கும்பகோணம் சாரங்கபாணி கோவில்
அட்சய திருதியை - கும்பகோணம் பன்னிரெண்டு கருடசேவை உற்சவம்
ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு பிறகு வரும் 3-வது திதியான அட்சய திருதியை தினத்தில் கும்பகோணத்தில் உள்ள பன்னிரெண்டு வைணவ கோவில்களிலிருந்து, பன்னிரெண்டு கருட வாகனங்களில் உற்சவர் பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு ஒரே இடத்தில் அருள்பாலிப்பது வழக்கம்.
இந்த ஆண்டு ஏப்.23-ம் தேதி கும்பகோணம் டிஎஸ்ஆர் பெரிய தெருவில், கருட வாகனங்களில் உற்சவ பெருமாள் சுவாமிகள், அங்கு அமைக்கப்பட்டுள்ள அலங்கார பந்தலில் ஒரே இடத்தில் எழுந்தருளி பொதுமக்களுக்கு காட்சி தரவுள்ளனர்.
இதில், ஸ்ரீசாரங்கபாணி, ஸ்ரீசக்கரபாணி, ஸ்ரீராமசுவாமி, ஸ்ரீஆதிவராகபெருமாள், ஸ்ரீராஜகோபாலசுவாமி, ஸ்ரீபட்டாபி ராமர், பட்டாச்சாரியார் தெரு ஸ்ரீகிருஷ்ணன், ஸ்ரீசந்தான கோபாலகிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன், ஸ்ரீவேணு கோபால சுவாமி, ஸ்ரீவரதராஜபெருமாள் உள்ளிட்ட 12 கோயில்களின் உற்சவ பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருளுவர். அப்போது, எதிரில் ஆஞ்சநேயர் எழுந்தருளியவுடன், அந்த பெருமாளுக்கு முன்பு திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார் ஆகியோர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கும்.
பெருமாளை கருட வாகனத்தில் சேவை சாதிக்கக் காண்போருக்கு மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம். மேலும் நாக தோஷம், கால சர்ப்ப தோஷம் இருந்தாலும் நீங்கும் என்பது நம்பிக்கை.
திருநின்றவூர் ஏரி காத்த ராமர் கோவில்
Read More
ஆதிதிருவரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவில்
பள்ளி கொண்ட பெருமாள்களில் பெரிய பெருமாள்
திருக்கோயிலூரிலிருந்து 16 கி.மீ. தூரத்திலும், திருவண்ணாமலையிலிருந்து 30 கி.மீ. தூரத்திலும், சென்னையிலிருந்து 220 கி.மீ. தூரத்திலும் உள்ளது ஆதிதிருவரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவில். தாயார் திருநாமம் ரங்கநாயகி.
தமிழகத்திலுள்ள ஶ்ரீரங்கநாதா் திருமேனிகளிலேயே மிகப் பெரிய விக்கிரகத் திருமேனி, ஆதி திருவரங்கத்தில் அமைந்துள்ள அா்ச்சாவதாரத் திருமேனியாகும். இத்தலம் சத்திய யுகமான 'கிருதயுகம்' முதல் திகழ்வதாலும், ஶ்ரீரங்கத்திற்கு முந்தைய திருத்தலமாக இருப்பதாலும் இத்தலம் 'ஆதிதிருவரங்கம்' என்று அழைக்கப்படுகின்றது. இத்தலத்தில் அருள்பாலிக்கும் ஶ்ரீரங்கநாதா், ஸ்ரீரங்கம் ரங்கநாதரை விட பெரிய திருமேனி உடையவர் என்பதால், 'பெரிய பெருமாள்' என்று வணங்கப்படுகின்றாா்.
கருவறையில் மூலவர் ரங்கநாத பெருமாள், சுதையில் உருவான 29 அடி நீள திருமேனியுடன் சைன கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றார். இவருடைய படுக்கையின் நீளம் 24 அடி. இவரது தலைப்பகுதியில் ஆதிசேஷன் தன் ஐந்து தலைகளுடன் குடையாக உள்ளார் . ஸ்ரீதேவியின் மடியில் தலை சாய்த்துப் பூதேவி அடி வருடப் பள்ளிக் கொண்டிருக்கின்றார். மேலும் தலைப்பகுதியில் கருடன் வணங்கிய கோலத்தில் உள்ளார். வலக்கையைத் தலைக்கு அணைத்து, இடக்கையை உயர்த்தி, பிரம்மாவுக்கு உபதேசிக்கின்ற நிலையில் உள்ளார்.
மீன ராசிக்காரர்களின் பரிகாரத் தலம்
இத்தலத்தில் பள்ளி கொண்டிருக்கும் ஆதி திருவரங்கனின் சயனக் கோலத் திருமேனி சுதையால் அமைக்கப்பட்டது என்பதால் இவருக்கு அபிஷேகம் கிடையாது. தைலக் காப்பு மட்டுமே சாற்றப்படுகின்றது.ஶ்ரீமந்நாராயணனின் மச்ச அவதாரத் தலமாகவும் இத்தலம் வணங்கப்படுகின்றது. மீன ராசியில் பிறந்த அன்பா்கள் வணங்க வேண்டிய பரிகாரத் தலம் ஆதி திருவரங்கம் தலமாகும்.
திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில்
காலபைரவர் மூச்சு விடும் அதிசயம்
திருநெல்வேலியிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் நாங்குனேரிக்கு அருகில் அமைந்துள்ள திவ்ய தேசம் திருக்குறுங்குடி. இத்தலத்தில் பெருமாள் நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளிகொண்ட நம்பி, திருமலை நம்பி, திருப்பாற்கடல் நம்பி என 5 திருக்கோலங்களில் எழுந்தருளியுள்ளார். தாயார் குறுங்குடிவல்லி
சிவாலயங்களில் விஷ்ணு இடம் பிடித்திருப்பதைப் போல, இக்கோவிலில் சிவபிரான் 'மகேந்திரகிரி நாதர்' என்ற பெயரில் எழுந்தருளியிருக்கிறார்.
இங்கே பெருமாள் சன்னதியில் காலபைரவர் அதிசயிக்கதக்க வகையில் இருக்கிறார். உள் பிரகாரத்தை சுற்றி வரும்போது பிரமாண்டமான தோற்றத்தில் இருக்கும் இவரே, இக்கோவிலின் காவல் தெய்வமாக இருக்கிறார்.
காலபைரவர் சன்னதியில், கருவறையின் மேற்பக்கம் ஒரு விளக்கும், கீழ்பகுதியில் ஒரு விளக்கும் ஏற்றப்பட்டிருக்கும். இவைத் தவிர பக்கவாட்டில் இரண்டு சரவிளக்குகளும் இருக்கும். இந்த நான்கு தீபங்களும் எரியும்போது தெரியும் பிரகாசமான ஒளியில் பைரவர் ரூபம் அழகாகக் காட்சியளிக்கும். இந்தக் கருவறைக்குள் எந்த திசையிலிருந்தும் காற்று புகாவண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.ஆனால் இதில் அதிசயம் என்னவென்றால் மேற்பகுதியில் உள்ள விளக்கின் ஜ்வாலை மட்டும் காற்று பட்டால் அசையும் தீபம் போல ஆடிக் கொண்டேயிருக்கும். கீழே உள்ள விளக்கின் தீப ஒளி எந்தவித சலனமும் இல்லாமல் இருக்கும்.
மேல் இருக்கும் விளக்கு மட்டும் வெளிபக்கமாகவும் , உள்பக்கமாகவும் அசைவது பைரவர் விடும் மூச்சு காற்று என சொல்லபடுகிறது. அதாவது பைரவர் மூச்சை இழுக்கும்போது தீபம் உள்பக்கமாகவும், மூச்சு வெளிவிடும்போது தீபம் வெளிப்பக்கமாகவும் அசைகிறது. மற்ற தீபங்கள் எல்லாம் எந்த சலனமும் இல்லாமல் அசையாமல் இருக்கும்போது அவருடைய முகத்துக்கு பக்கத்தில் இருக்கும் விளக்கு மட்டும் உள்பக்கம் வெளிபக்கமாக அசைவதை பகதர்கள் நேரில் கண்கூடாகப் பார்க்கலாம்.
குழந்தைப்பேறு வேண்டி இங்கே வழிபாடு நடத்துபவர்களுக்கு உடனடியாகப் பலன் கிடைக்கிறது. இவருக்கு தயிரன்னமும், வடைமாலையும், பூசட்டையும் படைக்கப்படுகிறது.
நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில்
கருவறையில் உள்ள மூர்த்தஙகள் அனைத்தும் சுயம்புவாகத் தோன்றிய திவ்ய தேசம்
திருநெல்வேலியிலிருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 32 கி.மீ. தொலைவில் உள்ள திவ்ய தேசம் நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில்.
கோயிலின் கருவறையில் மூலவர் வானமாமலை என்கின்ற தோதாத்ரி நாதர், தனது இடது காலை மடித்துக்கொண்டும், வலதுகாலை தொங்கவிட்டு தரையில் படும்படியும் ஆதிசேஷன் குடைபிடிக்க , பூதேவி, ஸ்ரீதேவி சமேதராக ராஜதர்பார் கோலத்தில் அமர்ந்திருப்பது இந்த திவ்ய தேசத்தில் மட்டும்தான். அவ்வாறு வீற்றிருக்கின்ற காரணத்தினாலேயே, இக்கோவில் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுகிறது. ஊர்வசி, திலோத்தமா ஆகிய இருவரும் சாமரம் வீசிக் கொண்டும், சூரியன், சந்திரன், பிருகரிஷி, மார்க்கண்டேய ரிஷி முதலானோர் மூலவர் தோதாத்ரி நாதரின் இருபுறமும் வீற்று இருக்கிறார்கள்.
