பாலசுப்பிரமணியர் கோவில்
முருகனுக்கு கட்டப்பட்ட முதல் கற்றளி கோயில்
புதுக்கோட்டை அருகேயுள்ள ஒற்றைக்கண்ணூர் என்ற தலத்தில், முருகனுக்கு கட்டப்பட்ட முதல் கற்றளி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் முதலாம் ஆதித்த சோழனால் கட்டப்பட்டது. இங்கு முருகன், ஒரு திருக்கரத்தில் ஜபமாலை ஏந்தியுள்ளார். மறுகரம் சின்முத்திரையுடன் உள்ளது. முருகப்பெருமானுக்கு இங்கு வாகனமாக யானை உள்ளது.
வில்வ நாதேஸ்வரர் கோவில்
கனி வாங்கிய பிள்ளையார்
ராணிப்பேட்டையில் இருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத்தலம் திருவலம். விநாயகப் பெருமான் சிவபெருமான் பார்வதியை, வலம் வந்து மாங்கனியைப் பெற்றதனால் இவ்வூருக்கு திருவலம் என்ற பெயர் வழங்கப்படுகிறது. விநாயகர் மாங்கனி பெற்ற வரலாற்றை நினைப்பூட்டும் வகையில், துதிக்கையில் மாங்கனியுடன் காட்சி தருகிறார். அதனால், இவரை கனி வாங்கிய பிள்ளையார் என்கின்றனர்.
சுப்பிரமணியசாமி கோயில்
புளிக்காத அபிஷேக தயிர்
ஈரோடில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருப்புகழ் தலம் சென்னிமலை. இங்கு, முருகப்பெருமானுக்கு பால், தயிர் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகம் செய்யப்படும் தயிர், புளிப்பதில்லை என்பதே இந்த ஆலயத்தின் அதிசய நிகழ்வாகும்.
நின்ற நாராயணன் கோயில்
அமிர்த கலசத்துடனும் பாம்புடனும் காட்சி தரும் கருட ஆழ்வார்
108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருத்தங்கல் தலத்தில், கருடாழ்வாா் தனது வலது திருக்கையில் அமிா்தகலசத்துடனும், இடது திருக் கையில் வாசுகி நாகத்துடனும், இரண்டு கைகளைக் கூப்பியவாறு அஞ்சலி ஹஸ்தத்துடன் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருவது மிக மிக அரிதான தரிசனமாகும். தனக்கு எதிரியான வாசுகி பாம்பை நண்பனாக ஏற்று, தன் கையில் ஏந்தியிருப்பது இத்தலத்தின் சிறப்பு. எதிரிகளால் துன்பப்படுபவர்கள் இவரை வழிபட்டால், அவர்கள் நண்பர்களாகி விடுவார்கள் என்பது நம்பிக்கை
இத்தலம் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
துர்கையம்மன் கோயில்
கிடந்த கோலத்தில் அருள்பாலிக்கும் துர்க்கை அம்மன்
பெரும்பாலும் துர்க்கையம்மனை ஆலயங்களில் கோஷ்ட தெய்வமாக சந்நிதி கொண்ட நிலையில், சிவதுர்கையாகவோ அல்லது விஷ்ணு துர்கையாகவோ தரிசிக்கலாம். அபூர்வமாக சில இடங்களில், தனிக்கோயிலிலும், அமர்ந்த கோலத்திலும் காணப்படுவது உண்டு. ஆனால் அந்த அம்மன் சயன கோலத்தில் அருள்பாலிக்கும் திருத்தலம் ஒன்று செழியநல்லூரில் உள்ளது. திருநெல்வேலிக்கு தெற்கே 25 கி.மீ. தொலைவில் (கங்கைகொண்டான் வழி) பராஞ்சேரி அருகில் உள்ளது செழியநல்லூர். மேலும் துர்க்கையம்மன், நாகராஜ பரிவார தேவதைகளுடன், தல விருட்சமாகிய வேப்பமரத்தின் அடியில், சயனக் கோலத்தில் வெட்ட வெளியில் மேலே வானத்தை பார்த்த நிலையில் பக்தர்களுக்கு காட்சி தருகிறாள். இந்த வேப்பமரத்தின் இலைகள் கசப்பதில்லை என்பது மற்றொரு சிறப்பு. இவற்றை உண்பவருக்கு நோய்கள் தீரும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
மாணிக்கவண்ணர் திருக்கோவில்
கைகாட்டி விநாயகர்
திருவாரூரில் இருந்து தெற்கே 10 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத்தலம் திருநாட்டியாத்தான்குடி.இக்கோவிலின் கிழக்கு கோபுர வாயிலின் முன், விநாயகர் கை விரலை நீட்டியபடி, மேற்கு பார்த்த சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.
