மகாலட்சுமியின் முக்கிய சிறப்புகள்
மகாலட்சுமி
மகாலட்சுமியின் முக்கிய சிறப்புகள்
மகாலட்சுமிக்கு ஈஸ்வரி, ஹரண்யமயி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரிணி, சந்திரா என்ற பெயர்களும் உண்டு.
லட்சுமி மாதுளம் கனியிலிருந்து உதித்ததால் மாதுளங்கி என்றும், பத்மாசனால் வளர்க்கப்பட்டதால் பத்மா என்றும், அக்னி குண்டத்தில் வாசம் செய்ததால் அக்னிகர்ப்பை என்றும், ரத்தின வடிவம் எடுத்ததால் ரத்தினாவதி என்றும், ஜனக மகாராஜனுக்கு மகளானதால் ஜானகி என்றும், பூமிக்குள்ளே கலப்பையின் நுனியிலிருந்து வெளியேற்றப்பட்டமையால் சீதை என்றும், பாற்கடலிலிருந்து தோன்றியதால் ஸ்ரீ என்றும் போற்றப்படுகிறாள்.
ஸ்ரீ மகாலட்சுமிக்கு இரண்டு ரூபங்கள் உண்டு. ஒன்று ஸ்ரீதேவி என்ற லட்சுமி. மற்றொன்று பூதேவி என்ற பூமிதேவி வடிவம்.
மகாவிஷ்ணுவுடன் இருக்கும் பொழுது லட்சுமிக்கு இரண்டு கரங்கள். ஆனால் தனியாக சன்னதியிலோ அல்லது தனிக் கோவிலிலோ நான்கு கரங்கள் கொண்டவள். முன் இரு கரங்கள் அபய வரத ஹஸ்தங்கள். பின் இரண்டு கரங்களில் தாமரை மலர் ஏந்தி இருப்பாள்.
திருமால் கோவில்களில் பகவானுடைய மார்பில் உள்ள லட்சுமிக்கு யோகலட்சுமி என்றும், இருபக்கமும் உள்ள தாயாருக்கு போகலட்சுமி என்றும், தனிச்சன்னதியில் அருள்புரிபவளுக்கு வீரலட்சுமி என்றும் பெயர்.
லட்சுமியின் பெருமையை ஸ்ரீசூக்தம், ஸ்ரீசுதுதி, கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டகம், அஷ்டோத்திர சதநாமாவளி ஸ்தோத்திரம் போன்றவை விளக்குகின்றன.
சுக்கிரனின் அதிதேவதை மகாலட்சுமி. எனவே வெள்ளிக்கிழமைகளில் சூரியன் உதயமான இரண்டு மணி நேரத்திற்குள் மகாலட்சுமியை பூஜிப்பது, தரிசனம் செய்வது ஆகியவை மகாலட்சுமியின் அருள் பெற உதவும்.
மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். மகாவிஷ்ணுவிற்குப் பிடித்த துளசி, லட்சுமியின் அம்சம் ஆகும். வீட்டில் துளசி மாடம் வைத்து தினமும் அதை சுற்றி வந்து வழிபட்டு வந்தால் எல்லாச் செல்வங்களும் கிடைக்கும். வாழை, மாவிலை, எலுமிச்சம்பழம் ஆகியவைகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அதனால்தான் சுபகாரியங்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன. லட்சுமிக்கு பிரியமான பூ செவ்வந்தி எனப்படும் சாமந்திப்பூ.
பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். இதனால் கோவில்களில் காலையில் கோபூஜை செய்தபின் தரிசனம் ஆரம்பமாகிறது. யானையின் முகத்திலும், குதிரையின் முகத்திலும் லட்சுமி வாசம் செய்கிறாள்.
பூரணகும்பம், மஞ்சள், குங்குமம், திருமண் சூர்ணம், கோலம்,சந்தனம், வாழை, மாவிலை தோரணம், வெற்றிலை,திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் ஆகிய மங்கள பொருட்களில் மகாலட்சுமி நித்தியவாசம் புரிகிறாள். வில்வ மரம், நெல்லி மரம், துளசி, மஞ்சள் செடிகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.
குபேரனிடம் செல்வம் இருந்தாலும் அத்துடன் புகழ், ஆரோக்கியம், நல்வாழ்வு போன்ற பல செல்வங்களை உரியவர்களுக்கு வாரி வழங்குபவள் ஸ்ரீ மகாலட்சுமியே.
லட்சுமி செல்வத்தின் அதிபதி. தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்வதால் செல்வம் இரட்டிப்பாக பெருகும். தீபாவளியன்று அதிகாலை மட்டும் மகாலட்சுமி நல்லெண்ணையில் வாசம் செய்கிறாள்.
