அந்தக் குழந்தை மட்டுமல்ல, குழந்தையை தருபவர்களும், பெறுபவர்களும் இறைவன் அருளால் நிறைவாக வாழ்கிறார்கள் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.
இறைவன் அகத்தீஸ்வரரின் தேவ கோட்டத்தில், தென்புறம் தட்சிணாமூர்த்தியின் திருமேனி உள்ளது. இவரது அமைப்பு வித்தியாசமாக உள்ளது. அமர்ந்த நிலையில் உள்ள தட்சிணாமூர்த்தியின் காலை, அவரது பின்புறம் இருந்து நந்தி தேவர் தனது நாவால் வருடிக் கொண்டிருக்கும் காட்சி புதுமையாக உள்ளது. நந்தி தேவர் தனது நாவால் குருபகவானை வருடுவதால், குருபகவான் கண் துயிலாது பக்தர்களின் கோரிக்கைகளை எந்த நேரத்திலும் கேட்டு அருள்பாலிக்கிறார் என்று இதற்கு விளக்கம் சொல்லப்படுகிறது.
கீழசூரியமூலை சூரியகோடீசுவரர் கோவில்
பக்தர்களை எழுந்து வந்து வரவேற்கும் அபூர்வத் தோற்றத்தில் துர்க்கை அம்மன்
கும்பகோணத்தில் இருந்து, கஞ்சனூர், திருலோகி கிராமங்களை அடுத்து 15.கி.மீ தொலைவில், சூரியனார் கோவிலுக்கு அருகே மைந்துள்ளது கீழசூரியமூலை என்ற தலம். இறைவன் திருநாமம் சூரியகோடீசுவரர். இறைவி பவளக்கொடி.
இக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் துர்க்கையின் ஒரு பாதத்தில் மட்டும் மெட்டி உள்ளது. மேலும் துர்க்கையின் இரு பாதங்களும் ஒன்றுக்கொன்று நேரான நிலையில் இல்லை. அதாவது துர்க்கை அம்மன் தன் வலது காலை சற்று முன்பக்கமாக நீட்டி வைத்துக்கொண்டு காட்சி தருகிறாள். இந்த தோற்றமானது, தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்களை துர்க்கை அம்மன் வலது காலை முன் வைத்து எழுந்து, அவளே முன்னால் வந்து வரவேற்பது போல தோன்றும். துர்க்கை அம்மனின் இந்த தோற்றத்தை நாம் வேற எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
வலது காலில் ஆறு விரல்கள் உள்ள மகாலட்சுமி
இக்கோவிலின் குபேர மூலையில், பத்மாசனத்தில் வீற்றிருக்கும் மகாலட்சுமியின் வலது காலில் ஆறு விரல்கள் அமைந்துள்ளன. 'ஆறு' என்பது சுக்கிரனுக்குரிய எண் ஆகும். எனவே சுக்கிரனின் சக்தி அவளிடம் பூரணமாக உள்ளது. எப்போதும் சுக்கிரனுடைய அனுக்கிரகத்திலேயே இருப்பதால், அவளை வழிபடும் பக்தர்களுக்கு செல்வத்தை வாரி வழங்குபவளாக விளங்குகின்றாள்.
திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோவில்
திருவக்கரை வக்ரகாளியம்மன்
தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றான திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் ஆலயத்தில் உள்ளது வக்ரகாளியம்மன் சந்நிதி.
பொதுவாக காளி கோவில், ஊரின் எல்லையில்தான் இருக்கும். ஆனால் இங்கு ஊரின் நடுவில் ராஜ கோபுரத்தின் நுழைவு வாயிலின் அருகிலேயே அமைந்து இருப்பது வித்தியாசமான ஒன்றாகும்.
வக்கிரகாளியின் திருவுருவம் பிரமிப்பாக இருக்கிறது. சுடர் விட்டு பரவும் தீக்கங்குகளைப் பின்னணியாகக் கொண்ட தலை, மண்டை ஓட்டுக் கிரீடம், வலது காதில் சிசுவின் பிரேத குண்டலம் அணிந்திருக்கிறாள்.
