திருப்பூந்துருத்தி புஷ்பவனநாதர் கோவில்

ஆடி அமாவாசையன்று பதிமூன்று கங்கைகள் பொங்கும் கிணறு

தஞ்சாவூரில் இருந்து திருக்கண்டியூர் வழியாக 13 கி.மீ. தூரத்திலுள்ள தேவாரத் தலம் திருப்பூந்துருத்தி. இறைவன் திருநாமம் புஷ்பவனநாதர். இறைவி சௌந்தர்யநாயகி. இரண்டு ஆறுகளுக்கு நடுவே அமைந்துள்ள ஊர் ஆனது துருத்தி என அழைக்கப்படுகிறது. இத்தலமானது காவிரிக்கும், குருமுருட்டிக்கும் இடையில் அமைந்துள்ளதால் திருப்பூந்துருத்தி எனப்பெயர் பெற்றது.

ஒரு முறை முனிவர்கள் பலர் ஒன்று கூடி பேசிக் கொண்டிருந்தனர். 'ஆடி அமாவாசை தினத்தில் வேதாரண்யம், தனுஷ்கோடி, சங்கமுகம், திரிவேணி சங்கமம், கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, காவிரி, சிந்து, பிரம்மபுத்ரா, தாமிரபரணி, ராமேஸ்வரம் ஆகிய பதிமூன்று தீர்த்தங்களிலும் நீராடினால் பெரும் புண்ணியம் கிடைக்கும். பித்ரு சாபங்கள் விலகும். எனவே இந்த 13 புனித தீர்த்தங்களிலும் ஆடி அமாவாசை தினத்தில் நீராடி ஈசனை வழிபட வேண்டும் என்கின்றன புராணங்கள். ஆனால் யாரால் இது சாத்தியமாகும்?' என ஏக்கத்தில் பரிதவித்தபடி பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கிருந்த காசிப முனிவர், 'ஏன் முடியாது? நான் ஆடி அமாவாசை அன்று இந்த பதிமூன்று தீர்த்தங்களிலும் நீராடி, பிதுர் தர்ப்பணம் முடித்துக் காட்டுகிறேன்' என்றார். பின்னர் அவர், ஈசனை வேண்டி தவம் இயற்றி பல சிவத்தலங் களுக்கு சென்று வழிபட்டு வந்தார். அதன் ஒரு பகுதியாக திருப்பூந்துருத்தி வந்தடைந்தார். அங்கும் சிவபெருமானை வேண்டி தவம் இருந்தார். அவரது தவத்தை மெச்சிய இறைவன், ஆடி அமாவாசை அன்று காசிபருக்கு காட்சி கொடுத்தார். மேலும் 13 புனித தீர்த்தங்களையும், ஒரே இடத்தில் (திருப்பூந்துருத்தியில்) பாயும்படிச் செய்தார். அந்தத் தீர்த்தம் தற்போது, காசிப தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது. காசிபர் அந்த புனித நீரில் நீராடி, சிவபெருமானையும், அம்பாளையும் அபிஷேகம் செய்து வழிபட்டார். அதன்காரணமாக அவருக்கு சிவபெருமானுடன் ஐக்கியமாகும் முக்திநிலை கிடைத்ததாக தலபுராணம் கூறுகிறது.

இத்தலத்தில் சோமாஸ்கந்த மண்டபத்தை அடுத்துள்ள பகுதியில், தென்கிழக்கு மூலையில் கிணறு வடிவில் உள்ளது காசிப தீர்த்தம்.

ஆடி அமாவாசை நாளில் வழிபடுவதால் ஏற்படும் நற்பலன்கள்

ஆடி அமாவாசை நாளில் இத்தலத்தை கிரிவலம் வந்தால், பித்ரு சாபங்கள் நீங்கும். செல்வ வளம் பெருகும்.தடைகள் அகலும். தீவினைகளும் விலகும் என்பது ஐதீகம். ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று, இவ்வாலயத்தில் திருவிழா நடத்தப்படுகிறது. அன்றைய தினம் இத்தல காசிப தீர்த்தத்தில் நீராடினால் 13 புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய முழுப் பலனும் கிடைக்கும். மேலும் இத்தலத்தை ஆடி அமாவாசை அன்று 18 முறை கிரிவலமாக வந்து ஈசனையும், அம்பிகையையும் வழிபட்டால், பித்ரு சாபங்கள் தீர்வதுடன், குல தெய்வத்தின் அருளும் பரிபூரணமாய் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

பித்ரு தோஷம் ஒருவரது ஜாதகத்தில் இருக்குமேயானால் ,அவர்களுக்கு நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமலும்,நீண்ட நாள் திருமணம் ஆகாமல் இருப்பதற்கும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. அவ்வாறு உள்ளவர்கள், இத்தலத்திற்கு வந்து அமாவாசை நாட்களில்,இறைவன் புஷ்வனநாதரையும், அம்பாள் சௌந்தர்யநாயகியையும் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் தடைகள் நீங்கி நன்மையே நடக்கும் என்பது ஐதீகம்.

இத்தலத்து முருகனை புகழ்ந்து அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார்.

வாசகர்களின் கவனத்திற்கு

நமது ஆலயத்துளிகள் இணையதளத்தின் தகவல்கள் காணொளி வடிவில், YouTube Channelல் தற்பொழுது வெளி வருகின்றது

YouTube Link- https://youtube.com/@alayathuligal

இந்த சேனலுக்கு Subscribe செய்து ஆதரவு அளிக்க வேண்டுகின்றோம்.

காசிப தீர்த்தம்

 
Previous
Previous

வேதநாராயணபுரம் வேதநாராயண பெருமாள் கோவில்

Next
Next

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில்