திருவேடகம் ஏடகநாதேஸ்வரர் கோவில்
திருஞானசம்பந்தர் சமணர்களுடன் அனல் வாதம். புனல் வாதம் புரிந்த தலம்
மதுரையை ஆண்ட கூன்பாண்டிய மன்னர், சைவ நாயன்மார்களுள் ஒருவர் ஆவார். இவருக்கு நின்றசீர் நெடுமாறன் என்ற பெயரும் உண்டு. இவர் சோழமன்னரின் மகளாகிய மங்கையர்க்கரசியாரின் கணவர். இவர் காலத்தில் சமணர்கள் மிகத் தீவிரமாக சமணசமயத்தைப் பரப்பி வந்தனர். சைவத்தைக் காப்பாற்ற மங்கையர்க்கரசியாரின் அழைப்பின் பேரில் திருஞானசம்பந்தர் மதுரைக்கு வந்தபோது திருநீறு பூசி அரசன் கூன்பாண்டியனின் வெப்ப நோய் நீங்க உதவினார். இதனால் சமணர்கள் ஆத்திரமுற்று திருஞானசம்பந்தரை அனல் வாதம். புனல் வாதம் புரிய அழைத்தனர்.
சமணர்கள் தாங்கள் எழுதிய ஏட்டை தீயில் இட்ட போது அது எரிந்து சாம்பல் ஆயிற்று. ஆனால் திருஞானசம்பந்தர் திருநள்ளாற்றுப் பதிகம் எழுதிய ஏட்டை தீயில் இட்ட போது அது எரிந்து சாம்பல் ஆகாமல் பச்சையாகவே இருந்தது. பின்பு புனல் வாதத்தின் போது சமணர்கள் எழுதிய ஏட்டை வைகை ஆற்றில் விட்ட போது அது ஆற்றுடன் சென்றது. ஆனால் திருஞானசம்பந்தர் 'வாழ்க அந்தணர்' என்று தொடங்கும் பதிகம் எழுதியிட்ட ஏட்டை வைகை ஆற்றில் விட்ட போது அது வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்து சென்றது. மதுரை பாண்டிய மன்னனின் மந்திரி குலச்சிறையார் என்பவர் குதிரையின் மீதேறி வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்து செல்லும் ஏட்டைப் பின் தொடர்ந்து செல்ல அது ஓரிடத்தில் வைகை ஆற்றின் கரையில் ஒதுங்கியது. பாண்டிய மன்னன் ஏடு ஒதுங்கிய இடத்தில் ஒரு சிவலிங்கத்தைக் கண்டு அங்கு ஒரு கோவில் எழுப்பினான். அதுவே திருவேடகம் என்ற தேவார பாடல் பெற்ற தலம் ஆனது.
இத்தலத்தில் ஒரு நாள் தங்கி இருந்து இறைவனை முழுமனதுடன் பூஜை செய்து வழிபட்டால் காசியில் ஆயுள் முழுவதும் வாழ்ந்த புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த கோயிலில் உள்ள கால பைரவர் சன்னதி மிகவும் விசேஷமானது வைகை நதிக்கரையில் பித்ரு காரியங்கள் மற்றும் அவர்கள் இறந்த திதி போன்ற நாட்களில் பூஜைகள் செய்வது மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. இத்தலம் காசிக்கு நிகராகக் கருதப்படுவதால் முன்னோர் வழிபாடுகள் இத்தலத்தில் செய்யலாம். நம் முன்னோர்களின் முக்தி அடையை மோட்ச தீபம் ஏற்றும் பழக்கம் இக்கோவிலில் உள்ளது.
இக்கோவில் பிரம்ம தீர்த்தக் குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டால், சித்த பிரமை நீங்குவது தலத்தின் தனி சிறப்பாகும்.
திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் கோவில்
ஒரே வரிசையில் நிற்கும் நவக்கிரகங்கள்
திருவாரூரில் இருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருக்குவளை. நவக்கிரகங்களின் குற்றம் நீக்கியருளியதால், இத்தல இறைவனுக்கு கோளிலிநாதர் என்ற திருநாமம் ஏற்பட்டது. இங்கு,நவக்கிரகங்கள் தங்கள் தோஷம் நீங்க, தென்திசை நோக்கி வக்கிரமின்றி வரிசையாக நின்று இறைவனை வழிபட்டதால், இக்கோவிலில், அவை ஒரே திசை நோக்கி வரிசையாக காட்சி அளிக்கின்றன. இதனால், கோளிலிநாதரை வழிபடுவோருக்கு நவக்கிரகங்களின் தோஷம் நீங்கும் என்பது இத்தலத்தின் சிறப்பு. இதனையே, 'கோளாய நீக்குமவன் கோளிலி எம்பெருமான்' என்று தேவாரப்பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார் திருஞானசம்பந்தர்.