இத்தலத்தில் பெருமாள் ஒரு கையை பாதத்தை நோக்கியபடியும், மற்றொரு கையை மடியில் வைத்தும் காட்சி அளிக்கிறார். யார் தன் பாதத்தை சரணடைகிறார்களோ அவர்களுக்குத் தன் மடியில் இடம் உண்டு என்பதுதான் இதன் பொருள். இத்தகைய பெருமாள் கோலத்தை வேறு எந்தத் தலத்திலும் காண முடியாது.
சில தலங்களில் மூலவர் மட்டும் சுயம்புவாக எழுந்தருளியிருப்பார். ஆனால் இத்தலத்தில் கருவறையிலுள்ள தோதாத்ரி நாதர், பூதேவி, ஸ்ரீதேவி, சூரியன், சந்திரன், பிருகரிஷி, மார்க்கண்டேய ரிஷி, ஊர்வசி, திலோத்தமா ஆகிய ஒன்பது பேரும், அர்த்த மண்டப்பத்திலுள்ள கருடாழ்வாரும், விஷ்வக்சேனரும் ஆக 11 மூர்த்தங்களும் சுயம்புவாக உருவானவர்கள். இப்படி கருவறையில் உள்ள அனைத்து மூர்த்தஙகளும் சுயம்புவாக எழுந்தருளியிருப்பது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.
அதம்பார் கோதண்டராமர் கோவில்
ராமாயண நிகழ்வுகளுடன் தொடர்புடைய அதம்பார் தலம்
அதம்பார் கோதண்டராமர் கோவில், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவில் உள்ளது.
பஞ்ச ராம க்ஷேத்திரங்களில் இத்தலமும் ஒன்றாகும். மற்ற நான்கு பஞ்ச ராம க்ஷேத்திரங்கள் தில்லை விளாகம் (வீர கோதண்ட ராமர்) , வடுவூர் கோதண்ட ராமர் (வில்லேந்திய அழகிய ராமன்), பருத்தியூர்(ஸ்ரீ ராமர்), முடிகொண்டான்(ராமர் கிரீடத்துடன் காணப்படுவதால் முடி கொண்டான்) ஆகியவை ஆகும்.
பொதுவாக ராம, சீதா, லட்சுமண விக்ரகங்கள் தனித்தனியாக ஒரு பீடத்தில் அமர்த்தப்பட்டிருக்கும். இங்கு மூவர் உருவமும் ஒன்றாக ஒரே பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
இடதுகையில் வில்லும், வலதுகையில் அம்பும் கொண்டு ராமர் நிற்கும் தோரணை நம்மை பரவசத்தில் ஆழ்த்தும். வேறு எங்கும் இப்படியான வடிவில் நாம் ராமனைப் பார்க்க முடியாது.
பக்கத்தில் சீதையும், லட்சுமணரும் இருக்க, ராமர் திருவடி கீழ் வாய் பொத்தி உத்தரவு கேட்கும் பணிவான தோற்றத்தில் தாச ஆஞ்சநேயர்.
ராமர் சம்பந்தப்பட்ட ராமாயண நிகழ்வுகள் நடந்த ஊர்கள் இத்தலத்திற்கு அருகே இருக்கின்றன. சீதையிடமிருந்து ராமனைப் பிரிக்க, மாரீசன் பொன்மான் உருவில் பொய்மானாக வந்தான். அந்த மாயத் தோற்றத்தில் மயங்கிய சீதா, அதைப் பிடித்துத் தரும்படி கேட்டாள். 'வேண்டாம் இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது' என்று ராமன் மறுத்தான். சீதையின் முகம் வாடிவிட்டது. 'அவள் ஆசையைக் கெடுப்பானேன்' என்று மனைவியின் மீதுள்ள அன்பின் பொருட்டு, மானைப் பிடிக்கச் சென்றான் ராமன். ஆனால், 'அது மானல்ல! மாரீசன்' என்று தெரிந்ததும், 'உன்னை கொல்லாமல் விடமாட்டேன்' என்று அதைத் துரத்தினான். மான் பலவகையிலும் மறைந்து மறைந்து ஓடியது. இறுதியில் மானை நோக்கி ராமன் அம்பை எய்த இடம்தான் இந்த 'அதம்பார்' தலம்.
இக்கோவிலில் உள்ள கல்வெட்டில்'ராமர் வில்லின் நாணை ஏற்றி இத்தலத்திலிருந்து மானை நோக்கி 'தம் ஹந்தும் கிருத நிச்சய; ஹதம் பார்' என்று உரைத்து அம்பை எய்தார் என்றும், "ஹதம் பார்"என்பதே பின்னர் திரிந்து "அதம்பார்" ஆயிற்று' எனவும் செய்தி உள்ளது.
அந்த அம்பு, பாய்ந்த சென்று மானைத் தைத்த இடம் இத்தலத்தை அடுத்துள்ள 'மாந்தை' (மான்+தை).
மான் அடிபட்டு ஓடிப்போய் உயிர்நீத்த இடம், மாந்தையை அடுத்துள்ள 'கொல்லுமாங்குடி'.
சீதைக்கு மாரீசன் பொன் மானாக வந்தது ''ஆஹா இந்த நல்ல மான் என்று சீதை மயங்கிய இடம் 'நல்ல மான் குடி' என்ற நல்லமாங்குடி.
ராமன் தன்னை பிடிக்க வருகிறான் என்று மாரீசன் வலப்பக்கமாக ஓடியது 'வலம் கை மான்'என்ற வலங்கை மான்.
ராவணன் சீதையை கடத்திச் சென்றபோது சீதை, தான் சென்ற வழியை அடையாளம் காட்டுவதற்காக, தனது பாத ஆபரணமாகிய பாதகத்தை (பாத அணிகலன்) கீழே எறிந்தது 'பாடகச்சேரி'.
ராமன், லக்ஷ்மணனிடமிருந்து தாடகை தப்பி ஓடி ஒளிந்த இந்த இடம் தாடகாந்தபுரம்.
நெடுங்குணம் யோக ராமர் கோவில்
கைகளில் வில்லும், அம்புமின்றி யோக நிலையில் அமர்ந்திருக்கும் அபூர்வ ராமர்
திருவண்ணாமலையிலிருந்து 47 கி.மீ. தொலைவிலும், வந்தவாசியிலிருந்து 25 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது நெடுங்குணம் யோக ராமர் கோவில். சுமார் 700 ஆண்டுகள் பழமையானது. எண்பத்தேழாயிரம் சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ள இக்கோவில், தமிழ்நாட்டில், ராமருக்கு என்று அமைந்த தனிக்கோவிலில் மிகவும் பெரியது.
கருவறையில் ஸ்ரீராமபிரான் வித்தியாசமான கோலத்தில் எழுந்தருளி இருக்கிறார். எப்பொழுதும் அவர் கையில் ஏந்தி இருக்கும் கோதண்டம் மற்றும் ஆயுதங்கள் ஏதுமின்றி, அமர்ந்த நிலையில் வலது கையை சின் முத்திரையுடன் திருமார்பில் வைத்தபடி, கண்களை மூடிய வண்ணம் யோக நிலையில் காட்சி தருகிறார். இது ராமபிரானின் மிகவும் அபூர்வமான திருக்கோலம் ஆகும். இதனாலேயே இவரை யோக ராமர் என்று அழைக்கின்றனர். ராமர் அருகே இடப்புறம் சீதாபிராட்டி அமர்ந்த நிலையில், வலக் கரத்தில் தாமரை மலரை ஏந்தியபடி காட்சி தருகிறார். அவரது இடக்கரம் திருவடி சரணத்தை உணர்த்தும் அபயஹஸ்தமாக விளங்குகிறது. லட்சுமணன், ராமருக்கு வலது புறத்தில் கைகளைக் குவித்து அஞ்சலி செலுத்தியவராய் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். ராமபிரானும் சீதா பிராட்டியும் பீடத்தில் அமர்ந்து காட்சி தர, அவர்கள் எதிரே அனுமன் பிரம்மசூத்திரம் படித்தபடி காட்சி தருவது இன்னும் சிறப்பானது. இது வேறு எங்குமே காணமுடியாத அற்புத காட்சியாகும்.
பிரார்த்தனை
இங்கே ராமபிரான் சாந்தமான கோலத்தில் எழுந்தருளி இருப்பதால், அவரை வணங்கினால் மன அமைதி, நிம்மதியான வாழ்க்கை நமக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம்.ராமபிரான் இங்கு குரு அம்சமாக இருப்பதால், கல்வியில் சிறப்பிடம் பெறுவதற்கான பிரதான வழிபாட்டுத் தலமாக இருக்கிறது. கல்வி, கலைகளில் உயர்வான நிலை பெற, ஞாபகமறதி நீங்க, ஞானம் உண்டாக நெய்தீபம் ஏற்றி வேண்டிக் கொள்கிறார்கள். திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்க, தம்பதியர் ஒற்றுமைக்காக ஊற வைத்த பாசிப்பயிறு, சர்க்கரைப்பொங்கல் , பானக நிவேதனம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள். இத்தலத்தில் வியாபார விருத்தி, உத்தியோக உயர்வு, குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் பக்தர்கள் பெருமளவில் வந்து வழிபடுகின்றனர்.
