தலத்தின் தனிச்சிறப்பு

தலத்தின் தனிச்சிறப்பு

நாகராஜன் வழிபட்ட தலங்கள்

நாகராஜன், பூலோகத்தின் அடியில் உள்ள நாகலோகத்தில் இருந்தபடி பூமியை பல காலம் தாங்கி வந்தார். அவர் பூமியின் பாரம் சுமக்க முடியாமல் சிரமப் பட்டார். அதனால் அவர் சிவபெருமானை வேண்டினார். மகாசிவராத்திரி அன்று கும்பகோணம் கீழ்கோட்டமான நாகேஸ்வரன் கோயிலில் முதல் காலத்திலும் திருநாகேஸ்வரத்தில் இரண்டாவது காலத்திலும் திருப்பாம்புரத்தில் மூன்றாவது காலத்திலும் நாகூர் நாக, நாதசுவாமி திருத்தலத்தில் நான்காவது காலத்திலும் தன்னை வழிபட்டால் பழைய வலிமை கிடைக்கும் என சிவபெருமான் அருளினார். அவ்வாறே நாகராஜன் தமது தேவிகளுடன் மகாசிவராத்திரி அன்று நான்கு காலங்களிலும் பூஜை செய்து பழைய வலிமைப் பெற்றார்

ராகு, கேது கிரக தோஷங்கள் உள்ளவர்கள் இந்த நான்கு தலங்களையும் வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

Read More
திருவாப்புடையார் கோவில்

திருவாப்புடையார் கோவில்

மர ஆப்பு சிவலிங்கமான அதிசயம்

மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் கோவிலுக்கு வடக்கே செல்லூர் எஎன்னும் இடத்தில் , வைகைக் கரைக்கு அருகில் தேவாரத்தலமான திருவாப்புடையார். கோவில்  அமைந்திருக்கிறது. இறைவன் திருநாமம் திருவாப்புடையார். இறைவி சுகந்த குந்தளாம்பிகை.

சோழாந்தக மன்னன் என்பவன் மிகச்சிறந்த சிவபக்தன்.  அவன் எப்போதும் சிவபூஜை செய்ந பின்தான் சாப்பிடுவான். ஒரு முறை அவன் அருகிலிருந்த காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். காட்டில் வெகு நேரம் வேட்டையாடியதால் களைப்படைந்து பசியால் வாடினான். மன்னனுடன் சென்ற அமைச்சர், மன்னனின் சோர்வு நீங்க ஏதாவது சாப்பிடும்படி சொன்னார்கள். ஆனால் மன்னன், ' சிவபூஜை செய்த பின்பே உணவு  சாப்பிடுவேன்' என்று சொல்லி மறுத்து விட்டான்.

 அமைச்சர், மன்னன் சிவபூஜை செய்ய வேண்டும் என்பதற்காக, அந்தக் காட்டில் கிடைத்த மரத்துண்டு ஒன்றை எடுத்து, அதைத் தரையில் ஆப்பு போன்று அடித்து வைத்தார். பின்னர் அவர் மன்னனிடம் அந்த மரத்துண்டைக் காட்டி, ;அந்தச் சுயம்புலிங்கத்தை வழிபட்டுவிட்டுத் தாங்கள் சாப்பிடலாம்' என்று சொல்ல, சோர்வுடன் இருந்த மன்னன், அந்த ஆப்பைச் சிவலிங்கம் என நினைத்து வணங்கி விட்டு சாப்பிட்டான். அவனுக்குச் சோர்வு நீங்கிய பிறகு, தான் வணங்கியது சிவலிங்கம் அல்ல, அது மர ஆப்பு என்று தெரிந்தது.

அதை நினைத்து வருந்திய மன்னன், 'இறைவா! நான் இதுவரை உன்னை வழிபட்டு வந்தது உண்மையானால், நான் வணங்கிய இந்த ஆப்பில் இறைவனாக இருந்து அருள் புரிய வேண்டும்' என்று மனமுருக வேண்டினான். மன்னனின் பக்தியில் மகிழ்ந்த இறைவன், அந்த ஆப்பிலேயே இறைவனாகத் தோன்றினார். ஆப்பில் எழுந்தவர் என்பதால் அவருக்கு 'ஆப்புடையார்' என்னும் பெயர் ஏற்பட்டது. அந்த ஊரும் 'ஆப்பனூர்' என்றானது.

ஆற்று மணல் அன்னமாக மாறிய விநோதம்

இங்குள்ள இறைவனான ஆப்புடையார் மற்ற சுயம்பு லிங்கங்களை விடச் சிறப்பு மிக்கவர் என்றும், இவரை வணங்கினால், அனைத்துத் தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்று  தலபுராணம் கூறுகிறது.

சோழாந்தகனின் மரபு வழியில் வந்த சுகுணபாண்டியன் என்பவனது ஆட்சியில் கடுமையான பஞ்சம் நிலவியது. அப்போது இக்கோவில் அர்ச்சகர், நெல்லுக்குப் பதிலாக, வைகை ஆற்று மணலைக் கொண்டு சமைத்தார். அப்போது அந்த மணல் அன்னமாக மாறியது என்றும், அதனால் இத்தல இறைவனுக்கு 'அன்னவிநோதன்' என்கிற பெயர் ஏற்பட்டது..

இத்தலத்தில் ஐப்பசி அன்னாபிஷேகம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பச்சரிசி சாதத்தை வடித்து, அதனை லிங்கத் திருமேனியில் சாற்றுவர். கருகுமணியால் காதணி, கழுத்தில் புடலங்காய் மாலை என லிங்கத் திருமேனியை அலங்கரிப்பார்கள். பூஜை முடிந்ததும் லிங்கத் திருமேனியின் சிரசில் உள்ள சாதத்தை எடுத்து வைகையில் கரைப்பார்கள். இதனால், அந்த நதி இன்னும் புண்ணியம் பெறுவதாக ஐதீகம். மீதமுள்ள சாதத்தைப் பிரசாதமாக வழங்குவர். இந்தப் பிரசாதத்தைச் சாப்பிட, வியாபாரம், விளைச்சல் பெருகும். குபேர யோகம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

கார்த்திகையில் திருவாப்புடையாரை வணங்கினால், சகல செல்வங்களும் வந்துசேரும். வீட்டின் தரித்திரம் விலகும். தடைப்பட்ட காரியங்கள் இனிதே நடந்தேறும் என்பது பக்தர்களின் நமபிக்கை.

