திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் கோவில்
கண் நோய் தீர்க்கும் கண்ணாயிரநாதர்
தலையில் குண்டலினி சக்தியுடன் காட்சியளிக்கும் அபூர்வ தட்சிணாமூர்த்தி
நாடிஜோதிடம் துவங்கிய கோவில்
திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலை வழியில் திருவாரூரில் இருந்து 13 கி.மீ. தெற்கே, அமைந்த தேவார தலம் திருக்காரவாசல். இறைவன் திருநாமம் கண்ணாயிரநாதர். இறைவியின் திருநாமம் கைலாச நாயகி. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 119ஆவது சிவத்தலமாகும்.
புராண காலத்தில் இந்தத் தலம் முழுவதும், 'காரகில்' என்ற மரங்கள் அடர்ந்த வனப் பகுதியாக இருந்ததால் 'திருக்காரகில்' என்ற பெயர் பெற்றிருந்தது. அதுவே காலப்போக்கில் 'திருக்காரவாசல்' என்று மருவியது.
இக்கோவில் சப்தவிடங்க தலங்களுள் ஆதி விடங்கத் தலம். திருவாரூர், திருக்கோளிலி, திருமறைக்காடு, திருவாய்மூர், திருநள்ளாறு, திருநாகைக்காரோணம் ஆகியவை மற்ற சப்தவிடங்கத் தலங்களாகும். இங்குள்ள தியாகராஜர் சன்னதி விசேஷம். இவரது நடனம் 'குக்குட நடனம்' என்று வழங்கப்படுகிறது. அதாவது சேவல் அசைந்து செல்வது போல் இருக்கும்.
ஒரு சமயம், பிரம்மாவிற்கு தான் எல்லோரையும் விட பெரியவன் என்ற கர்வம் வந்தது. அதனால் சிவபெருமானைக்கூட வழிபடாமல் அவரை அலட்சியம் செய்தார். சிவபெருமான் அவரது அகத்தையை அகற்றிட எண்ணி அவரது படைக்கும் தொழில் பதவியை அவரிடமிருந்து பறித்து விட்டார்.
பதவி பறிபோன பிரம்மா கர்வம் அடங்கி பின்னர் விஷ்ணுவின் உபதேசத்தால் காரகில் மரங்கள் நிறைந்திருந்த திருக்காராயில் வந்து இறைவனை நினைத்து ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தார். சிவபெருமான், ஆயிரம் கண்களுடன் அவருக்குக் காட்சி தந்தார். கண்ணாயிரநாதர் என்று பெயர் பெற்றார். கருவறையில் கண்ணாயிரநாதர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி அருட்காடசி தருகிறார்.
கண் சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த ஆலயத்தில் தரும் முக்கூட்டு மூலிகையை தேய்த்து பிரம்ம தீர்த்தத்தில் நீராட வேண்டும். பின்னர் பிரசாதமாக தரும் தேனில் ஊற வைத்த அத்திப்பழத்தை பெற்று சாப்பிட்டு வந்தால் விரைவில் கண் சம்மந்தமான நோய்கள் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இங்குள்ள தட்சிணாமூர்த்தி 'ஞான தட்சிணாமூர்த்தியாக' அருள்பாலிக்கிறார். அவர், தலையில் குண்டலினி சக்தியுடன் காட்சியளிப்பது அபூர்வமான ஒன்று. ஞானமகாகுருவின் எதிரில் அகத்தியர் சுவடி படிக்கும் காட்சி அமைந்திருக்கிறது. அதனால் நாடிஜோதிடம் துவங்கிய கோவில் இது என்று கருதப்படுகிறது. இங்குள்ள சேஷ தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானை வழிபாடு செய்தால், பாவங்களும், சாபங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.