பதிமலை பாலதண்டாதபாணி கோவில்
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆதி மனிதர்கள் வாழ்ந்த குன்றில் அமைந்திருக்கும் முருகன் கோவில்
ஆதி மனிதர்கள் வரைந்த யானை, யானை பாகன் முதலிய குகை ஓவியங்கள்
கோவை மாவட்டம், குமிட்டிபதி என்னும் கிராமத்தில் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது பதிமலை பாலதண்டாதபாணி கோவில். இக்கோவில் மிகவும் சிறியது. இந்த கோவிலை அடைய 350 படிகள் உள்ளன. ஒரே சன்னதியை கொண்ட இக்கோவிலின் கருவறையில் முருகப்பெருமான், பாலமுருகனாக அருள்பாலிக்கிறார். வலது கையில் வேல் ஏந்தி, ஒய்யாரமாக நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
இந்தக் கோவிலில் இருந்து 100 மீட்டர் கீழே இறங்கி வந்தால், ஆதி மனிதர்கள் வாழ்ந்த பழங்கால குகைகளைக் காணலாம். இந்தக் குகைகளில் ஆதிகால மனிதர்கள் வாழ்ந்ததற்காக ஆதாரங்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்றுதான் இக்குகை பாறைகளில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள். இந்த ஓவியங்கள் வெண்மை நிறத்தில் காட்சி தருகின்றன. இந்த ஓவியத்தில் யானை ஒன்றை, அதன் மேலிருந்து கட்டுப்படுத்திச் செல்லும் மனிதனும், அவற்றைச் சுற்றி பெரிய பெரிய கோடுகள் குறுக்கும் நெடுக்குமாகவும் உள்ளன. சுமார் 4 அடி அகலமும், 2 அடி உயரத்திலும் உள்ள இந்த பாறை ஓவியம், அப்பகுதியில் யானைகள் வாழ்விடமாக இருந்ததற்கு அடையாளமாகக் கூறப்படுகிறது.
யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட மற்றும் யானை சந்தை நடைபெற்ற இடமாக இது இருக்கலாம் எனவும் வல்லுநர்கள் கூறுகின்றனர். வழுக்குபாறை, குமிட்டிபதி, முருகன்பதி, புதுப்பதி, சின்னாம்பதி, நாச்சிபாளையம் பகுதியை சேர்ந்த மக்கள் சிலர், 'பாண்டியன் பள்ளி' என இந்தப் பகுதியை அழைக்கின்றனர். குமிட்டிபதிக்கு அருகே வேழந்தாவளம் எனும் இடம் உள்ளது. வேழம் என்றால் யானை, தாவளம் என்றால் விற்பனை சந்தை என்ற பொருள் கொள்வதாக தொல்லியல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
வேழந்தாவளம் அருகே மாவுத்தம்பதி என்ற கிராமம் இருக்கிறது. யானை பாகனை மாவுத் என அழைப்பது வழக்கம். யானை பாகன்கள் வசிக்கும் இடமாக இருந்த இப்பகுதி மாவுத்தம்பதி என பெயர் பெற்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பாலக்காடு கணவாய் வழியாக ஏராளமான யானைகளை பிடித்து வந்து ஆனைமலையில் வைத்து வளர்த்துள்ளனர். இங்கே குமுட்டிபதி, மாவுத்தம்பதியில் யானை படை உருவாக்கப்பட்டுள்ளது. யானைகளை அடக்கிய வீரர்கள் இங்கே நீண்ட காலம் தங்கியிருந்துள்ளனர்.
ஊதியூர் உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில்
வாழ்வில் வளமை வழங்கும் முருகன்
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் இருந்து 13 கி.மீ. தொலைவிலும், பழனியில் இருந்து 52 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது, ஊதியூர் உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில். 300 அடி உயரத்தில் உள்ள கோவிலுக்கு செல்ல 156 படிகள் உள்ளன. கருவறையில் தண்டம் ஏந்தி இடது கையை இடுப்பில் வைத்து வெற்றி வேலுடன் நின்ற கோலத்தில் மலர் அலங்காரத்தில் வேலாயுத சுவாமி அருள் பாலிக்கிறார். அருணகிரிநாதர் இத்தல முருகப் பெருமானைப் போற்றி திருப்புகழ் பாடியுள்ளார்.
ஒருசமயம், காங்கய நாட்டில் மக்கள் பசியால் வாடுவதை அறிந்து இவர்கள் அங்கு சென்றனர். ஊர் மக்களை ஒன்று திரட்டி, மூலிகைகள் கொண்ட இம்மலைக்கு தீ வைத்து புகை மூட்டி ஊதினர். அப்போது முருகப் பெருமான் அங்கு எழுந்தருளி, மக்களுக்கு யாது வேண்டும் என்று கேட்டார். அவர்களும் அவர்கள் குறைகளைத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து முருகப் பெருமான் அவர்களின் வறுமையை நீக்கி, அவர்கள் வாழ்வில் வளமை பொங்கச் செய்தார். இதனால் இந்த மலைக்கு ஊதிமலை என்ற பெயர் பெற்றது. இன்றும் சித்தர்கள் ஒளிவடிவம் கொண்டு இரவு நேரங்களில் இங்கு வந்து முருகப் பெருமானை வணங்கிச் செல்வதாகக் கூறப்படுகிறது.
அரிய மூலிகைகள் கொண்ட மலையாக ஊதிமலை இருப்பதால், பல நோய்களுக்குத் தீர்வாக இம்மலை உள்ளது. மேலைக் கொங்கு நாட்டை ஆட்சி புரிந்த உதியர்களின் குலச்சின்னமாக உதி மரம் விளங்கியது. இம்மரம் ஒதி மரம் என்றும், ஓதி மரம் என்றும் அழைக்கப்படுவதுண்டு. இம்மரத்தில் பூக்கும் பூக்கள் பொன் நிறத்தில் மின்னும். மலை முழுவதும் இம்மரங்களே நிறைந்திருந்து எங்கு திரும்பினாலும், இப்பூக்களே தென்படுவதால், இம்மலைக்கு 'பொன் ஊதிமலை' என்ற பெயர் வந்தது.
கொங்கு நாட்டுப் பகுதியில் பலருக்கு உத்தண்ட வேலாயுத சுவாமி குலதெய்வமாகவும், இஷ்ட தெய்வமாகவும் விளங்குகிறார். அதனால் இங்கு சுவாமி உத்தரவு கேட்கும் வழக்கம் உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த மக்கள், தங்கள் வீட்டில் எந்த நிகழ்ச்சியை நடத்தினாலும் அதற்கு முன்பாக வேலாயுத சுவாமியின் உத்தரவு கேட்டுத்தான் செயல்படுவர்.
