திருநீலக்குடிநீலகண்டேஸ்வரர் கோயில்
அபிஷேக எண்ணெயை உறிஞ்சும் அதிசய சிவ லிங்கம்
தஞ்சை மாவட்டம் திருநீலக்குடியில் உள்ளது தேவாரப்பாடல் பெற்ற நீலகண்டேஸ்வரர் திருக்கோவில். இங்குள்ள சிவனுக்கு நல்லெண்ணெய் கொண்டு பிரத்யேகமாக அபிஷேகம் நடக்கிறது. தினமும் பாத்திரம் பாத்திரதமாக எவ்வளவு எண்ணெயை ஊற்றினாலும் அவ்வளவு எண்ணெயையும் இங்குள்ள சிவ லிங்கம் தன்னுள்ளே உறிஞ்சிக்கொள்கிறது. அடுத்தநாள் மீண்டும் அபிஷேகம் செய்வதற்கு முன்பு சிவ லிங்கத்தை பார்த்தால், பல வருடங்களாக எண்ணெயே தடவாதது போல் மிகவும் வறண்டு காணப்படுகிறது. சிவபெருமான் அருந்திய ஆலகால விஷம் அவர் தொண்டையிலேயே தங்கி இருப்பதால்,அந்த விஷத்தன்மையை குறைக்கவே இவருக்கு எண்ணெய் அபிஷேகம் செய்யப்படுகிறது என்பது ஐதீகம்
திருவலம் வில்வ நாதேஸ்வரர் கோவில்
கனி வாங்கிய பிள்ளையார்
ராணிப்பேட்டையில் இருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத்தலம் திருவலம். விநாயகப் பெருமான் சிவபெருமான் பார்வதியை, வலம் வந்து மாங்கனியைப் பெற்றதனால் இவ்வூருக்கு திருவலம் என்ற பெயர் வழங்கப்படுகிறது. விநாயகர் மாங்கனி பெற்ற வரலாற்றை நினைப்பூட்டும் வகையில், துதிக்கையில் மாங்கனியுடன் காட்சி தருகிறார். அதனால், இவரை கனி வாங்கிய பிள்ளையார் என்கின்றனர்.
திருவேதிக்குடி வேதபுரீஸ்வரர் கோவில்
வேதம் கேட்கும் விநாயகர்
தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருவேதிக்குடி. பிரம்மன்(வேதி) வந்து தங்கி சிவபெருமானை வழிபட்டதால் இத்தலம், திருவேதிக்குடி என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமான் தன் நான்கு முகங்களால் நான்கு வேதங்களையும் அருளி செய்ததால்,அவருக்கு வேதபுரீஸ்வரர் என்னும் திருநாமம் ஏற்பட்டது. இத்தலத்து விநாயகர், இடது காலை உயர்த்திக் கொண்டு, உள்ளே வேதபுரீசுவரரால் அருளப்படும் நான்கு வேதங்களையும் செவிசாய்த்து கூர்மையாக கேட்டுக் கொண்டிருக்கும் தோரணையில் இருக்கின்றார். அதனால் இவர், வேத விநாயகர் என்பதோடு செவி சாய்த்த விநாயகர் என்றும் அழைக்கப்படுகின்றார்.
ஒழிந்தியாப்பட்டு அரசலீஸ்வரர் கோவில்
சிவலிங்கத்திற்கு தலைப்பாகை அணிவித்துப் பூஜை செய்யும் தேவாரத்தலம்
விழுப்புரம் மாவட்டம் ஒழிந்தியாப்பட்டு, தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலமாகும்.இறைவன் பெயர் அரசலீஸ்வரர். இங்கு சுவாமி 108 ருத்ராட்ச மணிகள் சேர்ந்த ருத்ராட்ச பந்தலின் கீழ் சுயம்பு லிங்க விடிவில் சிறிய மூர்த்தியாக அருளுகிறார். லிங்கத்தின் தலையில் அம்பு பட்ட காயம் இருக்கிறது. இந்த காயத்தை மறைப்பதற்காகவும், சிவனுக்கு மரியாதை செய்யும் விதமாகவும் லிங்கத்திற்கு மேலே தலைப்பாகை அணிவித்து பூஜைகள் செய்கின்றனர்.
