
வரதராஜ பெருமாள் கோவில்
இந்திரன் இடியாய் இறங்கி பெருமாளை தரிசிக்கும் தலம்
கொங்கு நாட்டில் உள்ள புகழ் பெற்ற வைணவத் தலங்களில் ஒன்றான நைனாமலை வரதராஜ பெருமாள் கோயில், சேலம்- நாமக்கல் நெடுஞ்சாலையில் உள்ள புதன் சந்தையில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தாயார் குவலய வல்லி. நயன மகரிஷி இந்த மலையில் தவம் செய்து பெருமாளின் தரிசனம் பெற்ற தலம் ஆகையால் இது நைனாமலை என்று பெயர் பெற்றது. சுமார் 3,700 படிகள் கொண்ட இந்த மலையின் உச்சியில் உள்ள 120 அடி உயரம் கொண்ட ஒரே பாறை மீது, இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. கர்ப்பக் கிருகத்தின் உள்ளே ஶ்ரீ வரதராஜப் பெருமாள் பூதேவி, ஶ்ரீதேவியரோடு பக்தர்களுக்கு ஏற்படும் இன்னல்களை விரட்ட கையில் தண்டம் தரித்து தரிசனம் அளிக்கிறார். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, இந்திரன் இடியாய் இந்த மலையில் இறங்கி பெருமாளை தரிசிப்பதாக நம்பப்படுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோயிலில் ஆனி முதல் நாளில் இருந்து ஆடி 30ம் தேதி வரை, சூரியஒளி சுவாமி மீது விழுந்து கொண்டே இருப்பது வேறு எங்கும் காண முடியாத வியப்பான அம்சமாகும். இதுபோல் தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் மூலவர் மீது சூரிய ஒளி படுவது வேறு எங்கும் கிடையாது.

தான்தோன்றீஸ்வரர் கோவில்
வளைகாப்பு நாயகி குங்குமவல்லி அம்மன்
திருச்சி மாநகரின் ஒரு பகுதியான உறையூர், முற்காலத்தில் சோழ மன்னர்களின் தலைநகராக விளங்கியது. உறையூரின் மத்தியில் அமைந்துள்ளது, சுமார் 1800 ஆண்டுகள் பழமையான தான்தோன்றீஸ்வரர் கோவில். இக்கோவில் கர்ப்பிணி பெண்களுக்கான கோவில் என்ற சிறப்பை பெற்றுள்ளது.
சூரவாதித்தன் என்ற சோழ மன்னனின் மனைவி காந்திமதி. சிவ பக்தையான இவள், திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமியை தினமும் வழிபடும் வழக்கம் உள்ளவள்.. காந்திமதி கருவுற்றிருந்த சமயம் ஒருநாள், தாயுமான சுவாமியை தரிசிக்க திருச்சி மலைக்குச் சென்றபோது களைப்பின் காரணமாக நடக்க முடியாமல். மயங்கி அமர்ந்தாள். அப்போது காந்திமதியின் முன் தோன்றிய சிவபெருமான், நீ மிகவும் பிரயாசைப்பட்டு என்னை தேடி வர வேண்டாம். உன்னைப் பார்க்க நானே வந்துவிட்டேன். உனக்கு காட்சி தந்த இந்த இடத்தில் லிங்க ரூபமாக, 'தான்தோன்றி ஈசனாக' எப்போதும் இருந்து உன்னைப் போன்ற கர்ப்பிணிப் பெண்களை காத்து நிற்பேன் என்று கூறி மறைந்தார். சிவபெருமானுடன் பார்வதி தேவியும் இந்தத் தலத்தில் குங்குமவல்லியாக எழுந்தருளி பெண்களின் மங்கலம் காக்கும் தேவியாக அருள்பாலிக்கிறாள். இவள் வளைகாப்பு நாயகி என்றும் திருச்சி மாநகரப் பெண்களால் அன்போடு அழைப்படுகிறாள்.
கோயில் கருவறையில் தான்தோன்றீஸ்வரர் கிழக்கு முகமாக ஏழடி கொண்ட பிரமாண்ட வடிவாக அருள்கிறார். குங்குமவல்லி, இரு கரங்களில் அங்குசம் மற்றும் தாமரை ஏந்தி நின்ற கோலத்தில் அழகுற காட்சி தருகிறாள்.
குங்குமவல்லி தேவிக்கு, ஒவ்வொரு ஆண்டும் வளையல் காப்புத் திருவிழா ஆடிப்பூரம் மற்றும் தை மாத மூன்றாம் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு தினங்களில் மூன்று நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் இந்த வளையல் விழா வெகு பிரசித்தம்.
விழாவின் முதல் நாளில் கர்ப்பிணிப் பெண்கள் குங்குமவல்லி அம்மனுக்கு சுகப்பிரசவம் வேண்டி வளையல்களைக் காணிக்கையாக அளிப்பார்கள். அதேபோல் இரண்டாம் நாள் திருமணமான பெண்கள் குழந்தை வரம் வேண்டி வளையல்களைக் காணிக்கையாக தருவார்கள். விழாவின் மூன்றாம் நாளில் திருமணமாகாத கன்னிப்பெண்கள் தங்களின் திருமண தடை நீங்கி நல்ல வரன் கிடைக்க வளையல்களைக் காணிக்கையாக தருவார்கள்.. வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாள்களிலும் குங்குமவல்லி வளையல் அலங்காரத்தில் வெகு அழகாகக் காட்சி அளிப்பாள். பிறகு பூஜை வழிபாட்டுக்குப் பின்னர் காணிக்கையாகப் பெறப்பட்ட வளையல்கள் பிரசாதமாகத் தரப்படும்.
இந்தத் தலத்தில் வழிபட்டால் களத்திர தோஷம், செவ்வாய் தோஷம், நாக தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருமணம் கைகூட, குழந்தைப்பேறு உண்டாக மாநிலம் முழுவதிருந்தும் ஏராளமான பெண்கள், கூட்டம் கூட்டமாக இந்த கோயிலுக்கு வருகிறார்கள். வேண்டுதல் நிறைவேறி குழந்தைப் பிறந்தவுடன் இங்கு வந்து வளையல் மாலை போடும் சடங்கு அநேகமாக எல்லா நாளிலும் இங்கு நடக்கிறது. சுருங்கச் சொன்னால் குழந்தை வரம் வேண்டுவோருக்கு இந்த கோவில் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

வெற்றிவேல் முருகன் கோவில்
வேல் வடிவில் வேலவன் காட்சி தரும் தலம்
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, ஜலகாம் பாறை . வெற்றிவேல் முருகன் கோவில். ஜலகாம் பாறை, ஏலகிரி மலையினை ஒட்டியுள்ளது. சிவலிங்க வடிவில் உள்ள இந்த முருகன் கோவிலில் விக்கிரகம் இல்லை. ஏழு அடி உயர வேல் மட்டும்தான் இருக்கிறது. வேல் வடிவில் வேலவன் காட்சி தரும் வித்தியாசமான ஆலயமிது.