காளியம்மனின் வலப்புறம் உள்ள நான்கு திருக்கரங்களிலும் மேலிருந்து முறையே பாசம், சக்கரம், வாள் மற்றும் கட்டாரி ஆகியவற்றை ஏந்தி காட்சித் தருகின்றாள். அதேபோல இடப்புறத்தில் மேலிருந்து முறையே உடுக்கை வைத்திருக்கும் பாவனையுடன் ஒரு திருக்கரம், அடுத்து கேடயம் மற்றும் கபாலம் ஏந்தியிருக்கும் இரு திருக்கரங்கள் மற்றும் இறுதியாக இடதுகாலை ஒட்டிக் கை விரல்களை லாவகமாக மடக்கி ஆள்காட்டி விரலால் அம்மன் தனது இடது பாதத்தைச் சுட்டிக்காட்டும் பாவனையில் அமைந்த திருக்கரம் என நான்கு திருக்கரங்களுடன் அருள்புரிகின்றாள். அன்னையின் மார்பிற்கு குறுக்கே மண்டை ஓட்டு மாலை காணப்படுகிறது. தர்மத்திற்கு எதிராக அக்கிரமம் செய்பவர்களை அழித்து அவர்களது மண்டை ஓடுகளை சேர்த்து மாலையாக அணிந்துள்ளாள்.
வக்கிரகாளி தலையை சற்று இடதுபுறமாக சாய்த்தபடி அமர்ந்த திருக்கோலத்தில் அருள்புரிகின்றாள். கோரைப் பற்களுடன் சினம் கக்கும் பெரிய உருண்டை விழிகளால் பூமியை நோக்குகின்றாள். அம்மன் வலது காலைச் சற்றே தூக்கி மடித்து அமர்ந்துள்ள பீடத்தில் ஊன்றியபடியும், இடது காலை தரையில் ஊன்றியபடியும் உடலை சற்று வலப்புறம் திருப்பிய நிலையில் அமர்ந் துள்ள காட்சி வேறு எங்கும் காணக்கிடைக்காத கண் கொள்ளாக் காட்சி ஆகும்.
வக்ராசூரன் என்ற அசுரனை வரதராஜப் பெருமாள் சம்காரம் செய்கிறார். அந்த வக்ராசூரனின் தங்கை துன்முகியை, வக்ர காளி சம்காரம் செய்யும் போது அந்த ராட்சசி துன்முகி கர்ப்பமாக இருந்தாளாம். குழந்தையை வதம் கூடாது என்பது தர்ம சாஸ்திரம். எனவே துன்முகியின் வயிற்றில் கருவிலுள்ள குழந்தையை காளி தனது வலது காதில் குண்டலமாக அணிந்து கொண்டு ராட்சசியை சம்காரம் செய்தாளாம். வக்கிராசூரனின் தங்கையை அழித்ததால் வக்ரகாளியாக அங்கேயே அமர்ந்து விட்டாள்.
சம்காரம் பண்ணியதால் வக்ரகாளி ஓங்காரமாக இருந்திருக்கிறாள். ஆதி சங்கரர் வந்து காளியை சாந்தம் செய்து இடது பாதத்தில் ஸ்ரீ சக்ர ராஜ எந்திரத்தை பிரதிஷ்டை செய்துள்ளார்.
ராகு கேது கிரகங்களுக்கு அதிதேவதை காளி என்பதால் இக்கோவிலை வலம் வர நினைப்பவர்கள் வலப்பக்கமாக ஐந்து முறையும், இடப்பக்கமாக நான்கு முறையும் வலம் வந்து தொழ வேண்டும் என்பது ஐதீகம்.
பௌர்ணமி இரவு, அமாவாசை நண்பகல் ஜோதி தரிசனம்
பௌர்ணமி இரவு 12 மணிக்கும், அமாவாசை பகல் 12 மணிக்கும் வக்ரகாளியம்மனுக்கு ஜோதி தரிசனம் காட்டும் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் கூடுகிறார்கள். வக்ரகாளியம்மன் சன்னதியின் கோபுர மண்டபத்திற்கு மேல் சூடம் ஏற்றுவார்கள். அந்த தீபத்தை தரிசனம் காணுவது இத்தலத்தின் முக்கிய விசேஷம் ஆகும்.