திருக்காழிச்சீராம விண்ணகரம் தாடாளன் கோவில்
தாயார் பெருமாளைத் தாங்கியிருக்கும் திவ்ய தேசம்
திருக்காழிச்சீராம விண்ணகரம் தாடாளன் (திரிவிக்கிரம நாராயணர்) திருக்கோவில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இத்திருத்தலம் சீர்காழியில் அமைந்துள்ளது. மூலவர் திரிவிக்கிரம நாராயணர் (நின்ற திருக்கோலம்). உற்சவர் தாடாளன். தாயார் லோகநாயகி.
உரோமச முனிவர் தவமிருந்து பெருமாளின் திரிவிக்கிரம அவதாரக் காட்சி கண்ட திருத்தலம். மூலவர் திரிவிக்கிரமராக இடது காலைத் தலைக்கு மேல் தூக்கியபடியும் வலது கையை தானம் பெற்ற கோலத்திலும் இடக்கையை அடுத்த அடி எங்கே என ஒரு விரலைத் தூக்கியபடியும் அமைந்துள்ளார்.
பெருமாள் தன் மார்பில் மகாலட்சுமியைத் தாங்கியிருப்பது போல தாயார் லோகநாயகி, திரிவிக்கிரமரை பதக்கமாக தன் மார்பில் தாங்கியிருப்பது இத்தலத்தின் தனிச் சிறப்பு. திரிவிக்கிரம கோலத்தில் பெருமாள் ஒருபாதத்தை உயரத் தூக்கியபோது, பாதம் நோகுமே என்று அவரை பதக்கமாகத் தாயார் தாங்குவதாக மரபு. இத்திருத்தல தாயார் தரிசனம் காணும் பெண்கள் கணவரிடம் அன்பு காட்டுவர் என்பது ஐதீகம். பெண்கள் இவரை வணங்கினால் பிரிந்த தம்பதியர் ஒன்று கூடுவர்.
திருக்கண்ணங்குடி லோகநாதப் பெருமாள் கோவில்
வசிஷ்ட முனிவரிடம் கிருஷ்ணர் நடத்திய லீலை
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிக்கலுக்கு அருகில் அமைந்துள்ள திவ்ய தேசம் திருக்கண்ணங்குடி. பெருமாள் திருநாமம் லோகநாதர். உற்சவர் தாமோதர நாரயணன். மேலும் இக்கோவில், பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் ஒன்றாகும். மற்ற நான்கு கிருஷ்ண க்ஷேத்திரங்கள் திருக்கண்ணபுரம், கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணமங்கை ஆகியவை ஆகும்.
வசிஷ்ட முனிவர் கிருஷ்ண பக்தியில் மிக சிறந்தவர். ஒரு முறை வசிஷ்டர் வெண்ணெயில் கிருஷ்ணன் விக்கிரகம் செய்து, அதை தன் பக்தி மேலீட்டால் இளகாமல் வைத்து பூஜை செய்து வந்தார். இந்த பக்தியை கண்ட கிருஷ்ணன், சிறு குழந்தை வடிவம் கொண்டு கோபாலனாக வசிஷ்டரிடம் சென்றார். அங்கு வசிஷ்டர் பூஜை செய்து கொண்டிருந்த வெண்ணெய் கண்ணனை அப்படியே எடுத்து வாயில் போட்டு விழுங்கி விட்டார். இதைக்கண்ட வசிஷ்டர்,கிருஷ்ணனை விரட்டி சென்றார்.
திருக்கண்ணங்குடியை 'கிருஷ்ணாரண்யம்' என புராணங்கள் கூறுகின்றன. இங்கு மகிழ மரத்தின் அடியில் நிறைய ரிஷிகள் தவம் செய்து கொண்டிருந்தார்கள். வசிஷ்டரால் விரட்டப்பட்ட கிருஷ்ணன் இப்பகுதிக்கு ஓடி வந்தான். இவர் வருவதை தங்களது ஞான திருஷ்டியால் அறிந்த ரிஷிகள் கிருஷ்ணனை பாசக்கயிற்றால் கட்டிப்போட்டனர். இவர்களது பக்திக்கு கட்டுப்பட்ட கண்ணன்,'வசிட்டன் என்னை விரட்டி வருகிறான். வேண்டியதை சீக்கிரம் கேட்டுப்பெறுங்கள்' என்றார். அதற்கு ரிஷிகள்,'கண்ணா! நீ எங்களுக்கு தரிசனம் தந்தது போல் இத்தலத்திற்கு வருவோர்களுக்கு தரிசனம் கொடுத்தருள வேண்டும்' என வேண்டினர். இவர்களது வேண்டுதலுக்கிணங்க கண்ணன் இத்தலத்தில் தங்கிவிட்டார். விரட்டி வந்த வசிஷ்டரும் கிருஷ்ணர் நடத்திய லீலையை அறிந்து கொண்டார். இந்நிகழ்வு நடந்ததாகக் கூறப்படும் இடம்தான் திருக்கண்ணன்குடி. கண்ணன் கட்டுண்டு நின்ற படியால், இத்தலம் 'கண்ணங்குடி' ஆனது.
கருடாழ்வாரின் சிறப்புத் தோற்றம்
எல்லா திவ்ய தேசத்திலும் கருடாழ்வார் கைகளை குவித்து வணங்கும் நிலையில் இருப்பார். ஆனால் இத்தலத்தில் இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு வைகுண்டத்தில் எழுந்தருளி இருப்பதைப்போல் அருள் பாலிக்கிறார்.
குழந்தை வரம் அருளும் தலம்
குழந்தை பாக்கியம் வேண்டி இத்தல பெருமாளிடம் பிரார்த்தனை செய்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் கண்ணனுக்கு பால்பாயசம் நைவேத்யம் செய்து வழிபாடு செய்கின்றனர்.
பள்ளி கொண்டான் பள்ளி கொண்ட பெருமாள் கோவில்
பெருமாள் பூலோகத்தில் விரும்பி வந்து பள்ளி கொண்ட இடம்
வேலூர்-பெங்களூரு நெடுஞ்சாலையில், வேலூரிலிருந்து 23 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பள்ளி கொண்டான். பெருமாள் பூலோகத்தில் விரும்பி வந்து பள்ளி கொண்ட இடம் என்பதால், இவ்வூர் 'பள்ளி கொண்டான்' எனப்பட்டது. பெருமாள் 'உத்தர ரங்கநாதர்' எனப்படுகிறார். 1000-க்கும் மேற்பட்ட ஆண்டுகள் பழமையானது இக்கோவில்.
பெருமாள் இங்கே தென்திசையில் முடியை வைத்து, வடதிசையில் திருப்பாதங்கள் நீட்டி ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டுள்ளார்..மார்பில் திருமகளும், நாபியில் பிரம்மனும், பாதங்களின் பக்கம் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக காட்சி அளிக்கிறார் எம் பெருமான். திருக்கரம் 'வா' என்று பக்தர்களை, அன்போடு அழைக்கும் விதமாக அமைந்துள்ளது. மூலவரின் திருமேனி சாளக்கிராமத்தால் ஆனது. தனி சன்னதியில் தாயார் ரங்கநாயகி இருக்கிறார்.
பிரிந்த பிரம்மாவையும் சரஸ்வதியையும் இணைத்து வைத்த பெருமாள்
மகாலட்சுமிக்கும், சரஸ்வதிக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற சர்ச்சை ஏற்பட்டது. இதற்கு தீர்ப்பு கூறும்படி இருவரும் பிரம்மனிடம் சென்றனர். மகாலட்சுமி தான் பெரியவர் என பிரம்மா தீர்ப்பு கூறினார். இதனால் சரஸ்வதிக்கு கோபம் ஏற்பட்டு, பூலோகத்திலுள்ள சாசிய மலையில் தனது நிலை உயர வேண்டி தவம் செய்யத் தொடங்கினாள். இந்நிலையில் பிரம்மா பெருமாளுக்கு சிறப்பு செய்வதற்காக ஒரு யாகம் தொடங்கினார். நியதிப்படி யாகத்தை தம்பதி சமேதராக நடத்த வேண்டும். ஆனால், சரஸ்வதி யாகத்திற்கு வர மறுத்தாள். எனவே பிரம்மா, சரஸ்வதியின் அம்சமாக ஒரு பெண்ணைப் படைத்து, அவளுக்கு சாவித்திரி என பெயர் சூட்டி, அவளையே மணந்து யாகத்தை தொடங்கினார்.
இதனால் மேலும் கோபமடைந்த சரஸ்வதி, பிரம்மன் ஆரம்பித்த இந்த யாகத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 'க்ஷீரநதி' என்ற பெயரில் நதியாக மாறி, வெள்ளப்பெருக்கெடுத்து யாக குண்டத்தை உடைக்கும் நோக்கத்தில் ஓடிவந்தாள். இதனால் பிரம்மா, பெருமாளின் உதவியை நாடினார். பெருமாள், சரஸ்வதியை சமாதானம் செய்தார். முன்னதாக, அவர் நதியின் ஓட்டத்தை தடுக்க, ஆதிசேஷனை நதியின் குறுக்கே படுக்க வைத்து, அதில் சயனித்தார். பின்னர், பிரம்மா யாகத்தை சிறப்பாக முடித்தார். சரஸ்வதியும் சாவித்திரியும் ஒன்றே என்பதை விளக்கிய பெருமாள், அவளை பிரம்மனுடன் மீண்டும் இணைத்து வைத்தார்.