ஒருசமயம் சுந்தரமூர்த்தி நாயனார், இத்தலத்து இறைவனை தரிசிக்க வந்தபோது, இறைவனையும் இறைவியையும் காணாது திகைத்தார். விநாயகரைக் கேட்க, அவர் வாய் திறந்து பேசாமல் ஈசான்ய திசையை நோக்கிக் கை காட்டினார். அவ்வழியே சென்று பார்த்த போது, அங்குள்ள ஒரு வயலில் சுவாமியும் அம்பிகையும் விவசாயிக் கோலத்தில், நடவு நட்டுக் கொண்டிருந்ததைக் கண்டார். அதைக் கண்டு சுந்தரர், நடவு நட்டது போதும், கோவிலுக்கு வாருங்கள் என்று அழைக்க, சுவாமியும் அம்பிகையும் மறைந்து கோயிலுக்குச் சென்றனர்.
சுந்தரருக்கு இறைவன் இருந்த திசையை சுட்டிக் காட்டியதால் இத்தலத்து விநாயகருக்கு, கைகாட்டி விநாயகர் என்ற பெயர் வந்தது.
கந்தசாமி கோயில்
ஓம்கார அமைப்பில் அமைந்த திருப்புகழ் தலம்
சென்னைக்கு அருகிலுள்ள திருப்போரூர் கந்தசாமி கோயில், அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற தலம். இக்கோவில் ஓம்கார அமைப்பில் அமைந்த ஆலயம். அதனால்,சுவாமியை தரிசித்துவிட்டு வெளியேறும்போது, சந்நிதியில் இருந்து நாம் பார்த்தால், நமக்கு முன்னே சுவாமியை தரிசித்துவிட்டுச் செல்பவர்களைப் பார்க்கமுடியாதபடி நுட்பமாக அமைக்கப்பட்டு உள்ளது.
அரசலீஸ்வரர் கோவில்
சிவலிங்கத்திற்கு தலைப்பாகை அணிவித்துப் பூஜை செய்யும் தேவாரத்தலம்
விழுப்புரம் மாவட்டம் ஒழிந்தியாப்பட்டு, தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலமாகும்.இறைவன் பெயர் அரசலீஸ்வரர். இங்கு சுவாமி 108 ருத்ராட்ச மணிகள் சேர்ந்த ருத்ராட்ச பந்தலின் கீழ் சுயம்பு லிங்க விடிவில் சிறிய மூர்த்தியாக அருளுகிறார். லிங்கத்தின் தலையில் அம்பு பட்ட காயம் இருக்கிறது. இந்த காயத்தை மறைப்பதற்காகவும், சிவனுக்கு மரியாதை செய்யும் விதமாகவும் லிங்கத்திற்கு மேலே தலைப்பாகை அணிவித்து பூஜைகள் செய்கின்றனர்.
ஆதிகேசவ பெருமாள் கோயில்
நாகர்கோவிலில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் திவ்யதேசமான திருவட்டாறு அமைந்துள்ளது.
பொதுவாக ஆலயங்களில் மூலவர் உள்ள கருவறைக்கு ஒரு வாசல் தான் இருக்கும். ஆனால் திருவட்டாறில், சயனக்கோலத்திலுள்ள ஆதிகேசவ பெருமாளை மூன்று வாசல் வழியாக தரிசக்க வேண்டும். முதல் வாசலில் சிரசை தரிசிக்கலாம். இரண்டாவது வாசலில் சரீர தரிசனம் பெறலாம். மூன்றாவது வாசலில் பாத தரிசனம் பெறலாம்.