பிரம்மபுரீஸ்வரர் கோவில்
ஒரே வரிசையில் நிற்கும் நவக்கிரகங்கள்
திருவாரூரில் இருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருக்குவளை. நவக்கிரகங்களின் குற்றம் நீக்கியருளியதால், இத்தல இறைவனுக்கு கோளிலிநாதர் என்ற திருநாமம் ஏற்பட்டது. இங்கு,நவக்கிரகங்கள் தங்கள் தோஷம் நீங்க, தென்திசை நோக்கி வக்கிரமின்றி வரிசையாக நின்று இறைவனை வழிபட்டதால், இக்கோவிலில், அவை ஒரே திசை நோக்கி வரிசையாக காட்சி அளிக்கின்றன. இதனால், கோளிலிநாதரை வழிபடுவோருக்கு நவக்கிரகங்களின் தோஷம் நீங்கும் என்பது இத்தலத்தின் சிறப்பு. இதனையே, 'கோளாய நீக்குமவன் கோளிலி எம்பெருமான்' என்று தேவாரப்பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார் திருஞானசம்பந்தர்.

காமநாத ஈஸ்வரர் கோவில்
தலையாட்டி விநாயகர்
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம், ஆறகளூர் கிராமத்தில் உள்ள திருகாமநாத ஈஸ்வரன் கோவிலில் 'தலையாட்டி விநாயகர்' தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார். கோவில். கெட்டி முதலி என்னும் குறுநிலமன்னன் இக்கோவிலை கட்டும் பணிகளை தொடங்கும் முன்பு விநாயகரிடம் உத்தரவு கேட்டுவிட்டு அதன்பின்பு, பணியைத் துவங்கினான். கோவிலைக் கட்டி முடித்த பிறகு, இவ் விநாயகரிடம் வந்து, கோவில் கட்டும் பணிகள் சரியாக நடந்து இருக்கிறதா என்று கேட்டான். அதற்கு இவர், நன்றாகவே கோவிலைக் கட்டியிருக்கிறாய் என சொல்லும் விதமாக தனது தலையை ஆட்டினார். எனவே இவருக்கு 'தலையாட்டி பிள்ளையார்' என்ற பெயர் வந்தது. தற்போதும் இவர் தனது தலையை இடப்புறமாக சற்று சாய்த்தபடி இருப்பதைக் காணலாம். தொழில், கட்டடப்பணிகளைத் தொடங்கும் முன்பு இவரிடம் வேண்டிக் கொண்டால் அச்செயல் முடியும் வரையில் பாதுகாப்பாக இருந்து அதனை சிறப்புற முடித்து தருவார் என்பதால், இவரைக் காவல் கணபதி என்றும் அழைக்கின்றனர்.

லோகநாதப் பெருமாள் கோவில்
மூலவரும், உற்சவரும் ஒரே தோற்றம் கொண்டிருக்கும் திவ்ய தேசம்
திருக்கண்ணங்குடி என்னும் திவ்ய தேசம் திருவாரூரிலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.இத்தலத்தில் உள்ள மூலவர் திருநாமம் லோகநாதப் பெருமாள். தாயார் லோகநாயகி. உற்ஸவர் தாயாரின் திருநாமம் அரவிந்தநாயகி..திருக்கண்ணன்குடியின் சிறப்பு என்னவென்றால், தாயார் சந்நிதியில் உள்ள மூலவரும் உற்ஸவரும் ஒரே முக சாயலில் இருப்பது தான். இது வேறு எங்கும் காணமுடியாத அழகு என்பர். கல்லால் ஆன மூலவரைப் போலவே உலோகத்தால் ஆன உற்சவரும் அதே கண்கள், மூக்கு, வாய் என்று அச்சு எடுத்தாற்போல அமைந்திருக்கும் தோற்றம் உவகை கொள்ள வைக்கிறது. இது வேறு எங்கும் காணமுடியாத அரிய காட்சியாகும்.

வியாழ சோமேஸ்வரர் கோவில்
முருகப் பெருமான் காலில் பாதரட்சை அணிந்தபடி காட்சி தரும் தலம்
கும்பகோணம் சாரங்கபாணி கோவிலை ஒட்டி அமைந்துள்ளது. வியாழ சோமேஸ்வரர் கோவில். நவக்கிரகங்களில் சுப கிரகமாக வர்ணிக்கப்படும் குருபகவான் வழிபாடு செய்த சிறப்புமிக்க ஆலயம் என்பதால், இத்தல இறைவன் 'வியாழ சோமேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். சோமன் எனப்படும் சந்திரன் வழிபட்டதால், இத்தல இறைவனுக்கு 'சோமேஸ்வரர்' என்று பெயர். குரு மற்றும் சந்திர தோஷம் இருப்பவர்கள், இந்த ஆலயத்தில் உள்ள சோமேஸ்வரரை வழிபட்டால் தோஷங்கள் விலகி நன்மைகள் வந்தடையும்.இத்தலத்து முருகப்பெருமான் மயில் மீது அமர்ந்து ஒரு காலை மடித்து மற்றொரு காலை தொங்கவிட்ட நிலையில் காட்சி தருகிறார் அவர் தொங்க விட்ட நிலையில் இருக்கும் காலில் பாதரட்சை அணிந்து இருக்கிறார். முருகப்பெருமானின் இத்தகைய கோலத்தை வேறு எந்த தலத்திலும் காணமுடியாத.

வல்லப விநாயகர் கோவில்
திருமண தடை நீக்கும் விநாயகர்
வல்லப விநாயகர் கோவில், தஞ்சாவூர் நகரின் மத்தியில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு வெள்ளை விநாயகர் கோவில் என்ற பெயர்தான் பிரசித்தம். சோழ மன்னரின் அரண்மனையைச் சேர்ந்தவர்களும் வழிபட்டதால், இவருக்குக் கோட்டை விநாயகர் என்ற பெயரும் உண்டு. இந்தக் கோவிலில் மூலவர் விநாயகருக்குள் வல்லபை தேவி ஐக்கியமாகி, அரூபமாகக் காட்சி தருவதாக நம்பிக்கை. அதேநேரம் உற்சவர் விநாயகர் மனைவி வல்லபை தேவி சகிதமாகக் காட்சி தருகிறார்.வல்லபை என்பவள் சாபத்தால் அரக்கியாக மாறி, முனிவர்களையும் தேவர்களையும் அச்சுறுத்தி வந்தாள். அனைவரும் சேர்ந்து சிவனிடம் வந்து முறையிட்டனர். அவர் அரக்கியை அடக்க பாலமுருகனைப் போருக்கு அனுப்பினார். அரக்கியைக் கண்டு பயப்படுவது போல் நடித்த பாலமுருகன், அண்ணனை அனுப்பி வைத்தார். தனக்கு எதிரே தைரியமாக நின்ற விநாயகரைக் கண்டு சிலிர்த்தாள் வல்லபை. விநாயகர் அவளை அப்படியே துதிக்கையால் தூக்கித் தனது மடியில் அமர்த்திக் கொண்டார. மனித உடலும் மிருக முகமும் கொண்டவரால் சாபத்தில் இருந்து விமோசனம் கிடைக்கும் என்று அறிந்திருந்த வல்லபை, அந்த நிமிடமே பழைய உருவத்தைப் பெற்றாள். விநாயகரையே மணம் புரிந்தாள்.திருமணமாகாத பெண்கள் இங்கு நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்டு, விநாயகரைத் தரிசித்து, மாங்கல்யச்சரடு பெற்றுக்கொண்டால், விரைவில் திருமண வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

