திருக்கருவிலி சற்குணேஸ்வரர் கோயில்
மறுபிறப்பைத் தடுக்கும் திருக்கருவிலித் தலம்
கும்பகோணத்தில் இருந்து சுமார் 25 கி.மி. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருக்கருவிலி. இறைவன் திருநாமம் “சற்குணேஸ்வரர்.
திருக்கருவிலித் தலத்து இறைவனைக் காண்போருக்கு மறுபிறவி இல்லை. அதாவது, அவர்கள் மீண்டும் ஒரு தாயின் கருவில் உதிக்கமாட்டார்கள். இதனால் தான் இவ்வூர் ‘கரு இல்லை’ என்ற பொருளில் ‘கருவிலி’ எனப்பட்டது. காலப்போக்கில் கருவேலி என மருவியது. கருவுக்கு வேலி என்றும் இதன் பொருளை எடுத்துக் கொள்ளலாம்.இந்த தலத்தின் முக்கிய பெருமை, நல்ல குணங்கள் உள்ளவருக்கு அந்த குணங்கள் என்றும் நிலைத்து நிற்கும் என்பதும், தீய குணங்கள் இருந்தால் அது மறைந்துவிடும் என்பதும் ஆகும். எனவே இவ்வூர் இறைவன் ‘சற்குணேஸ்வரர்’ எனப்படுகிறார். அம்பாள் ‘சர்வாங்க சுந்தரி’ எனப்படுகிறாள்.அம்பாள் சர்வாங்க சுந்தரி சிலை ஐந்தரை அடி உயரத்தில், நான்கு திருக்கரங்களுடன் பேரழகு கொண்டதாக உள்ளது.
திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவில்
பசுவாய் தோன்றிய பார்வதிக்கு விமோசனம் தந்த தலம்
மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில் சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தேவாரத்தலம் திருவாவடுதுறை. இறைவன் : கோமுத்தீசுவரர். இறைவி: ஒப்பிலா முலையம்பிகை.ஒருசமயம் கைலாயத்தில் சிவனும், பார்வதியும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சிவனே தொடர்ந்து வெற்றி பெற்றதாக தன்னை அறிவித்துக் கொண்டார். அம்பாள் கோபம் கொள்ளவே, சிவன் அவளை பசுவாக பிறக்கும்படி சபித்து விட்டார். அவள் தன் வடிவம் நீங்கி மன்னிப்புத் தரும்படி சிவனிடம் வேண்டினாள். இத்தலத்தில் தம்மை வழிபட்டு வர சாபம் நீங்கப்பெறும் என்றார் சிவன். அதன்படி அம்பாள் பசுவின் வடிவில் இங்கு வந்து, சிவனை வேண்டி தவமிருந்தாள்.சிவன் அவளுக்கு காட்சி தந்து, தன்னுடன் அணைத்துக் கொண்டு, விமோசனம் கொடுத்தார். “கோ’வாகிய பசுவிற்கு விமோசனம் தந்தவர் என்பதால், “கோமுக்தீஸ்வரர்’ என்று பெயர் பெற்றார்.
திருவேள்விக்குடி கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில்
தன்னைத்தானே சங்கல்பம் செய்து கொண்ட விநாயகர்
மயிலாடுதுறை அருகிலுள்ள திருவேள்விக்குடித் தலத்தில் சங்கல்ப விநாயகர் அருள் புரிகின்றார். ஒரே பீடத்தில் இரண்டு விநாயகர்கள் அருகருகே அமர்ந்து காட்சி கொடுக்கிறார்கள். ஒரு சமயம், பார்வதி தேவி சிவபெருமானப் பிரிந்து தனியாகத் தவம் செய்ய நேரிட்டது. அப்போது விநாயகர் தன்னைப் போலவே ஒரு வடிவத்தை தன்னருகே உருவாக்கி, அந்தத் திருவுருவத்தையே அதாவது தன்னையே சங்கல்பம் செய்து கொண்டு, பிரிந்த தன் பெற்றோர் விரைவில் ஒன்று சேர பிரார்த்தித்தார். அதனால் இவருக்கு சங்கல்ப விநாயகர் என்ற பெயர் வந்தது. மேலும் இவர் ஆதி இரட்டை விநாயகர் என்றும் போற்றப்படுகிறார்.இரட்டை பிள்ளையாருக்கு தேய்பிறை சதுர்த்தியில், அறுகம்புல் மாலை அணிவித்து அர்ச்சித்து வழிபட்டால், செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் தீமைகள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருந்துதேவன்குடி ஸ்ரீகற்கடேஸ்வரர் கோவில்
அம்பிகை நண்டு வடிவத்தில் வழிபட்ட தலம்
