விஜயராகவப் பெருமாள் கோயில்
ஸ்ரீதேவி பூதேவி இடம்மாறி எழுந்தருளி இருக்கும் திவ்ய தேசம்
பொதுவாக பெருமாளுக்கு வலது பக்கம் ஸ்ரீதேவியும் இடது பக்கம் ஶ்ரீபூமிதேவியும் காட்சி கொடுப்பது வழக்கம்.ஆனால் காஞ்சிபுரம் அருகிலுள்ள திருப்புட்குழி திவ்யதேசத்தில்,பெருமாளுக்கு வலது பக்கம் இருக்க வேண்டிய ஶ்ரீதேவி இடது புறத்திலும், இடது புறம் இருக்க வேண்டிய ஶ்ரீபூமி தேவி வலது புறத்திலும் எழுந்தருளியுள்ளனா்.
வாலீஸ்வரர் கோயில்
கோலியனூர் சிவபெருமானுக்கு துளசியால் அர்ச்சனை
விழுப்புரத்திலிருந்து 9 கி.மீ. தூரத்திலுள்ள கோலியனூர் என்ற ஊரிலுள்ளது வாலீஸ்வரர் ஆலயம்.வாலி வழிபட்ட சிறப்புடையது இத்தலம்.இந்த ஆலயம் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் நரசிம்ம வர்மனால் எழுப்பப்பட்டு பின்னர் ராஜ ராஜ சோழனால் விரிவுபடுத்தப்பட்டது. இந்த ஆலயத்து இறைவனை துளசியாலும் வில்வத்தாலும் சேர்த்து அர்ச்சனை செய்தால் சகல துன்பங்களும் விலகும் என்பது இத்தலத்து சிறப்பாகும்.
பழமலைநாதர் கோயில்
முருகன் சிவனை பூஜித்த தலம்
சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு. இவற்றை 28 லிங்கங்களாக விருத்தாச்சலத்தில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்துள்ளார். இந்த லிங்கங்கள் கோயிலின் வடமேற்கு பகுதியில் தனி சன்னதியில் அமைந்துள்ளன. இதில் தெற்கு வரிசையில் உள்ள லிங்கங்களின் நடுவில் விநாயகரும், மேற்கு வரிசையில் உள்ள லிங்கங்களின் நடுவில் வள்ளி, தெய்வானையுடன் முருகனும் அருள்பாலிக்கின்றனர்.இந்த அமைப்பு வேறு எங்கும் காண இயலாத சிறப்பாகும். இக்கோயிலை ஆகமக்கோயில் என்றும் அழைப்பார்கள்.
தலைவெட்டி விநாயகர் கோயில்
தலைவெட்டி விநாயகர்
திண்டுக்கல் அருகேயுள்ள மேலைக் கோட்டையூர் ஆலயத்தில் 'தலை வெட்டி விநாயகர்’ உள்ளார்.ஒரு காலத்தில் இந்த பிள்ளையாரின் சிரசில்'தன் தலையை நீக்கித் தனத்தை எடு' என்று ஒரு வாசகம் இருந்ததாம்.அதன் படி விநாயகரின் தலை துண்டிக்கப்பட்டதாம்.அதற்குள்ளே இருந்த வெள்ளிக் காசுகளையெல்லாம் எடுத்து குளம்,கோவில் கிணறு வெட்டப் பயன்படுத்தினார்களாம்.அதனால் அவர் தலைவெட்டி விநாயகர் எனப் பெயர் பெற்றார்.
சரஸ்வதி கோயில்
கூத்தனூர் சரஸ்வதி கோவில்
தமிழ்நாட்டில் சரஸ்வதிக்கு என்றே தனியாக கோவில் உள்ள தலம் கூத்தனூர்தான்.மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் பூந்தோட்டம் என்னும் ஊரில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் இத்திருத்தலம் உள்ளது. கருவறையில் சரஸ்வதிதேவி வெள்ளை நிற ஆடை தரித்து,வெண் தாமரையில் பத்மாசனத்தில் வீற்றிருக்கிறாள்.கீழ் வலது கையில் சின்முத்திரை,கீழே இடது கையில் புத்தகமும்,வலது மேல் கரத்தில் அட்சர மாலையும்,இடது மேல் கரத்தில் கலசமும் தாங்கி காட்சி தருகிறாள்.
கருவறையின் முன் சரஸ்வதியின் வாகனமான ராஜஹம்சம் எனப்படும் அன்னம் அன்னையை நோக்கி கம்பீரமாக நிற்கிறது.பௌர்ணமி அன்று இந்த அன்னைக்கு தேன் அபிஷேகம் செய்து அந்த பிரசாத தேனை, சரஸ்வதியை நினைத்து உட்கொள்ள,கல்வி அறிவு பெருகும் எனபது ஐதீகம்..