வெக்காளி அம்மன் கோவில்
வெட்டவெளியில் அமர்ந்து பக்தர்களின் வேதனையை தீர்க்கும் அம்மன்
திருச்சி மாநகரின் மையப் பகுதியான உறையூரில் அருள்பாலிக்கிறாள் வெக்காளி அம்மன். உறையூர் பகுதியின் காவல் தெய்வமான அன்னை வெக்காளி அம்மன், முற்காலத்தில் சோழர்களின் இஷ்ட தெய்வமாகவும் விளங்கினாள். பொதுவாக ஆலயங்களில், மூலவரின் கருவறையின் மேல் விமானம் அமைந்திருக்கும். ஆனால், வெக்காளி அம்மன் வெட்டவெளியில் வானமே கூரையாக, மேகங்களே திருவாசியாக, மழையே அபிஷேகமாக, நட்சத்திரங்களே மலர்களாகக் கொண்டு எழுந்தருளி இருக்கிறாள். வெக்காளி அம்மன் வெட்ட வெளியில் உள்ள ஒரு பீடத்தில் சாந்த சொரூபியாய் கருணை ததும்பும் முகத்துடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். சிரசில் அக்னிச் சுவாலையுடன் கூடிய கிரீடமும்,, அதில் நாகமும் அமைந்துள்ளது. சிவந்த வாயில் துருத்திக் கொண்டிருக்கும் கோரை பற்களில் சீற்றம் கிடையாது. நான்கு கரங்களில், மேற்கரங்கள் இரண்டில் உடுக்கை, பாசம், கீழே வலது கரம் சூலம் ஏந்தியிருக்கிறாள். வலது காலை மடித்து, இடது காலை தொங்கவிட்டு, அரக்கனை மிதித்த விதமாக காட்சி தருகின்றாள். பொதுவாக, இடதுகாலை மடித்து காட்சிதரும் கோலத்திற்கு மாறாக, வலது காலை மடித்து காட்சி தருவது குறிப்பிடத்தக்கது. இது 'வீர ஆசனம்' என்று அழைக்கப்படுகிறது.
வெக்காளி அம்மன் வெட்டவெளியில் அமர்ந்தற்கான காரணம்
வன்பராந்தகன் என்னும் சோழ மன்னன் ஆட்சிக்காலத்தில், சாரமா முனிவர் என்பவர் வாழ்ந்து வந்தார். சிவபக்தரான இவர், திருச்சி மலைக்கோட்டையில் உள்ள தாயுமான சுவாமிகள் மீது மிகுந்த ஈடுபாடு உடையவர். தாயுமான சுவாமிகளின் பூஜைக்கு என்று நந்தவனம் அமைத்து பல மலர்ச்செடிகளை பயிர் செய்து வந்தார்.பிராந்தகன் என்னும் பூ வணிகன் இவரது நந்தவனத்து பூக்களை பறித்து அரசனுக்கு அளிக்கத் தொடங்கினான். நந்தவனத்தில் மலர்கள் குறைவதன் காரணத்தை அறிந்த சாரமா முனிவர், மன்னரிடம் முறையிட்டார். ஆனால் மன்னனோ முனிவரை அலட்சியம் செய்தான். பின்னர், முனிவர் தான் வணங்கும் தாயுமான சுவாமிகளிடம் முறையிட்டார். தன் அடியவருக்கு செய்யப்பட்ட இடரைத் தாங்காமல், தாயுமான சுவாமிகள், அதுவரை கிழக்கு நோக்கி எழுந்தருளியிருந்த தன் நிலையை மாற்றி. மேற்கு முகமாகத் திரும்பி உறையூரை நோக்கினார்.சிவபெருமானின் கோபத்தினால் அப்போது உறையூரில் மண் மாரி பொழியத் தொடங்கியது. ஊரிலிருந்த அனைத்து உயிரனங்களும் தப்பியோடிப் பிழைக்க வழி தேட முற்பட்டன. உறையூரை மண் மூடியது. மக்கள் தங்களைக் காத்துக் கொள்ள தங்களின் காவல் தெய்வமான வெக்காளியம்மனை தஞ்சமடைந்தனர்.வெக்காளியம்மன் தாயுமானவ சுவாமிகளை வேண்டினாள். அதற்குப் பிறகு, மண் மாரி நின்றது. ஆனால் மக்கள் வீடிழந்து வெட்ட வெளியில் தங்கும் நிலை உருவானது. மக்களின் துயர் கண்டு வெக்காளியம்மன், ஊர் மக்கள் அனைவருக்கும் வீடு கிடைக்கும் வரை, நானும் உங்களைப்போல வெட்ட வெளியிலேயே இருப்பேன் என்று அருள் வாக்கு கூறினாள்.அதனால்தான், அன்னை வெக்காளி, இன்றும் வானமே கூரையாக வெட்ட வெளியில் இருந்து, காற்று, மழை, வெய்யில் இவைகளைத் தாங்கிக் கொண்டு மக்களுக்கு அருள் செய்து வருகிறாள்.பொதுவாக ஒரு கோவில் ஒரு குறிப்பிட்ட பிரச்சினைக்கு பரிகாரத் தலமாக விளங்கும். ஆனால் உறையூர் வெக்காளியம்மன் பக்தர்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பவளாகவும் அவர்களின் வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றுபவளாகவும் விளங்குகின்றாள். அம்மன் சன்னிதியின் எதிரே சூலங்கள் நடப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை ஒரு சீட்டில் எழுதி அதனை அம்மனின் பாதங்களில் வைத்து எடுத்து, பின்னர் அதனை அம்மன் சன்னதியில் உள்ள சூலத்தில் கட்டி விடுகின்றனர். இதனால் தங்கள் வேண்டு தல்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக அமைந்துள்ளது.

சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில்
அரிதான கோலத்தில் காட்சியளிக்கும் தட்சிணாமூர்த்தி
பொதுவாக தட்சிணாமூர்த்தி ஒரு காலை மடக்கி, ஒரு காலை தொங்கவிட்டிருப்பார். ஆனால், கடலூரில் இருந்து 18 கி.மீ., தூரத்திலுள்ள தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில் கோஷ்டத்தில் (சுவாமிசன்னதி சுற்றுச்சுவர்) அருள் பாலிக்கும் தட்சிணாமூர்த்தி, இரு கால்களையும் மடக்கி, பீடத்தின் மீது அமர்ந்து காட்சி தருகிறார். காலுக்கு கீழே முயலகனும் இல்லை. இது ஒரு அரிதான காட்சியாகும்.
ஒருசமயம் இத்தலத்தில் வாழ்ந்த விவசாய தம்பதியினரான பெரியான் மற்றும் அவன் மனைவியின் பக்தியை உலகுக்கு உணர்த்த விரும்பிய சிவபெருமான், அவர்கள் வயலில் வேலை செய்ததற்கு கூலியாக கொடுத்த உணவை கால்களை மடக்கி தரையில் அமர்ந்து உண்டார். அந்த நிகழ்ச்சியை குறிப்பிடும் வகையில்தான் தட்சிணாமூர்த்தி இரு கால்களையும் மடக்கி அமர்ந்திருக்கிறார்.
இவரிடம் வேண்டிக்கொண்டால் உணவிற்கு பஞ்சம் வராது என்றும், மேலும் விவசாயம் செழிக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

விஜயராகவ பெருமாள் கோவில்
அதிசயமான குதிரை வாகனம் உள்ள திவ்ய தேசம்
காஞ்சிபுரத்திலிருந்து 13 கி.மீ. தூரத்தில் உள்ள திவ்ய தேசம் திருப்புட்குழி ஆகும். இத்தலத்தில் உள்ள குதிரை வாகனம் மிகவும் அதிசயமான வாகனம் ஆகும். 'கல் குதிரை' என வழங்கப்படும் இக்குதிரை உண்மையான குதிரை போலவே அசையும் உறுப்புகளைக் கொண்டதாகும். இதைச் செய்த கலைஞா் இனி எவருக்கும் இது போன்ற வாகனம் செய்து கொடுப்பதில்லை என்ற உறுதியினை எடுத்ததுடன், அதனைக் கடைசி வரைக் கடைப்பிடித்து உயிா்துறந்தாராம். இக் கலைஞரது உறுதிக்கும் பக்திக் கும் மதிப்பளிக்கும் விதமாக, திருப்புட்குழி உற்சவப் பெருமான், மாசி பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாள் திருவிழாவின் போது இவரது வீதிக்கு எழுந்தருளிச் சேவை சாதிப்பது இன்றும் நடைமுறையில் உள்ளது.மேலும் இந்தக் குதிரை குறித்து அதிசய செய்தி ஒன்றை சொல்கிறார்கள். குதிரையின் தலை, உடல், வால் பகுதி என மூன்றும் தனித்தனியாக மரத்தினால் செய்யப்பட்டதாம். அவை மூன்றையும் இணைத்த பின் உயிர் பெற்ற குதிரை இரவு நேரங்களில் வயற்காட்டை மேய்ந்து தீர்த்ததாம். இதனால் இப்போதும் ஆண்டு முழுவதும் இக்குதிரையின் உடல் மூன்றாக பிரிக்கப்பட்டே வைக்கப்படுகிறது. பிரம்மோற்ஸவத்தின் குதிரை வாகன நாளன்று மட்டும் இணைக்கப்பட்டு அதில் உற்சவமூர்த்தி எழுந்தருளுகிறார்.

வேலாயுதசுவாமி கோவில்
மூலவர் முருகப்பெருமான் வேலுடன் காட்சி தரும் அரிய கோலம்
கிணத்துக்கடவு வேலாயுதசுவாமி கோவிலில், மூலவர் முருகப்பெருமான் கையில் வேலுடன் காட்சி தருகிறார். மூலவரின் இத்தகைய தோற்றம் வேறு எந்த தலத்திலும் காண்பதற்கு அரிது. இத்தலம் கோவையிலிருந்து 21 கி.மீ. தொலைவிலும், பொள்ளாச்சியில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.சில நூற்றாண்டுகளுக்கு முன் பொள்ளாச்சியை அடுத்துள்ள புரவிபாளையத்தில் ஜமீன்தார் ஒருவர் வசித்து வந்தார். சிறந்த முருக பக்தரான இவர், அடிக்கடி பழனிக்குச் சென்று முருகனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு முறை, ஜமீன்தார் விரதமிருந்து பழநி சென்றார். பழநி அருகிலுள்ள ஆயக்குடி ஜமீனில் இவரை விருந்துக்கு அழைத்தனர். ஆயக்குடி சென்ற இவர், பழநி முருகனை தரிசிக்காமல் விருந்துண்ண மாட்டேன் என்று கூறிவிட்டு ஏதோ காரணத்தால், பழனி முருகனை தரிசிக்காமல், புரவி பாளையத்திற்கே திரும்பிவிட்டார். பழநி முருகனை தரிசிக்காமல் வந்து விட்டோமே என்ற கவலையினாலேயே ஜமீன்தாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அன்றிரவு, ஜமீன்தாரின் கனவில் முருகப்பெருமான் தோன்றி, கிணத்துகடவு என்ற ஊரில் உள்ள மலை மீது தன் பாதம் பதிந்துள்ளதாகவும், அதனை பூஜிக்கும்படியும் கூறி மறைந்தார். இதையடுத்து முருகன் குறிப்பிட்ட கிணத்துகடவு பொன்மலை மீது சென்று பார்த்த போது ஒரு இடத்தில் முருகனின் பாதம் இருப்பதைக்கண்டு மகிழ்ந்து அதற்கு பூஜை செய்து வழிபட ஆரம்பித்தார். மறுபடியும் முருகன் ஜமீன்தாரின் கனவில் வேலுடன் தோன்றி, அதே தோற்றத்தில் மலைமீது மூலவர் பிரதிஷ்டை செய்து சன்னதி அமைக்க வேண்டும் என்று கூற, சன்னதியும் அமைக்கப்பட்டது. கையில் வேலுடன் மூலவர் அமைக்கப்பட்டதால் இங்குள்ள முருகன் 'வேலாயுத சுவாமி' என அழைக்கப்பட்டார்.பெற்றோரிடம் போபித்துக்கொண்டு பழநியில் குடி கொண்ட முருகப்பெருமான், இந்த கிணத்துக்கடவு பொன்மலையில் பாதம் பதித்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. எனவே இங்கு மூலஸ்தான முருகனுக்கு பூஜை நடத்தும் முன்பாக, பாறையிலுள்ள முருகனின் பாதத்திற்கே முதல் பூஜை செய்யப்படுகிறது.அருணகிரிநாதர் இந்த தலத்தை ‘கனககிரி’ என்று பாடி இருக்கிறார். 'கனக' என்பது பொன்னையும் 'கிரி' என்பது மலையையும் குறிக்கும். .திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க பக்தர்கள் வேலாயுத சுவாமியை வேண்டிக் கொள்கிறார்கள்.