Read More
. பரங்கிரிநாதர்.கோவில்

. பரங்கிரிநாதர்.கோவில்

சிவபெருமான் குன்று வடிவில் காட்சி தரும் தேவாரத்தலம்

திருப்பரங்குன்றம் தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.சுவாமியின் திருநாமம் பரங்கிரிநாதர். .அம்பிகை ஆவுடைநாயகி.பரம்பொருளான சிவ பெருமான் குன்றம் எனும் மலை வடிவாகக் காட்சியளிக்கும் இடம் திருப்பரங்குன்றம்.திரு + பரம் + குன்றம் எனப் பிரிக்கப்படுகிறது. பரம் என்றால் பரம் பொருளான சிவபெருமான் குன்றம் என்றால் குன்று (மலை). திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழியாகதச் சேர்த்து திருப்பரங்குன்றம் என ஆயிற்று.

கருவறையில் சிவபெருமான் லிங்க உருவில் அமர்ந்துள்ளார். இக்கருவறையில் லிங்கத்திற்குப் பின்னால் சிவனும், சக்தியும் அமர்ந்துள்ளனர். இது போல் கோவில்களில் லிங்கத்திற்குப் பின்னால், அம்மையும், அப்பனும் அமர்ந்து காட்சி தருவது, மிகச் சொற்பமான கோவில்களில் மட்டுமே. கும்பகோணம் அருகிலுள்ள திருநல்லூர் , அதிகை வீரட்டானம், வேதாரண்யம் , காஞ்சீபுரம், திருவீழிமிழலை ஆகியவை அவற்றில் சிலவாகும்..

Read More
எமதர்மராஜன் கோவில்

எமதர்மராஜன் கோவில்

எமதர்மராஜாவிற்கென்று தனிக்கோவில்

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை – புதுக்கோட்டை செல்லும் சாலையில் பட்டுக்கோட்டையிலிருந்து சுமார் 16 கி.மீ தொலைவில் உள்ளது திருச்சிற்றம்பலம் எமதர்மராஜா கோவில். இதுவரை, சில கோயில்களில் எமதர்மனுக்கென்று தனிச் சந்நிதிகள் மட்டுமே இருந்தது. ஆனால் இக்கோவில், எமனுக்கென்று தனிக்கோவிலாக இருப்பது தனிச்சிறப்பாகும்.

இக்கோவிலில் எமதர்ம ராஜா ஆறடி உயர எருமை வாகனத்தின் மீது, முறுக்கிய மீசையுடன், பாசக்கயிறு, ஓலைச்சுவடி மற்றும் கதையுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார் . இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக இந்தப் பகுதி மக்களுக்கு இவர்தான் இஷ்ட தெய்வம். சாதாரண மண் கோயிலாக இருந்த இந்தக் கோயில், சில ஆண்டுகளுக்கு முன் புதிதாக நிர்மாணிக்கப்பட்டது.

எமதர்ம ராஜா கோவில் உருவான வரலாறு

ஒரு சமயம் பார்வதிதேவி பிரகதாம்பாள் என்ற திருநாமத்துடன் சிறு குழந்தையாக அவதரித்தார். சிவபெருமான் பிரகதாம்பாளை எமதர்ம ராஜாவிடம், ஒப்படைத்து பூலோகத்துக்குக் கூட்டிச் செல்லுமாறும், அந்தப் பெண் குழந்தை பெரிய பெண் ஆன பின்னர் தனக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டும் என கட்டளையிட்டார். திருச்சிற்றம்பலத்தில் வளர்ந்ந பிரகதாம்பாள் திருமண பருவத்தை அடைநததும், தேவர்கள் அனைவரும் ஒன்றுகூடி, பிரகதாம்பாளை சிவபெருமானுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்கின்றனர். அந்நேரம், சிவபெருமான் நிஷ்டையில் இருக்கவே, மன்மதனை வைத்து சிவபெருமானின் நிஷ்டையைக் கலைக்க முடிவு செய்கின்றனர். அதன்படி திருச்சிற்றம்பலத்திலிருந்து மிக அருகில் உள்ள மன்மதனின் ஊரான மதமட்டூரிலிருந்து சிவபெருமானின் மீது பூங்கணை தொடுக்கிறார் மன்மதன்., கடும் கோபத்துடன் கண் விழித்த சிவபெருமான் தன் நெற்றிக்கண் பார்வையால் மன்மதனை அழித்தார். பின்னர், மன்மதனின் மனைவி ரதிதேவி மன்மதனை ,உயிர்ப்பிக்கும்படி சிவபெருமானிடம் வேண்டினார். ஆனால் சிவபெருமான், மாண்டவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது என்றும், வேண்டுமானால் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் மன்மதனுக்குத் திருவிழா நடைபெறும்போது மட்டும் ரதியின் கண்ணுக்குத் தெரியும்படி செய்வதாகவும் கூறி அருளினார்.

எமதர்ம ராஜா பூஜையின் சிறப்புகள்

எமதர்ம ராஜாவை சனிக்கிழமைகளில் எமகண்ட நேரத்தில் வழிபடுவது மிகவும் சிறப்பானப் பலன்களைத் தரும். ஒவ்வொரு நாளும் எமகண்ட நேரத்தில் எமதர்மனுக்கு பூஜைகள் நடக்கும். திருமணம், வளைகாப்பு போன்ற மங்கல நிகழ்வுகளின் பத்திரிகைகளை எமதர்ம ராஜாவின் காலடியில் வைத்து வழிபடுவது வழக்கம்.

பணத்தை வாங்கிக் கொண்டு யாரேனும் ஏமாற்றியிருந்தால் அவர்களின் பெயரை ஒரு பேப்பரில் எழுதி அதை பூஜித்து சூலத்தில் கட்டி விடும் வழக்கம் உண்டு. இதற்கு 'படி கட்டுதல்' என்று பெயர். படி கட்டிய சில நாள்களிலேயே கொடுத்த பணம் பலருக்குத் திரும்பக் கிடைத்துள்ளது. எமபயத்தைப் போக்கிக் கொள்ளவும், ஆயுளை நீட்டித்துக் கொள்ளவும் , திருமணத் தடை நீங்கவும் இங்கே வழிபடுகிறார்கள்.