பூவனநாதர் கோயில்
உயரமான திருமேனியுடைய செண்பகவல்லி அம்மன்
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி தலத்தில்தான், தமிழ்நாட்டிலேயே உயரமான திருமேனியுடைய செண்பகவல்லி அம்மன்(சுமார் 7 அடி உயரம்) அருள்பாலிக்கிறாள். மதுரையில் மீனாட்சி அம்மன் எப்படியோ, அதுபோல கோவில்பட்டியில், செண்பகவல்லி அம்மன் முக்கியத்துவம் பெற்று இருக்கிறார். பொதுவாக எல்லா கோயில்களிலும் மூல விக்கிரகம் எந்த நிலையில் உள்ளதோ அந்த நிலையிலேயே அலங்காரம் செய்வது வழக்கம். ஆனால் இந்த தலத்தில், நிற்கும் நிலையில் உள்ள அம்பாளை உட்கார்ந்து இருப்பது போல் அலங்காரம் செய்கிறார்கள். இந்த வழக்கம், இத்தலத்தின் சிறப்பு அம்சமாகும்.
பலாசவனேஸ்வரர் கோவில்
பலாப்பழம் போன்ற திருமேனியை உடைய சிவலிங்கம்
தஞ்சை மாவட்டம் திருச்சேறை அருகே உள்ளது நாலூர். இத்தலத்து இறைவன் பெயர் பலாசவனேஸ்வரர். இங்கு உள்ள சுயம்பு லிங்கத்தின் மேற்பகுதி பலாபழம் போன்று முள்ளுமுள்ளாக உள்ளது. இத்தலம் தேவார வைப்புத்தலமாகும். தேவார வைப்புத் தலங்கள் என்பவை தேவாரத்தில் தனிப்பாடல்களாகப் பாடப்பெறாமல், வேற்றூர் பதிகத்தின் இடையிலும், பொது பதிகத்தின் இடையிலும் குறிப்பிடப்படும் தலங்களாகும்.
ஐராவதீஸ்வரர் கோவில்
விருச்சிக விநாயகர்
கும்பகோணம் - மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆடுதுறை என்ற ஊரில் இருந்து, சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திலுள்ள மருத்துவக்குடி என்ற தலத்தில் அபிராமியம்மை சமேத ஐராவதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் தேவார வைப்புத் தலமாகும். இங்குள்ள விநாயகரின் திருமேனி தேளின் செதில் போன்ற அமைப்பில் இருப்பதால் இவரை ‘விருச்சிக விநாயகர்’ என்கின்றனர். விருச்சிக ராசிக்காரர்கள் இங்கு வந்து இவரை வணங்கி வழிபட்டால் நலம் பெறலாம்.
முருகநாதேசுவரர் கோயில்
முருகப் பெருமான் வேலும் மயிலும் இல்லாமல் தனித்து நிற்கும் தேவாரத்தலம்
திருமுருகன்பூண்டி, திருப்பூர் நகரத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத்தலம். முருகனால் இத்தலத்து சிவபெருமான் பிரதிஷ்டைசெய்யப்பட்டதால், திருமுருகநாதர் என்று அழைக்கப்படுகிறார். இதை விளக்கும் விதமாக, முருகன் சன்னதியில் லிங்கம் ஒன்று உள்ளது. முருகன் இங்கு வந்து சிவனை வழிபடும் முன்பு, தனது வேலை, கோயிலுக்கு வெளியே சற்று தள்ளி தரையில் ஊன்றினார். மயில் வாகனத்தை அதன் அருகில் நிறுத்தி வைத்தார். இதனால் வேலும் மயிலும் இல்லாமல், தனித்து நிற்கிறார்.
பெரும்பாலான கோவில்களில், சுப்ரமணியர் சிலை, முன்புறம் மூன்று முகங்களும், பின்னால் மூன்று முகங்களுடனும் அமைந்திருக்கும். இக்கோவிலில் மட்டும், ஐந்து முகங்கள் முன்புறமும், ஆறாவது முகம், பின்னாலும் அமைந்துள்ளது. அந்த முகம், “அதோ முகம்” என அழைக்கப்படுகிறது. இம்முகத்தை கண்ணாடியில் மட்டுமே பார்க்க முடியும். அதேபோல், தமிழகத்தில் தெற்கு நோக்கி சுப்ரமணிய சுவாமி அமர்ந்திருப்பது இத்தலத்து தனிச்சிறப்பு. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், இக்கோவிலுக்கு வந்து, வழிபட்டு, அதோ முகத்தை பார்த்தால், மனநிலை சரியாகி விடும் என்பது நம்பிக்கை.
