
திருவள்ளூர் வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில்
ஆனி அமாவாசை தெப்ப உத்சவம்
பெருமாள், கனகவல்லி தாயார் மற்றும் உற்சவர் முத்தங்கி சேவை
திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவர் பெருமாள் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற திருத்தலமாகும். இங்கு அமாவாசை தினங்களில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி அமாவாசையை முன்னிட்டு மூன்று நாட்கள் பெருமாள் மற்றும் தாயார் முத்தங்கி சேவை மற்றும் தெப்ப உத்சவம் நடைபெறும். இந்த ஆண்டிற்கான ஆனி அமாவாசையான, வரும் 25 முதல் 27ம் தேதி வரை, மூன்று நாட்கள் தெப்ப உத்சவம் நடைபெற உள்ளது.
ஆனி அமாவாசை அன்று மூலவர் பெருமாள், கனகவல்லி தாயார் மற்றும் உற்சவருக்கு முத்தங்கி சேவை நடைபெறும். உற்சவர் வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய், கண்ணாடி மண்டபத்தில் முத்தங்கி சேவையில் பக்தர்களுக்கு தரிசனம் தருவார். ஆனி மாத தெப்ப உற்சவத்தின் போது தினமும் மாலை 6 மணியளவில், உற்சவர் வீரராகவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் 'ஹிருதாபநாசினி' குளத்தில் உள்ள தெப்பத்தில் எழுந்தருளி, மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
இந்த தெப்ப உற்சவத்தில் கலந்து கொண்டு வழிபட்டால் தீராத நோய்கள் அனைத்தும் தீரும் என்பதோடு, சகலவிதமான சௌகரியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். இதற்காக பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்தும் வகையில் உப்பு, கரும்பு, வெல்லம், பால் போன்றவைகளை தீர்த்தக் குளத்தில் கரைத்து வழிபாடு செய்வார்கள்.

திருவள்ளூர் வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில்
அமாவாசை தினத்தன்று வழிபட வேண்டிய திவ்ய தேசப் பெருமாள்
சென்னை - அரக்கோணம் ரயில் தடத்தில், சுமார் 47 கி.மீ. தொலைவில் உள்ள திவ்ய தேசம், திருவள்ளூர். பெருமாளின் திருநாமம் வீரராகவ பெருமாள். தாயாரின் திருநாமம் கனகவல்லி . அரக்கர்களை வதம் செய்ததால் வீரராகவப் பெருமாள் என்றும் இராமலிங்க அடிகளாரின் வயிற்று வலியைப் போக்கியதால்,வைத்திய வீரராகவர் என்றும் திருநாமங்கள் இவருக்கு ஏற்பட்டது.
கருவறையில் 15 அடி நீளம், 5 அடி உயரத்தில் வீரராகவ பெருமாள், தன் வலது கரத்தால் சாலிஹோத்ர முனிவர் சிரசில் கை வைத்து, நாபிக்கமலத்தில் இருக்கிற பிரம்மாவுக்கு வேதோபதேசம் செய்தபடி சயனத் திருக்கோலத்தில் காட்சி தருகிறார் . இத்தல மூலவருக்கு சந்தன தைலத்தில் மட்டுமே திருமஞ்சனம் நடைபெறும்.
இத்தலத்தில் அமாவாசை தினம் சிறந்த வழிபாட்டு நாளாகக் கருதப்படுகிறது. எனவே, இங்கு நீராடிப் பெருமாளைத் தரிசித்தால், புண்ணியங்கள் பெருகும்! முக்கியமாக, தை அமாவாசை நாளில் நீராடி, பெருமாளை ஸேவித்தால், சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம்!
ஒரு தை அமாவாசை நன்னாளில், சாலிஹோத்ர முனிவர் இந்தத் தலத்துக்கு வந்தார். இங்கே உள்ள 'ஹிருதாபநாசினி' எனும் தீர்த்தத்தில் நீராடினால், நம் இதயத்தில் உள்ள துர்சிந்தனைகள் நீங்கும் என்று எண்ணினார். குளக்கரையில் அமர்ந்த சாலிஹோத்ர முனிவர், அங்கே முப்பத்து முக்கோடி தேவர்களும் ரிஷிகளும் நீராடுவது கண்டு வியந்து போனார். கங்கைக்கு நிகரான இந்தத் குளத்தில் நீராடினால் சகல பாவங்களும் நீங்கும் என்று தேவர்கள் அவரிடம் தெரிவித்தார்கள்.
முனிவர், குளத்தில் நீராடி, கடும் தவத்தில் மூழ்கினார். அதில் மகிழ்ந்த பெருமாள், அவரின் வேண்டுகோளை ஏற்று, அங்கேயே தங்கி, கோயில் கொண்டு, இன்றளவும் அருள்பாலித்து வருகிறார் என்கிறது தல புராணம்.
தீராத நோய்களைத் தீர்க்கும் பெருமாள்
தீராத நோயால் வருந்துபவர்கள் இத்தலத்தில் அமைந்துள்ள ஹிருதாபநாசினி தீர்த்தத்தில் நீராடி, பெருமாளைத் தரிசித்தால் நோய்கள் அனைத்தும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மூன்று அமாவாசைகளுக்கு பெருமாளிடம் வேண்டிக் கொண்டால் தீராத நோயும் (வயிற்று வலி, கைகால் நோய், காய்ச்சல்) குணமாகும் என்பது நம்பிக்கை. உடலில் உள்ள மரு, கட்டி நீங்க தீர்த்தக் குளத்தில் பால், வெல்லம் சேர்ப்பது வழக்கம். நோய்களை வீரராகவர் குணப்படுத்துகிறார் என்றால், சிகிச்சையின்போது ஏற்படும் வலிகளையும் வேதனைகளையும் இத்தல தாயார் மெல்ல வருடிக் கொடுத்து ஆறுதல் படுத்துகிறார் என்கின்றனர்.