சிதம்பரம் நடராஜர் கோவில்
நமது தேசிய கொடி கோபுரத்தில் ஏற்றப்படும் ஒரே தலம்
ஒவ்வொரு வருடமும் இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட்15 அன்று கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒரு விசேஷம் உண்டு. இந்தியாவிலேயே, தில்லை சிதம்பரத்தில் மட்டும் தான் சுதந்திர தினத்தில் நமது தேசிய கொடி கோவிலின் கோபுரத்தின் மீது ராஜ கம்பீரத்துடன் ஏற்றப்படுகிறது.
நாடு சுதந்திரம் அடைந்தது முதல், சுதந்திரத் தினமும் குடியரசு தினமும் உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொண்டாடப்படுகிறது. மேற்கு கோபுரம் வாயில் முன் மண்டபம் அருகே, நாடு சுதந்திரம் அடைந்ததைக் கல்வெட்டாகப் பொறித்து வைத்துள்ளனர் தீட்சிதர்கள்.
சுதந்திரத் தினத்தன்று காலை கோயிலில் முதல் கால பூஜை முடிந்தவுடன், கனக சபையில் நடராஜர் பாதத்தின் கீழ் தேசியக் கொடியை வெள்ளி தட்டில் வைத்து தீட்சிதர்கள் சிறப்பு பூஜைகளைச் செய்வார்கள். நாட்டின் நலனுக்காகவும், மக்கள் நோய் நொடியின்றி வாழவும் பூஜை செய்யப்படுகிறது.
பின்னர், அர்ச்சகர் எடுத்து வர பிரகாரம் வழியாக மேள, தாளம் முழங்கியவாறு தேசியக் கொடியை ஊர்வலமாக கொண்டு வந்து 152 அடி உயரமுள்ள கிழக்கு ராஜகோபுர உச்சியில் தேசியக் கொடியை தீட்சிதர்கள் ஏற்றுவார்கள். பின்னர் அங்கு இருக்கும் பக்தர்களுக்கு இனிப்பு வழங்குவார்கள்.
அப்போது கோவிலுக்கு வருவோர் அனைவரும் தேசியக் கொடிக்கு மரியாதை செய்வார்கள். இது வேறெந்த வழிபாட்டுத் தலத்திலும் இல்லாத சிறப்பாகும். பின்னர் கோவிலுக்கு வரும் பொதுமக்களுக்கு லட்டு உள்ளிட்ட இனிப்புகள் வழங்கப்படும்.
இதேபோல், குடியரசுத் தினத்தன்றும் தேசியக் கொடி ஏற்றப்படுகிறது.
திருக்கருவிலி சற்குணேஸ்வரர் கோயில்
மறுபிறப்பைத் தடுக்கும் திருக்கருவிலித் தலம்
கும்பகோணத்தில் இருந்து சுமார் 25 கி.மி. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருக்கருவிலி. இறைவன் திருநாமம் “சற்குணேஸ்வரர்.
திருக்கருவிலித் தலத்து இறைவனைக் காண்போருக்கு மறுபிறவி இல்லை. அதாவது, அவர்கள் மீண்டும் ஒரு தாயின் கருவில் உதிக்கமாட்டார்கள். இதனால் தான் இவ்வூர் ‘கரு இல்லை’ என்ற பொருளில் ‘கருவிலி’ எனப்பட்டது. காலப்போக்கில் கருவேலி என மருவியது. கருவுக்கு வேலி என்றும் இதன் பொருளை எடுத்துக் கொள்ளலாம்.இந்த தலத்தின் முக்கிய பெருமை, நல்ல குணங்கள் உள்ளவருக்கு அந்த குணங்கள் என்றும் நிலைத்து நிற்கும் என்பதும், தீய குணங்கள் இருந்தால் அது மறைந்துவிடும் என்பதும் ஆகும். எனவே இவ்வூர் இறைவன் ‘சற்குணேஸ்வரர்’ எனப்படுகிறார். அம்பாள் ‘சர்வாங்க சுந்தரி’ எனப்படுகிறாள்.அம்பாள் சர்வாங்க சுந்தரி சிலை ஐந்தரை அடி உயரத்தில், நான்கு திருக்கரங்களுடன் பேரழகு கொண்டதாக உள்ளது.
திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவில்
பசுவாய் தோன்றிய பார்வதிக்கு விமோசனம் தந்த தலம்
மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில் சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தேவாரத்தலம் திருவாவடுதுறை. இறைவன் : கோமுத்தீசுவரர். இறைவி: ஒப்பிலா முலையம்பிகை.ஒருசமயம் கைலாயத்தில் சிவனும், பார்வதியும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சிவனே தொடர்ந்து வெற்றி பெற்றதாக தன்னை அறிவித்துக் கொண்டார். அம்பாள் கோபம் கொள்ளவே, சிவன் அவளை பசுவாக பிறக்கும்படி சபித்து விட்டார். அவள் தன் வடிவம் நீங்கி மன்னிப்புத் தரும்படி சிவனிடம் வேண்டினாள். இத்தலத்தில் தம்மை வழிபட்டு வர சாபம் நீங்கப்பெறும் என்றார் சிவன். அதன்படி அம்பாள் பசுவின் வடிவில் இங்கு வந்து, சிவனை வேண்டி தவமிருந்தாள்.சிவன் அவளுக்கு காட்சி தந்து, தன்னுடன் அணைத்துக் கொண்டு, விமோசனம் கொடுத்தார். “கோ’வாகிய பசுவிற்கு விமோசனம் தந்தவர் என்பதால், “கோமுக்தீஸ்வரர்’ என்று பெயர் பெற்றார்.
திருவேள்விக்குடி கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில்
தன்னைத்தானே சங்கல்பம் செய்து கொண்ட விநாயகர்
மயிலாடுதுறை அருகிலுள்ள திருவேள்விக்குடித் தலத்தில் சங்கல்ப விநாயகர் அருள் புரிகின்றார். ஒரே பீடத்தில் இரண்டு விநாயகர்கள் அருகருகே அமர்ந்து காட்சி கொடுக்கிறார்கள். ஒரு சமயம், பார்வதி தேவி சிவபெருமானப் பிரிந்து தனியாகத் தவம் செய்ய நேரிட்டது. அப்போது விநாயகர் தன்னைப் போலவே ஒரு வடிவத்தை தன்னருகே உருவாக்கி, அந்தத் திருவுருவத்தையே அதாவது தன்னையே சங்கல்பம் செய்து கொண்டு, பிரிந்த தன் பெற்றோர் விரைவில் ஒன்று சேர பிரார்த்தித்தார். அதனால் இவருக்கு சங்கல்ப விநாயகர் என்ற பெயர் வந்தது. மேலும் இவர் ஆதி இரட்டை விநாயகர் என்றும் போற்றப்படுகிறார்.இரட்டை பிள்ளையாருக்கு தேய்பிறை சதுர்த்தியில், அறுகம்புல் மாலை அணிவித்து அர்ச்சித்து வழிபட்டால், செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் தீமைகள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருந்துதேவன்குடி ஸ்ரீகற்கடேஸ்வரர் கோவில்
அம்பிகை நண்டு வடிவத்தில் வழிபட்ட தலம்
கும்பகோணம் - பூம்புகார் சாலையில், கும்ப கோணத்திலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத்தலம் திருந்து தேவன்குடி.முற்காலத்தில் ஈசனின் சாபத்தினால் நண்டாக மாறிய அம்பிகை, திருந்து தேவன்குடித் தலத்துக்கு வந்து ஈசனை தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டு வந்தாள். அதேநேரம், தான் கொண்ட ஆணவத்தின் காரணமாக இந்திர பதவியை இழந்த தேவேந்திரனும் குருபகவானின் ஆலோசனை யின்படி இந்தத் தலத்துக்கு வந்து, தினமும் 1,008 தாமரை மலர்களால் இறைவனை அர்ச்சித்து வழிபட்டு வந்தான்.