திருநாவாய் முகுந்தன் கோவில்
பெருமாளின் முழங்கால்களுக்கு கீழான பகுதி பூமியில் புதைந்துள்ள தலம்
அமாவாசையன்று பித்ரு பூஜை செய்தால் அளவிடற்கரிய புண்ணியம் தரும் திவ்ய தேசம்
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திவ்ய தேசம் திருநாவாய். சென்னை - கள்ளிக்கோட்டை ரயில் மார்க்கத்தில் திருநாவாய் ரயில் நிலையம் அமைந்துள்ளது.
இத்தலத்தில் திருமாலைக் குறித்து 9 யோகிகள் தவம் செய்ததாகவும் அதனால் இத்தலம் நவ யோகித்தலம் என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் நாவாய் தலம் என்றாகி தற்போது திருநாவாய் என்று அழைக்கப்படுகிறது. பெருமாள் 'நாவாய் முகுந்தன்' என்ற பெயரில் கிழக்கு நோக்கிய திருக்கோலத்தில், முழங்காலுக்கு கீழான பகுதிகள் பூமிக்கடியில் சென்ற நிலையில், வேறெங்கும் காண முடியாத கோலத்தில் காட்சி தருகிறார். தாயார் திருநாமம் மலர்மங்கை நாச்சியார்.
இந்த நாவாய் முகுந்தன் கோவில் பித்ருக்கள் பூஜை செய்வதற்கான சிறந்த தலமாக உள்ளது. துவாரபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் இங்கு வந்து பஞ்ச பாண்டவர்களுடன் சேர்ந்து, தம் முன்னோருக்கு பித்ரு பூஜை செய்தார் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இதனால் இத்தலத்தில் பித்ரு பூஜை செய்தால் அளவிடற்கரிய புண்ணியம் கிடைக்கும் என்று கருதப்படுகிறது.
அமாவாசை நாட்களில் இத்தலத்தின் தலவிருட்சம் அடியில் பித்ருக்களுக்கு அன்னம் வைத்து வழிபடுகிறார்கள். அமாவாசையன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தலத்தின் அருகில் உள்ள பாரத புழை நதியில் நீராடி பித்ரு பூஜை செய்கின்றனர். கேரள மாநிலத்தில் பித்ரு தர்ப்பணம் கொடுப்பதில் இத்தலம் முதன்மை வகிக்கிறது.
மூலவர் நாவாய் முகுந்தன், கால்கள் பாதி உள்ளே பதிந்த நிலையில் மிக மிக அரிதான தரிசனத்தை இங்கே வழங்கி அருள்பாலிக்கிறார். இது அரிதினும் அரிதான காட்சியாகும். இதன் பொருட்டே இங்கே நேர்த்தி கடன் செலுத்தும் அன்பர்கள், முட்டியிட்டு பிரதட்சணம் செய்வது வழக்கம்.
      
      பனச்சிகாடு சரஸ்வதி கோவில்
பனச்சிகாடு சரஸ்வதி தேவி
30 அடி பள்ளத்தில், பசுமையான கொடிகளுக்கு இடையே எழுந்தருளி இருக்கும் சரஸ்வதி தேவி
நவராத்திரியில் சரஸ்வதி தேவிக்கு குழந்தை வடிவ அலங்காரம்
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில், கோட்டயத்திற்கும் சங்கணாச்சேரிக்கும் இடையே உள்ள பிரதான சாலையில், கோட்டயத்திலிருந்து 11 கி.மீ தூரத்திலுள்ள பனச்சிக் காடு என்ற கிராமத்தில் அமைந்துள்ளது சரஸ்வதி கோவில். கேரளத்தின் மிகச் சிறந்த கோவில்களில் இது ஒன்றாகும். இக்கோவில் தட்சிண மூகாம்பிகை கோவில் என்று அழைக்கப்படுகிறது.
இங்கு எழுந்தருளி இருக்கும் சரஸ்வதி தேவி சுயம்புவாக தோன்றியவர். இந்த கோவிலில், சரஸ்வதி தேவிக்கு என்று தனி கருவறை கிடையாது. 30 அடி பள்ளத்தில், பசுமையான கொடிகளால் மூடப்பட்ட ஒரு சிறிய செவ்வக குளம் உள்ளது. சரஸ்வதி தேவியின் சிலை கொடிகளின் தோப்பிற்குள் அமைந்துள்ளது. குளத்தில் பாயும் புனித நீர் சிலையின் கால்களைக் கழுவுகிறது. இந்த நீரானது எப்போதும் வறண்டு போகாமல் பாய்ந்து கொண்டிருக்கிறது.
புகழ்பெற்ற நவராத்திரி திருவிழா இங்கு மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இங்கு நடைபெறும் ‘நவராத்திரி இசை’ விழாவைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் திரள்கின்றனர். துர்காட்டமியில், சரசுவதி தேவியின் உருவத்திற்கு முன்பாக புத்தகங்கள் வைக்கப்படுகிறது. மேலும் விசயதசமியன்று காலையில், 'ஏசுதிரினிருத்து' அல்லது 'வித்யாரம்ப விழா' அதிகாலை 4 மணி முதல் முற்பகல் 11 மணி வரை சிறப்பாக நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான சிறு குழந்தைகள் அரிசியால் அவர்களின் நாக்கு அல்லது மணல் மேல், தங்க மோதிரத்துடன் 'அரிசிரீ' என்ற வார்த்தையை எழுதி, தங்களுடைய கல்வியினைத் தொடங்குகிறார்கள். குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பு இங்கு பஞ்சாமிர்தம், பால்பாயாசம் செய்து படைத்து வழிபடுகிறார்கள்.
குழந்தை பிறக்கவும், அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படுபவர்கள் குணமடைவதற்கும் இங்கு பிரார்த்திக்கிறார்கள். பாட்டு, இசை, நாட்டியம் போன்ற கலைகள் இங்கேயே கற்றுக் கொள்ள தொடங்கப்படுகின்றன. இங்கு வந்து வழிபட்டால் படிப்பில் மேலோங்கி நிற்கலாம் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை.
சரஸ்வதி சூக்தம் விதி தவறாமல் ஜபம் செய்து உருவாக்கிய சுத்தமான நெய், இங்கு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. புத்திக்கும், படிப்பிற்கும் இந்த பிரசாத நெய், மிகவும் உன்னதமானது. நவராத்திரியின்போது, சரஸ்வதியை குழந்தையின் வடிவில் அலங்காரம் செய்து பூஜை செய்யப்படுகிறது.
      
      திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில்
பெருமாளின் எதிரே கருடாழ்வார் இல்லாத திவ்ய தேசம்
கேரள மாநிலம், திருவனந்தபுரம் கோட்டை பகுதியில் அமைந்துள்ள திவ்ய தேசம் பத்மநாபசாமி கோவில். இக்கோவிலில் மூலவர் பத்மநாபசாமி, அனந்தசயனம் எனப்படும் யோக நித்திரையில் (முடிவற்ற உறக்கநிலை, துயிலும் நிலை)ஆழ்ந்திருக்கும் வண்ணம் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். திருவனந்தபுரம் (திரு+அனந்த+புரம்) என்னும் பெயரும் இக்கோவிலில் உள்ள பெருமாளின் பெயரைத் தழுவியே ஏற்பட்டது.
எல்லா பெருமாள் கோவிலிலும், மூலவர் சன்னத்திக்கு எதிரே கருடாழ்வார் இருப்பார். ஆனால் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில், பெருமாளின் மூலஸ்தானம் எதிரே கருடாழ்வார் இருக்க மாட்டார். ஏனென்றால், பெருமாளின் கட்டளைபடி திருவனந்தபுரம் வந்த ராமானுஜரை, திருக்குறுங்குடி கொண்டு விட கருடாழ்வர் சென்றுவிட்டார். அதனால் இத்தலத்தில் பெருமாள் சன்னதி முன்பு கருடாழ்வார் இருக்க மாட்டார்.
      
      பெருநா சுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகன் வேலை தலைகீழாக பிடித்திருக்கும் தலம்
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்கனாச்சேரி அருகே, மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெருநா என்ற ஊரில் அமைந்துள்ளது சுப்பிரமணிய சுவாமி கோவில். கேரளக் கட்டுமானப்பணிகளுடன் அமைந்திருக்கும் இக்கோவிலின் கருவறையில், ஆறடி உயரத்திலான முருகப்பெருமான் கிழக்கு திசை நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். அவரது கையில் இருக்கும் வேல், தலைகீழாக இருக்கிறது. இப்படி, மற்ற முருகன் கோவில்களில் இருந்து வேறுபட்டு, முருகன் வேலை தலைகீழாக பிடித்திருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
முருகன் வேலை தலைகீழாக பிடித்து இருப்பதற்கான காரணம்
சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய முருகப்பெருமான் அசுரர்களை அழிக்கப் போருக்குச் செல்லும் போது முருகப்பெருமானை வாழ்த்திய தந்தை சிவபெருமான், அவருக்குப் பதினொரு ஆயுதங்களைக் கொடுத்தார். தாய் பார்வதிதேவி தன்னுடைய சக்தி அனைத்தையும் சேர்த்து வேல் ஒன்றை உருவாக்கிக் கொடுத்தார். முருகப்பெருமான் தாரகாசுரனுடன் போரிடும் போது முருகப்பெருமானின் தாக்குதலைச் சமாளிக்க முடியாத தாரகாசுரன் எலியாக மாறி, கிரவுஞ்ச மலைக்குள் சென்று பல மாய வித்தைகளைக் காட்டத் தொடங்கினான். அதனைக் கண்டு கோபமடைந்த முருகப்பெருமான், தாய் தந்த வேலாயுதத்தைக் கையில் எடுத்து அந்த மலையை நோக்கி வீசியெறிந்தார். அந்த வேல் கிரவுஞ்ச மலையைப் பல கூறுகளாக்கி உடைத்தெறிந்து, தாரகாசுரனையும் அழித்துத் திரும்பியது. தாரகாசுரனை அழித்த இரத்தம் படிந்த வேலை கையில் பிடித்த முருகப்பெருமான், வேலில் படிந்திருந்த இரத்தம் மண்ணில் இறங்கும்படியாக வேலைத், தலைகீழாகத் திருப்பி தரையில் ஊன்றி நின்றார்.முனிவர்களும், தேவர்களும் மூன்று அசுரர்களில் ஒருவன் அழிந்ததை எண்ணி மகிழ்ந்து, முருகப்பெருமானை வாழ்த்தினர்.சில முனிவர்கள் முருகப்பெருமானைத் தாங்கள் கண்ட அதே தோற்றத்தில் சிலையமைத்து வழிபட்டு வந்தனர்.
பிரார்த்தனை
இக்கோவிலுக்கு வந்து வழிபடுபவர்களுக்கு எதிரிகளின் தொல்லைகள் அனைத்தும் நீங்கும். வளமான வாழ்வு கிடைக்கும். தீராத நோயால் அவதிப்படுபவர்கள், காவடி எடுத்து வந்து வழிபடுவதாக வேண்டிக் கொண்டால், அவர்களின் நோய் நீங்கி நலம் பெறுகிறார்கள்.