ஏகௌரியம்மன் கோவில்
இரண்டு திருமுகங்கள் கொண்ட அம்மன்
தஞ்சையில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வல்லம் என்ற ஊரில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஏகௌரியம்மன் கோவில் உள்ளது. சோழ மன்னர்களின் வழிபாட்டு தெய்வமாக விளங்கியவள். இந்த தேவி அக்னி கிரீடம் அணிந்து, எட்டு திருக்கரங்களுடன், பத்மபீடத்தின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். ஒன்றன்மீது ஒன்றாக அமைந்த இரண்டு திருமுகங்களுடன் காட்சி தருகிறாள். ஒரு தலை கோரைப் பல்லுடன் உக்கிரமாக உள்ளது. இதற்கு மேலுள்ள மற்றொரு தலை அமைதியே வடிவமாக உள்ளது. தீயவர்களை அழிக்க உக்கிரமுடன் ஒரு முகம், வழிபடும் அடியவர்களின் துயர் நீக்க சாந்தமுடன் மற்றொரு முகத்துடனும் காட்சி அளிக்கிறாள். எட்டு கைகளில் சூலம், கத்தி, உடுக்கை, நாகம், கேடயம், மணி, கபாலமும், பார்வதியின் அம்சத்தை உணர்த்தும் விதமாக கிளியும் உள்ளது.
அம்மனுக்கு ஏகௌரி என்ற பெயர் வந்த வரலாறு
முன்னொரு காலத்தில் தஞ்சன் என்ற அரக்கன் சிவனை நினைத்து கடும் தவம் புரிந்து, ஒரு பெண்ணை தவிர யாராலும் தன்னை வெல்ல முடியாது என்ற வரத்தை பெற்றான். பின்னர் தஞ்சன், ஆணவத்தால் முனிவர்களையும், தேவர்களையும் மிகவும் கொடுமைப் படுத்தினான். தேவர்கள் சிவபெருமானிடம் தஞ்சனின் கொடுமைகள் குறித்து முறையிட்டனர். சிவபெருமான் பார்வதி தேவியை அழைத்து அரக்கனை அழிக்க ஆணையிட்டார். ஈசனின் ஆணையை ஏற்ற பார்வதி தேவி சிம்ம வாகன மேறி எட்டுக்கரங்களிலும் ஆயுதம் ஏந்தி புறப்பட்டாள். தேவிக்கும், தஞ்சனுக்கும் கடும்போர் ஏற்பட்டது. போரின் இறுதியில், தஞ்சன் எருமைக் கடாவாக மாறி தேவியைத் தாக்கினான். தேவி எருமைக் கடாவாக வந்த அரக்கனை வாளால் தலை வேறு, உடல் வேறு என இரண்டு துண்டாக்கினாள். உயிர் பிரியும் நேரத்தில் தஞ்சன் தேவியைப் பணிந்து, இந்த பகுதி எனது பெயரால் தஞ்சாபுரி என்று அழைக்கப்பட வேண்டும் என்று வேண்டினான். தேவி, அவன் கேட்ட வரத்தை வழங்கினாள் . அரக்கனை வதைத்த பின்னும், அம்மனின் ஆக்ரோஷம் அடங்கவில்லை. அதே உக்கிரத்துடன் வல்லத்தில் அலைந்து திரிந்தாள். இதனால் நாடெங்கும் வறட்சி உண்டாயிற்று. நாடெங்கும் பஞ்சம், பசி, பட்டினி என மக்கள் தவித்தனர். நிலைமையை உணர்ந்த சிவபெருமான் பார்வதியை ;ஏ கவுரி; சாந்தம் கொள் என்று கேட்டுக்கொண்டார். அம்மையின் கோபம் சற்று தணிந்தது. நெல்லிப்பள்ளம் என்ற குளத்தில் மூழ்கினாள். அப்போது பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து அங்கேயே எழுந்தருளவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இங்கு ஏகௌரி அம்மனாக அருள்புரிந்து வருகிறாள். அம்மன் அரக்கனை வதம் செய்தது ஆடிமாத கடைசி வெள்ளிக்கிழமை ஆகும். எனவே அன்றைய தினம் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து, தீ மிதித்து அம்மனை சாந்தப் படுத்துகின்றனர்.
குழந்தை பாக்கியத்திற்கு எலுமிச்சை பழச்சாறு பிரசாதம்
குழந்தை வரம் வேண்டி இத்தலத்துக்கு வரும் பெண்களுக்கு எலுமிச்சம் பழத்திற்கு பதிலாக எலுமிச்சை பழச்சாறை பிரசாதமாகத் தருகிறார்கள் வேறு எந்த தலத்திலும் இப்படி ஒரு நடைமுறை இல்லை.
ஏகௌரி அம்மனின் இருபுறமும் ராகு கேது எழுந்தருளி இருக்கிறார்கள். அதனால் கால சர்ப்ப தோஷம் , களத்திர தோஷம், திருமணத்தடை போன்ற பிரச்சினைகளுக்கு சிறந்த பரிகார தலமாக இருக்கிறது.

பிரசன்ன விநாயகர் கோவில்
திப்பு சுல்தானிடம் காணிக்கை கேட்ட விநாயகர்
முற்காலத்தில் உடுமலைப்பேட்டை ஊரைச்சுற்றி சக்கர வடிவில் அரணாக மலை அமைந்திருந்ததால் சக்கரகிரி என்றும், அம்மலையில் உடும்புகள் நிறைந்து காணப்பட்டதால் உடும்புமலை என்றும் அழைக்கப்பட்டது. இவ்வூர், பின் உடுமலைப்பேட்டை என்றானது. திப்பு சுல்தான் வனமாக இருந்த இப்பகுதியை ஆட்சி செய்தார். அரை வட்ட மலையினால் இப்பகுதி பாதுகாப்புடன் அமைந்திருந்தது. இதனால், எதிரிகள் யாரும் எளிதில் நெருங்க முடியாததால், திப்புசுல்தான் தனி ராச்சியம் கொண்டு ஆட்சி செய்து வந்தார். ஒர் நாள், அவரது கனவில் விநாயகர் தோன்றி, 'உன் நாட்டை நான் பாது காத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் எனக்கு காணிக்கை கூட செலுத்தாமல் இருக்கிறாய்' என்றாராம். அதைக் கேட்ட திப்புசுல்தான், காணிக்கை கேட்ட விநாயகருக்காக, ஊரின் மேற்கு பகுதியில் குளக்கரையில் பிரசன்ன விநாயகர் கோவில் அமைத்தார். இத்தல விநாயகர் ஆறடி உயரத்தில், ராஜ கம்பீர கோலத்தில், ஏகதள விமானத்தின் கீழ் அமர்ந்துள்ளார். மூஷிக வாகனம் பெரிய அளவில் இருப்பதும், முன் மண்டபத்தின் மேற்கூரையில் 12 ராசிகளைக் குறிக்கும்படியான சிற்பம் பொறிக்கப் பட்டிருப்பதும் சிற்பக்கலையின் சிறப்பை உணர்த்துகிறது. . ஒவ்வொரு கிருத்திகை யன்றும் விநாயகர் வெள்ளித் தேரில் பவனி வருகிறார்இத்தலத்தில் காசி விசுவநாதர், அவருக்கு இடப்புறம் காசி விசாலாட்சி, அருகில் தம்பதி சமேதராக முருகன், முகப்பில் வன்னி மரத்தின் அடியில் பிரம்மன், வடமேற்கில் கண்ணபுரநாயகி உடனாய சுவுரிராசப் பெருமாள், அருள்பாலிக்கிறார்கள். இதனால், இத்தலம் சிறந்த சைவ வைணவ இணைப்பு பாலமாகவும், மும்மூர்த்திகள் அமைந்த தலமாகவும் திகழ்கிறது.கல்வியில் சிறக்கவும்,அனைத்து தோஷங்கள் மற்றும் குடும்ப பிரச்னைகள் விலகவும், இத்தல விநாயகரை வேண்டிக் கொள்கின்றனர்.