ஆலகிராமம் எமதண்டீஸ்வர சுவாமி கோவில்
தினம் தினம் தன் முக பாவனையை மாற்றிக் கொள்ளும் திரிபுரசுந்தரி அம்மன்
விழுப்புரம் மாவட்டம், மைலம் வட்டம், ஆலகிராமம் கிராமத்தில் அமைந்துள்ளது எமதண்டீஸ்வர சுவாமி கோவில். இறைவன் திருநாமம் எமதண்டீஸ்வரர். இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி. தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம்- விழுப்புரம் இடையில் உள்ளது கூட்டேரிப்பட்டு. இங்கிருந்து மேற்கே சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் ஆலகிராமம் எமதண்டீஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில், தெற்கு நோக்கிய கருவறையில் திரிபுரசுந்தரி அம்மன் காட்சி தருகிறார். இந்த அம்மன் வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு விதமாகக் காட்சி தருவது வியப்புக்குரிய அம்சமாகும். திரிபுரசுந்தரி அம்மன் வாரத்தில் ஏழு தினங்களிலும் ஏழு விதமான முகபாவங்களோடு காட்சி கொடுப்பார். இவ்வாலய அம்பாள் ஞாயிற்றுக்கிழமை குழந்தை முகம் கொண்டும், திங்கள், வெள்ளிக்கிழமைகளில் புன்சிரிப்புடனும், செவ்வாய், புதன்கிழமைகளில் கோப முகத்துடனும், வியாழன், சனிக்கிழமைகளில் யோக, தியான நிலையிலும் காட்சிதருவது சிறப்பு. ஏழு வாரங்கள் அவரவர் ராசிக்கேற்ற வண்ணத் துணிகளில் நெய் தீபமேற்றி, அம்பாளை வணங்கினால் வேண்டும் வரம் கிட்டும் என்பது ஐதீகம்.
திருக்கலிகாமூர் சுந்தரேஸ்வரர் கோவில்
மாசி பௌர்ணமியன்று தீர்த்த நீராடும் அம்பிகை
சீர்காழியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருக்கலிகாமூர். இத்தலத்தின் தற்போதைய பெயர் அன்னப்பன்பேட்டை. இறைவனின் திருநாமம் சுந்தரேஸ்வரர். இறைவியின் திருநாமம் சுந்தராம்பாள். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் இது 8வது தலம் ஆகும். 'கலி' (துன்பம்) நீக்கும் இறைவனான சிவபெருமான் வீற்றிருக்கும் ஊர் என்பதால் இவ்வூர், 'திருக்கலிக்காமூர்' என்று அழைக்கப்படுகிறது.
கடற்கரை, நதிக்கரைகளில் உள்ள சிவன் கோயில்களில் மாசி பௌர்ணமியின்போது சிவன், தீர்த்தக்கரைக்கு எழுந்தருளி தீர்த்த நீராடுவார். ஆனால், இத்தலத்தில் மாசி பௌர்ணமியன்று நடக்கும் தீர்த்தவாரியின் போது அம்பாள் மட்டும் கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்த நீராடுகிறாள். இதற்கு பின்னணியில் ஒரு காரணம் இருக்கின்றது. முற்காலத்தில் இக்கோவிலில் சிவன் சன்னதி மட்டுமே இருந்தது. ஒருசமயம் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில் இந்த அம்பிகையின் சிலை கிடைத்தது. சிலையை அவர் எடுத்தவுடனேயே, அவருக்கு வயிற்று வலி வந்துவிட்டது. சிலையை தூக்கி வந்த அவர், இத்தலம் அருகில் வந்தபோது வயிற்றுவலி நின்றுவிட்டது. அதன்பின்பு இவ்விடத்தில் சிவலிங்கம் இருந்ததைக் கண்ட அவர், அம்பிகையையும் இங்கேயே பிரதிஷ்டை செய்தார். இந்த அம்பிகை கடலில் கிடைக்கப்பெற்றவள் என்பதால், வருடத்தில் ஒருமுறை மாசி பௌர்ணமியன்று ,அவளது பிறப்பிடமான கடலுக்கு கொண்டு சென்று தீர்த்த நீராட்டி வருகிறார்கள்.