ரங்கநாதர் கோவில்
ஸ்ரீரங்கநாதரின் பாதணிகள்
ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கு, ஆறு மாதத்திற்கு ஒருமுறை பாதணிகள் மாற்றப்படுகின்றன. இந்த பாதணிகள் ஒவ்வொன்றும் சுமார் இரண்டிலிருந்து மூன்று அடி நீளம் உள்ளது. இவை சுமார் 30-40 அடி உயரம் கொண்ட ஒரு மனிதருக்கானதைப் போன்று இருக்கும். இந்த பாதணிகள் தஞ்சாவூர் மாவட்டத்தில் பிரத்யேகமாகச் செய்யப்படுகின்றன. வலது பாதணி ஒருவரிடமும், இடது பாதணி மற்றொருவரிடம், செய்யக் கொடுப்பார்கள். இருவரும், ஒரே ஊரில் இல்லாமல், வெவ்வேறு ஊர்களில் இருப்பவர்கள். 48 நாட்கள் விரதம் மேற்கொண்டு பாதணிகளைச் செய்வார்கள்.
ஆறு மாதத்திற்கு ஒருமுறை பழைய பாதணிகளை ஸ்ரீரங்கநாதரின் திருவடிகளை விட்டு கழட்டிவிட்டு, புதிய பாதணிகளை மாற்றிவிடுவார்கள். அதிசயமான விஷயம் என்னவென்றால், திருவடிகளை விட்டு, எடுத்துள்ள, பழைய பாதணிகள் இரண்டிலும், பாத பகுதிகளில், தேய்மானம் இருக்கும். இவ்வாறு, மாற்றியுள்ள, தேய்மானம் அடைந்த, ஸ்ரீ ரங்கநாதர் பாதணிகள் ஸ்ரீரங்கம் திருக்கொட்டாரத்தில் தூணில் மாட்டி வைக்கப்படும்.ஸ்ரீரங்கம் கோவில் சென்றால்,,இந்த அரங்கன் அணிந்து, தேய்மானம் கண்டுள்ள, பழைய பாதணிகளை, கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம்.
கண்ணனூர் மாரியம்மன் கோவில்
ஒரே பீடத்தில் அமர்ந்து அருள்புரியும் இரண்டு அம்மன்கள்
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் உள்ள, 'கண்ணனூர் மாரியம்மன' கோயிலில் மாரியம்மனும், காளியம்மனும் ஒரே பீடத்தில் அமர்ந்த கோலத்தில் அருள்புரிகின்றனர். பக்தர்கள் இவர்கள் இருவரையும் அக்கா தங்கை என்றே கருதுகின்றனர. ஆரம்பத்தில் இங்கு மாரியம்மன் விக்ரகம் மட்டுமே இருந்தது. கோயிலுக்கு வந்த அம்மனின் தீவிர பக்தர் ஒருவர், அயர்ந்து தூங்கினார். அப்போது அவரது கனவில் வந்த அம்மன், எனக்கு அருகே எனது சகோதரிக்கும் விக்ரகம் வைத்து வழிபட வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து மாரியம் மனுக்கு இடது புறத்தில் காளியம்மன் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது .
குழந்தை பாக்கியம் வேண்டு பவர்கள், அம்பாள் முன்பு தொட்டில் கட்டி, அதில் கோயில் முன்புள்ள சஞ்சீவி தீர்த்தத்தை தெளிக்கின்றனர். இப்படி நீர் தெளித்து தொட்டிலை ஆட்டி வழிபட்டால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அர்த்தநாரீஸ்வரர் கோவில்
இனிப்பு,புளிப்பு என இரட்டை சுவையுடன் விளங்கும் தலவிருட்சம்
தென்காசிக்கு அருகில் உள்ள வாசுதேவநல்லூர்.அர்த்தநாரீஸ்வரர் கோவிலில், சிவபெருமானும் பார்வதியும் இணைந்து அர்த்தநாரீஸ்வர கோலத்தில் காட்சி கொடுக்கிறார்கள், புளிய மரங்கள் நிறைந்த வனத்தில் சிவன் காட்சி தருவதால், சிந்தாமணிநாதர் என்று அழைக்கப்படுகிறார். புளிய மரத்திற்கு சிந்தை மரம் என்றும் பெயர் உண்டு. இத்தலத்தின் விருட்சமும் புளியமரம் ஆகும். இம்மரத்தின் பழங்கள் இனிப்பு, புளிப்பு என இரட்டைச் சுவையுடன் இருப்பது சிறப்பம்சம். பிரிந்திருக்கும் தம்பதியர் இங்கு வேண்டிக்கொள்ள, மீண்டும் இணைவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வேதபுரீஸ்வரர் கோவில்
வேதம் கேட்கும் விநாயகர்
தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருவேதிக்குடி. பிரம்மன்(வேதி) வந்து தங்கி சிவபெருமானை வழிபட்டதால் இத்தலம், திருவேதிக்குடி என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமான் தன் நான்கு முகங்களால் நான்கு வேதங்களையும் அருளி செய்ததால்,அவருக்கு வேதபுரீஸ்வரர் என்னும் திருநாமம் ஏற்பட்டது. இத்தலத்து விநாயகர், இடது காலை உயர்த்திக் கொண்டு, உள்ளே வேதபுரீசுவரரால் அருளப்படும் நான்கு வேதங்களையும் செவிசாய்த்து கூர்மையாக கேட்டுக் கொண்டிருக்கும் தோரணையில் இருக்கின்றார். அதனால் இவர், வேத விநாயகர் என்பதோடு செவி சாய்த்த விநாயகர் என்றும் அழைக்கப்படுகின்றார்.