இந்த நிலையில், தான் வளர்த்து வந்த தாமரை மலர்களை நண்டு ஒன்று பறித்து வந்து இறைவனை அர்ச்சிப்பதைக் கண்டு, இந்திரன்கோபம் கொண்டான் . தனது வாளால் அந்த நண்டை வெட்டத் துணிந்தான். அவனது வாளின் முனை சிவலிங்கத்தின் மீது பட்டது. அப்போது, சிவலிங்கத்தின் உச்சியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்திய சிவபெருமான், நண்டின் வடிவத்தில் இருந்த அம்பிகையை தம்முள் ஐக்கியப்படுத்திக் கொண்டார்.நண்டின் வடிவத்தில் வந்தது அம்பிகையே என்பதை உணர்ந்த இந்திரன், தனது தவற்றுக்கு வருந்தி இறைவனிடம் மன்னிப்பு கேட்டான். அதன் காரணமாக இந்தத் தலத்துக்கு திருந்து தேவன்குடி என்ற பெயர் ஏற்பட்டது.. சிவலிங்கத் திருமேனியில் வெட்டுத் தழும்புகளையும், லிங்கத் திருமேனியின் உச்சியில் நண்டு ஐக்கியமான துளையையும் இன்றும் காணலாம். கடக ராசி, ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குச் சிறப்பான பரிகாரத் தலம் இது. ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள், தங்களின் பிறந்த நட்சத்திரத்தில் அல்லது தேய்பிறை அஷ்டமி நாளில் இங்கு வந்து இறைவனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து வழிபட்டால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில்
திருஞான சம்பந்தரை இடுப்பில் தாங்கி நிற்கும் அம்மன்
சீர்காழியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருவெண்காடு ஆகும். திருஞானசம்பந்தர், இத்தலத்திற்கு வந்தபோது ஊரெல்லாம் சிவலிங்கமாகத் தெரிய, காலால் மிதிக்க அஞ்சி நின்றார். இதைக் கண்ட அம்பிகை, பெண் உருவெடுத்து வந்து சம்பந்தரை தமது இடுப்பில் தாங்கி கோயிலுக்குள் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அதனால் அம்பிகை 'இடுக்கி அம்மன்' என்று அழைக்கப்பட்டாள். அம்மன் பிரகாரத்தின் இடது மூலையில் சம்பந்தரை இடுப்பில் இருத்தியபடி உள்ள இடுக்கி அம்மன் சன்னதி உள்ளது.
இக்கோவிலில் உள்ள மூன்று குளத்திலும் நீராடி பிள்ளைஇடுக்கி அம்மனை வழிபட்டால் நிச்சயம் குழந்தைபேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை..
திருவேதிகுடி வேதபுரீஸ்வரர் கோவில்
அபூர்வமான அர்த்தநாரீஸ்வர கோலம்
தஞ்சை மாவட்டம் திருவையாறில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள தேவாரத் தலமான திருவேதிகுடியில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற வேதபுரீஸ்வரர் கோவில். மூலவர் வேதபுரீஸ்வரர். இத்தலத்திலுள்ள அர்த்தநாரீஸ்வர கோலம் சற்று வித்தியாசமாக உள்ளது. பொதுவாக அர்த்தநாரீஸ்வரர் என்றால் சிவன் வலது புறமும், அம்மன் இடது புறமும் இருப்பார்கள். ஆனால் இங்கு அம்மன் வலது புறமும், சிவன் இடது புறமும் இணைந்துள்ள அர்த்தநாரீஸ்வரரைக் கணலாம்.
திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவில்
மருத்துவச்சியாய் சென்று பிரசவம் பார்த்த திருப்புகலூர் அம்பாள் கருந்தார்குழலி
நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 24 கிலோமீட்டர் தொலைவில், நன்னிலத்திற்கு அருகிலுள்ள தேவாரத்தலம் ,திருப்புகலூர்.இறைவன் : அக்னீஸ்வரர். இறைவி: கருந்தார் குழலி.