சத்திய மூர்த்தி பெருமாள் கோவில்
ஸ்ரீரங்கம் ரங்கநாதரை விட பெரிய மூலவர்
புதுக்கோட்டை அருகில் உள்ள திவ்ய தேசமான திருமயம் ஆலயத்தின் மூலவர் திருமெய்யர் பெருமாள்,ஸ்ரீரங்கம் ரங்கநாதரை விட மிகப் பெரிய உருவம் உடையவர்.திருமயம் பாண்டிய நாட்டிலுள்ள 18 திவ்ய தேசங்களில் ஒன்றாகும்
செந்நெறியப்பர் கோயில்
மூன்று துர்க்கை சன்னிதிகள் உள்ள தேவாரத்தலம்
கும்பகோணம் - திருவாரூர் சாலையில் கும்ப கோணத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தேவாரப்பாடல் பெற்ற திருச்சேறை திருத்தலம்.இத்தலத்தில்,வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத வகையில் சிவதுர்க்கை,விஷ்ணு,துர்க்கை, வைஷ்ணவி துர்க்கை என்று மூன்று துர்க்கை சன்னிதிகள் இந்த ஆலயத்தில் ஒரே இடத்தில் அமைந்துள்ளன. ராகு கால நேரத்தில் இந்த மூன்று துர்க்கைகளையும் வழிபடுவது நல்ல பலனைத்தரும்.
சிவகுருநாதசுவாமி கோயில்
ஒருமுகம், நான்கு கைகளுடன் காட்சி தரும் முருகப்பெருமான்
ஆறுமுகம், பன்னிரண்டு கரங்களுடன் மற்ற கோயில்களில் சண்முகராக காட்சி தரும் முருகப்பெருமான், சிவபுரம் தலத்தில் ஒருமுகம், நான்கு கைகளுடன் வீற்றிருப்பது வித்தியாசமான தரிசனம் ஆகும்.
சிரட்டைப் பிள்ளையார் கோயில்
சிரட்டைப்(கொட்டாங்குச்சி) பிள்ளையார்
நெல்லையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில், பாளையங்கோட்டையைக் கடந்தவுடன் ஒரு பிள்ளையார் கோவில் உள்ளது.இங்கு தேங்காய் விடலை போட்டால்,சிரட்டை (கொட்டாங்குச்சி) தனியாகவும்,தேங்காய் தனியாகவும் சிதறும். இந்தப் பிள்ளையார் சிரட்டைப் பிள்ளையார் என்றே அழைக்கப்படுகிறார்
மகிஷாசுரமர்த்தினி கோயில்
கசக்காத வேப்பிலை பிரசாதம்
திருத்தணிக்கு அருகில் உள்ள மத்தூர் என்னும் ஊரில், மகிஷாசுரமர்த்தினி கோவில் இருக்கிறது.இக்கோவில் வேப்பமரத்தின் இலைதான் பிரசாதம்.இந்த வேப்பிலை கசக்காது எனபது குறிப்பிடத்தக்கது .
காமாட்சியம்மன் கோவில்
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் அமைந்துள்ள திவ்ய தேசம்
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கள்வனூர் பெருமாள் கோவில், காஞ்சி காமாட்சியம்மன் கோயிலின் உட்பிராகாரத்தில் சந்நிதியாக உள்ளது.108 வைணவ திவ்ய தேசங்களில் 14 திவ்ய தேசங்கள் காஞ்சிபுரத்திலேயே உள்ளன.
காயாரோகணேசுவரர் கோயில்
நாகை காயாரோகணர் ஆலயத்து நந்தியின் விசேடப் பார்வை
நாகை காயாரோகணர் ஆலயத்து நந்தியின் பார்வை இரண்டு திசைகளை நோக்கியுள்ளது.வலது கண் அம்பாளைப் பார்ப்பது போலவும் இடது கண் சிவனைப் பார்ப்பது போலவும் இருக்கின்றது.இந்த நந்திக்கு அருகம்புல் சாற்றி,சிவன்,அம்பாள் மற்றும் நந்தி என மூவருக்கும் தேன் அபிக்ஷேகம் செய்து வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்.
அமுதகடேசுவரர் கோயில்
அமிர்த கலசத்துடன் காட்சியளிக்கும் முருகப் பெருமான்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது 'கோடிக்கரை என்னும் தேவாரப் பாடல் பெற்ற தலம். குழக முனிவர் வழிபட்டதாலும், தென்கோடியில் இருப்பதாலும் இத்தலம் 'கோடிக்குழகர்' என்ற பெயர் பற்றது. திருப்பாற்கடலை கடைந்தபோது கிடைத்த அமுதத்தை வாயு பகவான் எடுத்துச் சென்றபோது கீழே சிந்திய அமுதமே லிங்க வடிவம் பெற்று இத்தலத்து மூலவராக இருப்பதாகத் தலபுராணம் கூறுகிறது. இத்தலத்து மூலவர் 'அமிர்தகடேஸ்வரர்' சதுர வடிவ ஆவுடையுடன் லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். பிரகாரத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமண்யர் உள்ளார். அவர் அமிர்தா சுப்பிரமண்யர் என்னும் நாமத்துடன் ஒரு முகம், ஆறு கரங்களுடன், கையில் அமிர்த கலசம் கொண்டு வடக்கு நோக்கிய மயில் மீது அமர்ந்த நிலையில் காட்சியளிக்கின்றார். இக்கோயிலில் நவக்கிரகங்கள் வரிசையாக அமைந்துள்ளன. இராமபிரான் இங்கு வந்து இலங்கையை பார்வையிட்டார் என்று கூறப்படுகிறது. அதற்கு அடையாளமாக வேதராண்யத்திலிருந்து வரும் வழியில் சுமார் 6 கி.மீ. தொலைவில் இடதுபக்கம் 'இராமர் பாதம்' என்னும் இடம் உள்ளது.