திருக்கோடிக்காவல் கோடீசுவரர் கோவில்
சனி பகவான் தலையில் சிவலிங்கம்
கும்பகோணத்துக்கு அருகில் திருக்கோடிக்காவல் கோடீசுவரர் கோவில் என்ற தேவாரப் பாடல் பெற்ற தலம் உள்ளது.இங்குள்ள சிவாலயத்தில் அமைந்துள்ள சனி பகவான் தலையில் சிவலிங்கம் ஒன்று உள்ளது.இந்த சனி பகவான் 'பால சனி' என்று அழைக்கப்படுகிறார். பொதுவாக சனி பகவானுக்கு காகம்தான் வாகனமாக இருக்கும். ஆனால் இங்குள்ள சனி பகவானுக்கு கருடன் வாகனமாக அமைந்திருக்கிறது.மூலவர் கோடீசுவரர் கருவறை செல்லும் வழியில் இருபுறமும் சித்தரகுப்தரும், எமதர்மனும் உள்ளனர். இக்கோவிலில் சனீஸ்வரனை எமதர்மன்பார்ப்பது போன்றும் எமதர்மனை சனீஸ்வரர் பார்ப்பது போன்றும் அமைந்து இருக்கின்றது. இங்கு சுவாமியின் இடப்புறமாக சித்திரகுப்தன் இருக்கிறார் சனிபகவான், எமதர்மராஜன், சித்திரகுப்தன் இவர்கள் மூவரையும் தரிசித்த பின்பு தான் மூலவரை தரிசிக்க முடியும்.சனி பகவானுடைய நீதிமன்றமாக திருக்கோடிக்காவல் அமையப் பெற்றுள்ளது.நமது பாவ புண்ணிய வரவு செலவு கணக்குப்படி, நமது பால்ய வயதில் அஷ்டமச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனி, மரணச் சனி என்ற அனைத்து சனி திசைகளுக்கும், இத்தலமே நிவர்த்தி செய்யும் இடமாகும். நமது பால்ய வயதில் ஏற்பட்ட பாவ புண்ணிய வரவு-செலவு கணக்குகளை சரி பார்க்க கூடிய இடம் திருக்கோடிக்காவல். உலகத்தின் நீதிபதியாகிய பால சனீஸ்வரர் நமது பாவ புண்ணிய வரவு செலவு கணக்குகளை ஆராய்ந்து, அதை சித்திரகுப்தன் சரி பார்த்து எமதர்மனிடம் தீர்ப்பு சொல்லப்படுகிறது. தீர்ப்புக்கான பரிகார நிவர்த்தி இத்தலத்தில் செய்யப்படுகிறது. சாதாரணமாக இத்தலத்தில் யாரும் வழிபட்டு விடமுடியாது யாருக்கு எந்த வயதில் இந்த ஊழ்வினை கர்மா தீர்க்கப்படுகிறதோ, அவர்கள் மட்டுமே இத்தலத்திற்கு சென்று வழிபட முடியும். சனீஸ்வரனின் மனைவியான ஜேஷ்டாதேவி, மகன் மாந்தி, மகள் மாந்தாவுடன் உள்ள சிலை உள்ளது. மாந்தாவின் கையில் தாமரை மலரும், மாந்தியின் முகம் ரிஷப முகமாயும், இம்மூன்றும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டு அற்புதமாய் காட்சியளிக்கிறது.
திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் கோவில்
சரும நோய்களைத் தீர்க்கும் அம்பிகை
தேவாரத் தலமான திருக்காரவாசல் இறைவன் பெயர் கண்ணாயிரநாதர். இறைவியின் பெயர் கைலாச நாயகி. கைலாசநாயகி. நின்ற கோலத்தில் ஒரு கையில் அக்கமாலையுடனும், மற்றதில் தாமரையுடனும் தெற்கு நோக்கி தரிசனம் தருகிறாள். இக்கோவிலில், ஓரிடத்தில் நின்று நேரே சிவபெருமானையும் வலதுபுறம் அம்பாளையும் தரிசிக்கும்படியாக சன்னதிகள் அமைந்துள்ளன.இத்தலத்து அம்பிகை "பஞ்ச்சதசா ஷர" சொரூபிணியாக விளங்குகிறாள் என்று புராணங்கள் கூறுகின்றன. இத்தலத்தில் அம்பிகைக்குத் தனிச் சிறப்பு உண்டு. மக்கள் செய்த பாவங்களால் உலகில் தலங்கள் மகிமை குன்றிய காலத்தில் பராசக்தியே இத்தலத்தை உயர்த்தினார் என்பது புராண வரலாறு. கைலாசநாயகிக்கு நடைபெறும் மாதாந்திர பௌர்ணமி அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதில் வைத்துத்தரும் சேஷ தீர்த்தத்தை ஒரு மண்டலம் சாப்பிட்டுவர தீராத நோய்களும் , முக்கியமாக சரும நோய்களும் தீர்கின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பாமணி நாகநாத சுவாமி கோவில்
நான்கு சிங்கங்களின் மேல் அமர்ந்து இருக்கும் தட்சிணாமூர்த்தி
மன்னார்குடிக்கு வடக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் பாமணி. இறைவன் திருநாமம் நாகநாத சுவாமி. இறைவியின் திருநாமம் அமிர்தநாயகி.
இத்தலத்தில் குருபகவான் நான்கு சிங்கங்களின் மேல் அமர்ந்து சிம்ம தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிப்பதால், இவரை வழிபடுபவர்களுக்கு சிம்ம குருவின் அருள் கிடைக்கும். ஒருமுறை தட்சிணாமூர்த்தியின் சீடர்கள் நால்வரும் விஷ்ணுவை தரிசிக்க வைகுண்டம் சென்றார்கள். அப்போது இவர்களை துவார பாலகர்கள் தடுத்தனர். கோபம் கொண்ட முனிவர்கள், அவர்களுக்கு சாபம் கொடுத்தனர். இதனால் முனிவர்களுக்கு தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் நீங்க பாமணி நாகநாதரையும், சிம்ம தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு தங்கள் தோஷம் நீங்கப் பெற்றனர்.
சிம்மம், கும்பம், கடகம், தனுசு, மேஷம், விருச்சிகம் ராசிக்காரர்களும், லக்னத்திற்குரியவர்களும் சிம்ம தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் சிறப்பான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை.