கோடாங்கிப்பட்டி அங்காள பரமேஸ்வரி கோவில்
ஆங்கிலேய அதிகாரியை அடிபணிய வைத்த அங்காள பரமேஸ்வரி
தேனி-போடி சாலையில் கோடாங்கிப்பட்டி கிராமத்திலிருந்து 1.5 கிமீ தொலைவில் உள்ளது அங்காள பரமேஸ்வரி கோவில்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் தேனிக்கு அருகிலுள்ள குச்சனூரில் புற்றுக் கோவில் இருந்தது. இந்த கோவிலுக்கு ஊர் மக்கள் ஓர் அங்காள பரமேஸ்வரியின் சிலையைச் செய்ய விரும்பினார்கள். அதன்படி சுப்புத் தேவர் என்பவர், போடிக்கு அருகே உள்ள ஊருக்குச் சென்று அங்காள பரமேஸ்வரியின் சிலையை உருவாக்கினார்.
அந்த சிலையை தங்கள் வசித்த வந்த குச்சனூருக்குக் கொண்டு செல்ல ஊர் மக்கள் சுமந்து வந்தனர். அப்போது போடிக்கு அருகே கோடாங்கிப்பட்டி எனும் ஊரை வந்து அடைந்தபோது களைப்பு உண்டானதால் அங்கு சிலையை இறக்கி வைத்துவிட்டு சற்று ஓய்வு எடுத்தனர். அன்னையின் திருவுளம் அங்கேயே தங்கிவிட எண்ணியது போலும். அதனால் கீழே இறக்கி வைக்கப்பட்ட திருவுருவச்சிலை மீண்டும் எடுக்கவே முடியாதபடி நிலைத்து நின்றுவிட்டது. இதனால் வியப்பும் அதிர்ச்சியும் அடைந்த ஊர் மக்கள் கண்ணீர்விட்டுப் புலம்பி, 'எங்கள் தாய் இருக்கும் இடமே எங்களுக்கான இடம்' என்று உறுதி கொண்டு அங்கேயே தங்கிவிட்டனர்.
அன்னை குடிகொண்ட இடத்தில் ஒரு கோவிலை எழுப்ப விரும்பி போடி ஜமீன்தாரைச் சந்தித்து விண்ணப்பம் செய்தனர், அவரோ இப்போது சிலை இருக்கும் இடம் கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருப்பதையும், ஆங்கிலேயர் ஒருவரே அந்த இடத்துக்கு உரிமையாளர் என்றும் கூறினார். நீங்கள் அவரிடம் அனுமதி பெற்று ஆலயம் கட்டிக்கொள்ளுங்கள் என்று வழி காட்டினார். அவர்களும் அவ்விதமே அந்த ஆங்கிலேயரை அணுகி அங்காள அம்மனுக்குக் கோவில் கட்ட அனுமதி கேட்டனர். அந்த ஆங்கில அதிகாரியோ கோபமடைந்து, அவர்களை விரட்டியடிக்க தனது காவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனால் பயந்துபோன ஊர் மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு வெளியே வந்தார்கள்.
அன்றிரவு ஆங்கில அதிகாரியின் மாளிகை எங்கும் தீ பரவியது. அது ஊரெங்கும் பற்றியது. ஆங்கிலேயரும் அவரது காவலர்களும் மாளிகையை விட்டு ஓடினர். தெய்வ அருள் வந்த மூதாட்டி ஒருத்தி, 'அங்காளம்மனுக்கு சொந்தமான இடத்தைக் கொடுத்து விடுங்கள்! உங்களைப் பாவத்தில் இருந்து மீண்டு கொள்ளுங்கள்' என்று அறிவித்தாள். ஆங்கிலேய அதிகாரிகள் மிரண்டனர். காவலர்கள் இப்போது ஆங்கிலேய அதிகாரியை சந்திக்க வரும்படி ஊர்மக்களைக் கெஞ்சுகிறார்கள். அதிகாரிகள் ஊர் மக்களை வணங்கித் தங்கள் பிழை பொறுக்குமாறு வேண்டினர். அம்மன் நிலை கொண்ட கோடாங்கிப்பட்டி ஏரிக்கு அருகில் உள்ள நிலத்தின் உரிமையை உடனடியாக மாற்ற உத்தரவிட்டனர், மேலும், 'ஸ்ரீஅங்காள ஈஸ்வரி கோவிலுக்குச் சொந்தமான இடம் அது' என்று செப்பு சாசனத்தையும் வழங்கினர்.
