நசரத் பேட்டை அகரம்மேல் பச்சை வாரணப் பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

நசரத் பேட்டை அகரம்மேல் பச்சை வாரணப் பெருமாள் கோவில்

பெருமாள் பச்சை நிற யானையாக வடிவெடுத்த தலம்

சென்னை மாநகரத்தின் ஒரு பகுதியான பூந்தமல்லியிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள நசரத் பேட்டை என்ற இடத்திற்கு அருகில், அகரம்மேல் என்னும் ஊரில் அமைந்துள்ளது பச்சை வாரணப் பெருமாள் கோவில்.தாயார் திருநாமம் அமிர்தவல்லி தாயார்.இக்கோவில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.ஸ்ரீ ராமானுஜரின் மருமகனும், அவரது இரண்டு சீடர்களில் ஒருவருமான முதலியாண்டான் (கி.பி 1027 - கி பி 1132) அவதரித்த தலம் இது. முதலியாண்டானின் இயற்பெயர் தாசரதி. இந்த கிராமம் அவரது பெயரால் தசரதி பேட்டை என்று பெயரிடப்பட்டது, பின்னர் நசரத்பேட்டை என்று மாறியது.

கருவறையில் மூலவர் பச்சை வாரணப் பெருமாள், ஸ்ரீ தேவி பூதேவியுடன் மிகப்பெரிய திருமேனியுடன் ஒரு காலை மடக்கியும், மற்றொரு காலை நீட்டியும் மிக அழகாக காட்சிதருகிறார். பெருமாளின் இந்த திருநாமம் மகாபாரத நிகழ்ச்சியுடன் தொடர்புடையது.

பாண்டவர்களில் மூத்தவரான தருமர் யாகம் செய்தபோது துஷ்டர்கள் அதை செய்ய விடாமல் தடுத்தனர். அப்போது கிருஷ்ணர் பச்சை நிற யானை வடிவெடுத்து, துஷ்டர்களை விரட்டினார். அதனால் இங்கு இறைவனுக்கு பச்சை வாரணப் பெருமாள் என்ற பெயர். பெருமாளின் இந்தப் பெயர் காரணத்திற்கு, மற்றொரு மகாபாரத நிகழ்ச்சியும் உள்ளது. மகாபாரதப் போரின் போது அஸ்வத்தாமன் என்ற யானை கொல்லப்பட்டபோது, ​​தருமர் தனது குருவான துரோணாச்சாரியாரிடம், அவரது மகனான அஸ்வத்தாமன் கொல்லப்பட்டதாக பொய் சொன்னார். இந்தச் செய்தியைக் கேட்ட துரோணாச்சாரியார் திசை திருப்பப்பட்டு அதிர்ச்சியடைந்தார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, திருஷ்டத்யும்னரால், துரோணாச்சாரியார் தலை துண்டிக்கப்பட்டு இறந்தார். இந்தப் பாவத்திலிருந்து விடுபட, நாரத முனிவரின் ஆலோசனையின் பேரில், தருமர் இந்த இடத்தில் ஒரு யாகம் செய்தார். கிருஷ்ணர் யாகத்திலிருந்து பச்சை யானை வடிவில் தோன்றி அவரை ஆசீர்வதித்தார். எனவே, அவர் சமஸ்கிருதத்தில் ஹரித வாரண பெருமாள் (ஹரித என்றால் பச்சை மற்றும் வாரண என்றால் யானை) அல்லது தமிழில் பச்சை வாரண பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். தருமரின் பிரார்த்தனைகளை ஏற்று, பெருமாள் இத்தலத்தில் எழுந்தருளினார்

கோவில் கொடிக் கம்பத்தின் முன்னே விளக்கு கம்பம் உள்ளது. அதன் முன் சிறிய யானை சிலை உள்ளது. யானைக்கு நேராக விளக்கு கம்பத்தில் ஆஞ்சநேயரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது . இது இக்கோவிலின் சிறப்பை விளக்குகின்றது.

Read More