ஒரு சமயம், திருப்புகலூர் அருகில் உள்ள போலகம் கிராமத்தில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை காப்பாற்ற அவரின் தாய் திருப்புகலூர் அம்பாள் கருந்தார்குழலியை வேண்ட, அம்பாளே வெள்ளைப் புடவை அணிந்து மருத்துவச்சியாய் சென்று சுகப்பிரசவம் செய்து கொடுத்ததால், சூளிகாம்பாள் என்று அழைக்கப்படுகிறார். அதற்காக அக்குடும்பத்தினர் கோயிலுக்கு காணிக்கையாக கொடுத்த நிலம் இன்றும் மருத்துவ காணி நிலம் என்று அழைக்கப்படுகிறது. இன்று வரை இப்பகுதியில் பிரசவத்தால் யாரும் இறந்ததில்லை என்பதிலிருந்து அம்பாளின் அருள் விளங்கும்.அதனால் இங்குள்ள சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள திருமருகல், இராமநந்தீஸ்வரம், திருசெங்காட்டங்குடி மற்றும் இத்தலத்தில் உள்ள அம்மனுக்கும் 'சூலிகாம்பாள்' என்னும் திருநாமம் ஏற்பட்டது. அதுமட்டுமல்லாது பிரசவம் பார்த்து இரவு தாமதமாகச் சென்றதால் அம்பாள் கோவில் உள்ளே செல்லாமல் வெளியிலேயே நின்று விட்டாள். அதனால் இந்த நான்கு கோயிலிலும் அம்மன் சன்னதி வெளியிலேயே உள்ளது. எனவே, அர்த்தஜாம பூஜையின்போது அம்பிகைக்கு சம்பா அரிசி, மிளகு, சீரகம், உப்பு, நெய் கலந்த சாதம் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது
இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோவில்
கல்வியில் முதன்மை பெறச் செய்யும் தேவாரத்தலம்
கும்பகோணத்திலிருந்து ஐந்து கிமீ தொலைவில் உள்ள தேவாரத்தலம், இன்னம்பூர். இங்குள்ள சிவனின் திரு நாமம் எழுத்தறிநாதர். சரிவரப் பேச முடியாதவர்கள், பாடுவதற்கு நல்ல குரல் வளம் வேண்டுவோர் இத்தலத்திர்கு வந்து இறைவன் எழுத்தறிநாதரை தரிசனம் செய்கிறார்கள். கோயில் அர்ச்சகர் தேனை பூவால் தொட்டு நாக்கில் தடவுகிறார். தேன் நாம் கொண்டு செல்ல வேண்டும். எழுத்தறிநாதரின் அருளால் நலம் அடைந்து, நல்ல குரல் வளம் பேச்சு வளம் பெற்றுச் செல்கின்றனர்.தமிழுக்கு இலக்கணம் எழுதியவர் அகத்திய முனிவர். அவருக்கு எழுத்தறிவித்தவர் இத்தல இறைவன் என்பதால், கல்வியில் சிறந்து விளங்க இத்தல இறைவனை வழிபட்டால் சிறப்பான வெற்றியைப் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
குளித்தலை கடம்பவனநாதர் கோவில்
ஒரே சன்னதியில் இரட்டை நடராஜர்
கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலமான குளித்தலை கடம்பவனநாதர் கோவிலில், இரண்டு நடராஜப் பெருமானை தரிசனம் செய்யலாம். ஒரே சன்னிதியில் அருகருகே இரண்டு நடராஜர்களை தரிசனம் செய்வது சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. இவர்களில் ஒரு நடராஜர் சிரசில் பிறை சூடி இருக்கிறார். ஆனால் அவர் பாதத்தில் முயலகன் இல்லை. இதில் ஒரு நடராஜருக்கு உத்திராயணத்திலும் மற்றவருக்கு தட்சிணாயத்திலும் பூஜைகள் நடக்கின்றன.