அதிகாலையிலும், மாலையிலும் வீட்டில் பெண்கள் விளக்கேற்றி வைத்து லட்சுமியை வரவேற்க லட்சுமி சுலோகங்கள், அஷ்டகம் போன்றவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தால் லட்சுமியின் அருள் கிடைக்கும்.
லட்சுமி பூஜை செய்யும் போது, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நாம் எப்படி உற்சாகமாக வரவேற்போமோ, அதே மாதிரி வாசலில் நின்று லட்சுமியை பாவனை செய்து அழைக்க வேண்டும். லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும்.
வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள். வரலட்சுமி விரத பூஜை செய்தால் உடனடியாக திருமண யோகம் கைகூடும். மகாலட்சுமி நித்திய சுமங்கலி என்று அழைக்கப்படுகிறாள். எட்டு விதச் செல்வங்களை தருவதுடன் தாலிப் பாக்கியத்தையும் வரலட்சுமி வழங்குகிறாள். இதனால் தான் மணமான பெண்கள் மகாலட்சுமியை போற்ற, வரலட்சுமி விரதத்தை மேற்கொள்ளுகின்றனர்.
மகாலட்சுமிக்கு உகந்தது நெய் விளக்காகும்.சகலவித செல்வத்தையும், வீட்டில் நலனையும் தருவது நெய் விளக்கு வழிபாடுதான்.
தலைமுடியின் முன் வகிட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதால், திருமணமான பெண்கள் முன்வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்கின்றனர்.
வெள்ளிகிழமையில் மருதாணியை ஸ்ரீமகாலஷ்மியை மனதில் நினைத்துக் கொண்டு கையில் அணிந்துக்கொண்டால், எந்த துன்பங்களும் நெருங்காது. ஸ்ரீமகாலஷ்மியின் அருளாசியும் பரிபூரணமாக கிடைக்கும்.
நெல்லிமரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் துவாதசியன்று நெல்லிக்கனியை உணவில் சேர்த்துக் கொண்டால் ஏகாதசி விரதத்தின் பலன் கிடைக்கும். ஆதி சங்கரருக்கு துவாதசியன்று நெல்லிக்கனி தானம் செய்த பெண்மணிக்கு, அவர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி லட்சுமி அருளால் பெருஞ்செல்வம் கிடைக்கச் செய்தார்.
      
      மும்பை மஹாலக்ஷ்மி கோவில்
சகல செல்வங்களையும் அருளும் மகாலட்சுமி
மும்பையின் மஹாலக்ஷ்மி பகுதியில் அமைந்துள்ளது மகாலட்சுமி கோவில். மும்பை மகாலட்சுமி கோவிலில் மகாகாளி, மகாசரஸ்வதி, மஹாலக்ஷ்மி ஆகிய மூன்று தேவியரும் எழுந்தருளி இருக்கின்றனர். முப்பெருந்தேவியரில் மஹாலக்ஷ்மி நடுநாயகமாக வீற்றிருக்கின்றாள். அதனால் இக்கோவில் அவரது பெயரால் அழைக்கப்படுகிறது. மூன்று தேவியரும் கைகளில் தங்க வளையலும், தங்க மூக்குத்தியும், கழுத்தில் முத்து மணி மாலையும் அணிந்து காட்சி தருகிறார்கள்.
முற்காலத்தில் அன்னியர் படையில் இருந்து காப்பாற்றுவதற்காக, மூன்று தேவிகளின் சிலைகளை வொர்லி சிற்றோடைக்கு (Worli Creek) அருகில் கடலில் போட்டுவிட்டார்கள். பின்னர், பிரிட்டிஷ் ஆட்சியின் போது, கவர்னர் வில்லியம் ஹார்ன்பி (Governor Lord Horneby ) என்பவர் வொர்லி-மல்பார் ஹில் ஆகிய இரண்டு தீவுகளையும் இணைக்க முடிவு செய்தார். இந்தத் தீவுகளை இணைக்கும் பணி ஸ்ரீ ராம்ஜி சிவ்ஜி பிரபு என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. தீவுகளை இணைக்க இரு வழி சாலை திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் கடல் அலைகள் காரணமாக, அவர்கள் எழுப்பிய தடுப்பு சுவர் சரிந்து விழுந்து திட்டத்தை அவர்களால் முடிக்க முடியவில்லை.
ஒரு நாள் இரவு ஸ்ரீ மகாலக்ஷ்மி தேவி, ஸ்ரீ ராம்ஜி சிவ்ஜி பிரபுவின் கனவில் தோன்றி, வோர்லி சிற்றோடையில் மூழ்கியுள்ள மூன்று தேவிகளின் சிலைகளையும் வெளியே எடுத்து மலையின் உச்சியில் வைக்கும்படி கூறினார். அவற்றைக் கடலிலிருந்து வெளியே எடுத்து வந்து குன்றின் மேல் கோவில் கட்டி வைப்பதாக தேவியிடம் வாக்குக் கொடுத்தார்.
