
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்
பிரம்மாண்டமான புற்று வடிவில் காட்சி தரும் பகவதி அம்மன்
கன்னி்யாகுமரி மாவட்டம், நாகர்கோவிலிலிருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். முற்காலத்தில் நெருக்கமான பனைக்காடாக இருந்த இந்தப் பகுதியில் சுயம்புவாக எழுந்தவள் மண்டைக்காடு பகவதியம்மன். ஆரம்பத்தில் காளிதேவியாக வழிபடப்பட்டவள், பின்னர் கேரள மக்களின் வழக்கப்படி 'பகவதி அம்மன்' என்று அழைக்கப்பட்டாள். கால்நடைகளை இங்கே மேய்ச்சலுக்குக் கொண்டு வந்ததால், இதை மந்தைகாடு என அழைத்துள்ளனர். அதுவே காலப்போக்கில் மருவி'மண்டைக்காடு' என்று மாறியதாக தல வரலாறு கூறுகின்றது.
பகவதி அம்மன் பிரம்மாண்டமான புற்று வடிவில் காட்சி தருகிறார். 15 அடிக்கு உயர்ந்து நிற்கும் புற்றின் மேல் பகவதி அம்மனின் முகம் சந்தனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பிரம்மாண்டமான புற்று வேறு எங்கும் இல்லை என்றும், இப்புற்றில் இதுவரை எந்த பாம்பும் வசித்ததில்லை என்றும் கூறுகின்றனர். பொதுவாக புற்றுக்கோவிலில் பக்தர்கள் பால் ஊற்றுவதும், முட்டைகளை வைத்து வேண்டுவதும் உண்டு. ஆனால் இங்கு பால் ஊற்றுவதோ, முட்டைகளை உடைப்பதோ கிடையாது. ஆனால் இந்த புற்றுக்கு தினமும அபிஷேகம் நடைபெறுகிறது. பூசாரி ஓர் ஏணி மரத்தை வைத்து அதில் ஏறி அம்மனுக்கு பூமாலைகளைச் சாற்றுகிறார்.புற்றுவடிவ மூலவர் தேவிக்கு முன்பாக வெண்கலச்சிலையாக நின்ற கோலத்திலும், வெள்ளிச்சிலையாக அமர்ந்த கோலத்திலும் பகவதியம்மன் அருள் பாலிக்கிறார்.
பெண்களின் சபரிமலை
கேரள கோவிலை போன்று அமைப்பு கொண்ட மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு ஆண்களை விட பெண்கள் அதிகளவில் வருகின்றனர்.. சபரிமலைக்கு ஆண்கள் 41 நாள்கள் விரதம் இருந்து,பயபக்தியுடன் சென்று வழிபட்டு வருவதைப் போல, பெண்கள் 41 நாள்கள் விரதமிருந்து, இருமுடி கட்டி இந்தக் கோயிலுக்கு வருவதால், பெண்களின் சபரிமலை என்று சிறப்பித்து அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாசி கொடை விழாவை ஒட்டி கேரளத்து பெண்கள் 41 நாள்கள் பயபக்தியுடன் விரதம் இருந்து, இருமுடி கட்டி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்கிறார்கள். மாசி மாத கொடை விழா இந்த ஆலயத்துக்குப் புகழ் சேர்க்கும் ஒரு திருவிழா. பெண்கள் 41 நாள்கள் விரதமிருந்து, இருமுடி சுமந்து, கால்நடையாக இங்கு ஆயிரக்கணக்கில் வந்து தரிசனம் செய்வார்கள். மாசி கொடை விழாவின் போது வேண்டுதல் நிறைவேற ஆலய வளாகத்தை சுற்றிலும் பொங்கல் வைத்தும் வழிபாடு செய்கின்றனர்.
பிரார்த்தனை
செவ்வாய்,வெள்ளிக் கிழமை, பௌர்ணமி நாட்களில் மண்டைக்காடு அம்மன் கோவிலில் கூட்டம் அலைமோதுகிறது. கல்யாண வரம், குழந்தை வரம், உடல் உறுப்புகளில் குறைபாடு, கண் திருஷ்டி தோஷம், தலைவலி நிவாரணம் போன்றவற்றிற்காக இங்கு பிரார்த்தனை செய்யப்படுகின்றது. இக்கோயிலில் கொடுக்கப்படும் மண்டையப்பம் மிகவும் பிரசித்தி பெற்றது. அரிசி மாவில் வெல்லம்,பாசிப் பருப்பு,ஏலம்,சுக்கு ஆகியவை சேர்ந்து நீராவியால் அவித்துத் தயார் செய்யப்படுகிறது இந்த மண்டையப்பம். அம்மனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றது. அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நோயிலிருந்து மீண்ட பிறகு இங்கே வந்து, முத்தப்பம் என்னும் அப்பத்தை நைவேத்தியம் செய்கின்றனர்.

சென்னை சௌகார்பேட்டை ஏகாம்பரேசுவரர் கோவில்
ஒரே நாகத்தின் முன்னும், பின்னும் விநாயகரும், முருகப்பெருமானும் காட்சியளிக்கும் அபூர்வ கோலம்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெகு அருகாமையில் அமைந்துள்ளது சௌகார்பேட்டை ஏகாம்பரேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் காமாட்சி. சென்னையில் உள்ள பஞ்சபூத தலங்களில் இத்தலம் நிலத்திற்கு உரியது.
பல்லாண்டுகளுக்கு முன்பு, காஞ்சிபுரத்தில் கோவில் கொண்டுள்ள ஏகாம்பரேஸ்வரரின் தீவிர பக்தராக ஒருவர் வசித்தார். ஒரு பிரதோஷ தினத்தன்று அவர் காஞ்சிபுர கோவிலுக்கு செல்ல எண்ணியபோது, பல தடைகள் ஏற்பட்டது. பணியில் ஏற்பட்ட சிறிய சுணக்கம் காரணமாக அவரது முதலாளியும் கோயிலுக்கு செல்லக்கூடாது என தடுத்தார். பக்தரோ அதை மீறிக் கோவிலுக்கு சென்றார். வழியில் களைப்படைந்த அவர் இத்தலத்தில் சற்றுநேரம் ஓய்வெடுத்தார். அப்போது, சிவன் அம்பாளுடன் காட்சிதந்து, 'இனி என்னை வழிபட நெடுதூரம் வரவேண்டாம்; நீ ஓய்வெடுத்த இடத்திலேயே நான் சுயம்புவாக இருக்கிறேன்; என்னை இங்கேயே வழிபடு, என்றாராம். அதன்பின், இவ்விடத்தில் இக்கோவில் கட்டப்பட்டது.
கோவிலுக்கு வெளியே அரசமரத்தின் அடியில் ஒரு இலிங்கம் தனி சன்னதியில் உள்ளது. கருவறைக்குள் சென்று நாமாக பாலாபிஷேகம், வில்வஇலை அர்ச்சனை செய்து வழிபடலாம். இங்கு, சப்தநாகத்தின் கீழ் சகோதர விநாயகர் தனிச்சன்னதியில் உள்ளார். இதே சிலையின் பின்புறத்தில் மயில்வாகனத்துடன் நின்ற கோலத்தில் முருகன் இருக்கிறார். இப்படி விநாயகரும், முருகப்பெருமானும் ஒரே நாகத்தின் முன்னும், பின்னும் எழுந்தருளியிருப்பது, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத அபூர்வக் காட்சியாகும்.