திண்டுக்கல் ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோவில்
தரைதளத்தில் ஒன்றும், பாதாளத்துக்குள் (பூமிக்கு அடியில்) ஒன்றும் என இரண்டு கருவறைகளை கொண்ட வித்தியாசமான முருகன் கோவில்
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே, ராமலிங்கம்பட்டி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது பாதாள செம்பு முருகன் கோவில். தரைதளத்தில் ஒன்றும், பாதாளத்துக்குள் (பூமிக்கு அடியில்) ஒன்றும் என இரண்டு கருவறைகளை கொண்டதாக இக்கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் பாதாளக் கருவறை. பூமிக்கு அடியில் 16 அடி ஆழத்தில் உள்ளது. அதில் 17 அடிக்கு 21 அடி என்ற அளவில் முருகன் சன்னிதி அமைந்திருக்கிறது. அதற்குள், 8-க்கு 8 அடி என்ற அளவிலான கருவறையில் முருகன் வீற்றிருக்கிறார். பாதாளத்தில் (பூமிக்கு அடியில்), செம்பு உலோகத்திலான முருகன் வீற்றிருப்பதால் 'பாதாள செம்பு முருகன்' என்ற பெயர் ஏற்பட்டது.
பழனி முருகன் கோவிலில் நவபாஷாண சிலையை உருவாக்கிய போகர் சித்தரின் மறு அவதாரமாக, திருக்கோவிலூர் சித்தர் கருதப்படுகிறார். போகர் சித்தரையும், அவருடைய சீடர் புலிப்பாணியையும் மானசீக குருவாக போற்றி பூஜித்து வந்தவர் தான் திருக்கோவிலூர் சித்தர். இவர் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு பழனியில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராமலிங்கம்பட்டியில் வசித்து வந்திருக்கிறார். இவர்,முருகப்பெருமானுக்கு ஒன்றரை அடி உயரத்தில் ஐந்து உலகக் கலவையான தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம், இரும்பு ஆகியவற்றை சேர்த்து ஒரு சிலையைச் செய்து, இங்கு பாதாள அறையில் பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தார்.இந்த முருகர் சிலைக்கு தினமும் அபிஷேகம் செய்து வருவது உடல் நலத்தை அதிகரிக்கும். நாளடைவில் வழிபாடின்று போன இந்த ஆலயத்தில் சில நூற்றாண்டுகளுக்கு பிறகு ராமநாதபுரம் சமஸ்தானத்தில் மன்னராக இருந்த பாஸ்கர சேதுபதியின் வம்சாவளியை சேர்ந்த கந்தமாறன் என்ற மிராசுதாரர், மீண்டும் பூஜைகள் நடைபெற செய்தார்.
பாதாள கருவறையில், முருகப்பெருமான் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். வலது கையில் அபய முத்திரையும், இடது கையில் வேல் ஏந்தியும் காட்சி தருகிறார். இந்த சிலைக்கு முன்பு, திருக்கோவிலூர் சித்தர் வழிபட்ட முருகன் சிலையும் உள்ளது.
பாதாளத்தில் உள்ள செம்பு முருகன் கருவறைக்குச் சென்று முருகப்பெருமானை வழிபடுவதற்கு பக்தர்கள் 18 படிகள் இறங்கிச் செல்கின்றனர். பொதுவாக, முருகன் கோவிலுக்குச் செல்லும்போது ஏற்றமாகவும் திரும்பி வரும்போது இறக்கமாகவும் இருக்கும். இதை நிறைய முருகன் கோயில்களில் கண்டிருக்கலாம். அதேபோல், பெரும்பாலான முருகன் கோவில்கள் மலையிலேயே அமைந்திருக்கும். ஆனால், இக்கோவிலில் முருகனின் தரிசனத்திற்கு வரும்போது இறக்கமாகவும், தரிசித்த பின் திரும்பும் போது ஏற்றமாகவும் இருக்கும். இதனால் இந்தக் கோவிலுக்கு சென்று வழிபடுவதால் வாழ்க்கையில் எப்போதும் ஏற்றமே கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்தக் கோவிலுக்குத் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் சென்று வந்தால் நினைத்தது கைக்கூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பாதாள முருகன் கோவிலில் கருங்காலி மாலையை முருகனின் திருப்பாதங்களில் வைத்து பக்தர்களுக்குப் பிரசாதமாகத் தருகிறார்கள். கருங்காலி மாலை அணிவதால் செல்வ வளம் கிடைக்கும், ராகு-கேது தோஷம் நீங்கும், குழந்தைப் பேறு வாய்க்கும், மன அழுத்தம் குறையும், இரத்த அழுத்தம் சீராகும்.
பரங்கிப்பேட்டை முத்துக்குமார சுவாமி கோவில்
பிரம்மா அமர்ந்த கோலத்தில் கை கூப்பி வணங்கி நிற்கும் அரிய காட்சி
சிதம்பரம்-கடலூர் சாலையில் (புதுச்சத்திரம் மற்றும் பி.முட்லூர் வழியாக) 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பரங்கிப்பேட்டை முத்துக்குமார சுவாமி கோவில். 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது இக்கோவில். மூலவர் முத்துக்குமார சுவாமி சன்னதிக்கு வலதுபுறம் விசுவநாதர் சன்னதியும், அருகில் தென் திசை நோக்கி விசாலாட்சி அம்பிகை சன்னதியும் இருக்கின்றது.
இக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் பிரம்மா மிகவும் விசேஷமானவர். பொதுவாக சிவன் கோவில்களில் கருவறை சுற்றுச்சுவரில் பிரம்மா, நின்ற நிலையில்தான் இருப்பார். ஆனால் இக்கோவிலில் பிரம்மா, அமர்ந்த கோலத்தில் இரண்டு கைகளையும் கூப்பி, வணங்கிய நிலையில் இருக்கிறார். ஓம் என்னும் பிரணவ மந்திரத்துக்கு பொருள் தெரியாததால் முருகனால் தண்டிக்கப்பட்ட இவர் தன்னை விடுவிக்கும்படி கேட்பதாக ஐதீகம். பிரம்மாவின் இந்த கோலத்தை நாம் வேறு எந்த கோவிலிலும் தரிசிக்க முடியாது.