Read More
தலத்தின் தனிச் சிறப்பு

தலத்தின் தனிச் சிறப்பு

இரண்டு தேவாரப் பதிகங்கள் பெற்ற தலங்கள்

திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் மொத்தம் 276. அவற்றில் மூன்று தலங்களில் மட்டும், தனித்தனியே இரண்டு தேவாரப் பதிகங்கள் அங்கு வெவ்வேறு சன்னதிகளில் எழுந்தருளியுள்ள சிவபெருமானைப் போற்றிப் பாடப்பட்டுள்ளது. அந்த மூன்று தலங்கள் திருமீயசச்சூர், திருப்புகலூர் மறறும் திருவாரூர் ஆகும்.

Read More
இராமநாதர் கோவில்

இராமநாதர் கோவில்

பாதாள பைரவர்

இராமர், இராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்தபோது அவரைப்பிடித்த பிரம்மஹத்தி தோஷம் (கொலை செய்த பாவம்) விலகியது. அந்த தோஷம் எங்கு செல்வதென தெரியாமல் திணறியது. அதனால் வேறு யாருக்கும் பாதிப்பு உண்டாகாமல் இருக்க, சிவன் பைரவரை அனுப்பினார். அவர் பிரம்மஹத்தி தோஷத்தை தன் திருவடியால் அழுத்தி, பாதாளத்தில் தள்ளினார். பின்னர்இராமேஸ்வரத்திலேயே அமர்ந்து, இங்கு வரும் மனம் திருந்திய பக்தர்களின் கொடிய பாவங்களைப் பாதாளத்துக்குள் தள்ளுபவராக அருள் செய்கிறார். இவருக்கு 'பாதாள பைரவர்' என்று பெயர். இவரது சன்னதி கோடிதீர்த்தம் அருகில் உள்ளது. இந்த பைரவரை வழிபட்டால் கொடிய தோஷமான பிரம்மஹத்தி தோஷம் (கொலை செய்த பாவம்)வறுமை, நோய் யாவும் உடனடியாக அகலும்.

Read More
திருவேட்டீசுவரர் கோவில்

திருவேட்டீசுவரர் கோவில்

சிவபெருமான் தன் திருமேனியுடன் பள்ளியறைக்கு எழுந்தருளும் தனிச்சிறப்பு

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் அமைந்துள்ளது திருவேட்டீசுவரர் கோவில். இறைவன் திருநாமம் திருவேட்டீசுவரர். அம்மனின் திருநாமம் செண்பகவல்லி.

பொதுவாக சிவாலயங்களில் அர்த்தஜாம பூஜை முடிந்தபின், பள்ளியறைக்கு சிவபெருமானின் பாதங்களை கொண்டு செல்வது வழக்கம். ஆனால் இத்தலத்தில், சிவபெருமான் தன் திருமேனியுடன் பள்ளியறைக்கு எழுந்தருளுகிறார். இது வேறு எந்த தலத்திலும் நடைமுறையில் இல்லாத தனிச்சிறப்பாகும்.

இத்கோவில் சிவபெருமான், அம்பிகை, முருகன் ஆகிய மூவருக்கும் தனித்தனியே மூன்று கொடிமரங்கள் உள்ளன. இது வேறு எந்த தலத்திற்கும் இல்லாத மற்றுமொரு தனிச்சிறப்பாகும்.

ராகு கேது பரிகாரத் தலம்

இத்கோவில் ராகு கேது பரிகாரத் தலமாகும். எனவே ராகு கேது தோஷம் உள்ளவர்கள் அந்த கிரகங்களுக்குரியய தானியங்களான உளூந்து, கொள்ளு, மந்தாரை மற்றும் செவ்வரளி மலர் கொண்டு திருவேட்டீசுவரரை வழிபட்டால் நற்பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Read More
திருவேட்டீசுவரர் கோவில்

திருவேட்டீசுவரர் கோவில்

வேடுவனாக வந்த சிவபெருமான்

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் ஜாம் பஜார் மார்கெட் அருகில் அமைந்துள்ளது திருவேட்டீசுவரர் கோவில். இறைவன் திருநாமம் திருவேட்டீசுவரர். அம்மனின் திருநாமம் செண்பகவல்லி. திருநாவுக்கரசரால் தேவார வைப்புத் தலமாக காப்புத் திருத் தாண்டகத்தில் பாடப்பட்டுள்ளது.

செண்பக வனத்தில் தவம் செய்த செண்பகவல்லியை மணந்த சிவபெருமான் திருவேடீஸ்சுவரர் என்று அழைக்கப்படுகிறார் . இவர் இங்கு சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார். இவர் தலையில் வெட்டு தழும்புடன் காட்சி தருகிறார் . இந்த தழும்பு அர்ச்சுனனால் உண்டாக்கப்பட்டது . அர்ச்சுனன் பாசுபத அஸ்திரம் பெற வழிபட்டபோது வேடுவனாக வந்த சிவனை உணராமல் , அவரின் தலையில் அடிக்க , தலையில் வெட்டுண்டு தழும்பு உருவானது . வேடுவனாக இறைவன் காட்சி தந்ததால் வேட்டீசுவரன் என பெயர் பெற்றார் .

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு வேட்டகம் (மாமியார் வீடு) ஆன தலம்

இலக்குமி தாயார் திருமாலை அடைய இங்கு இருந்து தவம் செய்தாள் .திருமால் பார்த்தசாரதியாக வந்து இங்கு இருந்த இலக்குமி தாயாரை கைபிடித்ததால், பார்த்தசாரதிக்கு இத்தலம் வேட்டகம் (மாமியார் வீடு) ஆனது, அதனால் திருவேட்டக ஈஸ்வரன் பேட்டை என அழைக்கப்படுகிறது.

மொகலாயர், ஆங்கிலேயர்களால் மான்யங்கள் வழங்கப்பட்ட கோவில்

இக்கோவிலானது 7 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகும் . மொகலாய பேரரசர் காலத்தில் மான்யங்கள் இத்கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியர் ஆட்சிக்காலத்தில் 1.11.1734ல் இக்கோவில் நிலங்களுக்கு வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

அமீர் மஹாலிலிருந்து வரும் அர்த்தசாம பூஜைப் பொருட்கள்

ஆற்காடு நவாப் காலத்தில் மான்யங்கள் தரப்பட்டு இத்தலம் விருத்தி அடைந்ததாக வரலாற்றுச் செய்திகள் சொல்கின்றன. இன்றும் அர்த்தசாம பூஜைக்கு, ஆற்காடு நவாப் பரம்பரையினர் மூலமாக, அவரகள் தற்போது வசித்து வரும் அமீர் மஹாலிலிருந்து, பால், புஷ்பம் இத்தலத்து இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது.

Read More
இராமநாதர் கோவில்

இராமநாதர் கோவில்

அபிஷேகம் செய்தாலும் கரையாத உப்பு லிங்கம்

இராமபிரான் ராவணனை வதம் செய்த தோஷம் விலக ராமேஸ்வரத்தில் சிவலிங்க பூஜை செய்ய விரும்பினார். லிங்கப் பிரதிஷ்டை செய்வதற்காக அனுமனை காசித் தலத்திற்கு அனுப்பி சிவலிங்கத் திருமேனியை எடுத்து வரச் செய்ய, அனுமன் வருவதற்கு தாமதமாகவே சீதாதேவி மணலால் பிடித்து வைத்த லிங்கத்திற்கு இராமபிரான் பூஜைகள் செய்தார். அந்த மணலால் ஆன சிவலிங்கத் திருமேனிதான் தற்போது இராமநாதர் என்ற திருநாமத்துடன் கருவறையில் அருள் பாலிக்கிறார் என்பது ஐதிகம்.

இராமநாதர் சன்னிதிக்கு பின்புறம் உப்புக்கல்லால் செய்யப்பட்ட ஒரு பழமையான லிங்கம் உள்ளது. பல வருடங்களாக அந்த உப்புக்கல்லால் செய்யப்பட்ட உப்பு லிங்கம் கரையாமல் அப்படியே உப்புக்கல்லாகவே இருப்பது மிகவும் அதிசியமாகும்.

இந்த லிங்கம் உருவானதற்கு ஒரு சுவையான பின்னணி உள்ளது. ஒரு முறை சிலர்,இராமேஸ்வரம் கோவிலில் உள்ள லிங்கம் மணலால் ஆனது அல்ல என்றும், அப்படி மணலால் செய்யப்பட்டது என்றால், அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்றும் வாதம் செய்தார்கள்.

அந்த நேரத்தில் பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர், தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பில் ஒரு லிங்கம் செய்து, அதற்கு அபிஷேகம் செய்தார். ஆனால் அந்த லிங்கம் கரையவில்லை.

அம்பாளை வணங்கும் சாதாரண மனிதனான தன்னால் பிரதிஷ்டை செய்யபட்ட லிங்கமே கரையாதபோது, காக்கும் கடவுளின் மனைவியான சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாமல் இருப்பதில் என்ன அதிசயம் இருக்கிறது என்று கூறினார். அவர் செய்த உப்பு லிங்கத்தை இப்போதும் நாம் தரிசனம் செய்யலாம்.

Read More
திருநோக்கிய அழகியநாதர் கோவில்

திருநோக்கிய அழகியநாதர் கோவில்

சிவபெருமானுக்கு துளசி தளத்தால் அர்ச்சனை செய்யப்படும் தலம்

மதுரை ராமேஸ்வரம் சாலையில் சுமார் 34 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தலம் திருப்பாச்சேத்தி. இறைவன் திருநாமம் திருநோக்கிய அழகியநாதர். இறைவி மருநோக்கும் பூங்குழலியம்மை.

திங்கட்கிழமைகளில் ஈசனுக்கு துளசித்தள அர்ச்சனை

பொதுவாக சிவாலயங்களில் சிவபெருமானுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்வார்கள். பார்வதி தேவி, தனது குறைகளை போக்க வேண்டி இத்தலத்தில், திங்கட்கிழமையில் துளசி தளங்களால் சிவபெருமானை வழிபட்டாளாம். அதனால் திங்கட்கிழமைகளில் இத்தல ஈசனுக்கு துளசித்தள அர்ச்சனை நடைபெறுகிறது.

மகாலட்சுமி வழிபட்ட தலம்

திருமணமானபின், கருத்து வேறுபாட்டால் பிரிந்த கணவன் மனைவியர், அழகிய நாதரை வழிபட்டால், பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்கிறார்கள். நளமகாராஜன் இத்தல இறைவனை வழிபட்டு பிரிந்த மனைவி, குழந்தையை அடைந்தான். மகாலட்சுமியே வழிபட்ட தலம். ஆதலால் இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு திருமணம் கைகூடுகிறது. குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும், சனி தோஷம் நிவர்த்தி, கலி தோஷ நிவர்த்தி, பிரம்மகத்தி தோஷ நிவர்த்தி வேண்டுபவர்களும் இத்தலம் வந்து தரிசனம் செய்ய சிறந்த பலன் கிடைக்கும். பழமையான இத்தலத்திற்கு வந்தால் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இங்குள்ள இரண்டு மரகதலிங்கங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இரண்டு மரகதலிங்கங்களை ஒருசேர தரிசிப்பது மிகவும் அபூர்வம். எட்டு வகையான சனிதோஷங்களும் இவரை வழிபட்டால் விலகும் பிரதோஷ நாட்களில் இவருக்கு சிறப்பு பூஜைஅள் உண்டு அப்போது மட்டும் மரகத லிங்கம் தரிசனம் கிட்டும்.

Read More
அகதீஸ்வரர் கோவில்

அகதீஸ்வரர் கோவில்

சரும நோய்கள் தீர்க்கும் தலம்

தி ருவாரூர் - திருத்துறைப்பூண்டி பாதையில் திருவாரூரில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள பொன்னிரை கிராமத்தில் அமைந்துள்ளது அகதீஸ்வரர் கோவில். இத்தலத்தில் உள்ள சிவலிங்கம் அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது, அதனால் இறைவனுக்கு அகதீஸ்வரர் என்று பெயர். இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி. இத்தல இறைவனுக்கு நெல்லிக் கனிப் பொடி மற்றும் அரிசி மாவால் அபிஷேகம் செய்தால் சரும நோய்கள் தீரும் என்பது ஐதீகம்.

Read More
வில்வவனேசுவரர் கோவில்

வில்வவனேசுவரர் கோவில்

பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் துவாரபாலகர்களாக விளங்கும் அபூர்வ கோலம்

கும்பகோணம் திருவையாறு சாலையில் சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருவைகாவூர். இறைவன் திருநாமம் வில்வவனேசுவரர்

இத்தலத்தில் பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் துவாரபாலகர்களாக விளங்குகிறார்கள். அதனால் இத்தலம் மும்மூர்த்திகள் தலம் என்று போற்றப்படுகிறது.

பிரளய காலத்தில் தன்னுடைய ஆக்கும் தொழில் அழியாமல் இருக்க பிரம்மா இங்கே ஒரு கேணி உண்டாக்கி சிவபெருமானை வழிபட்டபின் ஆலய துவாரபாலகனாக ஒருபுறம் அமர்ந்து விட்டார். சலந்திரனை அழிப்பதற்காக அவன் மனைவியிடம் ஒரு பொய் கூறினார் திருமால். இதை அறிந்து கொண்ட அவள் மகாவிஷ்ணுவை சபித்தாள். அச்சாப்ம் தீரவே திருமால் இங்கே துவாரபாலகனாக நின்று தவம் புரிகிறார் என்கிறது தலபுராணம். இப்படி பிரம்மாவும், விஷ்ணுவும் துவாரபாலகர்களாக நிற்பது வேறு எந்த ஆலயத்திலுமே பார்க்க முடியாது.

வீணையுடன் தட்சணாமூர்த்தி

பெருமாள், பிரம்மாவிற்கு அருகில் ஒரே கல்லில் வடிக்கப்பட்ட 4 அடி உயர தட்சணாமூர்த்தி நின்ற கோலத்தில் கையில் வீணையுடன் அருள்பாலிக்கிறார். இப்படி வீணை ஏந்திய தட்சணாமூர்த்தியை வேறு எங்கும் காண முடியாது

துர்க்கைக்கு எதிரில் இரு சண்டேஸ்வரர் திருமேனிகள் உள்ளன. இதுவும் ஒரு அபூர்வ அமைப்பாகும். நவகிரகங்கள் இத்தலத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More
பொது ஆவுடையார் கோவில்

பொது ஆவுடையார் கோவில்

திங்கட்கிழமை இரவு மட்டுமே திறந்திருக்கும் சிவன் கோவில்

முடி வளர்வதற்காக பெண்கள் அளிக்கும் விளக்குமாறு காணிக்கை

பட்டுக்கோட்டையில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் நெடுஞ்சாலையில் 12 கி. மீ தொலைவில் அமைந்துள்ள பரக்கலக்கோட்டை என்ற ஊரில் பொது ஆவுடையார் கோவில் உள்ளது.

சிவபெருமான், வான் கோபர், மகாகோபர் என்ற இரண்டு முனிவர்களுக்கு இடையே, இல்லறம் சிறந்ததா, துறவறம் சிறந்ததா என ஏற்பட்ட சந்தேகத்தை இங்குள்ள ஆலமரத்தில் குருவடிவில் உட்கார்ந்து தீர்த்து வைத்தாராம் . இரண்டு முனிவர்களுக்கும் பொதுவாக இருந்து, நடுநிலையாக இருந்து சிவனார் அருளியதால், இந்தத் தலத்து இறைவனுக்கு பொது ஆவுடையார் எனும் திருநாமம் அமைந்தது.

இந்த சம்பவம் திங்கட்கிழமையில் நடைபெற்றதால் பல வருடங்களாக திங்கட்கிழமை இரவு மட்டுமே இந்த கோவில் திறக்கப்படுகிறது. இங்கு மூலஸ்தானத்தில் உள்ள ஆலமரமே சிவனாக காட்சி அளிக்கிறார். வெள்ளால மரமே இங்கு மூலவராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆலயத்தில் கருவறைக் கதவு பித்தளைத் தகட்டால் வேயப்பட்டுள்ளது. திறந்ததும் வெள்ளால மரத்தை தரிசிக்கலாம். மேலும், மரத்தில் சிவலிங்க வடிவம் போலவே அலங்கரித்து பூஜைகள் செய்கிறார்கள். திங்கட்கிழமை இரவு மட்டுமே திறக்கப்படும் இந்த கோவில் இரவு நடுநிசி 12 மணி பூஜைக்கு பின்னர் நடை சாற்றப்படும். மீண்டும் மறுவாரம் தான் திறக்கப்படும். பிற நாட்களில் கருவறைக் கதவையே கடவுளாக எண்ணி வழிபட்டுச் செல்கின்றனர் பக்தர்கள். இங்கு சிவபெருமானே பிரதானம் என்பதால் அம்பாள் சன்னதி கிடையாது.

பெண்கள் அளிக்கும் வினோதமான விளக்குமாறு காணிக்கை

பெண்கள் தங்களுக்கு முடி வளர வேண்டும் என்பதற்காக இக்கோயிலுக்கு விளக்குமாற்றை காணிக்கையாக வேண்டிக்கொள்கிறார்கள். தென்னங்கீற்றில் உள்ள குச்சிகளை கொண்டு தாங்களே விளக்குமாற்றை செய்து கோயிலுக்கு காணிக்கையாக வழங்குகிறார்கள். இப்படிச் செய்வதால் தென்னங்கீற்று போல தங்கள் முடியும் வளரும் என்பது அவர்களின் நம்பிக்கை. இப்படி காணிக்கையாகச் செலுத்தப்பட்ட விளக்குமாறுகள் ஆயிரக்கணக்கில் குவிந்து விடுகின்றன என்கிறார்கள்.

கார்த்திகை மாதம் சோமவாரத்துக்கு இங்கு அதிக பக்தர்கள் வந்து செல்கின்றனர். வருடம் ஒரு முறை தை பொங்கலன்று மட்டும்தான் இக்கோவில் நாள் முழுவதும் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு திங்கட்கிழமையும் இரவு இந்த கோவில் பூஜையில் கலந்து கொண்டால் எண்ணியது ஈடேறும் என்பது நம்பிக்கை. இவரை வேண்டிக் கொண்டு, எந்த வியாபாரத்தை துவங்கினாலும் லாபம் அமோகமாக இருக்கும் என்கிறார்கள் பக்தர்கள் .

Read More
சித்திரகுப்தன் கோவில்

சித்திரகுப்தன் கோவில்

நம் பாபப் புண்ணிய கணக்கெடுக்கும் சித்ரகுப்தன்

அசுவினி,மகம்,மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நற்பலன் தரும் தலம்

ஒவ்வொரு வீட்்டிலும் வரவு செலவுக் கணக்கு எழுதுவது என்பது நாம் எல்லோரும் அறிந்த விஷயம்.ஆனால் நம் ஒவ்வொருடைய புண்ணியச் செயல்களையும் பாபக் காரியங்களையும் தனித் தனியே பட்டியலிட்டு அதை எமதர்மராஜனுக்குக் கொடுப்பவர் ஒருவர் இருக்கிறார்.அவர்தான் சித்திரகுப்தன். எமதர்மராஜன், சித்திரகுப்தன் தரும் நம் பாவப் புண்ணியக் கணக் கை ஆராய்ந்து, அதில், நாம் செய்திருந்த புண்ணியங்கள் அதிகமானால் நமக்கு மோட்சப் பதவியும் பாவக் காரியங்கள் மிகுதியானால் மறுபிறவியும் நமக்கு அளித்திடுவார்.

சித்திரகுப்தனுக்கென்று தனி கோவில் காஞ்சிபுரம் நெல்லுக்காரத் தெருவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரகுப்தன் வலது காலைத் தொங்க விட்டும் இடது காலை மடித்தும் அமர்ந்த நிலையில் காட்சித் தருகின்றார்.அவர் வலக் கையில் எழுத்தாணியும் இடக் கையில் ஏடும் இருக்கின்றது.

சித்திரகுப்தனின் கதை

எமதர்மராஜன் சிவபெருமானை ஒரு நாள் கைலாயத்தில் சந்தித்து தனக்கு பூலோகத்திலுள்ள ஆன்மாக்களின் பாவப் புண்ணியங்களைப் பரிசீலித்து அந்த ஆன்மாக்களின் அடுத்த நிலை என்ன என்பதுப் பற்றி முடிவு எடுக்க மிகுந்த சிரமமாக உள்ளது என்றும் அதனால் பாவப் புண்ணியக் கணக்குகளை நிர்வகிக்க தனக்கு ஒரு உதவியாளர் வேண்டுமென்றும் வேண்டுகோள் வைத்தார். சிவபெருமான் பிரம்மதேவனிடம் எமதர்மராஜனின் வேண்டுகோளை நிறைவேற்றித் தருமாறு உத்திரவிட்டார்.

பிரம்மதேவன் எமதர்மனுக்கு ஒரு சகோதரனைப் படைத்து அச்சகோதரனே எமதர்மராஜனுக்குப் பாவப் புண்ணியக் கணக்கு எழுத உதவியாக இருக்கட்டும் என்று தீர்மானித்தார்,

பிரம்மதேவன் வானவில்லின் ஏழு வர்ணங்களிலிருந்து நீளாதேவி என்னும் பெண்ணைப் படைத்தார்.பின்னர நீளாதேவிக்கும் எமதர்மராஜனின் தந்தையான சூரிய தேவனுக்கும் திருமணம் நடந்தது.இவர்கள் இருவருக்கும் பிறந்த குழந்தைதான் சித்திரகுப்தன்.சித்திரை மாதம் சித்ரா பௌணர்மி தினத்தன்று பிறந்ததால் முதலில் சித்திரைப்புத்திரன் என்று பெயரிட்டார்கள்.பின்னர் சித்திரகுப்தன் என்று அழைக்க ஆரம்பிததார்கள். சித்திரகுப்தன் குழந்தையாய் பிறந்தபோது, அவன்பிற்காலத்தில் நிர்வகிக்கப் போகும் கணக்குப் பணியைக் குறிக்கும் விதத்தில், இடது கை உள்ளங்கை ரேகைகளில் ஏடு போன்ற அமைப்பும் வலது கை உள்ளங்கை ரேகைகளில் எழுத்தாணிப் போன்ற அமைப்பும் இருந்ததாம்.

சித்திரகுப்தன் வளர்ந்தபின் மூன்று பெண்களைத் திருமணம் செய்து கொண்டான்.அதன் பின்னர் தந்தை சூரியதேவனால் பாவப் புண்ணியக் கணக்கு எழுத,எமதர்மராஐனுக்கு உதவியாக இருப்பதற்காக, அனுப்பப் பட்டான்.

சித்திரகுப்தனை வணங்குவதால் கிடைக்கும் பலன்கள்

நவக்கிரகங்களில் கேது பகவான, ஒரு ஜாதகரின் மோட்சப் பதவியை தீர்மாணிப்பதால் அவருக்கு மோட்சகாரகன் என்ற பெயறும் உண்டு. நம் பாவப் புண்ணியக் கணக்கின் அடிப்படையில் நமக்கு மறுபிறவியா அல்லது மோட்சமா என்று தீர்மானிக்கும் சித்திரகுப்தன்தான் கேது பகவானின் அதிதேவதை ஆவார்.

எனவே சித்திரகுப்தனை வணங்கினால்,கேது பகவானால் ஏற்படக்கூடிய தீயப் பலன்களெல்லாம் விலகி நற்பலன்கள் உண்டாகும். ஐந்து பௌணர்மிகளில் சித்திரகுப்தனைத் தொடர்ந்து தரிசித்து அர்ச்சனை செய்தால், திருமணம் கைக்கூடும். இத்தலம் கேது நிவர்த்தி தலம் என்பதால், கேது திசை ஆரம்பிக்கும் நிலையில் உள்ளவர்களும் மற்றும் அசுவினி,மகம்,மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் இந்த ஆலயத்தில் அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபடுவது மிகுந்த நற்பலன்களக் கொடுக்கும்.

Read More
யோகநந்தீஸ்வரர் கோவில்

யோகநந்தீஸ்வரர் கோவில்

பெண் சாபம் போக்கும் தலம்

கும்பகோணம்- மயிலாடுதுறை செல்லும் வழியில் 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருவிடைமருதூர். அங்கிருந்து வடமேற்கில் 3 கிலோமீட்டர் தூரத்தில் திருவிசநல்லூர் திருத்தலம் இருக்கிறது. இத்தல இறைவனின் திருநாமம் யோகநந்தீஸ்வரர் என்பதாகும். இறைவி சவுந்திரநாயகி. பெண் பாவம் போக்கும் திருத்தலமாகவும், ரிஷப ராசியினருக்கு உரிய திருத்தலமாகவும், பிரதோஷ வழிபாட்டிற்கு மிக உகந்த திருத்தலமாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது.

கேரள மன்னன் கணபதி என்பவனின் பெண் பாவத்தை போக்கிய திருத்தலம் திருவிசநல்லூர் ஆகும். பெண்களை வஞ்சித்து, ஏமாற்றி வாழ்ந்த கணபதியின் பெண் பாவம் இங்கு வழிபட அகன்றதாம். நம் வாழ்வில் அறிந்தோ, அறியாமலோ செய்த தவறால் பெண் சாபத்திற்கு ஆளாகியிருந்தால், இத்தலம் வந்து வழிபட சாபம், பாவம் நீங்கும்.

நான்கு யுக பைரவர்கள்

இந்த ஆலயத்தில் 4 பைரவர்கள் ஒரே சன்னிதியில், யுகத்திற்கு ஒரு பைரவராக அருள்கின்றனர். எனவே இவர்களை சதுர்கால பைரவர்கள் என்று அழைக்கிறார்கள். ஞான கால பைரவர், சொர்ண ஆகர்ஷண பைரவர், உன்மத்த பைரவர், யோக பைரவர் என்பது இவர்களின் திருநாமங்கள்.

Read More
பள்ளிகொண்டீஸ்வரர் கோவில்

பள்ளிகொண்டீஸ்வரர் கோவில்

தக்ஷிணாமூர்த்தி தன் மனைவியுடன் இருக்கும் அபூர்வ காட்சி

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சுருட்டப்பள்ளியிலுள்ள பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள பெரும்பான்மையான தெய்வங்கள், தம்பதி சமேதராக காட்சி தருவது இக்கோயிலின் தனிச் சிறப்பாகும். மூலவர் பள்ளி கொண்ட ஈஸ்வரன் - சர்வ மங்களாம்பிகை, வால்மீகிஸ்வரர் - மரகதாம்பிகை, விநாயகர் - சித்தி, புத்தி, சாஸ்தா - பூரணை, புஷ்கலை, குபேரன் - கவுரிதேவி, சங்கநிதி மற்றும் பதுமநிதி இப்படி அனைவரும் தத்தம் மனைவியருடன் உள்ளனர். இங்கு தட்சிணாமூர்த்தி தனது மனைவி தாராவுடன் காட்சி தருகிறார். இது வேறு எந்த கோவிலிலும் காணக்கிடைக்காத அரிய காட்சியாகும். இந்த தட்சிணாமூர்த்தியை வணங்கினால் ஞானம், கல்வி, குழந்தைபேறு, திருமண பாக்கியம், மாங்கல்ய பாக்கியம் கைகூடும் என்பது நம்பிக்கை.

Read More
கண்ணாயிரநாதர் கோவில்

கண்ணாயிரநாதர் கோவில்

இழந்த பொருள்களை மீட்டுத் தரும் சொர்ணாகர்ஷண கால பைரவர்

திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலை வழியில் திருவாரூரில் இருந்து 13 கி.மி. தெற்கே, பிரதான சாலை ஓரத்திலேயே திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் கோவில் உள்ளது.

இத்தலத்தில் மூன்று பைரவர்கள் ஒரே சன்னதியில் அருள்பாலிக்கிறார்கள். இது வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாத ஒரு அரிய காட்சியாகும். காலை,மதியம், இரவு என்று மூன்று காலங்களிலும் வணங்க வேண்டிய மூன்று பைரவர்கள் அருகருகே இங்கே எழுந்தருளியிருக்கிறார்கள். இவர்கள் முறையே காலை பைரவர், உச்சிகால பைரவர் மற்றும் சொர்ணாகர்ஷண பைரவர் என்று அழைக்கப்படுகின்றனர். மூன்று பைரவர்களுக்கு நேரெதிரில் மகாலட்சுமி எழுந்தருளியிருக்கிறாள். மகாலட்சுமி பார்த்துக் கொண்டே இருப்பதால், இவர்களை வணங்கினால் செல்வம் வந்து சேரும். இத்தலத்தில் அருள்பாலிக்கும் சொர்ணாகர்ஷண கால பைரவரை வழிபாடு செய்தால் இழந்த பொருள்களை மீண்டும் பெறலாம் என்பது ஐதீகம்.

Read More
காயாரோகணர் கோவில்

காயாரோகணர் கோவில்

சிம்ம வாகனத்துடன் காட்சி தரும் பைரவர்

பொதுவாக சிவபெருமானின் அம்சமான பைரவர் நாய் வாகனத்துடன், கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி எழுந்தருளி நமக்கு காட்சி அளிப்பார்.

ஆனால் நாகப்பட்டினம் காயாரோகணர் கோவில் குளக்கரையில்(புண்டரீக தீர்த்தம்), தெற்கு திசை நோக்கி தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கும் பைரவர், சிம்ம வாகனத்துடன் காட்சி தருகிறார். இப்படிப்பட்ட பைரவரின் கோலத்தை நாம் காண்பது அரிது. இங்கு சிம்ம வாகன பைரவர் உக்கிர மூர்த்தியாக விளங்கியதால், இவருக்கு எதிரில் இரட்டை பிள்ளையார் பிரதிஷ்டை செய்து இவரை சாந்தப்படுத்தி இருக்கிறார்கள். இவருக்கு அருகில் இருக்கும் புண்டரீக தீர்த்தமானது மார்கழியில் கங்கையாக மாறி விடுவதாக ஐதிகம். அதனால் சிம்ம வாகன பைரவர், காசி காலபைரவருக்கு இணையானவர் என்று கருதப்படுகிறார்.தோஷங்களை நீக்கி சந்தோஷத்தைத் தந்தருளும் மகாசக்தி கொண்டவர் பைரவர். சுக்கிர தோஷத்தை நீக்குபவராகவும் பைரவர் திகழ்கிறார். அஷ்டமி நாளில் இவரை வணங்கினால் எண்ணியது நடக்கும். தடைகள் அனைத்தும் தவிடுபொடியாகும். சுக்கிர தோஷம் விலகும்.

தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபடுவது மிகுந்த பலத்தைத் தரும். எதிர்ப்புகள் தவிடுபொடி யாகும். வழக்கில் வெற்றி கிடைக்கும். பைரவரை, தேய்பிறை அஷ்டமி நாளில், வணங்கி னால், அஷ்டமத்து சனி உள்ளவர்களும், ஏழரைச் சனியால் பீடித்திருப்பவர்களும் கிரக தோஷம் அனைத்தும் நீங்கப் பெறுவார்கள்.

தெரு நாய்களுக்கு உணவளிப்பது நமக்கு பைரவரின் அருளைப் பெற்றுத் தரும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

பில்லி முதலான சூனியங்கள் அனைத்தும் விலகும். வீட்டின் வாஸ்து குறைபாடுகளும் நீங்கப் பெற்று, நிம்மதியும் முன்னேற்றமும் பெறலாம்.

Read More
தலத்தின் தனிச்சிறப்பு

தலத்தின் தனிச்சிறப்பு

தலத்தின் சிறப்பான அழகு

ஒவ்வொரு தலத்திற்கும் ஒரு தனிச்சிறப்பும் மற்றும் அழகும் உள்ளது.ஒரு சில தலங்களின் சிறப்பான அழகை இங்கே பார்க்கலாம்.

கும்பகோணம் - கோவில் அழகு

வேதாரண்யம் - விளக்கு அழகு

பாபநாசம் - படித்துறை அழகு

திருவாரூர் - தேரழகு

திருவிடைமருதூர் - தெரு அழகு

ஸ்ரீரங்கம் - நடை அழகு

ஸ்ரீவில்லிப்புத்தூர் - கோபுரம் அழகு

மன்னார்குடி - மதிலழகு

திருக்கண்ணபுரம் - நடை அழகு

திருப்பதி - குடை அழகு"

Read More
தயாநிதீசுவரர் கோவில்

தயாநிதீசுவரர் கோவில்

கர்ப்பிணிப் பெண் உயிரை காப்பாற்றிய சிவபெருமான்

கும்பகோணத்திலிருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் வடகுரங்காடுதுறை. .இறைவன் திருநாமம் தயாநிதீசுவரர். இறைவி அழகுசடைமுடி அம்மை.

செட்டிப்பெண் என்ற பெயர் கொண்ட கர்ப்பிணிப் பெண் ஒருத்தி தாகம் தாளாமல் இக்கோயில் வழியே நடந்து வந்துகொண்டிருந்தாள். அவள் தாகத்தால் இறந்து விடுவாளோ என்ற நிலைமை ஏற்பட்டது. சுற்றிலும் எங்கும் தண்ணீர் இல்லை. அவள் உயிர் போகும் தருணத்தில் இத்தலத்து இறைவனை வணங்கினாள். சிவபெருமானே அங்கு தோன்றி அருகிலிருந்த தென்னைமரத்தை வளைத்து இளநீரை பறித்துக் கொடுத்தார். அந்தப்பெண் தாகம் நீங்கினாள். எனவே இறைவனுக்கு 'குலைவணங்கிநாதர்' என்ற பெயரும் உள்ளது.

சிட்டுக்குருவியொன்று இத்தலத்திற்கு அருகேயுள்ள நீர்நிலையிலிருந்து அலகால் நீர் கொணர்ந்து இறைவனுக்கு அபிசேகம் செய்துள்ளது. அதனால் மகிழ்ந்த இறைவன் அக்குருவிக்கு முக்தியளித்தார். இதனால் இறைவனுக்கு சித்தலிங்கேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. இத்தலத்தில் வாலி வணங்கியமையால் வடகுரங்காடுதுறை என்று அழைக்கப்படுகிறது

ஆலய விமானத்தில் வாலி இறைவனை வழிபடும் சிற்பமும், ஈசன் கர்ப்பிணிப் பெண்ணிற்கு தென்னங்குலை வளைத்த சிற்பமும் மிக அழகாக வடிக்கப்பட்டுள்ளது. கருவறையில் சற்று குட்டையான பாணத்துடன் காட்சி தருகிறார் குலைவணங்குநாதர். அம்மன் சந்நிதியில் இறைவி அழகுசடைமுடி அம்மை சிரத்தில் உயர்ந்த சடாமுடியுடன் அழகுடன் காட்சி தருகிறாள். பௌர்ணமி நாட்களில் அம்மன் அலங்காரம் மிகவும் அழகுடன் இருக்கும். பௌர்ணமி அன்று மாலை வேளையில் ஒன்பது மஞ்சள் கொண்டு மாலை தொடுத்து அம்மனுக்கு அணிவிப்பது எல்லா தோஷங்களையும் நீக்கும் என்று பக்தர்களின் நம்பிக்கை.

இக்கோயிலுக்கு முக்கியமாக கர்ப்பிணிப் பெண்களே வருகிறார்கள். இக்கோயிலில் சிவபெருமான் கர்ப்பிணிக்கு அருள் செய்ததால் இந்த தலத்திற்கு வந்தால் சுகமான பிரசவம் நடக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. பங்குனி உத்திர திருவிழா, நவராத்திரி பத்து நாள் விழா ஆகியவை சிறப்பாக நடக்கிறது. கார்த்திகையில் அம்பிகையை பெண்கள் 1008 முறை சுற்றி வருவது விசேஷ அம்சமாகும்.

Read More