திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவில்
சிவராத்திரி அன்று மட்டும் தாழம்பூ பூஜைக்குப் பயன்படுத்தப்படும் தேவார தலம்
திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் செல்லும் வழியில் 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தேவார தலம் திருப்பாச்சூர். இறைவன் திருநாமம் வாசீஸ்வரர். இறைவியின் திருநாமம் தங்காதலி. தொண்டை நாட்டு தேவார தலங்களில் ஒன்றான இக்கோவில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற தலமாகும்.
கருவறையில் இறைவன் வாசீஸ்வரர் சுயம்பு லிங்கமாக சதுர வடிவ பீடத்தில் காட்சி தருகிறார். சிவலிங்கத்தின் மேல், கோடாரியால் வெட்டப்பட்ட தழும்புகள் காணப்படுகிறது. மேலும் சிவலிங்கம் வெட்டுப்பட்டதால் அதன் மேல் பகுதி மட்டும் இடப்புறத்தில் சற்று நகர்ந்தபடியான கோலத்தில் இருப்பது சிறப்பு.
காயம்பட்ட லிங்கம் என்பதால், இந்த சிவலிங்கம் மனித கைகளால் தொடப்படாமல், பூஜை செய்யப்படுகிறது.
மகா விஷ்ணுவும், பிரம்மாவும் சிவபெருமானின் அடி, முடி தேடியபோது, தான் ஈசனின் அடி முடியை கண்டதாக, தாழம்பூவை பொய் சாட்சி சொல்லும்படி பிரம்மா கெஞ்சினார். தாழம்பூவும் ஒத்துக்கொண்டது. அக்னி பேரொளியான சிவபெருமானிடம் சென்ற பிரம்மா, தங்களின் அடி முடியை தான் கண்டதாக கூற, தாழம்பூவும் ஆமாம் என்று பொய் சாட்சி கூறியது.
பிரம்மனுக்காக பொய் சொன்ன தாழம்பூவை பூஜைகளில் இருந்து ஒதுக்கி வைத்தார் சிவபெருமான். தாழம்பூ சிவனிடம் தன்னை மன்னித்து பரிகாரம் வேண்டவே, சிவராத்திரி நாளில் மட்டும் தனது பூஜைக்கு பயன்படும்படி சிவபெருமான் வரம் கொடுத்தாராம்.
இதன் அடிப்படையில் இக்கோவிலில், சிவராத்திரி தினத்தன்று இரவு ஒரு கால பூஜையில் மட்டும் தாழம்பூவை சிவபெருமானின் உச்சியில் வைத்து பூஜை செய்கின்றனர்.
கரிகாலன், இக் கோயிலைக் கட்டியதாகச் சொல்லப்படுகிறது. இக் கோயிலைக்கட்ட எண்ணிய கரிகாலன் காளி உபாசனை பெற்ற, இப்பகுதியை ஆண்டு வந்த குறுநில மன்னன் ஒருவனுடன் ஒருமுறை போர் செய்ய நேரிட்டது.
அவ்வாறு போரிடுங்கால் அம்மன்னனுக்குத் துணையாகக் காளி வந்து போரிட்டதால் கரிகாலனால் வெற்றி பெற முடியவில்லை. மனம் சோர்ந்த கரிகாலன் இப்பெருமானிடம் விண்ணப்பித்தான். பெருமான் நந்தியைத் துணையாக அனுப்ப, மீண்டும் கரிகாலன் சென்று போரிட்டான்.
போரின்போது காளி தோன்ற, நந்தியெம்பெருமான் அவளை உற்று நோக்க அவளும் வலியடங்கி நின்றாள். நந்தி அக்காளிக்கு விலங்கு பூட்டி இங்கு அடைத்தார்; வெற்றி பெற்ற மன்னன் உள்ளம் மகிழ்ந்து இத் திருக்கோயிலைக் கட்டினான் என்பர்.
இது தொடர்பாகத் தற்போது கோயிலில் வெளிப்பிராகாரத்தில் சிதைந்திருக்கும் நூற்றுக்கால் மண்டபத்தின் முன் 'விலங்கு இட்ட காளி'யின் சிற்பம் உள்ளது.
திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் செல்லும் வழியில் 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது திருப்பாச்சூர்.