பெருமாளுக்கு உதவியாக வைகுண்டத்தில் இருந்து வந்த ஆதிசேஷன், இத்தலத்தில் தான் முதல்முறையாக அவரைத் தன்னில் சயனிக்க வைத்தார் என்கிறது தலபுராணம். பின்னர் பெருமாள் பாற்கடலில் பள்ளி கொண்டதால், இத்தலத்து ஆறுக்கும் 'பாலாறு' என்று பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் ஒருநாள் இரவு தங்கி பெருமாளை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என பிரமாண்ட புராணம் கூறுகிறது.
அந்நியர் படையெடுப்பின் போது, இங்குள்ள ரங்கநாதர் மறைக்கப்பட்டு, சிறிய ரங்கநாதர் சிலை செய்து, கோயிலில் பாதுகாக்கப்பட்டது. இன்றும் கூட சிறிய ரங்கநாதருக்கும் பூஜைகள் செய்யப்படுகிறது. இவர் 'சோட்டா ரங்கநாதர்' எனப்படுகிறார்.
பிரிந்த தம்பதியர் ஒன்று சேர வழிபட வேண்டிய தலம்
இத்தலத்தில் நிறைய திருமணங்கள் நடக்கின்றன. இங்கு திருமணம் செய்து கொண்டால், தம்பதியர் மனமொத்து வாழ்வர் என்பது நம்பிக்கை. திருமணமாகாதவர்கள் இத்திருக்கோவிலுக்கு வந்து பள்ளிகொண்ட பெருமாளை வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்பதும் இத்தலத்தில் திருமணம் செய்துகொள்ளுபவர்கள் பதினாறு பேறுகளையும் பெற்று பெருவாழ்வு வாழ்வர் என்பதும் ஐதீகம். தடைபடும் திருமணங்கள் சிறப்பாக நடக்கவும், பிரிந்த தம்பதியர் ஒன்றாக சேரவும் இங்கு பிரார்த்திக்கிறார்கள்.
திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில்
ஒவ்வொரு நாளும் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறும் திவ்ய தேசம்
சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரைச்சாலையில், 40 கிலோமீட்டர் தொலைவில், கோவளத்திற்கு முன்னதாக திருவேடகத்தில் அமைந்துள்ள திவ்ய தேசம் திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில். இங்கு, லட்சுமியை தன் இடது தோளில் ஏந்தியபடி காட்சி தருகிறார் நித்ய கல்யாணப் பெருமாள். லட்சுமியை இடப்பக்கம் ஏந்திய திருத்தலம் என்பதால் `திருஇடந்தை' என்ற பெயர் ஏற்பட்டது. அதுவே திருவிடந்தை ஆக மாறிவிட்டது.
கருவறையில் மூலவரான ஸ்ரீ ஆதிவராகப் பெருமாள் சுமார் ஆறரை அடி உயரமுள்ள கல் விக்ரகமாக- தேவியை மடியில் அமர்த்திக் கொண்டு வீற்றிருக்கிறார். பெருமாளின் திருவடியின்கீழ் தன் பத்தினியுடன் ஆதிசேடன் உள்ளார். ஸ்ரீஆதிவராக மூர்த்தியின் இடப்பக்கத்தில் உள்ள நாச்சியாருக்கு அகில வல்லி நாச்சியார் என்றும், பிரதி தினம் கல்யாணம் செய்து கொண்டபடியால், பெருமாளுக்கு நித்திய கல்யாண பெருமாள் என்றும் திருநாமம் வழங்கலாயிற்று. தாயார் திருநாமம் கோமளவல்லி.
பெருமாளுக்கு அனுதினமும் திருமணம் நடந்த வரலாறு
சரஸ்வதி ஆற்றங்கரையில் உள்ள சம்பு என்று அழைக்கப்பட்ட தீவில் குனி என்னும் முனிவர் தவம் செய்து வந்தார். அவருக்குப் பணிவிடை செய்வதற்காக கன்னிகை ஒருத்தி அங்கு வந்து சேர்ந்தாள். ஒரு காலகட்டத்தில் அந்த முனிவர் மோட்சம் அடையவே, அவரைப் போலவே மோட்சம் அடைய அந்தக் கன்னிகை கடுந்தவம் செய்து வந்தாள். ஒரு நாள் அங்கு வந்த நாரத முனிவர் அவளிடம்,'திருமணம் செய்து கொள்ளாமல் மோட்சம் அடைய இயலாது' என்று கூறினார். எனவே பல முனிவர்களிடமும் சென்று தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டினாள். காலவ முனிவர் என்பவர் அவளை மணந்து கொண்டார். அவர்களுக்கு 360 பெண் குழந்தைகள் பிறந்தார்கள். முதலாவது பெண் குழந்தையின் பெயர் கோமளவல்லி. அவர்களைப் பெற்ற சிறிது காலத்தில் குழந்தைகளின் தாய் மறைந்து விட்டாள். காலவ முனிவர் அந்த 360 பெண் குழந்தைகளை வளர்க்க மிகவும் சிரமப்பட்டார். பெண் குழந்தைகள் மளமளவென்று வளர்ந்து பருவமடைந்து, திருமணத்திற்குக் காத்திருக்கும் கன்னிகளானார்கள். இத்தனை பெண்களையும் எப்படி திருமணம் செய்து கொடுப்பது என்று தவித்தார் காலவ முனிவர். சம்புத்தீவிற்கு வந்து மற்ற முனிவர்களிடம் அந்தப் பெண்களுக்கு எவ்வாறு திருமணம் செய்து வைப்பது என்று வருத்தத்துடன் ஆலோசனை கேட்டார். அவர்கள் திருவிடந்தை சென்று பெருமாளை வழிபடக் கூறினார்கள். இத்தலத்திற்கு தனது 360 கன்னிகைகளுடன் வாழ்ந்து வந்த காலவரிஷியின் வேண்டுதலை ஏற்று, பெருமாள் பிரம்மச்சாரியாக வந்து தினம் ஒரு கன்னிகையாக 360 நாட்களில் அனைவரையும் திருமணம் செய்து கொண்டு கடைசி நாளன்று அனைவரையும் ஒருவராக்கி தனது இடபாகத்தில் வைத்துக் கொண்டு எழுந்தருளினார்.
திருஷ்டி தோஷம் விலக்கும் தலம்
உற்சவரான ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவி ஆகியோர் பஞ்சலோக விக்ரகங்களாகக் காட்சி தருகின்றனர். ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாளின் திருமுகத்தில் திருஷ்டிப் பொட்டு ஒன்று உள்ளது. இது இயற்கையிலேயே அமைந்ததாம். இந்த திருஷ்டிப் பொட்டையும் தனிச்சந்நிதி தாயாரான கோமள வல்லித் தாயாரின் திருமுகத்தில் இருக்கும் திருஷ்டிப் பொட்டை யும் தரிசிப்பவர்களுக்கு திருஷ்டி தோஷம் விலகும் என்கிறார்கள். இந்த கோவிலுக்கு வந்து வேண்டிக்கொண்டால் சட்டென்று திருமணம் முடிந்து விடும். அவ்வாறு திருமணம் முடிந்த தம்பதியர், இந்த கோவிலுக்கு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில்
பெண் வடிவ கருடாழ்வார்
திருவாரூரிலிருந்து சுமார் 30 கி,மீ. தொலைவில் உள்ள மன்னார்குடியில் அமைந்துள்ளது ராஜகோபால சுவாமி கோவில். குருவாயூரைப் போலவே, மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலையும் 'தட்சிண துவாரகை' என்று அழைக்கிறார்கள். இங்கு அருள்பாலிக்கும் மூலவரின் திருநாமம் ஸ்ரீவாசுதேவப் பெருமாள் என்பதாகும். உற்சவரின் திருநாமம் ராஜகோபால சுவாமி. தாயாரின் பெயர், செங்கமலத் தாயார். உற்சவரின் பெயரான ராஜகோபால சுவாமி என்ற பெயரிலேயே ஆலயம் விளங்குகிறது.