கொடுமுடி மகுடேசுவரர் கோவில்
மும்மூர்த்திகள் அருள்பாலிக்கும் தேவாரத்தலம்
கரூர்- ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் 27 கி.மீ. தூரத்தில்,, காவிரி நதிக் கரையில் அமைந்துள்ள தேவாரத்தலம் கொடுமுடி. இறைவன் திருநாமம் மகுடேசுவரர். இறைவியின் திருநாமம் வடிவுடை நாயகி.
இந்த கோவிலில் சிவன், விஷ்ணு, பிரம்மா மூவருக்கும் தனித்தனி கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நடு கோபுர வாயிலின் வழியாக சென்றால் விஷ்ணு மற்றும் பிரம்மனை தரிசனம் செய்யலாம். நடுவாயிலுக்கு வடபுறம் உள்ள கோபுர வாசல் வழியாக உள்ளே சென்றால் மூலவர் மகுடேசுவரரை தரிசிக்க முடியும். அகத்தியர் இத்தலத்தில் சிவலிங்கத்தை பூஜை செய்ததற்கு அடையாளமாக லிங்கத்தின் மீது விரல் தடயங்கள் உள்ளதை காணலாம்.
பூ பூக்கும், ஆனால் காய் காய்க்காத அதிசய வன்னி மரம்
இந்தக் கோவிலில் இருக்கும் மற்றொரு சிறப்பு தல விருட்சமான வன்னி மரம் தான். இந்த வன்னி மரத்தின் அடியில் மூன்று முகம் கொண்டவராக பிரம்மா அருள் புரிகிறார். இந்த வன்னிமரம் மிகவும் பழமையானது. இந்த மரத்தில் பூக்கள் பூக்கிறது. ஆனால் காய் காய்க்காது. மரத்தின் ஒரு பக்கத்தில் முள் இருக்கும். மறுபக்கத்தில் முள் இருக்காது. இந்த மரத்தின் இலையின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், தண்ணீரில் இந்த இலையை போட்டு வைத்தால் தண்ணீரானது எத்தனை நாட்கள் ஆனாலும் கெடுவதில்லை. பழனியில் நடக்கும் பங்குனி உத்திர திருவிழாவிற்கு இங்கு ஓடிக்கொண்டிருக்கும் காவிரி நதியிலிருந்து எடுத்துச் செல்லப்படும் தீர்த்தத்தில், இந்த வன்னி மரத்தின் இலையை போட்டுத்தான் பக்தர்கள் பாதயாத்திரையாக எடுத்துச் செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவிட்டம் நட்சத்திரத்திற்கான பரிகாரத் தலம்
பிரம்மாவுக்கு அவிட்டம் நட்சத்திரத்தன்று ஞானம் கிடைத்ததால் இத்தலம் அவிட்டம் நட்சத்திரத்திற்குரிய தலமானது. அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இந்த கோவிலுக்கு வந்து வணங்கி வழிபட்டால் பிரச்சனைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நாகதோஷம் உள்ளவர்கள், ராகு கேது தோஷம் உள்ளவர்கள், இத்தலத்தில் வந்து பரிகாரம் செய்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோவில்
தமிழக சாமுண்டீஸ்வரி அம்மன்
நீடாமங்கலம்- மன்னார்குடி சாலையில் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோவில். இக்கோவிலில் ராஜராஜேஸ்வரி, கற்பகவல்லி என்று இரண்டு அம்பிகைகள் அருள்பாலிக்கிறார்கள். இத்தலத்தில் சிவபெருமான், ராஜராஜேஸ்வரி அம்பிகையை சதுரங்க ஆட்டத்தில் வென்று மணம் புரிந்தார். அதனால் இத்தல இறைவனுக்கு சதுரங்க வல்லபர் என பெயர். சதுரங்கத்தில் 64 சதுர கட்டங்களானது இறைவனின் 64 வடிவங்களையும், 64 நாட்டிய நிலைகளையும் குறிக்கின்றது என்பதனை அம்பிகை மூலம் இறைவன் உணர்த்தி உள்ளார்.
மைசூர் நந்திமலையில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு தனிக் கோவில் உள்ளது. இத்தலத்திலும் சாமுண்டீஸ்வரி அம்மன் தனிச் சன்னிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் போல் இந்த அம்மனும் வடக்கு நோக்கி எழுந்தருளி இருக்கின்றாள். இவள் தமிழக சாமுண்டீஸ்வரி அம்மன் என்று போற்றப்படுகின்றாள்.இந்த அம்மன் விசேஷமான சக்தி உடையவள். சாமுண்டேஸ்வரி அம்மனிடம் பெண்கள் பிரார்த்தனை சீட்டு கட்டி வேண்டிக் கொள்கிறார்கள். அந்த பிரார்த்தனையானது 90 நாட்களில் நிறைவேறும் என்பது நம்பிக்கை. கடன் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை, திருமண தடை, குழந்தை பாக்கியம் ஆகியவற்றுக்கும் இந்த அம்மனை வழிபடுகிறார்கள்.
எலிக் கடியினாலும், பிற விஷக் கடியினால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். இத்தலத்தில்தான் அகஸ்தியர் போகருக்கு விஷக்கடி நிவர்த்திக்கான மூலிகை வைத்திய முறைகளை போதித்துள்ளார். அனைத்து சித்த வைத்தியர்களும் அகஸ்தியருக்கு பூஜை செய்து வழிபட வேண்டிய தலம் இது. ஞாயிற்றுக்கிழமை தோறும் விஷக்கடி நிவர்த்தி செய்ய, அகத்தியர் பிரானின் ஆசியோடு, சாமுண்டீஸ்வரி அம்மன் சன்னதி முன் மூலிகை வேர் ரட்சை கட்டப் பெறுகின்றது. இங்குள்ள தீர்த்தங்களில் கோயிலின் பின்புறம் உள்ள 'கிருஷ்ண குஷ்டஹரம்' தீர்த்தம், கருங்குஷ்டம் போக்கும் தன்மையுடையது.
சர்க்கரை பாவாடை விழா
ஆடி மாதத்தில் அம்மனுக்கு சர்க்கரை பாவாடை போடப்பட்டு நிவேதனம் செய்ப்படுகிறது அப்போது அம்மனின் முகம் அந்த சர்க்கரை பாவாடையில் தெரியும்போது தீபாராதனை நடக்கிறது. அவ்விழாவின் போது சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசிக்க பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

முறப்பநாடு கைலாசநாதர் கோவில்
குதிரை முகத்துடன் காட்சி தரும் நந்தி
திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, முறப்பநாடு கைலாசநாதர் கோவில். இறைவியின் திருநாமம் சிவகாமி அம்மன்.
தாமிரபரணியின் மேற்கு கரையில் அமைந்துள்ள ஒன்பது கைலாய தலங்களில், இத்தலம் நடுவில் இருக்கிறது. எனவே இத்தலத்தை, 'நடுக்கைலாயம்' என்கின்றனர். நவக்கிரகத்தில் குருபகவானின் அருள் பெற நாம் வழிபட வேண்டிய தலம் முறப்பநாடு ஆகும். இத்தலத்தில் தாமிரபரணி ஆறு காசியில் உள்ளது போன்று வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்கிறது. இதனால் இந்த இடத்திற்கு தட்சிண கங்கை எனப் பெயர்.இங்கு நீராடுவது காசியில் நீராடுவதற்கு சமம்.
இக்கோவிலில் சுவாமிக்கு எதிரேயுள்ள நந்தி குதிரை முகத்துடன் இருக்கிறது. சோழ மன்னன் ஒருவன் தனக்கு குதிரை முகத்தோடு பிறந்த பெண்ணின் நிலையைக் கண்டு கவலைக் கொண்டான். சிவபெருமான், அரசன் முன்பு தோன்றி தாமிரபரணியில் நீராடும்படி கூறினார். இங்கு வந்து தட்சிண கங்கை தீர்த்தக் கட்டத்தில் நீராடவும் குதிரை முகம் நீங்கி மனித முகம் கொண்டு மிக அழகாக தோன்றினாள். இங்குள்ள நந்தி, மன்னன் மகளின் குதிரை முகத்தை தான் ஏற்றுக் கொண்டதால் குதிரை முகத்துடனே காட்சியளிக்கிறது. மன்னன் மகிழ்ந்து சிவபெருமானுக்கு இங்கு கோவில் கட்டினான். மன்னன் மகளின் குதிரை முகம் மாறியபோது, அவளுக்கான முற்பிறவி பாவத்தை இந்த நந்தி ஏற்றுக் கொண்டதாம். எனவே இந்த நந்தி குதிரை முகத்துடன் இருப்பதாக சொல்கிறார்கள்.

