சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோவில்
தெற்குவாசி துர்க்கை அம்மன்
தென்காசியில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் உள்ளது சங்கரன்கோவில். இறைவனின் திருநாமம் சங்கரலிங்கசுவாமி. இறைவியின் திருநாமம் கோமதி அம்மன். உக்கிர பாண்டிய மன்னனால் 10-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது இக்கோவில். . பாண்டிய நாட்டின் பஞ்சபூத தலங்களில் சங்கரன்கோவில், பிரித்திவி(மண்) தலமாக விளங்குகின்றது.
கோமதி அம்மன் கோவிலின் முதன்மைப் பெண் தெய்வம். ஆதிசக்தியான பார்வதியின் அம்சமாக உறையும் அம்மன் இவர். நாகங்கள் அம்மனுடன் குடியிருப்பதால், இந்தத் தேவியை வணங்குவதன் மூலம், பயத்தைப் போக்கலாம். இங்கு உள்ள புற்று மண் மிகவும் பிரசித்தி பெற்றது. புற்று மண்ணை நெற்றியில் திருநீராக எண்ணி பக்தியுடன் பக்தர்கள் இட்டுக்கொள்வார்கள்
சிவனும் விஷ்ணுவும் ஒன்றே என உணர்த்தும் புகழ்பெற்ற சைவ-வைணவ தலம் இதுவாகும். இக்கோவிலில் சிவன் மற்றும் திருமால் சங்கர நாராயணர் என்னும் திருநாமத்துடன் பாதிப்பாதி, உருவமாக காட்சி அளிப்பது சிறப்பாகும்.
பொதுவாக சிவத்தலங்களில் சுவாமியின் கருவறை சுற்றுச்சுவரில், வடக்கு நோக்கி துர்க்கை எழுந்தருளி இருப்பாள். ஆனால் இக்கோவிலில் தெற்கு முகமாக எழுந்தருளி இருக்கும் துர்க்கையைக் காணலாம். அதனால் இந்த துர்க்கையை 'தெற்குவாசி துர்க்கை' என்று அழைக்கின்றனர். தெற்கு என்பது எமதர்மனின் திசையாகும். எனவே, தெற்கு பார்த்தபடி வீற்றிருக்கிற துர்க்கையை, ராகுகாலவேளையில் வணங்கினால், கணவனின் ஆயுள் நீடிக்கும். தாலி பாக்கியம் நிலைக்கும் என்பது நம்பிக்கை. குறிப்பாக, வெள்ளிக்கிழமை ராகுகால வேளையில், எலுமிச்சை தீபமேற்றி வழிபடுவது சிறப்பு.
நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் இருக்கும் இந்த துர்க்கைக்கு, நவராத்திரி நாட்களில் செய்யப்படும் சிறப்பு அலங்காரங்கள், பார்ப்பவரை பரவசமடையச் செய்யும்.
கையில் பாம்பை ஏந்தியவாறு காட்சி தரும் சர்ப்ப விநாயகர்
இக்கோவிலின் சங்கரலிங்கசுவாமி சன்னதியின் கன்னி மூலையில் சர்ப்ப விநாயகர் வீற்றிருக்கிறார். இவர் 6 அடி உயர திருமேனியுடன் சர்ப்பத்தின் மேல் அமர்ந்து காட்சியளிக்கிறார். தனது இடது கையால் சர்ப்பத்தின் தலையை பிடித்தவாறு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவரை வழிபாடு செய்பவர்கள் சர்ப்ப தோஷத்திலிருந்து விடுபட்டு, திருமணத்தடை நீங்கி வாழ்க்கையில் மேன்மை அடைகின்றனர் என்பது இக்கோவிலின் ஐதீகம். இந்த சர்ப்ப விநாயகரை நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் ராகு, கேது போன்ற சர்ப்ப கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும். இராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இவருக்கு ஞாயிற்றுக்கிழமை இராகு காலத்தில், பாலபிஷேகம் செய்து, பால் பாயசம் படைத்து வேண்டிக் கொள்கிறார்கள். குழந்தைகள், விஷப்பூச்சிகளால் பாதிக்கப்படாமல் இருக்க, இவருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வேண்டிக் கொள்கின்றனர். இவரை வழிபட்டால் புத்திர தோஷம் நீங்கி மழலைச் செல்வம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தென்காசியில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் உள்ளது சங்கரன்கோவில்.