அதன்படி, வொர்லி சிற்றோடை மற்றும் மல்பார் மலை சிற்றோடையை இணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த குழுவினர், வொர்லி சிற்றோடையிலிருந்து மூன்று தேவிகளின் சிலைகளையும் வெளியே எடுத்தனர். அதன் பிறகுதான் அவர்களால் இரண்டு சிற்றோடைகளையும் இணைக்க முடிந்தது. இந்த வேலை முடிந்ததும், பொறியாளர் ஸ்ரீ ராம்ஜி சிவ்ஜி பிரபு ஆங்கிலேய ஆட்சியாளரிடமிருந்து பரிசாக மலையின் மீது நிலத்தைப் பெற்றார். பின்னர் அவர் மலையின் உச்சியில் ரூ.80,000/- செலவில், 1761 A.D. - 1771 A.D க்கு இடைபட்ட காலத்தில், மகாலட்சுமி கோவிலைக் கட்டினார்.
      
      திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில்
பக்தர்களுக்கு சுகங்களை வாரி வாரி வழங்கும் பத்மாவதி தாயார்
கீழ்த் திருப்பதிக்கு அருகே 5 கி.மீ தொலைவில் உள்ளது திருச்சானூர் பத்மாவதி கோவில். பக்தர்களுக்கு சுகங்களை வாரி வாரி வழங்குவதால், திருச்சானூர், சுகபுரி எனப்படுகிறது. வைகுண்டத்தில் நாராயணின் திருமார்பில் உறையும் மகாலட்சுமியே திருச்சானூரில் பத்மாவதி தேவியாய் அருள்கிறாள். ஆகாசராஜன் எனும் சோழ மன்னனுக்கும், தரணி தேவிக்கும் மகளாக பிறந்து வெங்கடாசலபதி என்ற திருமாலின் அவதாரத்தின் போது அவருக்கு மனைவியும் ஆனவர். இவருக்கு அலர்மேல் மங்கை தாயார் என்ற பெயரும் உண்டு.
அலர் என்றால், தாமரை. மேலு என்றால், வீற்றிருப்பவள். இதையே, பத்மாவதி என்கின்றனர். பத்மம் என்றாலும், தாமரை என்று பொருள். வதி என்றால், வசிப்பவள். ஆக, தாமரையில் வீற்றிருப்பவள் என்பது இந்தச் சொல்லின் பொருள். செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் லட்சுமியே, பத்மாவதியாக பூலோகத்தில் அவதாரம் செய்தாள். பத்து ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த சிறப்புடையவள் அலர்மேல்மங்கைத் தாயார். திருமலையில் ஸ்வஸ்திவசனம் எனும் சமஸ்கிருத வரவேற்பை தினமும் வேங்கடவனுக்கு சமர்ப்பிக்கிறார்கள். அதில், 'உன்னுடன் அந்தர்யாமியாக உள்ள அலர்மேல்மங்கைக்கும் நல்வரவு' என்று ஒரு சொற்றொடர் உண்டு. திருமலை நாயகனோடு ஒன்றிய நிலையில் அலர்மேல்மங்கை இருக்கிறாள் என்பது இதனால் தெளிவாகிறது. தினமும் இரவில் திருமலையிலிருந்து திருவேங்கடவன் இறங்கி வந்து அலர்மேல் மங்கைத் தாயாருடன் ஏகாந்தமாக இருந்து விட்டு பின் விடிவதற்குள் திருமலைக்குச் செல்வதாக ஐதீகம்.
பத்மாவதி-ஸ்ரீநிவாசன் திருமண வைபவத்தில், கறிவேப்பிலையால் ஏற்பட்ட ஊடல்
மகாலட்சுமி, திருமலையில் திருவேங்கடவனின் திருமார்பில் குடியேறவும் தனது அம்சமான பத்மாவதி கீழ்த் திருப்பதியில், திருச்சானூரில் எழுந்தருளுமாறும் வரம் பெற்றதாக வரலாறு. பத்மாவதி - ஸ்ரீநிவாசன் திருமணச் செலவுக்குப் பணம் இல்லாததால், ஸ்ரீநிவாசன் குபேரனிடம் ஒரு கோடியே பதினான்கு லட்சம் ராமநிஷ்காம பொற்காசுகளை கடனாகப் பெற்று கலியுகம் முடியும் வரை கடனுக்கு வட்டி செலுத்துவதாக வாக்களித்தார் . பத்மாவதியை தரிசிப்பவர்கள் வேங்கடவன் ஆணைப்படி சகல செல்வங்களும் கிட்ட, அதில் ஒரு பகுதியை வேங்கடவனுக்குக் காணிக்கையாக செலுத்துகின்றனர். வட்டியை அளந்து கொடுக்கும் பொறுப்பை ஏற்ற கோவிந்தராஜப் பெருமாளை இன்றும் காசு அளக்கும் படியுடன் கீழ்த் திருப்பதியில் தரிசிக்கலாம். கல்யாண விருந்து தயாரானவுடன் ஸ்ரீநிவாசரின் யோசனைப்படி அந்த பிரசாதங்களை அஹோபிலம் நரசிம்மருக்கு, இருவரும் அந்த திசை நோக்கி வைத்து நிவேதித்தார்களாம்.