தர்மபுரி கல்யாண காமாட்சி கோவில்
அந்தரத்தில் தொங்கும் 2000 கிலோ எடையுள்ள அதிசய கல் தூண்
தர்மபுரியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் கல்யாண காமாட்சி கோவில். இந்த கோயில் கோட்டை கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இறைவன் திருநாமம் மல்லிகார்ஜுனேஸ்வரர். இறைவியின் திருநாமம் கல்யாண காமாட்சி.
சுவாமி சன்னதியின் அர்த்த மண்டபத்தில் அழகிய சிற்பங்கள் வடிக்கப்பட்ட இரண்டு தூண்கள் காணப்படுகின்றன. இந்த தூணின் அடியில் ஒரு காகிதத்தை விட்டால், அது எந்த தடங்கலும் இன்றி மறு பக்கம் வந்துவிடும். அதாவது, அந்த தூண் தரையைத் தொடாமல் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த தூணின் எடை 2000 கிலோ. இதனால் இத்தூண் 'தொங்கும் தூண்' என்று அழைக்கப்படுகின்றது. இது நம் தமிழர்களின் கட்டடக்கலையின் சிறப்பை உலகுக்கு எடுத்து சொல்வதுபோல் உள்ளது . மண்டபத்தின் விதானத்தில் அஷ்டதிக் பாலகர்களின் உருவங்கள் அழகுடன் வடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் நடுவே கால் மாறி ஆடும் நடராஜர் அருள்புரிகிறார். மதுரையை அடுத்து இந்த தலத்தில் தான் நடராஜரின் கால்மாறி ஆடும் கோலத்தை நாம் தரிசிக்க முடியும். அஷ்டதிக் பாலகர்களின் உருவங்கள், வெவ்வேறு கோணங்களில் திரும்பிய வண்ணம் அமைந்துள்ளன. இத்தகைய வடிவமைப்பு மற்ற ஆலயங்களில் காண முடியாத ஒன்றாகும்.
ஸ்ரீசக்கரத்தின் மீது எழுப்பப்பட்ட அம்மன் சன்னிதி
பொதுவாக அம்மன் கோவில்களில், ஸ்ரீசக்கரமானது அம்மன் சிலைக்கு முன்பாகவோ அல்லது அம்மன் சிலைக்கு அடியிலோ பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். ஆனால் இங்குள்ள அம்மன் சன்னிதியோ, ஸ்ரீசக்கரத்தின் மீதே எழுப்பப்பட்டுள்ளது, ஒரு தனிச்சிறப்பாகும். இந்த ஸ்ரீசக்கரத்தின் 18 முனைகளின் அடிப்பாகத்தில் சிற்ப வடிவில் யானையின் தலை மட்டும் உள்ளது. 18 யானைகள் அம்பாளின் சன்னதியை தாங்கிகொண்டுருக்கிற மாதிரி ஒரு அற்புதமான தோற்றம். இந்த 18 யானைகளுக்கு நடுவில், சன்னதியின் வெளிசுவற்றின் அடிப்பாகத்தில் இராமாயண காவியம் சிற்பவடிவில் செதுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோவிலில் செதுக்கப்பட்ட சிற்பங்களும், கோவிலின் வடிவமைப்பும் நம் முன்னோர்களின் கலைத்திறனுக்கும் அதில் அவர்கள் அடைந்திருந்த உன்னத நிலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் கோவில்
சன்னதியின் மேற்கூரையில் தங்களுக்குரிய மரத்தினால் செதுக்கப்பட்ட நவக்கிரகங்கள்
நாமக்கல்லிலிருந்து 19 கி.மீ. தொலைவிலும், கரூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் கோவில். கருவறையில் மூலவர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள், வலதுபுறம் ஸ்ரீதேவி, இடதுபுறம் பூதேவியோடு நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். பெருமாளின் சன்னதிக்கு பின்புறம் தன்வந்திரிக்கு சன்னதி உள்ளது. இச்சன்னதியின் முன்மண்டப மேற்கூரையில் நவக்கிரகங்கள் மரச்சிற்பமாக இருக்கின்றன. இந்த நவக்கிரகங்கள், அந்தந்த கிரகங்களுக்குரிய மரத்தினால் செதுக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பாகும். நவக்கிரகங்களுக்குரிய மரங்கள்/ தாவரங்கள் சூரியன் - எருக்கு மரம்; சந்திரன் - பலாசு மரம்; செவ்வாய் - கருங்காலி மரம்; புதன்- நாயுருவி, சுக்கிரன் - அத்தி மரம்; குரு- ஆல மரம்; சனி- வன்னி மரம்; ராகு - அருகம்புல்; கேது- வெற்றிலைக்கொடி ஆகியவை ஆகும்.

திருமழிசை வீற்றிருந்த பெருமாள் கோவில்
திருமேனியில் அஷ்ட லட்சுமிகளை தாங்கி இருக்கும் அபூர்வ பெருமாள்
சென்னையிலிருந்து 25 கி.மீ. தொலைவில் திருவள்ளூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது திருமழிசை வீற்றிருந்த பெருமாள் கோவில். தாயார் திருநாமம் செண்பகவல்லி. பொதுவாக, பெருமாளை அமர்ந்திருந்த கோலத்தில் நாம் பார்ப்பது மிக அரிது. இங்கே பெருமாள் வீற்றிருந்த பெருமாளாக அஷ்டலட்சுமியுடன் எழுந்தருளியிருக்கிறார். அவரின் வலப்பக்கம் ஸ்ரீதேவி, இடப்பக்கம் பூதேவி, பெருமாளின் சிரசில் பொருத்தப்பட்டிருக்கும் கிரீடத்தில் நான்கு லட்சுமியர், மார்பில் 2 லட்சுமிகள் என அஷ்டலட்சுமிகள் உள்ளனர். இந்த பெருமானிடம் அஷ்டலட்சுமிகளும ஐக்கியமாகி இருப்பதால், சனிக்கிழமைகளில் துளசி மாலை சாத்தி வழிபட குடும்பத்தில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
வெளிநாடு செல்லும் பக்தர்களின் விசா பிரச்சனைகளை தீர்க்கும் விநய ஆஞ்சநேயர்
இக்கோவிலில் விநய ஆஞ்சநேயர் சன்னதி அமைந்துள்ளது. வடக்கு நோக்கி அமைந்து இருப்பதால் இந்த விநய ஆஞ்சநேயர் மிகவும் சக்திவாய்ந்தவர். பொதுவாக ஆஞ்சநேயர் மேற்கு திசை பார்த்து இருப்பார். அதாவது ராமரைப் பார்த்து நின்றிருப்பதாக ஒரு ஐதீகம். ஆனால் இங்கு வடக்கு நோக்கி அதாவது குபேரனை நோக்கி நின்று நமக்கு நோய்களை நீக்கி மற்றும் செல்வங்களை வழங்குகிறார். பக்தர்களின் குறையைத் தீர்த்து வைப்பதாலும், உடல்ரீதியான பிரசனைகளை தீர்ப்பதால் இவர் வைத்தியர் எனவும் அழைக்கப்படுகிறார். மேலும் இவரிடம் வெளிநாடு செல்லும் பக்தர்கள் முழு மனதுடன் வேண்டினால் விசாவில் ஏற்படும் பிரசனை, தடைகள் நீங்கி விசா கிடைக்கும் என்பது நம்பிக்கை. இவ்வாறு குறை தீர்வதால் இவர் விசா ஆஞ்சநேயர் என்றும் புகழ்பெற்றுள்ளார். வடக்கு முக ஆஞ்சனேயரை தரிசனம் செய்து வடைமாலை சாற்றினால், காரிய சித்தி மற்றும் வியாபாரத்தில் வெற்றி அடைய வாய்ப்புண்டு.

ஆடுதுறை ஆபத்சகாயேசுவரர் கோவில்
அனுஷம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சுவர்ண பைரவர்
கும்பகோணத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் ஆடுதுறை. இறைவன் திருநாமம் ஆபத்சகாயேசுவரர். இறைவியின் திருநாமம் பவளக்கொடியம்மை. இத்தலம் காவிரிதென்கரையில் இருப்பதாலும், சுக்கிரீவன் வழிபட்ட தலமாதலாலும் தென்குரங்காடுதுறை என்றும் வழங்கப்படுகிறது.
அனுஷம் நட்சத்திரத்தின் சிறப்புகள்
முற்பிறவிகளில் அளவற்ற தான தர்மங்களைச் செய்தவர்கள், இப்பிறவியில் அனுஷம் நட்சத்திரத்தில் பிறப்பார்கள். முற்பிறவியில் சிறிது பூர்வ புண்ணியம் சேர்த்தவர்களும் இப்பிறவியில் தகுந்த ஆன்மீக குருவை அடைவது அனுஷத்தில் பிறந்தவர்களே. அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், முற்பிறவியில் சிறிது பூர்வ புண்ணியம் சேர்த்திருந்தாலும் கூட, இப்பிறவியில் தகுந்த ஆன்மீக குருவை அடைவார்கள்.
சுவர்ண பைரவர் வழிபாடு
அகத்தியர் இந்த தலத்தில் சுவர்ண பைரவர் திருவுருவத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அதனாலேயே பல வரங்களைப் பெற்றார். அவருக்கு ஈசன் நடனகோலம் காட்டியருளினார். சுவர்ணபைரவர் இங்கே சக்தி வாய்ந்தவராக அருள்பாலித்துவருகிறார். சுவர்ண பைரவரைச் சிறப்போடு பூஜை செய்து அன்புடன் வழிபட்டால் நினைத்த காரியம் எளிதில் கைகூடும். தீராத நோய்கள் தீரும்; தனம் தானியம் பெருகும்; புகழ் உண்டாகும்.
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மாதம் ஒருமுறை தனது ஜன்ம நட்சத்திர நாளில் இங்கே வர வேண்டும்;ராகு காலத்துக்கு முந்தைய முகூர்த்தத்தில் மூலவருக்கும்,அம்பாளுக்கும் அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு,ராகு காலத்தில் சுவர்ண பைரவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 9 ஜன்ம நட்சத்திர நாட்களுக்கு செய்து வர இறையருளும்,குருவருளும்,பைரவ அருளும் சித்திக்கும்.