கபிஸ்தலம் கஜேந்திரவரதன் கோவில்
இரண்டு விலங்கினங்களுக்கு பெருமாள் காட்சி கொடுத்த திவ்ய தேசம்
தஞ்சை மாவட்டத்தில் உள்ள பாபநாசம் ரெயில் நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள திவ்ய தேசம் கபிஸ்தலம். இக்கோவிலில் உள்ள மூலவரான கஜேந்திர வரதன் கிடந்த கோலத்தில் புஜங்க சயனமாக சேவை தருகின்றார். இவர் தனது பக்தனாக விளங்கிய கஜேந்திரன் என்ற யானைக்கும் ஆஞ்சநேயருக்கும் பிரதியட்சம் ஆனவர். 108 திவ்ய தேசங்களில் இரண்டு விலங்கினங்களுக்கு பெருமாள் காட்சி கொடுத்தது இந்த திவ்ய தேசத்தில் மட்டும்தான்.
ஆவூர் பசுபதீஸ்வரர் கோவில்
பிதுர் தோஷத்தை நிவர்த்தி செய்யும் பஞ்ச பைரவர்கள்
கும்பகோணத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேவாரத் தலம் ஆவூர். இங்கு பசுபதீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இறைவன் திருநாமம் பசுபதீஸ்வரர். இத்தலத்தில் பங்கஜவல்லி , மங்களாம்பிகை என்ற திருநாமம் தாங்கி இரண்டு அம்பிகைகள் அருள் புரிகிறார்கள்.
இந்தக் கோவிலின் முக்கிய சிறப்பம்சமாக பஞ்ச பைரவ மூர்த்திகள் உள்ளனர். ஐந்து பைரவர்களும் ஒரே பீடத்தில் வீற்றிருக்கிறார்கள். இக்கோவிலில் மங்களாம்பிகை அம்மனை பிரதிஷ்டை செய்யும்போது, ஹோமத்திலிருந்து பஞ்ச பைரவர்கள் வெளிப்பட்டனர். அவர்களையும் பிரதிஷ்டை செய்து ஆராதனைகள் செய்தால் பித்ருசாபம் நீங்கப் பெறும் என அசரீரி ஒலித்துள்ளது. அதன்படி பஞ்ச பைரவர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டனர். பஞ்ச பைரவர்களை வழிபட்டதன் மூலம் தசரத மன்னனின் பித்ரு சாபம் விலகியது. எனவே இத்தலம் பித்ரு சாப நிவர்த்தித் தலமாக விளங்குகின்றது.
பிதுர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த பஞ்ச பைரவர்களை வழிபாடு செய்து வந்தால் உடனடியாக பலன் கிடைக்கும் .ஒரு சிலர் நிறைய சம்பாதிப்பார்கள். இருந்தாலும் கடன் தீராது. இன்னும் சிலருக்கு நல்ல திறமைகள் இருக்கும். ஆனால் சரியான வேலையும் வாய்ப்புகளும் அமையாமல் வருமானம் இன்றி இருப்பார்கள். பல பேர் அனைத்து செல்வங்களையும் பெற்று இருப்பார்கள். ஆனால் வாழ்வில் நிம்மதி இருக்காது. அப்படிப்பட்டவர்களின் அந்த நிலைக்கு பிதுர் தோஷம் தான் காரணம். அவர்கள் அனைவரும் இத்தல பஞ்ச பைரவர்களை வழிபட்டு பிதுர் தோஷத்தை போக்கி வாழ்வில் வளம் பெறலாம். இவர்களை தேய்பிறை அஷ்டமி தினத்தில் வழிபாடு செய்தால் அனைத்து துன்பங்களும் நீங்கும். குறைவான வருமானம் கடன் சிக்கல்கள், வேலைவாய்ப்பின்மை, திருமண சிக்கல்கள் போன்றவைகள் பிதுர் தோஷ காரணத்தினால் கூட ஏற்படலாம். அதனை இந்த தலத்தில் உள்ள பஞ்ச பைரவர்களை வழிபாடு செய்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
கீவளூர் கேடிலியப்பர் கோவில்
தேவாதி தேவர்கள் இன்னிசைக்க நடராஜர் வலது காலைத் தூக்கி ஆடும் அபூர்வக் காட்சி
பொதுவாக சிவாலயங்களில் நடராஜர் தன் இடது காலைத் தூக்கி ஆடும் தாண்டவக் கோலத்தைதான் நாம் தரிசிப்போம். ஆனால், நடராஜர் தன் வலது காலைத் காலைத் தூக்கி ஆடும் அபூர்வக் காட்சியை நாம் மதுரை மற்றும் கீவளூரில் மட்டுமே தரிசிக்க முடியும்.
தேவாரத் தலமான கீவளூர் கேடிலியப்பர் கோவில், நாகப்பட்டிணம்-திருவாரூர் சாலையில் 12 கீ.மீ. தொலைவில் உள்ளது.
