
திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவில்
மருத்துவச்சி அம்மன் என்று போற்றப்படும் பாகம்பிரியாள்
ராமநாதபுரம் மாவட்டம், தேவாரப் பாடல் பெற்ற தலமான திருவாடானையிலிருந்து 11 கி. மீ. தொலைவில், தொண்டி கடற்கரை அருகே திருவெற்றியூர் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது பாகம்பிரியாள் கோவில். இறைவன் திருநாமம் வல்மீக நாதர். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். இந்த கோவில் பழமை வாய்ந்ததும், விஷம் முறிக்கும் திருத்தலமாகவும் கருதப்படுகிறது.
தீராத நோய்களையும் தீர்ப்பவளாக அருளுவதால் இத்தலத்து அம்பிகை பாகம் பிரியாளை 'மருத்துவச்சி அம்மன்' என்றும் அழைக்கிறார்கள். விவசாயிகள் தங்கள் நிலத்தில் பணி துவங்கும் முன், விதை நெல்லை பாகம்பிரியாள் சன்னதியில் வைத்து பூஜித்துச் செல்கின்றனர். முதலில் அறுவடை செய்யும் நெல்லையும் இவளுக்கு காணிக்கையாகச் செலுத்துகின்றனர். இப்பகுதியில் யாரேனும் விஷப்பூச்சிகளால் கடிபட்டால், அவர்களை கோயிலுக்கு கொண்டு வருகின்றனர். அவர்களை கோவில் எதிரேயுள்ள வாசுகி தீர்த்தத்தில் மூழ்கச்செய்து, மண்டபத்தில் படுக்க வைத்து, அம்பிகைக்கு அபிஷேகம் செய்த தீர்த்த பிரசாதம் தருகின்றனர். தற்போதும் இந்த வழக்கம் நடைமுறையில் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களை தீர்த்தக்குளத்தில் அமுக்கி குளிக்க வைப்பதால், 'அமுக்கிப் போட்டா சரியாப்போகும்' என்று சொல்லும் வழக்கம் உள்ளது.
இக்கோவிலில் வியாழக்கிழமை இரவு தங்கி, வெள்ளிக்கிழமை காலையில், கோவில் முன் உள்ள வாசுகி தீர்த்தத்தில் நீராடி, பாகம்பிரியாள் உடனுறை பழம்புற்றுநாதர் எனும் வல்மீகநாதரை வழிபடுவதால் தோல் நோய்கள், விஷக்கடிகள் நீங்கும் என்பது ஐதீகம். இத்தலத்து அம்பிகையை வணங்கி தீர்த்தம் பருகினால் புற்றுநோய் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பெண்களுக்கான பிரார்த்தனை தலம்
பெண்களின் பிரச்னைகளுக்கான பிரதான பிரார்த்தனை தலம் இது. திருமணம், குழந்தை பாக்கியம், ஆரோக்கியம் என எதற்காகவும் இங்கு வேண்டிக்கொள்ளலாம். இங்கு வழிபடும் பக்தைகள் 'தங்கி வழிபடுதல்' என்னும் சடங்கைச் செய்கிறார்கள். வியாழனன்று மாலையில் அம்பிகையை வணங்கி, அன்றிரவில் கோயிலிலேயே தங்கி விடுகின்றனர். மறுநாள் வாசுகி தீர்த்தத்தில் நீராடி திரும்புகின்றனர்.
இந்த அம்பிகை தாயுள்ளம் கொண்டவள். இவ்வூர் மக்கள் தங்கள் சொத்துக்களை அம்பிகைக்குரியதாக கருதுகின்றனர். அதனால் தாய்வழி சொத்தாக மகள்களுக்கு சொத்தை எழுதி வைக்கின்றனர்.

திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோவில்
பாலாபிஷேகத்தின்போது நீல நிறமாக காட்சி தரும் சிவலிங்கம்
இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவாடானை, தேவாரப் பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இத்தலம் காரைக்குடியில் இருந்து 42 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இறைவன் திருநாமம் ஆதிரத்தினேசுவரர். இறைவியின் திருநாமம் சிநேகவல்லி. ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதத்தின் பிற்பகுதியில் இத்தலத்தின் மூலவர் மற்றும் அன்னை திருமேனிகளில் சூரிய கிரணங்கள் படுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
தல வரலாறு
ஒரு சமயம், சூரியன் தானே மிகுந்த ஒளி உடையவன் என்று மிகவும் கர்வத்துடன் இருந்தான். அதன் காரணமாக நந்தியால் அவனது ஒளி ஈர்க்கப்பட்டு, சூரியன் ஒளி குன்றினான். பிரம்மதேவர் கூறியபடி சூரியன் இத்தலத்துக்கு வந்து தன் பெயரில் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி, நீல ரத்தினக்கல்லால் ஆவுடையார் மற்றும் லிங்கம் அமைத்து, ரத்தினமயமான அந்த லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு தனது ஒளியை மீண்டும் பெற்றான். ஆதி என்னும் பெயர் கொண்ட சூரியன், நீல ரத்தினக்கல் கொண்டு ஆவுடை அமைத்து வழிபட்டதால், இத்தல இறைவனுக்கு 'ஆதிரத்தினேசுவரர்' என்று பெயர். இன்றும் உச்சிக்காலத்தில் பாலாபிஷேகம் செய்யும்போது இறைவன் நீல நிறமாக காட்சி காட்சியளிக்கின்றார்.
சுக்ரனுக்குரிய பரிகாரத்தலம்
இத்தல நாயகியான சிநேகவல்லி அம்மன், சுக்ரனுக்குரிய அதிதேவதை ஆவார். எனவே இந்த ஆலயம் சுக்ரனுக்குரிய பரிகாரத்தலமாகவும் விளங்குகிறது. அம்மனுக்கு விசேஷ சுக்ர ஹோமம் செய்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும். சுக்ரதிசை, சுக்ர புத்தி நடப்பவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்வது சிறப்பானது. சுவாமி ஆதிரத்தினேசுவரரை வணங்கினால் முன் செய்த தீவினை நீங்கும்.