மாமாகுடி சிவலோகநாத சுவாமி கோவில்
மகாலட்சுமி சிவபூஜை செய்த தலம்
லட்சுமி கடாட்சம் அருளும் பிரதோஷ கால தீப வழிபாடு
மயிலாடுதுறை - செம்பனார்கோயில் - ஆக்கூர் - திருக்கடையூர் வழித்தடத்தில், ஆக்கூர் முக்கூட்டு சாலையிலிருந்து 2 கி. மீ. தொலைவில் மாமாகுடி சிவலோகநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இறைவன் திருநாமம் சிவலோகநாதர். இறைவி சிவகாமசுந்தரி. இக்கோவில் தேவார வைப்புத்தலமாகும்.
அமிர்தத்தைப் பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த புராண நிகழ்வு நடைபெற்ற தலம் இது. பாற்கடலைக் கடைந்தபோது அமிர்தத்திற்கு இணையான பல புனித வஸ்துக்களும் அதிலிருந்து கிடைத்தன. காமதேனு, கற்பகவிருட்சம், ஐராவதம், உச்சைசிரவஸ் முதலான பல உயர்வான விஷயங்களுடன் தன்வந்திரி பகவானும், செல்வத்திற்கு அதிபதியான திருமகளும் தோன்றினர். இவர்கள் அனைவரும் இத்தலத்தை சுற்றியுள்ள தலங்களில் சிவபூஜை செய்தனர். பாற்கடலில் தோன்றிய அலைமகளான மகாலட்சுமி சிவபூஜை செய்த தலம் தான் திருமால்குடி. இதன் பலனாக திருமாலைத் தன்னுடைய பதியாக ஏற்று மகிழ்ந்த தலமும் இதுதான். இதனால் இத்தலமானது திரு + மால் + மா + குடி என்று வழங்கப்பெற்றது. முதலில் வருகிற 'மால்' என்பது திருமாலையும், அதன்பின்னேயே வருகிற 'மா' ஆனது லட்சுமியையும் குறிக்கிறது. இவ்விருவரும் நிலைத்திட்ட ஊர் குடி எனப்பட்டது. பின்னர் காலப்போக்கில் திருமாமாகுடி என பெயர் மாறியது. திருமகள் புண்ணிய நீராடிய தீர்த்தமானது லட்சுமி தீர்த்தம் என்கிற பெயரில் ஆலயத்திற்கு அருகிலேயே இருக்கிறது.பெரும்பாலான சிவாலயங்களில் கஜலட்சுமியாய் எழுந்தருளி இருக்கும் திருமகள், இத்தலத்தில் இருகரங்களிலும் தாமரை ஏந்தியவளாய் காட்சியளிப்பது தனிச்சிறப்பாகும்.
மகாலட்சுமி இத்தலத்து இறைவனை பூஜை செய்த போது, அனைத்து தேவர்களும் இங்கு தங்கி இருந்தபடியால் இத்தலமே ஒரு சிவலோகம் போலக் காட்சியளித்ததாம். அதனாலேயே இத்தலத்து ஈசருக்கு சிவலோகநாதர் என்கிற திருநாமம் உண்டானது. பிரதோஷ காலமான அந்தி நேரத்தில் சிவலோகநாதருடைய சன்னதியில் விளக்கேற்றி வணங்கிட, இல்லத்தில் லட்சுமி கடாட்சம் நீங்காது நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். மகாலட்சுமி வழிபட்ட தலங்களை தரிசிக்கும்போது வறுமை, கடன் முதலான தோஷங்கள் நீங்கி செல்வநிலை தழைத்திடும் என்பது சூட்சுமம். அதிலும் மகாலட்சுமி அவதரித்த இந்தத் தலத்தில் வழிபட்டால், நம் பின்வரும் பல தலைமுறைகளுக்கு இந்த புண்ணியப் பலன் கிடைத்திடும் என்பது ஐதீகம்.
இருகரங்களிலும் தாமரை ஏந்திய மகாலட்சுமி