மதுரை சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்களுக்கு எல்லாம் கண்கண்ட தெய்வமாக கோடாங்கிப்பட்டி அங்காள பரமேஸ்வரி விளங்கி வருகிறாள். இங்கு இவளுக்கு வெள்ளி மற்றும் பௌர்ணமி பூஜைகள், மாசி அமாவாசை மற்றும் ஆடி மாத விழாக்கள் விசேஷமானவை. ஒருமுறை இவளை தரிசித்தால் போதும், அச்சங்கள் இல்லாத சிறப்பான வாழ்வை அடையலாம் என்கிறார்கள் பக்தர்கள்.
மேலூர் திரிபுரசுந்தரி அம்மன் கோவில்
இச்சா சக்தியாய் விளங்கும் திரிபுரசுந்தரி அம்மன்
சென்னை மீஞ்சூர் சாலையில், சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள மேலூர் என்ற ஊரில் அமைந்திருக்கிறது திரிபுரசுந்தரி அம்மன் கோவில். இறைவன் திருநாமம் திருமணங்கீசர்,. அம்மனின் மற்றொரு திருநாமம் திருவுடை அம்மன்.
ஆலயத்துள் நுழைந்ததும் வலதுபுறத்தில் அம்பாள் சந்நதி, தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அன்னை தன் மேலிருகரங்களில் பாசாங்குசத்தைக் கொண்டிருக்கிறாள். கீழிரு கரங்களில் அபய வரத முத்திரைக் காட்டி அருள் காட்சித் தருகின்றாள். அம்பாளின் திருமுன் சிம்மமும், பலிபீடமும், கொடிமரமும் காணப்படுகின்றன.
மிளகு பயிறு ஆன அதிசயம்
அம்பாள் சந்நதிக்கும் கொடிமரத்துக்கும் இடையில் அமைந்துள்ள அழகிய மண்டபத்தை மிளகு மாற்றியான் மண்டபம் என குறிப்பிடுகிறார்கள். அதற்குப் பின்னணியில் ஒரு சுவையான சம்பவம் இருக்கிறது. நாயக்க மன்னராட்சிக் காலத்தில் மிளகுக்குச் சுங்கவரி வசூலிக்கும் வழக்கம் இருந்தது. இப்பகுதிக்கு ஒரு வணிகன் மிளகு மூட்டைகளுடன் வந்தான். வரி செலுத்த விரும்பாத அவன் தன் மூட்டைகளில் பயறு இருப்பதாக அதிகாரிகளிடம் பொய் சொன்னான். சந்தைக்குச் சென்று மூட்டைகளைப் பிரித்துப் பார்த்த வணிகன், மிளகு மூட்டைகள் பயறு மூட்டைகளாக மாறி இருந்ததைக் கண்டு பதறித் துடித்தான். பின் மனம் வருந்தி இச்சா சக்தியாக அருள்புரியும் திரிபுர சுந்தரியிடம் மன்னிப்பு கேட்டான். மனம் திருந்திய வணிகனுக்கு அருள்புரிந்திட திருவுளம் கொண்ட தேவி பயறு மூட்டைகளை மீண்டும் மிளகு மூட்டைகளாக மாற்றினாள்.அன்னையின் மகிமையை அனுபவ பூர்வமாய் உணர்ந்த அந்த வணிகன் சுங்கவரியாக செலுத்த வேண்டிய பணத்தை ஆலயத்திற்கு காணிக்கையாகச் செலுத்தினான். அம்பாள் சந்நதிக்கு முன் மண்டபத்தையும் கட்டிக் கொடுத்தான். அதுதான் மிளகுமாற்றியான் மண்டபம்.