நடராஜரின் அபூர்வத் தாண்டவக் கோலத்தின் பின்னணி நிகழ்ச்சி
ஒரு சமயம், பரமேசுவரன்-பார்வதி திருமணத்தைக் காண தேவர்கள், முனிவர்கள் முதலானோர் கைலாயத்தில் கூடினர். அதனால் உலகத்தின் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது.இதனை சரி செய்ய அகத்திய முனிவரை சிவபெருமான் தென் திசைக்கு அனுப்பினார். அகத்திய முனிவர் தென் திசை வந்து பஞ்சாட்சர மந்திரத்தை ஒதி வழிபட்டதும் உலகம் சமன் நிலையடைந்தது. தன் பணியை முடித்த அகத்திய முனிவருக்கு இறைவனின் திருமணக் கோலத்தைக் காண ஆசை ஏற்பட்டது. அதற்கு சிவபெருமான் அகத்திய முனிவர் விரும்பும் தலத்தில் தன் திருமணக் கோலத்தைக் காணலாம் என அருளினார். அதனபடி திருமறைக்காடு தலத்தில் அகத்திய முனிவர் சிவ பூஜை செய்து வேண்டியபோது தனது திருமணக் கோலத்தை சிவபெருமான் அவருக்கு காட்டி அருளினார். அதைக் கண்டு மனமகிழ்ந்த அகத்திய முனிவர், அடுத்து இறைவனின் வலது பாத தரிசனம் கிடைக்க வேண்டினார். அதற்கு சிவபெருமான், அகத்திய முனிவரை பத்ரிகாரண்யத் தலத்தில் (கீவளூரின் புராணக் காலப் பெயர்) தன்னை பூஜை செய்து வழிபடும்படியும், அங்கு அவருக்கு தன் விக்ஷேச வலது பாத தரிசனத்தைத் தருவதாகவும் அருளினார்.
அகத்திய முனிவர் கீவளூர் தலத்துக்கு வந்து சிவபெருமானை வழிபடலானார். சிவபெருமான்,ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று அகத்திய முனிவருக்கு கால் மாறி ஆடி, தன் வலது பாத தரிசனத்தைக் காட்டி அருளினார். அப்போது நடராஜப் பெருமானும், சிவகாமி அம்மையும் தாணடவமாட அதற்கு விநாயகரும், முருகப்பெருமானும் பாட்டுப் பாட, பிரம்மா தாளம் போட, சரஸ்வதி வீணை வாசிக்க, விஷ்ணு மத்தளம் வாசிக்க, மகாலஷ்மி கர தாளம் போட, இந்திரன் புல்லாங்குழல் வாசிக்க, வியாக்ரபாத முனிவர், பதஞ்சலி முனிவர் உடனிருக்க அகத்திய முனிவருக்குக் காட்சி தந்தார்.
ஆனித் திருமஞ்சனம்
இத்தல நடராஜப் பெருமானுக்கு ஆண்டுக்கு ஒரு முறை ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று காலைத் திருமஞ்சனமும், மாலை சுவாமி-அம்பாள் திருக்கல்யாணமும் நடைபெறும். இந்த ஆண்டு 22.6.2026 திங்கள் கிழமையன்று ஆனித் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.
கதிராமங்கலம் வனதுர்கா பரமேஸ்வரி அம்மன் கோவில்
கம்பருக்கு அருளிய துர்க்கை
மயிலாடுதுறையில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது கதிராமங்கலம் வன துர்க்கை அம்மன் கோவில். கதிராமங்கலம் தலத்துக்கு அருகில் அமைந்திருக்கிறது தேரழுந்தூர். கம்பர் வசித்த ஊர் இது. தேரழுந்தூரில் வாழ்ந்து வந்த கவிச்சக்கரவர்த்தி கம்பர் அன்னை வனதுர்க்கையின் மேல் அளவு கடந்த பக்தி கொண்டவர். இவளை வழிபடாமல் எந்த ஒரு செயலையும் துவங்குவதில்லை. ஒருநாள் மழைக் காலத்தில் கம்பர் வீட்டுக் கூரை சிதைந்தது. வீட்டுக்குள் மழை நீர் கொட்டியது. அப்போது கம்பர் மனமுருகி, "அம்மா! அடைமழை இடைவிடாது பெய்கிறதே. ஒரு கூரைகூட இல்லாமல் நீயே நனைந்தபடி நிற்கிறாய்! உன் அருள் மழை என்றும் என்னைக் காக்கும்' என்று மழையைப் பொருட்படுத்தாது ஆழ்ந்த உறக்கத்தில் ஈடுபட்டார். காலை விழித்தெழுந்து பார்த்தபோது அவர் வீட்டுக் கூரை நெற்கதிர்களால் வேயப்பட்டு இருந்ததைக் கண்டு வியந்து, "கதிர்தேவி, கதிர்வேய்ந்த மங்களநாயகி' என பாடிப் பரவினார். கதிர் வேய்ந்த மங்கள நாயகி இருக்குமிடம் கதிர் வேய்ந்த மங்களம் என்று அழைக்கபடலாயிற்று. பின்னர், கதிர் வேய்ந்த மங்களம் என்பதே கதிராமங்கலம் என மருவியது.
திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோயில்
அபரஞ்சி தங்கத்தினால் செய்யப்பட்ட அழகர் விக்ரகம்
திருமாலிருஞ்சோலை உற்சவமூர்த்திக்கு அழகர் என்றும், சுந்தரராஜன் என்றும் திருநாமங்கள். இந்த அழகர் விக்ரகம் அபரஞ்சி என்ற உயர்ரக தங்கத்தினால் செய்யப்பட்டது.
’அபரஞ்சி’ என்பது தேவ லோகத் தங்கம் என்பதால், இந்தப் பெருமாளையும் தேவலோகப் பெருமாளாக பக்தர்கள் வணங்குகிறார்கள்.உலகத்திலேயே அபரஞ்சி தங்கத்திலான பெருமாள் சிலைகள் இரண்டு இடங்களில்தான் இருக்கின்றன. ஒன்று அழகர் கோவிலில், இன்னொன்று திருவனந்தபுரத்தில் உள்ள அனந்த பத்மநாபசுவாமி கோவிலில்.
அழகர் விக்ரகத்துக்கு இப்பகுதி மலைமேல் உள்ள நூபுர கங்கை நீரால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. பிற நீரால் அபிஷேகம் செய்தால் விக்கிரகம் கருத்து விடும் என்ற அச்சமே காரணம்.