பெரிய திருவடி என்று போற்றப்பெறும் கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளுவதே தனி அழகும் கம்பீரமும்தான். கருடவாகனத்தில் பெருமாளை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவியே இல்லை என்பது வைஷ்ண வர்களின் மாபெரும் நம்பிக்கை. பெருமாளுக்கு வாகனமாகவும், அவரது கொடியின் சின்னமாகவும் இருப்பவர்
கருட பகவான் சாதாரணமாக இரு பெரிய இறக்கைகளுடன் மனிதனைப் போல வடிவம் கொண்டு, வளைந்த மூக்குடன் அழகிய முகத் தோற்றத்தில் பெருமாள் எதிரே நின்ற நிலையில்தான் கோயில்களில் காட்சி தருவார். வாகனமாக திருமாலை எழுந்தருளச் செய்து செல்லும்போது அமர்ந்த நிலையில் காட்சி தருவார். சிறந்த பக்தி, ஞாபக சக்தி, வேதாந்த அறிவு, வாக்கு சாதுரியம் போன்றவை கருடனை வணங்கும்போது கிடைக்கும் என ஈஸ்வர சம்ஹிதை என்ற நூல் கூறுகிறது. கருடாழ்வாரை வணங்கி உபவாசம் இருந்தால் மனநோய், வாய்வுநோய், இதயநோய், தீராத விஷ நோய்கள் தீரும் என கருட தண்டகத்தில் கூறப்பட்டுள்ளது. கருடன் நிழல் பட்ட வயல்களில் அமோக விளைச்சல் உண்டாகும் என்பது கிராம மக்களின் நம்பிக்கை. கருடபகவானை நினைத்தாலே விஷ உயிர்களின் மூலம் உருவாகும் பயமும் துன்பமும் மறையும் என்பது ஐதீகம்.
இத்தலத்தில் செங்கமலத் தாயார் சன்னிதி அருகே, பெருமாள் சன்னிதி எதிரே, பெண் வடிவ கருடாழ்வார் காட்சி தருகிறார். இப்படி பெண் வடிவில் காட்சி தரும் கருடாழ்வாரை வேறெங்கும் நாம் தரிசிப்பது அரிது. இந்த பெண் வடிவ கருடாழ்வாருக்கு நெய்தீபம், எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட்டால் திருமண தோஷம் புத்திரதோஷம் விலகிவிடும்.
சூலூர் திருவேங்கடநாதப் பெருமாள் கோவில்
துளசி தீர்த்தத்துடன்,மிளகும் பிரசாதமாக வழங்கப்படும் பெருமாள் கோவில்
கருவறையில் பெருமாள் திருமேனியின் பின்புறம் ஆஞ்சநேயர் வீற்றிருக்கும் அபூர்வ காட்சி
கோயம்புத்தூரில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ள சூலூர் தலத்தில் அமைந்துள்ளது திருவேங்கடநாதப் பெருமாள் கோவில். முற்காலத்தில் சூரபாண்டியநல்லூர் என்று அழைக்கப்பட்ட இந்த ஊர் பின்னர் சூரலூர் என்ற பெயரில் மருவி, தற்பொழுது சூலூர் என்று அழைக்கப்படுகிறது.
இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது கருவறையில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். கருவறையில் பெருமாள் திருமேனியின் பின்புறம் ஆஞ்சநேயர் வீற்றிருக்கிறார். இது பெருமாள் கோவில்களில் ஓர் அபூர்வ அமைப்பாகும். இந்த அமைப்பு வேறு எந்த கோவிலிலும் இல்லை என்பது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். ஆனால் பெருமாளின் பின்புறம் இருப்பதால், பக்தர்களால் ஆஞ்சநேய மூலவரைக் காண இயலாது.
பொதுவாக எல்லாப் பெருமாள் கோவில்களிலும் தீர்த்தம், துளசி, குங்குமம் மட்டும்தான் பிரசாதமாக கொடுப்பார்கள். ஆனால், இக்கோவிலில் துளசி தீர்த்தம் வழங்கியபின் சிறிதளவு மிளகு வழங்குகிறார்கள். பெருமாளே, மிளகு கேட்ட வரலாற்றாலும், ஓரு பிடி மிளகு கொடுத்ததன் சிறப்பாலும், இன்றும் இக்கோயிலில் மதியம் பெருமாளுக்கு மிளகு நைவேத்தியம்தான் படைக்கப்படுகிறது. அதையே பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கிறார்கள். மேலும், வருடம் முழூவதும் மிளகு வைத்துக் காரமாகப் பூசை செய்வதால் இனிப்பான அதாவது, சர்க்கரைப் பொங்கல் தவிர வேறு நைவேத்தியம் இங்கு கிடையாது. பெருமாளின் வெப்பம் குறைய விசேஷ நாட்களில் பச்சரிசியை ஊற வைத்து சர்க்கரை, ஏலக்காய், தேங்காய்த் துருவல் ஆகியவற்றைக் கலந்து படைப்பதும் உண்டு. மிளகே அக்னி வடிவமாக இருப்பதால் இக்கோவிலில் சுவாமிக்குத் தவிர, சுபகாரியங்களுக்கு அக்னி உபயோகிப்பதில்லை.
இத்தலத்தில் பக்தர்கள் தங்கள் அனைத்துவித வேண்டுதல்களும் நிறைவேறியதும் மிளகுகளை நேர்த்திக் கடனாக செலுத்துகின்றனர்.
கும்பகோணம் ஆதிவராகப் பெருமாள் கோவில்
நிலம், வீடு தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கும் பெருமாள்
கும்பகோணத்தின் மையப்பகுதியில், சக்கரபாணி கோவிலுக்கு தென்மேற்கில், ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது, மிகப் பழமையான ஆதிவராகப் பெருமாள் கோவில். இதன் அருகிலேயே வராக விநாயகராகிய கரும்பாயிரம் பிள்ளையார் கோவிலும் உள்ளது. இக்கோவில் 800 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
இக்கோவிலில் உள்ள மூலவர் ஆதிவராகப்பெருமாள் ஆவார். தாயார் அம்புஜவல்லி.
உலகில் முதலில் தோன்றிய இடம் 'வராகபுரி' என்னும் கும்பகோணம் என்று இந்தக் கோவில் தல புராணம் சொல்கிறது. எனவே முதலில் இந்தக் கோவிலில் உள்ள ஆதிவராகப் பெருமாளை வழிபட்ட பிறகே, அனைத்து தெய்வங்களையும் வழிபட வேண்டும் என்றும் சொல்கிறார்கள். கும்பகோணத்தில் மகாமகம் திருவிழா உண்டாவதற்கு முன்பாகவே இவர், இத்தலத்தில் எழுந்தருளியிருந்தார். எனவே இவரை, 'ஆதிவராகர்' என்று அழைக்கின்றனர். இவரே இங்குள்ள பெருமாள்களுக்கெல்லாம் முந்தியவர். மாசிமகத் திருவிழாவின்போது, கும்பகோணத்திலுள்ள சாரங்கபாணி, சக்கரபாணி, வரதராஜர், ராஜகோபாலர் மற்றும் இத்தலத்து மூர்த்தி ஆகிய ஐவரும் காவிரிக்கரைக்கு தீர்த்த நீராட எழுந்தருளுகின்றனர்.
மூலஸ்தானத்தில் சுவாமி, பூமாதேவியை இடது மடியில் அமர்த்திய கோலத்தில் காட்சி தருகிறார். பூமாதேவி திருமாலை வணங்கியபடி இருக்கிறாள். மூலவர் ஆதிவராகப் பெருமாள் அமர்ந்த கோலத்தில் இருக்க, அவருக்கு முன்பாக உற்சவர் நின்றபடி இருக்கிறார். உற்சவர் ஆதிவராகர், தனது இடது பாதத்தை ஆதிசேஷன் மீது வைத்தபடி காட்சி தருகிறார். சுவாமி முன்பாக 'வராக சாளக்கிராமம்' உள்ளது. இதில் சங்கு, சக்கர ரேகைகள் உள்ளன.
தல வரலாறு
வராகத்தின் (பன்றி) முகத்தோடு விளங்குவதால் வராகப் பெருமாள் என்ற பெயர் பெற்றார். ஒருசமயம் இரண்யாட்சன் என்னும் அசுரன், பூமியை பாதாள உலகிற்குள் எடுத்துச்சென்று மறைத்து வைத்தான். தன்னை மீட்கும்படி, பூமாதேவி திருமாலிடம் வேண்டினாள். திருமால் வராக அவதாரம் எடுத்து பாதாளத்திற்குள் சென்று பூமியை மீட்டு வந்தார். இவரே இத்தலத்தில் வராகமூர்த்தியாக அருள்புரிகிறார்.
கோரைக்கிழங்கு மாவுருண்டை பிரசாதம்
தினமும் ஆதிவராகப் பெருமாளுக்கு அர்த்தஜாம பூஜையின்போது, கோரைக்கிழங்கு மாவுருண்டையை நைவேத்யமாக படைக்கிறார்கள். பாய் நெய்வதற்குரிய நாணல் புல்லின் அடியில் முளைப்பது கோரைக்கிழங்கு. இந்தக்கிழங்கை பொடித்து, அதனுடன் அரிசி மாவு, சர்க்கரை மற்றும் நெய் சேர்த்து உருண்டையாகப் பிடித்து வைப்பர். மறுநாள் காலையில் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கிறார்கள். பூமியை மீட்டு வந்த பெருமாள் என்பதால். பூமிக்கு கீழே விளையும் கிழங்கு கலந்த நைவேத்யம் இவருக்கு படைக்கப்படுகிறது.
இத்தலம் ஞானம் மற்றும் பூமி சம்பந்தமான தோஷ நிவர்த்திக்கு சிறப்பு வாய்ந்தது. ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் சுவாமியை வணங்கி, தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் பெற, கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். நிலம், வீடு தொடர்பான பிரச்னைகள் நீங்க இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள.