கும்பகோணம் - பூம்புகார் சாலையில், கும்ப கோணத்திலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத்தலம் திருந்து தேவன்குடி.முற்காலத்தில் ஈசனின் சாபத்தினால் நண்டாக மாறிய அம்பிகை, திருந்து தேவன்குடித் தலத்துக்கு வந்து ஈசனை தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டு வந்தாள். அதேநேரம், தான் கொண்ட ஆணவத்தின் காரணமாக இந்திர பதவியை இழந்த தேவேந்திரனும் குருபகவானின் ஆலோசனை யின்படி இந்தத் தலத்துக்கு வந்து, தினமும் 1,008 தாமரை மலர்களால் இறைவனை அர்ச்சித்து வழிபட்டு வந்தான்.இந்த நிலையில், தான் வளர்த்து வந்த தாமரை மலர்களை நண்டு ஒன்று பறித்து வந்து இறைவனை அர்ச்சிப்பதைக் கண்டு, இந்திரன்கோபம் கொண்டான் . தனது வாளால் அந்த நண்டை வெட்டத் துணிந்தான். அவனது வாளின் முனை சிவலிங்கத்தின் மீது பட்டது. அப்போது, சிவலிங்கத்தின் உச்சியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்திய சிவபெருமான், நண்டின் வடிவத்தில் இருந்த அம்பிகையை தம்முள் ஐக்கியப்படுத்திக் கொண்டார்.நண்டின் வடிவத்தில் வந்தது அம்பிகையே என்பதை உணர்ந்த இந்திரன், தனது தவற்றுக்கு வருந்தி இறைவனிடம் மன்னிப்பு கேட்டான். அதன் காரணமாக இந்தத் தலத்துக்கு திருந்து தேவன்குடி என்ற பெயர் ஏற்பட்டது.. சிவலிங்கத் திருமேனியில் வெட்டுத் தழும்புகளையும், லிங்கத் திருமேனியின் உச்சியில் நண்டு ஐக்கியமான துளையையும் இன்றும் காணலாம். கடக ராசி, ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குச் சிறப்பான பரிகாரத் தலம் இது. ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள், தங்களின் பிறந்த நட்சத்திரத்தில் அல்லது தேய்பிறை அஷ்டமி நாளில் இங்கு வந்து இறைவனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து வழிபட்டால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில்
திருஞான சம்பந்தரை இடுப்பில் தாங்கி நிற்கும் அம்மன்
சீர்காழியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருவெண்காடு ஆகும். திருஞானசம்பந்தர், இத்தலத்திற்கு வந்தபோது ஊரெல்லாம் சிவலிங்கமாகத் தெரிய, காலால் மிதிக்க அஞ்சி நின்றார். இதைக் கண்ட அம்பிகை, பெண் உருவெடுத்து வந்து சம்பந்தரை தமது இடுப்பில் தாங்கி கோயிலுக்குள் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அதனால் அம்பிகை 'இடுக்கி அம்மன்' என்று அழைக்கப்பட்டாள். அம்மன் பிரகாரத்தின் இடது மூலையில் சம்பந்தரை இடுப்பில் இருத்தியபடி உள்ள இடுக்கி அம்மன் சன்னதி உள்ளது.
இக்கோவிலில் உள்ள மூன்று குளத்திலும் நீராடி பிள்ளைஇடுக்கி அம்மனை வழிபட்டால் நிச்சயம் குழந்தைபேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை..
திருவேதிகுடி வேதபுரீஸ்வரர் கோவில்
அபூர்வமான அர்த்தநாரீஸ்வர கோலம்
தஞ்சை மாவட்டம் திருவையாறில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள தேவாரத் தலமான திருவேதிகுடியில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற வேதபுரீஸ்வரர் கோவில். மூலவர் வேதபுரீஸ்வரர். இத்தலத்திலுள்ள அர்த்தநாரீஸ்வர கோலம் சற்று வித்தியாசமாக உள்ளது. பொதுவாக அர்த்தநாரீஸ்வரர் என்றால் சிவன் வலது புறமும், அம்மன் இடது புறமும் இருப்பார்கள். ஆனால் இங்கு அம்மன் வலது புறமும், சிவன் இடது புறமும் இணைந்துள்ள அர்த்தநாரீஸ்வரரைக் கணலாம்.
திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவில்
மருத்துவச்சியாய் சென்று பிரசவம் பார்த்த திருப்புகலூர் அம்பாள் கருந்தார்குழலி
நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 24 கிலோமீட்டர் தொலைவில், நன்னிலத்திற்கு அருகிலுள்ள தேவாரத்தலம் ,திருப்புகலூர்.இறைவன் : அக்னீஸ்வரர். இறைவி: கருந்தார் குழலி.
ஒரு சமயம், திருப்புகலூர் அருகில் உள்ள போலகம் கிராமத்தில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை காப்பாற்ற அவரின் தாய் திருப்புகலூர் அம்பாள் கருந்தார்குழலியை வேண்ட, அம்பாளே வெள்ளைப் புடவை அணிந்து மருத்துவச்சியாய் சென்று சுகப்பிரசவம் செய்து கொடுத்ததால், சூளிகாம்பாள் என்று அழைக்கப்படுகிறார். அதற்காக அக்குடும்பத்தினர் கோயிலுக்கு காணிக்கையாக கொடுத்த நிலம் இன்றும் மருத்துவ காணி நிலம் என்று அழைக்கப்படுகிறது. இன்று வரை இப்பகுதியில் பிரசவத்தால் யாரும் இறந்ததில்லை என்பதிலிருந்து அம்பாளின் அருள் விளங்கும்.அதனால் இங்குள்ள சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள திருமருகல், இராமநந்தீஸ்வரம், திருசெங்காட்டங்குடி மற்றும் இத்தலத்தில் உள்ள அம்மனுக்கும் 'சூலிகாம்பாள்' என்னும் திருநாமம் ஏற்பட்டது. அதுமட்டுமல்லாது பிரசவம் பார்த்து இரவு தாமதமாகச் சென்றதால் அம்பாள் கோவில் உள்ளே செல்லாமல் வெளியிலேயே நின்று விட்டாள். அதனால் இந்த நான்கு கோயிலிலும் அம்மன் சன்னதி வெளியிலேயே உள்ளது. எனவே, அர்த்தஜாம பூஜையின்போது அம்பிகைக்கு சம்பா அரிசி, மிளகு, சீரகம், உப்பு, நெய் கலந்த சாதம் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது
இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோவில்
கல்வியில் முதன்மை பெறச் செய்யும் தேவாரத்தலம்
கும்பகோணத்திலிருந்து ஐந்து கிமீ தொலைவில் உள்ள தேவாரத்தலம், இன்னம்பூர். இங்குள்ள சிவனின் திரு நாமம் எழுத்தறிநாதர். சரிவரப் பேச முடியாதவர்கள், பாடுவதற்கு நல்ல குரல் வளம் வேண்டுவோர் இத்தலத்திர்கு வந்து இறைவன் எழுத்தறிநாதரை தரிசனம் செய்கிறார்கள். கோயில் அர்ச்சகர் தேனை பூவால் தொட்டு நாக்கில் தடவுகிறார். தேன் நாம் கொண்டு செல்ல வேண்டும். எழுத்தறிநாதரின் அருளால் நலம் அடைந்து, நல்ல குரல் வளம் பேச்சு வளம் பெற்றுச் செல்கின்றனர்.தமிழுக்கு இலக்கணம் எழுதியவர் அகத்திய முனிவர். அவருக்கு எழுத்தறிவித்தவர் இத்தல இறைவன் என்பதால், கல்வியில் சிறந்து விளங்க இத்தல இறைவனை வழிபட்டால் சிறப்பான வெற்றியைப் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
குளித்தலை கடம்பவனநாதர் கோவில்
ஒரே சன்னதியில் இரட்டை நடராஜர்
கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலமான குளித்தலை கடம்பவனநாதர் கோவிலில், இரண்டு நடராஜப் பெருமானை தரிசனம் செய்யலாம். ஒரே சன்னிதியில் அருகருகே இரண்டு நடராஜர்களை தரிசனம் செய்வது சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. இவர்களில் ஒரு நடராஜர் சிரசில் பிறை சூடி இருக்கிறார். ஆனால் அவர் பாதத்தில் முயலகன் இல்லை. இதில் ஒரு நடராஜருக்கு உத்திராயணத்திலும் மற்றவருக்கு தட்சிணாயத்திலும் பூஜைகள் நடக்கின்றன.