மூன்று அம்மன்களின் பௌர்ணமி தரிசனம்
இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ஆகிய முப்பெரும் சக்திகளுக்குரிய திருத்தலங்களாக மேலூர், திருவொற்றியூர், வடதிருமுல்லைவாயில் ஆகியன திகழ்கின்றன. பௌர்ணமி தினத்தில் மேலூர் திருவுடையம்மனை முதலில் இச்சா சக்தியாய் வழிபட்டு, அடுத்து ஞான சக்தியான திருவொற்றியூர் வடிவுடையம்மனைத் தரிசித்து, அடுத்து கிரியா சக்தியான திருமுல்லைவாயில் கொடியிடை அம்மனைத் தரிசிப்பதன் மூலம் மூவரின் அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்த மூன்று தேவியரின் திருவுருவச் சிலைகளையும் ஒரே சிற்பிதான் வடித்தாராம். பார்வதி பரமேஸ்வரர் அச்சிற்பிக்கு வரமருள முன் வந்தபோது, அச்சிற்பியோ, 'வெள்ளிக்கிழமை அன்று வரும் பௌர்ணமியில் இம்மூன்று தேவியரையும் தரிசிப்பவர்களுக்கு அருள் புரிய வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டாராம்.
இத்தலத்து ஈசன் திருமணங்கீசரையும் அம்பாள் திரிபுரசுந்தரி அம்மனையும் வணங்கினால் திருமண வரம், மக்கட் செல்வம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவில்
மாசி அமாவாசை மயானக் கொள்ளை
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருந்து வடக்கு திசையில் 20 கி.மீ.தூரத்தில் அமைந்துள்ளது மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவில். அங்காள பரமேஸ்வரிக்கு பல ஆலயங்கள் உள்ளன என்றாலும், அவளுக்கு மேல்மலையனூர் ஆலயமே முக்கியமான ஆலயம். இக்கோவிலில் மாசி மாத அமாவாசையன்று நடைபெறும் மயானக் கொள்ளை பிரசித்தி பெற்றது. மயானக் கொள்ளை விழா நடக்கும்போது, பக்தர்கள் அங்கு பலதரப்பட்ட தானியங்களைக் கொண்டு வந்து உணவு சமைத்து அதை அங்காள பரமேஸ்வரிக்கு அர்ப்பணிக்கிறார்கள். அங்கு மயானத்தில் அவளை ஆராதிக்கின்றார்கள்.
மயானக் கொள்ளை விழா உருவான பின்னணி வரலாறு
பிரம்மன் தனக்கு ஐந்து தலை உள்ளது என்ற காரணத்தால் அகந்தை கொண்டான். எனவே பிரம்மனின் ஒரு தலையை காலபைரவர் மூலம் கொய்து வரச் சொன்னார் சிவபெருமான். ஆனால் ஒரு தலையைக் கிள்ளியவுடன் மற்றொரு தலை அங்கே தோன்றியது. சிவபெருமானே தலையைக் கொய்யச் சென்றார். ஆனால், ஒவ்வொன்றாகக் கிள்ள, அது முளைத்துக்கொண்டே இருந்தது. விஷ்ணுவின் ஆலோசனைப்படி 1000வது தலையைக் கிள்ளியவுடன் கீழே போடாமல் வைத்துக்கொண்டார். ஆனால் நெடுநேரமாகியும் கீழே போடாததால் அந்த பிரம்மனின் கபாலம் கையிலேயே ஒட்டிக்கொண்டது. சரஸ்வதி தேவியின் சாபத்தால் சிவன் பிச்சாடண வடிவம் கொண்டு அலைந்தார். ஊர் ஊராகப் பித்தனைப் போல் பிச்சை எடுத்துத் திரியலானார். ஆனால் அவ்வாறு எடுக்கும் பிச்சையையும் பிரம்ம கபாலம் விழுங்கிவிடும்.