அருணாசலேஸ்வரர் கோவில்
திருவண்ணாமலை நந்தி உயிர் பெற்றெழுந்து கால் மாற்றி அமர்ந்த அதிசயம்
பொதுவாக சிவாலயங்களில் ஈசனை பார்த்தப்படி இருக்கும் நந்தி தனது இடது காலை மடக்கி வலது காலை முன்வைத்து அமர்ந்து இருக்கும். ஆனால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள பெரிய நந்தி தனது வலது காலை மடக்கி இடது காலை முன்வைத்து அமர்ந்துள்ளது. இதன் பின்னணியில் ஆச்சரியமான ஒரு வரலாற்று நிகழ்ச்சி உள்ளது.முன்னொரு காலத்தில், திருவண்ணாமலை கோவிலை முகலாய மன்னன் ஒருவன் கைப்பற்றினான். அப்போது ஐந்து சிவபக்தர்கள் ஒரு காளை மாட்டை சுமந்துக் கொண்டு சென்றனர். உடனே முகலாய மன்னன், எதற்காக இந்த காளைமாட்டை சுமந்து செல்கிறீர்கள் என்று கேட்டான். உடனே சிவபக்தர்கள், இந்த காளை மாடு, எங்கள் இறைவன் சிவபெருமானின் வாகனம். எங்கள் இறைவனை சுமப்பவரை நாங்கள் சுமப்பது எங்களுக்கு இந்த பிறவியில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என்று கூறினார்கள்.இதைக் கேட்டு கோபமுற்ற முகலாய மன்னன், அந்த காளை மாட்டை இரண்டு துண்டாக வெட்டினான். .எங்கே உங்கள் ஈசன் வந்து இதை ஒன்று சேர்த்து உயிர் கொடுப்பாரா என்று ஏளனமாக வினவினான். அதிர்ச்சி அடைந்த சிவ பக்தர்கள் அண்ணாமலையார் சன்னதிக்கு ஓடோடி சென்று கண்ணீர் மல்க முறையிட்டனர். அப்போது அண்ணாமலையார் அசரீரியாக அவர்களிடம்,வடக்கு திசையில் ஒருவன் ஓம் நமச்சிவாய மந்திரம் சொல்லிக் கொண்டிருப்பான் அவனை அழைத்து வாருங்கள் என்று கூறினார். இதையடுத்து சிவபக்தர்கள் வடக்கு திசை நோக்கி சென்றனர். அங்கு வாலிபன் ஒருவன் ஓம் நமச்சிவாய என்று சொல்லியபடி ஒரு இடத்தில் உட்கார்ந்து இருந்தான். வாலிபனை பார்த்த சில பக்தர்கள் இவன் காளை மாட்டுக்கு உயிர் கொடுப்பானா என்று சந்தேகப்பட்டார்கள். அடுத்த வினாடி அவர்களை நோக்கி புலி ஒன்று பாய்ந்தது. அப்போது அந்த வாலிபன் நமச்சிவாய மந்திரத்தை சொல்லி புலியை தடுத்து நிறுத்தினான். இதனால் வாலிபன் மீது நம்பிக்கை கொண்ட சிவபக்தர்கள், அண்ணாமலையார் கோவிலில் நடந்ததை அவனிடம் விவரித்தார்கள். உடனே அந்த வாலிபன் கோவிலுக்கு புறப்பட்டான். கோவிலுக்குள் வந்ததும் இரண்டு துண்டாக வெட்டுப்பட்டு கிடந்த காளை மாட்டை பார்த்தான். கண்ணீர் மல்க நமச்சிவாய மந்திரத்தை கூறினான். அவன் சொல்ல சொல்ல வெட்டுப்பட்டு கிடந்த மாடு ஒன்றாக இணைந்து உயிர் பெற்றது.இதைக் கண்டு ஆத்திரமும் அவமானமும் அடைந்த முகலாய மன்னன், இந்த வாலிபனுக்கு இன்னும் சில போட்டிகள் வைக்க விரும்புகிறேன். அதில் இந்த வாலிபன் வெற்றி பெற்றால் என்னிடம் உள்ள பொருட்கள் அனைத்தையும் இந்த ஆலயத்துக்கு தந்து விடுகிறேன். இல்லையென்றால் இந்த ஆலயத்தை இடித்து தகர்த்து விடுவேன என்றான். அவனது இந்த சவாலை வாலிபன் ஏற்றுக் கொண்டான். உடனே முகலாய மன்னன் ஒரு தட்டு நிறைய மாமிசத்தை கொண்டு வர உத்தரவிட்டான். அந்த மாமிசத்தை அண்ணாமலையாருக்கு படையுங்கள். அவருக்கு உண்மையிலேயே சக்தி இருந்தால் அவை பூக்களாக மாறட்டும் என்றான். அவன் உத்தரவுப்படி மாமிசத்தை அண்ணாமலையார் அருகே கொண்டு சென்றனர். அப்போது அந்த வாலிபன் நமச்சிவாய மந்திரத்தை உச்சரித்தான். அடுத்த வினாடி மாமிச துண்டங்கள் அனைத்தும் பல்வேறு வகை பூக்களாக மாறின.இதையும் முகலாய மன்னனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வாலிபனுக்கு அடுத்த போட்டியாக ராஜகோபுரத்தின் அருகே உள்ள பெரிய நந்தியை உயிர் பெற்று எழ வைக்கச்சொன்னான்.அப்படி உயிர் பெற்றெழுந்த நந்தியை கால்களை மாற்றி அமர வைக்க வேண்டும் என்றும் சவால் விட்டான். இந்த சவாலையும் ஏற்றுக் கொண்ட வாலிபன் நமச்சிவாய மந்திரத்தை உச்சரித்தான். அந்த மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல நந்தி உயிர் பெற்று எழுந்தது. தனது கால்களை மாற்றி அமர்ந்தது. இதை கண்டதும் முகலாய மன்னனுக்கு கை-கால்கள் நடுங்கியது. அண்ணாமலையார் ஆலயத்துக்கு நிறைய பொன்னும் பொருளும் கொடுத்து விட்டு அங்கிருந்து வெளியேறினான். முகலாய மன்னனுக்கு அற்புதங்களை நிகழ்த்தி காட்டிய வாலிபன்தான் பிற்காலத்தில் வீரேகிய முனிவராக மாறி திருவண்ணாமலை வடக்கில் உள்ள சீனந்தல் எனும் கிராமத்தில் வசித்து வந்தார். அவர் நினைவாக அந்த ஊரில் ஒரு மடம் உள்ளது. அவரைப் போற்றும் வகையில் ராஜகோபுரம் அருகே கால் மாற்றி அமர்ந்த நந்தி தனது தலையை வடக்கு திசை நோக்கி லேசாக சாய்த்தபடி உள்ளது. அன்று முதல் பெரிய நந்தி தனது வலது காலை மடித்தும் இடது காலை முன்வைத்தும் அமர்ந்துள்ளது.

சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில்
சிவபெருமான் பக்தனுக்காக வயலில் விவசாய வேலை பார்த்த தலம்
கடலூரில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள தேவாரத்தலம் திருத்திணை சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில். தற்போது இந்தத் தலம், தீர்த்தனகிரி என்று அழைக்கப்படுகிறது.
முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த ஒரு விவசாய தம்பதியினரான பெரியான் என்னும் பள்ளனும் அவன் மனைவியும் சிவபெருமான் மீது தீவிர பக்தியுடன் இருந்தனர். அவர்கள் தினமும் தாங்கள் உணவு அருந்துவதற்கு முன் யாராவது ஒருவருக்காவது உணவு அளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்கள்.
ஒருநாள் சிவபெருமான் அவர்களது பக்தியை சோதிப்பதற்காக எவரும் அத் தம்பதியரின் வீட்டுக்கு செல்லாதபடி செய்துவிட்டார். அதனால், விவசாயி தன் வயலில் வேலை செய்யும் பணியாளர்கள் யாருக்காவது உணவு அளிக்கலாம் என்று நினைத்து, தன் மனைவியுடன் வயலுக்குச் சென்றார். அங்கும் பணியாளர்கள் யாரும் இல்லை. அப்போது, சிவபெருமான் முதியவர் வடிவம் தாங்கி அங்கே வந்தார். விவசாயி அவரிடம், தான் கொடுக்கும் உணவை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். முதியவர் அவரிடம், 'நான் உழைக்காமல் எதுவும் சாப்பிட மாட்டேன். எனவே, உன் வயலில் எனக்கு ஏதாவது வேலை கொடுத்தாள், அதற்கு கூலியாக வேண்டுமானால் சாப்பிடுகிறேன்' என்றார். விவசாயியும் ஒப்புக்கொண்டு, தன் வயலை உழும்படி கூறினார். முதியவர் வயலில் இறங்கி உழுதார்.
தம்பதியர் இருவரும் வீட்டிற்கு சென்று, உணவை எடுத்துக்கொண்டு வயலுக்குத் திரும்பினர். அப்போது, வயலில் விதைக்கப்பட்டிருந்த தினைப்பயிர் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. நிலத்தை உழுத உடனேயே இத்தனை பயிர் விளைந்ததை கண்டு ஆச்சரியமடைந்த விவசாயி, சந்தேகத்துடன் முதியவருக்கு அருகிலிருந்த கொன்றை மரத்தின் அடியில் சாதம் பரிமாறினார். முதியவர் சாப்பிட்ட பின்பு, அவரிடம் 'ஒரே நாளில் பயிர் விளைந்தது எப்படி?' எனத் தன் சந்தேகத்தைக் கேட்டார். சிரித்த முதியவர் சிவனாக சுயரூபம் காட்டி அத்தம்பதியருக்கு முக்தி கொடுத்து, இத்தலத்தில் சிவலிங்கமாக எழுந்தருளினார். அதிசயமாக ஒரே நாளில் தினை விளைந்ததால் இத்தலம் தினைநகர் என்று பெயர் பெற்றது.
சிவபெருமான், சுயம்புலிங்கமாக சதுர பீடத்துடன் காட்சி தருகிறார். வயலில் வேலை செய்ததால் சிவபெருமான், 'விவசாயி' என்றும் பெயர் பெற்றார்.அவர் நிலத்தை உழ ஏர் மற்றும் நீர் இறைக்கும் கலம் ஆகியவற்றைப் பயன்படுத்தினார் என்பதால், அவையும் கோவிலில் வைக்கப்பட்டுள்ளன.
நடராஜரின் தாண்டவத்திற்கு இசைக்கும் திருமால், பிரம்மா
இத்தலத்தில் தனிச் சன்னதியில் எழுந்தருளி இருக்கும் நடராஜரின் திருவடிக்கு கீழே, திருமால் சங்கு ஊதியபடியும், பிரம்மா மத்தளம் வாசித்தபடியும் இருக்கின்றனர். திருமால், பிரம்மா இருவரது இசைக்கேற்ப சிவன் நடனமாடும் இக்காட்சியை காண்பது மிகவும் அபூர்வம். திருமாலும் பிரம்மாவும் இசைத்துக் கொண்டிருப்பதால், இவர்கள் இருவரையும் 'இசையமைப்பாளர்' என்று அழைக்கும் வழக்கமும் இருக்கிறது. நடனம், இசை பயில்பவர்கள் இவருக்கு பூஜை செய்து வேண்டிக்கொண்டால், கலையில் சிறப்பிடம் பெறலாம் என்பது நம்பிக்கை.