திருக்கண்ணங்குடி லோகநாதப் பெருமாள் கோவில்
மூலவரும், உற்சவரும் ஒரே தோற்றம் கொண்டிருக்கும் திவ்ய தேசம்
திருக்கண்ணங்குடி என்னும் திவ்ய தேசம் திருவாரூரிலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இத்தலத்தில் உள்ள மூலவர் திருநாமம் லோகநாதப் பெருமாள். தாயார் லோகநாயகி. உற்ஸவர் தாயாரின் திருநாமம் அரவிந்தநாயகி..திருக்கண்ணன்குடியின் சிறப்பு என்னவென்றால், தாயார் சந்நிதியில் உள்ள மூலவரும் உற்ஸவரும் ஒரே முக சாயலில் இருப்பது தான். இது வேறு எங்கும் காணமுடியாத அழகு என்பர். கல்லால் ஆன மூலவரைப் போலவே உலோகத்தால் ஆன உற்சவரும் அதே கண்கள், மூக்கு, வாய் என்று அச்சு எடுத்தாற்போல அமைந்திருக்கும் தோற்றம் உவகை கொள்ள வைக்கிறது. இது வேறு எங்கும் காணமுடியாத அரிய காட்சியாகும்.
தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில்
அரிதான கோலத்தில் காட்சியளிக்கும் தட்சிணாமூர்த்தி
பொதுவாக தட்சிணாமூர்த்தி ஒரு காலை மடக்கி, ஒரு காலை தொங்கவிட்டிருப்பார். ஆனால், கடலூரில் இருந்து 18 கி.மீ., தூரத்திலுள்ள தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில் கோஷ்டத்தில் (சுவாமிசன்னதி சுற்றுச்சுவர்) அருள் பாலிக்கும் தட்சிணாமூர்த்தி, இரு கால்களையும் மடக்கி, பீடத்தின் மீது அமர்ந்து காட்சி தருகிறார். காலுக்கு கீழே முயலகனும் இல்லை. இது ஒரு அரிதான காட்சியாகும்.
ஒருசமயம் இத்தலத்தில் வாழ்ந்த விவசாய தம்பதியினரான பெரியான் மற்றும் அவன் மனைவியின் பக்தியை உலகுக்கு உணர்த்த விரும்பிய சிவபெருமான், அவர்கள் வயலில் வேலை செய்ததற்கு கூலியாக கொடுத்த உணவை கால்களை மடக்கி தரையில் அமர்ந்து உண்டார். அந்த நிகழ்ச்சியை குறிப்பிடும் வகையில்தான் தட்சிணாமூர்த்தி இரு கால்களையும் மடக்கி அமர்ந்திருக்கிறார்.
இவரிடம் வேண்டிக்கொண்டால் உணவிற்கு பஞ்சம் வராது என்றும், மேலும் விவசாயம் செழிக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில்
இந்திரன் இடியாய் இறங்கி பெருமாளை தரிசிக்கும் தலம்
கொங்கு நாட்டில் உள்ள புகழ் பெற்ற வைணவத் தலங்களில் ஒன்றான நைனாமலை வரதராஜ பெருமாள் கோயில், சேலம்- நாமக்கல் நெடுஞ்சாலையில் உள்ள புதன் சந்தையில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தாயார் குவலய வல்லி. நயன மகரிஷி இந்த மலையில் தவம் செய்து பெருமாளின் தரிசனம் பெற்ற தலம் ஆகையால் இது நைனாமலை என்று பெயர் பெற்றது. சுமார் 3,700 படிகள் கொண்ட இந்த மலையின் உச்சியில் உள்ள 120 அடி உயரம் கொண்ட ஒரே பாறை மீது, இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. கர்ப்பக் கிருகத்தின் உள்ளே ஶ்ரீ வரதராஜப் பெருமாள் பூதேவி, ஶ்ரீதேவியரோடு பக்தர்களுக்கு ஏற்படும் இன்னல்களை விரட்ட கையில் தண்டம் தரித்து தரிசனம் அளிக்கிறார். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, இந்திரன் இடியாய் இந்த மலையில் இறங்கி பெருமாளை தரிசிப்பதாக நம்பப்படுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோயிலில் ஆனி முதல் நாளில் இருந்து ஆடி 30ம் தேதி வரை, சூரியஒளி சுவாமி மீது விழுந்து கொண்டே இருப்பது வேறு எங்கும் காண முடியாத வியப்பான அம்சமாகும். இதுபோல் தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் மூலவர் மீது சூரிய ஒளி படுவது வேறு எங்கும் கிடையாது.
செம்பொனார் கோவில் சுவர்ணபுரீஸ்வரர் கோவில்
தாய்க்கு உபதேசம் செய்த முருகன்
தன் தாய் பார்வதிக்கு உபதேசம் செய்த முருகன், செம்பொனார் கோவிலில் அருள் பாலிக்கின்றார். இத்தலம் மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. மூலவர் சுவர்ணபுரீஸ்வரர், இறைவியின் திருநாமம் சுகந்த கும்பளாம்பிகை.ஒருமுறை சிவனின் பேச்சையும் மீறி பார்வதி, தன் தந்தையான தட்சன் நடத்திய யாகத்தில் பங்கேற்றாள். இதனால் சிவனின் கோபத்திற்கு ஆளானாள். குடும்ப நிம்மதிக்கு ஒற்றுமை அவசியம் என்பதை உணர்த்தும் விதத்தில் தாய் பார்வதிக்கு உபதேசித்தார் முருகன். மனம் திருந்திய அவள், அக்னியின் நடுவில் அமர்ந்து தன் குணத்தை மாற்ற தவமிருந்தாள். இதற்காக அவள் தேர்ந்தெடுத்த தலமே செம்பொனார் கோயில். செம்பொன் என்பதற்கு 'துாய தங்கம்' என்பது பொருள். தவத்தின் முடிவில் தங்கம் போல் மாசு மருவற்றவளாக வெளி வந்து சிவபெருமானுடன் இணைந்தாள். உபதேசித்ததை குறிக்கும் விதமாக முருகன் அட்சர மாலையுடன் இருக்கிறார்.சிறந்த கணவர் கிடைக்க பெண்கள் இங்கு வழிபடுகின்றனர். திருமாலை அடைய லட்சுமியும், மன்மதனை அடைய ரதியும் வழிபட்டனர். சித்திரை 7 முதல் 18 வரை சிவனை வழிபடும் விதத்தில் சூரியக்கதிர்கள் மூலவர் மீது விழுகிறது. இதனை 'சூரியத் திருவிழா' என்கின்றனர்.