கும்பகோணம் சக்கரபாணி கோவில்
மூன்று கண்கள், எட்டு கைகள் உடைய சக்கரபாணி பெருமாள்
பெருமாளுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை
கும்பகோணம் நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில், 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சக்கரபாணி கோவிலிலும் ஒன்று. மூலவர் ஸ்ரீ சக்கரபாணி பெருமாள். தாயார் விஜயவல்லி. பெருமாள் சக்கர வடிவமான தாமரைப்பூவில், அறுகோண எந்திரத்தில் மூன்று கண்களுடனும், எட்டு ஆயுதங்களை எட்டுத் திருக்கரங்களில் ஏந்தியும் காட்சி தருகிறார். மூன்று கண்களுடன் சக்கரபாணி இருப்பதால் சிவபெருமானை போல இவருக்கும், பூ , துளசி, குங்குமம் போன்றவற்றுடன் வில்வ இலைகளாலான அர்ச்சனையும் செய்யப்படுகிறது. சக்கரபாணி சுவாமிக்கென்று தனிக்கோவில் இருப்பது, இத்தலத்தில் மட்டும்தான் என்பது தனிச்சிறப்பாகும்.
தல வரலாறு
ஜலந்தராசுரன் எனும் அரக்கனை வதம் செய்ய திருமால் ஏவிய 'சக்ராயுதம்', ஜலந்தாசுரனையும் மற்ற அசுரர்களையும் வதம் செய்த பிறகு, காவிரி நதிக்கரையோரம் இருக்கும் புண்ணிய ஸ்தலமான கும்பகோணத்தில் தவம் புரிந்து கொண்டிருந்த பிரம்ம தேவரின் கைகளில் வந்து விழுந்தது. சக்தி வாய்ந்த இந்த சக்ராயுதத்தை கும்பகோணத்தில் ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்தார் பிரம்ம தேவன். இந்த சக்ராயுதத்தால் இருந்து வெளிப்பட்ட ஒளி, சூரியனின் ஒளிப்பிரவாகத்தை மிஞ்சும் வகையில் இருந்ததால் பொறாமை கொண்ட சூரிய பகவான் தனது ஒளி அளவை கூட்டிய போது, ஒட்டு மொத்த சூரிய ஒளியையும் தன்னுள் உள்வாங்கிக்கொண்டது இந்த சக்ராயுதம். தனது கர்வம் நீங்க பெற்ற சூரிய பகவான், வைகாசி மாதத்தில் மூன்று கண்கள், எட்டு கைகளுடன் அக்னிப்பிழம்பாக தோன்றிய ஸ்ரீ சக்கரபாணியின் காட்சி கிடைக்க பெற்று, இழந்த தனது ஒளியை மீண்டும் பெற்றார் சூரிய பகவான். தனது நன்றியை வெளிப்படுத்த சூரிய பகவான் கட்டிய கோவில் தான் இந்த சக்கரபாணி கோவில். சூரியன் பூசித்ததால் இத்தலம் பாஸ்கர சேத்திரம் என்றழைக்கப்படுகிது.
பிரார்த்தனை
கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் 'மகாமகம்' திருவிழாவில் கலந்து கொண்டவர்கள், அதில் பங்கேற்ற புண்ணியத்தை இந்த கோவிலின் இறைவனான சக்கரபாணிக்கே சமர்ப்பித்து வேண்டிக் கொள்வதால் நமக்கு மிகுந்த நன்மைகளை ஸ்ரீ சக்கரபாணி உண்டாக்குவார் என்பது ஐதீகம். சூரிய பகவான் வழிபட்டு நன்மையடைந்ததால், ஜாதகத்தில் சூரியனின் நிலை பாதகமாக இருப்பவர்கள் வழிபடுவதற்கான பரிகார தலமாக இருக்கிறது. உடலில் வலது கண் சூரியனின் ஆதிக்கம் நிறைந்ததாகும் வலது கண்ணில் பிரச்சனை உள்ளவர்கள், கண் பார்வை கோளாறுகள் உள்ளவர்களும் இந்த ஆலய இறைவனான ஸ்ரீசக்கரபாணியை வழிபடுவதால் மேற்கூறிய பிரச்சனைகள் நீங்கும்.
ஜாதகத்தில் ஏழரை சனி, அஷ்டம சனி, ராகு – கேது கிரகங்களின் பாதகமான நிலை போன்றவற்றால் கஷ்டங்களை அனுபவிப்பவர்கள், இங்கு வந்து வழிபட்டு நன்மைகளை பெறலாம். சுதர்சன ஹோம பூஜையை, இக்கோவிலில் செய்பவர்களுக்கு எதிரிகள் தொல்லை, துஷ்ட சக்திகள் பாதிப்பு ஆகியவை நீங்கி சுபிட்சங்கள் ஏற்படும்.
திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் கோவில்
பெருமாளின் திருநெற்றியில் தழும்பு அமைந்துள்ள திவ்யதேசம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நன்னிலம்-காரைக்கால் செல்லும் சாலையில் அமைந்துள்ள திவ்யதேசம் திருக்கண்ணபுரம் சௌரிராஜ பெருமாள் கோவில். இது பஞ்சகிருஷ்ண தலங்களில் ஒன்றாகும். இந்தக் கோவில் நீலமேகப்பெருமாள் கோவில் எனவும் அறியப்படுகிறது.
மூலவர் நீலமேகப்பெருமாள் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார். மற்ற கோயில்களில் உள்ளது போல அபயக் கரத்துடன் இல்லாமல் தானம் பெறும் கரத்துடன் உள்ளார். பக்தர்களின் துன்பங்களையெல்லாம் அவர் பெற்றுக்கொள்வார் என்பதை இது உணர்த்துவதாக உள்ளது.
இத்தலத்து உற்சவர் சௌரிராஜப் பெருமாள் என்ற பெயருடன், தலையில் முடியுடன் இருக்கிறார். அமாவாசையன்று உலா செல்லும்போது மட்டுமே திருமுடி தரிசனம் காண முடியும். ‘சவுரி’ என்ற சொல்லுக்கு ‘முடி’ என்றும், ‘அழகு’ என்றும் பொருள்கள் உண்டு. ஒவ்வொரு பெருமாள் கோவிலுக்கும் தனிச்சிறப்பு இருப்பது போல், இத்தலத்து பெருமாளின் நடை அழகு தரிசனம் மிகவும் பிரசித்தி பெற்றது.
உற்சவர் சௌரிராஜப் பெருமாளின் நெற்றியில் ஒரு தழும்பு உள்ளது அதன் பின்னணியில் ஒரு வரலாற்று நிகழ்ச்சி உள்ளது. ஒருநாள், திருக்கண்ணபுரம் திருக்கோவிலின் அரையர் வந்த போது, டில்லி சுல்தானின் படைகள், இத்திருக்கோவிலின் உயர்ந்த மதில்களை இடித்துக் கொண்டிருப்பதைக் கண்டு மனம் பதைபதைத்தார். திரும்பி, பக்கத்திலிருந்த உற்சவமூர்த்தியைப் பார்த்தபோது, பகவான் வழக்கம்போல் புன்னகை மலர சேவை சாதித்துக் கொண்டிருந்தான் . “டில்லி சுல்தானின் இந்த அட்டூழியத்தை, சிரித்த முகத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறாயே” என்று சொல்லி, கையிலிருந்த தாளத்தை எம்பெருமானை நோக்கி வீசியெறிந்தார். அது பகவானின் புருவத்தில் பட்டு ரத்தமும் கொட்டியது. உடனே அந்த ரத்தத்தைத் துடைத்து, இறைவனிடம் கதறியழுது, தன்னை மன்னித்துவிடும்படி வேண்டினார். அந்த வேண்டுதலுக்கு பலனும் உடனே கிடைத்தது. மறுநாள், டில்லி தளபதி, தனது அடுத்த இலக்காக மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலைப் படையெடுத்து அழிப்பதற்காகத் தனது வீரர்களை மதுரையம்மதிக்குச் செல்லும்படி ஆணையிட்டான். அதனால் திருக்கண்ணபுரம் திருக்கோயில் அடியோடு நாசமாவதிலிருந்து மயிரிழையில் தப்பியது. அரையர் தாளத்தை வீசியதால் சௌரிராஜப் பெருமானின் வலப்புருவத்துக்கு மேல் ஏற்பட்ட சிறு தழும்பு வடுவை இன்றும் நாம் தரிசிக்கலாம்.
சிங்காநல்லூர் உலகளந்த பெருமாள் கோவில்
வேறு எந்த தலத்திலும் இல்லாத அபூர்வ, பஞ்சலோகத்திலான மூலவர் பெருமாள் திருமேனி
கோயம்புத்தூர் மாநகராட்சியின் ஒரு பகுதியான சிங்காநல்லூரில் அமைந்துள்ளது உலகளந்த பெருமாள் கோவில். இக்கோவில் 'ஸ்ரீ த்ரி விக்கிரமநாராயண சுவாமி திருக்கோயில்' என்று மற்றொரு பெயரிலும் அழைக்கப்படுகிறது. இக்கோவில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மிகவும் பழமையான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கோயில்களில் ஒன்று. இக்கோவிலின் நுழைவாயிலில் பெரிய அளவிலான சக்கரத்தாழ்வார் மற்றும் ஆஞ்சநேயர் வாயிற்காப்பாளர்களாக காட்சியளிக்கிறார்கள்.