ரங்கநாதர் கோவில்
ஸ்ரீரங்கம் உற்சவருக்கு நம்பெருமாள் என்ற பெயர் ஏற்படக் காரணமான சுவையான சம்பவம்
பூலோக வைகுண்டம் என பெருமை பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உற்சவப் பெருமாள் பெயர் 'அழகிய மணவாளன்'. இவரை 'நம்பெருமாள்' என்றும் அழைப்பதுண்டு. அழகிய மணவாளன் என்ற பெயர் கொண்டிருந்த உற்சவ மூர்த்திக்கு நம்பெருமாள் என்ற பெயர் ஏற்பட்டதன் பின்னணியில் ஒரு சுவையான சம்பவம் உள்ளது.பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு, டெல்லி சுல்தான் தென்னகத்தின் மீது படையெடுத்து பல கோயில் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றான். ஸ்ரீரங்கம் கோவிலை சூறையாடி, உற்சவர் அழகிய மணவாளன் பெருமாளை டில்லிக்கு எடுத்துச் சென்றான். ஸ்ரீரங்கத்தில் உள்ளவர்களின் கடுமையான முயற்சியால், அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த உற்சவர் சிலை டில்லியிலிருந்து மீட்டுக் கொண்டு வரப்பட்டது.ஆனாலும் பலருக்கும் மீட்டுக் கொண்டு வரப்பட்டது பழைய அழகிய மணவாளன் உற்சவமூர்த்திதானா அல்லது அதை போன்றதொரு சிலையை கொடுத்தனுப்பி விட்டார்களா என்ற சந்தேகம் எழுந்தது. சந்தேகத்தை நிவர்த்தி செய்ய, அழகிய மணவாளனின் ஆடைகளை முன்னர் துவைத்துக் கொண்டிருந்த சலவைத் தொழிலாளியை தேடி கண்டுபிடித்தனர். அறுபது ஆண்டுகள் கழிந்து விட்டநிலையில், அவர் கண் பார்வை குறைந்து, தள்ளாடும் முதியவராக மாறியிருந்தார்.அவரை அழைத்து வந்த பின்னர், மீட்டுக் கொண்டுவந்த பெருமாளுக்கு திருமஞ்சனம் (நீராட்டு) செய்தனர். திருமஞ்சன ஆடையை சலவை செய்யும் முதியவரிடம் கொடுத்தனர். சிறிது திருமஞ்சன நீரை பருகியும், திருமஞ்சன ஆடையை முகர்ந்து அதன் தெய்வீக மணத்தையும் கண்டறிந்த, அந்த முதியவரின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. அவர் அந்த தள்ளாத நிலையிலும் , 'இது நம் பெருமாள்தான்' என்று உரத்தக் குரலில் கூவியபடி துள்ளிக் குதித்தார். அதுமுதல், அழகிய மணவாளன் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்த உற்சவர் பெருமாள், 'நம்பெருமாள்' என்ற திருநாமத்திலும் அழைக்கப்படலானார்.

வெற்றிவேல் முருகன் கோவில்
கடவுள் நம்பிக்கை அற்றவரை காப்பாற்றிய முருகப்பெருமான்
சிதம்பரம் பிச்சாவரம் சாலையில் அமைந்துள்ள கிள்ளை என்ற ஊரில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள சி.மானம்பட்டி என்னும் ஊரில் அருள்பாலிக்கிறார் வெற்றிவேல் முருகன். இவர் வள்ளி தெய்வானை உடனின்றி, தனித்து மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.பல ஆண்டுகளுக்கு முன் சி.மானம்பட்டி பகுதியில் வசித்து வந்த ஒருவர் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாகிவிட்டார். மருத்துவர்கள் எவ்வளவோ சிகிச்சை அளித்தும் அவர் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. அவரது குடும்பத்தினரிடம் அவர் உயிர் பிழைக்க வழியில்லை என்று கூறி விட்டனர். மரணத்தருவாயில் இருந்த அவருக்கு கடவுள் நம்பிக்கை என்பது துளிகூட கிடையாது. ஆனால் அவருக்கு முருகனின் அருட்கடாட்சம் கிடைத்தது. படுக்கையில் இருந்த அவருக்கு திடீரெனமயில் மீது முருகன் காட்சி தருவதைப் போல உணர்ந்தார். அந்தக் காட்சியைக் கண்டவுடன் நோயிலிருந்து பூரண குணமடைந்த அவர் குடும்பத்தினரிடம், நான் குணமாகிவிட்டேன். எனக்கு மிகவும் பசிக்கிறது சீக்கிரம் சாப்பாடு கொடுங்கள் என்று கூறி படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்து கொண்டார். குடும்பத்தினருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. சில நாட்களில் அவர், தாம் கண்ட முருகனை, அதே வடிவத்தில் சிலை வடித்துக் கோயில் எழுப்பினார். அவரே இங்கு வெற்றிவேல் முருகனாக அருள்பாலிக்கிறார்.
திருமணத்தடை நீங்க நடத்தப்படும் வினோதமான சடங்கு
திருமணத்தடை உள்ளோருக்கு இங்கு 'வெற்றிலை துடைப்பு' என்னும் சடங்கு நடக்கிறது. இவர்களை கொடிமரம் அருகில் அமர வைத்து, கையில் சுவாமிக்குப் பூஜித்த வெற்றிலையைக் கொடுக்கின்றனர். பின், சுவாமியின் அபிஷேக தீர்த்தத்தை வெற்றிலையில் தெளிக்கின்றனர். பக்தர்கள் அந்த வெற்றிலையால் தம் முகத்தைத் துடைத்துக்கொண்டு, முருகனைத் தரிசிக்கின்றனர். இதனால், விரைவில் திருமணம் நிச்சயமாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மங்கலப்பொருட்களில் ஒன்றான வெற்றிலையை முகத்தில் துடைப்பதால், கெட்ட சக்திகள் விலகி, நன்மை பிறக்கும் என்ற அடிப்படையில் இவ்வாறு செய்கின்றனர்.

சுவாமிநாதசுவாமி கோயில்
நேத்திர கணபதி
கும்பகோணத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை. இத்தலத்தில் நேத்திர கணபதி அருள்பாலிக்கிறார்.
பிறவியில் பார்வை இல்லாத ஒருவர் கொங்கு நாட்டில் இருந்து இத்தலம் வந்து, இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி நேத்திர கணபதியை வணங்கியபோது பார்வை பெற்றார். பக்தருக்கு பார்வை கொடுத்ததால் இவர் 'கண் கொடுத்த கணபதி' எனப் பெயர் பெற்றார். கண் பார்வை கோளாறு உடையவர்கள்,, இவரை பூரணமாக வழிபட்டால் கண் நோய் குணமாகும் என்று இங்குள்ளவர்கள் கூறுகிறார்கள்.

சிவலோகத் தியாகேசர் கோவில்
அம்பிகையே நேரில் வந்து திருநீறு அளித்த தேவாரத்தலம்
சிதம்பரம் சீர்காழி இடையிலான சாலையில் அமைந்துள்ள கொள்ளிடம் என்ற ஊரிலிருந்து சுமார் ஐந்து கி.மீ தொலைவிலுள்ள தேவாரத்தலம் திருநல்லூர்பெருமணம். தற்போது ஆச்சாள்புரம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இத்தலத்தில் தான் திருஞானசம்பந்தர் தன் திருமணத்திற்கு பின் தனது சுற்றத்தாருடன் இறைவனின் ஜோதியில் கலந்தார்.ஆச்சாள், ஆயாள் என்பது அம்பிகையின் பெயர்கள். ஆச்சாளே நேரில் வந்து திருஞானசம்பந்தரின் திருமணத்திற்கு, திருநல்லூர்பெருமணம் தலத்திற்கு வந்திருந்தவர்களுக்கு திருநீறு அளித்ததால் அம்மனுக்கு திருவெண்ணீற்று உமையம்மை என்ற திருநாமமும், இத்தலத்திற்கு ஆச்சாள்புரம் என்ற பெயரும் ஏற்பட்டது.இன்றும் இத்தல அம்பிகை சன்னிதியில் குங்குமத்திற்கு பதிலாக திருநீறே பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதைப் பூசிகொண்டால் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் நீடித்திருக்கும் என்பது நம்பிக்கை.