பிரம்மாவின் ஒரு தலையைக் கொய்வதற்குக் காரணமாக இருந்த பரமேஸ்வரியை "நீ கந்தலாடையுடன் ராட்சஸ உருவுடன் அலைவாய்' என சாபமிட்டாள் சரஸ்வதி. அதன்படி பரமேஸ்வரி,பல இடங்களில் அலைந்து திரிந்து, இறுதியில் மேல்மலையனூரில், மயான பூமியிலே ஒரு புற்றினுள்ளே பாம்புருவில் .வந்து அமர்ந்தாள் . மகாவிஷ்ணுவின் ஆலோசனைப்படி, உமையவள் புற்றிலிருந்து வெளியேறி பெண்ணுறு கொண்டு சிவபெருமானுக்கு உணவு சமைத்தாள். பிச்சை எடுக்க ஈசன் வந்ததும் அன்னபூரணியான அன்னை அவள் சமைத்த உணவை மூன்று கவளங்கலாக்கி கபாலத்தில் இடத் துவங்கினாள். முதல் கவளம் இட்டதும் கபாலம் உண்டது. இரண்டாவது கவளம் இட்டதும் கபாலமே உண்டது. உணவின் ருசியில் மயங்கியது. மூன்றாவது கவளத்தை அன்னை கபாலத்தில் இடாமல் சூரையாக வீசினாள். அதை உண்ண கபாலம் கீழே இறங்கியது. ஆவேச வடிவம் கொண்டு அன்னை கீழே இறங்கிய கபாலத்தை காலில் மிதுத்து சுக்கு நூறாக்கினாள். அப்போதே சிவனைப் பிடித்திருந்த பிரும்மஹத்தி தோஷம் நீங்கியது.
ஈஸ்வரி மூன்றாம் கவளத்தை இறைத்து பிரும்ம கபாலத்தை பூமிக்குள் அழுத்திய நாள் மாசி அமாவாசை. அந்நாளே மயானக் கொள்ளையாகக் கொண்டாடப்படுகிறது. மாசி மாத சிவ ராத்திரிக்கு மறுநாள் அமாவாசை தினத்தன்று அங்காளி தனது முழு பூரண பலத்தோடும் வலுவோடும் இருப்பாள். அனைத்துக்கும் மூலாதார சக்தியாக விளங்கும் அங்காளி அன்று சுடுகாட்டில் ஆவிகள், ஆன்மாக்கள் அனைத்துக்கும் உணவை சூரை இடும் நாளே 'மயானக் கொள்ளை'. அவ்வாறு சூரையிட்ட அங்காளியை, விஷ்ணு பூமிக்குள் தள்ளிவிட்டதாகவும், பின்னர் பூமிக்கு மேல் சுயம்புவாக புற்று உருவாக அங்காளி தோன்றினாள் எனவும், மீண்டும் சிவனின் அங்கத்தில் ஆட்கொண்ட பரமேஸ்வரியை அங்காளம்மன் என அழைத்ததாகவும் வரலாறு. அம்பிகையும் ஆவேசம் தனிந்து நான்கு திருக்கரத்துடன் சூலம், கத்தி, உடுக்கை, கபாலத்துடன் எழுந்து அமர்ந்தாள்.அங்கேயே அங்காள பரமேஸ்வரி என்ற திருநாமம் கொண்டு காட்சி கொடுத்தாள். அதுவே மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் ஆகும்.
ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் அமாவாசையன்று அனைத்து அங்காளம்மன் கோயிலிலும் மயான கொள்ளையானது நடைபெறுகிறது. அம்பிகை பிரம்ம கபாலத்திற்காக சூரையிட்ட மாசி அமாவாசையன்று மயானத்தில் இன்றும் சூரையிடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.அன்னை அனைத்து பேய், பிசாசுகளுக்கும் அன்று உணவை சூரையிடுகிறாள் என்பது ஐதீகம். அதை உண்டு அவற்றால் தன் மக்களுக்கு எவ்வித தீங்கும் வரக்கூடாது என்பதற்காக சூரை இடப்படுகிறது.
பிரார்த்தனை
கணவனை பிரிந்திருப்பவர்கள் மற்றும் கணவனின் தொந்தரவுக்கு ஆளாகி இருப்பவர்கள் இங்கு வந்து அங்காளபரமேஸ்வரியை வழிபட்டால் பிரச்னை தீரும் என்பது நம்பிக்கை.