1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் கரிகால் சோழன் மன்னரால் கட்டப்பட்டது. போர் சம்பந்தமாக கரூர் வந்த கரிகால் சோழ மன்னன், வெள்ளலூர் வந்த போது, அருகிலுள்ள சிங்காநல்லூர் ஊரிலுள்ள மக்களின் நலன் கருதி, சிங்காநல்லூர் பகுதியை அவர்களுக்குச் சாசனம் செய்து விட்டு, இக்கோவிலையும் நிர்மாணித்தான். இது சம்பந்தமான குறிப்புகள் மூலவர் விக்கிரகத்தில் பொறிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
கருவறையில் மூலவர் உலகளந்த பெருமாள் வடக்கு நோக்கி எழுந்தருளி உள்ளார். வலது காலை தரையில் ஊன்றி, இடது காலை விண்ணை நோக்கி அருள்பாலிக்கிறார். இவர் எட்டு கைகளுடன் காட்சியளிக்கும் மூலவர், இரு கைகள் அபய முத்திரைகளுடனும், மற்ற ஆறு கைகள் ஒவ்வொன்றும் முறையே சக்கரம், கதை, அம்பராத்தூணி, வில், கேடயம், பிரயோகச் சக்கரம் ஆகியவை கொண்டு அபயம் அளிக்கும் வகையிலும் தோற்றமளிக்கிறார். இந்தப் பெருமாளின் தனிச்சிறப்பு என்னவென்றால் இவரது திருமேனி பஞ்சலோகத்தால் (ஐம்பொன்னால்)உருவாக்கப்பட்டதான். இப்படி பஞ்சலோகத்தால் உருவாக்கப்பட்ட மூலவரை நாம் எந்த கோவிலிலும் தரிசிக்க முடியாது. மேலும், உற்சவர் உலகளந்த பெருமாளும் பஞ்சலோகத்தால் உருவாக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அவருடன் உற்சவர் தாயார்கள் ஸ்ரீ தேவி, பூதேவி எழுந்தருளி இருக்கின்றனர்.
கோவிலின் தல வரலாறு
பூமியில் மன்னர் மகாபலிச் சக்கரவர்த்தி ஆணவம் கொண்டு, யாகம் வளர்த்து தானம் செய்த போது, அவரது ஆணவத்தை அகற்ற, வாமனர் (இளங்கலை பிராமணர்) அவதாரம் தரித்த மகாவிஷ்ணு, அவரிடம் தானமாக உலகில் மூன்று அடிகள் கேட்க, தன்னிடம் தானம் கேட்க வந்திருப்பவர் மகாவிஷ்ணு என்பதை அறியாத மகாபலிச் சக்கரவர்த்தி, தானமாக மூன்று அடிகளை அளந்து எடுத்துக் கொள்ளுமாறு பணிக்க, அவ்வாறே மகாவிஷ்ணு விஸ்வரூப தரிசனம் கொண்டு, முதல் படிநிலை கொண்டு பூவுலகம் முழுமையும், இரண்டாம் படிநிலை கொண்டு விண்ணுலகம் முழுமையும் ஆட்கொண்டு, மூன்றாவது படிநிலைக்கான இடத்தை மகாபலியிடம் வினவ, தன் தவறை அப்போதுதான் உணர்ந்த மகாபலி, மகாவிஷ்ணுவிடம் தன் தலைமேல் மூன்றாவது அடியை வைக்கப் பணித்து, அதனால் பாதாளம் நோக்கி வீழ்ந்தார் என்பது புராணம். மண்ணுக்கும் விண்ணுக்கும் கால்களை நோக்கிய கோலத்தில் உலகளந்த பெருமாள் ஆகவும், மகாபலிச் சக்கரவர்த்திக்கு விஸ்வரூப தரிசனம் கொடுத்து மூவுலகம் ஆட்சி புரியும் த்ரி விக்கிரமநாராயண சுவாமி ஆகவும் அருள்பாலிக்கும் இடமே சிங்காநல்லூர் பகுதியில் அமைந்துள்ள இத்திருத்தலம்.
திருவிழாக்கள்
ஓணம் பண்டிகையின் பத்து நாட்களும் இக்கோவிலில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். வைக்குண்ட ஏகாதசியின் போது சொர்க்கவாசல் திறப்பு வெகுவிமர்சையாக இங்கு கொண்டாடப்படும்.
செங்கல்பட்டு கோதண்டராமசாமி (வீர ஆஞ்சநேயர்) கோவில்
சனிபகவானை மிதித்த வண்ணம் காட்சி தரும் வீர ஆஞ்சநேயர்
செங்கல்பட்டு நகரில் அமைந்துள்ளது 1100 ஆண்டுகள் பழமையான செங்கல்பட்டு கோதண்டராமசாமி (வீர ஆஞ்சநேயர்) கோவில். கருவறையில் ராமபிரான், ஸ்ரீ பட்டாபிராமன் என்ற திருநாமத்தோடு, வீராசனத்தில் ஞான முத்திரையுடன் சீதாதேவியுடன் அமர்ந்த கோலத்தில் உள்ளார். .அருகில் லக்ஷ்மணர் நின்றபடியும் ,பரதன் ,சத்ருகன் மற்றும் ஆஞ்சநேயர் ஆகியோர் கிழே அமர்ந்தபடி உள்ளார்கள் , ராமபிரானோடு சத்ருகனும், பரதனும் உடன் இருப்பது ஒரு அரிய காட்சியாகும்.
இக்கோவிலின் வாயு மூலையில் வீர ஆஞ்சநேயருக்கு தனி சன்னதி உள்ளது. இவர் தனது வலது கரம் அபய முத்திரையுடனும், இடது கரத்தில் தாமரை ஏந்தியபடியும் தனது தனது காலால் சனி பகவானை அழுத்திய படியும் காட்சி தருகிறார் ,இது ஒரு அபூர்வமாக காணக்கூடிய தோற்றம் ஆகும். இதன் பின்னணியில் ஒரு சுவையான நிகழ்ச்சி உள்ளது.
சனிபகவானுக்குரிய பரிகார தலம்
அனுமன் சீதையைத் தேடி, சேதுக்கரையில் இருந்து இலங்கைக்கு தாவ முயன்ற போது, அவரை ஏழரை சனி காலம் நெருங்க இருப்பதால் சனிபகவான் அவரை பிடித்துக் கொண்டார். அனுமன் தான் முக்கிய காரணத்திற்காக இலங்கை செல்ல இருப்பதால், தன்னை பின்னர் பிடித்துக் கொள்ளுமாறு சனி பகவானிடம் கூறினார். சனிபகவானும் அவரை அப்போது விட்டுவிட்டார். பின்னர் வானரப் படைகள், சேதுக்கரையில் இருந்து இலங்கைக்கு கற்பாறைகளை கொண்டு பாலம் அமைத்துக் கொண்டிருந்த போது சனி பகவான் மீண்டும் வந்தார். அனுமன் சனி பகவானை தன் தலையை மட்டும் பிடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். சனியும் அவ்வாறே அனுமன் தலையை பிடித்துக் கொண்டார். ஆனால் அனுமன் பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்ததால், அவர் தலையில் தூக்கிய பாறைகளுக்கும், அனுமன் தலைக்கும் இடையில் சிக்குண்டு தவித்தார். அதனால் அனுமன் தலையில் இருந்து விடுபட்டு, அனுமன் காலை பிடிக்க முயற்சி செய்தார். அந்த நேரத்தில் அனுமன் காலால் மிதித்து தரையில் அழுத்தினார். சனிபகவான் அனுமனிடம் தன்னை விட்டுவிடும்படி மன்றாடினார். தன்னை விடுவித்த அனுமனிடம் சனி பகவான் உன் பக்தர்கள் அனைவரையும், ஏன் உங்களை ஒரு கணம் நினைப்பவர்களைக் கூட நான் பிடிக்க மாட்டேன் என்று உத்தரவாதம் அளித்தார். அனுமாரே சனிபகவானை மிதித்த வண்ணம் காட்சி தருகிறார் என்றால் அவரை தரிசித்து வழிபட்டால் சனி பகவானின் கொடூர பார்வையில் இருந்து பக்தர்களை காத்து விடிவு அளிக்கிறார் என்பது உண்மை. அதனால் தான் இத்தலம் , சனி பகவானால் ஏற்படக்கூடிய தாக்கத்திலிருந்து விடுபட வேண்டிக் கொள்ளும் சிறந்த பரிகார தலமாக விளங்குகின்றது.
ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவில்
குரு, இராகு, கேது தோஷங்களை நிவர்த்தி செய்யும் ஸ்வயம் வியக்த க்ஷேத்திரம்
பெருமாள் தானாகவே, விக்கிரக வடிவில் ஓர் இடத்தில் தோன்றினால், அதை ஸ்வயம் வியக்த க்ஷேத்திரம் என்று சொல்வார்கள். வியக்தம் என்றால் வெளிப்படுதல் என்று பொருள். ஸ்வயம் வியக்தம் என்றால் இறைவன் சுயமாகவே வெளிப்பட்ட திருத்தலம் என்று பொருள். நாங்குநேரி, திருவரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருவேங்கடம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்ரிநாத், முக்திநாத் ஆகிய எட்டுத் திருத்தலங்களும் ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்களாகும். ஸ்ரீமுஷ்ணம், கடலூர் மாவட்டத்தில், விருத்தாசலத்தில் இருந்து 24 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. ‘முஷணம்’ என்றால் நமக்குத் தெரியாமல் அபகரித்துச் செல்லுதல் என்று பொருள். இந்தத் திருத்தலத்துக்கு வரும் அடியார்களின் பாபங்களை எல்லாம் அவர்களுக்கே தெரியாமல் இவ்வூர் அபகரித்து விடுவதால் (முஷணம் செய்வதால்) இவ்வூர் ‘ஸ்ரீமுஷ்ணம்’ என்று பெயர் பெற்றது.