விருதாச்சலம் பழமலைநாதர் கோவில்
சிவபெருமான் சந்தோஷத்திற்காக நடனமாடிய தேவாரத் தலம்
விருதாச்சலம் கடலூரில் இருந்து சுமார் 61 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு தேவாரத் தலம்.சுவாமியின் திருநாமம் விருத்தகிரீசுவரர்.அம்மன் திருநாமம் விருத்தாம்பிகை.இத்தலத்தின் புராண பெயர் திருமுதுகுன்றம் ஆகும்.ஒருமுறை உலகம் அழிந்த போது இந்தத்தலம் மட்டும் அழியாமல் இருந்தது என்ற புராணச் சிறப்பைப் பெற்றது. சிவத்தலங்கள் அனைத்திலும் 1008 தலங்கள் சிறப்பானதாக கூறப்படும். இதில் நான்கு தலங்கள் முக்கியமானவை. அதில் விருத்தாசலமும் ஒன்று. தேவர்களுக்காக இறைவன் இங்கு நடனம் ஆடியுள்ளார். சிதம்பரத்தில் சிவன் போட்டிக்காக ஆடிய தலம் என்றும், இத்தலம் சிவன் சந்தோஷத்திற்காக ஆடிய தலம் என்றும் கூறுவர்.
திருவேடகம் ஏடகநாதேஸ்வரர் கோவில்
திருஞானசம்பந்தர் சமணர்களுடன் அனல் வாதம். புனல் வாதம் புரிந்த தலம்
மதுரையை ஆண்ட கூன்பாண்டிய மன்னர், சைவ நாயன்மார்களுள் ஒருவர் ஆவார். இவருக்கு நின்றசீர் நெடுமாறன் என்ற பெயரும் உண்டு. இவர் சோழமன்னரின் மகளாகிய மங்கையர்க்கரசியாரின் கணவர். இவர் காலத்தில் சமணர்கள் மிகத் தீவிரமாக சமணசமயத்தைப் பரப்பி வந்தனர். சைவத்தைக் காப்பாற்ற மங்கையர்க்கரசியாரின் அழைப்பின் பேரில் திருஞானசம்பந்தர் மதுரைக்கு வந்தபோது திருநீறு பூசி அரசன் கூன்பாண்டியனின் வெப்ப நோய் நீங்க உதவினார். இதனால் சமணர்கள் ஆத்திரமுற்று திருஞானசம்பந்தரை அனல் வாதம். புனல் வாதம் புரிய அழைத்தனர்.
சமணர்கள் தாங்கள் எழுதிய ஏட்டை தீயில் இட்ட போது அது எரிந்து சாம்பல் ஆயிற்று. ஆனால் திருஞானசம்பந்தர் திருநள்ளாற்றுப் பதிகம் எழுதிய ஏட்டை தீயில் இட்ட போது அது எரிந்து சாம்பல் ஆகாமல் பச்சையாகவே இருந்தது. பின்பு புனல் வாதத்தின் போது சமணர்கள் எழுதிய ஏட்டை வைகை ஆற்றில் விட்ட போது அது ஆற்றுடன் சென்றது. ஆனால் திருஞானசம்பந்தர் 'வாழ்க அந்தணர்' என்று தொடங்கும் பதிகம் எழுதியிட்ட ஏட்டை வைகை ஆற்றில் விட்ட போது அது வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்து சென்றது. மதுரை பாண்டிய மன்னனின் மந்திரி குலச்சிறையார் என்பவர் குதிரையின் மீதேறி வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்து செல்லும் ஏட்டைப் பின் தொடர்ந்து செல்ல அது ஓரிடத்தில் வைகை ஆற்றின் கரையில் ஒதுங்கியது. பாண்டிய மன்னன் ஏடு ஒதுங்கிய இடத்தில் ஒரு சிவலிங்கத்தைக் கண்டு அங்கு ஒரு கோவில் எழுப்பினான். அதுவே திருவேடகம் என்ற தேவார பாடல் பெற்ற தலம் ஆனது.
