
ஆதிகேசவ பெருமாள் கோவில்
அல்லா மண்டபத்தில் எழுந்தருளும் பெருமாள்
நாகர்கோவில் திருவனந்தபுரம் சாலையில் சுமார் 28 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள திவ்யதேசம் திருவட்டாறு ஆகும். இத்தலத்தில், பெருமாள் திருவிழாக் காலத்தில் எழுந்தருளுவதற்காக, ஆற்காடு நவாப் ஒரு மண்டபம் அமைத்துக் கொடுத்தார். அந்த மண்டபம் ‘திரு அல்லா மண்டபம்’ என்று அழைக்கப்படுகிறது. ஐப்பசி மாதம் இந்த மண்டபத்தில் சுவாமி விக்கிரகத்தை எழுந்தருளச் செய்து இரவு நேரத்தில் அவல் நைவேத்தியம் சமர்ப்பிக்கிறார்கள்.

பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில்
உடல் ஊனத்தை குணமாக்கும் பெருமாள்
திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில், 22 கி.மீ. தொலைவில் உள்ளது குணசீலம். பெருமாளின் திருநாமம் பிரசன்ன வேங்கடாசலபதி. தாயாருக்கு தனிச்சந்நிதி இல்லை. பெருமாள் செங்கோலுடனும் காட்சி தருகிறார். இந்த செங்கோல் கொண்டு, தீராத நோயையும் தீர்த்தருள்கிறார் பிரசன்ன வேங்கடாசலபதி.
குணசீலம் என்று பெயர் ஏற்பட்ட பின்னணி
குணசீலர் என்று பெயர் கொண்ட பெருமாள் பக்தர் ஒருவர் காவிரிக்கரையில் ஒரு ஆசிரமத்தை நடத்தி வந்தார். ஒருநாள் திருப்பதிக்கு சென்று வெங்கடாஜலபதியை தரிசித்து வந்த குணசீலருக்கு தன் ஆசிரமத்திலும், பெருமாள் எழுந்தருள வேண்டும் என்ற ஆசை வந்தது. தனது ஆசிரமத்தில் பெருமாளை வரவழைக்க கடும் தவம் மேற்கொண்டார். இந்த தவத்தின் மூலம் பெருமாள் குணசீலருக்கு காட்சியளித்து அந்த ஆசிரமத்திலேயே பிரசன்ன வெங்கடாஜலபதியாக இருந்து இன்று வரை தரிசனம் தருகின்றார். பெருமாலின் பக்தரான குணசீலரால் தான் இந்த பகுதிக்கு குணசீலம் என்ற பெயர் ஏற்பட்டது.
பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் உருவான வரலாறு
குணசீலரின் சேவை மற்றொரு ஆசிரமத்திற்கு தேவைப்பட்டதால், குணசீலர் தன் சீடனிடம் பெருமாளை ஒப்படைத்துவிட்டு பூஜைக்கான பொறுப்பையும் கொடுத்துவிட்டு, வேறு இடத்திற்கு சென்றுவிட்டார். அந்த சமயத்தில் குணசீலம் ஒரு காடாக இருந்தது. வனவிலங்குகளின் அட்டகாசம் தாங்க முடியாமல் குடிலை விட்டு சீடன் வேறு இடத்திற்கு சென்று விட்டான். அந்த குடிலில் பெருமாள் சிலை மட்டும் தனியாக இருந்த போது, புற்றினால் மூடப்பட்டுவிட்டது. அப்போது ஞானவர்மன் என்ற மன்னன் அந்தப் பகுதியில் ஆட்சி செய்து கொண்டிருந்தான் அரண்மனையின் பசுக்கள் அந்த காட்டில், புல் மேய்வதற்காக விடப்படும். தொடர்ச்சியாக அந்த காட்டினுள் சென்ற மாடுகளில் மடியில் இருந்து பால் கரப்பது இல்லை. இதற்கு காரணம் என்ன என்று அறிந்து கொள்வதற்காக, அந்த காட்டிற்குச் சென்ற மன்னனுக்கு ஒரு அசரீதி குரல் ஒலித்தது. அந்தக் குரலின் மூலம் புற்றுக்குள் சிலை இருப்பதை உணர்ந்த மன்னன் பிரசன்ன வெங்கடாஜலபதிக்கு கோவில் எழுப்பினான்.
தீராத நோயையும் தீர்த்தருளும் தலம்
உடல் ஊனமுற்றவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், வாய் பேச முடியாதவர்கள் இந்த கோவிலுக்கு வந்து பெருமாளை தரிசனம் செய்தால் சரியாகி விடும் என்பது நம்பிக்கை. மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், இந்தத் தலத்தில் ஒருமண்டலம் தங்கி, இங்கே வழங்கப்படும் தீர்த்தப் பிரசாதத்தை உட்கொண்டு, பெருமாளை ஸேவித்து வந்தால், மன நலம் குணமாகித் திரும்புவர் என்பது ஐதீகம். மதியம் ஒருமணி உச்சிக்கால பூஜையில், பெருமாளுக்கு பூஜைகள் நடந்த பின்னர், பக்தர்களின் முகத்தில் தீர்த்தம் தெளிக்கப்படுவது வழக்கம்.

தலத்தின் தனிச் சிறப்பு
தாயாருக்கென்று தனி சன்னிதி அமையாத தலங்கள்
திருப்பதி, ஒப்பிலியப்பன் கோவில், குணசீலம், தான்ததோன்றிமலை ஆகிய நான்கு பெருமாள் தலங்களில் தாயாருக்கென்று தனி சன்னிதி கிடையாது் இத்தலங்களில் பெருமாளுக்கு மட்டுமே சன்னதி அமைந்துள்ளது.. இத்தலங்களில் திருப்பதியும், ஒப்பிலியப்பன் கோவிலும் திவ்ய தேசங்களாகும்.