திருப்புள்ளம்பூதங்குடி வல்வில்ராமன் கோவில்
புதன் கிரகத்துக்கு பரிகாரத் தலமாக விளங்கும் திவ்யதேசம்
கும்பகோணத்தில் இருந்து (17கி.மீ) திருவையாறு செல்லும் வழியில் சுவாமிமலைக்கு அருகில் உள்ள திவ்ய தேசம் திருப்புள்ளம்பூதங்குடி. மூலவர் வல்வில்ராமன். தாயார் ஸ்ரீ ஹேமாம்புஜவல்லி. இத்தலத்தில் ராமர் சயன கோலத்தில் அருள் பாலிப்பது தனிச்சிறப்பாகும். இக்கோவில் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. வைணவத் தலங்களில் இரண்டு பூதபுரிகள் உண்டு. ஒன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராமானுஜர் அவதரித்த தலமான ஸ்ரீபெரும்புதூர்.மற்றொன்று தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் திவ்ய தேசமான திருப்புள்ளம்பூதங்குடி.
பரிகாரங்கள்
நவக்கிரகங்களில் புதன் கிரகத்திற்குரிய பரிகார கோவிலாக வல்வில் ராமன் கோயில் இருக்கிறது. இத்தலத்தில் பித்ருக்களுக்கு பரிகாரம் செய்வது நன்மை பயக்கும். திருமணத் தடை உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடத் திருமணத் தடை நீங்கும். வேலைகளில் இருப்பவர்கள் தங்களுக்குப் பதவி உயர்வு கிடைக்க இக்கோவிலில் இருக்கும் நரசிம்மருக்குத் திருமஞ்சனம் செய்து வழிபடுவதால் பதவி, உத்தியோக உயர்வுகள் கிடைக்கப் பெறுவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

காட்டி சுப்ரமண்யா கோவில்
ஏழு தலை நாக வடிவில் முருகனும், நரசிம்மரும் ஒருசேரத் தோன்றும் அபூர்வக் காட்சி
கர்நாடக மாநிலம் பெங்களூருலிருந்து 55 கி.மீ தொலைவில் உள்ளது காட்டி சுப்பிரமணியா கோயில். இக்கோவில் 600 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. கோவில் கருவறையில் சர்ப்ப வடிவில் முருகப்பெருமானும், லட்சுமி நரசிம்மரும் ஒன்றாக காணப்படுவது தனிச்சிறப்பாகும்.
கருவறையில் ஏழு தலை நாகம் கொண்ட முருகரின் சிலையானது ஒரே கல்லில் செய்யப்பட்டது. சிலையின் பின்புறத்தில் நரசிம்மரின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இதனால் முருகன் கிழக்கு நோக்கியும், நரசிம்மர் மேற்கு நோக்கியும் உள்ளனர். இரு தெய்வங்களும் ஒரே நேரத்தில் பக்தர்களுக்குத் தெரியும் வகையில், கருவறையில் பின்புறத்தில் ஒரு பெரிய கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது.
தல வரலாறு
கதிகேசுரன் என்ற அரக்கனை வீழ்த்துவதற்காக முருகப்பெருமான் ஏழு முகமுள்ள பாம்பின் வடிவமாக இத்தலத்தில் அமர்ந்து தவம் செய்ததாக ஐதீகம். அதே கோலத்தில் இங்கு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பாம்பு வடிவத்தில் இருந்ததால், தனக்கு கருடனால் ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்த முருகப்பெருமான், தன்னைக் காக்கும்படி திருமாலை வேண்டுகிறார். திருமாலும் லட்சுமியுடன் கூடிய நரசிம்ம மூர்த்தியாக வடிவம் கொண்டு சுப்பிரமணியரைக் காக்கிறார். மேலும், மகாவிஷ்ணுவின் வாகனமான கருடனிடம் இருந்து, பாம்புகள் (நாகர்கள்) குடும்பத்தைக் காப்பாற்றும்படியும் முருகப் பெருமான், நரசிம்ம மூர்த்தியிடம் வேண்டினார். எனவே இத்தலம் நாகர் வழிபாட்டுக்கு முக்கியத்துவம் பெற்ற கோவிலாக விளங்குகிறது.
பிரார்த்தனை
இத்தலம் செவ்வாய் தோஷம், கால சர்ப்ப தோஷம், ராகு - கேது தோஷம் உள்ளவர்களுக்கு நிவர்த்தி தலமாக விளங்குகின்றது. பெரும்பாலான நாட்களில் சர்ப்ப தோஷ பூஜை அல்லது சர்ப்ப சம்ஸ்காரம் செய்யப்படுகிறது. செவ்வாய்க்கிழமை, சஷ்டி, ஆயில்யம் நட்சத்திர தினங்கள் முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுவதால், அன்றைய தினம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. ஆவணி நாக பஞ்சமி, குமார சஷ்டி தினங்களில் இங்கு சிறப்பு பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
இத்தலத்தில் குழந்தையில்லாத தம்பதியினரின் வேண்டுதலுக்கு இணங்க குழந்தைப் பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இங்கு பக்தர்களால் நாகர் சிலைகளை நிறுவுவும் பழக்கம் உள்ளளது. இதனால் கோவிலுக்கு அருகில் ஆயிரக்கணக்கான நாகர் சிலைகளைக் காணலாம்.