பரங்கிப்பேட்டை முத்துக்குமார சுவாமி கோவில்
முன்புறம் ஐந்து முகமும், பின்புறம் ஒரு முகமும் இருக்கும் முருகனின் அபூர்வ தோற்றம்
முருகனின் ஆறு முகங்களுக்கும் தனித்தனியாக பூஜை செய்யப்படும் தனிச்சிறப்பு
சிதம்பரம்-கடலூர் சாலையில் (புதுச்சத்திரம் மற்றும் பி.முட்லூர் வழியாக) 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பரங்கிப்பேட்டை முத்துக்குமார சுவாமி கோவில். 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது இக்கோவில்.
மூலவர் முத்துக்குமார சுவாமி சன்னதிக்கு வலதுபுறம் விசுவநாதர் சன்னதியும், அருகில் தென் திசை நோக்கி விசாலாட்சி அம்பிகை சன்னதியும் இருக்கின்றது.
கருவறையில் முத்துக்குமாரசாமி, வள்ளி தெய்வானை சமேதராக நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். முத்துக்குமார சுவாமிக்கு ஆறுமுகங்கள் உள்ளன. நம் பார்வையில் ஐந்து முகங்கள் தெரியும். ஒரு முகம் சுவாமியின் பின்புறம் உள்ளது. ஆறு முகங்களுக்கும் தனித்தனியாக பூஜை செய்யப்படுவது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். செவ்வாய்க்கிழமையில் இவருக்கு செவ்வரளி மாலை சாத்தி சத்ருசம்ஹார திரிசதி என்னும் எதிரி பயம் போக்கும் அர்ச்சனை நடக்கிறது. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இதைச் செய்ய திருமணத் தடை நீங்கும்.
கோவில் திருவிழாவின் போது சிவனுக்குரிய ரிஷபம், இந்திரனுக்குரிய ஐராவத யானை, ஆடு , இடும்பன் ஆகிய வாகனங்களில் முருகன் பவனி வருகிறார்.
விராலிமலை சண்முக நாதர் கோவில்
முருகனுக்கு குழந்தையை தத்து கொடுத்து, பின் தவிட்டுக்கு குழந்தையை பெற்றுக் கொள்ளும் நடைமுறை
மதுரை-திருச்சி நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 30 கி.மீ. தொலைவிலும், புதுக்கோட்டையிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள திருப்புகழ் தலம் விராலிமலை சண்முக நாதர் கோவில். 1500 வருடப் பழைமை வாய்ந்த கோவில் இது. முனிவர்களும், தேவர்களும் மரங்களாக விரவி முருகனை வழிப்பட்டதால், விரவி மலை என்று அழைக்கப்பட்டு, பின்பு அதுவே மருவி, விராலி மலையாயிற்று. மலை மீது உள்ள கோவிலுக்கு செல்ல 207 படிகள் உள்ளனஅருணகிரிநாதர், முருகப் பெருமானிடம் ஞானோபதேசம் பெற்ற தலம்.
கருவறையில் முருகன் வள்ளி, தேவசேனா சமேதராக ஆறுமுகங்களுடனும், பன்னிரண்டு கரங்களுடனும் பத்து அடி உயரத்தில் அசுர மயில் மீதமர்ந்து, வலது கரத்தில் சூலமும் இடது கரத்தில் வஜ்ராயுதமும் ஏந்தி அருள்பாலிக்கிறார். தீபாராதனை காட்டும் பொழுது மூன்று முகங்கள் பக்தர்களுக்குத் தெரிகிறது. பின்புறம் உள்ள கண்ணாடியில் மற்ற மூன்று முகங்களையும் தரிசிக்க முடிகிறது.
ஐந்து வயதிற்குள் குழந்தைகளுக்கு பாலாரிஷ்ட தோஷம் உண்டாகும். ஜாதகத்தில் பாவ கிரகங்களின் சேர்க்கை மற்றும் பார்வையால் ஏற்படும் தோஷம் இது. இதனால் ஆயுள், உடல்நலம் பாதிக்க கூடும். தாய், தந்தை, தாய்மாமனுக்கு பாதிப்பு ஏற்படலாம். ஆனால் குருவின் பார்வை ஏற்பட்டால் தோஷம் மறையும். இதிலிருந்து விடுபட முருகப்பெருமானுக்கு பரிகார பூஜை செய்யலாம்.
இக்கோவிலில் முருகனுக்கு குழந்தையை தத்து கொடுத்து, பின் தவிட்டுக்கு குழந்தையை பெற்றுக் கொள்ளும் நடைமுறை இருக்கின்றது. பிரார்த்தனைப்படி குழந்தை பிறந்தவுடன் குழந்தையை முருகனிடம் ஒப்படைத்துவிட்டு, குழந்தையின் மாமன்மார்கள் அல்லது உறவினர்கள் குழந்தைக்கு பதிலாக தவிட்டை தந்து சுவாமியிடம் குழந்தையை பெற்றுக் கொண்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கிறார்கள்.
இப்பரிகாரத்தின் மூலம் தோஷம் நீங்குவதோடு, முருகனருளால் குழந்தையின் ஆயுள், ஆரோக்கியம் கூடும்.
மாதப்பூர் முத்துகுமாரசாமி கோவில்
பழநி முருகன் போலவே ஒரே உருவ ஒற்றுமை கொண்ட மாதப்பூர் முத்துக்குமாரசாமி
பல்லடத்திலிருந்து காங்கேயம் செல்லும் சாலையில் 3 கி.மீ. தொல்லையில் உள்ளது மாதப்பூர். இத்தலத்தில் ஒரு சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது முத்துகுமாரசாமி கோவில். கோவிலுக்கு செல்ல 40 படிக்கட்டுகள் உள்ளன. ஞான பழத்துக்காக கோபித்துக்கொண்ட முருகன், பழநிமலையில் அமர்ந்தார். அவரைத் தேடி வந்த சிவனும் பார்வதியும் இக்குன்றின் மீது ஏறி நின்று மகனே நீ எங்கே இருக்கின்றாய்? என குரல் எழுப்பிய போது, பழநியில் அமர்ந்திருந்த முருகன் தாய், தந்தையருக்காக இங்கு காட்சியளித்ததாக தல வரலாற்றில் குறிப்புகள் உள்ளன. மாதாவுக்கு மகன் காட்சியளித்ததால் மாதா ஊர் என வழங்கப்பட்டு பின் மருவி மாதப்பூர் என ஆனது.
