காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில்
திருமால் ஆமை வடிவில் வழிபட்ட தலம்
நந்திகேஸ்வரரும், அவரது மனைவி நந்திகேஸ்வரியும் மனித உருவில் இருக்கும் அபூர்வ காட்சி
காஞ்சிபுரம் மாநகரில் நெல்லுகார தெரு பகுதியில் அமைந்துள்ளது கச்சபேஸ்வரர் கோவில். திருமால் ஆமை வடிவம் கொண்டு இத்தலத்து ஈசனை வணங்கியதால், இத்தலத்து ஈசனுக்கு கச்சபேஸ்வரர் எனப் பெயர். கச்சபம் என்றால் ஆமையைக் குறிக்கும். இக்கோவில் ஒரு தேவார வைப்புத் தலமாகும்.
தேவர்களும் அசுரர்களும் அமுதத்திற்காக பாற்கடலைக் கடையும் பொழுது, திருமால் ஆமையாக (கச்சபம்) இருந்து மந்தர மலையைத் தாங்கி உதவினார்.
அமுதம் கிடைத்தவுடன் திருமால், ஆணவம் அடைந்து உயிர்கள் அனைத்தும் அஞ்சுமாறு கடல்களைக் கலக்கினார். இதைக் கண்ட சிவபெருமான் ஆமையை அழித்து அதன் ஓட்டை, தான் அணிந்திருக்கும் வெண்டலை (தசை இல்லாமல் வெறும் மண்டை ஓட்டினால் ஆன மாலை) மாலையின் இடையில் கோர்த்து அணிந்து கொண்டார்.
தம் செயலுக்கு வருத்தமுற்ற திருமால், காஞ்சியை அடைந்து இங்கேயுள்ள இச்சிவனை வழிபட்டு நீங்காத பக்தியும், வைகுந்த தலைமைப் பதவியும் திரும்பவும் வரப்பெற்றார். திருமால், கச்சபம் (ஆமை) வடிவில் வழிபட்டதால் இது கச்சபேசம் எனப்பட்டது. சுவாமியும் கச்சபேஸ்வரர் (கச்சபேசர்) என விளங்குகிறார்.
நந்திகேஸ்வரரும், அவரது மனைவி நந்திகேஸ்வரியும் மனித உருவில் இருக்கும் அபூர்வ காட்சி
இத்தலத்தில் நந்திகேஸ்வரரும் அவரது மனைவி நந்திகேஸ்வரியும், மனித உருவில் கோவிலின் பாதுகாவலர்களாக எழுந்தருளி இருப்பது ஒரு தனிச்சிறப்பாகும். சிவபெருமான் இந்த உலகத்தில் திருநடனம் ஆடிய போது, அதனைக் காண்பதற்கு, நந்தி பகவான் விரும்பினார்.
மேலும் அந்த திருநடனத்தை தனது துணைவி நந்திகேஸ்வரியுடன் மனித உருவில் காண விரும்பியதால் தான் அவர்கள் இருவரும் இங்கு மனித ரூபத்தில் எழுந்தருளி இருக்கிறார்கள் என்று தலபுராணம் கூறுகிறது.