மெய்யூர் சுந்தரராஜப்பெருமாள் கோவில்
திருமணம் கை கூடுவதற்காக பெருமாளுக்கு கல்யாண உற்சவம் நடத்தப்படும் தலம்
செங்கல்பட்டு- மதுராந்தகம் சாலையில் அமைந்துள்ள பாலாற்று பாலத்திலிருந்து மூன்று கி.மீ. தொலைவில் உள்ளது மெய்யூர் சுந்தரராஜப்பெருமாள் கோவில். தாயார் திருநாமம் சுந்தரவல்லி. இவ்வூர் பல நூற்றாண்டுகளுக்கு முன் சத்யபுரி ஷேத்திரம் என்று அழைக்கப்பட்டது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மெய்யூருக்கு அருகில் இருந்த பாலாற்றில், நீருக்கடியில் பெருமாள், தாயார், ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள் ஆகியோரது பஞ்சலோக விக்கிரகங்களும் கிடைக்கப்பெற்றன. அவை அனைத்தும் நாகை சவுந்திரராஜப் பெருமாள் கோவிலுக்குச் சொந்தமானவை என்பதும், படையெடுப்பு மற்றும் விக்கிரக கடத்தல் செயல்களின் காரணமாக பாலாற்றில் வந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மெய்யூரில் உள்ள பெருமாளுக்கு சுந்தரராஜப் பெருமாள் என்று பெயர் சூட்டப்பட்டது. நாகைப்பெருமாளே இத்தலத்தில் சுந்தரராஜப் பெருமாளாக எழுந்தருளியுள்ளதால், மெய்யூரில் வாழ்ந்து வந்த வைணவப் பண்டிதர்கள், நாகைத் தலப் பெருமாள் பாசுரங்களையே இத்தல பெருமாளுக்கும் பாடி வழிபாடு செய்கிறார்கள்.
கருவறையில் புன்னகை தவழும் முகத்துடன், நின்ற கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் பெருமாள் காட்சி தருகிறார். இரு கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியும், வலது கையில் அபயம் அளிக்கும் வண்ணமும், இடது கையை மடக்கிய வண்ணமும் காணப்படுகிறார். இவருக்கு வலது மற்றும் இடதுபுறம் ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள்.
இத்தலத்தில் திருக்கல்யாண உற்சவ வைபவம் விசேஷமானதாகும். சுந்தரராஜப் பெருமாளுக்கும், சுந்தரவல்லி தாயாருக்கும் திருக்கல்யாண உற்சவ வைபவம் நடத்தி வழிபட்டால், ஒரு மண்டல காலத்திற்குள் பலன் கிடைக்கும். திருமணம் கைகூடியவர்கள், தம்பதி சமேதராய் வந்து பெருமாளையும், தாயாரையும் வணங்கி விட்டுச் செல்கின்றனர். இதே போல் குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் குழந்தையோடு வந்து பெருமாளையும், தாயாரையும் வணங்கிச் செல்கிறார்கள்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறும். அப்படி நடத்தப்படும் திருவிழாக்களில் ஆவணி மூலத்திருவிழா சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், சிவபெருமானின் திருவிளையாடல்களை மையமாக வைத்து ஆவணி மூலத்திருவிழா கொண்டாடப்படுகிறது. 64 திருவிளையாடல்களில் 12 முக்கிய திருவிளையாடல் லீலைகள் இந்த திருவிழாவை முன்னிட்டு நடைபெறும்.
ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு நட்சத்திரம் முக்கியத்துவம் பெறுகிறது. ஆவணிக்கு முக்கிய நட்சத்திரம் மூலம், அந்த ஆண்டின் சீதோஷ்ண நிலையையே நிர்ணயிக்கக் கூடியதாக இந்தநாள் உள்ளது. காலையில் சூரியன் உதயமாகும் போது மிகுந்த ஒளியுடன் இருந்தால் அந்த ஆண்டு வெயில் கொளுத்தும், மேக மூட்டத்துடன் மறைந்து தோன்றினால் பருவம் தவறி மழை பெய்து வெள்ளச் சேதத்தை ஏற்படுத்தும். எப்படிப் பார்த்தாலும் அது அழிவைத் தருவதாகவே இருக்கிறது. எனவேதான் சம்ஹாரமூர்த்தியான சிவபெருமானுக்கு அச்சமயம் விழா எடுத்து அவரைச் சரணடைந்து பிரார்த்திக்கும் நாளாக அக்கால கட்டத்தை அமைத்தார்கள். இதற்காகத்தான் மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களின் பெயர்களில் ஆவணி வீதிக்கு மட்டும் ஆவணி மூல வீதி என்று நட்சத்திரத்துடன் இணைத்துப் பெயர் சூட்டினர்.
சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம்
மதுரையில் சித்திரை முதல் ஆவணி வரை 4 மாதங்கள் மீனாட்சி அம்மன் ஆட்சியும், ஆவணி முதல் சித்திரை வரை 8 மாதங்கள் சுந்தரேசுவரர் ஆட்சியும் நடைபெறும். ஆவணி மூலத்திருவிழாவில் சுந்தரேசுவரர் பட்டாபிஷேக நிகழ்வு ஆகஸ்ட் 25 வெள்ளிக்கிழமையன்று நடைபெறும்.
பிட்டுக்கு மண் சுமந்த லீலை
சிவபெருமான் பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படிபட்ட திருநாளானது, ஆவணி மாதம் மூலம் நட்சத்திரம் ஆகும். அன்றைய தினம் சிவாலயங்கள் தோறும் சிறப்பாக பிட்டுக்கு மண்சுமந்த திருநாளைக் கொண்டாடுவர். இந்த ஆவணி மூல வழிபாட்டில் கலந்து கொண்டால், மூல நட்சத்திர தோஷங்கள் விலகி ஓடும். மூல நட்சத்திரத்தில் பிறந்த ஆண், பெண் இருபாலரும் இந்த விழாவில் கலந்து கொள்வது நல்லது.
மதுரை மாநகரில் முன்பு ஒரு காலத்தில், பெருமழை பெய்து, வைகை நதி பெருக்கெடுத்து ஓடியது. வைகை ஆற்றின் கரைகளை , பலப்படுத்த மக்களுக்கு பாண்டிய மன்னன் கட்டளை இட்டார். மன்னனின் கட்டளைப்படி, இப்பணி பகிர்ந்தளிக்கப்பட்டது. வந்தி என்ற, பிட்டு விற்கும் ஏழை மூதாட்டி ஒருவருக்கும், வைகை ஆற்றின் கரையின் ஒரு சிறு பகுதியை பலப்படுத்த இடம் ஒதுக்கப்பட்டது. தள்ளாமையினால் தனது பகுதி வேலையை வந்தியினால் செய்யமுடியவில்லை. சிவனிடம் முறையிட்டார் வந்தி. ஏழை மூதாட்டிக்கு உதவுவதற்காகவே, சிவபெருமான் கூலிக்காரன் வடிவில் வந்தார். கூலி தர, தன்னிடம் எதுவும் இல்லை என்று வந்தி கூறினார். உதிர்ந்த பிட்டை சிவபெருமான் ஊதியமாக ஏற்று, மூதாட்டியின் வேலையை, தான் செய்வதாக கூறி, பிட்டு உண்டபின், தனது வேலையைச் செய்வதற்காக , மூதாட்டியிடம் விடைபெற்று ஆற்றங்கரைக்குச் சென்றார்.
கூலியாள் வடிவில் இருந்த சிவன் வேலை செய்யாமல் ஆற்றங்கரையில் படுத்து துாங்கினார். அப்போது மேற்பார்வை பார்க்க வந்த, பாண்டிய மன்னன் கூலியாளை பிரம்பால் அடித்து தண்டனை வழங்கினார்.சிவனுக்குக் கிடைத்த சவுக்கடியை உலக உயிரினங்கள் எல்லாம் உணர்ந்தன. பாண்டிய மன்னனும் அந்த அடியை உணர்ந்தான், தனது பிழையையும் உணர்ந்தான்.
உலக மக்களுக்கு தன் இருப்பை உணர்த்தவும், தன்னையே தஞ்சம் என்று அடைந்தவருக்கு உடனடியாக உதவ வருவேன் என்றும் உணர்த்த இறைவன் ஆடிய திருவிளையாடல் இது. பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்ச்சி ஆகஸ்ட் 27 ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறும். அன்று அதிகாலையில் சுவாமியும், அம்மனும் பஞ்ச மூர்த்திகளுடன் பிட்டு தோப்புக்கு செல்வர். அங்கு பிட்டு திருவிழா நடை பெறும். இந்த திருவிழாவில் பங்கேற்க திருவாதவூர் மாணிக்கவாசகரும், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமியும் மதுரைக்கு எழுந்தருளுவர். அன்றைய தினம் சுந்தரேசர் பொற்கூடையுடனும், பொன் மண்வெட்டியுடனும் வைகை ஆற்றிலிருந்து பக்தர் சூழ கோவிலுக்கு எழுந்தருளுவர். திருவிழவை காணவரும் பக்தர்களுக்கு பிட்டு பிரசாதம் வழங்கப்படும். அன்று இரவு 9.30 மணிக்கு பிறகு மீனாட்சி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்தற்கு அனுமதிக்கப்படுவர்.

ஆம்பூர் பெரிய ஆஞ்சநேயர் கோவில்
அனுமன் சனிபகவானை இரு கால்களால் அழுத்தி நிற்கும் அபூர்வகோலம்
வேலூரில் இருந்து 23 கி.மீ தொலைவில் உள்ள ஆம்பூர் நகரத்தில் பெரிய ஆஞ்சநேயர் கோவில். பழங்காலத்தில் ஆமையூர் என அழைக்கப்பட்ட இந்த ஊர் பெயர் மருவி இன்று ஆம்பூர் என வழங்கப்படுகிறது. இக்கோவில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது
இக்கோவில் கருவறையில், பதினோரு அடி உயரமுள்ள, கருங்கல்லில் வடிக்கப்பட்ட புடைப்புச் சிற்பமாக பெயருக்கு ஏற்றபடி பெரிய ஆஞ்சநேயர், தெற்கு நோக்கி காட்சி தருகின்றார். இவரின் திருமுகம், கிழக்கு திசை நோக்கிய, கோலத்தில் காட்சி தருகிறது. இடது காலை முன் வைத்து சனியின் தலையினை அழுத்தியவாறும், வலது காலை சற்றே தூக்கி சனியின் வலது காலை அழுத்தியபடியும், பெரிய ஆஞ்சநேயர் காட்சி தருகின்றார். சனி பகவானின் முகம் பூமியை நோக்கியபடி உள்ளது. ஆஞ்சநேயரின் வால் , தலைக்குமேல் உயர்ந்து நுனி வளைந்து, அதில் மணி கட்டிய கோலத்தில் அமைந்துள்ளது. அவரது வலது கரம் அபயம் அளிப்பதாக உள்ளது. இடது கரம் சௌகந்திகா மலரின் தண்டினைப் பிடித்துள்ளது. காதுகளில் குண்டலங்கள் அலங்கரிக்கின்றன. மார்பில் முப்புரிநூல் விளங்குகின்றது.
புராண வரலாறு
சீதையை மீட்க, இராமபிரான் இலங்கை மீது போர்த் தொடுத்தார். அப்போரில் லட்சுமணன் மூர்ச்சையாகி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். இந்நிலையில், ஜாம்பவானின் ஆலோசனைப்படி, இமயமலையில் இருந்து சஞ்சீவி மூலிகையைக் கொண்டுவர ஆஞ்சநேயர் புறப்பட்டார். இதையறிந்த அசுர குருவான சுக்கிராச்சாரியார், சனியின் உதவியால் இதனைத் தடுக்க அறிவுறுத்தினார். ஆனால், அதற்குள் ஆஞ்சநேயர் இமயமலை சென்று, சஞ்சீவி மலையைக் சுமந்து, இலங்கை திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தன்னைப் பிடிக்க முயன்ற சனியைத் தன் காலில் கொண்டு வந்து தன் முழு பலத்தைத் தந்த ஆஞ்சநேயர், அவரை அழுத்தினார். வலி தாங்க முடியாத சனி, தன்னை விட்டு விடும்படியும், மன்னித்து விடும்படியும் வேண்டியதுடன், ராமரின் துதியையும் பாடினார். இராமபிரானின் துதியைக் கேட்ட ஆஞ்சநேயர், சனியைத் தன் பிடியில் இருந்து விடுவித்தார். அதே சமயம் ராமநாமத்தைக் கூறி என்னை வழிபடும் எவரையும் துன்புறுத்தக்கூடாது என்ற உறுதி மொழியையும் வாங்கிக்கொண்டார், அனுமன். பின்னர் இலங்கை சென்று சேர்ந்தார். அதன்பின் சஞ்சீவி மலை மூலிகையால் லட்சுமணன் நலம் பெற்றான் என்பது புராணம். இந்தக் கோலமே, இந்த ஆலயத்தின் மூலவராக விளங்குகின்றது.
பிரார்த்தனை
இவ்வாலயத்திற்கு ஆம்பூர் பகுதி மக்கள் மட்டுமின்றி, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா பகுதிவாழ் மக்களும் வந்து தரிசித்துச் செல்கின்றனர். ஞாயிற்றுக்கிழமைகளில் இராகுகால நேரத்தில் தீபமேற்றி வழிபட்டால் கோரிக்கைகள் நிறைவேறும் என்பது ஐதீகம். ஏழரை சனி நடப்பவர்கள், சனி தோஷம் உள்ளவர்கள், சனியால் கெடுபலனை அனுபவிப்பவர்கள் இத்தலம் வந்து பெரிய ஆஞ்சநேயரை வழிபட்டு சென்றால், சனி பகவானால் ஏற்படக்கூடிய தொல்லையிலிருந்து விடுபடலாம். அதேபோல, திருமணப்பேறு, குழந்தைப்பேறு வழங்கும் கண்கண்ட தெய்வமாகப் போற்றப்படுகிறார்.