வராக லட்சுமி நரசிம்மர் கோவில்
இரண்டு அவதார நிலைகளில் காட்சியளிக்கும் பெருமாள்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து 15 கி.மீ., தூரத்தில் உள்ள சிம்மாசலம் என்ற குன்றின் மீது வராக லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது.
இத்தலத்தில் பெருமாள் வராஹமூர்த்தியாகவும், நரசிம்மராகவும் இரண்டு அவதார நிலைகளில் எழுந்தருளியிருக்கிறார். அது மட்டுமல்ல; வராஹம், சிம்மம், மனிதன் என மூன்று உருவங்களைக் கொண்டவராக காட்சியளிக்கிறார். இது போல் எங்குமே அமைந்ததில்லை.
இக்கோயிலின் மூலவர் வராக நரசிம்மர் வருடம் முழுவதும் கெட்டியான சந்தனத்தால் காப்பிடப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறார். மடக்கிய கால்கள், காட்டுப் பன்றி முகம், சிங்க வால், மனித உடலுடன் காட்சியளிக்கும் இவர், இரணியனை மடக்கிய முன்காலில் கிடத்தி அவன் வயிற்றைத் தன் இரு கரங்களால் கிழிக்கும் நிலையிலும், மேலிரு கரங்களில் சங்கு சக்கரம் தாங்கியும் உள்ளார். இவர் உக்கிர நரசிம்மராக இருப்பதால்தான் வருடம் முழுவதும் சந்தனக் காப்பு சாற்றப்படுகிறது. இதற்காக சுமார் 500 கிலோ சந்தனம் பயன்படுத்துகிறார்கள்.
இக்கோயில் கருவறை சுற்றுச்சுவரில் ஒரு பிறை மாடத்தில் மூலவர் வராக லட்சிமி நரசிம்மரின் முழு உருவமும் சிற்ப வடிவில் காணப்படுகிறது. ஒவ்வொரு வைகாசி மாதம் வளர் பிறையில் மூன்றாம் நாள் சந்தனக் காப்பு விலக்கப்பட்டு வராக லட்சுமி நரசிம்மர் தன் நிஜ உருவத்துடன் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார் .
வராக லட்சுமி நரசிம்மரை தரிசிப்பதால் மன பயம் அகன்று மன தைரியம் வருகிறது. நினைவாற்றல் அதிகரிக்கிறது. சகல பாவங்களும் தீர்ந்து புண்ணியங்கள் கிடைக்கிறது என பக்தர்கள் நம்புகிறார்கள்.

பரிமள ரங்கநாதர் கோவில்
ஸ்ரீதேவி கங்கையாகவும், பூதேவி காவிரியாகவும் காட்சியளிக்கும் திவ்ய தேசம்
மயிலாடுதுறை நகரில் அமைந்துள்ள திருஇந்தளூர் திருத்தலம் பெருமாளின் 108 திவ்யதேசங்களுள் ஒன்று. பஞ்சரங்க தலங்களில், இத்தலம் பஞ்சரங்கம் என்று அழைக்கப்படுகிறது. பெருமாள் திரு நாமம் பரிமளரங்கநாதர்.தாயாரின் திருப்பெயர் பரிமளரங்கநாயகி.
பரிமளரங்கநாதர் சதுர் புஜங்களுடன் ஆதிசேஷன் மீது கிழக்கு முகமாக வீரசயன திருக்கோலத்தில் அருள்புரிகிறார். பெருமாள் கால்மாட்டில் ஸ்ரீதேவி கங்கையாகவும், தலைமாட்டில் பூதேவி காவிரியாகவும் காட்சியளிப்பது இத்தலத்தின் சிறப்பாகும். பரிமளரங்கநாதர் திருவடிகளில் யமதர்மராஜரும், அம்பரீஷ சக்ரவர்த்தியும் அமர்ந்து இரவும், பகலும் பூஜித்துக் கொண்டிருக்கிறார்கள். சந்திரன், சந்திர புஷ்கரிணி தீர்த்தத்தில் நீராடித் தன் சாபம் நீங்கப்பெற்றமையால் இவ்வூர் திருஇந்தளூர் எனப் பெயர் பெற்றது.
மயிலாடுதுறையில் கங்கையை விட காவிரி புனிதமான நதியாக கருதப்படுகிறது. இத்தலத்தில் கொண்டப்படும் கடைமுழுக்கு மிகவும் சிறப்பானது, ஐப்பசி மாதம் கடைசி நாளில், இந்த ஊரில் உள்ள சிவா, விஷ்ணு கோயில் தெய்வங்கள் காவிரி ஆற்றங்கரையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும். அன்று பல்லாயிரக் கணக்கான மக்கள் காவேரியில் நீராடுவர்.

கிருபா சமுத்திரப் பெருமாள் கோவில்
ஆதிசேஷனுக்கு தனிச்சன்னதி கொண்ட திவ்யதேசம்
பெருமாள் கோவில் களில் பொதுவாக ஆதிசேஷனை நாம் பெருமாளுடன் சேர்ந்த வண்ணம் தான் காண முடியும். அதாவது பெருமாள் ஆதிசேஷனின் மேல் சயன கோலத்தில் காட்சி தருவார்.எனவே எந்த பெருமாள் கோவில்களிலும் நாம் ஆதிசேஷனை தனித்து தரிசிக்க முடியாது.ஆனால் சிறுபுலியூர் என்னும் சோழநாட்டு திவ்ய தேசத்தில் ஆதிகேசவ பெருமாள் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.ஆதிசேஷன் ஆயிரம் தலைகள் உடையவர்.ஆனால் அவர் சிறுபுலியூரில் ஐந்து தலை நாகமாக சங்கு சக்கரம் தரித்து நான்கு திருக்கரங்களுடன் தவக்கோலத்தில் காட்சி தருகிறார்.இது காண்பதற்கு அரிதான காட்சியாகும்,

ரங்கநாத பெருமாள் கோவில்
மிக உயரமான திருமேனி உடைய தாயார்
கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள திருத்தலம் திருவதிகை. இத்தலத்தில் ரங்கநாத பெருமாள் கோவில் அமைந்துள்ளது. தாயார் திருநாமம் ரங்கநாயகி.
இத்தலத்தில் ரங்கநாயகி தாயார் இரண்டடி பீடத்தில் ஆறடி உயர திருமேனியுடன் அமர்ந்த கோலத்தில் பேரழகுடன் காட்சி தருகிறார். இத்தகைய மிக உயரமான திருமேனி உடைய தாயாரை வேறு எந்த பெருமாள் கோவிலிலுல் நாம் தரிசிக்க முடியாது. தாயார் மேலிரு கரங்களில் தாமரை மலரை தாங்கியும், கீழிரு கரங்கள் அபய வரத முத்திரையுடனும் நமக்கு அருள்பாலிக்கிறார்.
தலை சாய்த்தபடி இருக்கும் ஆண்டாள் நாச்சியாரின்அபூர்வ தோற்றம்
பொதுவாக பெருமாள் கோயில்களில் ஆண்டாள் நாச்சியார் நின்றபடியோ அல்லது அமர்ந்தபடியோ, நேரான திருமுக மண்டலத்துடன் காட்சி தருவார்.ஆனால் இத்திருத்தலத்தில் ஆண்டாள் நாச்சியார் மூலவர் ரங்கநாதரை நோக்கியபடி தன் தலையை ஒரு புறம் சாய்த்தபடி நமக்கு காட்சி தருகிறார். ஆண்டாள் நாச்சியாரும் ஆறடி உயர திருமேனியுடன் காட்சி தருவது இத்தலத்தின் மற்றுமொரு சிறப்பாகும்.

தலத்தின் தனிச்சிறப்பு
பஞ்சரங்க தலங்கள்
108 திவ்ய தேசங்களை தரிசித்த புண்ணியம் தரும் தலங்கள்
பஞ்சரங்க தலங்கள் என்பன காவிரி பாயும் பரப்பின் கரையில் அரங்கநாதரின் (பெருமாள்) கோவில்கள் அமைந்துள்ள ஐந்து மேடான நதித்தீவுகள் அல்லது நதித்திட்டுக்கள் ஆகும். ரங்கம் என்றால் ஆறு பிரியுமிடத்தில் உள்ள மேடான பகுதி என்று பொருள்படும். பஞ்ச ரங்க தலங்களில், பெருமாள் சயனக் கோலத்தில் காட்சி தருகிறார்.
கீழ்க்கண்ட ஐந்து தலங்கள் பஞ்சரங்க தலங்கள் ஆகும்.
1. ஆதி ரங்கம் – ஸ்ரீரங்கப்பட்டினம்(மைசூர்),
2. அப்பால ரங்கம் – திருப்பேர்நகர் (கோவிலடி),
3. மத்திய ரங்கம் – ஸ்ரீரங்கம் (திருச்சி),
4. சதுர்த்த ரங்கம் – திருக்குடந்தை சாரங்கபாணி ஸ்தலம் (கும்பகோணம்),
5. பஞ்ச ரங்கம்(ஐந்தாவது ரங்கம்) – திருஇந்தளூர் பரிமள ரங்கம் (மயிலாடுதுறை).
பஞ்ச ரங்கத் தலங்களை தரிசித்தால் 108 திவ்ய தேசங்களை தரிசித்த புண்ணியம் உண்டு. குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், எமபயம் நீங்க, கர்வம் தீர, பாவம், சாபம் உள்ளவர்கள், தீராத பிரச்னை உள்ளவர்கள் பஞ்ச ரங்கத் தலங்களை வழிபட்டால் பலன் நிச்சயம் என்பது நம்பிக்கை.

சதுர்புஜ கோதண்டராமர் கோவில்
மகாவிஷ்ணு கோலத்தில் காட்சி தரும் ராமபிரான்
செங்கல்பட்டிலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ள பொன்பதர் கூடம் என்ற கிராமத்தில் அமைந்திருக்கிறது சதுர்புஜ கோதண்டராமர் கோவில்.
ராமபிரான், தன் தாய் கோசலை, பக்தன் ஆஞ்சநேயர், சீதையிடம் பரிவு காட்டிய திரிசடை, ராவணன் மனைவி மண்டோதரி ஆகியோருக்கு நான்கு கரங்களுடன், சங்கு, சக்கரம் ஏந்தியவராக, மகாவிஷ்ணு வடிவாய்க் காட்சி தந்தார். அதேபோல தனக்கும் மகாவிஷ்ணு காட்சி தர வேண்டமென தேவராஜ மகரிஷி பெருமானை வேண்டித் தவமிருந்தார். அதன்படி வழக்கமாக ஒரு கரத்தில் வில்லும் ஒரு கரத்தில் அம்புமாக காட்சி தரும் ராமர், இங்கு சதுர்புஜ ராமராக சங்கு, சக்கரம், கோதண்டம் மற்றும் பாணம் இவைகளை தரித்துக்கொண்டு காட்சி தந்தார்.
ராமபிரானின் மார்பில் மகாலட்சுமி
கருவறையில் ராமபிரான், வலது புறம் சீதையுடன் ஒரே பீடத்தில் அமர்ந்து, மணக்கோலத்தில் காட்சி தருகிறார். இடப்புறம் லட்சுமணர் நின்றிருக்க, எதிரே இம்மூவரையும் வணங்கியபடி, வலக்கரத்தை வாயில் வைத்துப் பொத்தியபடி, அனுமன் இருக்கிறார். ராமபிரான் இங்கே விஷ்ணுவாகக் காட்சி தந்த தலம் என்பதால், இவர் மார்பில் மகாலட்சுமி இருப்பது விசேஷம்.
அழகு ததும்பும் உத்ஸவ மூர்த்தி
சதுர்புஜ கோதண்டராமரின் உத்ஸவ மூர்த்தி, அதி அற்புத அழகுடன் திகழ்கிறார். உத்ஸவ மூர்த்தியின் விரல் நகம், கை ரேகைகள், கணுக்கால், முட்டி, உருண்டு திரண்ட கால் சதை, தோள்கள் என ஒவ்வொரு அங்கமும் தத்ரூபமாக உன்ன ராமனின் சுந்தர வடிவம் , தரிசிப்போரை பரவசமடையச் செய்யும். சீதையை மணந்து கொள்ளும்முன் ராமர், இடதுகாற் பெருவிரலால் வில்லின் ஒரு பகுதியை மிதித்தபடி ஒடித்தார். அதை உணர்த்தும் விதமாக, இங்கு ராமர், இடது திருவடியை முன்புறமாக மடித்து வைத்த நிலையில் காட்சியளிக்கிறார்.
இல்லறம் சிறக்க வழிபட வேண்டிய தலம்
தம்பதியர் ஒற்றுமை வேண்டியும், பிரிந்த தம்பதியர் சேரவும் இங்கே வேண்டிக் கொள்கின்றனர். மகான் தர்மதிஷ்டருக்கு ஒரு சாபத்தால் ஏற்பட்ட தோல் நோய் குணமாக இங்கே ராமனை வழிபட்டார். ராமனருளால் அவர் நோய் நீங்கியது. எனவே, தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கே சுவாமிக்குத் துளசி மாலை அணிவித்து, கல்கண்டு படைத்து நோய் குணமடைய வேண்டிக் கொள்கிறார்கள்.
பொன்பதர் கூடம் என்ற பெயர் ஏற்பட்ட கதை
ஒருசமயம், வைணவ ஆசார்ய புருஷர்களில் ஒருவரான சுவாமி தேசிகர் இப்பகுதிக்கு யாத்திரையாக வந்த தருணத்தில், ஒரு கடலை வியாபாரி வீட்டின் திண்ணையில், தான் பூஜைக்காக உடன் கொண்டு வந்திருந்த ஹயக்ரீவர் விக்கிரகத்துடன் தங்கினார். அன்றிரவு தன் நிலத்தை ஒரு குதிரை மேய்வதாக கடலை வியாபாரி கனவு கண்டார்.
மறுநாள் திண்ணையில் குதிரை முகம் மனித உடலுடன் கூடிய ஹயக்ரீவ விக்கிரகத்துடன் அமர்ந்திருந்த தேசிகரிடம் தன் கனவை வியாபாரி சொன்னார். அவருக்கு ஹயக்ரீவர் அருள் பரிபூர்ணமாக கிடைத்துவிட்டதாக கூறினார் தேசிகர்.
பிறகு வியாபாரி தன் நிலத்திற்கு போய் பார்த்தபோது குதிரை மேய்ந்ததாக கனவில் கண்ட தன் நிலத்தில் நெற்கதிர்கள் பொன்மணிகளாக விளைந்திருப்பதைக் கண்டு பிரமித்தார். அதிலிருந்து இத்தலம் 'பொன் உதிர்ந்த களத்தூர்' என்று அழைக்கப்பட்டு நாளடைவில் 'பொன்விளைந்த களத்தூர்' என்று மாறியது. இந்த பொன் நெல்மணிகளைத் தூற்றியபோது இவற்றின் பொன் பதர்கள் சுமார் 2 கி.மீ. தொலைவிலுள்ள இடத்தில் போய் விழுந்ததாம். அப்படி பதர் விழுந்த இடமே ;பொன்பதர் கூடம்' என்றாகியது. இங்குதான் சதுர்புஜ ராமர் கோவில் உள்ளது.