இத்தலத்தில் ஒரு நாள் தங்கி இருந்து இறைவனை முழுமனதுடன் பூஜை செய்து வழிபட்டால் காசியில் ஆயுள் முழுவதும் வாழ்ந்த புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த கோயிலில் உள்ள கால பைரவர் சன்னதி மிகவும் விசேஷமானது வைகை நதிக்கரையில் பித்ரு காரியங்கள் மற்றும் அவர்கள் இறந்த திதி போன்ற நாட்களில் பூஜைகள் செய்வது மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. இத்தலம் காசிக்கு நிகராகக் கருதப்படுவதால் முன்னோர் வழிபாடுகள் இத்தலத்தில் செய்யலாம். நம் முன்னோர்களின் முக்தி அடையை மோட்ச தீபம் ஏற்றும் பழக்கம் இக்கோவிலில் உள்ளது.
இக்கோவில் பிரம்ம தீர்த்தக் குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டால், சித்த பிரமை நீங்குவது தலத்தின் தனி சிறப்பாகும்.
திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் கோவில்
ஒரே வரிசையில் நிற்கும் நவக்கிரகங்கள்
திருவாரூரில் இருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருக்குவளை. நவக்கிரகங்களின் குற்றம் நீக்கியருளியதால், இத்தல இறைவனுக்கு கோளிலிநாதர் என்ற திருநாமம் ஏற்பட்டது. இங்கு,நவக்கிரகங்கள் தங்கள் தோஷம் நீங்க, தென்திசை நோக்கி வக்கிரமின்றி வரிசையாக நின்று இறைவனை வழிபட்டதால், இக்கோவிலில், அவை ஒரே திசை நோக்கி வரிசையாக காட்சி அளிக்கின்றன. இதனால், கோளிலிநாதரை வழிபடுவோருக்கு நவக்கிரகங்களின் தோஷம் நீங்கும் என்பது இத்தலத்தின் சிறப்பு. இதனையே, 'கோளாய நீக்குமவன் கோளிலி எம்பெருமான்' என்று தேவாரப்பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார் திருஞானசம்பந்தர்.
திருக்கோடிக்காவல் கோடீசுவரர் கோவில்
சனி பகவான் தலையில் சிவலிங்கம்
கும்பகோணத்துக்கு அருகில் திருக்கோடிக்காவல் கோடீசுவரர் கோவில் என்ற தேவாரப் பாடல் பெற்ற தலம் உள்ளது.இங்குள்ள சிவாலயத்தில் அமைந்துள்ள சனி பகவான் தலையில் சிவலிங்கம் ஒன்று உள்ளது.இந்த சனி பகவான் 'பால சனி' என்று அழைக்கப்படுகிறார். பொதுவாக சனி பகவானுக்கு காகம்தான் வாகனமாக இருக்கும். ஆனால் இங்குள்ள சனி பகவானுக்கு கருடன் வாகனமாக அமைந்திருக்கிறது.மூலவர் கோடீசுவரர் கருவறை செல்லும் வழியில் இருபுறமும் சித்தரகுப்தரும், எமதர்மனும் உள்ளனர். இக்கோவிலில் சனீஸ்வரனை எமதர்மன்பார்ப்பது போன்றும் எமதர்மனை சனீஸ்வரர் பார்ப்பது போன்றும் அமைந்து இருக்கின்றது. இங்கு சுவாமியின் இடப்புறமாக சித்திரகுப்தன் இருக்கிறார் சனிபகவான், எமதர்மராஜன், சித்திரகுப்தன் இவர்கள் மூவரையும் தரிசித்த பின்பு தான் மூலவரை தரிசிக்க முடியும்.சனி பகவானுடைய நீதிமன்றமாக திருக்கோடிக்காவல் அமையப் பெற்றுள்ளது.நமது பாவ புண்ணிய வரவு செலவு கணக்குப்படி, நமது பால்ய வயதில் அஷ்டமச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனி, மரணச் சனி என்ற அனைத்து சனி திசைகளுக்கும், இத்தலமே நிவர்த்தி செய்யும் இடமாகும். நமது பால்ய வயதில் ஏற்பட்ட பாவ புண்ணிய வரவு-செலவு கணக்குகளை சரி பார்க்க கூடிய இடம் திருக்கோடிக்காவல். உலகத்தின் நீதிபதியாகிய பால சனீஸ்வரர் நமது பாவ புண்ணிய வரவு செலவு கணக்குகளை ஆராய்ந்து, அதை சித்திரகுப்தன் சரி பார்த்து எமதர்மனிடம் தீர்ப்பு சொல்லப்படுகிறது. தீர்ப்புக்கான பரிகார நிவர்த்தி இத்தலத்தில் செய்யப்படுகிறது. சாதாரணமாக இத்தலத்தில் யாரும் வழிபட்டு விடமுடியாது யாருக்கு எந்த வயதில் இந்த ஊழ்வினை கர்மா தீர்க்கப்படுகிறதோ, அவர்கள் மட்டுமே இத்தலத்திற்கு சென்று வழிபட முடியும். சனீஸ்வரனின் மனைவியான ஜேஷ்டாதேவி, மகன் மாந்தி, மகள் மாந்தாவுடன் உள்ள சிலை உள்ளது. மாந்தாவின் கையில் தாமரை மலரும், மாந்தியின் முகம் ரிஷப முகமாயும், இம்மூன்றும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டு அற்புதமாய் காட்சியளிக்கிறது.