இடையாற்றுமங்கலம் மாங்கலீசுவரர் கோவில்
திருமண தடை நீக்கும் தலம்
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அமைந்துள்ளது இடையாற்றுமங்கலம். இறைவன் திருநாமம் மாங்கலீசுவரர். இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை. திருமண பாக்கியத்தைக் கொடுக்கிற கோயில் இது. அதனால்தான் சுவாமிக்கு மாங்கலீசுவரர் என்றும் அம்பாளுக்கு மங்கலாம்பிகை என்றும் திருநாமம் அமைந்தது என்கிறது தல புராணம். மாங்கல்யேசுவரர் என்பதுதான் மாங்கலீசுவரர் என மருவியது.
மாங்கல்ய மகரிஷி என்பவர் இத்தலத்து சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தார். மாங்கல்ய மகரிஷி வேண்டுகோளுக்கு இணங்க, இங்கே தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு சிவபெருமான், திருமண பாக்கியத்தை அருளுகிறார். இத்தலத்தில் மாங்கல்ய மகரிஷிக்கு தனி சந்நிதி இருக்கிறது. அவருடைய நட்சத்திரம் உத்திரம். பொதுவாகவே, உத்திர நட்சத்திரம் என்பது மாங்கல்ய வரம் தந்தருளக்கூடியது. அதனால்தான் பங்குனி உத்திரத்தில் பல தெய்வங்களுக்கு திருமண வைபவங்கள் நடந்திருக்கின்றன என்கிறது புராணம். மாங்கல்ய மகரிஷியும் உத்திர நட்சத்திரக்காரர் என்பதால், இந்தத் தலம் கல்யாண வரம் தரும் தலமாகப் போறப்படுகிறது.
திருமண அழைப்பிதழில் கையில் மாலைகளுடன் தேவதைகள் பறப்பது போல் படங்கள் இருப்பதற்கான காரணம்
நமது கல்யாண சம்பிரதாயங்களில், திருமண அழைப்பிதழில் கையில் மாலைகளுடன் தேவதைகள் பறப்பது போல் படங்கள், இரண்டு பக்கமும் அச்ச்சிட்டிருப்பார்கள். அந்த தேவதைகளை திருமண வைபவத்துக்கு அனுப்புபவர் மாங்கல்ய மகரிஷி என்றும் திருமணமாகும் தம்பதிக்கு ஆசியும் அருளும் வழங்குகிறார் என்பது ஐதீகம்.
பிரார்த்தனை
மாங்கலீசுவரர் கோவிலில், எந்த நாளில் வந்து வேண்டுமானாலும் வேண்டிக்கொள்ளலாம். என்றாலும் உத்திர நட்சத்திர நாளில் வந்து, மாங்கல்ய மகரிஷியையும் மாங்கலீசுவரரையும் மங்களாம்பிகையும் தரிசித்து வேண்டிக் கொண்டால், தடைப்பட்ட திருமண வரம் விரைவில் நடந்தேறும். அதேபோல், உத்திர நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபட வேண்டிய திருக்கோயில் இது. உத்திர நட்சத்திரக்காரர்கள் இங்கே வந்து வணங்கினால், முன் ஜென்ம தோஷம் உள்ளிட்டவை கூட நீங்கிவிடும் என்பது ஐதீகம்.
தவம் செய்யும் கோலத்தில் காட்சி தரும் மாங்கல்ய மகரிஷியை நெய் விளக்கேற்றி வழிபட்டு, சிவனாரையும் அம்பாளையும் மனதாரப் பிரார்த்தித்தால், சீக்கிரமே கல்யாண மாலை தோள் சேரும். மகரிஷியின் திருப்பாதத்தில் ஜாதகத்தை வைத்து வேண்டிக்கொள்வதும் இங்கே வழக்கமாக இருக்கிறது. திருமணம் நடந்தேறியதும் இங்கு வந்து சிவனாருக்கும் அம்பாளுக்கும் மாங்கல்ய மகரிஷிக்கும் மாலைகள் சார்த்தி, இனிப்பு வகைகள், தேங்காய் முதலானவற்றை வழங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர் பக்தர்கள்.
இங்கு பிரார்த்தனை செய்து கொண்டால், குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள். கணவர் நீண்ட ஆயுளுடன் வாழ்வார். மாங்கல்ய பலம் பெருகும். கன்னியரின் கண்கண்ட தெய்வமாகப் போற்றப்படுகிறார் மாங்கல்ய மகரிஷி. மாங்கலீசுவரர், மங்களாம்பிகை, மாங்கல்ய மகரிஷி மூவருக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்து, சீப்பு, கண்ணாடி, புடவை அல்லது ரவிக்கை துண்டு, மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு என மங்கலப் பொருட்களை சுமங்கலிகளுக்கு வழங்கி வேண்டிக்கொண்டால், சகல தோஷங்களும் விலகி, திருமணம் விரைவில் நடைபெறும்.

திருப்பாற்றுறை ஆதிமூலநாதர் கோவில்
நடனமாடிய கோலத்தில் இருக்கும் வீணை தட்சிணாமூர்த்தி
திருச்சியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள தேவார தலம் திருப்பாற்றுறை. இறைவன் திருநாமம் ஆதிமூலநாதர். இறைவியின் திருநாமம் மேகலாம்பிகை, நித்யகல்யாணி. கொள்ளிடம், காவிரி ஆகிய இரு ஆறுகளுக்கு மத்தியில் இக்கோவில் அமைந்திருக்கிறது.
நந்தியும், பலிபீடமும் கோவில் கோபுரத்திற்கு வெளியே இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
தல வரலாறு
இப்பகுதியை ஆண்ட சோழன், இவ்வழியாக வேட்டைக்கு சென்றபோது தன் படைகளுடன் சற்று நேரம் ஓய்வெடுத்தான். அப்போது அருகிலுள்ள புதரில் இருந்து வெண்ணிற அதிசய பறவை பறந்து சென்றது. மன்னன் அப்பறவையின் மீது ஆசைகொண்டு அம்பு எய்தான். ஆனால், தப்பி விட்டது. சிலநாட்கள் கழித்து மன்னன் மீண்டும் இவ்வழியாக சென்றபோது, முன்பு பார்த்த அதே பறவை பறப்பதைக் கண்டான். புதர் தானே அதன் இருப்பிடம், அங்கு வந்ததும் பிடித்து விடலாம் எனக் கருதி மறைந்திருந்தான். அந்த இடம் முழுதும் பால் மணம் வீசியது. பறவை வரவே இல்லை. சந்தேகப்பட்ட மன்னன் புதரை வெட்டினான். ஒரு புற்று மட்டும் இருந்தது. புற்றை தோண்டியபோது, பால் பீறிட்டது. பயந்த மன்னன் அரண்மனைக்கு திரும்பி விட்டான். அன்றிரவில் அவனது கனவில் அசரீரியாக ஒலித்த சிவன், பால் வெளிப்பட்ட இடத்தில் தான் லிங்க வடிவில் இருப்பதாக கூறினார். அதன்பின் மன்னன் இவ்விடத்தில் கோவில் கட்டி வழிபட்டான். பால் பொங்கிய இடத்தில் இருந்து வெளிப்பட்டதால், சுவாமி ‘பாற்றுறை நாதர்’என்றும், தலம் ‘பாற்றுறை’ (பால்துறை) என்றும் பெயர் பெற்றது.
அற்ப ஆயுள் பெற்றிருந்த மார்க்கண்டேயர், ஆயுள்விருத்திக்காக சிவனை வேண்டி யாத்திரை சென்றார். அவர் இங்கு வந்தபோது லிங்கத்துக்கு பூஜை செய்ய தீர்த்தம் இல்லை. சுற்றிலும் தண்ணீர் கிடைக்காத நிலையில், லிங்கத்தின் தலையில் இருந்து பால் பொங்கி, தானாகவே அபிஷேகமானது.
வீணை தட்சிணாமூர்த்தி
கருவறை சுற்றுச்சுவரில் தட்சிணாமூர்த்தி வீணை வாசிக்கும் கோலத்தில் இருக்கிறார். அவரது இடது கால் சற்றே மடங்கி நளினமாக இருக்கிறது. இதனை, வீணையின் இசைக்கேற்ப நடனமாடிய கோலம் என்கிறார்கள். அருகே சீடர்கள் இல்லை. தட்சிணாமூர்த்தியின் இந்த வித்தியாசமான கோலத்தைக் காண்பது மிகவும் அபூர்வம். இசைக்கலைஞர்கள் இவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.