விருதாச்சலம் பழமலைநாதர் கோவில்
சிவபெருமான் சந்தோஷத்திற்காக நடனமாடிய தேவாரத் தலம்
விருதாச்சலம் கடலூரில் இருந்து சுமார் 61 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு தேவாரத் தலம்.சுவாமியின் திருநாமம் விருத்தகிரீசுவரர்.அம்மன் திருநாமம் விருத்தாம்பிகை.இத்தலத்தின் புராண பெயர் திருமுதுகுன்றம் ஆகும்.ஒருமுறை உலகம் அழிந்த போது இந்தத்தலம் மட்டும் அழியாமல் இருந்தது என்ற புராணச் சிறப்பைப் பெற்றது. சிவத்தலங்கள் அனைத்திலும் 1008 தலங்கள் சிறப்பானதாக கூறப்படும். இதில் நான்கு தலங்கள் முக்கியமானவை. அதில் விருத்தாசலமும் ஒன்று. தேவர்களுக்காக இறைவன் இங்கு நடனம் ஆடியுள்ளார். சிதம்பரத்தில் சிவன் போட்டிக்காக ஆடிய தலம் என்றும், இத்தலம் சிவன் சந்தோஷத்திற்காக ஆடிய தலம் என்றும் கூறுவர்.
திருவேடகம் ஏடகநாதேஸ்வரர் கோவில்
திருஞானசம்பந்தர் சமணர்களுடன் அனல் வாதம். புனல் வாதம் புரிந்த தலம்
மதுரையை ஆண்ட கூன்பாண்டிய மன்னர், சைவ நாயன்மார்களுள் ஒருவர் ஆவார். இவருக்கு நின்றசீர் நெடுமாறன் என்ற பெயரும் உண்டு. இவர் சோழமன்னரின் மகளாகிய மங்கையர்க்கரசியாரின் கணவர். இவர் காலத்தில் சமணர்கள் மிகத் தீவிரமாக சமணசமயத்தைப் பரப்பி வந்தனர். சைவத்தைக் காப்பாற்ற மங்கையர்க்கரசியாரின் அழைப்பின் பேரில் திருஞானசம்பந்தர் மதுரைக்கு வந்தபோது திருநீறு பூசி அரசன் கூன்பாண்டியனின் வெப்ப நோய் நீங்க உதவினார். இதனால் சமணர்கள் ஆத்திரமுற்று திருஞானசம்பந்தரை அனல் வாதம். புனல் வாதம் புரிய அழைத்தனர்.
சமணர்கள் தாங்கள் எழுதிய ஏட்டை தீயில் இட்ட போது அது எரிந்து சாம்பல் ஆயிற்று. ஆனால் திருஞானசம்பந்தர் திருநள்ளாற்றுப் பதிகம் எழுதிய ஏட்டை தீயில் இட்ட போது அது எரிந்து சாம்பல் ஆகாமல் பச்சையாகவே இருந்தது. பின்பு புனல் வாதத்தின் போது சமணர்கள் எழுதிய ஏட்டை வைகை ஆற்றில் விட்ட போது அது ஆற்றுடன் சென்றது. ஆனால் திருஞானசம்பந்தர் 'வாழ்க அந்தணர்' என்று தொடங்கும் பதிகம் எழுதியிட்ட ஏட்டை வைகை ஆற்றில் விட்ட போது அது வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்து சென்றது. மதுரை பாண்டிய மன்னனின் மந்திரி குலச்சிறையார் என்பவர் குதிரையின் மீதேறி வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்து செல்லும் ஏட்டைப் பின் தொடர்ந்து செல்ல அது ஓரிடத்தில் வைகை ஆற்றின் கரையில் ஒதுங்கியது. பாண்டிய மன்னன் ஏடு ஒதுங்கிய இடத்தில் ஒரு சிவலிங்கத்தைக் கண்டு அங்கு ஒரு கோவில் எழுப்பினான். அதுவே திருவேடகம் என்ற தேவார பாடல் பெற்ற தலம் ஆனது.
இத்தலத்தில் ஒரு நாள் தங்கி இருந்து இறைவனை முழுமனதுடன் பூஜை செய்து வழிபட்டால் காசியில் ஆயுள் முழுவதும் வாழ்ந்த புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த கோயிலில் உள்ள கால பைரவர் சன்னதி மிகவும் விசேஷமானது வைகை நதிக்கரையில் பித்ரு காரியங்கள் மற்றும் அவர்கள் இறந்த திதி போன்ற நாட்களில் பூஜைகள் செய்வது மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. இத்தலம் காசிக்கு நிகராகக் கருதப்படுவதால் முன்னோர் வழிபாடுகள் இத்தலத்தில் செய்யலாம். நம் முன்னோர்களின் முக்தி அடையை மோட்ச தீபம் ஏற்றும் பழக்கம் இக்கோவிலில் உள்ளது.
