திருக்கண்டியூர் பிரம்மசிரகண்டீசுவரர் கோவில்
பிரம்மாவும் அவருடைய மனைவி சரஸ்வதியும் தம்பதி சமேதராக எழுந்தருளி இருக்கும் அபூர்வ காட்சி
திருவையாற்றில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலை வழியில் சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் திருக்கண்டியூர். திருவையாறு மற்றும் அதைச் சுற்றியுள்ள சப்த ஸ்தான கோவில்களில் இத்தலமும் ஒன்று. சிவபெருமானின் அட்டவீரட்டானத் தலங்களில் முதலாவது தலம் இது. இறைவன் திருநாமம் பிரம்மசிரகண்டீசுவரர். இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை. இங்கு பிரம்மதேவரின் அகந்தையை அகற்ற சிவபெருமான் அவரின் தலையை அகற்றி தண்டித்ததால், ‘சீரகண்டீஸ்வரர்’ என்ற திருநாமம் பெற்றார்.
இக்கோவிலில் பிரம்மதேவர் தவமிருந்து சிவனிடம் சாப விமோசனம் பெற்றார். இங்கு சரஸ்வதியுடன் பிரம்மாவிற்கு சன்னதி உள்ளது.மற்ற கோவில்களில் பிரம்மாவிற்கு தனி சந்நிதி அல்லது கோஷ்டத்தில் வீற்றிருக்கும் நிலையில், இங்கு பிரம்மாவும் அவருடைய மனைவி சரஸ்வதியும் ஒன்றாக தம்பதி சமேதராகக் காட்சியளிப்பது, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத காட்சியாகும். பிரம்மா சரஸ்வதியுடன் தம்பதி சமேதராக, புன்னகை தவழும் கோலத்தில் காட்சியளிக்கிறார், அவரது கரங்களில் பூ மற்றும் ஜெபமாலைகள் இருக்கின்றன.
இந்த தலத்தில் தரிசனம் செய்தால் பிரம்மா தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. தலையெழுத்து சரியில்லை என வருந்துவோர் பிரம்மாவிற்கும், படிப்பில் சிறப்பிடம் பெற விரும்புவோர் சரஸ்வதிக்கும் வெண்ணிற ஆடை அணிவித்து, தாமரை மலர் வைத்து வழிபடுகிறார்கள். பிரம்மா, நவக்கிரகங்களில் கேதுவிற்கு அதிபதி, குரு பகவானுக்கு ப்ரீத்தி தேவதையாகத் திகழ்கிறார். குரு பலன் இருந்தால்தான் திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்கும். கேது பலன் நன்றாக இருந்தால் ஞானம் உண்டாகும். எனவே, இந்த பலன்கள் கிடைக்க பிரம்மா சன்னதியில் நெய் தீபமேற்றி வேண்டிக் கொள்கிறார்கள்.
பரங்கிப்பேட்டை முத்துக்குமார சுவாமி கோவில்
பிரம்மா அமர்ந்த கோலத்தில் கை கூப்பி வணங்கி நிற்கும் அரிய காட்சி
சிதம்பரம்-கடலூர் சாலையில் (புதுச்சத்திரம் மற்றும் பி.முட்லூர் வழியாக) 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பரங்கிப்பேட்டை முத்துக்குமார சுவாமி கோவில். 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது இக்கோவில். மூலவர் முத்துக்குமார சுவாமி சன்னதிக்கு வலதுபுறம் விசுவநாதர் சன்னதியும், அருகில் தென் திசை நோக்கி விசாலாட்சி அம்பிகை சன்னதியும் இருக்கின்றது.
இக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் பிரம்மா மிகவும் விசேஷமானவர். பொதுவாக சிவன் கோவில்களில் கருவறை சுற்றுச்சுவரில் பிரம்மா, நின்ற நிலையில்தான் இருப்பார். ஆனால் இக்கோவிலில் பிரம்மா, அமர்ந்த கோலத்தில் இரண்டு கைகளையும் கூப்பி, வணங்கிய நிலையில் இருக்கிறார். ஓம் என்னும் பிரணவ மந்திரத்துக்கு பொருள் தெரியாததால் முருகனால் தண்டிக்கப்பட்ட இவர் தன்னை விடுவிக்கும்படி கேட்பதாக ஐதீகம். பிரம்மாவின் இந்த கோலத்தை நாம் வேறு எந்த கோவிலிலும் தரிசிக்க முடியாது.
கூலநாய்க்கன்பட்டி மலையாண்டி சுவாமி கோவில்
கருவறையில் பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான் ஆகிய மூவரும் இருக்கும் அரிய காட்சி
நான்கு முகங்களுக்கு பதிலாக ஒரே முகத்துடன் காட்சி அளிக்கும் பிரம்மாவின் அபூர்வ தோற்றம்
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கூலநாய்க்கன்பட்டி எனும் ஊர். இந்த ஊரில் மலையாண்டி சுவாமி கோவில் என்னும் மிகவும் பழமை வாய்ந்த கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் கருவறையில், மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான் ஆகிய மூவரும் எழுந்தருளி உள்ளார்கள். இப்படி மும்மூர்த்திகளும் ஒரே கருவறையில் இருப்பது, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத ஒரு அரிய காட்சியாகும்.
கருவறையில் சிவபெருமான் பத்மாசனத்தில் அமர்ந்த நிலையிலும், சிவனுக்கு இடதுபுறம் திருமாலும், வலது புறம் பிரம்மாவும் காட்சி தருகின்றனர். நான்கு தலைகளுடன் நான்முகன் என்ற பெயரில் அருளும் பிரம்மா, இக்கோவிலில் ஒரே ஒரு தலையுடன், நான்கு கைகளுடன் புடைப்புச் சிற்பமாக காட்சி அளிக்கிறார். பிரம்மாவின் வலக்கையில் அபய முத்திரையும், இடக்கையில் கமண்டலமும், பின் வலக்கையில் தர்ப்பைப் புல் கட்டும், மற்றொரு கையில் வேள்விக் கரண்டியும் உள்ளன.
நம் நாட்டில் பிரம்மாவுக்கு என்று தனி கோவிலோ அல்லது கோவில்களில் தனிச்சன்னிதியோ இருப்பது மிகவும் அரிது. அப்படிப்பட்ட நிலையில், இக்கோவிலில் பிரம்மா ஒரு அபூர்வமான தோற்றத்தில் எழுந்தருளி இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.