திருவானைக்காவல் பஞ்சமுகேஸ்வரர் கோவில்
ஐந்து முகங்கள் கொண்ட சிவலிங்கம்
திருச்சியில் திருவானைக்காவல் கோவில் அருகே பஞ்சமுகேஸ்வரர் கோவில் உள்ளது. இறைவன் திருநாமம் பஞ்சமுகேஸ்வரர். இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி.
கருவறையில் பஞ்சமுகேஸ்வரர் கிழக்கு திசையை நோக்கி ஐந்து முகங்கள் கொண்ட சிவலிங்க உருவில் அருள்பாலிக்கிறார். சிவலிங்கத்தின் நான்குபுறமும் முகங்கள் இருக்க, லிங்கமும் ஒருமுகமாக கணக்கிடப்பட்டு பஞ்ச முகமாக காட்சி தருகிறார். பஞ்சமுக லிங்கத்தின் ஆவுடையார், ஒ ரு தாமரைப் பீடத்தின் மேல் அமைந்திருப்பது தனிச் சிறப்பாகும். நான்கு திசைகளையும் பார்க்கும்படி முகங்கள் அமைந்திருப்பதால், எந்த திசையில் இருப்பவரையும் இவர் காப்பாற்றுவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இக்கோவிலில் பஞ்சமுகேஸ்வரர் சன்னதி எதிரிலேயே திரிபுரசுந்தரி அம்மன் சன்னதி அமைந்திருக்கிறது. இதனால் நாம் இருவரையும் ஒரு சேர தரிசிக்க முடியும். இப்படி இறைவன் இறைவி சன்னதிகள் எதிர் எதிரில் அமைந்திருப்பது அபூர்வமானது. இப்படி இருவரையும் தரிசிப்பதால், திருமணம் கைகூடும. மங்கலங்கள் வந்து சேரும் என்பது ஐதீகம்.
இந்தக் கோவிலில் சஷ்டி அப்த பூர்த்தியை செய்வது விசேஷமாகும்.
வீரக்குடி முருகய்யனார் கோவில்
பாம்பின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் முருகன்
விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகேயுள்ள வீரக்குடியில் அமைந்துள்ளது முருகய்யனார் கோயில். பச்சைப் பசேலென்ற வயல் வெளிகளுக்கு இடையே அமைந்துள்ள இக்கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது. இத்தல மூலவர் முருகைய்யா பாம்பின் மீது அமர்ந்தவாறு உள்ளது தனிச்சிறப்பாகும். கண்மாய்க் கரையில் எழுந்தருளி உள்ளதால் கரைமேல் முருகன் என்று அழைக்கப்படுகிறார்.
முன்னொரு காலத்தில் ஒரு பெண்மணி வீரக்குடியில் பால் வியாபாரம் செய்து வந்தாள். வீரக்குடியிலிருந்து பாலினை, அவர் கண்மாய்க் கரை வழியாய் வியாபார்ததிற்கு எடுத்துச் செல்லும் போது வள்ளிக் கொடியில் கால் இடறி பால் சிந்தியது. தற்செயலாக நடந்தது என்று நினைத்து வி்ட்டுவிட்டாள், ஆனால் இது தொடர்ந்து நிகழ்ந்தது. அதனால் தனது வியாபாரம் பாதிக்கப்படுவதைக் கண்டு கோபத்தால் ஒரு கோடரியை வைத்து அக்கொடியை வெட்டினாள். அதிலிருந்து ரத்தம் பீரிட்டுவர பயந்து ஊருக்குள் ஓடினாள். அங்கிருந்தவர்களின் துணையோடு அவ்விடத்திற்கு வந்தாள், அக்கூட்டத்திலிருந்த பெரியவர் அங்கு தோண்டிப் பார்க்கும் படி கூற அங்கு முருகன் சிலை கிடைத்தது. பின்னர் முறைப்படி ஆலயம் கட்டி அதில் முருகன் சிலையை பிரதிஷ்டை செய்தனர்.
இரத்த சிவப்பு நிறத்தில் காணப்படும் மண்
வள்ளிக் கொடியிலிருந்து இரத்தம் வந்த இடத்தினை வீரத்திடல் என்று இன்றும் அழைக்கப்பட்டு வரும் இடத்தில் மற்ற பகுதி மண்ணைவிட இங்குள்ள மண் இரத்த நிறத்தில் காணப்படுவது அதிசயம்.
பிரசித்தி பெற்ற மகா சிவராத்திரி விழா
சகட தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பிரச்சனைகள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இக்கோவிலில் தைப்பூசம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், கார்த்திகை தீபம் முதலிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. குறிப்பாக மகாசிவராத்திரியன்று வெளி ஊர்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து இத்தல முருகனை வழிபடுகிறார்கள்.