இக்கோவில் பிரம்ம தீர்த்தக் குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டால், சித்த பிரமை நீங்குவது தலத்தின் தனி சிறப்பாகும்.
திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் கோவில்
ஒரே வரிசையில் நிற்கும் நவக்கிரகங்கள்
திருவாரூரில் இருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருக்குவளை. நவக்கிரகங்களின் குற்றம் நீக்கியருளியதால், இத்தல இறைவனுக்கு கோளிலிநாதர் என்ற திருநாமம் ஏற்பட்டது. இங்கு,நவக்கிரகங்கள் தங்கள் தோஷம் நீங்க, தென்திசை நோக்கி வக்கிரமின்றி வரிசையாக நின்று இறைவனை வழிபட்டதால், இக்கோவிலில், அவை ஒரே திசை நோக்கி வரிசையாக காட்சி அளிக்கின்றன. இதனால், கோளிலிநாதரை வழிபடுவோருக்கு நவக்கிரகங்களின் தோஷம் நீங்கும் என்பது இத்தலத்தின் சிறப்பு. இதனையே, 'கோளாய நீக்குமவன் கோளிலி எம்பெருமான்' என்று தேவாரப்பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார் திருஞானசம்பந்தர்.
தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில்
அரிதான கோலத்தில் காட்சியளிக்கும் தட்சிணாமூர்த்தி
பொதுவாக தட்சிணாமூர்த்தி ஒரு காலை மடக்கி, ஒரு காலை தொங்கவிட்டிருப்பார். ஆனால், கடலூரில் இருந்து 18 கி.மீ., தூரத்திலுள்ள தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில் கோஷ்டத்தில் (சுவாமிசன்னதி சுற்றுச்சுவர்) அருள் பாலிக்கும் தட்சிணாமூர்த்தி, இரு கால்களையும் மடக்கி, பீடத்தின் மீது அமர்ந்து காட்சி தருகிறார். காலுக்கு கீழே முயலகனும் இல்லை. இது ஒரு அரிதான காட்சியாகும்.
ஒருசமயம் இத்தலத்தில் வாழ்ந்த விவசாய தம்பதியினரான பெரியான் மற்றும் அவன் மனைவியின் பக்தியை உலகுக்கு உணர்த்த விரும்பிய சிவபெருமான், அவர்கள் வயலில் வேலை செய்ததற்கு கூலியாக கொடுத்த உணவை கால்களை மடக்கி தரையில் அமர்ந்து உண்டார். அந்த நிகழ்ச்சியை குறிப்பிடும் வகையில்தான் தட்சிணாமூர்த்தி இரு கால்களையும் மடக்கி அமர்ந்திருக்கிறார்.
இவரிடம் வேண்டிக்கொண்டால் உணவிற்கு பஞ்சம் வராது என்றும், மேலும் விவசாயம் செழிக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
திருக்கழுக்குன்றம் பக்தவத்சலேஸ்வரர் கோவில்
அம்பாளுக்கு வருடத்தில் மூன்று நாட்கள் மட்டுமே அபிஷேகம் செய்யப்படும் தேவாரத் தலம்
பக்தவத்சலேஸ்வரர் செங்கல்பட்டு- மாமல்லபுரம் சாலையில் சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருக்கழுக்குன்றம். மலைமேல் உள்ள கோவிலில் வேதகிரீஸ்வரர் அருள்பாலிக்கிறார். ஊரில் அமைந்துள்ள கோவிலில் எழுந்தருளியுள்ள ஈசனின் திருநாமம் பக்தவத்சலேஸ்வரர். இறைவி திரிபுரசுந்தரி.
அம்பாள் திரிபுரசுந்தரி சுயம்பு திருமேனியுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அம்பாள் மார்பில் ஸ்ரீ சக்கரப் பதக்கம் சார்த்தப்பட்டுள்ளது. ஆண்டில் ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், நவராத்தியில் வரும் நவமி ஆகிய மூன்று நாட்களில் மட்டுமே அம்பாளுக்கு முழு அபிஷேகம் செய்யப்படுகின்றது. நாடொறும் பாத பூஜை மட்டுமே நடக்கின்றது. மற்ற நாட்களில் தினசரி நடைபெறும் அபிஷேகம், அம்பாளின் பாதத்திற்கு மட்டுமே செய்யப்படுகிறது
தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில்
லிங்கோத்பவர் அருகில் பெருமாள், பிரம்மன் இருவரும் சிவனை வணங்கிய கோலத்தில் இருக்கும் அரிய காட்சி
கடலூரில் இருந்து சுமார் 18 கி.மீ. தூரத்திலுள்ள தேவாரத்தலம் திருத்திணை சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில். தற்போது இந்தத் தலம், தீர்த்தனகிரி என்று அழைக்கப்படுகிறது. இறைவியின் திருநாமம் நீலாம்பிகை, ஒப்பிலா நாயகி.