திருப்புவனம் புஷ்பவனேசுவரர் கோவில்
பித்ரு வழிபாட்டிற்கு ஏற்ற ஆடி அமாவாசை
ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும். இந்த மாதத்தில் தினக்கோளான சந்திரன் தனது ராசியான கடகத்தில் சூரியனுடன் சேரும் நாளே ஆடி அமாவாசை. இது சிறப்பு வாய்ந்த முன்னோர் வழிபாட்டிற்கு ஏற்ற அமாவாசையாகும். பித்ரு லோகத்தில் இருக்கும் ஆத்மாக்கள், அதாவது முன்னோர்கள், ஆடி அமாவாசை அன்று பூமிக்கு வருகிறார்கள். எனவே, ஆடி அமாவாசை என்று, பித்ருக்களை வழிபாடு செய்து, ஆசி பெறுவது வாழ்வை பல விதங்களில் மேம்படுத்தும். ஆடி அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பித்ரு காரியம் செய்யவும், வேண்டி விரதம் இருக்கவும் ஏற்ற நாளாகும். ஆடி அமாவாசை அன்று விரதம் இருந்து, முன்னோர்கள் வழிபாடு செய்வது குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக இருந்து வந்த தடைகள் மற்றும் சாபங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இதற்காக காசி, ராமேஸ்வரம் போன்ற புண்ணிய தலங்களை நாடுவது வழக்கம். தமிழ்நாட்டில் முன்னோர் வழிபாடு செய்வதற்கு ஏற்ற தலங்கள் சில உள்ளன. அவை, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், திருவள்ளூர் வீரராகவர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், அரன்வாயல் வரமூர்த்தீஸ்வரர் கோவில், திருப்பள்ளிமுக்கூடல் குருவிராமேஸ்வரம் கோவில், பாபநாசம் திருநெல்வேலி மாவட்டம் பித்ரு தர்ப்பணம் கொடுக்க ஏற்ற தலமாகும்.
காசியை விட பதினாறு பங்கு அதிகம் புண்ணியம் கிடைக்கும் திருப்புவனம்
பாண்டிய நாட்டின் பாடல் பெற்ற 14 தலங்களில் திருப்புவனமும் ஒன்று. இத்தலம் மதுரையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. இறைவன் திருநாமம் புஷ்பவனேசுவரர். இறைவியின் திருநாமம் சௌந்தரநாயகி. கோவிலுக்கு நேர் எதிரே வைகை ஆற்றின் வடகரையில் பார்வதி தேவியார் தவம் செய்த இடம் உள்ளது, இங்கே வந்த திருஞானசம்பந்தர் வைகை ஆற்றைக் கடக்க முயன்ற போது ஆற்று மணல்கள் எல்லாம் சிவலிங்கங்களாகக் காட்சியளித்தன. எனவே திருஞானசம்பந்தர் அங்கிருந்தபடியே தேவாரப் பதிகத்தைப் பாடி இறைவனை வணங்கினார். இறைவன் புஷ்பவனேஸ்வரர் நந்தியை சாய்ந்திருக்கச் சொல்லி அவருக்கு காட்சி அருளினார்.
காசிக்கு செல்ல இயலாதவர்கள் திருப்புவனத்திற்கு வருகை புரிந்து புஷ்பவனேசுவரர் சன்னதி முன் உள்ள வைகை ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு அஸ்தி கரைப்பது, திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தால் அவர்களது ஆத்மா சாந்தியடையும், அவர்களது ஆசிர்வாதம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இங்கு அஸ்தியைக் கரைத்தால் பாவ விமோசனம் கிடைக்கும் என்கிறார்கள். அக்காலத்தில் புகழ்பெற்ற சுச்சோதி மன்னன் முன்னோர்களுக்கு திதி கொடுக்க திருப்புவனம் வந்து வைகையாற்றங்கரையில் வேண்டுதல் செய்துள்ளார். தமிழகத்தில் காசியை விட வீசம் (பதினாறு பங்கு) அதிகம் புண்ணியம் கிடைக்கும் ஒரே தலம் திருப்புவனம் ஆகும். மேலும் இராமேஸ்வரத்தைக் காட்டிலும் ஆறு பங்கு அதிகம்புண்ணியம் அருளும் தலம்.

பண்ணாரி மாரியம்மன் கோவில்
பக்தர்களுடன் கால்நடைகளும் தீ மிதிக்கும் அம்மன் தலம்
ஈரோடு மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் பண்ணாரி மாரியம்மன் கோவில் முக்கியமான ஒன்றாகும் . இக்கோவில், சத்தியமங்கலத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும், ஈரோட்டில் இருந்து சுமார் 75 கி.மீ. தொலைவிலும், மேற்குத்தொடர்ச்சி மலைச்சாரலில், தமிழ்நாடு கர்நாடகா எல்லைப் பகுதியில் ஒரு அழகான வனப்பகுதியில் அமைந்துள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த பண்ணாரி அம்மன் கோவிலுக்கு தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர மற்றும் கேரளாவில் இருந்து பல பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து அருள் பெற்று செல்கின்றனர்.
புற்று மண் பிரசாதம்
கருவறையில் பண்ணாரி அம்மன் தாமரை பீடத்தில் அமர்ந்த நிலையில், தெற்கு நோக்கி சுயம்புவாக எழுந்தருளி இருக்கின்றாள். சாந்தம் தவழும் முகத்துடன், கைகளில் கத்தி, கபாலம், டமாரம் , கலசம் ஆகியவற்றை ஏந்தி காட்சி தருகின்றாள். எல்லாக் கோவில்களிலும் திருநீற்றைத்தான் பிரசாதமாக தருவார்கள் . ஆனால், இங்கே புற்று மணலையே விபூதி பிரசாதமாக தருகிறார்கள். இதை வீட்டுக்கு எடுத்துச் சென்று பூஜை அறையில் வைத்தால், திருட்டு மற்றும் தீங்கு போன்ற அபாய செயல்கள் நடக்காது என்பதும், தீராத நோயும் தீரும், கால் நடைகளுக்கு நோய் வராது என்பதும் நம்பிக்கை. மங்களகரமான செயல்கள் வீடுகளில் நடப்பதுடன், அம்மன் தங்களுக்கு பாதுகாப்பாகவும் இருப்பாள் என்கின்றனர் பக்தர்கள். அம்மன் கால்நடை வளர்ப்போரின் காவல் தெய்வமாக விளங்குகிறாள். கால் நடைகள் கொண்டு தொழில் செய்பவர்கள், தங்கள் தொழில் விருத்தியடைய அம்மனை வணங்குகின்றனர்.
பங்குனி மாத குண்டம் திருவிழா
இந்த கோவிலில் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் இறங்கும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. குண்டம் இறங்கும் திருவிழா என்பது தீமிதி திருவிழா என்பது ஆகும். பூக்குழி என்றழைக்கப்படும் அக்னி குண்டத்திற்கு தேவையான விறகுகளை வெட்ட காட்டுக்குள் சென்று பக்தர்கள் வெட்டி வருவார்கள் இதை 'கரும்பு வெட்டுதல்' என இப்பகுதில் அழைப்பார்கள் .தமிழகத்தில் எங்கும் இல்லாத விசேஷமாக இங்கு தொடர்ச்சியாக 12 மணி நேரம் நடைபெறும் தீமிதி திருவிழா இதுவாகும். இதில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து குண்டம் இறங்குவார்கள். குழந்தைகள் பெரியவர்கள் என பலதரப்பு மக்கள் இந்த தீமிதி திருவிழாவில் கலந்து கொள்வார்கள். பக்தர்களை வியக்க வைக்கும் விதமாக கால்நடைகளும் இந்த தீமிதி திருவிழாவில் பங்கு பெறுவதுண்டு.
முதலில் தலைமை பூசாரி அக்னி குண்டத்தில் இறங்கி நடந்து செல்லுவார். பின்பு லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னி குண்டம் இறங்குவார்கள். காலை 4 மணி முதல் மாலை வரை பக்தர்கள் தொடர்ந்து அக்னி குண்டம் இறங்குவது மிகப் பெரிய பிரம்மாண்டமான மெய்சிலிர்க்கும் காட்சி ஆகும். கடைசியாக ஆடு, மாடு, குதிரை போன்ற கால்நடைகளையும் பக்தர்கள் குண்டம் இறக்கி நடக்க வைப்பார்கள்.
கண் வியாதியை குணப்படுத்தும் கோவில் தீர்த்தம்
பல ஆண்டுகளுக்கு முன், காட்டு இலாகா அதிகாரியாக பணியாற்றிய ஒரு ஆங்கிலேயர் , துப்பாக்கியால் பன்னாரி அம்மன் கோவில் சுவற்றில் சுட்டதால் பிறகு அவரது கண்கள் ஒளி இழந்தன. தவறை உணர்ந்து அம்மனிடம் வேண்டி, கோயிலில் வழங்கப்பட்ட தீர்த்தத்தால் கண் ஒளி பெற்றார். இதனால் தற்போதும், கண்வியாதி உள்ளவர்களுக்கு கோவில் தீர்த்தம் வழங்கப்படுகிறது. இது கண் வியாதியை குணப்படுத்துவதாக மக்களால் நம்பப்படுகிறது.
பிரார்த்தனை
திருமண பாக்கியம், குழந்தைப்பேறு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் வருவோர் நம்பிக்கையுடன் திரும்பிச் செல்கின்றனர். மேலும் கேட்டதெல்லாம் தரும் வல்லமை வாய்ந்த அம்மனாக நம்பிக்கை வைத்து, பக்தர்கள் வணங்கி வருகின்றனர்.