சர்ப்ப விநாயகர் கோயில்
சர்ப்ப விநாயகர்
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் உள்ளது. ஸ்ரீசர்ப்பவிநாயகர் கோவில்.இவருக்கு சர்ப்பம்,தன் ஐந்து தலைகளுடன் குடையாக விளங்குகிறது.விநாயகரின் உடலில் ஐந்து பாம்புகள் அணிகலன்களாக உள்ளன.ராகு கேது தோஷங்கள் இவரை வழிபட நீங்கும்.
கொப்புடைய நாயகி அம்மன் கோயில்
மூலவரே உற்சவராகவும் இருக்கும் அம்மன்
காரைக்குடியில் உள்ள கொப்புடைய நாயகி அம்மன் மூல விக்கிரகமே திருவிழாக்களின் போது உற்சவ விக்கிரகமாக எடுத்துச் செல்லப்படுகிறது
ஸ்ரீவைகுண்டநாதன் கோயில்
யாளி வாயில் அனுமன்
108 திவ்விய தேசங்களில்,தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நவத்திருப்பதிகளும் அடங்கும்.அவற்றில் ஒன்றான ஸ்ரீவைகுண்டம் தலத்து ஆலயத்தில் திருவேங்கடமுடையான மண்டபம் என்றழைக்கப்படும் மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தின் இரண்டு புறங்களிலும் ஒன்பது தூண்களில் யாளிகள் தாணப்படுகின்றன.அவற்றில் ஒரு தூணிலுள்ள யாளியின் வாயில் அனுமன் காட்சியளிக்கின்றார்.
வீழிநாதேஸ்வரர் கோயில்
திருவீழிமிழிலை திருத்தலத்து ஆலயத்து படிகளின் சிறப்பு
பூந்தோட்டம் அருகிலுள்ள திருவீழிமிழிலை என்ற ஊரிலுள்ள திருவீழிமிழிலைநாதர் சிவாலயத்திலுள்ள மகாமண்டபத்து படிகள் சற்று வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளன.மகாமண்டபத்தின் கிழக்குப்புறத்தில் வாரத்தைக் குறிக்கும் விதமாக ஏழு படிக்கட்டுகளும்,தென்புறத்தில் மாதத்தைக் குறிக்கும் விதமாக பன்னிரெண்டு படிக்கட்டுகளும், வடக்குப்புறத்தில் நவக்கிரகங்களைக் குறிக்கும் விதமாக ஒன்பது படிக்கட்டுகளும் இருப்பது ஓர் விசேடமான அமைப்பாகும்.
சுப்பிரமணிய சுவாமி கோயில்
கந்த சஷ்டி கவசம் இயற்றப்பட்ட தலம்
கந்தசஷ்டிகவசம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டத்தில் அமைந்துள்ள சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில்தான் இயற்றப்பட்டது.இத்தலம் அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடலும் பெற்றது.
பகவத் விநாயகர் கோயில்
நவக்கிரக விநாயகர்
கும்பகோணம் மடத்துத் தெருவில் உள்ள ஸ்ரீபகவத் விநாயகர் கோயிலில் நவக்கிரக விநாயகர் அருள்கிறார்.இவர் சூரியனை நெற்றியிலும்,சந்திரனை நாபிக் கமலத்திலும்,செவ்வாயை வலது தொடையிலும்,புதனை வலது கீழ்க் கையிலும்,வியாழனை சிரசிலும்,வெள்ளியை இடது கீழ்க் கையிலும்,சனியை வலது மேல் கையிலும்,ராகுவை இடது மேல் கையிலும்,கேதுவை இடது தொடையிலும் கொண்டு காட்சி தருகிறார்.இவரை வழிபட்டால் நவக்கிரக தோஷம் தீரும் என்பர்.
மாரியம்மன் கோயில்
மூலிகைகளால் ஆன சமயபுரம் மாரியம்மன் திருமேனி
சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் திருமேனியானது சில மூலிகைகளால் ஆக்கப்பட்டது. இந்த அம்மன் உட்கார்ந்த கோலத்தில் மிகப் பெரிய திருமேனி உடையவர். இவ்வளவு பெரிய மூலிகைகளால் ஆன திருமேனியுள்ள அம்பிகை வேறு எந்த ஆலயத்திலும் இல்லை.