பழநி கோவில் உருவான சமகாலத்தில்தான், இக்கோவிலும் உருவானது. இக்கோவிலில், தனிச்சன்னிதியில் முருகன், முத்துக்குமாரசுவாமி என்ற திருநாமத்தில் தண்டத்துடன் நின்ற கோலத்தில் அருள்புரிகிறார். பழநிமுருகன் போலவே மாதப்பூர் முத்துக்குமாரசாமியும் ஒரே உருவ ஒற்றுமையுடன் இருப்பது, இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். பழநி முருகன் மேற்கு நோக்கியும், இம்முருகன் கிழக்கு நோக்கியும் இருப்பதுதான் ஒரே வித்தியாசம். முருகன் என்றாலே அழகன்தான். ஆனால் இத்தலத்து முருகனோ பேரழகு கொண்டவர். முருகன் சன்னதிக்கு அருகில் சிவபெருமான் மதிமாலீஸ்வரர் என்ற திருநாமத்துடனும், பார்வதி தேவி மரகதாம்பிகை என்ற திருநாமத்துடனும் தனித் தனிச் சன்னதியில் எழுந்தருளி இருக்கிறார்கள். பழனியில் இப்படி முருகனுடன், இறைவனும் இறைவியும் எழுந்தருளவில்லை.
சஷ்டி விரதம் இருந்து இத்தலத்து முருகனை வழிபட்டால் திருமண தடைகள் நீங்கும்; மழலைச் செல்வம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர் கோயில்
முருகப் பெருமான் வேலும் மயிலும் இல்லாமல் தனித்து நிற்கும் தேவாரத்தலம்
முன்புறம் ஐந்து முகங்களும், பின்னால் ஆறாவது முகமும் அமைந்திருக்கும் முருகனின் அபூர்வ தோற்றம்
திருப்பூர் நகரத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத்தலம், திருமுருகன்பூண்டி. இறைவன் திருநாமம் முருகநாதேசுவரர், திருமுருகநாதர். இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை. முருகனால் இத்தலத்து சிவபெருமான் பிரதிஷ்டைசெய்யப்பட்டதால், திருமுருகநாதர் என்று அழைக்கப்படுகிறார். இதை விளக்கும் விதமாக, முருகன் சன்னதியில் லிங்கம் ஒன்று உள்ளது. முருகன் இங்கு வந்து சிவனை வழிபடும் முன்பு, தனது வேலை, கோயிலுக்கு வெளியே சற்று தள்ளி தரையில் ஊன்றினார். மயில் வாகனத்தை அதன் அருகில் நிறுத்தி வைத்தார். இதனால் வேலும் மயிலும் இல்லாமல், தனித்து நிற்கிறார்.
பெரும்பாலான கோவில்களில், சுப்ரமணியர் சிலை, முன்புறம் மூன்று முகங்களும், பின்னால் மூன்று முகங்களுடனும் அமைந்திருக்கும். இக்கோவிலில் மட்டும், ஐந்து முகங்கள் முன்புறமும், ஆறாவது முகம், பின்னாலும் அமைந்துள்ளது. அந்த முகம், 'அதோ முகம்' என அழைக்கப்படுகிறது. இம்முகத்தை கண்ணாடியில் மட்டுமே பார்க்க முடியும். அதேபோல், தமிழகத்தில் தெற்கு நோக்கி சுப்ரமணிய சுவாமி அமர்ந்திருப்பது இத்தலத்து தனிச்சிறப்பு. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், இக்கோவிலுக்கு வந்து, வழிபட்டு, அதோ முகத்தை பார்த்தால், மனநிலை சரியாகி விடும் என்பது நம்பிக்கை.
வெளியகரம் பிருத்வீச்வரர் கோவில்
முருகப் பெருமான் ஒரு முகமும், நான்கு கரங்களும் கொண்டு காட்சி அளிக்கும் திருப்புகழ் தலம்
திருத்தணியிலிருந்து 37 கி.மீ தொலைவில், கொசஸ்தலை ஆற்றின் கரையில் அமைந்த தலம் வெளியகரம் பிருத்வீச்வரர் கோவில். நகரி வழியாகவும் (63 கி.மீ) செல்லலாம். இறைவியின் திருநாமம் புவனேஸ்வரி அம்மன். இத்தலத்திற்கு வெள்ளிகரம், வள்ளிகரம் என்ற பெயர்களும் உண்டு.
இத்தலத்து முருகப் பெருமான் சுமார் மூன்றடி உயரத்தில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். அவருக்குப் பின்புறம் மயில் உள்ளது. அவர் ஒரு முகமும், நான்கு கரங்களும் கொண்டுள்ளார். பின்னிரு கரங்களில் வஜ்ர சக்தியும், முன் வலக் கரம் அபய முத்திரையிலும், முன் இடக் கரம் இடுப்பிலும் வைத்தபடி காட்சி அளிக்கிறார். இரு புறமும் வள்ளி,தேவயானை உள்ளனர்.
இத்தலத்து முருகனை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் போற்றி பாடியுள்ளார். மொத்தத் திருப்புகழ்ப் பாடல்களிலும் எட்டு விதமான சந்தங்கள் வந்துள்ள ஒரே தலப் பாடல் வெளியகரத்துக்கு மட்டுமே உரியது. வெள்ளிகரம் முருகனைப் பாடிய ஒன்பது திருப்புகழ் பாடல்களில் (நவ ரத்ன திருப்புகழ்) வள்ளி மலை, வள்ளியின் பிறப்பு, வள்ளி குருவியோட்டிய தினைப் புனம், அவள் கொடுத்த தினை மாவு, அவள் மீது மையல் கொண்டது, அவள் கரம் பிடித்தது ஆகியவற்றையும் பாடி இன்புறுகிறார்.
வள்ளிமலை முருகன் கோவில்
முருகன் வள்ளியை காதலித்த இடம்
முருகனை கணவனாக அடைய வள்ளி திருமாலை வழிபட்ட தலம்
திருமாலின் பாதம் பொறித்த சடாரி சேவை செய்யப்படும் திருப்புகழ் தலம்
வேலூர் மாநகரில் இருந்து 25 கி.மீ. தொலைவிலும், ராணிப்பேட்டையில் இருந்து 18 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது வள்ளிமலை முருகன் கோவில். முருகப் பெருமான் வள்ளியை காதலித்து கரம் பிடித்த ஊர் என்பதால் இவ்விடத்திற்கு வள்ளிமலை என பெயர் வந்தது. வள்ளி இந்த ஊரில் பிறந்து வளர்ந்ததும் வள்ளிமலை என பெயர் பெற காரணமாகும். இக்கோவில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மலை மேல் உள்ள கோவிலுக்கு செல்ல 454 படிக்கட்டுகள் உள்ளன. அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற தலம் இது.