ஆண்டளக்கும் ஐயன் கோவில்
தன்னை நாடி வருவோரின் தகுதிக்கேற்ப, அளந்து அருள் வழங்கும் ஐயன்
கும்பகோணத்திலிருந்து சுமார் 8 கிமீ தொலைவில் உள்ள திவ்யதேசம் ஆதனூர்.. தன்னை நாடி வருவோரின் தகுதிக்கேற்ப, அளந்து அருள் வழங்கும் வள்ளலாக வீற்றிருப்பதால், இத்தல இறைவனுக்கு 'ஆண்டளக்கும் ஐயன்' என்பதே திருநாமமாக விளங்குகிறது.
ஸ்ரீரங்கத்தில், ஸ்ரீரங்கனுக்கு திருமதில் எழுப்பும் திருப்பணியில் ஈடுபட்டிருந்தார் திருமங்கையாழ்வார். அப்போது அவருக்கு பண நெருக்கடி ஏற்பட்டது. தன் குறை நீங்கி பணி நிறைவு பெற உதவிடுமாறு, ஸ்ரீரங்கநாதனிடம் முறையிட்டார். அன்று அவரின் கனவில்தோன்றிய பெருமாள், ‘கொள்ளிடக்கரையில் வந்து தேவையான பொருளைப் பெற்றுக் கொள்’ என்று கூறினார்.
அதன்படி, கொள்ளிடக்கரை வந்த திருமங்கையாழ்வார், ஒரு வணிகரைச் சந்தித்தார். அந்த வணிகர், ‘உங்களுக்கு உதவி செய்ய எனக்கு கட்டளை வந்துள்ளது. நான் உங்களோடு வருகிறேன். வேலையாட்களுக்கு என்னிடம் உள்ள மரக்காலால் மண்ணை அளந்து தருவேன். உண்மையாக உழைத்தவர்களுக்கு அது பொன்னாகவும், ஏமாற்றியவர்களுக்கு மண்ணாகவும் இருக்கும்’ என்று கூறினார்.
அந்த வணிகரிடம் ஒரு மரக்கால், ஏடு, எழுத்தாணி ஆகிய மூன்று பொருட்கள் இருந்தன.
ஸ்ரீரங்கத்தில் திருப்பணி செய்த வேலையாட்களுக்கு மரக்காலால் வணிகர் மணலை அளந்து தர, அது ஒருசிலருக்குப் பொன்னாகவும், சிலருக்கு மணலாகவும் இருந்தது. மணலை கூலியாகப் பெற்றவர்கள் வணிகரை அடிக்க முற்பட்டனர். வணிகர் ஓட, அவர் பின்னால் ஆழ்வாரும் ஓட, இருவரும் கொள்ளிடம் கரையில் உள்ள ஆதனூர் வந்து சேர்ந்தனர். அங்கே வணிகர், பெருமாளாக காட்சியளித்து மறைந்தார். இத்தலமே, இன்றைய ஆதனூர் என தலவரலாறு குறிப்பிடுகிறது.

தலத்தின் தனிச்சிறப்பு
பிரசித்தி பெற்ற கோவில் பிரசாதங்கள்
கோவில் பிரசாதங்களில் திருப்பதி லட்டும் பழனி பஞ்சாமிர்தமும் மிகவும் பிரசித்தம். .அது போல பிரசித்தி பெற்ற, மற்ற கோவில் பிரசாதங்கள்,
ஸ்ரீரங்கம் கோவில் - அக்காரவடிசல், சீரா அன்னம்
காஞ்சிபுரம் வரதராஜர் கோவில் - குடலை இட்லி
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் - திருக்கண்ணமுது
அழகர் கோவில் - தோசை
ஆழ்வார் திருநகரி - வங்கார தோசை
திருப்புல்லாணி - பாயாசம்
திருக்கண்ணபுரம் - முனையதரையன் பொங்கல்
குருவாயூர் - பால் பாயசம்
திருச்சி கோயிலடி - அப்பம்
சிதம்பரம் - களி, சம்பா சாதம்

உத்தமர் கோவில்
சிவபெருமானின் தோஷத்தை நீக்கிய திவ்ய தேசம்
சிவபெருமானின் தோஷத்தை நீக்கிய திவ்ய தேசம்
திருச்சி சேலம் வழியில், சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள திவ்ய தேசம் உத்தமர் கோவில். பெருமாளின் திருநாமம் புருசோத்தமன். இத்தலத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் தங்கள் மனைவியருடன் அருள்பாலிக்கிறார்கள். இப்படி மும்மூர்த்திகளையும் ஒரே தலத்தில் தரிசிப்பது அபூர்வம்.
சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய தலம்
ஒரு சமயம், சிவனைப் போலவே ஐந்து தலைகளுடன் இருந்த பிரம்மாவைக் கண்ட பார்வதிதேவி அவரை தனது கணவன் என நினைத்து பணிவிடை செய்தாள். இதைக்கண்ட சிவன், குழப்பம் வராமல் இருக்க பிரம்மாவின் ஒரு தலையை மட்டும் கிள்ளி எடுத்தார். இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்ததோடு, பிரம்மாவின் கபாலமும் (மண்டை ஓடு) அவரது கையுடன் ஒட்டிக்கொண்டது. சிவன் எவ்வளவோ முயன்றும் அவரால் கபாலத்தை பிரிக்க முடியவில்லை. அவருக்கு படைக்கப்பட்ட உணவுகள் அனைத்தையும் கபாலமே எடுத்துக் கொண்டது. எவ்வளவு உணவு இட்டாலும் கபாலம் மட்டும் நிறையவேயில்லை. பசியில் வாடிய சிவன், அதனை பிச்சைப்பாத்திரமாக ஏந்திக்கொண்டு பிட்சாடனார் வேடத்தில் பூலோகம் வந்து பல தலங்களுக்கும் சென்றார். அவர் உத்தமர் கோவில் தலத்திற்கு வந்தபோது பெருமாள், சிவனின் பாத்திரத்தில் பிச்சையிடும்படி மகாலட்சுமியிடம் கூறினார். அவளும் கபாலத்தில் பிச்சையிடவே அது பூரணமாக நிரம்பி சிவனின் பசி நீக்கியது. இதனால் தாயார் 'பூரணவல்லி' என்ற பெயரும் பெற்றாள்.மகாவிஷ்ணுவும் பள்ளிகொண்ட கோலத்தில் சிவனுக்கு காட்சி தந்தார்.
மும்மூர்த்திகளின் திருவீதி உலா
கார்த்திகை தீப திருவிழாவன்று, மும்மூர்த்திகளும் ஒன்றாக திருவீதி உலா வருவது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்..
மும்மூர்த்திகளும் மனைவியருடன் எழுந்தருளி இருப்பதால், தம்பதியர் இங்கு வழிபட்டால் குடும்பம் சிறக்கும் என்பது நம்பிக்கை. வாரிசு இல்லாமல் தவிப்பவர்கள், கொடிய நோயால் துடிப்பவர்கள், இங்குள்ள புருஷோத்தமனிடம் மனம்விட்டு பிரார்த்தித்தால் நிச்சயம் நல்லது நடக்கும்.

காளமேகப்பெருமாள் கோவில்
மகாவிஷ்ணு, மோகினி வடிவில் காட்சி தந்த தலம்
மதுரைக்கு வடக்கே சுமார் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திவ்யதேசம் திருமோகூர், பாற்கடலைக் கடைந்து எடுத்த அமுதத்தைப் பங்கிட்டுக் கொள்வதில் தேவர்கள், அசுரர்களுக்கிடையே சர்ச்சை உண்டானது. தங்களுக்கு உதவும்படி தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற சுவாமி, மோகினி வேடத்தில் வந்தார். அசுரர்கள் அவரது அழகில் மயங்கியிருந்த வேளையில், தேவர்களுக்கு அமுதத்தைப் பரிமாறினார். இதனால் பலம் பெற்ற தேவர்கள், அசுரர்களை ஒடுக்கி வைத்தனர். பிற்காலத்தில் புலஸ்தியர் என்னும் முனிவர், மகாவிஷ்ணுவின் மோகினி வடிவத்தை தரிசிக்க வேண்டுமென விரும்பினார். சுவாமி, அவருக்கு அதே வடிவில் காட்சி தந்தார். அவரது வேண்டுகோள்படி பக்தர்களின் இதயத்தைக் கவரும் வகையில் மோகன வடிவத்துடன் இங்கே எழுந்தருளினார்.
மகாவிஷ்ணு, மோகினி வடிவில் காட்சி தந்த தலமென்பதால் இதற்கு, “மோகன க்ஷேத்ரம்’ என்றும், சுவாமிக்கு, 'பெண்ணாகி இன்னமுதன்' என்றும் பெயர் உண்டு.

