திருநெடுங்களம் நித்திய சுந்தரேசுவரர் கோவில்
இடக்காலைச் சுற்றியவாறு அமர்ந்து, இரண்டு முனிவர்களுடன் மட்டும் இருக்கும் தட்சிணாமூர்த்தியின் வித்தியாசமான தோற்றம்
திருச்சி – தஞ்சாவூர் சாலையில் அமைந்துள்ள துவாக்குடி என்ற ஊரிலிருந்து, நான்கு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் நெடுங்களம். இறைவன் திருநாமம் நித்திய சுந்தரேசுவரர், திருநெடுங்களநாதர், இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை, ஒப்பிலாநாயகி.
இக்கோவிலில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்தியின் அமைப்பு சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். கருவறையின் தெற்குப் பக்கத்திலுள்ள தேவ கோட்டத்தில் யோக தட்சிணாமூர்த்தி எழுந்தருளியுள்ளார். யோக தட்சிணாமூர்த்தி சித்தாசனத்தில் அமர்ந்து, மேற்கரங்களில் மான் மழுவும், கீழ்க் கரங்களில் சின் முத்திரையும், இடது கரத்தில் தீச்சுடரைத் தாங்கியவாறும், இடக்காலைச் சுற்றியவாறு யோகப் பட்டம் விளங்கவும் காட்சி தருகிறார். பொதுவாக நான்கு சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்யும் கோலத்தில் இருக்கும் தட்சிணாமூர்த்தி இத்தலத்தில் இரண்டு முனிவர்களுக்கு உபதேசம் செய்யும் கோலத்தில் இருப்பது வித்தியாசமான தோற்றமாகும்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
கையில் அன்ன உருண்டை வைத்திருக்கும் அன்னப் பெருமாள்
சுக்கிர தோஷத்தை நிவர்த்திக்கும் தானிய லட்சுமி
ஸ்ரீரங்கநாதரின் துலுக்க நாச்சியார்
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திவ்ய தேசம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுக்கு 365 நாட்களில், சுமார் 322 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இக்கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவதால், இக்கோவிலுக்கு திருவிழா கோவில் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.
ஏழு உலகங்களை அடக்கியது இந்த கோவில் என்ற பொருளில் 'ஏழு பிரகாரங்களுடன், ஏழு மதில்களை' கொண்டுள்ளது ஸ்ரீரங்கம் கோவில். இக்கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் அன்னப் பெருமாள் எழுந்தருளி இருக்கிறார். இவர் கைகளில் கலசம், தண்டம், அன்ன உருண்டை வைத்திருக்கிறார். இவரிடம் வேண்டிக்கொள்ள உணவு பஞ்சமில்லாத நிலை ஏற்படும்.
அன்னப்பெருமாள் கோவில் பிரகாரத்தில் தானிய லட்சுமிக்கு சன்னதி இருக்கிறது. தானிய லட்சுமிக்கு வலப்புறம் கிருஷ்ணர், இடதுபுறம் நரசிம்மர் இருப்பது வித்தியாசமான அமைப்பு. சுக்கிர கிரகத்தால் பாதிக்கப்படும் ஜாதகதாரர்கள் இவளுக்கு வெண் பட்டு, வெள்ளை மலர் அணிவித்து, வெண் மொச்சை தானியம் படைத்து வழிபடுகிறார்கள். ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் பிரம்மோற்சவங்களின் போது, ஏழாம் திருநாளன்று நம்பெருமாள் வருஷத்துக்கு ஏழு தடவை ஸ்ரீதேவி - பூதேவி துணை வர தானிய லட்சுமி சன்னதி அருகில் எழுந்தருளி நெல் அளக்கும் வைபவம் காண்கிறார்.
ஸ்ரீரங்கநாதரின் துலுக்க நாச்சியார்
கி.பி. 1331-ல் மாலிக்காபூர் படையெடுப்பின்போது, ஸ்ரீரங்கநாதரின் விக்கிரகம் பக்தர்களால் வெளியே எடுத்துச் செல்லப் பட்டது, ஸ்ரீரங்கநாதரின் அந்த விக்கிரகமானது, இரண்டு வருடங்கள் டெல்லியில் இருந்ததாக வரலாறு.
அப்போது ஸ்ரீரங்கநாதரின் அழகில் மயங்கி, அவருக்காகத் தன் உயிரையே கொடுத்த தில்லி சுல்தானின் மகளுக்காக, ஆலயத்தில் ஓர் இடம் அளித்துள்ளார்கள். துலுக்க நாச்சியார் என்ற பெயரால் அழைக்கப்படும் அவளுக்காக ஸ்ரீ ரங்கநாதர், ரொட்டி, வெண்ணெய், பருப்பு, கிச்சடி ஆகிய வட இந்திய உணவு வகைகளை நைவேத்தியமாக ஏற்கிறார்.