மலைக்கோவிலில் சுப்பிரமணியர் குடவறை சன்னதியில் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். இங்கு முருகன் சன்னதியில், முருகன் கருவறைக்கு மேலே விமானத்திற்கு பதிலாக கோபுரம் அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். வள்ளி வேடர் குலத்தில் வளர்ந்ததால், அர்த்தஜாம பூஜையில் தேனும், தினை மாவும் நைவேத்யமாக படைக்கப்படுகிறது. ஒரு சமயம், முருகன், வள்ளியுடன் பேசிக்கொண்டிருந்த போது, அங்கு வள்ளியின் தந்தை நம்பிராஜன் வந்து விட்டார். எனவே முருகன் வேங்கை மரமாக உருமாறி தன்னை மறைத்துக் கொண்டார். இந்த மரமே இத்தலத்தின் விருட்சமாக இருக்கிறது.
கன்னிப்பருவத்தில் வள்ளி தினைப்புனம் காக்கும் பணி செய்தாள். அடிவாரம் மற்றும் மலைக்கோவிலில் 'குமரி வள்ளி'க்கு சன்னதி இருக்கிறது. இவள் கையில் பறவை விரட்ட பயன்படுத்தும் உண்டி வில், கவண் கல் வைத்திருக்கிறாள். தினைப்புனத்தில் வள்ளியை சந்தித்த முருகன், வள்ளியைத் திருமணம் செய்ய விரும்பினார். முருகனை கணவனாக அடைய விரும்பிய வள்ளி, இத்தலத்தில் திருமால் பாதத்தை வைத்து வழிபட்டாள். இதனால் இங்கு பக்தர்களுக்கு திருமாலின் பாதம் பொறித்த சடாரி சேவை செய்யப்படுகிறது.
முருகன் வள்ளியை மணக்க விரும்பியதையறிந்த நம்பிராஜன், திருத்தணியில் முருகனுக்கு முறைப்படி வள்ளியை திருமணம் செய்து கொடுத்தார். நம்பிராஜனின் வேண்டுதலுக்கு இணங்க, இங்குள்ள குன்றில் முருகன் எழுந்தருளினார்.
முருகன், தெய்வானை திருக்கல்யாணம் கந்தசஷ்டிக்கு மறுநாள் நடக்கிறது. மாசி பௌர்ணமியன்று, இத்தலத்தில் முருகன் வள்ளி திருமணம் நடைபெறுகிறது.
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில்
முருகன் நின்ற கோலத்திலும் அமர்ந்த கோலத்திலும் காட்சி தரும் திருப்புகழ் தலம்
திருவள்ளூரில் இருந்து 18 கி.மீ. தொலைவிலும், அரக்கோணத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவிலும் உள்ள தேவாரப்பாடல் பெற்ற தலம் திருவாலங்காடு. இறைவன் திருநாமம் வடாரண்யேசுவரர். இறைவியின் திருநாமம் வண்டார் குழலம்மை. நடராஜப்பெருமான் நித்தமும் நடமாடும் பஞ்ச சபைகளுள் இது ரத்தின சபை.
இக்கோவிலில் முருகன் நின்ற கோலத்திலும் அமர்ந்த கோலத்திலும் காட்சி தருகிறார். ஆலய முகப்பிலும் மற்றும் சிவசன்னிதியின் உட்பிரகாரச் சுற்றின் முதல் திருச்சன்னிதியிலும், வள்ளி தெய்வயானை தேவியரோடு கூடிய மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில் ஆறு திருமுகங்களுடன் எழுந்தருளி இருக்கின்றார். மூன்றாவது, சிவசன்னிதியின் பின்புறத்தில், வலது கோடியில், இரு தேவியரோடு, மயிலும் உடனிருக்க, நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றார். இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தமது திருப்புகழில் போற்றிப் பாடியுள்ளார்.
உத்திரமேரூர் பாலசுப்பிரமணியன் கோவில்
தலையில் ஜடாமுடியுடன் இருக்கும் முருகனின் அபூர்வ தோற்றம்
முருகனுக்கு மயிலுக்கு பதிலாக யானை வாகனமாக இருக்கும் தலம்
காஞ்சிபுரத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது உத்திரமேரூர் பாலசுப்பிரமணியன் கோவில். இக்கோவில் 1400 வருடங்களுக்கு மேல் பழமையானது. இத்தலம் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்றது.
இங்கு முருகப்பெருமான் பாலசுப்ரமணிய சுவாமி என்ற பெயருடன் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு சுயம்புவாக எழுந்தருளி இருக்கிறார். ஆறடி உயரம் கொண்ட திருமேனி உடைய அவர் தனது தலையில்,வழக்கமான கிரீடத்திற்குப் பதிலாக, ஜடாமுடியுடன் இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். இப்பெருமானின் திருமார்பில் ருத்ராட்சமணி மாலைகளும், திருக்கரங்களில் நாகாபரணமும், திருச்செவிகளில் குண்டலங்களும் இருக்கின்றன.
கருவறையில் சிவபெருமானும் திரிபுரசுந்தரியும் எழுந்தருளி இருக்கிறார்கள். முருகப்பெருமான் சூரபத்மனை அழிப்பதற்காக வேல் வேண்டி இங்கு சிவபெருமானையும் பார்வதி தேவியையும் நோக்கி தவம் இருந்தார். அதனால் அவரது வலது கீழ் திருக்கரம் பூஜை செய்யும் பாவனையில் இருக்கின்றது.
மற்ற முருகன் கோவில்கள் போல் வள்ளியும், தெய்வானையும் அவருக்கு அருகில் இல்லை. மாறாக இந்தக் கோவிலில், வள்ளியும் தெய்வ யானையும் இணைந்து கஜவள்ளியாக தனிச்சந்நதியில் இருக்கிறார்கள்.