ரங்கநாதர் கோவில்
பங்குனி உத்திரத் திருவிழா
ரங்கநாதர்- ரங்கநாயகி சேர்த்தி சேவை
இல்லற வாழ்க்கையில் கணவன் மனைவிக்கு இடையே ஊடல் ஏற்படுவதும் பின்பு சமாதானம் அடைவதும் இயல்பான ஒன்று. இந்த நிலை தெய்வீக தம்பதியருக்கும் பொருந்தும் என்பதை ஒருமுறை, ரங்கநாதருக்கும், ரங்கநாயகிக்கும் இடையே ஏற்பட்ட ஊடல் சம்பவம் உணர்த்துகிறது. பெருமாளுக்கும் தாயாருக்கும் இடையே நடைபெற்ற ஊடல் முடிவுக்கு வந்து இருவரும் இணைந்தது பங்குனி உத்திர நாளில்தான். இந்த வைபவம் 'சேர்த்தி சேவை' உற்சவம் என்று ஒவ்வொரு வருடமும் ஸ்ரீரங்கம் பங்குனி உத்திரப் பெருவிழாவின் ஒன்பதாம் நாள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் நாளை வெள்ளிக்கிழமையன்று சேர்த்தி சேவை நடைபெற உள்ளது.
ரங்கநாதக்கும் ரங்கநாயகிக்கும் இடையேயான ஊடல்
உறையூர் சோழ மன்னன் ஒருவனுக்குக் குழந்தைப் பாக்கியம் இல்லாதிருந்தது. அவனது குறையைப் போக்க மகாலட்சுமியே மகவாக அவதரித்தாள். சோழ மன்னன் அவளுக்குக் கமலவல்லி என்று பெயரிட்டு வளர்த்துவந்தான். ஒருமுறை வேட்டையாடச் சென்ற ரங்கநாதர் கமலவல்லியைக் கண்டு காதல் கொள்கிறார். ரங்கநாயகி ஸ்ரீரங்கத்தில் இருக்கும்போது, உறையூர் கமலவல்லியைத் தனது மார்பிலிருக்கும் மகாலட்சுமியின் அனுமதியுடன், ரங்கநாதன் திருமணமும் செய்துகொள்கிறார் ..
உறையூர் கமலவல்லி அவதரித்த நட்சத்திரம் பங்குனி ஆயில்யம். ஒவ்வொரு வருடமும் ரங்கநாதர் பங்குனி ஆயில்யத்தின்போது புது மாப்பிள்ளையைப் போன்று புத்தாடை, சந்தனம், திலகம், மாலை ஆகியவற்றை அணிந்துகொண்டு கமலவல்லி நாச்சியாரைத் தாயாருக்குத் தெரியாமல் சந்திக்கச் செல்வார். பெருமாள் தான் அணிந்திருக்கும் நகைகள் மற்றும் மாலைகள் அனைத்தையும் கமலவல்லிக்கு அணிவித்தும் கமலவல்லி நாச்சியார் அணிந்திருக்கும் மாலைகளைத் தான் வாங்கி அணிந்தும் கொள்வார்.
அப்படியொருமுறை, கமலவல்லி நாச்சியாரைச் சந்தித்துவிட்டு மகிழ்வுடன் ஸ்ரீரங்கத்தை நோக்கித் திரும்பும்போதுதான் தனது கையில் கமலவல்லியின் புது மோதிரம் பளபளப்பதைக் கவனிக்கிறார். பழைய மோதிரத்தைக் கமலவல்லியின் கரங்களில் அணிவித்தது அவரது நினைவுக்கு வந்தது. புது மோதிரத்துடன் சென்றால் `அணிந்திருந்த பழைய மோதிரம் என்ன ஆனது என்று ரங்கநாயகி கேட்பாள். அவளுக்கு என்ன பதில் சொல்வது? என்று சிந்தித்த ரங்கநாதர் தனது மோதிரம் தொலைந்துபோனதாக நாடகம் ஆடுகிறார். அனைவரும் காவிரியாற்றில் மோதிரத்தைத் தேடுகிறார்கள். பிறகு `மோதிரம் தொலைந்துவிட்டது என்று கூறியபடியே, ரங்கநாதர் கோயிலுக்குள் நுழைகிறார். வழக்கமாக ரங்கநாதர் கோயிலுக்குள் நுழைந்தால் வாத்திய கோஷங்கள் அதிரும். ஆனால், கமலவல்லியைச் சந்தித்துவிட்டு வரும் ரங்கனோ சத்தமில்லாமல் வருகிறார்.
இதையறிந்த ரங்கநாயகி, ரங்கநாதர் மீது கோபம் கொள்கிறாள். இருவருக்கும் இடையிலான ஊடல் மலர்கிறது. 'உள்ளே வராதீரும்' என்று கூறி வாயில் கதவைச் சாத்தி விடுகிறார். ரங்கநாயகியைச் சமாதானப்படுத்த, பெருமாள் முயற்சி செய்கிறார். தாயாரோ, 'நீங்கள் உறையூருக்கே சென்று விடுங்கள். இனி இங்கு வரத் தேவையில்லை' என்று உறுதியுடன் தெரிவித்துவிடுகிறார்.
ரங்கநாதர் தாயாரிடம் கெஞ்சிப் பார்க்கிறார். தாயார் சமாதானம் அடையாததால், வருத்தமும் சோர்வும் கொண்டு திரும்புவதுபோல பாவனை செய்கிறார். அப்போது, தாயார் கதவைத் திறந்து மெள்ள எட்டிப் பார்க்கிறார். அதைக் கண்ட ரங்கநாதனுக்கு நம்பிக்கை பிறக்கிறது. மீண்டும் கதவருகே ஓடிவந்து தாயாரிடம் கெஞ்சத் தொடங்குகிறார். இப்படியே ஊடலும் கெஞ்சலும் மாறிமாறி மூன்று முறை தாயார் கதவைத் திறந்து சாத்துகிறாள்.
உற்சவத்தின்போது தாயார் சார்பாக 'தலத்தார்' எனும் ஊழியர்களும், பெருமாள் சார்பாக 'தொண்டுக் குலத்தார்' எனும் ஊழியர்களும் சமாதானம் பேசுவார்கள். தலத்தார் எல்லோரும் பெருமாளிடம் நியாயம் கேட்க, குலத்தார் அனைவரும் தாயாரிடம் கெஞ்சுவர். வடக்குச் சித்திர வீதி மக்கள் அனைவரும் அன்னைக்கு ஆதரவாக வெண்ணெய் மற்றும் பூக்களைப் பல்லக்கின் மீது வீசி எறிவார்கள். தெற்கு சித்திர வீதி மக்கள் ரங்கநாதருக்கு ஆதரவாக இருப்பார்கள்.
மட்டையடி உற்சவம்
கடைசியில் திருவரங்கன் செய்த தவறுக்காக மட்டையடி விழும். உலகாளும் இறைவனுக்கே வாழை மட்டையால் அடிவிழும் என்பது மிகவும் ஆச்சரியமானது. இதை 'மட்டையடி உற்சவம்' என்று கூறுகிறார்கள். கடைசியாக நம்மாழ்வார் இருவரையும் சமாதானம் செய்து சேர்த்துவைப்பார். அதன் பிறகு, இருவரும் ஒன்று சேர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குவர். படிதாண்டா பத்தினி என்று பெயர் பெற்ற ரங்கநாயகி,
வருடத்தில் ஒரு நாள் மட்டும் அதாவது பங்குனி உத்திரத்தன்று மதிய வேளையில் ரங்கநாதருடன் சேர்த்தி சேவையில் கலந்து கொள்கிறார். சேர்த்தி சேவையை முன்னிட்டு அன்றைய தினம் உற்சவரை மட்டுமே தரிசிக்க முடியும். மூலவர் நடை சாத்தப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சேர்த்தி சேவை தரிசனம்
வருடத்தில் ஒரு நாள் மட்டுமே நடைபெறும் சேர்த்தி சேவையன்று. தாயாருடன் சேர்ந்திருக்கும் ரங்கநாதர் மிகவும் மனம் மகிழ்ந்து காணப்படுவார். அப்போது அவரிடம் வேண்டிக்கொண்டால், நமது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும்
களத்திர தோஷம் பெற்று திருமணம் நடைபெறாமல் தடைபட்டு தவிப்பவர்களும் இந்த சுக்கிர ஸ்தலமான ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் சேர்த்தி சேவையை தரிசித்தால் களத்திர தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். திருமணம் ஆனவர்களும் களத்திர தோஷத்தால் பிரிந்து இருப்பவர்களும், வீட்டில் கணவன் மனைவி இடையே சண்டை போட்டுக்கொண்டிருப்பவர்களும் இந்த சேர்த்தி சேவையை தரிசித்தால் சண்டை நீங்கி மகிழ்ச்சியான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை.

சௌரிராஜ பெருமாள் கோவில்
பெருமாளின் திருநெற்றியில் தழும்பு
ஒருநாள்,திருக்கண்ணபுரம் திருக்கோயிலின் அரையர் வந்த போது, டில்லி சுல்தானின் படைகள், இத்திருக்கோயிலின் உயர்ந்த மதில்களை இடித்துக் கொண்டிருப்பதைக் கண்டு மனம் பதைபதைத்தார். திரும்பி, பக்கத்திலிருந்த உற்சவமூர்த்தியைப் பார்த்தபோது, பகவான் வழக்கம்போல் புன்னகை மலர சேவை சாதித்துக் கொண்டிருந்தான் . “டில்லி சுல்தானின் இந்த அட்டூழியத்தை, சிரித்த முகத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறாயே” என்று சொல்லி, கையிலிருந்த தாளத்தை எம்பெருமானை நோக்கி வீசியெறிந்தார். அது பகவானின் புருவத்தில் பட்டு ரத்தமும் கொட்டியது. உடனே அந்த ரத்தத்தைத் துடைத்து, இறைவனிடம் கதறியழுது, தன்னை மன்னித்துவிடும்படி வேண்டினார். அந்த வேண்டுதலுக்கு பலனும் உடனே கிடைத்தது. மறுநாள், டில்லி தளபதி, தனது அடுத்த இலக்காக மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலைப் படையெடுத்து அழிப்பதற்காகத் தனது வீரர்களை மதுரையம்மதிக்குச் செல்லும்படி ஆணையிட்டார். அதனால் திருக்கண்ணபுரம் திருக்கோயில் அடியோடு நாசமாவதிலிருந்து மயிரிழையில் தப்பியது. அரையர் தாளத்தை வீசியதால் சௌரிராஜப் பெருமானின் வலப்புருவத்துக்கு மேல் ஏற்பட்ட சிறு தழும்பு வடுவை இன்றும் நாம் தரிசிக்கலாம்.