பாமணி நாகநாத சுவாமி கோவில்
நான்கு சிங்கங்களின் மேல் அமர்ந்து இருக்கும் தட்சிணாமூர்த்தி
மன்னார்குடிக்கு வடக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் பாமணி. இறைவன் திருநாமம் நாகநாத சுவாமி. இறைவியின் திருநாமம் அமிர்தநாயகி.
இத்தலத்தில் குருபகவான் நான்கு சிங்கங்களின் மேல் அமர்ந்து சிம்ம தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிப்பதால், இவரை வழிபடுபவர்களுக்கு சிம்ம குருவின் அருள் கிடைக்கும். ஒருமுறை தட்சிணாமூர்த்தியின் சீடர்கள் நால்வரும் விஷ்ணுவை தரிசிக்க வைகுண்டம் சென்றார்கள். அப்போது இவர்களை துவார பாலகர்கள் தடுத்தனர். கோபம் கொண்ட முனிவர்கள், அவர்களுக்கு சாபம் கொடுத்தனர். இதனால் முனிவர்களுக்கு தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் நீங்க பாமணி நாகநாதரையும், சிம்ம தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு தங்கள் தோஷம் நீங்கப் பெற்றனர்.
சிம்மம், கும்பம், கடகம், தனுசு, மேஷம், விருச்சிகம் ராசிக்காரர்களும், லக்னத்திற்குரியவர்களும் சிம்ம தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் சிறப்பான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை.
தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில்
அரிதான கோலத்தில் காட்சியளிக்கும் தட்சிணாமூர்த்தி
பொதுவாக தட்சிணாமூர்த்தி ஒரு காலை மடக்கி, ஒரு காலை தொங்கவிட்டிருப்பார். ஆனால், கடலூரில் இருந்து 18 கி.மீ., தூரத்திலுள்ள தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில் கோஷ்டத்தில் (சுவாமிசன்னதி சுற்றுச்சுவர்) அருள் பாலிக்கும் தட்சிணாமூர்த்தி, இரு கால்களையும் மடக்கி, பீடத்தின் மீது அமர்ந்து காட்சி தருகிறார். காலுக்கு கீழே முயலகனும் இல்லை. இது ஒரு அரிதான காட்சியாகும்.
ஒருசமயம் இத்தலத்தில் வாழ்ந்த விவசாய தம்பதியினரான பெரியான் மற்றும் அவன் மனைவியின் பக்தியை உலகுக்கு உணர்த்த விரும்பிய சிவபெருமான், அவர்கள் வயலில் வேலை செய்ததற்கு கூலியாக கொடுத்த உணவை கால்களை மடக்கி தரையில் அமர்ந்து உண்டார். அந்த நிகழ்ச்சியை குறிப்பிடும் வகையில்தான் தட்சிணாமூர்த்தி இரு கால்களையும் மடக்கி அமர்ந்திருக்கிறார்.
இவரிடம் வேண்டிக்கொண்டால் உணவிற்கு பஞ்சம் வராது என்றும், மேலும் விவசாயம் செழிக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.