கூத்தனூர் சரஸ்வதி கோவில்
ஆயக்கலைகள் அறுபத்தி நான்கினையும் வழங்கும் சரஸ்வதி தேவி
தமிழ் நாட்டில் சரஸ்வதிக்கு என்றே தனியாக கோவில் உள்ள திருத்தலம் கூத்தனூர். கூத்தனூரில், நாம் வீணையை கையில் ஏந்தாத சரஸ்வதியை தரிசிக்கலாம். இத்தலம், மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் பூந்தோட்டம் என்னும் ஊரில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
சரஸ் என்றால், நீர் மற்றும் ஒளி ஆகியவற்றை தடையின்றி வழங்குபவள் என்று பொருள். பிரம்மனின் துணைவியான சரஸ்வதி கல்வி கடவுளாகவும், ஆயக்கலைகள் அறுபத்து நான்கினிற்கும் தெய்வமாகவும் திகழ்கிறாள். இவருக்கு கலைமகள், காயத்ரி, சாரதா என்ற பெயர்களும் உண்டு. சரஸ்வதி கையில் இருக்கும் வீணையின் பெயர் கச்சபி. இவரது சகோதரர் சிவபெருமான்தான் இந்த வீணையை உருவாக்கி, இவருக்கு வழங்கினார்.
இங்கே சரஸ்வதி தேவி வெண்மை நிற ஆடை தரித்தவளாகக் காட்சி தருகிறாள். அவளின் ஆசனமான வெண் தாமரையில் பத்மாசனத்தில் வீற்றிருக்கிறாள். வலது கீழ் கையில் சின்முத்திரையும், இடக்கையில் புத்தகமும், வலது மேல்கையில் அட்சர மாலையும், இடது மேல்கையில் அமிர்தகலசமும் தாங்கியிருக்கிறாள்.
ஜடாமுடியுடன் கருணைபொழியும் இருவிழிகளுடன் 'ஞானச்சஸ்' என்ற மூன்றாவது திருக்கண்ணும் கொண்டு கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள்.
தல வரலாறு
கூத்தனூர் சரஸ்வதி ஆலய தல புராணம், சகோதர சகோதரி மணம் புரிவதற்கான பண்பாட்டுத் தடையினைப் பேசுகிறது. சத்திய லோகத்தில் வாழ்ந்த தம்பதியினரான பிரம்மனுக்கும் சரஸ்வதிக்குமிடையே யார் பெரியவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டது.
கல்விக்கரசியான தன்னாலேயே சத்தியலோகம் பெருமையடைகிறது என்று சரஸ்வதியும், தன் படைப்புத் தொழிலால்தான் சத்தியலோகம் பெருமையடைகிறது என்று பிரம்மனும் வாதிட, வாதம் முற்றி இருவரும் ஒருவரை ஒருவர் சபித்து விட்டனர்.
இதனால் பூலோகத்தில் சோழ நாட்டில் புண்ணியகீர்த்தி, சோபனை என்ற தம்பதியினருக்கு பகுகாந்தன் என்ற மகனாகவும், சிரத்தை என்ற மகளாகவும் அவதரித்தனர். அவர்களுக்கு திருமணவயது வந்த போது பெற்றோர் வரன் தேட ஆரம்பித்தனர். அப்போது இவர்கள் இருவருக்கும் தாங்கள் யார் என்பது நினைவுக்கு வந்தது.
சகோதர நிலையிலுள்ள தாங்கள் திருமணம் செய்து கொண்டால் உலகம் பழிக்குமே என அஞ்சினர். பெற்றோருக்கு இவ்விஷயம் தெரிய வந்தது. அவர்களை சமாதானம் செய்யும் விதத்தில், சிவனை நினைத்து உள்ளம் உருகி பிரார்த்தனை செய்தனர்.
சிவபெருமான் அவள் முன் தோன்றி, இப்பிறவியில் சகோதரர்களாக அவதரித்த நீங்கள், திருமணம் செய்வது என்பது இயலாத காரியம். எனவே, நீ மட்டும் இங்கே தனியாக கோயில் கொண்டிரு. இங்கு வரும் பக்தர்களுக்கு கல்விச் செல்வத்தை வழங்கு" என்று அருள்பாலித்தார். அதன்படி கன்னி சரஸ்வதியாக அவள் கூத்தனூர் ஆலயத்தில் அருள்பாலிக்கிறாள்.
ஒட்டக்கூத்தர் வரகவி பாடும் திறன் அருளிய கலைமகள்
பெரும் புலவரான ஒட்டக்கூத்தர் வரகவி பாடும் திறன் வேண்டி கலைமகளை வழிபட்ட தலம் இது. ஓட்டகூத்தரை எதிரிகள் சூழ்ந்து கொண்டு பரணி பாடினால் விட்டு விடுவதாக கூற, கூத்தரின் நாவில் சரஸ்வதி அமர்ந்து பரணி பாடிட அருளினார். ஓட்டக்கூத்தருக்கும் ஆலயத்தில் தனி சன்னதி உள்ளது.
இத்தலத்தை, இரண்டாம் ராஜராஜன் தன் சபையில் அவைபுலவராக விளங்கிய, சரஸ்வதியின் அருள்பெற்ற ஒட்டக்கூத்தருக்கு பரிசாக வழங்கினார். ஒட்டக்கூத்தருக்கு பரிசாக வழங்கப்பட்டதால் இவ்வூர் கூத்தன் + ஊர் = கூத்தனூர் என்றாயிற்று .
புலவர் கம்பரின் சங்கடங்களை தீர்ப்பதற்காக, இந்த சரஸ்வதி கிழங்கு விற்கும் பெண்ணாகவும் , இடையர் குல பெண்ணாகவும் நேரில் வந்து அருள் புரிந்தார். பிறவி ஊமையான புருஷோத்தமன் என்னும் பக்தனுக்கு தன்னுடைய வாய் தாம்பூலத்தை தந்து, உலகம் போற்றும் புருஷோத்தமா தீட்சிதர் ஆக்கினார்.
சரஸ்வதி பூஜை
சரஸ்வதி பூஜையன்று பக்தர்கள் சரஸ்வதி தேவியின் பாதங்களை தாங்களே மலரிட்டு பூஜிக்கும் வகையில் அம்மனின் பாதங்களை அர்த்த மண்டபம் வரை அமையுமாறு, நீட்டி அலங்கரிப்பது கண்கொள்ளாக் காட்சி ஆகும். விஜயதசமிக்கு இக்கோயிலுக்கு அழைத்துச் சென்று பிள்ளைகளுக்கு முதன்முதலாக கல்வி கற்பிப்பது விசேஷம்.
சரஸ்வதி தேவியின் அவதார நட்சத்திரமான மூலம் நட்சத்திரம் வரும் நாளிலும் விசேஷமாக அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. விசேஷ நாள்களிலும், சரஸ்வதிக்கு உரிய புதன்கிழமைகளிலும் அம்பிகைக்குத் தேனும் பாலும் அபிஷேகம் செய்தால் கல்வியில் மிகச் சிறந்த முறையில் தேர்ச்சி பெறலாம் என்பது ஐதீகம்.
மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் பூந்தோட்டம் என்னும் ஊரில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.