கூடலழகர் கோவில்
பாண்டிய மன்னன் கொடியில் மீன் சின்னம் அமைந்த கதை
பாண்டிய மன்னர்களின் கொடியில் மீன் சின்னம் அமைந்ததற்கு மதுரை கூடலழகர் பெருமாளே காரணமாவார். முற்காலத்தில் கூடலழகர் கோயிலைச் சுற்றி இருபுறத்திலும் மாலையிட்டதுபோல, வைகை நதி, கிருதுமால் நதி ஆகியவை ஓடின. இதில் கிருதுமால் நதி சுருங்கி ஓடையாகி விட்டது. பாண்டிய மன்னனான சத்தியவிரதன், இத்தல பெருமாள் மீது அதீத பக்தி செலுத்தினான். ஒரு முறை அவன் கிருதுமால் நதியில் நீராடிய போது, பெருமாள் மீன் வடிவில் தோன்றி உபதேசம் செய்தார். தனக்கு அருளிய சுவாமியின் நினைவாக மீன் சின்னத்தை பாண்டிய மன்னன் வைத்துக்கொண்டான்.

அப்பக்குடத்தான் கோவில்
அப்பக்குடம் ஏந்திய பெருமாள்
தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு அருகில் உள்ள திவ்ய தேசமான கோவிலடி தலத்து பெருமாள் அப்பக்குடத்தான்,தனது வலது திருக்கரத்தில் அப்பக்குடத்தை அணைத்தவாறு சயனத் திருக்கோலத்தில் காட்சி தருகிறார். 108 திருப்பதிகளுள் இத்தல பெருமாளுக்குதான் தினமும் இரவில் அப்பம் செய்து படைக்கப்படுகிறது. பெருமாளின் பஞ்சரங்கதலம் என்று சொல்லக்கூடிய ஐந்து அரங்களில் இதுவும் ஒன்று ஆகும். ஸ்ரீரங்கத்திற்கு முன்பே பெருமாள் இத்தலத்தில் எழுந்தருளியதால், 'ஆதி ரங்கம்' என்னும் பொருள்பட 'அப்பால ரங்கம்' என்னும் பெயர் ஏற்பட்டது.
பெருமாள் அப்பத்தை உணவாக ஏற்றுக்கொண்ட திவ்ய தேசம்
உபரிசிரவசு என்பவன் பாண்டிய மன்னன்,. ஒரு நாள் வேட்டையாடச் சென்ற போது மதம் பிடித்த யானை ஒன்று கௌதமரின் ஆஸ்ரமத்தில் நுழைவதைப் பார்த்து, அதன் மீது அம்பெய்தான். மேலும் சீற்றமடைந்த அந்த யானை, வேதமோதிய வேதியன் ஒருவனைக் கொன்றது. இதனால் மன்னனுக்கு 'பிரம்மஹத்தி தோஷம்' பிடித்தது. தன் பலமெல்லாம் இழந்து உடல் நலக்குறைவால் துன்பப்பட்டான்.இதனால் உபரிசிரவசு தன் அரசைத் துறந்து புண்ணியத் தலங்களில் புனித நீராடச் சென்றான். புரசங்காடுகள் நிறைந்த கோயிலடிக்கு வந்தவுடன் தெய்வ அனுக்கிரஹம் கிடைத்தது போல உணர்வு ஏற்பட்டதால் இத்தலத்தின் விசேஷத்தைத் தனது குலகுருவிடம் கேட்டான். அதற்கு அவர், துர்வாசரின் சாபத்தால் அசுரர்களால் துரத்தப்பட்டு பதவியிழந்த இந்திரனை மீண்டும் தேவலோக அதிபதி ஆக்கப் பெருமாள் இங்கு அருளினார் என்று எடுத்துக் கூறினார், 'சிறப்புமிக்க இத்தலத்தில் நீ தவம் செய்தால் உன் தோஷமும் விரைவில் நீங்கும்' என்று வழி காட்டினார். கோயிலடியில் உபரிசிரவசு மன்னன்தன் தோஷம் நீங்க தினசரி ஆயிரம் வேதியர்களுக்கு அன்னம் வழங்கி வந்தான். அதனால் அவன் மீது பெருமாள் கருணை கொண்டார். ஒரு நாள், அதிகாலையிலேயே ஒரு பிராமணர் வந்துவிட்டார். மன்னனின் பூஜை ஆரம்பிப்பதற்கு முன்பே, 'மிகவும் பசிக்கிறது எப்போது உணவு தயாராகும்" எனப் புலம்பத் தொடங்கினார். மன்னன் அவசர அவசரமாய் பூஜைகளை ஆரம்பித்து முடித்தான். பிராமணருக்கு உணவு பரிமாறச் சொன்னான். பிராமணர் ஒற்றை ஆளாக அத்தனை உணவையும் உண்டு விட்டார். மன்னன் அதிர்ச்சி அடைந்தான். பிராமணர் அரை வயிறே நிரம்பியதாக முறையிட்டார். மன்னன்மீண்டும் உணவு சமைத்து பரிமாறிகிறேன் என்றான். மன்னனிடம், வேதியர் உருவில் வந்த பெருமாள் . 'மன்னனே! நான் சற்றே ஓய்வு எடுக்க வேண்டும், அந்தி சாய்ந்ததும் எனக்கு ஒரு குடம் நிறைய அப்பங்களைக் கொண்டு வா' என்று கூறிவிட்டு ஓய்வெடுக்கச் சென்றார் .ஒரு குடம் முழுக்க அப்பம் நிரப்பப்பட்டு அந்தணராக வந்த பெருமாளின் அருகில் வைக்கப்பட்டது. அதில் ஒன்றைத் தின்று விட்டு மன்னனைப் பார்த்துச் சிரித்தார் பிராமணர். மன்னன் ஏதோ பரவசமாக உணர, பிராமணர் உடனே பெருமாளாக மாறி மன்னன் உபரிசிரவசுக்கு காட்சி தந்தார். அப்பத்தை விரும்பிக் கேட்டுத் தின்றதால், அன்று முதல் இந்தப் பெருமாளுக்கு 'அப்பக் குடத்தான்'என்ற வித்தியாசமான திருநாமம் ஏற்பட்டது. இன்றைக்கும் இரவு வேளையில் அப்பால ரங்கநாதருக்கு அப்பம்தான் நைவேத்யம் செய்யப்படுகின்றது.குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், எமபயம் நீங்க, கர்வம் தீர, பாவம், சாபம் உள்ளவர்கள், தீராத பிரச்னை உள்ளவர்கள் இவரை வழிபாடு செய்தால் பலன் நிச்சயம் என்பது நம்பிக்கை.