இக்கோவிலில் முருகனுக்கு வாகனமாக மயிலுக்கு பதிலாக யானை இருக்கிறது. முருகப்பெருமானுக்கும், தெய்வானைக்கும் திருமணம் நடந்தப்பொழுது, இந்திரன் யானையை முருகனுக்கு பரிசாக அளித்தான். முருகப்பெருமான் திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்தப் பிறகே அவருக்கு மயில் வாகனமாகவும், சேவல் கொடியும் வந்தது. எனவே, இக்கோவில் அதற்கு முன்பே உருவானது.
காசிபாளையம் ஸ்ரீ முத்துவேலாயுத சுவாமி கோவில்
மூன்று முகம் கொண்ட அபூர்வ முருகன்
முருகனின் முன்பு மயிலுக்கு பதிலாக சக்திவேல் நிறுவப்பட்டிருக்கும் தலம்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்திலிருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது காசிபாளையம் ஸ்ரீ முத்துவேலாயுத சுவாமி கோவில். குன்றின் மேல் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு செல்ல படிக்கட்டுகளுடன், சாலை வசதியும் உள்ளது. 700 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.
இக்கோவில் கருவறையில், மூன்று முகம் ஆறு கரங்களுடன் கூடிய முருகப்பெருமான், 'ஸ்ரீ முத்து வேலாயுதசுவாமி' என்கிற திருநாமத்துடன் சுமார் 3 அடி உயர கருங்கல் திருமேனியாக, வள்ளி தெய்வானை சமேதராக எழுந்தருளி இருக்கிறார். இப்படி மூன்று முகம் கொண்ட முருகனை, தமிழ்நாட்டில் வேறு எந்த கோவிலும் நாம் தரிசிக்க முடியாது. இந்த மூன்று முகங்கள் முருகனின் மூன்று சக்திகளான இச்சாசக்தி (விருப்பம்), கிரியாசக்தி (செயல்), மற்றும் ஞானசக்தி (அறிவு) ஆகியவற்றைக் குறிக்கின்றன.
ஸ்ரீ முத்து வேலாயுதசுவாமியின் வலதுபுறம் உள்ள மூன்று கரங்களில் வஜ்ராயுதம், அம்பு, சின்முத்திரையும் இடதுபுறம் உள்ள மூன்று கரங்களில் மான், வில், அபயக்கரத்துடன் பாம்பும், பின்புறம் மயிலும் காணப்படுகிறது. பொதுவாக முருகன் கோவில்களில் கருவறைக்கு முன்பு மயில் அமைந்திருக்கும். ஆனால் இக்கோவிலில், முருகன் முன்பு சக்திவேல் நிறுவப்பட்டுள்ளது. இவ்வேல் சூரபத்மனை வதம் செய்ய அன்னை பார்வதி தேவியால் வழங்கப்பட்டது. இவ்வேலின் ஒருபுறம் சரவணபவ சக்கரமும், மறுபுறம் 'ஓம்' என்ற பிரணவ எழுத்துடன், சூலாயுதமும் வஜ்ஜராயுதமும் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த சக்தி வேலை வணங்கினால், செவ்வாய் தோஷம் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பொன்னூர் ஆபத்சகாயேஸ்வரர் கோவில்
காதுகளில் பெரிய கம்மலுடன் காட்சியளிக்கும் முருகனின் அபூர்வ தோற்றம்
மயிலாடுதுறையில் இருந்து (மயிலாடுதுறை -மணல்மேடு சாலையில்) 8 கி.மீ. தொலைவில், காவிரி நதியின் வடகரையில் அமைந்துள்ள தேவார தலம் பொன்னூர் ஆபத்சகாயேஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. முற்காலத்தில் இத்தலத்தின் பெயர் திருஅன்னியூர். சூரிய தோஷ பரிகாரங்களுக்கு பெயர் பெற்றது இந்தத் தலம்.
இக்கோவிலில் முருகப் பெருமான் வள்ளி, தெய்வயானை சமேதராக இரண்டு கரங்களுடன் அழகாகக் காட்சி தருகிறார். இவரது வடிவமானது திருப்பரங்குன்றத்து முருகனை போல் அமைந்திருக்கின்றது.இவரது காதுகளில் வட்ட வடிவமான பெரிய அளவில் கம்மலுடன் (தோடு) தோற்றமளிப்பது வித்தியாசமான தரிசனம் ஆகும். இப்படிப்பட்ட முருகப்பெருமானின் தோற்றத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில்
ஆவணித் திருவிழா-உருகு சட்டை சேவை
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று ஆவணித் திருவிழா. இந்த ஆண்டு ஆவணித் திருவிழா ஆகஸ்ட் 14-ஆம் தேதியன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறக் கூடிய இத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் முருகப் பெருமான் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலாவரும் நிகழ்ச்சி நடக்கும்.
திருச்செந்தூரில் சண்முகர் தெற்கு நோக்கிய சந்நிதியில் ஆறுமுகங்களும், பன்னிரு கரங்களும் கொண்டு நின்ற கோலத்தில் வள்ளி தெய்வானையோடு காட்சியருள்கிறார். சாதாரண நாள்களில் இவரின் இரண்டு கரங்களை மட்டுமே நாம் தரிசிக்க முடியும். மற்ற கரங்களைப் பட்டாடை இட்டு அலங்கரித்திருப்பர்.
ஆவணித் திருவிழாவின் 7-ஆம் நாள் காலை உருகு சட்டை சேவை நடைபெறும். இந்த சடங்கில் முருகப் பெருமானின் உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம் செய்யும்போது, அபிஷேக திரவியங்களால் மூர்த்தியின் திருமேனி உருகி வழிவது போல் தோன்றுவதை குறிக்கிறது. அபிஷேகம் முடிந்து சண்முகர் சன்னதியிலிருந்து எழுந்தருள்வார். மற்ற மூர்த்தங்களை எடுத்து வாகனங்களில் வைப்பதுபோல, இந்த சண்முகரை மூலத்தானத்தில் இருந்து எடுத்து வாகனத்தில் வைப்பதில்லை. மாறாக உருகுப் பலகை என்ற ஒரு பெரிய பலகையை பீடத்திலிருந்து சன்னதி வாயில் வரை போட்டு, சண்முகப் பெருமானை பலகை மீது இருத்தி சிறிது சிறிதாக அசைத்துப் பீடத்திலிருந்து கேடயத்தில் எழுந்தருள செய்வார்கள். இதுவே உருகு சட்ட சேவை என்று போற்றப்படுகிறது. மேலும் சண்முகப் பெருமான் எழுந்தருளி வீதி உலா சென்று மீண்டும் சன்னதி திரும்பும் வரை உருகு பலகையானது சன்னதியிலிருந்து வாயில் வரை நீட்டி போடப்பட்ட நிலையிலேயே இருக்கும்.