பத்மாவதி-ஸ்ரீநிவாசன் திருமண வைபவம் சிறப்பாக நடந்தேறியது என்று சீனிவாசனின் தாயார் வகுளாதேவி கர்வம் அடைந்தார். அவரது கர்வத்தை அடக்க நினைத்த நாரதர், பத்மாவதி தாயாரிடம் சென்று திருமணத்தில் கருவேப்பிலையும், கனகாம்பரம் மலரும் சேர்க்கப்படவில்லை என்று தெரிவித்தார். இதனால் திருமணத்திற்கு பின்னர் பெருமாளுக்கும், பத்மாவதி தாயாருக்கும் ஊடல் ஏற்பட்டது. இந்த ஊடல் பெரிதாகி, பத்மாவதி தாயார் பெருமாளை விட்டுப் பிரிந்து சென்று திருச்சானூரில் தனிக்கோயில் கொண்டு எழுந்தருளினாள். இதனால்தான் திருமலை கோவிலில் இன்றும் கனகாம்பர மலரையும், கறிவேப்பிலையையும் எதற்கும் சேர்ப்பதில்லை.
திருச்சானூருக்கு அருகில் உள்ள கல்யாண வனத்தில் பத்மாவதித் தாயார் திருமணத்திற்காக மஞ்சள் அரைத்த யந்திரக் கல்லை இன்றும் காணலாம். கார்த்திகை மாதத்தில் தாயாருக்கு குங்குமத்தால் செய்யப்படும் லட்சார்ச்சனை வைபவம் தனிச் சிறப்புடையது. 'வைகரீ ரூபாய அலர்மேல்மங்காய நமஹ' எனும் மந்திரம் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் துயிலெழுகையில் இந்த மந்திரத்தை கூறினால் அன்று முழுதும் பத்மாவதி தேவியின் அருள் கிட்டும் என்பது ஐதீகம்.
திருமலை வேங்கடவனை தரிசிக்கும் முறை
திருமலை வேங்கடவனை தரிசிக்கும் முன், முதலில் கீழ்த் திருப்பதியில் கோவிந்தராஜப் பெருமாள், பிறகு அலர்மேல்மங்கைத் தாயார், அதற்குப்பின் திருமலை புஷ்கரணிக் கரையில் உள்ள வராகமூர்த்தி, அதன் பின்னரே வேங்கடவன் தரிசனம் என்பதுதான் இங்கு வழிபடு மரபு என்பார்கள்.
      
      வரலட்சுமி விரதம்.
சகல செல்வங்களையும் அள்ளித் தரும் வரலட்சுமி அம்மன்
சுமங்கலி பெண்கள் தங்கள் தாலி பாக்கியத்திற்காகவும் மற்றும் குடும்ப சுபிட்சத்திற்காகவும், மகாலட்சுமிக்கு செய்யும் வழிபாட்டு பூஜையே இந்த வரலட்சுமி விரதம் ஆகும். ஒரு காலத்தில் மகத தேசத்தில், குண்டினபுரம் என்ற ஊரில் சாருமதி என்பவள் வசித்து வந்தாள். அவள் நல்ல குணங்களையும் நற்பண்புகளையும் பெற்றிருந்தாள். தன் கணவருக்கும் அவரின் பெற்றோருக்கும் பணிவிடை செய்வதையே தன் முதல் கடமையாகக் கொண்டிருந்தாள். அவள் குடும்பம் வறுமையில் வாடினாலும், இறைவனிடத்தில் மிகுந்த பக்தி செலுத்தினாள். சாருமதியின் மிகுந்த பக்தியைக் கண்டு மகிழ்ந்த மகாலட்சுமி, ஒரு நாள் அவள் கனவில் தோன்றி, 'உன்னுடைய பக்தி என்னை நெகிழச் செய்து விட்டது. நீ என்னை பூஜித்து வழிபாடு செய். அதனால் உனக்கு சகல செல்வங்களும் வந்து சேரும்' என்று கூறி மறைந்தாள். மகாலட்சுமி கூறியபடி சாருமதி மேற்கொண்ட விரதமே, வரலட்சுமி விரதம் ஆகும். இந்த விரதத்தினால் சாருமதி சகல சௌபாக்கியங்களையும் அடைந்து சிறப்புற வாழ்ந்தாள்.