திருக்களர் பாரிஜாதவனேசுவரர் கோவில்
நடராஜ பெருமானின் இரண்டாவது தாண்டவ தலம்
திருத்துறைப்பூண்டியில் இருந்து வடமேற்கே 10 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத்தலம் திருக்களர். இறைவன் திருநாமம் : களர்முளை நாதர், பாரிஜாதவனேசுவரர். இறைவி : இளங்கொம்பன்னாள், அமுதவல்லி, அழகேசுவரிதுர்வாச முனிவர், சிவபெருமானின் ஆனந்த தாண்டவ தரிசத்தைப் பெற விரும்பினார். திருக்களர் தலத்தின் மகிமையை உணர்ந்து தேவலோகத்தின் சிறந்த மலரான பாரிஜாதத்தை கொண்டு வந்து இங்கு வளர்க்கலானார். அது நாளடைவில் மிகவும் பெருகி பாரிஜாத வனமாயிற்று. பிறகு துர்வாச முனிவர் ஒரு சிவலிங்கம் அமைத்து பாரிஜாத மரத்தடியில் பிரதிஷ்டை செய்து பக்கத்தில் அம்மனையும் பிரதிஷ்டை செய்து, தேவதச்சன் மூலமாக இக்கோயிலை எடுப்பித்தார். இத்தலத்தில் துர்வாச முனிவருக்கு இறைவன் நடராஜர் பிரம்ம தாண்டவ தரிசனம் கொடுத்தருளியதால் துர்வாசர் இத்தலத்தில் எப்போதும் நடராஜ பெருமானின் பிரம்ம தாண்டவத்தை தரிசித்துக் கொண்டிருக்கிறார் என்பது ஐதீகம். இதன் அடையாளமாக இவ்வாலயத்தில் துர்வாசர் சந்நிதியும், நடராஜர் சந்நிதியும் எதிரெதிரே அமைந்துள்ளது. நடராஜ பெருமானின் 8 தாண்டவ தலங்களுள் இரண்டாவது தலமாக திருக்களர் தலம் அமைந்திருக்கிறது. சிவபெருமான் நர்த்தனக் கோலம் காட்டிய இடம் என்பதனால் களரி (நடன சபை) என இத்தலம் அழைக்கப்பட்டு, பின்பு களர் என மருவியது. இத்தலத்தில் வழிபாடு செய்தால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மோட்சம் கிடைக்கும். கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும் என்பதும் ஐதீகம்.
கதிராமங்கலம் வனதுர்கா பரமேஸ்வரி கோயில்
முன்புறம் துர்க்கையாகவும் பின்புறம் சர்ப்ப தோற்றத்திலும் காட்சி தரும் வனதுர்கா பரமேஸ்வரி.
மயிலாடுதுறையில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது கதிராமங்கலம் வன துர்க்கை அம்மன் கோவில். கதிராமங்கலம் தலத்தில் அருள்பாலிக்கும் அன்னை வனதுர்கா பரமேஸ்வரி, முன்புறம் துர்க்கையாகவும் பின்புறம் சர்ப்ப தோற்றத்திலும் காட்சி தருகிறாள். இன்றும் அம்பிகையின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடியில் இந்த சர்ப்ப தரிசனத்தை காணலாம்.
சிவ பூஜைக்காக மலர் பறிக்க வந்த ராகுவே வனதுர்கா பரமேஸ்வரியை அடையாளம் கண்டு முதலில் பூஜித்திருக்கிறார். ராகுவே அன்னையை இங்கு ஸ்தாபித்தாக ஐதீகம். அதனாலேயே இது ராகு பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. வனதுர்கா பரமேஸ்வரிக்கு அர்ச்சனை செய்யும் போது அவளது வலது உள்ளங்கையில் வியர்வை முத்துக்கள் வெளிப்படுகின்றன.இது இன்றும் நடக்கும் அதிசயமான நிகழ்வாகும்.
நாகலாபுரம் வேத நாராயண சுவாமி கோவில்
பாதி மனித உருவமும் மீதி மீன் வடிவமும் கொண்ட பெருமாள்
சென்னை-திருப்பதி சாலையில் ஊத்துக்கோட்டையைத் தாண்டி, , ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தின, நாகலாபுரம் என்ற ஊரில் உள்ளது வேத நாராயண பெருமாள் கோவில். பெருமாளின் திருநாமம் வேத நாராயணப் பெருமாள். தாயாரின் திருநாமம் வேதவல்லித்தாயர். இத்தலத்தில், திருமால் மச்சவடிவில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக காட்சி தருவது, இத்தலத்தின் சிறப்பாகும். திருமால், தலையிலிருந்து இடுப்பு வரை மனித வடிவமும், இடுப்புக்கு கிழே மீன் வடிவமும் கொண்டுள்ளார்.திருமாலின் தசாவதாரங்களில் முதல் அவதாரம், மச்ச அவதாரமாகும். கோமுகன் என்னும் அசுரன், பிரம்மனிடம் இருந்து நான்கு வேதங்களைத் திருடி, மீன் வடிவில் கடலுக்கு அடியில் சென்று ஒளிந்து வைத்து கொண்டான் . திருமால் மச்ச வடிவில் அவதாரம் எடுத்து, கடலுக்கு அடியில் அசுரனை வதைத்து வேதங்களை மீட்டு பிரம்மாவிடம் ஒப்படைத்தார். நான்கு வேதங்களை மீட்டு பிரம்மாவிற்கு இத்தலத்தில் கொடுத்ததன் காரணமாக, இத்தலத்து பெருமாளின் திருப்பெயர் வேத நாராயணப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறது.