சுப்பிரமணிய சுவாமி கோயில்
வள்ளியும் தெய்வானையும் ஒருவராக இணைந்து காட்சி தரும் திருப்புகழ் தலம்
முருகனின், ஆறுபடை வீடுகளில் 5 ஆம் படைவீடாக திகழும் திருத்தணி, அரக்கோணத்தில் இருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
திருமாலின் மகள்களான அமுதவல்லி, சுந்தரவல்லி இவர்களில் அமுதவல்லி, தெய்வானை என்ற பெயரில் இந்திரனிடமும், சுந்தரவல்லி வள்ளியாக நம்பிராஜனிடமும் வளர்ந்து முருகனை மணந்தனர். சகோதரிகளான இவ்விருவரும் வேறில்லை என்பதன் அடிப்படையில் இங்கு வள்ளியும் தெய்வானையும், ஒரே அம்பிகையாக, கஜவள்ளி என்னும் பெயரில் அருள்கிறார்கள். கஜவள்ளி வலது கையில் வள்ளிக்குரிய தாமரையும், இடக்கையில் தெய்வானைக்கு உரிய நீலோத்பவ மலரும் வைத்திருக்கிறாள்.
பக்தவத்சல பெருமாள் கோவில்
தாயார் சன்னதியில் அமைந்திருக்கும் தேன்கூடு
திருவாரூரிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திவ்ய தேசம், திருக்கண்ணமங்கை. இத்தலத்து தாயார், கண்ணமங்கை நாயகி சன்னதியில் இரு ஜன்னல்கள் உள்ளன. இதில் தேனீக்கள் கூடு கட்டுகின்றன. தை மாதம் முதல் ஆனி மாதம் வரை தேனீக்கள் வலப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. ஆடி மாதம் முதல் மார்கழி வரை இடப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. இந்த அதிசயத்தை இன்றும் காணலாம்.
பெருமாளையும் தாயாரையும் கல்யாண கோலத்திலேயே தரிசிக்க வேண்டுமென்று, இத்தலத்திற்கு வந்த தேவர்களும் மகரிஷிகளும் விரும்பியதால், அவர்கள் தேனீக்கள் வடிவில் இங்கே தங்கியிருக்கிறார்கள் என்று தல புராணம் கூறுகிறது.
காளிகா பரமேஸ்வரி கோவில்
திருமேனியில் தாலிச் சரடுடன் காட்சிதரும் அம்மன்
திருச்சி நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது காளிகா பரமேஸ்வரி கோவில். இந்த அம்மன் அமர்ந்த நிலையில் தன் நான்கு கரங்களில் டமருகம், பாசம், சூலம், கபாலம் ஆகியவற்றை ஏந்தி காட்சி தருகிறாள். அம்மனின் கழுத்தில் திருமாங்கல்யம் துலங்குவது மிகவும் சிறப்பான அம்சமாகும். விக்கிரகத்தின் அமைப்பிலேயே தாலிச் சரடு இருப்பது வேறு எங்கும் காண இயலாத அற்புத அமைப்பாகும்.
இந்த அம்மனிடம் வேண்டிக்கொள்ளும் பெண்களுக்கு திருமணப்பேறு விரைவில் கிடைக்கிறது. திருமணம் நிச்சயம் ஆனதும் மணமகளின் தாலியை அன்னையின் பாதத்தில் வைத்து, அர்ச்சனை செய்து
பெற்றுக்கொள்ளும் வழக்கம் இங்கு உள்ளது.