கள்ளழகர் கோயில்
அபரஞ்சி தங்கத்தினால் செய்யப்பட்ட அழகர் விக்ரகம்
திருமாலிருஞ்சோலை உற்சவமூர்த்திக்கு அழகர் என்றும், சுந்தரராஜன் என்றும் திருநாமங்கள். இந்த அழகர் விக்ரகம் அபரஞ்சி என்ற உயர்ரக தங்கத்தினால் செய்யப்பட்டது.
’அபரஞ்சி’ என்பது தேவ லோகத் தங்கம் என்பதால், இந்தப் பெருமாளையும் தேவலோகப் பெருமாளாக பக்தர்கள் வணங்குகிறார்கள்.உலகத்திலேயே அபரஞ்சி தங்கத்திலான பெருமாள் சிலைகள் இரண்டு இடங்களில்தான் இருக்கின்றன. ஒன்று அழகர் கோவிலில், இன்னொன்று திருவனந்தபுரத்தில் உள்ள அனந்த பத்மநாபசுவாமி கோவிலில்.
அழகர் விக்ரகத்துக்கு இப்பகுதி மலைமேல் உள்ள நூபுர கங்கை நீரால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. பிற நீரால் அபிஷேகம் செய்தால் விக்கிரகம் கருத்து விடும் என்ற அச்சமே காரணம்.

கரிவரதராஜ பெருமாள் கோவில்
"தேன் உண்ட பெருமாள்
சென்னை பாரிமுனையில் இருந்து 17 கி.மீ., தொலைவில் மாதவரம் உள்ளது.இங்குள்ளது கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில்.நாம் உணவு உண்ணும்போது ஜனார்த்தனன் என்னும் திருநாமத்தையும், உறங்கச் செல்லும்போது பத்மநாபன் என்னும் திருநாமத்தையும், காட்டு வழியில் செல்ல நேரிட்டால் நரசிம்மன் திருநாமத்தையும், மலையேறும்போது ரகுநந்தன் என்னும் திருநாமத்தையும் உச்சரித்துச் சொல்வது விசேஷம். ஆனால் மாதவன் என்கிற திருநாமத்தை எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் சொல்லலாம் என புராணங்களில் கூறப்பட்டுள்ளன. அந்த உயர்ந்த திருநாமத்தையே பெயராகக் கொண்டுள்ளது மாதவபுரம் என்னும் சிற்றூர். வியாசர் உள்ளிட்ட மாமுனிவர்கள் இங்கு தவம் செய்து வரம் பெற்ற தலம் என்பதால், ‘மகாதவபுரம்’ என்று பெயர் பெற்று, அதுவே நாளடைவில் மருவி ‘மாதவரம்’ என்றாயிற்று.மூலவர் வேங்கட வரதராஜன் என்னும் திருநாமத்துடன் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன், நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறார். திருமலையில் எழுந்தருளி வரும் திருவேங்கடமுடையான் போல், இடக்கரம் கடிக ஹஸ்தம் கொண்ட கோலத்தில் இருப்பதால், ‘வேங்கடவரதன்’ எனவும் வழங்கப்படுகிறார்.ஒரு சமயம் இந்த இறைவனுக்கு தேனாபிஷேகம் செய்யும்போது, அர்ச்சகர் சிறிது தேனை உத்தரணி (சிறு கரண்டி)யில் எடுத்து பெருமாளின் வாயருகே கொண்டு செல்ல, அதனை பெருமாள் ஏற்றுக் கொண்டாராம். இதனால் இவருக்கு தேன் உண்ட பெருமாள் என்ற பெயரும் உண்டு.

நீர் வண்ணப் பெருமாள் கோவில்
பெருமாள் நான்கு நிலைகளில் காட்சி தரும் திவ்ய தேசம் சென்னை பல்லாவரத்திலிருந்து 6. கி.மீ. துரத்தில் இருக்கிறது திருநீர்மலை என்னும் திவ்ய தேசம்..இந்தத் தலத்தில் இரு நூறு அடி உயரமுள்ள ஓர் சிறிய மலை இருக்கிறது. மலை அடிவாரத்தில் பெருமாளின் சந்நிதி ஒன்றும் மலை மேல் மூன்று சந்நிதிகளும் இருக்கின்றன.இந்தத் திவ்யதேசத்தில் பெருமாள் இருந்தான், நின்றான் கிடந்தான், நடந்தான்,என்று நான்கு கோலத்தில் காட்சி தருகிறார்.இந்த திருகோவிலின் மூலஸ்தானத்தில் ஸ்ரீரங்கம் போல் சயன கோலத்தில் பெருமாளை காணலாம். மூலஸ்தானத்தின் வலது புறங்களில் நரசிம்ம பெருமாளும், வாமன அவதாரமான உலகலந்த பெருமாளும், மலையின் கீழே நீர் வண்ணப் பெருமாளும் காட்சி அளிக்கின்றனர்.நின்றான் என்பது மலையின் கீழ் உள்ள நீர்வண்ண பெருமாளையும், கிடந்தான் என்பது ரங்கநாதப் பெருமாள் ஆதிசேஷன் மேல் சயன கோலத்திலும், நடந்தான் என்பது வாமன அவதாரமான உலகலந்த பெருமாள் ஒரு காலை தூக்கிய நிலையிலும், இருந்தான் என்பது நரசிம்மப் பெருமாள் சாந்தமாய் அமர்ந்த நிலையிலும் நான்கு விதமாகப் பெருமாள் காட்சி அளிக்கின்றார்.இத்தலத்தில் நரசிம்மப் பெருமாள் பால ரூபத்தில் காட்சி தருகிறார். இவரை "பால நரசிம்மர்' என்கின்றனர். இவருக்கு பின்புறம் நரசிம்மர், சுயரூபத்துடன் இரண்டு கரங்களுடன் காட்சி தருகிறார். இடக்கை ஆட்காட்டி விரலை உயர்த்திக் காட்டுகிறார். இவரிடம் சங்கு, சக்கரம் இல்லை. இவ்வாறு இங்கு பால வடிவம் மற்றும் சுயரூபம் என இரண்டு வடிவங்களில் நரசிம்மரை தரிசிக்கலாம்.
புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள் ரெங்கநாதரை அர்ச்சனை செய்து ,ஒரு துணியில் கருங்கல் மற்றும் ஒரு ரூபாய் நாணயம் வைத்து ,தல விருட்ச்சமான வெட்பாலை மரத்தில் கட்டி வேண்டிக்கொள்கிறார்கள் .இதனால் புத்ர பாக்கியம் கிடைக்கும் என்று ஐதீகம்