சிதம்பரம் நடராஜர் கோவில்
நமது தேசிய கொடி கோபுரத்தில் ஏற்றப்படும் ஒரே தலம்
ஒவ்வொரு வருடமும் இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட்15 அன்று கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒரு விசேஷம் உண்டு. இந்தியாவிலேயே, தில்லை சிதம்பரத்தில் மட்டும் தான் சுதந்திர தினத்தில் நமது தேசிய கொடி கோவிலின் கோபுரத்தின் மீது ராஜ கம்பீரத்துடன் ஏற்றப்படுகிறது.
இந்திய சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ஆம் தேதி காலையில், சிதம்பரம் நடராசர் கோவிலில் நம் தேசியக் கொடியை ஒரு வெள்ளித் தட்டில் வைத்து, அதை நடராசர் முன் வைத்து பூஜை செய்வார்கள். பின் அக்கொடியை அர்ச்சகர் எடுத்து வர மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்று 138 அடி உயரம் உள்ள கோவில் கிழக்கு கோபுரத்தில், ஆலய தீட்சிதர் அக்கொடியை ஏற்றுவார். அப்போது கோவிலுக்கு வருவோர் அனைவரும் தேசியக் கொடிக்கு மரியாதை செய்வார்கள். இது வேறெந்த வழிபாட்டுத் தலத்திலும் இல்லாத சிறப்பாகும். பின்னர் கோவிலுக்கு வரும் பொதுமக்களுக்கு லட்டு உள்ளிட்ட இனிப்புகள் வழங்கப்படும்.

கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில்
ஆயிரம் பிரதோஷ தரிசனம் செய்த பலன் தரும் சிவாலயம்
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது குறுங்காலீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் குறுங்காலீஸ்வரர், குசலவபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் தர்மசம்வர்த்தினி. சுவாமியும், சுவாமியின் வலப்புறமுள்ள தர்மசம்வர்த்தினி அம்பிகையும் வடக்கு நோக்கி உள்ளனர். மதுரையில் மீனாட்சி வலப்புறம் இருக்கிறாள் , அதுபோல், இத்தலத்திலும் அம்பாள் அதிக மகிமையுடன் உள்ளாள். இவள் இடது காலை முன்னோக்கி வைத்தபடி காட்சி தருவது மற்றொரு சிறப்பம்சம். தன்னை வேண்டும் பக்தர்களுக்கு விரைந்து வந்து அருள் செய்வதற்காக இவ்வாறு இருக்கிறாள். சுவாமிக்கு வலது பக்கம் இருப்பதால், அம்பாளை வணங்கினால் கல்யாண மாலை தோள் சேரும் என்பது ஐதீகம்.
மூக்கணாங்கயிறுடன் காணப்படும் அபூர்வ நந்தி
இந்தக் கோவிலில் உள்ள நந்திக்கு மூக்கனாங்கயிறு இருக்கின்றது. இப்படிப்பட்ட நந்தியை நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாது.
இத்தலத்தை 'ஆதிபிரதோஷத்தலம்' என்கிறார்கள். ஒரு பிரதோஷ தினத்தில் குறுங்காலீஸ்வரரைத் தரிசித்தால் ஆயிரம் பிரதோஷ தரிசனம் செய்த பலனும், ஒரு சனி பிரதோஷ தரிசனம் செய்தால் கோடி பிரதோஷ தரிசன பலனும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
தல வரலாறு
சோழ மன்னன் ஒருவன், இவ்வழியே தேரில் சென்றபோது சக்கரம் லிங்கம் மீது ஏறி, ரத்தம் வெளிப்பட்டது. பயந்த மன்னன் பூமிக்கடியில் லிங்கம் இருந்ததைக் கண்டு, கோயில் எழுப்பினான். தேர்ச்சக்கரம் ஏறியதால் இந்த லிங்கத்தின் பாணம் பாதி புதைந்துவிட்டது. எனவே இங்கு சிவன் குறுகியவராக (குள்ளமானவராக) காட்சி தருகிறார். இதனால் சுவாமிக்கு 'குறுங்காலீஸ்வரர்' என்ற பெயர் உண்டானது. 'குசலவம்' என்றால் 'குள்ளம்' என்றும் பொருள் உண்டு. இதன் அடிப்படையில் இவர் குசலவபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுவதாகவும் சொல்வர்.
தந்தை ராமனை எதிர்த்துப் போரிட்ட காரணத்தால், லவ குசர்களை பித்ரு தோஷம் பிடித்துக் கொண்டது. அந்த தோஷம் நீங்க லவ-குசர்கள் தாங்கள் போரிட்ட அதே இடத்தில் ஒரு பலாமரத்தின் அடியில் சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டனர். லிங்கம் பெரியதாக இருந்ததால் சிறுவர்களான லவ-குசர்களால் நிமிர்ந்து நின்று பூசிப்பது சிரமமாக இருந்தது. லவ-குசர்கள் எளிதாய் பூசிக்க ஏற்றவாறு தன் திருமேனியை குறுக்கிக் கொண்டு குறுங்காலீஸ்வரராய் காட்சி அளித்தார். ஈசனின் கருணையைக் கண்டு புளகாங்கிதம் அடைந்த லவ-குசர்கள் தொடர்ந்து வழிபட்டு தோஷ நிவார்த்தி அடைந்தனர். முன்பு குசவபுரிஸ்வரர் என்றும் பின்பு குறுங்காலீஸ்வரர் என்றும் அழைக்கப்பட்டார். அவரை நினைத்து வழிபட பித்ருதோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
ஞாயிற்றுக்கிழமை ராகு கால சரபேஸ்வரர் வழிபாடு
கோயிலுக்கு முன் பெரிய 16 கால் மண்டபம் உள்ளது. ஒரு தூணில் சரபேஸ்வரர் காணப்படுகிறார். ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் இவருக்கு பூஜை நடக்கிறது. சரபேஸ்வரர் வழிபாடு இங்கு மிகப் பிரபலம். ஞாயிறுதோறும் மாலை ராகுகால நேரங்களில் பெருந்திரளான மக்கள் கூடி சரபேஸ்வரர் வழிபாடு நடத்துகின்றனர்.
பிரார்த்தனை
இக்கோவில் வடக்கு நோக்கியிருப்பதால், மோட்ச தலமாக கருதப்படுகிறது. பித்ருதோஷம் உள்ளவர்கள் குசலவ தீர்த்தத்தில் பரிகார பூஜைகளும், தர்ப்பணமும் செய்து கொள்கிறார்கள். பெற்றோருக்கு நீண்டநாள் தர்ப்பணம் செய்யாதவர்கள், அவர்கள் மறைந்த திதி, நட்சத்திரம் தெரியாதவர்கள் இங்கு எந்தநாளிலும் தர்ப்பணம் செய்யலாம்.