பொதுவாக சிவாலயங்களில், கருவறையின் பின்புறம் கோஷ்டத்தில் சிவபெருமான் லிங்கோத்பவராக, அக்னி பிழம்பிலிருந்து வெளிப்படும் உருவமாக, எழுந்தருளி இருப்பார். இது சிவபெருமானின் 25 மூர்த்தங்களில் ஒன்றாகும். லிங்கோத்பவர் என்பது சிவபெருமான் ஆதி அந்தம் (தொடக்கமும் முடிவும்) இல்லாத அக்னி தூணாகத் தோன்றி, பிரம்மா மற்றும் விஷ்ணுவின் அகந்தையை அடக்கிய காட்சியை உணர்த்தும் ஒரு சிறப்பு வடிவமாகும்.
லிங்கோத்பவர் மூர்த்தத்தின் புராண பின்னணி
ஒரு சமயம் பிரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற விவாதம் ஏற்பட்டது. அப்போது, இருவருக்கும் இடையே ஒரு பிரம்மாண்டமான நெருப்புத் தூண் தோன்றியது. இருவரும் அதன் அடியையும் முடியையும் தேடி கிளம்பினார்கள். தூணின் அடியைக் காண வராஹமாக (பன்றி) விஷ்ணுவும், முடியைக் காண அன்னமாக பிரம்மாவும் சென்றனர். இருவராலும் காண முடியவில்லை.அந்த நெருப்புத் தூணின் நடுவிலிருந்து சிவபெருமான், தலை, கை, கால்களுடன் வெளிப்பட்டார். இதுவே லிங்கோத்பவர் (லிங்கத்திலிருந்து உதித்தவர்) எனப்படுகிறது. இதை குறிப்பிடும் வகையில் எல்லா சிவாலயங்களிலும் கோஷ்டத்தில், லிங்கோத்பவர் சிற்பத்தின் மேல்பகுதியில் பிரம்மா அன்னமாகவும், கீழ்ப்பகுதியில் பன்றியாக விஷ்ணுவும், லிங்கத்திற்கு நடுவில் சிவபெருமானும் காட்சி தருவார்கள்.
ஆனால் தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் கோவிலில், கோஷ்டத்தில் உள்ள லிங்கோத்பவர் அருகில் பெருமாள், பிரம்மன் இருவரும் சிவனை வணங்கிய கோலத்தில் இருக்கின்றனர். இத்தகைய காட்சியை நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாது.
லிங்கோத்பவர் வழிபாட்டின் சிறப்பு
மகா சிவராத்திரி அன்று இரவு லிங்கோத்பவ காலத்தில் (நடுநிசி) சிவனை லிங்கோத்பவராக வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. லிங்கோத்பவர் வழிபாட்டின் மூலம் அஞ்ஞானம் அகன்று, ஞானம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
குளித்தலை கடம்பவனேசுவரர் கோயில்
கவடக்கு நோக்கி எழுந்தருளி இருக்கும் சிவலிங்கம்
கருவறையில் சிவபெருமானுடன் காட்சி தரும் சப்த கன்னியர்கள்
கரூரில் இருந்து 35 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தேவாரத் தலம் குளித்தலை. இறைவன் திருநாமம் கடம்பவனேசுவரர். இறைவியின் திருநாமம் முற்றிலா முலையம்மை, பாலகுஜாம்பாள். கருவறையில் சிவபெருமான் வடக்கு நோக்கி இருப்பது சிறப்பு அம்சமாகும். அதனால் இத்தலம் காசிக்கு நிகரான தலமாகப் போற்றப்படுகிறது.
பொதுவாக சப்த கன்னியர்களுக்கு கோவில்களில் உபசன்னதி அமைந்திருக்கும். சில இடங்களில் சப்த கன்னியர்களுக்குத் தனியாக கோவில் அமைந்திருக்கும். ஆனால், இக்கோவிலில், சப்த கன்னியர்கள் மூலவர் கடம்பவனநாதரின் பின்புறம் அமர்ந்திருக்கிறார்கள். இதுபோல மூலஸ்தானத்தில் சப்த கன்னியர்கள் மற்ற தெய்வங்களுடன் இருப்பது போன்ற அமைப்பு வேறு எங்கும் காண முடியாது.
திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் கோவில்
ஒரே வரிசையில் நிற்கும் நவக்கிரகங்கள்
திருவாரூரில் இருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருக்குவளை. இறைவன் திருநாமம் பிரம்மபுரீஸ்வரர், கோளிலிநாதர். இறைவியின் திருநாமம் வண்டமர் பூங்குழலி. திருக்குவளை தலம் தியாகராஜருக்குரிய சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாகும். இத்தலத்து இறைவனுக்குரிய நடனம் பிருங்க நடனம். வண்டு மலருக்குள் குடைந்து, குடைந்து ஆடுதல் போன்றதுதான் பிருங்க நடனம்.
சிவபெருமானின் திருமுடி கண்டதாக பிரம்மா பொய்கூறியதால் அவருக்கு சாபம் உண்டாகிறது. எனவே படைக்கும் தொழில் தடைபடுகிறது.நவகிரகங்களுக்கு தோஷம் உண்டாயிற்று. இதனால் நவகிரகங்களும் தத்தமது வேலையை சரியாக செய்ய முடியாமல் திணறுகின்றன. இங்கு,நவக்கிரகங்கள் தங்கள் தோஷம் நீங்க, தென்திசை நோக்கி வக்கிரமின்றி வரிசையாக நின்று இறைவனை வழிபட்டதால், இக்கோவிலில், அவை ஒரே திசை நோக்கி வரிசையாக காட்சி அளிக்கின்றன.நவக்கிரகங்களின் குற்றம் நீக்கியருளியதால், இத்தல இறைவனுக்கு கோளிலிநாதர் என்ற திருநாமம் ஏற்பட்டது. இதனால், கோளிலிநாதரை வழிபடுவோருக்கு நவக்கிரகங்களின் தோஷம் நீங்கும் என்பது இத்தலத்தின் சிறப்பு. இதனையே, 'கோளாய நீக்குமவன் கோளிலி எம்பெருமான்' என்று தேவாரப்பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார் திருஞானசம்பந்தர்.
திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர் கோயில்
முருகப் பெருமான் வேலும் மயிலும் இல்லாமல் தனித்து நிற்கும் தேவாரத்தலம்
முன்புறம் ஐந்து முகங்களும், பின்னால் ஆறாவது முகமும் அமைந்திருக்கும் முருகனின் அபூர்வ தோற்றம்
திருப்பூர் நகரத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத்தலம், திருமுருகன்பூண்டி. இறைவன் திருநாமம் முருகநாதேசுவரர், திருமுருகநாதர். இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை. முருகனால் இத்தலத்து சிவபெருமான் பிரதிஷ்டைசெய்யப்பட்டதால், திருமுருகநாதர் என்று அழைக்கப்படுகிறார். இதை விளக்கும் விதமாக, முருகன் சன்னதியில் லிங்கம் ஒன்று உள்ளது. முருகன் இங்கு வந்து சிவனை வழிபடும் முன்பு, தனது வேலை, கோயிலுக்கு வெளியே சற்று தள்ளி தரையில் ஊன்றினார். மயில் வாகனத்தை அதன் அருகில் நிறுத்தி வைத்தார். இதனால் வேலும் மயிலும் இல்லாமல், தனித்து நிற்கிறார்.
பெரும்பாலான கோவில்களில், சுப்ரமணியர் சிலை, முன்புறம் மூன்று முகங்களும், பின்னால் மூன்று முகங்களுடனும் அமைந்திருக்கும். இக்கோவிலில் மட்டும், ஐந்து முகங்கள் முன்புறமும், ஆறாவது முகம், பின்னாலும் அமைந்துள்ளது. அந்த முகம், 'அதோ முகம்' என அழைக்கப்படுகிறது. இம்முகத்தை கண்ணாடியில் மட்டுமே பார்க்க முடியும். அதேபோல், தமிழகத்தில் தெற்கு நோக்கி சுப்ரமணிய சுவாமி அமர்ந்திருப்பது இத்தலத்து தனிச்சிறப்பு. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், இக்கோவிலுக்கு வந்து, வழிபட்டு, அதோ முகத்தை பார்த்தால், மனநிலை சரியாகி விடும் என்பது நம்பிக்கை.
திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவில்
திருநாகேஸ்வரம் கிரிகுஜாம்பிகை அம்மன்
தினமும் குழந்தை, இளம்பெண், பெண் என மூன்று வித தோற்றங்களில் காட்சி தரும் அம்பிகை
சரஸ்வதியுடனும், லட்சுமி தேவியுடனும் காட்சி அளிக்கும் அம்பிகை
கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருநாகேஸ்வரம். இறைவன் திருநாமம் நாகநாதசுவாமி. இத்தலத்தில் கிரிகுஜாம்பிகை மற்றும் பிறையணிவாள் நுதல் அம்மை என இரண்டு அம்மன்கள் அருள்பாலிக்கிறார்கள்.
கிரிகுஜாம்பாள் அம்பிகை தனிச் சன்னதியில் தவக்கோலத்தில் காட்சியளிக்கின்றாள். கிரிகுஜாம்பிகையின் வலதுபுறம் வீணையைக் கையில் தாங்கி சரஸ்வதியும், இடதுபுறம் கரங்களில் தாமரை மலரைத் தாங்கி லட்சுமிதேவியும் இருக்கின்றனர் . கிரிகுஜாம்பிகை காலையில் சிறுமியாகவும், மதியத்தில் இளம் பெண்ணாகவும், மாலையில் தேவியாக, பெண்ணாகவும் அலங்கரிங்கப்படுகிறார்.
கிரிகுஜாம்பிகையின் திருவடிவம் சுதையால் ஆனது என்பதால் அபிஷேகம் செய்வதில்லை. புனுகுச் சட்டம் மட்டுமே சார்த்துகிறார்கள். மார்கழி மாதத்தில் 48 நாட்கள் புனுகு சட்டம் மட்டுமே சாற்றுவது வழக்கம். அந்நாட்களில் அம்பிகையை தரிசிக்க முடியாது. இந்நாட்களில் அம்பிகையின் சன்னதி முன்புள்ள திரைச்சீலைக்கே பூஜை நடக்கிறது. தை மாதத்தில் அம்பாளுக்கு, புனுகு காப்புத் திருவிழா நடைபெறும். தை கடைசி வெள்ளியன்று அம்மனது சன்னதி முன்மண்டபத்தில் அன்னம், காய்கறி, பழங்கள் போன்றவற்றை படைத்து சிறப்பு பூஜை நடைபெறும்.
இங்கு முத்தேவியரை வணங்கி, இவர்களை வழிபட குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது நம்பிக்கை. இத்தலம் ராகுவிற்கான பரிகார தலமாகவும் விளங்குகிறது.
நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வரர் கோவில்
நாக தோஷம் போக்கும் நாகாபரண விநாயகர்
நாகப்பட்டினத்தில் உள்ள காயாரோகணேஸ்வரர் கோவிலின் நுழைவாசலில், நாகாபரண விநாயகர் தனிச் சன்னதி கொண்டு அருள் பாலிக்கிறார். ஆலயத்தின் முகப்பில் வீற்றிருக்கும் இந்த விநாயகர், உடலில் நாகத்தை ஆபரணமாக சூடி, தலைக்கு மேலே ஐந்து தலை நாகம் குடை பிடித்தபடி இருக்க அதன் கீழே காட்சி தருகிறார். இவர் நாகத்தையே தன்மார்பினில் பூணூலாகவும், இடையில் கடி சூத்திரமாகவும் அணிந்திருக்கிறார். இதன் காரணமாகவே இந்த விநாயகருக்கு, 'நாகாபரண விநாயகர்' என்று பெயர் வந்தது.
சர்ப்ப ராஜன் தனக்கிருந்த தோஷத்தை நிவர்த்தி செய்ய இத்தலத்து இறைவனை வழிபட வந்தபோது,முதலில் இந்த நாகாபரண பிள்ளையாரை பிரதிஷ்டை செய்து அவருக்கு பூஜை செய்தான். பின்னர் காயாரோகணரை வழிபட்டு தோஷ நிவர்த்தி அடைந்தான்.
சர்ப்ப ராஜனே பிரதிஷ்டை செய்து வணங்கிய விநாயகர் இவர் என்பதால், ராகு-கேது சம்பந்தப்பட்ட தோஷங்கள் அனைத்தும் இவரை வழிபடுவதால் விலகும். கால சர்ப்ப தோஷம், நாகதோஷம், களத்திர சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இவருக்கு, ராகு காலத்தில் பாலபிஷேகம் செய்வித்து வேண்டிக்கொண்டால், அந்த தோஷங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். ராகு- கேது பெயர்ச்சியின்போது இவருக்கு விசேஷ பூஜைகளும் நடக்கிறது.