கோவிலடி அப்பக்குடத்தான் கோவில்
அப்பக்குடம் ஏந்திய பெருமாள்
தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு அருகில் உள்ள திவ்ய தேசமான கோவிலடி தலத்து பெருமாள் அப்பக்குடத்தான்,தனது வலது திருக்கரத்தில் அப்பக்குடத்தை அணைத்தவாறு சயனத் திருக்கோலத்தில் காட்சி தருகிறார். 108 திருப்பதிகளுள் இத்தல பெருமாளுக்குதான் தினமும் இரவில் அப்பம் செய்து படைக்கப்படுகிறது. பெருமாளின் பஞ்சரங்கதலம் என்று சொல்லக்கூடிய ஐந்து அரங்களில் இதுவும் ஒன்று ஆகும். ஸ்ரீரங்கத்திற்கு முன்பே பெருமாள் இத்தலத்தில் எழுந்தருளியதால், 'ஆதி ரங்கம்' என்னும் பொருள்பட 'அப்பால ரங்கம்' என்னும் பெயர் ஏற்பட்டது.
பெருமாள் அப்பத்தை உணவாக ஏற்றுக்கொண்ட திவ்ய தேசம்
உபரிசிரவசு என்பவன் பாண்டிய மன்னன்,. ஒரு நாள் வேட்டையாடச் சென்ற போது மதம் பிடித்த யானை ஒன்று கௌதமரின் ஆஸ்ரமத்தில் நுழைவதைப் பார்த்து, அதன் மீது அம்பெய்தான். மேலும் சீற்றமடைந்த அந்த யானை, வேதமோதிய வேதியன் ஒருவனைக் கொன்றது. இதனால் மன்னனுக்கு 'பிரம்மஹத்தி தோஷம்' பிடித்தது. தன் பலமெல்லாம் இழந்து உடல் நலக்குறைவால் துன்பப்பட்டான்.இதனால் உபரிசிரவசு தன் அரசைத் துறந்து புண்ணியத் தலங்களில் புனித நீராடச் சென்றான். புரசங்காடுகள் நிறைந்த கோயிலடிக்கு வந்தவுடன் தெய்வ அனுக்கிரஹம் கிடைத்தது போல உணர்வு ஏற்பட்டதால் இத்தலத்தின் விசேஷத்தைத் தனது குலகுருவிடம் கேட்டான். அதற்கு அவர், துர்வாசரின் சாபத்தால் அசுரர்களால் துரத்தப்பட்டு பதவியிழந்த இந்திரனை மீண்டும் தேவலோக அதிபதி ஆக்கப் பெருமாள் இங்கு அருளினார் என்று எடுத்துக் கூறினார், 'சிறப்புமிக்க இத்தலத்தில் நீ தவம் செய்தால் உன் தோஷமும் விரைவில் நீங்கும்' என்று வழி காட்டினார். கோயிலடியில் உபரிசிரவசு மன்னன்தன் தோஷம் நீங்க தினசரி ஆயிரம் வேதியர்களுக்கு அன்னம் வழங்கி வந்தான். அதனால் அவன் மீது பெருமாள் கருணை கொண்டார். ஒரு நாள், அதிகாலையிலேயே ஒரு பிராமணர் வந்துவிட்டார். மன்னனின் பூஜை ஆரம்பிப்பதற்கு முன்பே, 'மிகவும் பசிக்கிறது எப்போது உணவு தயாராகும்" எனப் புலம்பத் தொடங்கினார். மன்னன் அவசர அவசரமாய் பூஜைகளை ஆரம்பித்து முடித்தான். பிராமணருக்கு உணவு பரிமாறச் சொன்னான். பிராமணர் ஒற்றை ஆளாக அத்தனை உணவையும் உண்டு விட்டார். மன்னன் அதிர்ச்சி அடைந்தான். பிராமணர் அரை வயிறே நிரம்பியதாக முறையிட்டார். மன்னன்மீண்டும் உணவு சமைத்து பரிமாறிகிறேன் என்றான். மன்னனிடம், வேதியர் உருவில் வந்த பெருமாள் . 'மன்னனே! நான் சற்றே ஓய்வு எடுக்க வேண்டும், அந்தி சாய்ந்ததும் எனக்கு ஒரு குடம் நிறைய அப்பங்களைக் கொண்டு வா' என்று கூறிவிட்டு ஓய்வெடுக்கச் சென்றார் .ஒரு குடம் முழுக்க அப்பம் நிரப்பப்பட்டு அந்தணராக வந்த பெருமாளின் அருகில் வைக்கப்பட்டது. அதில் ஒன்றைத் தின்று விட்டு மன்னனைப் பார்த்துச் சிரித்தார் பிராமணர். மன்னன் ஏதோ பரவசமாக உணர, பிராமணர் உடனே பெருமாளாக மாறி மன்னன் உபரிசிரவசுக்கு காட்சி தந்தார். அப்பத்தை விரும்பிக் கேட்டுத் தின்றதால், அன்று முதல் இந்தப் பெருமாளுக்கு 'அப்பக் குடத்தான்'என்ற வித்தியாசமான திருநாமம் ஏற்பட்டது. இன்றைக்கும் இரவு வேளையில் அப்பால ரங்கநாதருக்கு அப்பம்தான் நைவேத்யம் செய்யப்படுகின்றது.குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், எமபயம் நீங்க, கர்வம் தீர, பாவம், சாபம் உள்ளவர்கள், தீராத பிரச்னை உள்ளவர்கள் இவரை வழிபாடு செய்தால் பலன் நிச்சயம் என்பது நம்பிக்கை.