மகாவிஷ்ணு, வராக (காட்டுப்பன்றி) அவதாரம் எடுத்து, இரண்யாட்சன் என்ற அசுரனிடமிருந்து பூமியை மீட்டார். கடலுக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த பூமியை, தன்னுடைய இரண்டு கோரைப் பற்களில் தாங்கியபடி மேல் எழுந்து வந்து, மீண்டும் வான்வெளியில் நிலைபெறச் செய்தார் என்பது புராண வரலாறு. தனது ஒரு விழிப் பார்வையால் அரச மரத்தையும், மறு விழிப் பார்வையால் துளசிச் செடியையும் உருவாக்கினார். அவர் உருவாக்கிய அரசமரம், இந்த ஆலயத்தின் பின்புறம் உள்ள நித்ய புஷ்கரணி திருக்குளத்தின் தென்கரையில் உள்ளது. இதுவே தலவிருட்சமாகவும் விளங்குகிறது.
கருவறையில், மேற்கு நோக்கியபடி பூவராக சுவாமியின், திருமேனி இருந்தாலும், அவரது முகம் தெற்கு பார்த்து இருக்கிறது. வழக்கமாகச் சங்கு, சக்கரம் ஏந்தி நான்கு திருக்கரங்களுடன் காட்சி தரும் மகாவிஷ்ணு, இங்கு வராக மூர்த்தியாக இரண்டு கரங்களுடன், அதுவும் இடுப்பில் கையை வைத்தபடி எழிலான தோற்றத்துடன் காணப்படுகிறார். அவருடன் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் இருப்பது மேலும் சிறப்பானதாகும். இங்குள்ள மூலவரின் திருமேனி, முழுவதும் சாளக் கிராமத்தினால் ஆனது. பன்றிக்கு மிகவும் விருப்பமானதான கோரைக் கிழங்கு இப்பெருமாளுக்குச் சிறப்பு பிரசாதமாக நிவேதனம் செய்யப்படுகிறது. இப்பிரசாதத்திற்கு, முஸ்தாபி சூரணம் என்று பெயர்.
பூவராக பெருமாளை வணங்குவோர் சிறந்த வாக்கு வன்மை, பெரிய பதவி, நிலைத்த செல்வம், மக்கட்பேறு, நோயற்ற வாழ்வு, நீண்ட ஆயுள் ஆகியவற்றை பெற்று வையத்தில் வாழ்வாங்கு வாழலாம் என்று புராணங்களும் மந்திர சாஸ்திரங்களும் சொல்கின்றன. குரு, இராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இங்கு வணங்கினால் அத்தகைய தோஷம் நிவர்த்தி ஆகும். தவிர புதிய வாகனங்கள் வாங்குவோர் இத்தலத்துக்கு கொண்டு வந்து அர்ச்சனை செய்வது வழக்கமாக உள்ளது. இதற்கு வாகனம் படைத்தல் என்று கூறுகிறார்கள். தவிர விபத்துக்குள்ளான வாகனங்களை ரிப்பேர் செய்த பின்பு இங்கு ஓட்டி வந்து பூவராக பெருமாளிடம் வழிபட்ட பின்னர் ஓட்டுகின்றனர்.
எண்கண் ஆதிநாராயணபெருமாள் கோவில்
மூலஸ்தானத்தில் பெருமாள் கருட வாகனத்தின் மீது எழுந்தருளியிருக்கும் அபூர்வக் காட்சி
திருவாரூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள எண்கண் தலத்தில் அமைந்துள்ளது, ஆதிநாராயண பெருமாள் கோவில்.
பொதுவாக, பெருமாள் கோவில்களில் பெருமாள் நின்ற, இருந்த, கிடந்த என்ற மூன்று நிலைகளிலும், சிறப்பம்சமாக நடந்த நிலை எனப்படும் திரிவிக்ரம அவதார நிலையிலும் தரிசனம் தருவார். பெருமாளின் எதிரே பெரிய திருவடியான கருடாழ்வார், நின்ற நிலையில் கைகூப்பியபடி காட்சி தருவார். திருவிழாக் காலங்களில் உற்ஸவ மூர்த்திகள் மட்டும் கருடாழ்வாரின் மீதேறி கருட வாகனராக சேவை சாதிப்பார்.
ஆனால் இந்த எண்கண் திருத்தலத்தில், பெருமாளின் நித்யகருட சேவையை தினமும் தரிசிக்கும் வகையில், மூலஸ்தானத்தில் பெருமாள் கருட வாகனத்தின் மீது அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். இதுபோன்று மூலஸ்தானத்தில் பெருமாள் கருட வாகனத்தின் மீது அமர்ந்த கோலத்தில் உள்ள அமைப்பை வேறு எங்கும் காண்பது அரிது. இங்கே கருடாழ்வாரும் பெருமாளும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டிருப்பது சிறப்பம்சம். உற்சவர் ஆதிநாராயணப்பெருமாள் பிரயோகச்சக்கரம் ஏந்தி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கிறார்.
ஒருசமயம் பிருகு முனிவர் இத்தலத்தில் பெருமாளைக் குறித்து தவம் இருந்தார். அச்சமயம் சிங்க வேட்டைக்கு வந்த சோழ மன்னன் படைகள் எழுப்பிய கூச்சலால் அவர் தவம் கலைந்தது. அதனால் சோழ மன்னனின் முகம் சிங்க முகமாக மாற சபித்து விட்டார். தனது செயலை எண்ணி வருந்திய மன்னன், தனக்கு சாப விமோசனம் அளிக்கும்படி முனிவரை வேண்டினான்.
மனம் இரங்கிய பிருகு முனிவர், 'தைப்பூசத் திருநாளில், விருத்த காவேரி என்று அழைக்கப்படும் வெட்டாற்றில் நீராடி, எண்கண் எனப்படும் இந்தத் தலத்தில் அமர்ந்து பெருமாளை நோக்கி தவமிருந்து வழிபட்டால், அப்போது, பெருமாள் கருடன் மீதமர்ந்து காட்சி தருவார். மயில் மீது முருகனும் அமர்ந்து காட்சி தர, சாப விமோசனம் கிட்டும். அதன்பின்னர்,பெருமானுக்கு சிம்ம, ரிஷப, மயூர, அன்ன, மேஷ வாகானாதிகள் உள்பட 108 வாகனங்கள் அமைத்து பெருவிழாவை நடத்த வேண்டும்' என்றார். அதன்படி சோழனும் பெருமாளை நினைந்து மனமுருகி வழிபட்டு வந்தான்.
சோழ மன்னனின் வேண்டுதலுக்கு உடனே செவி சாய்க்கும் விதத்தில், பெருமாள் கருட வாகனத்தில் பறந்து வந்து சோழ மன்னனுக்கு காட்சி தந்து அருள்புரிந்தார். முருகனும் மயில் மீது அமர்ந்து சோழ மன்னனுக்கு காட்சி தந்து அருள்புரிந்தார். அதன்மூலம், மன்னனின் சிங்க முகம் மாறி பழைய நிலை அடைந்தான்.
சோழனுக்கு பெருமாள் கருட வாகனத்தில் காட்சி கொடுத்த அதே அமைப்பில் சோழ மன்னன் பெருமாளுக்கு இங்கே கோயில் எழுப்பினானாம். எனவே இங்கே கருவறையில் மூலவர் பெருமான் கருட வாகனத்தில் அமர்ந்த நிலையில் நித்திய கருடசேவையாக பக்தர்களுக்குக் காட்சி தந்து கொண்டிருக்கின்றார்.
மிருகசீரிஷ நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கோவில்
பெருமாளின் அருளால் அரசனுக்கு மிருக முகம் நீங்கி, பழைய முகம் கிடைத்ததன் காரணமாக இத்தலம் மிருகசீர்ஷ நட்சத்திரக்காரர்களின் தோஷம் போக்கும் பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தமது வாழ்நாளில் அடிக்கடியோ, அல்லது மிருகசீரிட நட்சத்திரத்தன்றோ இத்தல பெருமாளை வழிபாடு செய்தால், உடனே கருட வாகனத்தில் தோன்றி மிருக சீரிட நட்சத்திரக்காரர்களின் நட்சத்திர தோஷத்தை நீக்குவதாக ஜதீகம்.
படிப்புக்கேற்ற வேலை கிடைக்காதவர்கள், நல்ல சம்பளத்துடன் கூடிய உயர் பதவி வேண்டுபவர்கள், புதன், சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும்.
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், திருமணத்தில் தடை உள்ளவர்கள், நாக தோஷம், பட்சி தோஷம் உள்ளவர்கள் , தோல் நோயால் பாதிக்கப்பட்வர்கள், பகைவர்களால் பாதிக்கப்பட்டவர்கள், பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர நினைப்பவர்கள், அடிக்கடி மரண சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் தொந்தரவுகள், பவுர்ணமி மற்றும் மிருகசீரிட நட்சத்திர நாட்களில் இங்கு வழிபாடு செய்ய வேண்டும்.