உருகு சட்டை சேவைக்கு பின்னர் சண்முகர் வெட்டி வேர் சப்பரத்தில் எழுந்தருளி, மும்மூர்த்திகளாகிய சிவன், பிரம்மா, விஷ்ணு அம்சத்தில் காட்சித் தருவார். அப்போது அவரின் பன்னிரு கரங்களையும் தரிசனம் செய்ய முடியும்.
குன்றக்குடி சண்முகநாதர் கோவில்
முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட மூவரும் தனித் தனி மயில் வாகனங்களில் அமர்ந்து காட்சி தரும் தனிச்சிறப்பு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது குன்றக்குடி சண்முகநாதர் கோவில் . ஒரு சிறிய குன்றின் மேல் அமைந்துள்ள இந்த முருகன் கோவிலுக்கு செல்ல 149 படிக்கட்டுகள் உள்ளன. முருகப்பெருமானின் சாபத்தால் மயிலே, மலையாகிப் போனதாகவும், அந்த மலை மீதுதான் முருகப்பெருமான் வீற்றிருப்பதாக தலபுராணம் கூறுகிறது. இந்த மலை மயிலின் வடிவத்தை ஒத்திருப்பதால், மயூரகிரி, மயில்மலை, அரசவரம், கிருஷ்ணநகரம் போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இக்கோவில் 1200 ஆண்டுகள் பழமையானது.
கருவறையில் ஆறுமுகமும், பன்னிரண்டு திருக்கரங்களும் கொண்ட முருகப்பெருமான், வள்ளி தெய்வானையுடன் சண்முகநாதர் என்ற பெயருடன் அருள்பாலிக்கிறார். செட்டிமுருகன், குன்றையூருடையான், மயூரகிரிநாதன், மயில்கலைக்கந்தன், குன்றைமுருகன், தேனாறுடையான் என்று பலபெயர்கள் மூலவருக்கு உண்டு.
மூலவர் சண்முகநாதர் கிழக்குத் திசையைப் பார்த்தபடி மயிலின் மீது வலது காலை மடித்தும், இடது காலைத் தொங்க விட்டவாறும் அருள்பாலிக்கின்றார். இடப்பக்கம் தெய்வானை, வலப்பக்கம் வள்ளி என இருவரும் தனித்தனி மயில்களில் அமர்ந்துள்ளனர். இப்படி முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட மூவரும் தனித் தனி மயில் வாகனங்களில் அமர்ந்து தரிசனம் தருவது இத்தலத்தின் தனி சிறப்பாகும்.
இக்கோவிலில் குடிகொண்ட முருகனை போற்றி அருணகிரிநாதர் தம் திருப்புகழிலும், பாம்பன் சுவாமிகள் தன் பாடலிலும் சிறப்பித்து பாடியுள்ளார்கள்.
திருப்பந்துறை சிவானந்தேசுவரர் கோவில்
தலையில் குடுமியுடன், தியான நிலையில் உள்ள முருகன்
வாய் பேச முடியாதவர்கள் வழிபட வேண்டிய கோவில்
கும்பகோணத்திலிருந்து எரவாஞ்சேரி வழியாக மயிலாடுதுறை செல்லும் வழியில் 12 கி.மீ. தொலைவில் உள்ள தேவார தலம் திருப்பேணுபெருந்துறை. தற்போது 'திருப்பந்துறை' என்று அழைக்கப்படுகிறது. இறைவன் திருநாமம் சிவானந்தேசுவரர். இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை. இத்தலத்தில் முருகன் தான் சிறப்புக்கு உரியவர். ஆடி கிருத்திகை இத்தலத்தில் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.
இக்கோவிலில் சுவாமி சன்னிதியின் முன்பு முருகப்பெருமான் தண்டாயுதபாணி என்னும் திருநாமத்துடன், சின் முத்திரையுடன், கண் மூடி நின்ற நிலையில் தியானம் செய்யும் கோலத்தில் இருக்கின்றார். அவரது காது நீளமாக வளர்ந்திருக்கிறது. தலையில் குடுமி இருக்கிறது. தலையில் குடுமியுடன் தியான நிலையில் உள்ள முருகனை வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாது.
பிரம்மாவுக்கு பிரணவத்தின் பொருள் தெரியாததால், முருகப்பெருமான், அவரை சிறையில் அடைத்தார். அதனால் ஏற்பட்ட தோஷத்தினால் முருகப்பெருமானுக்கு பேசும் திறன் குறைந்தது. தோஷம் நீங்குவதற்கு முருகப்பெருமான், இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றார். எனவே வாய்பேசமுடியாதவர்கள், திக்கு வாய் உள்ளவர்கள் கோவில் எதிரே உள்ள மங்கள தீர்த்தத்தில் நீராடி, முருகனுக்கு 45 நாட்கள் தேனபிஷேகம் செய்து, சிவனுக்கு அர்ச்சனை செய்தால் விரைவில் பேச்சு வரும் என்பது நம்பிக்கை.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில்
வேலுக்கு மட்டும் அபிஷேகம் நடக்கும் அறுபடை வீடு
மதுரைக்கு தென்மேற்கில் 8 கி.மீ.தொலைவில் உள்ள அறுபடை வீடு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில். அறுபடை வீடுகளில் இத்தலம் முதல் படை வீடாகும். மற்ற ஐந்து அறுபடை வீடுகளில் நின்ற கோலத்தில் காட்சி தரும் முருகப்பெருமான் இத்தலத்தில் தெய்வானையை மணம் முடித்த கோலத்தில் அமர்ந்தபடி காட்சி தருகிறார். இவரது அருகில் நாரதர், இந்திரன், பிரம்மா, நின்றகோலத்தில் வீணையில்லாத சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும், மேலே சூரியன், சந்திரன், கந்தர்வர்களும் இருக்கின்றனர். சுப்பிரமணியருக்கு கீழே அவரது வாகனமான யானை, ஆடும் உள்ளது.
