திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில்

பெருமாளின் எதிரே கருடாழ்வார் இல்லாத திவ்ய தேசம்

ஆஞ்சநேயருக்கு சாத்தப்படும் வெண்ணெய் காப்பு உருகாத அதிசயம்

கேரள மாநிலம், திருவனந்தபுரம் கோட்டை பகுதியில் அமைந்துள்ள திவ்ய தேசம் பத்மநாபசாமி கோவில். இக்கோவிலில் மூலவர் பத்மநாபசாமி, அனந்தசயனம் எனப்படும் யோக நித்திரையில்  ஆழ்ந்திருக்கும் வண்ணம் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். திருவனந்தபுரம் (திரு+அனந்த+புரம்) என்னும் பெயரும் இக்கோவிலில் உள்ள பெருமாளின் பெயரைத் தழுவியே ஏற்பட்டது.

எல்லா பெருமாள் கோவிலிலும், மூலவர் சன்னத்திக்கு எதிரே கருடாழ்வார் இருப்பார். ஆனால் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில், பெருமாளின் மூலஸ்தானம் எதிரே கருடாழ்வார் இருக்க மாட்டார். இதன் பின்னணியில் ஒரு வரலாற்று நிகழ்ச்சி உள்ளது.

ஸ்ரீ ராமானுஜர் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலுக்கு வந்தபோது, கோயிலில் சில வழிபாட்டு முறைகளில் மாற்றங்களைச் செய்ய விரும்பினார். பெருமாளின் கட்டளைப்படி, ராமானுஜருக்கு உதவவும், அவரைப் பாதுகாப்பாகத் திருக்குறுங்குடிக்கு அழைத்துச் செல்லவும் கருடாழ்வார் ஒரு அந்தணர் வடிவில் சென்று அவரை அழைத்துச் சென்றார் என்பது நம்பிக்கை.

ராமானுஜரை வழிநடத்திச் சென்ற கருடாழ்வார் இன்றும் அக்கோயிலின் மூலஸ்தானத்திற்குள் திரும்ப வரவில்லை என்பது ஐதீகம். எனவே தான் மூலவர் சன்னதிக்கு எதிரே கருடாழ்வார் உருவம் இருக்காது. இன்றும் இந்த சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில், மூலவர் சன்னதிக்கு முன்னால் உள்ள கருடாழ்வார் சன்னதி சற்று விலகியிருக்கும். மேலும், அக்கோயிலில் கருட பகவானுக்குப் பதிலாக ஸ்ரீகிருஷ்ணரின் உருவம் மூலஸ்தானத்திற்கு எதிரே காட்சியளிக்கிறது.

ஆஞ்சநேயருக்கு சாத்தப்படும் வெண்ணெய் காப்பு உருகாத அதிசயம்

ராமனின் தீவிர பக்தரான ஆஞ்சநேயருக்கு சாத்தப்படும் வெண்ணெய், அவரது பக்தியின் தீவிரத்தையும் குளிர்ச்சியையும் குறிக்கிறது.

போர்க்களத்தில் அனுமன் அடைந்த காயங்களின் வெப்பத்தைத் தணிக்கவே வெண்ணெய் சாத்தப்படுவதாகவும், அது உருகாமல் இருப்பது பக்தர்களின் துன்பங்களை உருக்கும் இறையருளின் அடையாளம் என்றும் நம்பப்படுகிறது.

இந்த ஆலயத்தில் மூலவர் அனந்தபத்மநாபன் எதிரில் ஆஞ்சநேயர் காட்சியளிக்கிறார். இவருக்கு பக்தர்கள் வெண்ணெய் சாற்றி வழிபடுகிறார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இவர் மீது சாற்றப்படும் வெண்ணெய் எவ்வளவு நாட்களானாலும் உருகுவதுமில்லை. வெய்யில் காலங்களில் கெட்டுப் போவதுமில்லை.

 
Previous
Previous

சமயபுரம் மாரியம்மன் கோவில்

Next
Next

அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில்