லட்சுமி நரசிம்மர் கோவில்
சகல தோஷங்களையும் நிவர்த்தி செய்யும் நரசிம்மர்
கடலூரிலிருந்து புதுச்சேரிக்குச் செல்லும் வழியில் 14 கி.மீ தொலைவில் உள்ள தவளக்குப்பம் வழியாக, மேற்கு நோக்கி செல்லும் வழியில் 1 கி.மீ தொலைவில் சிங்கிரிக் குடி (அபிஷேகப்பக்கம்) லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. மூலவர் லட்சுமி நரசிம்மர். தாயார் கனகவல்லி.
உக்கிர நரசிம்மரின் பிரம்மாண்டமான கம்பீரத் தோற்றம்
இங்கு பிரகலாதனின் விருப்பப்படி, நரசிம்மர் இரணியனை வதம் செய்யும் கோலத்தில், சிங்க முகத்துடனும், மனித உடலில் 16 கரங்களுடனும் மிகப் பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கிறார். நரசிம்மர் தன் கண்களை உருட்டுவது போன்றும், அடர்ந்த மீசையை உடையவராகவும், அந்த மீசையை முறுக்குவது போலவும், தம் கோரைப் பற்களைக் காண்பிப்பது போன்றும், நாக்கை தொங்க விட்டுக் கொண்டும் காட்சியளிக்கிறார்.
பதினாறு கரங்களில், ஐந்து கரங்கள் ஹிரண்யகசிபுவை கொல்வது போன்றும், 3 கரங்கள் பக்தர்களைக் காப்பது போலவும் சேவை சாதிக்கிறார். குழந்தை பிரகலாதன், ஹிரண்யகசிபுவின் மனைவி லீலாவதி, அசுர குரு சுக்ராச்சாரியார், வசிஷ்ட மகரிஷி ஆகியோர் நரசிம்மரின் அருகில் காட்சியளிக்கிறார்கள்.
இரணியனை வதம் செய்யும் கோலத்தில் நரசிம்மர் காட்சி தருவது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.
ஒரே சன்னதியில் மூன்று நரசிம்மர்களின் அரிதான காட்சி
இச்சன்னதியில் சிறிய வடிவில் பால நரசிம்மரும், யோக நரசிம்மரும் உடன் எழுந்து அருளியுள்ளார்கள். இப்படி ஒரே சன்னதியில் மூன்று நரசிம்மர்களை தரிசிப்பது என்பது மிகவும் அரிதான காட்சியாகும்.
மன்னர் கிருஷ்ணதேவராயர் இந்த கோவிலில் திருப்பணிகள் பல செய்துள்ளார். ஆற்காடு நவாப் மற்றும் பிரெஞ்சு அதிகாரிகள் ஆகியோர் நரசிம்மருக்கு அணிகலன்கள் அளித்துள்ளனர்.
நவக்கிரக தோஷ நிவர்த்தி தலம்
இத்தலத்தில் வழிபட்டால் .நவக்கிரக தோஷம் நிவர்த்தியாகும் எள்பது ஐதீகம். திருமண தடை, பில்லி, சூன்யம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள், குழந்தைப்பேறு இல்லாதோர், பேய் பிசாசு பிடித்தவர்கள், நரம்புத்தளர்ச்சி நோயில் துன்புறுபவர்கள், சுவாதி நட்சத்திரத்தன்றும், பிரதோஷ நாளன்றும், மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் செவ்வாய் ஓரையில் நரசிம்மரைத் தரிசித்தால் குறைகள் தீரும். வேண்டுதல்கள் நிறைவேறும். நரசிம்மருக்கு நெய் தீபம் ஏற்றுவது சக்தி வாய்ந்த நேர்த்திக்கடன் என்று நம்பப்படுகிறது.
பாடலாத்ரி நரசிம்மர் கோவில்
நெற்றிக்கண் உடைய நரசிம்மர்
தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சிங்கபெருமாள் கோவில். இத்தலத்தில் சிறிய குன்றின் மீது கோயில் கொண்டிருக்கிறார் பாடலாத்ரி நரசிம்மர். 'பாடலாத்ரி' என்றால் செந்நிறக் குன்று என்று பொருள்.
இரணியனை வதம் செய்து விட்டு காட்சி தந்த தலம்
நரசிம்ம அவதாரக் காலத்தில், ஜபாலி என்னும் முனிவர் இத்தலத்தில் தவம் செய்து வந்தார். பெருமாளை நரசிம்மராகக் காண வேண்டும் என்ற அவரது ஆசையை நிறைவு செய்யும் வகையில் நரசிம்மர் இரணியனை வதம் செய்தவுடன் உக்கிர நரசிம்மராக முனிவருக்குக் காட்சி கொடுத்தார். ஜபாலி முனிவரின் ஆசைப்படி நரசிம்ம வடிவத்தோடு சிவனைப் போன்று முக்கண்ணுடன் (நெற்றிக்கண்) காட்சி கொடுத்தார் நரசிம்மர். மூலவரான நரசிம்ம மூர்த்தியின் நெற்றியிலுள்ள நாமத்தை விலக்கும் பொழுது நெற்றிக்கண்ணைத் தரிசனம் செய்யலாம். மூலவர் பஞ்ச மூலிகைகளால் உருவாக்கப் பட்டதால் அபிஷேகம் கிடையாது.
மிளகு தோசைப் பிரசாதம்
இத்தலத்தின் மிளகு தோசைப் பிரசாதம் மிகவும் பிரசித்தம். எண்ணெய்ப் பொடியுடன் வழங்ககப்படும் இப்பிரசாதத்தின் சுவையே அலாதியானது.
நரசிம்மரின் திருமேனியே மலையாக இருக்கும் தலம்
பெருமாள் திருமேனியே மலையாக விளங்குவதால் பவுர்ணமி கிரிவலம் இத்தலத்தின் சிறப்பம்சமாகும். பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷம், சுவாதி, ஞாயிற்றுக்கிழமைகளில் கிரிவலம் வந்து நரசிம்மரை வழிபடுவது நல்லது.
இங்குள்ள பெருமாளை வழிபட்டால் நீதிமன்ற வழக்குகள் விரைவில் அனுகூலமாக தீரும். கடன் தொல்லைகள் அகலும். மகப்பேறு உண்டாகும். திருமணத்தடை நீங்கும். பிரார்த்தனை செய்யும் பக்தர்கள் குன்றினை ஒன்பது முறை சுற்றி வழிபாடு செய்கிறார்கள்.
கல்யாண வேங்கடரமணர் கோவில்
தான்தோன்றிமலையில் திருப்பதி வெங்கடாஜலபதி எழுந்தருளிய கதை
கரூரில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் கரூருக்கு தெற்கே 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தான்தோன்றிமலை. இங்கு திருப்பதி வெங்கடாஜலபதியே 'கல்யாண வேங்கடரமண சுவாமி’ எனும் திருப்பெயருடன் குன்றின் மேல் எழுந்தருளியிருப்பதால் இத்தலம் தென்திருப்பதி என்று போற்றப்படுகிறது.. குன்றின் மேல்புறம் குடையப்பட்டுள்ள அழகிய குடைவரையில் கல்யாண வேங்கடரமண பெருமாள், மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பிரம்மாண்ட வடிவம் கொண்ட இந்தப் பெருமாள், லட்சுமியை தனது மார்பில் தாங்கியிருக்கிறார். இதனால் இங்கு தாயாருக்கு தனி சன்னிதி கிடையாது.
மூன்றாம் குலோத்துங்கச் சோழன் அரரசவையில் டங்கணாச்சாரி என்ற சிற்பி இருந்தார். சிறந்த சிவபக்தர். அவரது மனைவி சுந்தராம்பிகை. இந்த தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் இல்லை.
ஒரு நாள் சுந்தராம்பிகை தனது வீட்டில் தனியாக இருந்தபோது, தெருவில் ஒரு கூட்டம் 'கோவிந்தா... கோவிந்தா' என்று உரக்க கத்திக்கொண்டே சென்றது. அந்த கூட்டத்தின் நடுவில் மஞ்சள் ஆடை அணிந்து மார்பில் துளசி மாலையுடன் நெற்றியில் திருநாமத்துடன் ஐந்து வயது சிறுவன் ஒருவன் தென்பட்டான்.
சுந்தராம்பிகை கூட்டத்திலிருந்த ஒரு பெண்மணியிடம் இதுகுறித்து விசாரித்தாள். அதற்கு அந்த பெண்மணி, ‘அந்த சிறுவன் எனது மகன்தான். எனக்கு புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது. திருப்பதி வேங்கடேசனை நினைத்து பிரார்த்தனை செய்து கொண்டோம். குழந்தை பிறந்தது. ஐந்தாவது வயதில் குழந்தையையும் அழைத்துக் கொண்டு பெருமாளின் சன்னிதியில் வந்து காணிக்கை செலுத்துவதாக வேண்டியிருந்தோம். அதை நிறைவேற்றவே இப்போது திருப்பதி செல்கிறோம்’ என்றாள்.
இதனை கேட்ட சுந்தராம்பிகை, தானும் திருப்பதி வெங்கடாஜலபதியை வேண்டி அதே பிரார்த்தனையை செய்து கொண்டாள். வெங்கடாஜலபதியும் அருள்புரிந்தார். சுந்தராம்பிகைக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு குண்டலாச்சாரி என்று பெயரிட்டாள். குழந்தைக்கு ஐந்து வயதானது. சுந்தராம்பிகை பிரார்த்தனையை நிறைவேற்ற நினைத்தாள். இதுவரை சுந்தராம்பிகை கணவரிடம் பிரார்த்தனை பற்றி கூறவில்லை. தற்போது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கூறினாள்
அதைக் கேட்ட டங்கணாச்சாரி கோபமடைந்தார். 'சிவபெருமானை தவிர உலகில் வேறு தெய்வம் இல்லை. நான் திருப்பதிக்கு போக மாட்டேன். உன்னையும் போக விட மாட்டேன்' என்று எச்சரித்துவிட்டு வெளியில் சென்றுவிட்டார். சுந்தராம்பிகையோ மனம் வருந்தி கண்ணீர் வடித்தாள்.
குண்டலாச்சாரி தனது தாய் அழுவதை கண்டு, காரணத்தைக் கேட்டான். தனது இக்கட்டான நிலையை தனது மகனிடம் சுந்தராம்பிகை கூறினாள். அதைக் கேட்ட குண்டலாச்சாரி, 'அம்மா நீ அழாதே!. திருப்பதி சீனிவாச பெருமாளை, நமது ஊரிலுள்ள மலைக்குன்றுக்கு வரவழைக்கிறேன். நாம் பிரார்த்தனையை இங்கேயே நிறைவேற்றலாம்' என்றான். மகனின் விளையாட்டுப் பேச்சைக் கேட்ட தாய்க்கு அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை.
அன்று இரவு எல்லோரும் தூங்கியவுடன் குண்டலாச்சாரி, தனது தந்தை வைத்திருந்த, சிற்பம் செதுக்குவதற்கான ஆயுதங்களை எடுத்துக் கொண்டு மலைக்குச் சென்றான். மலையின் மீது ஆலயம் எழுப்ப அடி அளந்து கொண்டு இருந்தான். அப்போது சந்நியாசி ஒருவர், அவன் முன் தோன்றி, 'குழந்தாய்! இங்கு வந்து என்ன செய்கிறாய்?' என்று கேட்டார். குண்டலாச்சாரி, 'நான் இங்கே கோவில் அமைத்து, திருப்பதி சீனிவாச பெருமாளை அழைக்க போகிறேன்' என்று கூறினான்.
இதனை கேட்ட சந்நியாசி, 'உன்னால் இக்காரியம் முடியக் கூடியதல்ல. என்னிடம் ஆட்கள் அதிகம் இருக்கின்றனர். அவர்களை வைத்து கோவில் அமைத்து விடலாம். நீ நாளைக்கு இங்கே வா!' என்று கூறினார். குண்டலாச்சாரி வீட்டிற்கு திரும்பி உறங்கினான்.
எப் போதும் போல் டங்கணாச்சாரி அதிகாலையில் எழுந்து மலைப்பக்கம் சென்றார். அங்கு ஒரு கோவில் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். 'ஒரே நாளில் கோவில் அமைப்பது என்பது மன்னனை தவிர வேறு யாராலும் முடியாதே! மன்னன் என்னிடம் சொல்லாமல் இக்கோவிலை கட்டி விட்டாரே' என்று வருந்தினார். காலை விடிந்ததும் அரசவைக்கு சென்று கோவில் அமைக்கப்பட்டிருப்பது பற்றி கேட்டார். மன்னனும் வியப்பில் ஆழ்ந்தான். மலைக்குச் சென்று பார்த்தான். தனக்கே தெரியாமல் விஷ்ணு ஆலயம் கட்டியவனை கண்டுபிடித்து தண்டிப்பதாக கூறிவிட்டு சென்றான்.
டங்கணாச்சாரி, கடும் கோபத்தில் இருந்தார். அன்று இரவு மலைக்குச் சென்றார். கோவில் கட்டியவர்கள் எப்படியும் வருவார்கள் என்பதால் அங்கு பதுங்கி இருந்தார். அப்போது குண்டலாச்சாரி ஆயுதங்களை எடுத்துக்கொண்டு கோவில் வாசலில் நுழைந்தான். இருட்டில் யார் என்று அறியாமல் டங்கணாச்சாரி, சிறுவன் குண்டலாச்சாரியை வாளால் வெட்டி வீழ்த்தினார்.
அதன் பிறகு யாரும் வராததால் வீட்டிற்கு வந்து உறங்கினார். மறுநாள் காலையில் தன் மகனை காணாது சுந்தராம்பிகை துடித்தாள். இதற்கிடையில் மலையின் மீது தலை துண்டித்து கிடந்த குண்டலாச்சாரியை, அந்த பகுதி மக்கள் பார்த்து தூக்கி வந்தனர். பெற்றோர் கதறி அழுதனர். அப்போது அங்கு ஒரு சந்நியாசி தோன்றினார். அவர் டங்கணாச்சாரியைப் பார்த்து, 'கொஞ்சம் துளசி இலையைப் பறித்துக் கொண்டு வா!. உன் மகனை பிழைக்க வைக்கிறேன்' என்று கூறினார்.
அதைக் கேட்டதும் டங்கணாச்சாரி, தனது இரு காதுகளையும் பொத்திக்கொண்டு 'நான் துளசியை கையால் தொடமாட்டேன்' என்றார். இதனை கேட்ட மக்கள் கோபம் அடைந்து 'இந்த இக்கட்டான நேரத்திலும் நீர் வைராக்கியம் பேசுவது சரியல்ல' என்று சொல்லவும், அரை மனதுடன் துளசியை பறித்துக் கொண்டு வந்து கொடுத்தார் டங்கணாச்சாரி.
அதை வாங்கிய சந்நியாசி, குண்டலாச்சாரியின் தலையையும் உடலையும் சேர்த்து வைத்து கழுத்து பகுதியில் துளசி சாற்றை பிழிந்து ஊற்றினார். உடனே குண்டலாச்சாரி உயிர் பெற்று எழுந்தான். அதனை கண்டோர் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். பெருமாளின் பெருமையை போற்றிப் புகழ்ந்தனர்.
சுந்தராம்பிகை அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. தனது மகனுக்கு உயிர் கொடுத்த சந்நியாசியின் பாதங்களில் விழுந்து வணங்கினாள். கோவில் கட்டப்பட்ட நிகழ்ச்சியையும், தான் வெட்டப்பட்ட நிகழ்ச்சியையும் குண்டலாச்சாரி தனது பெற்றோர் முன்னிலையில் எடுத்துக்கூறினான்.
அதனை கேட்டு அனைவரும் மகிழ்ந்தனர். சிறுவன், அவனது பெற்றோர், மன்னன் உள்பட பலரும் சந்நியாசியுடன் மலையேறிச் சென்றனர். ஆனால் மலை மீது சென்றவுடன் சந்நியாசி மறைந்து விட்டார்.
குகையின் நடுவே பகவான் திருப்பதி வெங்கடேச பெருமாள் காட்சியளிப்பதை கண்டு அனைவரும் வணங்கினர். அப்போது அசரீரி ஒலித்தது. ;குண்டலாச்சாரி என் மீது கொண்டிருந்த அளவற்ற நம்பிக்கையைக் கண்டு மகிழ்ந்ததால்தான், நான் இங்கே பிரசன்னமாகி இருக்கிறேன். இனி நீங்கள் உங்களது பிரார்த்தனைகளை இங்கேயே செலுத்துங்கள். நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன்' என்று கூறியது.
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோவில்
கம்பருக்காக ஸ்ரீஆண்டாள் நடத்திய திருவிளையாடல்
பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒரே பெண், ஆண்டாள் நாச்சியார். அவர் அவதரித்த நட்சத்திரம் பூரம். ஆண்டாளின் இயற்பெயர் கோதை. இவளை வடமாநிலங்களில் கோதாதேவி என்று அழைப்பர். பெருமாளின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமி பிராட்டியின் அம்சமாக அவதரித்தவர்ஆண்டாள் நாச்சியார். ஸ்ரீரங்கம் ரங்கநாதனுக்கு சூட்ட வேண்டிய பூமாலையை தானே சூடிக் கொண்டு ஆடியில் அழகு பார்த்தாள் ஆண்டாள். தான் சூடிக் களைந்த மாலையைப் பெருமாளுக்கு அளித்து வந்ததால், சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்ற திருநாமம் பெற்றாள்.
இக்கோவிலில் நடைபெறும் 'மார்கழி நீராடல்' உற்சவத்தின் ஆறு மற்றும் எட்டாம் நாட்களில் நடக்கும் சவுரித் திருமஞ்சனம் விசேஷமானது. அப்போது ஒரு நாள், மூக்குத்தி சேவை நடைபெறும். ஸ்ரீ ஆண்டாளின் மூக்கருகே, தங்க மூக்குத்தியைக் கொண்டு சென்றதும், அது தானாகவே ஆண்டாளின் மூக்குடன் ஒட்டிக் கொள்கிறது.
கவிச்சக்ரவர்த்தி கம்பர் ஒரு முறை 'மார்கழி நீராடல்' உற்சவத்தைக் காண ஸ்ரீவில்லிப்புத்தூருக்குக் கிளம்பினார். ஆனால், குறித்த நேரத்துக்குள் அவரால் திருமுக்குளத்துக்கு வந்து சேர இயலவில்லை. நீராடல் வைபவத்தை தரிசிக்க முடியாதோ' என்ற ஆதங்கத்துடன் உற்சவ மண்டபத்துக்கு வந்து சேர்ந்த கம்பருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அதுவரை விழா ஆரம்பமாகவில்லை. காரணத்தை கம்பர் கேட்டபோது, 'எண்ணெய்க் காப்பு நீராடல் முடிந்ததும். ஸ்ரீஆண்டாளுக்கு வைர மூக்குத்தி சேவை நடைபெறும். அந்த மூக்குத்தியைக் காணோம்' என்று பதில் அளித்தனர்.
உடனே, கம்பர் தன் கையிலிருந்து மூக்குத்தி ஒன்றை எடுத்து அவர்களிடம் காட்டி, 'இதுவா பாருங்கள்?' என்றார். எல்லோருக்கும் ஆச்சரியம். 'ஸ்ரீஆண்டாளின் வைர மூக்குத்தி கம்பரிடம் எப்படி வந்தது?' எனக் கேட்டனர். கம்பர். 'திருமுக்குளம் கரை ஏறியபோது ஏதோ ஒன்று மின்னியதைக் கண்டு எடுத்து வந்தேன்!' என்றார். நீராடல் வைபவத்தைக் கம்பர் காண வேண்டும் என்பதற்காக ஸ்ரீஆண்டாள் நடத்திய திருவிளையாடலே இது என்று அனைவரும் உணர்ந்தனர்.
கூடாரவல்லித் திருநாள்
மார்கழி மாதம் 26 நாட்க பாவை நோன்பிருந்த ஆண்டாள், அரங்கநாதனின் திருவுளப்படி மார்கழி மாதத்தின் இருபத்து ஏழாவது நாளில் அவருடன் இரண்டறக் கலந்தாள்.
.
கோதண்டராமர் கோவில்
சாளக்கிராமத்திலான அபூர்வ இராமர் விக்கிரகம்
தஞ்சாவூரில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது புன்னைநல்லூர். இந்த ஊரில் மிக பிரசித்திப் பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகில், சுமார் 500 வருடப் பழைமை வாய்ந்த கோதண்டராமர்கோவில் அமைந்துள்ளது.. இந்தக் கோவிலில் உள்ள மூலவர் ஸ்ரீகோதண்டராமர், சாளக்கிராமம் எனும் கல்லால் ஆனவர். இத்தகைய விக்ரகத்தை வேறெங்கும் காண்பது அரிது.
வைணவ திருமண சம்பிராயபபடி, மாப்பிள்ளை வீட்டாருக்கு துளசிமாடத்தையும் சாளக்கிராமத்தையும் பெண் வீட்டார் சீதனமாக அந்தக் காலத்தில் வழங்கி_வந்தனர். சாளக்கிராமம் எனும் கல், ஸ்ரீமகாவிஷ்ணுவின் அம்சம் என்று போற்றப்படுகிறது. நேபாளத்தில் உள்ள கண்டிகை நதியில்தான் சாளக்கிராமம் தோன்றுகிறது.
நேபாளமன்னனும் தஞ்சாவூரை ஆட்சி செய்த மராட்டிய மன்னனும் ஒரு கட்டத்தில் சம்பந்தியானார்கள். நேபாள மன்னர், மாப்பிள்ளை வீட்டாரான தஞ்சை மன்னருக்கு தங்கம், வெள்ளி, பட்டாடைகள் முதலிய ஏராளமான சீர்வரிசைகள் வழங்கினார். எல்லாவற்றையும் விட முக்கியமாக, சாளக்கிராமத்தை வழங்கினார். பொதுவாக, சாளக்கிராமம் என்பது உள்ளங்கை அளவோ அல்லது அதை விட சற்று பெரிதாகவோ இருக்கும். ஆனால், தஞ்சாவூர் மன்னருக்குச் சீர்வரிசையாக மிகப் பெரிய சாளக்ராமம் வழங்கப்பட்டது.
சிலகாலத்திற்குப் பின் மகாராஷ்டிர மன்னர் பிரதாபசிங்கின் ஆளுகையின் கீழ், தஞ்சாவூர் தேசம் வந்தது. அப்போது, இந்த மிகப் பெரிய சாளக்கிராமத்தைக் கொண்டு மன்னர் பிரதாபசிங் அழகிய ஸ்ரீராமரின் விக்கிரகத்தை அமைத்தார். கருவறையில் குடி கொண்டிருக்கும் மூலவர், சாளக்கிராமமாக காட்சி தருவது இந்திய அளவில் அரிது என்று ஆச்சார்ய பெருமக்கள் போற்றுகின்றனர்.
ஸ்ரீகோதண்டராமர் ஐந்தடி உயரத்துடன், நின்ற கோலத்தில், ஸ்ரீலட்சுமணர், ஸ்ரீசீதாதேவி ஆகியோருடன் ஸ்ரீசுக்ரீவனும் உடனிருக்க சாந்நித்தியத்துடன் கனிவுடனும் கருணையுடனும் சேவை சாதிக்கிறார்
ஸ்ரீகோதண்டராமரை தரிசித்தால், பிறவிப் பயனை அடையலாம். காரியங்கள் யாவும் தடையின்றி நிகழும். பாவங்கள் தொலைந்து புண்ணியங்கள் பெருகும் என்பது ஐதீகம்.
வண்புகழ் நாராயணப் பெருமாள் கோவில்
விஷக்கடியை குணமாக்கும் பெருமாள்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ளது கண்டரமாணிக்கம். இதையடுத்த கொங்கரத்தி கிராமத்தில் அமைந்துள்ளது வண்புகழ் நாராயணப் பெருமாள் கோவில். ஊர் மக்களும் சுற்றுவட்டாரத்தினரும் இந்தக் கோயிலை ‘வம்பய்யாக் கோவில்’ என்றே அழைக்கின்றனர்.
சிவகங்கை ராஜா, ஒருமுறை காட்டுக்கு வேட்டையாடச் சென்ற போது, அங்கே பெருமாள் சுயம்பு மூர்த்தமாகத் தோன்றிக் காட்சி தந்தாராம் . அதையடுத்து, பெருமாளின் மூர்த்தத்தை எடுத்துவந்து பிரதிஷ்டை செய்து, கோயில் கட்டி வழிபடத் துவங்கினார் என்கிறது தல வரலாறு.
பாம்பு, தேள், பூச்சி என எதுக் கடித்தாலோ அல்லது கடிப்பது போல் கனவு கண்டாலோ ஸ்ரீவண்புகழ் நாராயணப் பெருமாளை வந்து தரிசித்தால், விஷக்கடி நீங்கும்; விஷப் பூச்சிகள் நம்மை அண்டவே அண்டாது என்பது ஐதீகம். தவிர, விஷக்கடிக்கு இந்தக் கோயிலில் மருந்தும் வழங்குகின்றனர். இதனைப் பத்தியம் இருந்து சாப்பிட, விரைவில் குணமாகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
இந்த ஆலயத்தில் ஸ்ரீஆகாசக் கருப்பர் சந்நிதியும் விசேஷம். மேற்கூரை இல்லாமல் ஆகாயத்தைப் பார்த்தபடி வெட்டவெளியில் சந்நிதியுடன் காட்சிதரும் ஸ்ரீஆகாசக் கருப்பரை வணங்கினால், பில்லி- சூனியம் முதலான ஏவல்களில் இருந்தும், எதிரிகள் தொல்லையில் இருந்தும் விடுபடலாம்; மேலும், சக்தியின் வடிவமாகத் திகழும் வேப்ப மரம், சிவ வடிவமாக விளங்கும் வில்வ மரம் ஆகியவை ஒன்றோடு ஒன்று பிணைந்தபடி காட்சி தருவது சிறப்புக்குஉரிய ஒன்று எனப் போற்றுகின்றனர். இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள், வம்பய்யாப் பெருமாளிடம் வேண்டிக் கொண்ட பின்பே வயலில் விதைக்கின்றனர்.
லட்சுமி நரசிம்மர் கோவில்
லட்சுமி நரசிம்மரின் அபூர்வ கோலம்
வேலூரிலிருந்து சுமார் 21 கி.மீ தொலைவில் சிங்கிரி கோவில் என்னும் ஊரில் லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் 100 படிகள் கொண்ட சிறிய மலையின் மீது அமைந்துள்ளது.
இக்கோவிலில் கர்ப்பக்கிரகமும், அர்த்தமண்டபமும் சேர்ந்து அமையப்பெற்ற மிகப்பெரிய கருவறையாக உள்ளது. இந்த மிகப்பெரிய கருவறையில் சுமார் ஆறு அடி உயர லட்சுமி நரசிம்மர் நான்கு திருக்கைகளுடன் காட்சியளிக்கிறார். மேல் இரண்டு திருக்கைகளில் சங்கு சக்கரமும், இடது கையை தனது மடியின் மீதும், வலது கையால், தனது வலது திருமடியில் அமர்ந்திருக்கும் மகாலட்சுமி தாயாரை ஆலிங்கனம் செய்த வண்ணமும் சாந்த சொரூபியாய் காட்சியளிக்கிறார்.
பொதுவாக தாயார் நரசிம்மரின் இடது பக்க திருமடியில்தான் வீற்றிருப்பார். ஆனால் இத்தலத்தில் தாயார் நரசிம்மரின் வலது பக்க திருமடியில் அமர்ந்திருக்கும் கோலம் மிக அபூர்வமானதாகும்.
இத்தல வட்சுமி நரசிம்மரை வேண்டிக் கொண்டால்ங நமது அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேந்நித் தரூவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.``
ஆதிகேசவ பெருமாள் கோவில்
அல்லா மண்டபத்தில் எழுந்தருளும் பெருமாள்
நாகர்கோவில் திருவனந்தபுரம் சாலையில் சுமார் 28 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள திவ்யதேசம் திருவட்டாறு ஆகும். இத்தலத்தில், பெருமாள் திருவிழாக் காலத்தில் எழுந்தருளுவதற்காக, ஆற்காடு நவாப் ஒரு மண்டபம் அமைத்துக் கொடுத்தார். அந்த மண்டபம் ‘திரு அல்லா மண்டபம்’ என்று அழைக்கப்படுகிறது. ஐப்பசி மாதம் இந்த மண்டபத்தில் சுவாமி விக்கிரகத்தை எழுந்தருளச் செய்து இரவு நேரத்தில் அவல் நைவேத்தியம் சமர்ப்பிக்கிறார்கள்.
பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில்
உடல் ஊனத்தை குணமாக்கும் பெருமாள்
திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில், 22 கி.மீ. தொலைவில் உள்ளது குணசீலம். பெருமாளின் திருநாமம் பிரசன்ன வேங்கடாசலபதி. தாயாருக்கு தனிச்சந்நிதி இல்லை. பெருமாள் செங்கோலுடனும் காட்சி தருகிறார். இந்த செங்கோல் கொண்டு, தீராத நோயையும் தீர்த்தருள்கிறார் பிரசன்ன வேங்கடாசலபதி.
குணசீலம் என்று பெயர் ஏற்பட்ட பின்னணி
குணசீலர் என்று பெயர் கொண்ட பெருமாள் பக்தர் ஒருவர் காவிரிக்கரையில் ஒரு ஆசிரமத்தை நடத்தி வந்தார். ஒருநாள் திருப்பதிக்கு சென்று வெங்கடாஜலபதியை தரிசித்து வந்த குணசீலருக்கு தன் ஆசிரமத்திலும், பெருமாள் எழுந்தருள வேண்டும் என்ற ஆசை வந்தது. தனது ஆசிரமத்தில் பெருமாளை வரவழைக்க கடும் தவம் மேற்கொண்டார். இந்த தவத்தின் மூலம் பெருமாள் குணசீலருக்கு காட்சியளித்து அந்த ஆசிரமத்திலேயே பிரசன்ன வெங்கடாஜலபதியாக இருந்து இன்று வரை தரிசனம் தருகின்றார். பெருமாலின் பக்தரான குணசீலரால் தான் இந்த பகுதிக்கு குணசீலம் என்ற பெயர் ஏற்பட்டது.
பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் உருவான வரலாறு
குணசீலரின் சேவை மற்றொரு ஆசிரமத்திற்கு தேவைப்பட்டதால், குணசீலர் தன் சீடனிடம் பெருமாளை ஒப்படைத்துவிட்டு பூஜைக்கான பொறுப்பையும் கொடுத்துவிட்டு, வேறு இடத்திற்கு சென்றுவிட்டார். அந்த சமயத்தில் குணசீலம் ஒரு காடாக இருந்தது. வனவிலங்குகளின் அட்டகாசம் தாங்க முடியாமல் குடிலை விட்டு சீடன் வேறு இடத்திற்கு சென்று விட்டான். அந்த குடிலில் பெருமாள் சிலை மட்டும் தனியாக இருந்த போது, புற்றினால் மூடப்பட்டுவிட்டது. அப்போது ஞானவர்மன் என்ற மன்னன் அந்தப் பகுதியில் ஆட்சி செய்து கொண்டிருந்தான் அரண்மனையின் பசுக்கள் அந்த காட்டில், புல் மேய்வதற்காக விடப்படும். தொடர்ச்சியாக அந்த காட்டினுள் சென்ற மாடுகளில் மடியில் இருந்து பால் கரப்பது இல்லை. இதற்கு காரணம் என்ன என்று அறிந்து கொள்வதற்காக, அந்த காட்டிற்குச் சென்ற மன்னனுக்கு ஒரு அசரீதி குரல் ஒலித்தது. அந்தக் குரலின் மூலம் புற்றுக்குள் சிலை இருப்பதை உணர்ந்த மன்னன் பிரசன்ன வெங்கடாஜலபதிக்கு கோவில் எழுப்பினான்.
தீராத நோயையும் தீர்த்தருளும் தலம்
உடல் ஊனமுற்றவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், வாய் பேச முடியாதவர்கள் இந்த கோவிலுக்கு வந்து பெருமாளை தரிசனம் செய்தால் சரியாகி விடும் என்பது நம்பிக்கை. மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், இந்தத் தலத்தில் ஒருமண்டலம் தங்கி, இங்கே வழங்கப்படும் தீர்த்தப் பிரசாதத்தை உட்கொண்டு, பெருமாளை ஸேவித்து வந்தால், மன நலம் குணமாகித் திரும்புவர் என்பது ஐதீகம். மதியம் ஒருமணி உச்சிக்கால பூஜையில், பெருமாளுக்கு பூஜைகள் நடந்த பின்னர், பக்தர்களின் முகத்தில் தீர்த்தம் தெளிக்கப்படுவது வழக்கம்.
தலத்தின் தனிச் சிறப்பு
தாயாருக்கென்று தனி சன்னிதி அமையாத தலங்கள்
திருப்பதி, ஒப்பிலியப்பன் கோவில், குணசீலம், தான்ததோன்றிமலை ஆகிய நான்கு பெருமாள் தலங்களில் தாயாருக்கென்று தனி சன்னிதி கிடையாது் இத்தலங்களில் பெருமாளுக்கு மட்டுமே சன்னதி அமைந்துள்ளது.. இத்தலங்களில் திருப்பதியும், ஒப்பிலியப்பன் கோவிலும் திவ்ய தேசங்களாகும்.
வராக லட்சுமி நரசிம்மர் கோவில்
இரண்டு அவதார நிலைகளில் காட்சியளிக்கும் பெருமாள்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து 15 கி.மீ., தூரத்தில் உள்ள சிம்மாசலம் என்ற குன்றின் மீது வராக லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது.
இத்தலத்தில் பெருமாள் வராஹமூர்த்தியாகவும், நரசிம்மராகவும் இரண்டு அவதார நிலைகளில் எழுந்தருளியிருக்கிறார். அது மட்டுமல்ல; வராஹம், சிம்மம், மனிதன் என மூன்று உருவங்களைக் கொண்டவராக காட்சியளிக்கிறார். இது போல் எங்குமே அமைந்ததில்லை.
இக்கோயிலின் மூலவர் வராக நரசிம்மர் வருடம் முழுவதும் கெட்டியான சந்தனத்தால் காப்பிடப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறார். மடக்கிய கால்கள், காட்டுப் பன்றி முகம், சிங்க வால், மனித உடலுடன் காட்சியளிக்கும் இவர், இரணியனை மடக்கிய முன்காலில் கிடத்தி அவன் வயிற்றைத் தன் இரு கரங்களால் கிழிக்கும் நிலையிலும், மேலிரு கரங்களில் சங்கு சக்கரம் தாங்கியும் உள்ளார். இவர் உக்கிர நரசிம்மராக இருப்பதால்தான் வருடம் முழுவதும் சந்தனக் காப்பு சாற்றப்படுகிறது. இதற்காக சுமார் 500 கிலோ சந்தனம் பயன்படுத்துகிறார்கள்.
இக்கோயில் கருவறை சுற்றுச்சுவரில் ஒரு பிறை மாடத்தில் மூலவர் வராக லட்சிமி நரசிம்மரின் முழு உருவமும் சிற்ப வடிவில் காணப்படுகிறது. ஒவ்வொரு வைகாசி மாதம் வளர் பிறையில் மூன்றாம் நாள் சந்தனக் காப்பு விலக்கப்பட்டு வராக லட்சுமி நரசிம்மர் தன் நிஜ உருவத்துடன் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார் .
வராக லட்சுமி நரசிம்மரை தரிசிப்பதால் மன பயம் அகன்று மன தைரியம் வருகிறது. நினைவாற்றல் அதிகரிக்கிறது. சகல பாவங்களும் தீர்ந்து புண்ணியங்கள் கிடைக்கிறது என பக்தர்கள் நம்புகிறார்கள்.
பரிமள ரங்கநாதர் கோவில்
ஸ்ரீதேவி கங்கையாகவும், பூதேவி காவிரியாகவும் காட்சியளிக்கும் திவ்ய தேசம்
மயிலாடுதுறை நகரில் அமைந்துள்ள திருஇந்தளூர் திருத்தலம் பெருமாளின் 108 திவ்யதேசங்களுள் ஒன்று. பஞ்சரங்க தலங்களில், இத்தலம் பஞ்சரங்கம் என்று அழைக்கப்படுகிறது. பெருமாள் திரு நாமம் பரிமளரங்கநாதர்.தாயாரின் திருப்பெயர் பரிமளரங்கநாயகி.
பரிமளரங்கநாதர் சதுர் புஜங்களுடன் ஆதிசேஷன் மீது கிழக்கு முகமாக வீரசயன திருக்கோலத்தில் அருள்புரிகிறார். பெருமாள் கால்மாட்டில் ஸ்ரீதேவி கங்கையாகவும், தலைமாட்டில் பூதேவி காவிரியாகவும் காட்சியளிப்பது இத்தலத்தின் சிறப்பாகும். பரிமளரங்கநாதர் திருவடிகளில் யமதர்மராஜரும், அம்பரீஷ சக்ரவர்த்தியும் அமர்ந்து இரவும், பகலும் பூஜித்துக் கொண்டிருக்கிறார்கள். சந்திரன், சந்திர புஷ்கரிணி தீர்த்தத்தில் நீராடித் தன் சாபம் நீங்கப்பெற்றமையால் இவ்வூர் திருஇந்தளூர் எனப் பெயர் பெற்றது.
மயிலாடுதுறையில் கங்கையை விட காவிரி புனிதமான நதியாக கருதப்படுகிறது. இத்தலத்தில் கொண்டப்படும் கடைமுழுக்கு மிகவும் சிறப்பானது, ஐப்பசி மாதம் கடைசி நாளில், இந்த ஊரில் உள்ள சிவா, விஷ்ணு கோயில் தெய்வங்கள் காவிரி ஆற்றங்கரையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும். அன்று பல்லாயிரக் கணக்கான மக்கள் காவேரியில் நீராடுவர்.
கிருபா சமுத்திரப் பெருமாள் கோவில்
ஆதிசேஷனுக்கு தனிச்சன்னதி கொண்ட திவ்யதேசம்
பெருமாள் கோவில் களில் பொதுவாக ஆதிசேஷனை நாம் பெருமாளுடன் சேர்ந்த வண்ணம் தான் காண முடியும். அதாவது பெருமாள் ஆதிசேஷனின் மேல் சயன கோலத்தில் காட்சி தருவார்.எனவே எந்த பெருமாள் கோவில்களிலும் நாம் ஆதிசேஷனை தனித்து தரிசிக்க முடியாது.ஆனால் சிறுபுலியூர் என்னும் சோழநாட்டு திவ்ய தேசத்தில் ஆதிகேசவ பெருமாள் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.ஆதிசேஷன் ஆயிரம் தலைகள் உடையவர்.ஆனால் அவர் சிறுபுலியூரில் ஐந்து தலை நாகமாக சங்கு சக்கரம் தரித்து நான்கு திருக்கரங்களுடன் தவக்கோலத்தில் காட்சி தருகிறார்.இது காண்பதற்கு அரிதான காட்சியாகும்,
ரங்கநாத பெருமாள் கோவில்
மிக உயரமான திருமேனி உடைய தாயார்
கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள திருத்தலம் திருவதிகை. இத்தலத்தில் ரங்கநாத பெருமாள் கோவில் அமைந்துள்ளது. தாயார் திருநாமம் ரங்கநாயகி.
இத்தலத்தில் ரங்கநாயகி தாயார் இரண்டடி பீடத்தில் ஆறடி உயர திருமேனியுடன் அமர்ந்த கோலத்தில் பேரழகுடன் காட்சி தருகிறார். இத்தகைய மிக உயரமான திருமேனி உடைய தாயாரை வேறு எந்த பெருமாள் கோவிலிலுல் நாம் தரிசிக்க முடியாது. தாயார் மேலிரு கரங்களில் தாமரை மலரை தாங்கியும், கீழிரு கரங்கள் அபய வரத முத்திரையுடனும் நமக்கு அருள்பாலிக்கிறார்.
தலை சாய்த்தபடி இருக்கும் ஆண்டாள் நாச்சியாரின்அபூர்வ தோற்றம்
பொதுவாக பெருமாள் கோயில்களில் ஆண்டாள் நாச்சியார் நின்றபடியோ அல்லது அமர்ந்தபடியோ, நேரான திருமுக மண்டலத்துடன் காட்சி தருவார்.ஆனால் இத்திருத்தலத்தில் ஆண்டாள் நாச்சியார் மூலவர் ரங்கநாதரை நோக்கியபடி தன் தலையை ஒரு புறம் சாய்த்தபடி நமக்கு காட்சி தருகிறார். ஆண்டாள் நாச்சியாரும் ஆறடி உயர திருமேனியுடன் காட்சி தருவது இத்தலத்தின் மற்றுமொரு சிறப்பாகும்.
தலத்தின் தனிச்சிறப்பு
பஞ்சரங்க தலங்கள்
108 திவ்ய தேசங்களை தரிசித்த புண்ணியம் தரும் தலங்கள்
பஞ்சரங்க தலங்கள் என்பன காவிரி பாயும் பரப்பின் கரையில் அரங்கநாதரின் (பெருமாள்) கோவில்கள் அமைந்துள்ள ஐந்து மேடான நதித்தீவுகள் அல்லது நதித்திட்டுக்கள் ஆகும். ரங்கம் என்றால் ஆறு பிரியுமிடத்தில் உள்ள மேடான பகுதி என்று பொருள்படும். பஞ்ச ரங்க தலங்களில், பெருமாள் சயனக் கோலத்தில் காட்சி தருகிறார்.
கீழ்க்கண்ட ஐந்து தலங்கள் பஞ்சரங்க தலங்கள் ஆகும்.
1. ஆதி ரங்கம் – ஸ்ரீரங்கப்பட்டினம்(மைசூர்),
2. அப்பால ரங்கம் – திருப்பேர்நகர் (கோவிலடி),
3. மத்திய ரங்கம் – ஸ்ரீரங்கம் (திருச்சி),
4. சதுர்த்த ரங்கம் – திருக்குடந்தை சாரங்கபாணி ஸ்தலம் (கும்பகோணம்),
5. பஞ்ச ரங்கம்(ஐந்தாவது ரங்கம்) – திருஇந்தளூர் பரிமள ரங்கம் (மயிலாடுதுறை).
பஞ்ச ரங்கத் தலங்களை தரிசித்தால் 108 திவ்ய தேசங்களை தரிசித்த புண்ணியம் உண்டு. குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், எமபயம் நீங்க, கர்வம் தீர, பாவம், சாபம் உள்ளவர்கள், தீராத பிரச்னை உள்ளவர்கள் பஞ்ச ரங்கத் தலங்களை வழிபட்டால் பலன் நிச்சயம் என்பது நம்பிக்கை.
சதுர்புஜ கோதண்டராமர் கோவில்
மகாவிஷ்ணு கோலத்தில் காட்சி தரும் ராமபிரான்
செங்கல்பட்டிலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ள பொன்பதர் கூடம் என்ற கிராமத்தில் அமைந்திருக்கிறது சதுர்புஜ கோதண்டராமர் கோவில்.
ராமபிரான், தன் தாய் கோசலை, பக்தன் ஆஞ்சநேயர், சீதையிடம் பரிவு காட்டிய திரிசடை, ராவணன் மனைவி மண்டோதரி ஆகியோருக்கு நான்கு கரங்களுடன், சங்கு, சக்கரம் ஏந்தியவராக, மகாவிஷ்ணு வடிவாய்க் காட்சி தந்தார். அதேபோல தனக்கும் மகாவிஷ்ணு காட்சி தர வேண்டமென தேவராஜ மகரிஷி பெருமானை வேண்டித் தவமிருந்தார். அதன்படி வழக்கமாக ஒரு கரத்தில் வில்லும் ஒரு கரத்தில் அம்புமாக காட்சி தரும் ராமர், இங்கு சதுர்புஜ ராமராக சங்கு, சக்கரம், கோதண்டம் மற்றும் பாணம் இவைகளை தரித்துக்கொண்டு காட்சி தந்தார்.
ராமபிரானின் மார்பில் மகாலட்சுமி
கருவறையில் ராமபிரான், வலது புறம் சீதையுடன் ஒரே பீடத்தில் அமர்ந்து, மணக்கோலத்தில் காட்சி தருகிறார். இடப்புறம் லட்சுமணர் நின்றிருக்க, எதிரே இம்மூவரையும் வணங்கியபடி, வலக்கரத்தை வாயில் வைத்துப் பொத்தியபடி, அனுமன் இருக்கிறார். ராமபிரான் இங்கே விஷ்ணுவாகக் காட்சி தந்த தலம் என்பதால், இவர் மார்பில் மகாலட்சுமி இருப்பது விசேஷம்.
அழகு ததும்பும் உத்ஸவ மூர்த்தி
சதுர்புஜ கோதண்டராமரின் உத்ஸவ மூர்த்தி, அதி அற்புத அழகுடன் திகழ்கிறார். உத்ஸவ மூர்த்தியின் விரல் நகம், கை ரேகைகள், கணுக்கால், முட்டி, உருண்டு திரண்ட கால் சதை, தோள்கள் என ஒவ்வொரு அங்கமும் தத்ரூபமாக உன்ன ராமனின் சுந்தர வடிவம் , தரிசிப்போரை பரவசமடையச் செய்யும். சீதையை மணந்து கொள்ளும்முன் ராமர், இடதுகாற் பெருவிரலால் வில்லின் ஒரு பகுதியை மிதித்தபடி ஒடித்தார். அதை உணர்த்தும் விதமாக, இங்கு ராமர், இடது திருவடியை முன்புறமாக மடித்து வைத்த நிலையில் காட்சியளிக்கிறார்.
இல்லறம் சிறக்க வழிபட வேண்டிய தலம்
தம்பதியர் ஒற்றுமை வேண்டியும், பிரிந்த தம்பதியர் சேரவும் இங்கே வேண்டிக் கொள்கின்றனர். மகான் தர்மதிஷ்டருக்கு ஒரு சாபத்தால் ஏற்பட்ட தோல் நோய் குணமாக இங்கே ராமனை வழிபட்டார். ராமனருளால் அவர் நோய் நீங்கியது. எனவே, தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கே சுவாமிக்குத் துளசி மாலை அணிவித்து, கல்கண்டு படைத்து நோய் குணமடைய வேண்டிக் கொள்கிறார்கள்.
பொன்பதர் கூடம் என்ற பெயர் ஏற்பட்ட கதை
ஒருசமயம், வைணவ ஆசார்ய புருஷர்களில் ஒருவரான சுவாமி தேசிகர் இப்பகுதிக்கு யாத்திரையாக வந்த தருணத்தில், ஒரு கடலை வியாபாரி வீட்டின் திண்ணையில், தான் பூஜைக்காக உடன் கொண்டு வந்திருந்த ஹயக்ரீவர் விக்கிரகத்துடன் தங்கினார். அன்றிரவு தன் நிலத்தை ஒரு குதிரை மேய்வதாக கடலை வியாபாரி கனவு கண்டார்.
மறுநாள் திண்ணையில் குதிரை முகம் மனித உடலுடன் கூடிய ஹயக்ரீவ விக்கிரகத்துடன் அமர்ந்திருந்த தேசிகரிடம் தன் கனவை வியாபாரி சொன்னார். அவருக்கு ஹயக்ரீவர் அருள் பரிபூர்ணமாக கிடைத்துவிட்டதாக கூறினார் தேசிகர்.
பிறகு வியாபாரி தன் நிலத்திற்கு போய் பார்த்தபோது குதிரை மேய்ந்ததாக கனவில் கண்ட தன் நிலத்தில் நெற்கதிர்கள் பொன்மணிகளாக விளைந்திருப்பதைக் கண்டு பிரமித்தார். அதிலிருந்து இத்தலம் 'பொன் உதிர்ந்த களத்தூர்' என்று அழைக்கப்பட்டு நாளடைவில் 'பொன்விளைந்த களத்தூர்' என்று மாறியது. இந்த பொன் நெல்மணிகளைத் தூற்றியபோது இவற்றின் பொன் பதர்கள் சுமார் 2 கி.மீ. தொலைவிலுள்ள இடத்தில் போய் விழுந்ததாம். அப்படி பதர் விழுந்த இடமே ;பொன்பதர் கூடம்' என்றாகியது. இங்குதான் சதுர்புஜ ராமர் கோவில் உள்ளது.
ஆண்டளக்கும் ஐயன் கோவில்
தன்னை நாடி வருவோரின் தகுதிக்கேற்ப, அளந்து அருள் வழங்கும் ஐயன்
கும்பகோணத்திலிருந்து சுமார் 8 கிமீ தொலைவில் உள்ள திவ்யதேசம் ஆதனூர்.. தன்னை நாடி வருவோரின் தகுதிக்கேற்ப, அளந்து அருள் வழங்கும் வள்ளலாக வீற்றிருப்பதால், இத்தல இறைவனுக்கு 'ஆண்டளக்கும் ஐயன்' என்பதே திருநாமமாக விளங்குகிறது.
ஸ்ரீரங்கத்தில், ஸ்ரீரங்கனுக்கு திருமதில் எழுப்பும் திருப்பணியில் ஈடுபட்டிருந்தார் திருமங்கையாழ்வார். அப்போது அவருக்கு பண நெருக்கடி ஏற்பட்டது. தன் குறை நீங்கி பணி நிறைவு பெற உதவிடுமாறு, ஸ்ரீரங்கநாதனிடம் முறையிட்டார். அன்று அவரின் கனவில்தோன்றிய பெருமாள், ‘கொள்ளிடக்கரையில் வந்து தேவையான பொருளைப் பெற்றுக் கொள்’ என்று கூறினார்.
அதன்படி, கொள்ளிடக்கரை வந்த திருமங்கையாழ்வார், ஒரு வணிகரைச் சந்தித்தார். அந்த வணிகர், ‘உங்களுக்கு உதவி செய்ய எனக்கு கட்டளை வந்துள்ளது. நான் உங்களோடு வருகிறேன். வேலையாட்களுக்கு என்னிடம் உள்ள மரக்காலால் மண்ணை அளந்து தருவேன். உண்மையாக உழைத்தவர்களுக்கு அது பொன்னாகவும், ஏமாற்றியவர்களுக்கு மண்ணாகவும் இருக்கும்’ என்று கூறினார்.
அந்த வணிகரிடம் ஒரு மரக்கால், ஏடு, எழுத்தாணி ஆகிய மூன்று பொருட்கள் இருந்தன.
ஸ்ரீரங்கத்தில் திருப்பணி செய்த வேலையாட்களுக்கு மரக்காலால் வணிகர் மணலை அளந்து தர, அது ஒருசிலருக்குப் பொன்னாகவும், சிலருக்கு மணலாகவும் இருந்தது. மணலை கூலியாகப் பெற்றவர்கள் வணிகரை அடிக்க முற்பட்டனர். வணிகர் ஓட, அவர் பின்னால் ஆழ்வாரும் ஓட, இருவரும் கொள்ளிடம் கரையில் உள்ள ஆதனூர் வந்து சேர்ந்தனர். அங்கே வணிகர், பெருமாளாக காட்சியளித்து மறைந்தார். இத்தலமே, இன்றைய ஆதனூர் என தலவரலாறு குறிப்பிடுகிறது.
தலத்தின் தனிச்சிறப்பு
பிரசித்தி பெற்ற கோவில் பிரசாதங்கள்
கோவில் பிரசாதங்களில் திருப்பதி லட்டும் பழனி பஞ்சாமிர்தமும் மிகவும் பிரசித்தம். .அது போல பிரசித்தி பெற்ற, மற்ற கோவில் பிரசாதங்கள்,
ஸ்ரீரங்கம் கோவில் - அக்காரவடிசல், சீரா அன்னம்
காஞ்சிபுரம் வரதராஜர் கோவில் - குடலை இட்லி
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் - திருக்கண்ணமுது
அழகர் கோவில் - தோசை
ஆழ்வார் திருநகரி - வங்கார தோசை
திருப்புல்லாணி - பாயாசம்
திருக்கண்ணபுரம் - முனையதரையன் பொங்கல்
குருவாயூர் - பால் பாயசம்
திருச்சி கோயிலடி - அப்பம்
சிதம்பரம் - களி, சம்பா சாதம்
உத்தமர் கோவில்
சிவபெருமானின் தோஷத்தை நீக்கிய திவ்ய தேசம்
சிவபெருமானின் தோஷத்தை நீக்கிய திவ்ய தேசம்
திருச்சி சேலம் வழியில், சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள திவ்ய தேசம் உத்தமர் கோவில். பெருமாளின் திருநாமம் புருசோத்தமன். இத்தலத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் தங்கள் மனைவியருடன் அருள்பாலிக்கிறார்கள். இப்படி மும்மூர்த்திகளையும் ஒரே தலத்தில் தரிசிப்பது அபூர்வம்.
சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய தலம்
ஒரு சமயம், சிவனைப் போலவே ஐந்து தலைகளுடன் இருந்த பிரம்மாவைக் கண்ட பார்வதிதேவி அவரை தனது கணவன் என நினைத்து பணிவிடை செய்தாள். இதைக்கண்ட சிவன், குழப்பம் வராமல் இருக்க பிரம்மாவின் ஒரு தலையை மட்டும் கிள்ளி எடுத்தார். இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்ததோடு, பிரம்மாவின் கபாலமும் (மண்டை ஓடு) அவரது கையுடன் ஒட்டிக்கொண்டது. சிவன் எவ்வளவோ முயன்றும் அவரால் கபாலத்தை பிரிக்க முடியவில்லை. அவருக்கு படைக்கப்பட்ட உணவுகள் அனைத்தையும் கபாலமே எடுத்துக் கொண்டது. எவ்வளவு உணவு இட்டாலும் கபாலம் மட்டும் நிறையவேயில்லை. பசியில் வாடிய சிவன், அதனை பிச்சைப்பாத்திரமாக ஏந்திக்கொண்டு பிட்சாடனார் வேடத்தில் பூலோகம் வந்து பல தலங்களுக்கும் சென்றார். அவர் உத்தமர் கோவில் தலத்திற்கு வந்தபோது பெருமாள், சிவனின் பாத்திரத்தில் பிச்சையிடும்படி மகாலட்சுமியிடம் கூறினார். அவளும் கபாலத்தில் பிச்சையிடவே அது பூரணமாக நிரம்பி சிவனின் பசி நீக்கியது. இதனால் தாயார் 'பூரணவல்லி' என்ற பெயரும் பெற்றாள்.மகாவிஷ்ணுவும் பள்ளிகொண்ட கோலத்தில் சிவனுக்கு காட்சி தந்தார்.
மும்மூர்த்திகளின் திருவீதி உலா
கார்த்திகை தீப திருவிழாவன்று, மும்மூர்த்திகளும் ஒன்றாக திருவீதி உலா வருவது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்..
மும்மூர்த்திகளும் மனைவியருடன் எழுந்தருளி இருப்பதால், தம்பதியர் இங்கு வழிபட்டால் குடும்பம் சிறக்கும் என்பது நம்பிக்கை. வாரிசு இல்லாமல் தவிப்பவர்கள், கொடிய நோயால் துடிப்பவர்கள், இங்குள்ள புருஷோத்தமனிடம் மனம்விட்டு பிரார்த்தித்தால் நிச்சயம் நல்லது நடக்கும்.
காளமேகப்பெருமாள் கோவில்
மகாவிஷ்ணு, மோகினி வடிவில் காட்சி தந்த தலம்
மதுரைக்கு வடக்கே சுமார் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திவ்யதேசம் திருமோகூர், பாற்கடலைக் கடைந்து எடுத்த அமுதத்தைப் பங்கிட்டுக் கொள்வதில் தேவர்கள், அசுரர்களுக்கிடையே சர்ச்சை உண்டானது. தங்களுக்கு உதவும்படி தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற சுவாமி, மோகினி வேடத்தில் வந்தார். அசுரர்கள் அவரது அழகில் மயங்கியிருந்த வேளையில், தேவர்களுக்கு அமுதத்தைப் பரிமாறினார். இதனால் பலம் பெற்ற தேவர்கள், அசுரர்களை ஒடுக்கி வைத்தனர். பிற்காலத்தில் புலஸ்தியர் என்னும் முனிவர், மகாவிஷ்ணுவின் மோகினி வடிவத்தை தரிசிக்க வேண்டுமென விரும்பினார். சுவாமி, அவருக்கு அதே வடிவில் காட்சி தந்தார். அவரது வேண்டுகோள்படி பக்தர்களின் இதயத்தைக் கவரும் வகையில் மோகன வடிவத்துடன் இங்கே எழுந்தருளினார்.
மகாவிஷ்ணு, மோகினி வடிவில் காட்சி தந்த தலமென்பதால் இதற்கு, “மோகன க்ஷேத்ரம்’ என்றும், சுவாமிக்கு, 'பெண்ணாகி இன்னமுதன்' என்றும் பெயர் உண்டு.