வளையாத்தூர் வளவநாதீஸ்வரர் கோவில்
சிவபெருமானை போல் நெற்றிக்கண் உடைய அம்பாள்
சிவராத்திரியன்று இரவில் அம்பாளுக்கு சிறப்பு பூஜை செய்யப்படும் விசேட நடைமுறை
வேலூர்- சென்னை நெடுஞ்சாலையில் , 24 கி.மீ., தூரத்திலுள்ள ஆற்காடு சென்று, அங்கிருந்து பிரியும் சாலையில் 17 கி.மீ., தொலைவில் உள்ளது வளையாத்தூர். இறைவன் திருநாமம் வளவநாதீஸ்வரர். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. இறைவன், மக்களின் பிரார்த்தனைகளுக்கேற்ப வளைந்து கொடுத்து அருள் செய்பவர் என்பதால், அவருக்கு இப்பெயர் ஏற்பட்டது. முற்காலத்தில் இப்பகுதியில்,விவசாயம் செழித்து மக்கள் வளத்துடன் வாழ்ந்ததால் அவருக்கு 'வளவநாதீஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டதாகவும் கூறுவர்.
கோவிலில் நுழைந்ததும் நாம், நின்ற நிலையில், நான்கு கைகளுடன் எழுந்தருளியிருக்கும் பெரியநாயகி அம்பாளை, தரிசிக்கலாம். இந்த அம்பாளின் நெற்றியில் சிவனுக்கு உள்ளதுபோல் நெற்றிக்கண் உள்ளது.சிவபெருமான் சூரியன், சந்திரன், அக்னி என மூவரையும் கண்களாகக் கொண்டவர். சிவனின் சக்தி வடிவமே அம்பிகை என்பதால், அவளும் முக்கண் உடையவள் ஆகிறாள். இதை உணர்த்தும் விதமாக அம்பிகை, இக்கோவிலில் நெற்றிக்கண்ணுடன் காட்சியளிக்கிறாள்.
இந்த அம்பிகையின் நான்கு கைகளிலுள்ள சுண்டு விரல்களிலும் மோதிரம் அணிந்திருப்பது மேலும் ஒரு தனிச்சிறப்பாகும். இந்த அம்பாள் மாங்கல்ய வரபிரசாதியாகத் திகழ்கின்றாள். இந்த அம்பாளை வேண்டிக்கொண்டால் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அம்பாளுக்கு சிவராத்திரியன்று சிறப்பு பூஜை
பெரியநாயகி அம்பாள் நெற்றிக்கண்ணுடன் இருப்பதால், இவளை சிவபெருமானாகவே கருதி, சிவராத்திரியன்று இந்த அம்பிகைக்கு இரவில் பூஜை செய்கிறார்கள். சிவபெருமானுக்கு நான்கு கால பூஜை நடைபெறும் போது, அம்பாளுக்கு முதல் காலமும் மூன்றாம் காலமும் விசேஷ பூஜை நடைபெறும். இது வேறு எந்த தலத்திலும் பின்பற்றாத நடைமுறையாகும்.
கிரக தோஷ நிவர்த்தி தலம்
வளவநாதீஸ்வரர் சதுர வடிவ பீடத்தில், இடப்புறமாக சற்றே வளைந்த நிலையில், நவாம்ச மூர்த்தியாகக் காட்சி தருவதாக ஐதீகம். இந்த ஒன்பது நிலைகளும் நவக்கிரகங்களைக் குறிப்பதாகவும் சொல்வர். இதனால், எந்த கிரகத்தால் ஏற்பட்ட தோஷத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள், தோஷ நிவர்த்திக்காக இங்கு வேண்டிக் கொள்கிறார்கள்.
இத்தலத்தில் முருகன் கையில் சிவனுக்குரிய சின்முத்திரை காட்டியபடி இருப்பது விசேஷமான அமைப்பு. மேலும், இங்குள்ள சப்தகன்னியரின் பீடத்தில் அவர்களுக்குரிய வாகனங்கள் வடிக்கப்பட்டுள்ளது மேலும் ஒரு தனிச் சிறப்பாகும்.