இங்கு முருகப்பெருமான் குடவரை மூர்த்தியாக இருப்பதால் அவருக்கு அபிஷேகம் கிடையாது. அதற்கு பதிலாக புனுகு மட்டுமே சாற்றப்படுகிறது. அபிஷேகம் அவரது வேலுக்கே நடைபெறுகின்றது. அறுபடை வீடுகளில் வேலுக்கு அபிஷேகம் நடக்கும் கோவில் இது மட்டும் தான். சூரனை ஆட்கொண்டு வெற்றி வேலுடன் முருகப்பெருமான் இங்கு வந்து அமர்ந்ததால், வேலுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
ஆலயத்துளிகள் தனது ஐந்தாம் ஆண்டில் இன்று அடி எடுத்து வைக்கின்றது.
வாசகர்களின் ஆதரவிற்கு எங்கள் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
சுகுமார் & பல்லவி
அருணகிரிநாதருக்கு நடராசர் போல திருத்தாண்டவம் ஆடிக்காட்டிய செந்தில் ஆண்டவன்
ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாக்களில், ஏழாம் நாளன்று நடைபெறும் 'சிவப்புச் சாத்தி' உற்சவம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது. திருச்செந்தூரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என்று இரண்டு மூலவர்கள் உள்ளனர். பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள்.
திருப்புகழ் பாடல் இயற்றிய அருணகிரிநாதர் 800 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். இவர் எழுதிய 'திருப்புகழ்' தேவாரத்திற்கு இணையாகவும், 'கந்தர் அலங்காரம்' திருவாசகத்திற்கு இணையாகவும், 'கந்தர் அனுபூதி' திருமந்திரத்திற்கு இணையாகவும் முருக பக்தர்களால் போற்றப்படுகின்றன. ஒரு சமயம் அருணகிரிநாதர், திருப்பரங்குன்றம் தலத்திற்கு வந்து முருகனை வழிபட்டார். பின்பு திருச்செந்தூர் புறப்பட்டார்.வழி எல்லாம் ஒரே காடாக இருந்தபடியால் அருணகிரிநாதர் வழி தெரியாமல் திகைத்து நின்றார்.அந்நேரம் மயில் ஒன்று காட்சி தந்து,வழிகாட்டி அருணகிரிநாதரை திருச்செந்தூருக்கு அழைத்து வந்தது. திருச்செந்தூரில், முருகப்பெருமான் வடிவில் சிவபெருமானைக் கண்ட அருணகிரிநாதர் 'கயிலை மலையனைய செந்தில்' என்று சிறப்பித்துப் பாடினார்.செந்திலாண்டவனை தம்முடைய தந்தையைப் போல ஆடிக் காட்ட அழைத்தார்.முருகப்பெருமானும், அருணகிரிநாதருக்கு நடராசர் போல திருத்தாண்டவம் ஆடிக் காட்டினார்.
இந்தக் காட்சியை தற்போதும் நினைவு கூறும் வகையில், திருச்செந்தூர் கோவிலில் நடைபெறும் ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாக்களில், ஏழாம் நாளன்று 'சிவப்புச் சாத்தி' செய்யப்படும் நாளில், ஆறுமுகப்பெருமான் எழுந்தருளும் சப்பரத்தின் பின்பகுதியில் முருகப் பெருமான் நடராசர் போல ஆடல் காட்சி தருகிறார். சிவப்பு சாத்தி' என்பது திருச்செந்தூர் முருகப் பெருமானின் மாசித்திருவிழாவின் ஏழாம் நாளில் சுவாமி சண்முகப்பெருமான் அணிந்து கொள்ளும் அலங்காரத்தைக் குறிக்கிறது. ஏழாம் நாளன்று இங்கு சுவாமி சிவப்பு நிற பட்டுத் துணிகளால் அலங்கரிக்கப்பட்டு, சிவப்பு மலர்களால் மலர்மாலைகள் சூடப்பட்டு, தங்கச் சப்பரத்தில் நடராசர் போல ஆடும் திருக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருவார். இந்த நாளில் முருகப்பெருமான் சிவபெருமானின் அம்சமாக காட்சி தருவதாக ஐதீகம். இவ்வாறு, முருகப்பெருமான் நடராசராக காட்சி தருவது, திருச்செந்தூர் முருகனின் திருவிழாக்களில், முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகும்.
எழுச்சூர் நல்லிணக்கீஸ்வரர் கோவில்
முருகப்பெருமான் வடக்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் அரிய காட்சி
ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ஆறுமுகப்பெருமான், தேவ மயில் மற்றும் திருவாசி
சென்னை தாம்பரம் - காஞ்சிபுரம் வழியில், ஒரகடம் சாலை சந்திப்பில் இருந்து சுமார் நான்கு கி.மீ .தொலைவில் அமைந்துள்ளது எழுச்சூர் நல்லிணக்கீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் தெய்வநாயகி. 1200 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.
பொதுவாக, முருகன் கோவில்கள் கிழக்கு அல்லது மேற்கு நோக்கி இருக்கும். முருகன் வடக்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் கோவில்கள் அரிதானவை. இக்கோவிலில் வள்ளி-தெய்வானை சமேதராக முருகப்பெருமான், ஆறு முகங்களோடு வடக்கு நோக்கி எழுந்தருளி இருப்பது தனிச்சிறப்பாகும். மேலும் ஒரே கல்லில் திருவாசியுடன் கூடிய வடிவமைப்பில் ஆறுமுகப் பெருமான் தேவ மயில் மீது அமர்ந்து ஒரு காலைத் தொங்க விட்டுக் கொண்டும் மற்றொரு காலை மடக்கி வைத்துக் கொண்டும் காட்சி அளிப்பது மற்றும் ஒரு தனி சிறப்பாகும்.
ஆறுமுகரைப் பார்த்துக் கொண்டு அவருக்கு எதிரே மயில் வாகனம் கம்பீரமாகக் காட்சி அளிக்கும். ஆறுமுகப் பெருமான் தமது வலப் புறத்து ஆறு கைகளில் வர முத்திரையும், சக்தி, அம்பு, கத்தி, சக்கரம், பாசம் போன்ற ஐந்து ஆயுதங்களையும், இடப் புறத்து ஆறு கைகளில் அபய முத்திரையும், வஜ்ரம், வில், கேடயம், சங்கு, அங்குசம் போன்ற ஆயுதங்களையும் தாங்கி உள்ளார். முருகன் இத்தலத்தில் சாந்த ரூபத்தில் இருப்பதால் இக்கோவிலில் சூரசம்ஹாரம் நடைபெறுவது கிடையாது.
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், அந்த தோஷம் நீங்க, இத்தலத்து முருகப்பெருமானை பிரார்த்தனை செய்கிறார்கள்.